Friday, March 17, 2023

நண்பர் பன்னீர் செல்வம்


நண்பர் பன்னீர் செல்வம் அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை!


எதிர்மறை யான கனவுகளை இங்கே

மகிழும் கனவுகளாய் மாற்றுகின்றாய்! வாட்டும்

கவலைகளை மாற்றுகின்றாய் நாளும் மகிழ்ச்சி

அலைகளாய்! அச்சங் களைகளை அன்பாய்

நிலையாக மாற்றுகின்றாய்! மாற்றத்தை ஏற்கும்

மனப்பாங்கே வாழ்க்கைக்கு வேர்.


மதுரை பாபாராஜ்

 

நா காக்க!

 நா காக்க!

கருத்துகள் ஏற்புடைத்தா? ஏற்போம் மகிழ்ந்து!

கருத்துகள் மாறுபட்டால் வாதம் தவிர்ப்போம்!

வரம்பற்ற வாதங்கள் நட்புக்குக் கேடு!

சுழல்கின்ற நாவை அடக்கு.

மதுரை பாபாராஜ்




நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

உந்தன் இலக்கில் கவனம் செலுத்துதல்
அந்த அளவு எளிதல்ல! மற்றவர்கள்
நம்மிடம் நாளும் எதிர்பார்க்கும் தன்மைமுதல்
நம்சேவை தன்னைத் தருவது ஈறாக
கண்போல் கடமை நிறைவுடன் செய்தலாகும்!
உண்மை உழைப்பே உயர்வு.

மதுரை பாபாராஜ்!
 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில் புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

இதுவரை வந்தபின் பின்செல்ல ஏனோ
நினைக்கவேண்டும்? நற்பயன் தன்னை நமக்குத்
தருவதாய் இங்கிருந்தால் மீண்டும் இணைந்து
பணியை விரைந்து முடிப்பதற்குத் திட்டம்
கனியவைத்தல் என்றுமே நன்று.

மதுரை பாபாராஜ்
 

பிரசாந்த் மருத்துவமனைக்கு வாழ்த்து


பிரசாந்த் மருத்துவமனைக் குழுவினருக்கு வாழ்த்து!


மனைவி வசந்தா!

அறை எண்: 2005 A


அன்பு கருணை இரக்கம் இவைமூன்றைக்

கண்ணும் கருத்துமாய்ப் பின்பற்றி நோயாளி

நன்கு குணமாகிச் செல்ல உழைக்கின்ற

பண்பில் சுணக்கமின்றி ஒற்றுமையாய்த் தொண்டுசெய்யும்

தன்மையை வாழ்த்துகின்றேன் இன்று.


மதுரை பாபாராஜ்

16.03.23

 

Wednesday, March 15, 2023

முரண்

 வாழ்வின் முரண்!


நின்றால், சிரித்தால், படுத்தால்  பணமழை

என்றே விளம்பரத்தில் ஏக வருமானம்!

அங்குமிங்கும் நாளும் கடின உழைப்பெனினும்

துன்பம், பணக்குறை  தான்.


மதுரை பாபாராஜ்


Thursday, March 09, 2023

செல்வன்நவில் பாட்டிக்கு நன்றி


செல்வன் நவில் பாட்டிக்கு நன்றி!


மின்னலின் தாக்கத்தால் தாழை மலருமென்ற

உண்மையை நானறிந்தேன் இந்தப் பதிவாலே!

நன்றி நவில்கின்றேன் இன்று.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, March 08, 2023

நண்பர் கணியன் கிருஷ்ணன்


நண்பர் தென்காசி கணியன் கிருஷ்ணனுக்கு வாழ்த்து!

எந்தன் கவிதைக்கு வண்ண மகுடத்தை
நண்பர் கணியன் கிருஷ்ணன் அழகாக
கண்கவரும் வண்ணந்தான் சூட்டி அளிக்கின்றார்!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்
 

வீட்டுச் செடியில் செம்பருத்திப் பூ


வீட்டுச் செடியில் செம்பருத்திப் பூ!


விடியல் பொழுதிலே வீட்டிலே உள்ள

செடியிலே செம்பருத்திப் பூவோ மலர்ந்து

சிரித்திருந்த காட்சியைப் பார்த்து மகிழ்ந்தேன்

அழகின் சிரிப்பை உணர்ந்து.


