Monday, November 16, 2009

உலகமே உன்னைப் போற்றும்

===================================
உன்னிடம் அறிவு உண்டு!
உன்னிடம் ஆற்றல் உண்டு!
உன்னிடம் இதயம் உண்டு!
உன்னிடம் ஈகை உண்டு!
உன்னிடம் உழைப்பு உண்டு!
உன்னிடம் ஊக்கம் உண்டு!
உன்னிடம் எழுச்சி உண்டு!
உன்னிடம் ஏற்றம் உண்டு!
உன்னிடம் ஐந்தும் உண்டு!
உன்னிடம் ஒழுக்கம் உண்டு!
உன்னிடம் ஓம்பல் உண்டு!
உன்னிடம் ஒளவை உண்டு!
உன்னிடம் எல்லாம் உண்டு!
உன்னையே அறிந்து கொண்டு
உலகினில் உயர வேண்டும்!
உலகமே உன்னைப் போற்றும்!

-- மதுரை பாபாராஜ்
1, முதல் குறுக்குத் தெரு,
கணேஷ்நகர் டெலிபோன் காலனி
ஆதம்பாக்கம்
சென்னை-600 088
=====================
கைபேசி:900 3260 981
=======================

Sunday, November 15, 2009

வேலையாள் அல்ல!உதவும் கரங்கள்!

=======================================
நம்முடைய வீட்டுக்கு நம்முடைய வேலைக்குக்
கண்ணுங் கருத்துமாய்,அக்கறையாய்-- அன்றாடம்
வந்தே உதவிசெய்யும் பெண்களின் மனத்தைப்
புண்படுத்திப் பார்த்தல் இழிவு.

வேலையாள் என்றே அழைப்பதை விட்டுவிட்டு
நாளும் உதவியாள் என்றே அழைக்கவேண்டும்!
கோளின் சுழற்சி விதியிலே சிக்கிவிட்டார்!
கோலத்தை ஏந்திவிட்டார் கூறு.

நம்மால் வீட்டுவேலை செய்ய முடியவில்லை!
அன்பாக வந்தே துணைக்கரம் நீட்டுகின்றார்!
அன்புடனே நாமும் பகிர்ந்துண்ண வேண்டுமிங்கே!
பண்பாடு காக்கவேண்டும் பார்.

வறுமையால் வாடுகின்றார்! அந்த நிலையை
நறுக்கென்று சாதகமாய் மாற்றியே நாமும்
கடுமையாய்ப் பேசுதல் கூடாது! நெஞ்சே!
வடுக்களைக் கூட்டாதே இங்கு.

அவர்களுக்கும் வீடுண்டு! வாசலுண்டு! பெற்ற
குழந்தைகள் காத்திருக்கும் கோலமுண்டு!பாராய்!
உலவும் உணர்ச்சிகள் எல்லாம் பொதுதான்!
உலக நடப்பை உணர்.

ஒருநாள் அவர்கள் வரவில்லை என்றால்
ஒருநாள், யுகமாக மாறிவிட வீடே
ஒருநிலை இன்றித் தலைகீழாய் மாறும்!
பெருந்தன்மை காட்டுதல் பண்பு.

== மதுரை பாபாராஜ்

Saturday, November 14, 2009

இல்லறத்தில் ராகபேதம்!

=========================
கணவன் மனைவியையோ, அந்த மனைவி
கணவனையோ நாளும் அடிமைப் படுத்தும்
மனப்போக்கு நல்லதல்ல!நிம்மதி தேய்ந்து
கணைகளாய் மாறிடுவார்!காண்.

இருவரும் விட்டுக் கொடுக்கும் விவேகம்
ஒருங்கிணைந்தால் இல்லறத்தில் என்றும் மகிழ்ச்சி
தருவாய் வளரும்!தழைக்கும்!நிலைக்கும்!
ஒருமைதான் இன்பம்!உணர்.

மரியாதை காட்டுகின்ற பண்பினை இங்கே
சரிவர வாழ்வில் புரிந்துகொண்டு வாழ்ந்தால்
சரியாது ! இல்லறம் கோணாதே!இந்தப்
புரிதல் உணர்வே தளம்.

