Saturday, December 31, 2016

யுத்தகாண்டம்

இராவணன் மந்திராலோசனை

அழிந்த இலங்கை நகரை மயனோ
எழில்நகராய் மாற்றினான் பார்.

பேரிழப்பைச் சந்திக்கும் தந்திரத்தைக் கூறுங்கள்!
ஆர்ப்பரித்தான் ராவணன் அங்கு.

படையெடுப்போம்! கொன்று குவித்திடுவோம்! மன்னா!
விடைகொடு செல்வோம் உடன்.

மாற்றான் மனைவியைத் தொட்டதால் பேரிழப்பு!
தூற்றினான் கும்பகர்ணன்! பார்.

மனமிரங்கி சீதையை விட்டுவிடு!
இல்லை
தினவெடுக்கும்  நம்பகைவர் சேர்ந்தே

அனலாகும் முன்பே அவர்களைத் தாக்கி
மணலாக்கு என்றான் துணிந்து.

இந்திரசித் முன்வந்தான் ! போருக்கு நான்தயார்
என்னை அனுப்பென்றான் ஆர்த்து.

வீடணன் நின்றே குரங்கால் அழியவில்லை
நாடழிந்த காரணத்தைக் கேள்.

 கற்புநெறி நாட்டை அழித்தது! அண்ணாநீ
போதை மயக்கம் தெளி.

அண்ணன் இராவணா! சீதையை விட்டுவிடு
நம்நாட்டைக் காப்பாற்றப் பார்.

அந்த மனிதர்கள் வெல்வார்! உணர்ந்தேதான்
பண்படப் பாரென்றான் பார்த்து.

சினத்தால் கடிந்தான் இராவணன்! மேலும்
கனன்றான் கடுஞ்சொற்கள் கொண்டு.

என்முன்னே நிற்காதே! வீடணனே! சென்றுவிடு!
என்றான் இளவலைப் பார்த்து.


வாழ்க்கையின் ஆணை

நினைப்பதோ ஒன்றும் நடப்பதோ ஒன்றும்
மனைதோறும் வாழ்விலே உண்டு - அனைத்தும்
நடக்கின்ற போக்கிலே ஏற்றுப் பொறுத்தால்
கடக்கலாம் வாழ்வை மகிழ்ந்து.


நடைமுறை

அப்படி ஏதும் நடக்காதே! ஆனாலும்
இப்படி ஏதும் நடக்குமோ! கண்மணியே
எப்படியும் ஏதோ நடந்துவிடும்! என்மனமே!
எப்படியோ ஏற்போம் மலைத்து.

பகற்கொள்ளை

மீன்பிடிக்கும் எங்கள் படகுகளை நாட்டுடைமைத்
தூண்டிலுக்குள் சிங்களர்கள் சிக்கவைத்தும்  இந்தியா
ஏனிங்கே மாற்றாந்தாய்ப் பார்வையைப் பார்க்கிறது?
ஊனமனப் போக்கேனோ? சொல்.

தமிழர்கள் என்றால் இரண்டாந் தரமோ?
தமிழர்கள் கிள்ளிவிடும் கீரை வகையோ?
தமிழர்கள் இந்தியர்கள் அன்றியே வேறோ?
தமிழினமே! ஏனிந்தத் தாழ்வு?


இணக்கமே  இல்லறம்!

அசையாத சொத்துகள் கோடி இருந்தும்
அசைகின்ற சொத்தோ இணையரின் உள்ளம்
இசைவுடன் இல்லை எனச்சொன்னால் வாழ்க்கை
திசைமாறும்! கோடியெல்லாம் தூசு.


முன்னுரிமை!

முன்னுரிமை பின்னுரிமை எந்தெந்த நேரத்தில்
எந்தச் செயல்களுக்குத் தந்தாக வேண்டுமென்று
நன்கறிந்தே நாமுழைத்தால் வெற்றி கனிந்துவரும்!
முன்பின் முரணெனில் பாழ்.


