Wednesday, March 31, 2010

இயேசுவின் பொன்மொழிகள்

இயேசுவின் பொன்மொழிகள்
(கவிதை முயற்சி கருத்துக்களை வரவேற்கின்றேன்)
=====================================
மத்தேயு:5:44
====================================
உந்தன் எதிரிகளை நண்பர்க ளாக்கிவிடு
உன்னைச் சபிப்போரை ஆசிதந்து வாழ்த்திடு!
உன்னைப் பகைப்பவருக்கு நன்மைகள் செய்திடு!
நிந்தித்துத் துன்பப் படுத்தினால் அன்னாரின்
நன்மைக்கு நாளும் கடவுளை நோக்கியே
அன்புடன் வேண்டிக்கொள்! என்றேதான் ஏசுநாதர்
புண்படுத்தும் மாந்தரைப் பண்படுத்தும் பக்குவத்தை
நன்னெறியைக் காட்டுகின்றார் பார்.

=====================================
மத்தேயு:6:19/20
====================================
மண்ணகத்தில் பொக்கிஷத்தைச் சேர்க்கவேண்டாம்! ஏனென்றால்
இங்குள்ள பூச்சிகள் தாக்கும்! துருப்பிடிக்கும்!
கன்னமிட்டே தேடித் திருடுவார் கள்வர்கள்!
துன்புறுத்தும் உன்னைத்தான் பார்.

விண்ணகத்தில் சேர்த்துவைத்தால் அஞ்சிட வேண்டாமே!
அங்கெல்லாம் பூச்சிகளும் இல்லை! துருப்பிடிக்கும்
பங்கமும் இல்லை! திருட்டுப் பயமுமில்லை!
பொன்மனம் இன்புறும் பார்.
=====================================
மத்தேயு:6:22/23
====================================
கண்கள் உடலின் விளக்குகளாய் உள்ளன!
என்றும் தெளிவாய் இருந்தால் வெளிச்சந்தான் !
கண்களோ கெட்டிருந்தால் மேனி இருள்மயந்தான்!
உன்னுள் இருக்கும் வெளிச்சம் இருளானால்
அந்தஇருளை எண்ணிப்பார்! எவ்வளவு விஞ்சிவிடும்!
பண்பிழக்கும் வாழ்வே இருள்.

=====================================
மத்தேயு:6:26--33
====================================
பறவைகளோ இங்கே விதைப்பது மில்லை!
அறுப்பது மில்லை! களஞ்சியத்தில் நாளும்
நிறைவுடன் சேர்ப்பது மில்லை! பிதாதான்
நிதமுமே காக்கின்றார் பார்!

உடைக்காக நீங்களேன் வாடவேண்டும்? காட்டில்
நிறங்களை ஏந்தி மலர்கின்ற பூக்கள்
பதமாய் உழைக்கிறதா? நூற்கிறதா? இல்லை!
நிதமும் உடுத்ததில்லை பார்.

அடுப்பில் இடப்படும் புல்லுக்கு தேவன்
உடுத்தினால் உங்களுக்கும் நாளும் உடுத்தும்
உறுதிகள் உண்டல்லவா?தேவனை நம்பி
எடுத்துவைப்போம் நம்அடியை இங்கு.

எதையுண்போம்? இங்கே எதைக்குடிப்போம்? மேலும்
எதையுடுப்போம்? என்றேதான் அஞ்ஞானி தேடி
பதறுவான்! உங்களுக்கு என்னதேவை? தேவன்
நிதமறிவான் என்றேதான் நம்பு.


தேவன் அரசையும் நீதியையும் தேடுங்கள்!
ஆவன செய்வான் அனைத்தும் கிடைப்பதற்கு!
நேயமுடன் தந்து மனங்களை வாழ்த்துவான்!
வாழவழி காட்டுவான் பார்.
======================================
மத்தேயு: 7:3,4,5.
========================================
உன்கண்ணில் உள்ளாடும் உத்திரத்தைப் பார்க்காமல்
உன்னருகே உள்ளவனின் கண்களில் தென்படும்
சின்னத் துரும்பை நினைத்துக் கொதிப்பதென்ன?
உன்னை முதலில் திருத்து.
================================================
மத்தேயு: 7:7.
================================================
கேளுங்கள்! தேவை யறிந்துதான் கொடுத்திடுவோம்!
நாள்தோறும் தேடுங்கள்! அப்பொழுது கண்டடைவீர்!
தூய்மையுடன் தட்டுங்கள்! உள்ளம் திறந்துவிடும்!
ஆர்வ உழைப்பே தளம்.
=======================================================
மத்தேயு:12:33
=========================================================
நல்லமரம் என்றால் அவற்றின் கனிகளும்
நல்லதென்று சொல்லுங்கள்! கெட்டமரம் என்றாலோ
அவற்றின் கனிகளும் கெட்டதென்றே சொல்லுங்கள்!
மரத்தின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் அந்த
மரத்தின் கனிச்சுவைப் பண்பே தளமாம்!
தரமோ கனிகள்தான் சாற்று.
=========================================================
மத்தேயு:12:35
=========================================================
நல்லவனா? கெட்டவனா? பேசுகின்ற சொற்களில்
துள்ளிவரும் நற்பண்பும் தீப்பண்பும் காட்டிவிடும்!
உள்ளத்தின் பொக்கிஷம் சொற்களாய் ஓடிவரும்!
சொல்லே உரைகல் உணர்.
===================================================
மத்தேயு:14:47--50
======================
பரலோக ராஜ்யம் கயல்களுக் காக
அலைகடலில் வீசும் வலைபோ லாகும்!
கரையில் இழுத்து தரமான மீனை,
தரமற்ற மீனைப் பிரித்தே குவிப்பார்!
உலகின் முடிவிலும் தேவதூதர் வந்து
விலக்குவார்! பொல்லா மனிதரைப் பிரித்தே
கலக்குவார் சூளையில் !நல்லவரை என்றும்
வரவேற்பார் தேவன் மகிழ்ந்து.
================================================

