Wednesday, August 25, 2010

நாட்டின் அமைதிக்கு

=========================
வஞ்சக எண்ணங்கள் வன்முறையைத் தூண்டிவிடும்!
வன்முறையோ அப்பாவி மக்களையே பந்தாடும்!
தன்னலத்தை முன்வைத்துக் கண்டபடி வாழ்கின்றார்!
என்றிது மாறுமோ?கூறு.

மாற்றம் வரவில்லை என்றாலோ பேரழிவே
ஊற்றெடுக்கும்! உட்பகையே கூத்தாடும்!கும்மாளம்
போட்டுத்தான் நல்லமைதி கேள்விக் குறியாக
வாட்டி எடுத்துவிடும் பார்.

நல்லமைதி தோன்ற மனிதநேயச் சிந்தனைகள்
உள்ளத்தில் நாளும் மலர்ந்து வாழ்விலே
எல்லோரும் எல்லாம் பெறுகின்ற வாய்ப்பினைத்
தள்ளித்தான் போடாமல் தா.

வன்முறையைக் கைவிட்டு நன்முறையைப் பின்பற்று!
வஞ்சகத்தைத் தூக்கிஎறி !உட்பகையைத் தேக்காதே!
உண்மையை வாழ்வாக்கு! பொய்மையைக் கிள்ளியெறி!
என்றும் அமைதிதான் நாடு.

இருகோடுகள் சந்திக்குமா?

========================================
இந்த இருகோடுகள் சந்திக்க வேண்டுமே!
சந்திப்பைக் காலந்தான் சொல்லவேண்டும் இல்லையெனில்
எங்கள் பிறவி இறப்பினைக் காண்பதற்குள்
என்றும் உளைச்சல்தான் வாழ்வு.

Tuesday, August 24, 2010

சாதிக் கணக்கெடுப்பை நிறுத்து!

======================================
கட்சி அரசியலைக் கண்மூடிப் பின்பற்றி
தட்டுத் தடுமாறி வாழ்கின்றோம் -- நாட்டிலே
தன்னலக் கோலம் பதவி வெறியாட்டம்
உண்டாக்கும் பேரவலம் பார்.

நாடு முழுவதிலும் சாதிக் கணக்கெடுப்பை
தேடுபொருள் ஆக்கி எடுக்கின்றார் -- ஏடுகள்
கொள்ளுமா சாதிகளின் எண்ணிக்கை?இம்முயற்சி
தொல்லைக்கே வித்தூன்றும் சொல்.

மூடுவிழா காணுமிங்கே கட்சி அரசியல்தான்!
சூடும் மணிமகுடம் சாதி அரசியல்தான்!
ஆடும் படமெடுத்தே சாதிவெறிப் பாம்பிங்கே!
ஆடல் ரசிக்குமா?சொல்.

எந்தத் தொகுதியில் எந்தெந்த சாதிகள்
அங்கே பெரும்பான்மை உள்ளதோ - அந்தந்தச்
சாதியிலே வேட்பாளர் வாய்ப்பைத் தருவதற்குத்
தூதுவிட்டுத் தேர்ந்தெடுப்பார் கூறு.

வன்முறையும் வேற்றுமைக் கொந்தளிப்பும் அன்றாடம்
நம்கண்முன் காட்சிப் பொருளாய் அரங்கேறும்!
அம்மட்டோ? என்னென்ன கூத்தும் குழப்பமும்
நம்மை நெருக்குமோ? அஞ்சு.

நாட்டிலே கட்சிவைத்துக் கூட்டணி கண்டவர்கள்
வாக்குவாங்க சாதிவைத்துக் கூட்டணியைக் காண்கின்ற
போக்குவரும்! சாதிவெறி கொண்டாட்டம் போட்டுநிற்கும்!
ஏக்கத்தில் திண்டாடும் நாடு.

சாதிக் கணக்கெடுப்பால் நாடு தலைகுனியும்!
நீதி,சமத்துவம் எல்லாம் மறைந்துவிடும்!
ஊதி உலைவைப்பார் வேற்றுமையில் ஒற்றுமைக்கே!
சாதிக் கணக்கை நிறுத்து.

மதுரை பாபாராஜ்

Thursday, August 19, 2010

துறவிபோல் வாழ்க!

=========================
அவமானந் தன்னை வெகுமான மாக்கி
தவமுனிவன் போல துறவுநிலை ஏற்றால்
உலகமே தூற்றி உருக்குலைத்த போதும்
கலங்காமல் வாழலாம் ! நீ.

சுடுசொற்கள் தம்மை அடுசரமாய் விட்டே
நடுநடுங்க வைத்து நகைத்திடும் நேரம்
நெடுமலைபோல் நின்று உதிர்ந்துவிழச் செய்தால்
நடுங்குவார் தாக்கியோர் தான்.

பகைத்துளிகள் இங்கே அனல்துளிக ளாக
வகைவகை யாக வதைத்திட்ட போதும்
முகில்மழை போல பொழிந்திடு அன்பை!
முறிந்திடும் அந்தப் பகை.

துறவிபோல் வாழப் பழகினால் போதும்
சிறகடித்து ஓடும் மனஇறுக்கம் எல்லாம்!
எதுவுமே இங்கே உனக்கில்லை என்றே
உதறுகின்ற பக்குவத்தை நாடு.

