Saturday, May 07, 2011

கடவுளே தேடிவருவார்

=========================
குடும்பமென்னும் கோயில் நிலைகுலையும் போது
கடவுளைத் தேடியே கோயிலுக்குச் சென்றால்
கடவுள் சிரிப்பார்! குடும்பந்தான் கோயில்
உடனே திருந்தென்பார் பார்.

குடும்பத்தில் நாளும் அமைதி இருந்தால்
நடுத்தெரு வாழ்க்கையும் இன்பந்தான் கண்ணே!
சொடுக்களவு நிம்மதியும் இல்லையென்றால்,விண்ணைத்
தொடும் வளமனையும் முள்.

சச்சரவும் சண்டையும் இல்லத்தில் உள்ளதுதான்!
பற்றி எரியவிட்டால் சிக்கிக் கருகவிட்டால்
கட்டமைப்பே பாழாகும்! உட்பகைதான் கூத்தாடும்!
சுற்றத்தைக் காப்பதற்குப் பார்.

கடவுளைத் தேடி அலைந்திடும் மக்கள்
கடமை தவறாமல் குடும்பத்தைக் காத்தால்
கடவுளே இல்லத்தைத் தேடி வருவார்!
கடவுள் அருள்கிட்டும் காண்.

மதுரை பாபாராஜ்

Friday, May 06, 2011

வலியின் துளிகள்!

=========================
ஒட்டுக்கள் போட முயற்சித்தேன்! போட்டபோது
ஒட்டுக்கள் அங்கங்கே நாளும் பிரிந்தனவே!
ஒற்றுமையின் கோலம் சிதைகின்ற காட்சியில்
தத்தெடுத்தேன் ஏக்கத்தை! சாற்று.

இந்தப் பிறவியில் நான்செய்யும் குற்றமென்ன?
முந்தைப் பிறவியில் நான்செய்த பாவமென்ன?
செந்தமிழே! வேதனைத் தீயில் கருகுகின்றேன்!
நொந்து சரிகின்றேன் நான்.

என்றோ நடந்ததை என்றும் பகையாக்கி
வம்புகளைத் துள்ளவைத்துப் பார்ப்பது தேவையா?
துன்புறுத்தும் இந்த மனநிலையை விட்டுவிட்டு
என்றும் பெருந்தன்மை ஏந்து.

பகைவரே வந்தாலும் இன்முகம் காட்டும்
நடைமுறை கொண்டதே இல்லற வாழ்க்கை!
பகைமுகம் காட்டுதல் நற்பண்பா? அன்பே!
பகைவரையும் நண்பராகப் பார்.

தினமும் மன உளைச்சல் தாக்குகின்ற கோலம்!
மனமோ துடித்துத் துடித்துக் களைத்தே
வனவாசம் மேற்கொள்ளத் தூண்டுதடா என்னை!
மனவிரக்தி கோலத்தில் நான்.

அம்மாவின் வலிமை!

=========================
என்னதான் அம்மா அடித்தாலும் பிள்ளைகள்
அம்மாவைப் பார்த்ததும் பாசமுடன் ஓடிவந்தே
அம்மா! எனஅழைத்தே கட்டிப் பிடித்திடுவார்!
அன்பின் வலிமை அது.

போர்க்குற்றவாளி ராஜபட்சே !

================================
போர்க்குற்றம் செய்தவர் ராஜபட்சே என்றேதான்
ஆய்வறிக்கை தந்தது பன்னாட்டு மன்றந்தான்!
போர்க்களத்தில் தத்தளித்த அப்பாவி மக்கள்மேல்
ஈவிரக்கம் இல்லாமல் குண்டுமழை பெய்தேதான்
ஆயிரம் ஆயிரம் மக்களைக் கொன்றுவிட்டார்!
பாவியாக மாறியதைப் பார்.

இலங்கை அரசுக்கோ இந்தியா தோழன்!
கலக்கம் தருகிறதே இத்தகைய கொள்கை!
தயங்காமல் நீதியைக் காக்காமல் இன்றும்
மயங்குவதின் பின்னணியைக் கூறு.

உலக அரசெல்லாம் கண்டிக்கும் காட்சி!
இலங்கை இனக்கொலைக்கு இந்தியாவா சாட்சி?
இலங்கையை இந்தியா கண்டித்தல் வேண்டும்!
தயக்கத்தில் தூங்குவதேன் சாற்று?

இக்கட்சி அக்கட்சி என்பதைத் தூக்கியெறி!
எக்கட்சி ஆனபோதும் இங்கே இனமான
ஒற்றுமையை ஏந்தி இனக்கொலையைக் கண்டிக்க
வெற்றி முரசொலிக்க வா.

குற்றவாளிக் கூண்டிலே ராஜபட்சே நிற்கவேண்டும்!
குற்றம் புரிந்ததற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்!
மட்டமான சிந்தனைக்கு தண்டனை ஏற்கவேண்டும்!
அத்தகைய நாள்வருமா கூறு?

மதுரை பாபாராஜ்