மதுரை பாபாராஜ்

 

Sunday, March 05, 2023

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக்  கவிதை!

நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியுமே
நீங்கள் எடுக்கும் பணியை நிறைவேற்றத்
தூணடுகோ லாகும்! சிறிது விவரங்கள்
வேகமாக அச்செயலை இங்கே முடிப்பதற்கே
ஏதுவாகும் என்றே உணர்.

மதுரை பாபாராஜ்


 

மதிப்பிற்குருய அப்துல்கலாம் ஐயா


மதிப்பிற்குரிய அப்துல் கலாம் ஐயாவின் பொன்மொழிக்குத்

தமிழாக்கம்!


நெருக்கமாக உள்ளோரை  விட்டுவி டாதே!

ஒருசில தப்புகளைக் கண்டுவிட்டால் கண்ணை

விரைந்தேநீ மூடிக்கொள்! நண்பருடன் நீயோ

கலந்துரை யாடி மகிழ்ந்த சிறந்த

தருணத்தை எண்ணிக்கொள்! ஏனென்றால் அன்பு

முழுமையைக் காட்டிலும் முக்கிய மாகும்!

விலைமதிப் பற்றதே அன்பு.


மதுரை பாபாராஜ்

 

Friday, March 03, 2023

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


செயல்களைச் செய்ய சிறிதுநேரம் தேவை!
விவேகமாய் நாளும் ஒதுக்கவேண்டும்! மேலும்
சிலபல எல்லைகளைத் தாண்டாமல்  பார்த்து
கவனமுடன் அந்தப் பணிகளை இங்கே
நிறைவேற்ற வேண்டும் உணர்.

மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

நீங்கள் தொடர்ச்சியாக உங்கள் முயற்சிகளை
நாளும் முதலீடு செய்து கவனமாக
வேலைசெய்தால்  நல்ல முடிவுகள் காணலாம்!
தாமத மானாலும்  நிச்சயம் வெற்றியுண்டு!
வேகம் விவேகத்தைக் காட்டு.

மதுரை பாபாராஜ்
 

கவிஞர் இமயவரம்பன்


02.03.23

கவிஞர் இமயவரம்பன் இன்று எந்தன் இல்லத்திற்கு வருகைதந்த மகிழ்வான தருணம். பெரியார் இன்றும் என்றும் என்ற நூலைப் பரிசளித்தார்

மதுரை பாபா அவர்களுக்கு வாழ்த்து!

பன்முகத் தன்மையை
         தன்னுள் கொண்டு
கண்ணில் காண்பதை
         காதால் கேட்பதை
கவியாய் வடித்து
         கருத்துடன் அளிக்கும்
ஆற்றலை மிகையாய்
         அகத்தில் கொண்ட
அகவை எழுபதில்
         அன்பைப் பொழியும்
அருமைக் கவிஞர்
         அய்யா பாபா!
நொடிக்கொரு கவிதை
         துடிப்புடன் யாத்து
அடிக்கடி கொடுத்து
         அடைவார் இன்பம்!
மதுர கவிராயர்
         மாண்புறு பாபா!

கோ.இமயவரம்பன்
 

Thursday, March 02, 2023

மாண்புமிகு முதல்வர் பிறந்தநாள்

 மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

அகவைத் திருநாள் 01.03.23

அகவை. 70

குறள் 67:


தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயலென்றார் வள்ளுவர்!

தந்தை கலைஞர் கடமையைச் செய்துவிட்டார்!

அன்பு மகனை அவையிலே முன்னணியில் 

நிற்கவைத்தார் வாய்ப்பை அளித்து.


குறள் 69:


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாயென்றார் வள்ளுவர்!

தன்மகன் ஸ்டாலினைச் சான்றோர் எனப்புகழும் 

இன்சொல்லைக் கேட்கின்றார் தாய்.


குறள் 70:


மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்லெனும் சொல்லென்றார் வள்ளுவர்!

அன்பகம்  ஸ்டாலினோ ஆற்றலால் 

சாதித்தே

இந்தக் குறளுக்கு நற்புகழ் சேர்த்துவிட்டார்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

9003260981