எடுத்ததற் கெல்லாம் இடிமுழக்கம் என்றால்
கடுகடுத்த கோபத்தில் சொற்கள் நெருப்பாய்
அடுத்தடுத்துப் பாயும்!எவரெனினும் தாக்கும்!
வடுக்களும் ஆறா துணர்.

மற்றவர்கள் முன்னே மனைவி கணவனையும்
மற்றவர்கள் முன்னே கணவன் மனைவியையும்
மட்டப் படுத்தியே சீண்டுதல் கூடாது!
எப்பொழுதும் பண்பினைப் பேண்.

கணவனும் அன்புடன் பேசவேண்டும்!நல்ல
குணவதியும் பின்பற்றிப் பேசவேண்டும்!தாளம்
மனம்போன போக்கிலே போகுமென்றால் ராகம்
தினமும் பேதமுடன் தான்.

மதுரை பாபாராஜ்

சமுதாய வீதியில்

===================
பெண்களின் மாராப்பு சற்றே விலகியதும்
பண்புடன் கையால் சரிசெய்வார் அன்றுதான்!
என்னதான் மாராப்பு எப்படித்தான் போனாலும்
கண்டுகொள்வ தில்லையே இன்று!

பெண்களில் எல்லோரும் இப்படியல்ல என்றபோதும்
கண்டுகொள்ளாப் பெண்களும் இவ்வகையில் உள்ளனர்!
என்றுமே பார்த்து நடந்துகொண்டால் பாதுகாப்பு
என்றென்றும் பெண்களுக்கே!சொல்.

வாகனத்தில் பெண்களும் செல்கின்ற காலமிது!
வேகமாகப் போகின்றார்!மேலாடை காற்றினில்
ஊடறுத்தே இங்கே பறக்கின்ற காட்சியில்
நாடே அதிர்கிறது கண்டு.

வண்டியில் சென்றாலும் கைபேசி காதுகளில்
முண்டி உறவாட மெய்மறந்து பேசுகின்றார்!
வண்டியை ஓரமாய் நன்கு நிறுத்திவிட்டு
வம்பளந்தால் பாதுகாப்பு!சொல்.

கணவரோ, காதலரோ கட்டிப் பிடித்தே
இணக்கமுடன் வண்டியில் செல்கின்றார்!அம்மா!
தொணதொண வென்றேதான் பேசுகின்றார்!இந்தக்
குணமோ விபத்தைத் தரும்.

கண்ட இடங்களில் காறி உமிழ்கின்றார்!
என்னப் பழக்கமோ இப்பழக்கம்?மாந்தரே!
எண்ணற்ற நோய்களை ஊற்றெடுக்கச் செய்கின்ற
பண்பற்ற இப்போக்கை மாற்று.

அங்கங்கே நின்று புகைபிடிக்கும் ஆண்களே!
உங்களால் இங்கே துயரந்தான் மற்றவர்க்கு!
இன்பமென்று எண்ணி உடல்நலத்தைச் சீரழிக்கும்
வன்முறையை இன்றே நிறுத்து.

நற்பண்பை நாளும் கடைப்பிடித்தல் நாகரிகம்!
அற்பக் குணத்தை வளர்ப்பதல்ல நாகரிகம்!
முற்போக்கில் செல்கின்றோம் என்றே நினைத்தேதான்
பிற்போக்கில் வாழாதே இங்கு.

மதுரை பாபாராஜ்

Wednesday, November 11, 2009

எந்தத் துணையும் நிலையில்லை!

=================================
கணவன் இறந்ததும் அவ்வளவு தானா?
மனத்தளவில் பாதிப்பும் ஏக்கமும் உண்டு!
குணவதியே!சந்தித்து நம்பிக்கை ஏந்து!
சுணங்காதே!உன்கையில் வாழ்வு!

பறவை,விலங்கினங்கள்,நீரினங்கள் எல்லாம்
இடங்கண்டு வாழ முடிகிறதே! உன்னை
முடக்காதே!போராடு!முன்னேறு!உன்னைத்
தொடர்ந்துவரும் வெற்றிகளைப் பார்.

தனிமை கொடுமைதான்!ஆனால் கடமை
அணிவகுத்து நிற்கிறதே!உன்னையே நம்பி
மணியான பிள்ளை ஒருவன் அந்தோ!
துணிந்துநில் சான்றோனாய் மாற்று.

