Wednesday, February 29, 2012

பகுத்தறிவைப் பயன்படுத்து!
==========================
சொல்பவர் யாரென்று பார்க்காமல், சொல்வது
நல்லதா? கெட்டதா? என்றேதான் பார்க்கவேண்டும்!
நல்லதை ஏற்றுக்கொள்! கெட்டதை ஏற்காமல்
தள்ளிப் புறக்கணித்தல் நன்று.
===============================================

அளவுகோலை மாற்று.
=======================
நற்பண்புக் கொண்டோரை மேலோர்கள் என்றுரைப்போம்!
அற்பகுணங் கொண்டோரைக் கீழோர்கள் என்றுரைப்போம்!
நற்றமிழே! சாதிமதப் பின்னணியைப் பார்க்கின்ற
அற்ப அளவுகோலை மாற்று.
===================================================

Tuesday, February 28, 2012

சுமையை இறக்கு!
=================
உள்ளம் சுமையின் சுழலில் தவிக்கிறதா?
கள்ளமின்றிப் பேசிச் சுமையை இறக்கிவிடு!
அல்லல் துடிப்படங்கும்! நெஞ்சம் அமைதியுறும்!
நல்மருந்து இஃதே உணர்.
===============================================

மக்களாட்சி!==============
மின்சாரம் மற்றும் அடிப்படைத் தேவைக்குக்
கண்டனக் கூட்டங்கள், உண்ணா விரதங்கள்
எங்கும் மறியல்கள் என்றேதான் மக்களெல்லாம்
பொங்கி எழுகின்றார் பார்.

அரசியல் வண்ணத்தைப் பூசி மெழுகி
அரசை நடத்துவோர் தப்பிக்க எண்ணும்
வழக்கத்தை மாற்றியே சிக்கலுகுத் தீர்வை
வழங்குவதே மக்களாட்சி! சொல்.

Tuesday, February 21, 2012

விலங்குகளின் ஏக்கம்!========================
காட்டு விலங்குகளைக் கொல்லத் தடையுண்டு!
நாட்டிலே எங்களைக் கொல்லத் தடையில்லை!
நாட்டை வெறுக்கின்றோம்!காட்டை விரும்புகின்றோம்!
காட்டில்தான் பாதுகாப்பு! காண்.

Tuesday, February 07, 2012

இரண்டு மனங்கள்!
=======================================
தெருவில் நடந்தேன்!மயங்கி விழுந்தேன்!
திரண்டது கூட்டம்! பரபரப்பில் அங்கே
தருவித்தார் தண்ணீரை! என்மேல் தெளித்தார்!
ஒருவாறு நானும் மயக்கம் தெளிந்தேன்!
விரலிலே போட்டிருந்த மோதிரத்தைக் காணோம்!
கருணை மனத்தால் பிழைத்தேன்! எழுந்தேன்!
திருட்டு மனத்தால் பதைத்தேன்! இழந்தேன்!
இருவரும் வாழ்கின்றார் இங்கு.
==================================================

தெரிந்தே செய்யும் தப்பு!
=========================
வாழைப் பழத்தோல் வழுக்கும் எனத்தெரிந்தும்
சாலை நடுவில் எறிந்துவிட்டுச் செல்கின்ற
நேயமற்ற மாந்தரை என்சொல்ல? தான்விழுந்து
காயமுற்றால் தானுணர்வா ரோ?
=================================================
நேர்மை தவறாதே!
======================
நேற்றுவரை செல்வந்தர்! இன்றோ நடுத்தெருவில்!
காற்றால் ஒதுக்கிய குப்பையாய் மாறிவிட்டார்!
ஏற்றம் இறக்கம் உலகில் இயல்புதான்!
ஏற்றத்தில் நேர்மையுடன் வாழ்.
=====================================================

உறவு--பிரிவு
==============
உனக்கும் எனக்கும்
ஒருவிரல் இடைவெளிதான்!
ஒட்டாவிட்டால் உறவு!
ஒட்டிவிட்டால் பிரிவு!
======================================================