Friday, September 25, 2009

நரசிம்ம அவதாரம்!

-------------------------------
நாரா யணனென்ற நாமத்தை உச்சரித்தால்
வேரோடு வீழ்த்துவேன் என்றே இரண்யன்தான்
பாரதிர ஆணையிட்டான்!மக்களெல்லாம் கீழ்ப்படிந்தார்!
ஊரதிர ஆண்டிருந்தான் பார்.

இரண்யன் இணையருக்கு மைந்தன் பிறந்தான்!
பிரகலாதன் என்றே பெயரிட்டார்! அந்த
அரசர் குலக்கொழுந்து பக்திப் பழமாய்
வளர்ந்து மகிழ்ந்ததே அங்கு.

நாரா யணனே தரணியைக் காப்பவர்!
ஊராளும் மன்னர் அவர்க்கீடோ? என்றேதான்
நேரடியாய்க் கேட்டான்! நிலைகுலைந்தார் கேட்டவர்கள்!
யாரிவனோ? அஞ்சினார்!கண்டு.

மலைபோல நின்றிருந்த தந்தையின் முன்னால்
தரையில் மடுபோல நின்றான் மகன்தான்!
தரணியைக் காப்பவர் யாரென்றான் வேந்தன்!
நெருடலின்றி சொன்னான் நிமிர்ந்து:

"தரணியைக் காப்பவர் நாரா யணன்தான்!
அரசரே! நீங்கள் உணர்தலே நன்று!"
உரைத்தான் மகன்தான்!உறுமினான் தந்தை!
உரைப்பாயா?எங்கவன்?காட்டு.

இங்குள்ள தூணிலும் இந்தத் துரும்பிலும்
எங்கெங்கும் நீக்கமற உள்ளார் எனவுரைத்தான்!
இங்கிருக்கும் தூணிலா? என்றே இரண்யன்தான்
அங்கே உதைத்தான் வெகுண்டு!

உதைத்ததும் தூணும் பிளந்தது! பார்த்தான்!
நடுநடுங் கிடவே நரசிம்மன் கோலம்
உடுத்தியே நாரா யணனங்கே வந்தார்!
படுத்தது ஆணவந்தான் பார்!

அரண்மனை வாசல்! நரசிம்மன் வந்தே
தளத்தில் அமர்ந்தே இரண்யனை அங்கே
கிடத்தினார் தன்மடியின் மீதுதான்! சிங்க
முகக்கடவுள் சீறினார் காண்.

நகங்களால் மன்னனின் மார்பைக் கிழித்தார்!
அகந்தை அழிந்தது! தர்மமே வென்று
அகங்குளிர ஆட்சியை மைந்தனுக்குத் தந்தே
அடங்கினார்! ஆகா! மகிழ்ந்து.

கதைதானா? உண்மையா? தேவையில்லை வாதம்!
கடைந்தெடுத்த ஆணவம் யாருக் கெனினும்
உடைந்து நொறுங்கவேண்டும்! இந்தக் கருத்தைப்
படைப்பதுதான் இஃதென்றே சொல்.

மதுரை பாபாராஜ்

ஊழ்வினையா? சூழ்நிலையா?

வாழ்க்கையைக் கேவலத்தின் உச்சியிலே நிற்கவைத்துத்
தாழ்வுகளின் எல்லையில் வேடிக்கை பார்ப்பது
ஊழ்வினையா? இந்தப் பிறவியின் சூழ்நிலையா?
கோலங்கள் மாறுமா? கூறு.

ரயிலில் பயணிகள் பலவிதம்

=============================
வாசலில் நிற்காதே! வாசகத்தைப் பார்த்துவிட்டும்
வாசலில் நின்றேதான் பேசிடுவார்-- ஊசலாடும்
அந்தக் கதவைத் திறந்துவைத்து நின்றிருப்பார்!
நெஞ்சம் பதறும் நினைந்து.

அடிக்கடி நண்பர் எழுந்தேதான் செல்வார்!
இடிப்பார்! பரிதாப மாய்ச்சிரித்துக் கொள்வார்!
துடிப்பும் சுறுசுறுப்பும் சொத்தாக சீட்டில்
நொடியும் இருக்கமாட்டார்! பார்.

பக்கத்தில் உள்ளவரோ பேசாமல் வந்திடுவார்!
அக்கறையாய்ப் பேசி அவரையும் பேசவைத்துக்
கச்சேரி செய்து களைகட்ட வைத்திடுவார்!
இத்திறமை யார்தந்தார்? சொல்.

என்னதான் பேசினாலும் ஒன்றிரண்டு வார்த்தைகள்
தன்னால் முடியுமென்று பேசுகின்ற மாந்தரும்
வண்டிப் பயணத்தில் வந்திடுவார்! சொற்களை
எண்ணித்தான் பேசுவோரும் உண்டு!