மதுரை பாபாராஜ்

கூடித் தோண்டினால் மக்களுக்குக் கோடி நன்மை!

================================================
மாநக ராட்சியின் ஊழியர்கள் சாலையைக்
கோணலாகத் தோண்டுவார்! தங்கள் பணிகளை
ஆனமட்டும் செய்துவிட்டு மூடிவிட்டுச் சென்றிடுவார்!
சேனை பரிவாரம் சூழ தொலைப்பேசி
பாணமென ஊழியர் வந்திடுவார்! தோண்டுவார்!
கோணலை ஒட்டியே நேராக வெட்டுவார்!
தூண்போன்ற கேபிளை உள்ளே பதித்திடுவார்!
தோண்டியதை அங்குமிங்கும் மூடிவிட்டுச் சென்றிடுவார்!
வானலைக் கோபுர செல்போன் நிறுவனத்தார்
ஞானம் பிறந்ததுபோல் வந்து மறுபடியும்
ஊனமாக்கி நீளமாய் சாலையின் ஓரத்தை
ஏனோ அவசரமாய்த் தோண்டிப் பதித்திடுவார்!
மானத்தைக் காப்பதுபோல் சாலையை மூடிவிட்டு
போனவுடன் சாக்கடைத் தொட்டி பதிப்பதற்கு
வானத்தை சாலையோ பார்த்திருக்கத் தோண்டுவார்!
தோண்டுவார்! தோண்டுவார்! தோண்டித்தான் தோண்டுவார்!
தோண்டும் துறையனைத்தும் ஒன்றிணைந்து தோண்டுகின்ற
வேண்டுதல் தீருகின்ற காலமும் வாராதோ?
தூண்டிலுக்குள் மீனாகத் துள்ளித் தவிக்கின்ற
மாண்புமிகு பொதுமக்கள் துன்பங்கள் தீராதோ?
ஏனிந்த வெங்கொடுமை? சொல்.

மதுரை பாபாராஜ்

Sunday, August 15, 2010

கல்லடி!சொல்லடி!

============================================
கல்லடி பட்டால் மணித்துளியே வேதனை!
சொல்லடி பட்டால் மணிக்கணக்கில் வேதனை!
வல்லூறு வாயில் இரைபோல நாள்தோறும்
உள்ளம் துடித்திருக்கும் கூறு.
==============================================

விதியும் மதியும்

=============================
விதியின் பிடிகள் விலங்கிடும் நேரம்
மதியின் பிடிகள் விலகியே ஓடும்!
மதியை இழந்த மனிதனின் வாழ்க்கை
விதிக்கே இரையாகும் பார்.
============================================

Saturday, August 14, 2010

இதற்கா மரியாதை ?

=============================================
உயிருடன் உள்ளபோது வேண்டா வெறுப்பாய்
களிகிண்டிப் போடுகின்ற கூட்டம் - உயிர்பிரிந்து
செத்துப் பிணமாகக் கிடக்கின்ற கோலத்தில்
சொத்துக்கு மாரடிக்கும் சூழ்ந்து.

Monday, August 09, 2010

அரளிச்செடி நகைத்தது!

அரளிச்செடி நகைத்தது!
(காலையில் கண்ட காட்சி)
============================
அடர்ந்து வளர்ந்த அரளிச் செடியின்
மடலைப் பறித்தாள் ஒருத்தி - உடனே
செடியின் உரிமையாளர் வந்தார்! அவளைப்
பறிக்காதே என்றார் சினந்து.

செடியில் இருந்தால் மடல்கள் உதிரும்!
கடவுளுக்கு அர்ச்சனை செய்யப் பறித்தால்
சடக்கென்று பாய்கிறாயே! என்றே செடியும்
நகைத்தது அச்செயல் கண்டு.

மடல்போல் நீயும் பறிக்கப் படுவாய்!
உடலும் புதைந்திடும் மண்ணுள் - தடுக்க
சடக்கென்று கோபம் வருமோ?மனிதா!
பிறருக்(கு) ஈவதே வாழ்வு .

Friday, August 06, 2010

காலக் கணக்கு!

===============================
எந்தெந்த காலகட்டம் ,எத்தனை ஆண்டுகள்
ஒன்றுபட்டு வாழவேண்டும்?வேறுபட்டு வாழவேண்டும்?
என்று கணிக்கின்ற காலக் கணக்கினை
இங்கே தவிர்த்தல் அரிது.

Tuesday, August 03, 2010

வீடு கொதிக்கிறது!

=========================
வீடா ? இடுகாடா? என்றால் இடுகாட்டை
நாடும் மனநிலையில் வாழ்கிறேன்!-- வீடு
கொதிக்கிறது! இங்கே இடுகாட்டின் சூழல்
நதிபோல் குளிர்கிறது பார்.

தவிர்க்கின்றன கண்கள்:தவிக்கிறது மனம்!

பேரழகுச் சித்திரப் பாவையை இப்பக்கம்
பார்த்ததும் என்கண்கள் அப்பக்கம் சென்றன!
ஈர்த்தவள் அப்பக்கம் வந்தாலோ இப்பக்கம்
தேரெனச் சென்றன!கண்கள் விலக்கினாலும்
ஊர்வலம் செல்பவளைப் பின்தொடர்ந்தே என்மனம்
ஆர்வமுடன் செல்கிறதே! என்செய்வேன்? எப்பொழுதும்
பாரிலே என்நிலையைப் பார்.