துணைமாற்றம் வக்கிரம்!

===========================
இன்பங்கள் துன்பங்கள் மாறிமாறி வந்தாலும்
ஒன்றாக நின்றே குடும்பத்தைத் தாங்கித்தான்
என்றும் கணவன் மனைவி நிரந்தரமாய்
ஒன்றியே வாழ்வது வாழ்வு.

மனம்போன போக்கில் மிருகங்கள் போல
நினைத்தால் உறவு! நினைத்தால் பிரிவு!
தினவெடுத்த வாழ்க்கை திசைமாறிப் போகும்!
துணைமாற்றம் வக்கிரம்! தாழ்வு.

உணர்ந்து திருந்து!

உணர்ந்து திருந்து!
===========================
என்ன அறிவுரை கூறினாலும் கண்மணியே!
அந்த அறிவுரையை ஏற்றுத் திருந்துவதோ
உன்கையில்தான் உள்ளது! நீதான் திருந்தவேண்டும்!
உன்னுள் உணர்ந்து திருந்து.

Sunday, March 28, 2010

காலம் காப்பாற்றும்?

=====================
ஆயிரம் துன்பங்கள் அன்றாடம் போராட
நூலிழையில் மூச்சுவிடும் வாழ்க்கையிது--வேலிக்குள்
ஓடவிட்டு வேடிக்கை பார்க்கின்ற சூழ்நிலைகள்!
கூடவிழ ஆடுகின்றோம் நாம்.

ஆடுவதைப் பார்க்கின்றார்! ஆறுதலும் கூறுகின்றார்!
கூடுகளோ மாறிமாறி கோலங்கள் ஏற்றிருக்கும்!
பாடுவதில் ராகபேதம் நாள்தோறும் ஊடாடும்!
கூடுபவர் நிற்பதில்லை யே.

நிற்பதற்கு நேரமில்லை! மண்ணில் பரபரப்பு
புற்றரவம் போலத்தான் சீறுகின்ற வேலைகள்!
கற்றவரா? கல்லாத மாந்தரா? பேதமில்லை!
சுற்றுகின்றார் நேரமின்றி தான்.

தேற்றிடுவார்!தேன்மொழியில் பேசிடுவார் தோள்பற்றி!
போக்கற்று வக்கற்று ஏக்கமுடன் பார்த்தாலோ
சாக்குகளைச் சொல்லி நகர்ந்திடுவார்!காலந்தான்
காப்பாற்றும் என்றிடுவார் பார்.

நேயத்தின் சான்று!

=======================
மரங்கள் நிழலளிக்கும்! மக்களும் நாளும்
நிழலிலே தங்கித்தான் இன்புறுவார்! மக்கள்
நிழலளித்து மற்றவரைத் தங்கவிட மாட்டார்!
மரங்களே நேயத்தின் சான்று.

Friday, March 26, 2010

இழைகளும் பிழைகளும்

உயிர் ============ 

கணவன் மனைவி உயிரோட்டம் தந்து மணக்கவைக்கும் இல்லறத்தில் இன்பங்கள் நாளும் வணங்கி மகிழும்! நிறைவில் திளைக்கும்! 
சுணக்கம் நெருங்காது சொல். 

 மெய் ========== 

கண்டதே காட்சியென்றும் கொண்டதே கோலமென்றும் 
தன்மெய்யைப் பொன்மணித் தேராக்கி நாள்தோறும் 
 மண்ணக வாழ்வில் பணமே அனைத்துமென 
கண்மூடி வாழ்தல் களை.