வருகின்ற பண்டமெல்லாம் நண்பரின் வாய்க்குள்
உருவிழந்து போகும் வயிற்றில் -- அரைப்பதற்கு
அஞ்சமாட்டார்! நாவோ சுவையில் மயங்கிட
உண்பார் தொடர்ந்து ரசித்து.

எந்தெந்த ஊருக்கு எந்தெந்த நேரத்தில்
இந்தவண்டி போகுமென்று சொல்லிக் களித்திருப்பார்!
அந்தந்த ஊரின் பெயரையும் சொல்லிடுவார்!
நண்பரின் சேவையோ நன்று.




அன்றிருந்து இன்றுவரை நிர்வாகக் கோளாறைக்
கண்டபடிப் பேசி அலசிடுவார் --- தண்டவாளச்
சத்தம் இவரது சத்தத்தில் மங்கிவிடும்!
இப்படியும் மாந்தர்கள் உண்டு.

அங்கங்கே செல்போன் ஒலித்திருக்கும்! அன்பரோ
தங்குதடை இல்லாமல் வம்பளந்து பேசிடுவார்!
தொந்தரவு மற்றவர்க்கு என்றேதான் எண்ணாமல்
தன்னலத்தில் இன்புறுவார்! சாற்று.

கண்ணயர்ந்து தூங்குகின்ற நேரம் திடீரென்று
மின்விளக்கைப் போடுவார்!பின்பு அணைத்திடுவார்!
என்னதான் வந்ததோ இந்த நபருக்கு
என்றே முணங்குவோம் நாம்.

மதுரை பாபாராஜ்

அலைகளில் தக்கைதான் வாழ்வு!

==================================
சென்ற தலைமுறை கூட்டுக் குடும்பங்கள்!
இந்தத் தலைமுறை எல்லாம் தனித்தனி!
மண்ணுலகில் நாளை தலைமுறை எப்படியோ?
நெஞ்சம் கனக்கிறது பார்.

தலைமுறை ஏந்தும் இடைவெளிப் போக்கில்
தலைகீழாய் எல்லாம் நடைபெறும் கோலம்!
வலைகளில் மீனாக வாழும் முதியோர்!
அலைகளில் தக்கைதான் வாழ்வு.

மதுரை பாபாராஜ்

பாவா நீங்களில்லை இங்கு!

அன்றுநீங்கள் வாங்கி வழங்கிய பொம்மைகள்
இன்றும் கொலுவிலே உள்ளன--உங்கள்
குழந்தைகள் வாரிசுகள் பார்த்து ரசிக்கும்
களத்திலே நீங்களில்லை இங்கு.

வெற்றிநடை போட்டு விருதுகள் வாங்குகின்றோம்!
சுற்றம் மகிழ்ந்திருக்க மங்கலங்கள் காணுகின்றோம்!
இத்தரணி மெச்சும் புகழனைத்தும் உங்களுக்கே!
முத்துபாவா நீங்களில்லை இங்கு.

மதுரை பாபாராஜ்

Thursday, September 10, 2009

முதுமையின் தாலாட்டு

==========================
எனக்கும் உனக்கும் உலகநாட்கள் நாளும்
கணக்கிட்டே இங்கு நகர்த்துகின்ற கோலம்!
மணநாள் இளமை நிழலாட, முதுமை
தினம்வாழ்த்த வாழ்கின்றோம் நாம்.

யாதும் ஊரே!யாவரும் கேளிர்!-- எங்கே?

யாதும் ஊரே!யாவரும் கேளிர்!-- எங்கே?
============================================
எந்தநாடு என்றாலும் என்னுடைய நாடென்றும்
எந்தநாட்டு மக்களும் எம்மக்கள் என்றுந்தான்
சங்ககாலப் பாவலன் பாடிவைத்தான்!கண்ணருகே
வன்கொடுமை!பார்த்திருப்போம் நாம்.

தானாடா விட்டாலும் தன்சதை ஆடுமென்றார்!
தானுமிங்கே ஆடவில்லை ! தன்சதையும் ஆடவில்லை!
தானுண்டு தன்குடும்பம் உண்டென்றே வாழ்கின்றோம்!
ஊனமன ஊர்வலந்தான் பார்.

எரிதணலில் காகிதமாய் ஒவ்வொரு நாளும்
தவித்தே மரணத்தின் வாசலில் வாழ்க்கை
சரிந்துவிழ, பூக்கள் கருகுதடா! பார்த்தும்
புவியரசு மௌனத்தில் ! ஏன்?

மதுரை பாபாராஜ்

Monday, September 07, 2009

வாழ்வின் சுழற்சிகள்

========================
அண்ணனும் தம்பியும் அக்காவும் தங்கையும்
தந்தையின் தாயின் அரவணைப்பில் -- ஒன்றியே
ஒற்றுமை ஊஞ்சலில் ஆடித் திளைத்திருப்பார்!
சுற்றங்கள் நாடுமே சூழ்ந்து.

படிப்படி யாகப் படிப்பார்!வளர்வார்!
துடிப்புடன் சாதனையின் தோளில் -- அடிக்கடி
ஏறிச் சிரித்திருப்பார்!ஆனந்த ராகங்கள்
தூவியதே உள்ளம் இணைந்து.

