Saturday, April 29, 2023
நல்லோரே வாழவைப்பார்
நல்லோரே வாழவைப்பார்!
பல்வளங்கள் கூடித்தான் சேர்கின்ற நேரத்தில்
நல்லவர்போல் வந்தே மகிழ்ந்தேதான் சூழ்ந்திருப்பார்!
செல்வம் கரைந்தே வறுமையில் வாடுகின்ற
பொல்லாத காலத்தில் ஓடி ஒளிந்திடுவார்!
நல்லவர்கள் தோள்கொடுப்பார்! பொல்லாதோர் தேளாவார்!
நல்லோரே வாழவைப்பார் சொல்.
மதுரை பாபாராஜ்
Thursday, April 27, 2023
மனசாட்சி போற்ற வாழ்வோம்!
மனசாட்சி போற்ற வாழ்வோம்!
ஒழுக்கம், ஒழுங்கீனம் இந்த இரண்டில்
ஒழுக்கமாய் வாழ்ந்தால் மனசாட்சி போற்றும்!
ஒழுக்கமின்றி வாழ்ந்தால் மனசாட்சி தூற்றும்!
ஒழுக்கமுடன் வாழப் பழகு.
மதுரை பாபாராஜ்
Wednesday, April 26, 2023
எப்படிச் செல்ல?
எப்படிச் செல்ல?
இப்படிச் சென்றால் இடிக்கிறது! மாற்றித்தான்
அப்படிச் சென்றால் அடிக்கிறது! நானிங்கே
எப்படிச் சென்றாலும் இப்படித்தான் கோலமென்றால்
எப்படிச் செல்லவோ சொல்?
மதுரை பாபாராஜ்
Monday, April 24, 2023
Sunday, April 23, 2023
வேடம் கலையும்
வேடம் கலையும்!
காலத்தின் சக்கரம் என்றும் சுழன்றிருக்கும்!
கோலங்கள் எப்போது எப்படி மாறுமென்று
கூற முடியாது! காலத்தின் பாடங்கள்
வேடத்தைக் காட்டிக் கொடுத்துவிடும்!
தண்டிக்கும்!
வேடம் கலைந்தால் துரோகிகள் மாட்டுவார்!
பாடம் கடுமை உணர்.
மதுரை பாபாராஜ்
Saturday, April 22, 2023
மருமகன் ரவி
மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியத்திற்கு மொழியாக்கம்!
தலைநிமிர்த்து வாழ்வேன்!
கடந்துவந்த பாதை! திரும்பித்தான் பார்த்தேன்!
தவறும் வலிகளும் மற்றும் உளைச்சல்
அடங்கிய கோலம் தெரிந்தது! நானோ
உடனடியாய்க் கண்ணாடி பார்த்தேன்! வலிமை,
உணர்த்திய பாடம் உணர்ந்தேன்! எனக்குள்
பெருமிதம் ஆட்கொள்ள நானும் மகிழ்ந்தேன்!
தலைநிமிர்ந்து வாழ்வேன் உணர்.
மதுரை பாபாராஜ்
Friday, April 21, 2023
Wednesday, April 19, 2023
கேட்வே பள்ளிவாகன ஓட்டுநருக்கு வாழ்த்து
GATEWAY SCHOOL BUS!
பள்ளி வாகன ஓட்டுநர் திரு.சசிக்குமார் அவர்களுக்கு வாழ்த்து!
பள்ளியின் வாகனத்தில் மாணவ மாணவியர்
பள்ளிக்கு நேரந் தவறாமல் செல்வதற்குத்
துல்லியமாய்த் தன்கடமை ஆற்றிவரும் ஓட்டுநர்
வல்லமையை வாழ்த்துகிறேன் நான்.
அடக்கம் பணிவு மரியாதைப் பண்பில்
சிறந்து விளங்கும் சசிக்குமார் வாழ்க!
நிறைவுடன் பல்லாண்டு நற்றமிழ்போல் வாழ்க!
நலமுடன் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
எ.ச. நிக்கில் அபிசேக் தாத்தா
மாறுமோ?
மாறுமோ?
தலைநிமிர்ந்து வாழ்ந்தவனை வாழ்க்கைச் சூழல்
தலைகுனிய வைத்தேதான் வேடிக்கை பார்க்க
நிலைகுலைந்து போனேன்நான்! நிம்மதி எங்கே?
நிலையென்று மாறுமோ? சொல்.
மதுரை பாபாராஜ்
Tuesday, April 18, 2023
குறள்மணம் நன்றிப்பா
குறள்மணம் விருதளித்துப் பெருமை சேர்த்த கல்லைத் தமிழ்ச்சங்கத்திற்கு நன்றி!
குடும்ப உணர்வில் குழுவுணர்வு!
நாள்: 16.04.23 ஞாயிறு
தந்தை புலவர் செ.வரதராசனார்
தமிழ்ச்செம்மல்கள்:
செ.வ.புகழேந்தி
செ.வ.மதிவாணன்
செ.வ.மகேந்திரன்
செ.வ.இராமாநுசன்
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயலென்றார் வள்ளுவர்!