 உயிர்மெய் ================ 

கருத்துக்கள் மோதினாலும் பேசியே தீர்த்தே ஒருமித்த உயிர்மெய்போல் என்றும் இணைந்தே 
பெருமை மிளிர, கணவன் மனைவி கருத்துடன் வாழ்தல் உயர்வு. 

 ஆய்தம் ============ 

எடுத்ததற் கெல்லாம் வெடித்துச் சிதறி கடுகடு வென்றே கணவன் மனைவி சிடுசிடுத்தே ஆயுத மானால் அமைதி கடுகளவும் இல்லை உணர்.

நிரந்தரத் தியாகி!

இமைகளை
மூடித் திறப்பதற்குள்
கவர்ந்துவிட்ட
காதலிக்கு
அரியணை!

இமைகளை
மூடாமல்
பார்த்துப் பார்த்து
வளர்த்த
தாய்க்கு
வெளித்திண்ணை!

Wednesday, March 24, 2010

மௌனத்தை நாடு!

பூகம்பம் ஏற்படுமா? சற்றும் கலங்காதே!
வேகமாகப் பேரலைகள் தாக்குமா? ஓடாதே!
நாச எரிமலைகள் சீறுமா? வாடாதே!
ஈடற்ற மௌனத்தை நாடு.

துறவியாய் மாறு

அவமானப் பட்டால் அவமானம் என்றே
உலகத்தில் எண்ணாமல் முற்றும் துறந்த
தவக்கோலம் பூண்ட துறவியாய் மாறு!
உலகத்தில் நிம்மதிதான்! கூறு.

சராசரி மனிதன்!

அவமானந் தன்னை வெகுமான மாக
உளமார மாற்ற மகாத்மாவா? இல்லை
சலனங்கள் இல்லாத துறவியா? பார்த்தால்
சராசரி யானவன் தான்.

Friday, March 19, 2010

இதுதான் இந்தியா !

=======================
நமது நாடு இந்தியாதான்!
நமது பெயரோ இந்தியர்தான்!

வங்கக் கடல்தான் கிழக்கெல்லை!
அரபிக் கடல்தான் மேற்கெல்லை!
இந்துமகா சமுத்திரம் தெற்கெல்லை!
இமய மலைதான் வடஎல்லை!

பலவித மொழிகள் பேசுகின்றோம்!
பலவித மதங்களைப் போற்றுகின்றோம்!
இந்தியா என்ற மாலையிலே
விதவித மான பூக்கள்தான்!
நேர்த்தி யாகத் தொடுத்துள்ளோம்!
நிம்மதி யாக வாழ்கின்றோம்!
இந்தியர் என்ற உணர்வினிலே
உலக அரங்கில் நிமிர்கின்றோம்!

மதுரை பாபாராஜ்

விதியின் விளையாட்டு

========================
வாழ்வை விதிவந்து சூழ்ந்தே விளையாடும்
கோலத்தில் கோமகனும் இங்கே நொடிப்பொழுதில்
ஆலமரம் வீழ்வதுபோல் சாய்வார்! அவமானம்
கோலெடுத்தே ஆடவைக்கும் கூறு.

வேடதாரி!

வேடதாரி!
=================
ஆசையைத் தூண்டும் அனைத்தும் அருகிருக்க
கூசாமல் தன்னைத் துறவி எனக்கூறும்
வேடதாரி பின்னாலே மக்கள் திரண்டேதான்
கூடுகின்றார் ஓடுகின்றார்! ஏன்?

வேடம் கலைந்ததும் ஏமாறி நிற்கின்றார்!
நாடே நகைக்கிறது! ஆனாலும் இந்தநிலை
ஏடு மணக்கத் தொடர்கதையாய் வீடுதோறும்
பாடுபொருள் ஆகிறதே!ஏன்?

பட்டாலும் ஏனோ திருந்த மறுக்கின்றார்!
தொட்டால் சுடுமென்றே சொன்னாலும் நாள்தோறும்
தொட்டேதான் பார்க்கின்றார்! தங்கள் பகுத்தறிவை
விட்டொதுக்கிச் செல்கின்றார்! ஏன்?

வருவது வந்தே தீரும்!

=========================
தாழ்ப்பாளைப் போட்டேதான் வீட்டுக்குள் வாழ்ந்தாலும்
வாழ்விலே சிக்கல்கள் வாசலுக்கே தேடிவரும்!
ஊர்ந்தேதான் உள்ளே படையெடுத்து வந்துவிடும்!
ஆர்ப்பரிக்கும் வேதனையைத் தந்து .

Wednesday, March 10, 2010

உடைந்தால் சேராது!

கண்ணாடிப் பாத்திரந்தான் வாழ்க்கை! உடையாமல்
கண்ணிமைபோல் காப்பதுதான் நம்கடமை!தன்னிலை
தன்னை மறந்தே தவறவிட்டால் சுக்குநூறாய்க்
கண்முன் உடைந்துவிடும் பார்.

மதுரை பாபாராஜ்