வளர்ந்தான்!படித்தான்!படித்து முடித்தான்!
வளமான வேலை கிடைத்தது!உந்தன்
நிலையும் மாறும்!மகனை நிமிர்த்து!
கலைந்திடும் காட்சிப் பிழை.

கணவன்,மனைவி இறத்தல் இயல்பு!
கணவனை எண்ணிக் கடமை செய்து
தினந்தோறும் வாழவேண்டும் இல்லாள்!துயரம்
மனச்சுமைதான்!தாங்கவேண்டும் இங்கு.

மனைவியை எண்ணிக் கணவனும் நித்தம்
அனைத்துக் கடமையைச் செய்திட வேண்டும்!
மனையில் அனைவரும் வாழ்ந்திட வேண்டும்!
அனைத்தையும் தாங்கவேண்டும் இங்கு.

எவரை இழந்தாலும் வாழ்க்கை நகரும்!
எவரும் எவரையும் சார்ந்ததல்ல வாழ்க்கை!
அவரவர்க்கு வாழ்க்கை உறுதியாய் உண்டு!
தவறாமல் நேர்வழியில் வாழ்.

மதுரை பாபாராஜ்

சேராது புண்ணியம் !

===========================
எந்தக் கடவுளைக் கும்பிட்ட போதிலும்
இந்த மனிதன் அடிப்படைப் பண்புகளில்
கொஞ்சமும் மாறவில்லை! தன்னலக் கூட்டுக்குள்
தஞ்சம் அடைகின்றான் சாற்று.

விட்டுக் கொடுக்கும் விவேக மனப்பான்மை,
சுற்றம் தழைக்கும் மனிதநேயம்,இன்சொற்கள்
ஒட்டி உறவாடும் பண்பின் அணுகுமுறை
பற்றிப் படரவேண்டும் பார்.

பொய்மை,பொறாமை,பேராசை,வன்சொற்கள்
கயமை,கடுமை,முகத்திலே சீற்றம்,
நயவஞ் சகஎண்ணம்,காழ்ப்புணர்ச்சி போன்ற
தளங்கள் அழியவேண்டும்!சொல்.

கோயிலுக்கு கோயில் வழிபாடு செய்துவிட்டு
கோயிலை விட்டே வெளிவந்து நின்றுகொண்டு
வேரறுக்கும் வேலைகளைச் செய்வதுதான் பக்தியா?
சேராது புண்ணியங்கள்!செப்பு.

மதுரை பாபாராஜ்

Sunday, November 08, 2009

என்று முடியும் துயர்?

என்று முடியும் துயர்?
=======================
இலங்கைக் கடற்படையைச் சேர்ந்தவர்கள் நாளும்
வலம்வந்தே இந்திய மீனவரைத் தாக்கி
அலைக்கழிக்கும் போக்கைத் தடுத்து நிறுத்தும்
நிலையென்று காண்போம்? உரை.

எங்கெங்கோ சென்றானாம்! வெற்றிக் கொடிநாட்டி
மண்ணுலகை ஆண்டானாம்!ஏட்டுச் சுரைக்காய்கள்
கண்களை ஈர்க்கும்! கறிசமைக்க ஏலாது!
அந்தஇனமோ பார்வையாளர் இன்று!

கண்டனம்!போராட்டம்!ஆர்ப்பாட்டம்! என்றேதான்
துன்பத்தைப் பங்குபோட்டுக் கத்தினாலும் மீனவர்கள்
அன்றாடம் தாக்கப் படுவதோ நிற்கவில்லை!
என்று முடியும் துயர்?

மீனவர்கள் என்ன குருவிகளா?கொக்குகளா?
மீனவரைச் சுட்டும் கைதுசெய்தும் வாட்டுகின்ற
ஈனமனங் கொண்ட இலங்கைக் கடற்படை
ஆணவத்தை யாரழிப்பார்? கூறு.

மதுரை பாபாராஜ்

ஆசையே அழிவுக்குக் காரணம்!

=================================
ஆசைக்கும் காற்றுக்கும் பேரழிவுப் போட்டிவைத்தால்
ஆசையின் வேகம்முன் காற்று தலைகுனியும்!
ஓசை இழந்தே ஒடுங்கி அடங்கிவிடும்!
ஆசை அழித்துவிடும் பார்.

மதுரை பாபாராஜ்