Sunday, February 26, 2017


என்னென்பது?

வாழத் தெரியவேண்டும்! இல்லை மகிழ்ச்சியாக
வாழ விடவேண்டும்! இந்த இரண்டையும்
வாழ்க்கையில் ஏற்காமல்  நான்தான் சரியென்றால்
வாழ்க்கை நகைக்கும் உணர்.



இதுதான் மனநிலை!

தெளிவான நீரோடை என்றெண்ணும் போது
குழம்பிய குட்டையாய் மாறிச் சிரிக்கும்!
குழப்பத்தை எண்ணினால் தெள்ளத் தெளிவாய்க்
களங்கமின்றிப் பார்க்கும் மனம்.

வாசல்தோறும் வேதனை!

வாடிவாசல் பார்த்தாச்சு! மீத்தேனால் மாண்புமிகு
மோடிவாசல் மற்றும் பழனிவாசல் பார்த்தேதான்
நாடி நெடுவாசல் மக்கள் பதறுகின்றார்!
வேடிக்கை பார்த்தால் நிலத்தடி நீர்வளத்தை
மோதி எடுத்திடுவார்! வாழ்விங்கே மாயமாகும்!
சாடித் திரள்கின்றார் ஊர்மக்கள் கூட்டமாக!
தேடிவந்து காப்பது யார்?

Thursday, February 23, 2017

பொய்சொன்னால் கேடு!
-----------------------------------------
பொய்களை மெய்யாக்க பொய்க்குமேல் பொய்சொல்வோம்!
மெய்வந்து பேருரு காட்டுகின்ற நேரத்தில்
பொய்கள் தலைகவிழும்! கூனிக் குறுகவைக்கும்!
பொய்சொன்னால் கேடுதான் சொல்.

Wednesday, February 22, 2017

 இன்றைய தேவை!

வேற்றுமை என்கின்ற சொல்லிலுள்ள ஏகாரம்
மாற்றி உயிரெழுத்தின் பத்தாம் எழுத்தெடுத்தே
சூட்டினால் நல்லமைதி உண்டாகும் வாழ்விலே!
ஏற்று நடக்கப் பழகு.

Sunday, February 19, 2017

பாற்கடலும் பதவிக்கடலும்!

பாற்கடல் பொங்கிய நேரத்தில் செல்வங்கள்
ஊற்றெடுத்து வந்ததாம்! நாட்டில் அரசியலார்
பாற்கடலை விஞ்சும் பதவிக் கடலிலே
ஊற்றெடுக்கும் ஊழலால் செல்வத்தைச் சேர்க்கின்றார்!
பாற்கடலே நாணியதே இங்கு.



வெற்றியாழ்!

மக்கள் விரும்பாத ஆட்சியெனச் சொன்னாலும்
மக்களாட்சி தத்துவத்தில் சட்டமன்ற எண்ணிக்கை
தக்கவைக்கும் நாட்டில் முதலமைச்சர் நாற்காலி!
வெற்றியாழை மீட்டுவதே எண்.

வேடமின்றி வாழ்க!

காதலா? ஏற்பாடா? இல்லறத்தில் சேர்ந்துவிட்டால்
மோதலும் வேறுபாடும் இல்லாமல் வாழ்கின்ற
சேதமற்ற நற்கலையைக் கற்றுத் தெளியவேண்டும்!
வேடமின்றி வாழப் பழகு.

Friday, February 03, 2017

இவர்தான் தெய்வம்

தந்தையில்லை தாயுமில்லை அந்தக் குழந்தைக்கோ
சொந்தமில்லை பந்தமில்லை! யார்யாரோ நேயமுடன்
எங்கெங்கோ காப்பகத்தில் ஊட்டி வளர்க்கின்றார்!
அந்தமனம் தெய்வ மனம்.

Thursday, February 02, 2017



இதுதான் அரசியல்

நிரந்தர வன்பகை இல்லை! தழைக்கும்
நிரந்தர நட்பினமும் இல்லை! உயிராம்
நிரந்தரக் கொள்கைகள் இல்லை! இஃதே
அரசியல் காட்சிகள் இன்று.

நிகரில்லா முப்பால்
-----------------------------------------
அறத்துப்பால் வாழ்வில் படிப்பாகும் தாயே
சிறக்கும் பொருட்பால் பணிக்கள மாகும்
சிறகடிக்கும் இல்லறம் இன்பத்துப் பால்தான்!
மகத்தான முப்பாலே வாழ்வு.

VIRTUE CHAPTERS FOR LEARNING AND CONTROLLING
WEALTH CHAPTERS FOR EARNING AND SHARING
LOVE CHAPTERS FOR MUTUAL  LIVING AND UNDERSTANDING

ஈவிரக்கம் என்னவிலை?

தேவைக்கே  இல்லாமல் தத்தளிப்போர் இங்குண்டு!
தேவையே இல்லாமல் சேமிப்போர் இங்குண்டு!
தேவை முரணிலே வர்க்கபேதம் தேருலா!
ஈவிரக்கம்  என்னவிலை கூறு?