அகரம்-- மகரம்

நியாயத்தின் முன்னே அகரத்தைச் சேர்த்தே
நியாயந்தான் என்றுரைக்கும் மக்கள்-- நியாயமாக
மக்கள் மகர எழுத்தில் துணைக்காலோ
பற்றுடன் சேர்ந்ததுபோல் தான்.

வடு!
------------
 முன்னணியில தங்கள் குழந்தையைப் பார்ப்பதற்குப்
பின்னணியில் பெற்றோர் படும்பாடு கொஞ்சமோ!
என்னகடன் பட்டாரோ எப்படித்தான் தீர்த்தாரோ
புன்னகைக்குப் பின்னே வடு.

Saturday, December 24, 2016


ஏசுநாதரை வணங்கு! 25.12.16

கோயில் வளாகத்தில் கொள்ளை அடித்தோரைப்
பாய்ந்தே சவுக்கடி தந்தேதான் நீதியின்
தோள்தொட்டுக் காத்தவர்! நற்கருணை ஏசுநாதர்!
வாழ்த்தி வணங்குவோம் சூழ்ந்து.

பிறந்தநாள் பாட்டு

பிறந்தநாள் பாட்டு

இன்று உனக்குப் பிறந்தநாள்
அனைவரும் மகிழும் சிறந்தநாள்

அன்னை தந்தை ஆசானை
அகத்தில் வைத்தே வணங்கும்நாள்

பெரியோர் நண்பர் சுற்றத்தார்
சூழ்ந்தே வாழ்த்தும் அருமைநாள்

நல்ல நல்ல பண்புகளே
உனது வாழ்வின் வழிகாட்டி

நன்றாய்ப் படித்து முன்னேறு
நன்றாய் உழைத்து முன்னேறு

வீட்டுக்கு நாட்டுக்குப் பெருமைசேர்
போற்றும் உன்னை இவ்வுலகம்

குறளின் வழியில் வாழ்வதுதான்
என்றும் நல்லது மறக்காதே!

மதுரை பாபாராஜ்

முண்டாசுப் பாவலன்

அண்டம் குலுங்க எழுகடல் பொங்கியே
கண்டத்தைத் துண்டாக்கும் காற்றிங்கே வேகமோ?
முண்டாசுப் பாவலனின் பாச்சொற்கள் வேகத்தின்
முன்னாலே இக்காற்றோ தூசு.


எல்லை தாண்டாதே!

நீருக்குள் கப்பலா? மூழ்காது! கப்பலுக்குள்
நீர்வந்தால் மூழ்கும் கவிழ்ந்து.

இடம்மாறிப் போனால் தடம்மாறிப் போகும்!
தடுமாறித் தத்தளிப்போம் சாற்று.


வார்தா புயல்

வர்க்கபேத மின்றி புயலிங்கே சீரழித்துத்
துள்ளித் துடிக்கவைத்த கோலத்தைப் பார்த்தே
எள்ளிநகை யாடியது! சென்னையைப் பந்தாடிச்
சொல்லி அடித்தது பார்.

மின்கம்பம் விண்நோக்கி நின்ற மரங்களும்
அங்கங்கே கட்டிடங்கள் கூரைகள் எல்லாமே
தொங்கிச் சரிந்திருக்க வேரோடு வீழ்ந்திருக்க
இன்னும் இருட்டிலே வாழ்வு.

காற்றடித்த வேகத்தில் காகிதமாய் ஆனதுபார்!
போட்டுப் புரட்டித் தலைகீழாய் மாற்றியது!
ஆட்டத்தைக் கட்டவிழ்த்துத் தாண்டவ மாடியது!
காற்றின் முகாரியோ இஃது.

