Monday, November 20, 2006

தெருவெல்லாம் மேடுபள்ளம்!

அமைச்சர் தெருவோ அழகாய் இருக்கும்!
இமைக்காமல் இன்பமுடன் பார்ப்பார் -- தமிழின
மக்கள் நடக்கும் வழியெல்லாம் மேடுபள்ளம்!
அக்கறை கொள்வாரா கூறு.

பிறவிப்பயன் !

அடுத்த பிறவி அவனியில் உண்டோ?
அடுத்துப் பிறந்தாலும் அந்நாள் -- கடந்த
பிறவியை யாரறிவார்? பைந்தமிழே! இந்தப்
பிறவியில் நற்பண்பைப் பேண்.

துள்ளாதே!

மண்ணோடு மண்ணாக மக்கி அழிந்ததும்
மண்ணுலக வாழ்வின் தடயங்கள் -- ஒன்றுகூட
இல்லாமல் போய்விடும்! இத்தகைய வாழ்வில்தான்
எல்லோரும் துள்ளுகின்றோம் இங்கு.

தனிமரம்

இவரென்றும் இப்படித்தான் என்றும்,அகமே!
அவரென்றும் அப்படித்தான் இங்கே -- புவியில்
அனைவரையும் நாமோ ஒதுக்கி அகன்றால்
தனிமரமாய் மாறிடுவோம் சாற்று.

நிறைவு

அமைந்திருக்கும் வாழ்வே அமைதியென வாழ்க!
சுமையென எண்ணிச் சுணங்கி -- குமுறிப்
புகையும் நிலையைப் புவியில் துறந்தால்
அகத்திற் கதுவே நிறைவு.