Saturday, September 29, 2018



வெளிச்சம் தொலைக்காட்சி வாழ்க!

காலைமணி ஏழில்

விடியல் வெளிச்சத்தில் காலைமணி ஏழில்
நெறிப்படுத்தும் வள்ளுவன் வாக்கைத் தொடர்ந்து
நெறிபிறழா அம்பேத்கர் வாழ்க்கை நிகழ்வை
பொறிபறக்கும் தந்தை பெரியாரின் தொண்டை
அறியவைக்கும் பாங்கினை வாழ்த்து.

இதய நாள் இன்று! 29.09.2018

இதயத்தின் எல்லைக்குள் ஆசை அலைகள்
கடக்காமல் துள்ளினால் நன்று-- கடந்துவிட்டால்
பேராசை யாகத்தான் மாறியே தொல்லைக்குள்
சீரழித்துப் பார்க்கும் தினம்.

Thursday, September 27, 2018

மாவீரன் பகத்சிங் பிறந்தநாள் வாழ்த்துப்பா!

நாள் 28.09.1907

இந்தியத் தாயின் அடிமை விலங்கறுக்க
இங்கே பிறந்த பகத்சிங் புகழ்வாழ்க!
பொங்கிச் சினந்த புரட்சியின் நாயகன்!
இந்திய நாடே! வணங்கு.

லாலா லஜபதி ராயை அடக்குமுறைக் கோலால் தலையுடைத்து மாய்த்த கொடுமைக்கு
வேழமென ஆர்ப்பரித்த சிங்கம் பகத்சிங்தான்!
காலமெலாம் வாழ்வார் நிலைத்து.

இருபத்து மூன்று வயதில் மரணம்!
வரலாறாய் மாறிட இந்திய நாட்டின்
திருவிளக்காய் நாளும் தியாகத்தால் வாழும்
செழுஞ்சுடர் பகத்சிங்கை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்



செருப்புக்குள் கல் !

செருப்புக்குள் கல்லொன்று சென்றே உறுத்த
செருப்பை உதறியே கல்லை வெளியே
ஒருவாறாய் அங்கே எறிந்தேன்.! அம்மா
செருப்பின் உறுத்தலால்  கால்பட்ட பாடு
நெருப்பில் புழுதான் உணர்.

நாய்களைக் காணோம்!

(எங்கள் தெருநாய்கள் காணவில்லை)

நாய்கள் தெருவிலே ஒற்றுமையாய்க் கூடிவாழும்!
யாரேனும் அன்னியரோ வண்டிகளோ வந்துவிட்டால்
பார்த்தேதான்  ஓடிவந்து சேர்ந்தே குரைத்திருக்கும்!
வாசல் படிகளில் சேர்ந்து படுத்திருக்கும்!
யாரேனும் ரொட்டிகள் போட்டால் வாலாட்டும்!
ஊரில் தெருநாய்கள் என்றே பெயரேந்தும்!
யாரறிவார்? காணவில்லை யே!

நாய்வண்டி வந்தே பிடித்ததுவோ? நாய்களுக்குள்
வாய்ச்சண்டை வந்தே குதறியதால் ஓடினவோ?
பாய்ந்துவரும் நாய்க்கூட்டம் காணலையே! காணலையே!
யாரேனும் சொல்வாரோ இங்கு.