தந்தை கடமைகள் செய்தே நிறைவேற்றி
தந்துவிட்டார்! பண்புதனை வாழ்த்து.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாயென்றார் வள்ளுவர்!
நான்கு மகன்களும் நற்புகழ் ஏந்துகின்றார்!
ஊராரும் மெச்சுகின்றார்! தாயோ மகிழ்ச்சியின்
தேருலா கண்டுவிட்டார் காண்.
மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்லென்றார் வள்ளுவர்!
பண்பான நான்கு மகன்களும்
தந்தையின்
நற்பெயரைக் காக்கின்றார்! இக்குறளுக் கேற்பவே
இப்புவியில் வாழ்கின்றார் வாழ்த்து.
குடும்ப உணர்வும் குழுவுணர்வும் சேர
நடுநிலைப் பண்புடன் வள்ளுவத்தைக் காக்கும்
தொடரோட்டந் தன்னைச் சளைக்காமல் ஏற்றே
கடமைகள் ஆற்றுவதை வாழ்த்து.
முப்பெருமை கொண்ட விழாவினை செந்தமிழ்ப்
பற்றுடன் தொய்வின்றி ஏற்பாடு செய்தேதான்
கற்றறிந்த ஆசான்கள் முன்னிலையில் எங்களுக்கு
வெற்றி விருதளித்தார் வாழ்த்து.
மகுடமுடிப் பண்பாளர் ஆற்றொழுக்குப் பேச்சில்
மகுடத்தைச் சூட்டினார் எங்களுக்கு! நன்றி
வெகுவாகச் சொல்லி மகிழ்கின்றோம் நாங்கள்!
அகங்குளிர வாழ்கபல் லாண்டு.
அருந்தமிழ் போற்றும் அனந்த சயனார்
கருத்துடன் வந்தார்! சிறப்புகள் செய்தார்!
அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
கல்லைத் தமிழ்ச்சங்கம் நூறாண்டு வாழியவே!
நல்லவர்கள் வாழ்த்திசைக்க பல்லாண்டு வாழியவே!
தெள்ளுதமிழ்த் தொண்டுகளை நாள்தோறும் செய்தேதான்
பல்வளங்கள் பெற்றுவாழ்க நீடு.
மதுரை பாபாராஜ்
[4/18, 8:03 PM] Vovramanujan:
பெருமகிழ்ச்சி ஐயா!
நிலைக்கத்தக்க பாவில் ஊடுபயிர்க் கருத்துகளோ கோடி!
தக்கார்க்கு விருதளித்து பாராட்டுவதை நாங்களும் கடமையெனக் கொண்டியங்கி வருகின்றோம். தங்களது வாழ்த்து பா எங்களுக்கு கிடைத்த வரிசைப் பா! அன்பளிப்பு பா!
மிக்க நன்றி ஐயா!
வணக்கம்!
Sunday, April 16, 2023
குறள்மணம்விருது
Saturday, April 15, 2023
Friday, April 14, 2023
பயணமும் பருவமாற்றமும்
பயணமும் பருவமாற்றமும்!
பருவத்தின் மாற்றத்திற் கேற்ப பயணம்
கருத்துடன் சிந்தித்துப் போகவேண்டும் நாம்தான்!
பருவநிலை பார்க்காமல் செல்வோர்க்குத் துன்பம்
நெருங்கிவரும் நாளும் உணர்.
மதுரை பாபாராஜ்
Thursday, April 13, 2023
வக்கிரம்
வக்கிரம்!
சொந்தத்தை விட்டுவிட்டுச் சொந்தமற்ற ஒன்றினைச்
சொந்தமென்று சொல்கின்ற வக்கிரத்தை என்னென்பேன்?
சொந்தங்கள் கண்ணீரில்!
வந்தேறி பன்னீரில்!
இந்ததிலை மாறுவ தென்று?
மதுரை பாபாராஜ்
Tuesday, April 11, 2023
பாசம் கொடிது
வாழ்க்கை கொடிது!
அப்பா! வரவேண்டாம்! மைந்தன் வரவேண்டும்!
இப்படி நாளும் கயிறிழுக்கும் போட்டியென்றால்
எப்படி உள்ளம் உளைச்சலின்றி வாழ்ந்திருக்கும்?
அப்பப்பா! பாசம் கொடிது.
மதுரை பாபாராஜ்
Saturday, April 08, 2023
மனநலம்
மனநலம்!
உடல்நலம் இங்கே சரியாய் இருந்தும்
உடலுக்குள் நாளும் மனநலம் துன்பக்
கடலிலே சிக்கித் துடித்திருந்தால் வாழ்க்கை
நடையோ தளரும் உணர்.
மதுரை பாபாராஜ்
பொய்யுரு!
பொய்யுரு!
உள்ளம் உளைச்சல் நெருப்பில் கருகினால்
கொல்லும் துயரம் வளைத்தேதான் தாக்குதடா!
துள்ளும் மகிழ்ச்சியோ கைதட்டிப் பார்த்தாலும்
உள்ளமோ வாடி வதங்கும் நிலையெடுக்கும்!
உள்ளத்தில் கண்ணீர்! முகத்தில் சிரிப்பலைகள்
பொய்யுரு வேடமேந்தும் சொல்.
மதுரை பாபாராஜ்