பருவங்கள் பூத்தன! எல்லோர்க்கும் இங்கே
திருமணம் மங்கலத்தை ஏந்த -- ஒருமனதாய்
வாழ்வினை ஏற்றார் உறவினர்கள் சூழத்தான்!
காலம் சுழன்றது பார்.

சுழற்சிகள் கொண்டதே வாழ்க்கை! தினமும்
பரபரப்பின் எல்லைகள் தோன்ற -- வரம்புகள்
ஊன்றிக் குடும்பத்தின் தேவையின் கூண்டுக்குள்
ஊர்வலக் காட்சிகள்தான் பார்.

அவரவர்க்குத் தேன்மழலைச் சுற்றம் பெருக
அவர்களைச் சார்ந்த குடும்பம் -- உயர்ந்திடப்
பாடுபடும் சூழல் சிறகுகள் தாம்விரிய
ஈடுபடும் கோலத்தைப் பார்.

அண்ணனும் தம்பியும் அக்காவும் தங்கையும்
அன்றிருந்த கோலங்கள் வேறாகும் -- இன்றிருக்கும்
கோலங்கள் வேறாகும்!தூரநின்று பார்ப்பதுதான்
காலத்தின் கோலமேன்பேன் காண்.




இப்படி வாழ்வதைத் தப்பென்று சொல்லவில்லை!
எப்படி ஒன்றாக வாழ்ந்தவர்கள் -- இப்படி
இவ்வுலகில் திக்கொன்றாய் நின்றே பிரிந்தேதான்
தள்ளிநின்று வாழ்கின்றார் பார்.

குடும்ப உறவுகளின் சங்கிலிக் கண்ணி
அறுந்தறுந்து வீழ்ந்தாலும் அந்த நிலையில்
அடுத்தவர்போல் வேடிக்கை பார்கவைக்கும் வாழ்க்கை!
கடுமைதான் வாழ்க்கைஎன்பேன் நான்

யார்சுமையை யார்சுமப்பார்? யார்தேவை யார்தருவார்
யாராய் இருந்தாலும் தங்களது போர்வைக்குள்
யாரோ ஒருவர்போல் இங்கே முடங்குவதே
வாழ்வின் நடைமுறை யாம்.

அடுத்த தலைமுறையின் வாழ்க்கை தொடரும்!
இதுபோல் சுழற்சிகள் அன்றும் தொடரும் !
இதுதான் வாழ்வியல் பாடங்கள் என்றே
குடும்பம் உருண்டிருக்கும் கூறு.




--மதுரை பாபாராஜ்
1, முதல் குறுக்குத் தெரு
கணேஷ்நகர் டெலிபோன் காலனி
ஆதம்பாக்கம்
சென்னை - 600 088
======================
கைபேசி:900 3260 981
=======================

இதுதான் தியாகம்

-----------------------------
மனைவி இருந்து கணவன் மறைந்தால்
அனைத்தும் முறையாய் நடக்கும்--மனையில்
மனைவி மறைந்து கணவன் இருந்தால்
அனைத்துமே தாறுமாறு தான்.

கணவன் படுத்த படுக்கையாய் ஆனால்
குணவதி துஞ்சாமல் சேவை புரிவாள்!
குணவதி அப்படி ஆனால் கணவன்
பணந்தருவான்! சேவை ?அரிது.

மதுரை பாபாராஜ்

Sunday, September 06, 2009

கவிதை விளக்க நூல் வெளியீட்டு விழா

கவிதை விளக்க நூல் வெளியீட்டு விழா

First Published : 29 Aug 2009 09:06:07 AM IST


மதுரை, ஆக. 28: மதுரை திருக்குறள் அன்பர்கள் அமைப்பு சார்பில் கவிஞர் மதுரை பாபாராஜ் எழுதிய திருக்குறள் வெண்பா பாங்கில் கவிதை விளக்கம் மூன்று நூலாக அறத்துப் பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
ஞானஒளிவுபுரம் பகுதியில் உள்ள சி.இடி. அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் ரா.சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.
மதுரைக் கம்பன் கழகத் தலைவர் சாலமன் பாப்பையா நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
நூலின் முதல் பிரதியை லெட்சுமி முத்துவீரன் பெற்றுக்கொண்டார். கவிஞர் மு.ரகுவீரகணபதி வரவேற்றார் அருள்திரு ஆ.வெ.சாந்திரகுமார சுவாமிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

நன்றி தினமணி நாளேடு

இப்படியும் நடக்கும்

மகனும் மகளும் மகிழுந்தில் செல்வார்!
தகப்பனும் தாயும் தெருவில் -- நடந்தேதான்
தள்ளாடித் தள்ளாடிச் சென்றிருக்கும் கோலத்தை
இவ்வாழ்க்கை காட்டும் இயல்பு.

-- மதுரை பாபாராஜ்