இதுதான் தவம்

காட்டிலே உட்கார்ந்து வீட்டை மறக்கின்ற
காட்சி தவமல்ல கண்மணியே! இல்லறத்தின்
வீட்டுக் கடமையை நாளும் நிறைவேற்றும்
கூட்டின் உழைப்பே தவம்


எங்கள் செல்லப் பேரன் சுசாந்த் ஸ்ரீராம்
பிறந்தநாள் வாழ்த்து         வயது 15
-----------------------------------------------------------------
15.12.2016
----------------------------------------------------------------
படிப்பில் விளையாட்டில் முன்னேறி வாழ்க!
நெறிகளைப் போற்றி ஒழுக்கமுடன் வாழ்க!
மகிழ்ச்சியுடன் பெற்றோர்
மனங்குளிர வாழ்க!
அகிலத்தில் வாழ்கபல் லாண்டு.

பாபாராஜ்---வசந்தா
தாத்தா.     --- பாட்டி

அற்பராட்சி

  மக்களாட்சி தத்துவத்தின் நான்குதூண்கள் நாள்தோறும்
அக்கறையாய் இங்கே செயல்பட்டால் நல்லது!
இப்படி அப்படி ஏதேனும் ஒன்றானால்
மக்களாட்சி அற்பராட்சி தான்.


விஜயா பிரிண்டர்ஸ் 70

அச்சுத் தொழிலில் வியத்தகு சாதனை!
பற்றும்,கடமை உணர்வும், குழுஉணர்வும்
ஒற்றுமையும் நாளும் வளர்ச்சிக்கே ஊற்றாகி
மெச்சும் புகழ்பெற்றார் இங்கு.

தந்தை இராமன் அவர்களின் அர்ப்பணிப்புப்
பண்புகளைப் போற்றி தனயன் சொக்கலிங்கம்
தொண்டு புரிகின்ற நேர்மை நியாயத்தால்
என்றுமே நிற்கும் நிமிர்ந்து.


நேர்த்தியான அச்சுமுறை காலந் தவறாமை
வேர்ப்பண்பாய்ப் பின்பற்றி நாளும் உழைப்பதால்
பார்போற்ற இங்கே எழுபதாண்டைக் கண்டது!
வாழ்கவே பல்லாண்டு  தான்.

பூமிபோல் மாறு!

யார்வந்தால் என்ன? எவர்போனால் தானென்ன?
பாரின் நடைமுறயைப்  பார்த்து ரசித்திருக்கும்
யாரோபோல் பூமிதான்! நாமிங்கே பூமிபோல்
தேர்ந்து தெளிவதே நன்று.

Friday, December 09, 2016

வதந்தீ


வதந்தீ

காட்டுத்தீ போல வதந்தி பரவுதல்
நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லதல்ல! நற்றமிழே!
ஊற்றெடுக்கும் உண்மையை மட்டுமே சொல்லுங்கள்!
தூற்றுவது பொய்யா? தவிர்.



விரிகோணம்

விஓவி

கோணங்கள் வெவ்வேறு! கோட்பாடும் வெவ்வேறு!
ஞானக் கனிகளைச் சாறு பிழிவதில்
கோணமும் ஒன்றுதான் கோட்பாடும் ஒன்றுதான்!
கோணம் விரிகோணந் தான்.

வாழ்க்கை


வாழ்க்கை

என்னடா வாழ்க்கை இதுதானா வாழ்க்கை
இதற்காகத் தானா இத்தனை சேர்க்கை!

சேர்ந்தவர் பிரிந்தனர் பிரிந்தவர் சேர்ந்தனர்
இருந்திட்ட போதிலும் உட்பகை கொண்டனர்

வானமோ மேலே பூமியோ
 கீழே
இடைப்பட்ட பரப்பில் உருளுது வாழ்க்கை

பொருளும் புகழும் விருதும்
குவிந்திடும்
மரணம் அழைத்தால் அனைத்தும் விலகிடும்

பிறப்பினைப் பார்த்து மகிழ்ச்சியில் சூழ்வார்
இறப்பினைப் பார்த்து துயருடன் சூழ்வார்

சுற்றமும் எங்கே சூழ்ந்தவர்
எங்கே
முற்றும் விலகி வேடிக்கை
பார்ப்பார்

குவித்ததும் எங்கே குவிந்ததும் எங்கே
இறுதிப் பயணம் தனிதான் இங்கே!

