Friday, May 31, 2019

புகை-- உட்பகை

உலக புகை எதிர்ப்பு நாள்!

31.05.2019

உட்பகை என்றே தெரிந்தும் புகைப்பதை
உட்கொண்டு மேலும் பழக்கமாக்கி நாள்தோறும்
கொத்தடிமை யாகத்தான் மாறிப் புகைக்கின்றோம்!
உட்பகைக்கு நாமே பலியாடாய் மாறுகின்றோம்!
முற்றிவிட்டால் சாம்பல்தான் நாம்.

மதுரை பாபாராஜ்



Wednesday, May 15, 2019

தமிழகமே தமிழ்மறந்தால்
தமிழ்மொழியை யார்படிப்பார்?


தமிழகமே தமிழ்மறந்தால்
தமிழ்மொழியை யார்படிப்பார்?
தமிழ்த்தாய்க் கண்ணீரை
அன்புடன் யார்துடைப்பார்?

பாராண்ட தமிழ்மொழியே
பரிதவிக்கும் கோலமேனோ?
கூவாத குயிலாக்கி
குரல்தன்னைத் தடுத்ததுயார்?

ஆடாத மயிலாக்கிச்
சிறகுகளை முறித்ததுயார்?
ஓடாத நதியாக்கி
பாலையாக மாற்றியதார்?

விழித்தெழு தமிழினமே
விவேகமாய்ப் போராடு!
எழுச்சிநடை தமிழ்போடும்!
என்றுமே வெற்றிதான்!

மதுரை பாபாராஜ்

Sunday, May 12, 2019

தானைத் தலைவன்!

அனைவரும் போக தன்னந் தனியாய்த்
துணையின்றிச் சந்தித்துச் சாதிக்கும் துணிவே
இணையற்ற ஆற்றலுள்ள  தானைத்  தலைவன்!
முனைப்பை முயற்சியைப் போற்று.

மதுரை பாபாராஜ்

அம்மாவும் நுங்கும்


விருந்தோம்பல் அன்றும் இன்றும்

10.05.2019
குறள் 86: நகைச்சுவைக்காக!

அன்று!

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

வள்ளுவர்

தண்ணீர்ப் பற்றாக்குறை இன்று!

செல்விருந்து தண்ணீரைக் கொண்டுவந்தார்! நல்லவேளை!
நல்விருந்தாய் ஆக வருவிருந்தே! தண்ணீரை
உள்ளமுடன் கொண்டுவந்தால் நல்லது! நாங்களும்
உள்ளம் மகிழ்ந்திடுவோம் இங்கு.

Thursday, May 09, 2019

மதுரையில் எங்கள் வீட்டுப் பிள்ளை!

நரவண்டி ஓட்டுநர்!

காசிக்கு இரங்கற்பா!

09.05.19

அய்ம்பதாண்டு காலமாய் இல்லற வாழ்விலே
தொய்வின்றி உழைத்த நரவண்டி ஓட்டுநர்!
அல்லும் பகலும் அயராமல் தொண்டாற்றி
நல்லறத்தைப் பின்பற்றி நல்லவராய் வாழ்ந்தவர்!
எல்லார்க்கும் நல்லவர் தான்.


என்னுடைய தந்தை அலுவலகம் செல்வதற்குக்
கண்ணுங் கருத்துமாய் நேரத்தே வந்தேதான்
அன்றாடம் தன்கடமை ஆற்றி மகிழ்ந்தவர்!
நம்பித்தான் எங்களது வீட்டை ஒப்படைத்துச்
சென்றிடுவோம்! காத்திருப்பார் காண்.

எங்களின் இல்லக் குழந்தைகள் பள்ளிக்குச்
சென்றுவரத் தொண்டுசெய்தார்! நோய்களின் வேதனையா
பொன்மனங் கொண்டே
மருத்துவம் பார்ப்பதற்கு
எங்கெனினும்  வந்தார் விரைந்து.

சென்றமாதம் எந்தன் தமக்கையின் வீட்டுக்கு
வந்திருந்த ஈரமோ காய்வதற்குள் சென்றுவிட்டார்!
அன்பகமாய்ப் பண்பகமாய் வாழ்ந்து மறைந்துவிட்டார்!
கண்ணீர்தான் காணிக்கை யாம்.


அப்படிப் பட்ட அருமையான காசியோ
சட்டென்றே நீடுதுயில் கொண்டுவிட்டார்!
என்செய்வோம்?
எப்பொழுதும் எங்கள் நினைவில் இருந்திடுவார்!
இப்பிறவி வாழ்வில் உறவாடி ஒன்றிவிட்டார்!
எப்படித் தான்மறப்போம் சொல்.


என்றும் நன்றியுடன்
மதுரை பாபாராஜ் குடும்பத்தார்





Saturday, May 04, 2019


ஏக்கம்!

வேண்டுகின்ற நேரம் குழந்தைக்குப் பெற்றோரின்
தீண்டும் சிறகுகள் தேவையிங்கு கண்மணியே!
எத்தனைக் கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும்
ஒட்டி உறவாடும் பெற்றோருக் கீடாமோ?
முத்துமுத்தாய்ப்  பிள்ளைகள் அங்கங்கே  காத்திருக்க
பெற்றோர் வருவார் களைத்து.

மதுரை பாபாராஜ்

Kavignarkamalkumar:
ஆம். கடைசி இருவரிகள் பொருள் பொதிந்தவை.

பிள்ளைகளை வெளிநாடு அனுப்பி விட்டுப் பெற்றவர்கள் ஏங்கி நிற்பார்.

அந்தப் பிள்ளைகள் மேலும் தவறில்லை. பெற்றோர் வரமாட்டார்களா என்று ஏங்கி முத்து முத்தாய்க் காத்திருப்பர்.

வருடம் ஒருமுறையோ இரண்டு வருடத்திற்கு ஒருமுறையோ தங்கள் தள்ளாத வயதில் பெரும்பாடு பட்டு 25 அல்லது 30 மணிநேரம் பயணம் செய்து அலுத்துக் களைத்து வருவார் பெற்றோர்.

நடைமுறை அவலத்தை நன்கு சித்தரிக்கிறது இந்தக் கவிதை.

நன்று.

Friday, May 03, 2019

மானுட நூல்!

வள்ளுவத்தை இங்கே பொதுமறையாய் ஏற்றவர்கள்
கிள்ளுகின்றார் சைவமென்றும் வைணவம் என்றுமிங்கே!
துள்ளுகின்றார் மற்றவரும் தங்கள் மதமென்றே!
வள்ளுவத்தை வள்ளுவமாய்ப் பார்த்தால் பிணக்கில்லை!
வள்ளுவம் மானுட நூல்.

பொதுமுறை என்றால் இணக்கத்தைத் தூண்டும்!
பொதுவுடைமைச் சிந்தனைக்கு வேராக மாறும்!
இதுவொன்றே நேர்மறைப் போக்கென்று சொல்வோம்!
மதங்களைத் தாண்டி நிமிர்.

மதுரை பாபாராஜ்

ஏன்?

கடனுக்குள் மூழ்கித்தான் தத்தளித்த போதும்
தடங்கல் திரண்டே வழிமறித்த போதும்
அடலேறாய் நெஞ்சை நிமிர்த்தித்தான் வாழ்ந்தேன்!
கடனில்லை, ஒன்றும் குறைவில்லை இன்று!
படபடப்பில் வாழவைத்துப் பார்க்கிறதே காலம்!
சுடரொளி வீசினாலும் காரிருளில் கண்கள்
தடவித்தான் செல்லவைப்ப தேன்?

மதுரை பாபாராஜ்