Friday, August 29, 2008

வாழப்பிடிக்கவில்லை!

வந்துவிட்டேன் வழ்வதற்கு! வாழப் பிடிக்கவில்லை!
நொந்து தவிக்கின்றேன் நாள்தோறும்--வெந்து
கருகி மறைந்திருந்தால் நிம்மதி யுண்டு!
உருகி மருகுகின்றேன் நான்.

சோதனையும் வேதனையும் சொக்கட்டான் ஆடுதடா!
நாகம்போல் சீறித்தான் கொத்துதடா--தேகமெல்லாம்
காயங்கள் உள்காயம் உள்ளத்தில் தேங்குதடா!
மாயந்தான் வாழ்வா? இயம்பு.

தவறுக்கு யாரிங்கே காரணமோ? அம்மா!
அவரா? இவரா? சினத்தை--அவதாரம்
கொள்ளவைத்தே ஆர்ப்பாட்டம் செய்கின்றார்! வேடிக்கை!
துள்ளுவதில் போட்டியா? தூ.

சொற்களாளே சுட்டவடு ஆறாதே என்றவர்தான்
குற்றத்தைச் செய்தவர்க்கும் நன்மையை--அற்புதமாய்ச்
செய்யவேண்டும் என்றேதான் சொல்கின்றார் பாருங்கள்!
உய்வதற்கே நல்லிணக்கம் நாடு.

நாள்தோறும் உள்ளத்தில் என்னென்ன கோலங்கள்!
வேல்முனையில் தாக்கினாலும் இத்தகைய--கால்பதிக்கும்
காயங்கள் ஏற்படுமா? தாங்க முடியவில்லை!
வாழப் பிடிக்கவில்லை ! இங்கு.

Tuesday, August 26, 2008

ஏங்காமல் வாழ்!

உலகத்தைப் பார்த்தால் உழன்றே திணறும்
தளமற்ற வாழ்வை நகர்த்தும்--கலங்காத
மாந்தரைக் காணலாம்!நாமும் உணர்ந்திட்டால்
ஏங்காமல் வாழலாம் இங்கு.

வசமாகும் வாழ்வு!

அமைகின்ற வாழ்வை உலகத்தில் ஏற்றே
சுமையாக எண்ணாமல் தாங்கி--குமைந்தே
உருகாமல் நாள்தோறும் சூழ்நிலையை வென்றால்
ஒருநாள் வசமாகும் வாழ்வு!

யாகம்!

தாய்தந்தை இன்றித் தவிக்கும் குழந்தைகள்
வாழ்ந்து வளர்ந்த ஒருநிலையில்--வாழ்வை
அமைத்து நிமிர்வதே யாகந்தான் இங்கே!
சுமைகளை வென்றால் சுகம்.

நடுநிலை

வேண்டுமென்றால் ஒட்டி உறவாடி வாழ்வது
வேண்டாம் எனநினைத்தால் வெட்டி விலகுவது
என்ற இருநிலையை விட்டு நடுநிலையில்
நிம்மதியாய் வாழ்வதே வாழ்வு.

Sunday, August 24, 2008

பாட்டியம்மா!

பாட்டியம்மா வழ்ந்தபோது பந்தாடிப் பார்த்தவர்கள்
பாட்டியம்மா செத்தவுடன் கூடிநின்று--போட்டிபோட்டே
ஒப்பாரி வைக்கின்றார்! வேடிக்கை மாந்தர்கள்!
ஒப்புக்கா பாசம்?உறவு?

உயிருடனே வாழ்ந்தநாளில் சோறுபோட்டு வாழ்த்த
தயங்கிநின்ற கூட்டத்தார்! தாங்க--மயங்கிநின்ற
கோழைகள்,சொத்தைப் பிரித்தெடுக்க ஓடிவந்து
சூளுரைத்து மோதுகின்றார் பார்.

தங்களுடன் வைத்தேதான் காப்பாற்றிப் பார்ப்பதை
பொங்கும் சுமையென்றே எண்ணியோர்--எங்களுக்குப்
பங்குண்டு சொத்திலென்று கூப்பாடு போடுகின்றார்!
இந்தமனம் ஈனமனம் சொல்.

இருக்கின்ற நாளில் மனங்குளிரச் சோறு
தருகின்ற பொன்மனந்தான் உண்மை--கருகிக்
கரைந்தபின்பு மாவிருந்து வைத்தால் உலகம்
திரண்டே நகைத்திருக்கும் செப்பு.

Thursday, August 07, 2008

தாய்நாட்டை முன்னேற்று!

நாடு நமக்கென்ன செய்ததென்று கேட்காதே!
நாடு வளம்பெற நாமென்ன--பாடுபட்டோம்
என்றேதான் கேட்டுச் செயல்பட்டால் தாய்நாடு
முன்னேறும் வல்லரசாய்!பார்.

வீரமல்ல!

குஜராத்தை பெங்களூரை குண்டுகளால் தாக்கித்
தகர்த்திட்ட வன்முறை மாக்கள்--கடைந்தெடுத்த
கோழைகள்! மூடர்கள்!அப்பாவி மக்களை
மாளவைத்தல் வீரமல்ல இங்கு.