காப்பகம் வீடாகுமா?

என்ன வசதிகள் காப்பகங்கள் செய்தாலும்
சண்டை முணுமுணுப்பு நல்லவை கெட்டவை
என்றேதான் தன்சுற்றம் சூழ்ந்திருக்க  வாழ்கின்ற
இன்பம் கிடைத்திடுமா? சொல்.

Tuesday, December 06, 2016


முடக்கம் தவிர்!

சிறகை விரித்தெழுந்தால் வானம் புரியும்.
நடக்கத் தொடங்கினால் பாதை புரியும்
தடைகளை நீக்கு சிகரம் தெரியும்!
முடங்காமல் முன்னேறப் பார்.

காலத்திற்குள் நாம்

பார்ப்போம் பழகுவோம் நண்பராக மாறமாட்டோம்
பார்க்காமல் சென்றிடுவோம் நண்பராய் மாறிடுவோம்
வாழ்க்கை முடிச்சுகளைக் காலம் முடித்துவிடும்!
காலக் கணிப்பிற்குள் நாம்.

திருவிளையாடல்

தருமி

சங்கரன் ஓலையில் சங்கத் தமிழ்க்கவிதை
தந்தான்! தருமியும் வேந்தனிடம் வாசித்தான்!
என்னதான் மன்னனும் பாராட்டி வாழ்த்தினாலும்
பொங்கினான் நக்கீரன் பாட்டிலே குற்றமென்று!
சங்கரனும் வந்தான் சினங்கொண்டே! வாதித்தான்!
சங்கரனே ஆனாலும் குற்றமென்றான்! நக்கீரன்!
சங்கரன் நெற்றிக்கண் சுட்டதும் நக்கீரன்
வெந்தேதான் பொற்றா மரைக்குளத்துள் மூழ்கினான்!
சங்கரன் நக்கீரா! வாஎழுந்தே! என்றதும்
வந்தான்பார் நக்கீரன் தான்.

அற்பத்தனம்
தற்பெருமை பேசி புகழுக் கலைபவர்கள்
அற்பர்கள் என்றேதான் சாடு.

மதுரையில் புட்டுத் திருவிழா
கதை

வைகையில் வெள்ளம் கரைபுரண் டோடியது!
கைபிசைந்து நின்றிருந்தான் பாண்டிய மன்னன்தான்!
வீட்டுக் கொருவர் கரைகட்டும் நற்பணியில்
நாட்டுக் குழைக்கவேண்டும் என்றே அறிவித்தான்!
வைகை நதிப்பகுதி ஆரவாரம் கொண்டது!
சைகையும் சத்தமும் ஒன்று கலந்தன!
புட்டைச் சுமந்துவிற்கும் நல்மனப் பாட்டியோ
உற்றமகன் இல்லையே என்றேங்கி வீற்றிருந்தாள்!
கூலியாள் வேண்டுமா! கூவியதைக் கேட்டதும்
தேவைதான் வாப்பா! எனச்சொன்னாள்! வந்தவனோ
கூலிவேண்டாம் புட்டுவேண்டும் கூலியாக என்றுரைத்தான்!
பூமனத்தாள் புட்டுதந்தாள்! புட்டுவாங்கித் தின்றவனோ
ஆனமட்டும் தூங்கினான் அங்கே படுத்தேதான்!
தூங்கியதைப் பார்த்ததும்
பாண்டியனின் ஆட்கள்
தூங்கிய ஆளைப் பிரம்பால் அடித்தனர்!
ஆங்கே அனைவரும் ஒன்றாய் அலறினர்!
மீண்டும் அடித்ததும் மக்கள் அலறினர்!
பாண்டியனும் ஓங்கி அடித்தான்! மன்னனும்
தானடி வாங்கியதாய் அங்கே துடித்துவிட்டான்!
சங்கரன் தான்வந்த காட்சியைக் காட்டினான்!
மன்னனும் நின்றான் வியந்து.