Tuesday, August 28, 2018


இயற்கை இடர்கள்!

வெள்ளம் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு
உள்ளம் நடுங்க உலகை உருக்குலைத்துத்
துள்ளலாட்டம் போட்டுத் துடிக்கவைத்துப் பார்க்கின்ற
எல்லாம் இயற்கை இடர்.

.

செய்தியும் கவிதையும்

இந்திய மீனவர்கள் கைது! கைகளில் விலங்கு!

இலங்கைக் கடற்படையால் மீனவர்கள் அங்கே
விலங்கிட்டுச் சென்றகாட்சி கண்டே பதைத்தேன்!
கலங்கும் இனத்தாரைக் காப்பவர் யாரோ?
அரசே! தயங்குவதேன் கூறு.

சீண்டாதே!

இயற்கையைச் சீண்டாமல் வாழ்ந்தபோது நம்மைக்
கரங்களாக மாறி அரவணைக்க  வாழ்ந்தோம்!
இயற்கையைச் சீண்டினோம்! நம்மைப் புரட்டிக்
கலங்கவைத்துப் பார்க்கிறதே! இங்கு

வள்ளுவத்தின் சாரம்.!

நல்லவர்கள் நல்லவராய் வாழ வழிகாட்டும்!
பொல்லாதோர் நல்லவராய் மாற  நெறிகாட்டும்!
இல்லாமை நீங்க திசைகாட்டும்! நற்றமிழே!
வள்ளுவத்தின் சாரம் இது.

Thursday, August 09, 2018

கலைஞரே! புன்னகை ஓவியமே!

தமிழும் தமிழ்கூறும் நல்லுலகும்  இங்கே
தணியாத சோகத்தில் தத்தளிக்கும் காட்சி
மனத்திரையில் ஓடி மயங்கிட வைக்கும்!
மனமே துணிச்சலைத் தா.

கலைஞரே! புன்னகை ஓவியமே! எங்கே?
தழைக்கும் கவிதையே! செந்தமிழே! எங்கே?
சளைக்காத பேருழைப்பு நாயகனே! எங்கே?
முழங்கும் தமிழ்க்கடலே! நீ.

அன்பகமே! பண்பகமே! ஆருயிரே! எங்குசென்றாய்?
மண்ணகத்துச் சோதனையின் கொம்பொடித்தால் சாதனை
என்றவரே! வேதனையைத் தந்துவிட்டே எங்குசென்றாய்?
கண்விழித்துப் பார்ப்பாயா? நீ.

மெரினாவில் கலைஞர்.

வரலாற்று நாயகனைச் சந்தனப் பேழை
மலர்விழிகள் மூட சுமந்துவந்த கோலம்
கலைஞரை என்றுகாண்போம் என்னும் ஏக்கம்
சுரக்கச் செய்கிறதே பார்.

ஓய்வறியாச் சூரியனே ஒவ்வொரு காலையிலும்
கீழ்வானில் சூரியனைப் பார்க்கும் பொழுதெல்லாம்
ஆழ்மனதில் உன்னுருவம் வந்துநிற்கும்! ஆருயிரே!
தாள்பணிந்தேன் அஞ்சலி தந்து.

Wednesday, August 01, 2018

சாதிமத வெறி தவிர்!

சாதிக்கும் சிந்தனையில் சாதிமதம் ஊன்றிவிட்டால்
நீதி நிலைமாறும்! நேர்மை தடுமாறும்!
போதி மரங்கூட வேரறுந்து வீழ்ந்துவிடும்!
மேதினி பார்க்கும் நகைத்து.