Sunday, March 26, 2017

PEARL KIDS WIN

Zero plus one is one
Parents Teachers second to none!

One plus one is two
Truth is always true!

Two plus one is three
Always be useful like a tree!

Three plus one is four
Have a mind to share!

Four plus one is five
Try and try and strive!

Five plus one is six
Avoid playing tricks!

Six plus one is seven
Home is always heaven!

Seven plus one is eight
Education ensures the life bright!

Eight plus one is nine
Talents  make you to shine!

Nine plus one is ten
Pearl kids always win!

Saturday, March 25, 2017


சமுதாயத்தொல்லை!

பெற்றோர்களின்
முயற்சி
இல்லையென்றால்
பிள்ளைகள் முன்னேற
முடியாது!
வயதான
பெற்றோரைப் பார்க்காத
பிள்ளைகள்
சமுதாயத்திற்கே
தொல்லைகள்!


பாலை வனந்தன்னில் பாவையர் மூவரும்
கால்பதித்துத் தங்கள் தலையிலே பன்னிரண்டு
பானைகளில் தண்ணீர் சுமந்தேதான் கால்கடுக்க
ஊன்றி நடக்கின்றார் காண்.


இதுவா விடுதலை?

விடுதலை பெற்றோம்! எழுபதாண்டைக் கண்டோம்!
நடுத்தெருவில் ஏழைகள் வாழ்கின்ற கோலம்!
வறுமையில்  பிச்சை எடுக்கின்ற வாழ்க்கை!
அடுக்கடுக்காய் வீட்டு வசதிகள் சூழ
மிடுக்குடன் கோடிகோடி செல்வத்தில் நாளும்
துடுக்காய் வாழ்கின்றார் உப்பரிகைக் கோமான்!
இதுவா விடுதலை? சொல்!


சொல்லும் செயலும்!

சொல்வதைச் செய்யவேண்டும் செய்ய முடிந்ததைச்
சொல்லவேண்டும்! சொல்லிவிட்டுச் செய்யும் நிலைதனிலே
மெள்ள நழுவுதல் நல்ல செயலன்று!
செய்வதைச் சொல்வதே நன்று.

உலக தண்ணீர் நாள்

22.3.17

மேகங்களே!
மேகங்களே!
எங்கே
ஓடுகின்றீர்கள்?
நாங்கள்
தண்ணீரைத் தேடி
ஓடுகின்றோம்!
கிடைத்தால்
சேகரித்து
உங்களுக்கு
மழையைப்
பொழிகின்றோம்!

Monday, March 20, 2017


நீர்க்குமிழி!

இன்றிருப்போர் நாளையில்லை என்றிருக்கும் வாழ்க்கையில்
என்னதென்றும் உன்னதென்றும் தன்னலத்தின் கைப்பிடித்தே
கண்டபடி ஆடுகின்றார்! கண்மூடித் தாவுகின்றார்!
கண்முன்னே நீர்க்குமிழி வாழ்வு.

ஆடம்பரம்!

நோயில் படுத்துவிட்டால் பாயும் பகையாக
தேயும் உடலைப் பராமரிக்க நாள்தோறும்
தூவிக் களிக்கும்  நறுமணப் பூச்சுகள்
தேவையா?  ஆடம் பரம்!

நெருஞ்சி!

ஒருவர் கொடுக்கின்றார் என்பதற் காக
ஒருவருக்கு நாமோ சுமையாக மாறி
ஒருவர் மனத்துள் வெறுக்கின்ற வாறு
நெருஞ்சியாய் மாறுதல் தப்பு

எங்குபார்த்தாலும்

பூசணிக் காயை முழுமையாய்ச் சோற்றுக்குள்
வேகமாய் நாளும்மறைக்கின்றார்! செந்தமிழே!
நாடதிர மக்கள் சிரிக்கின்ற காட்சிகள்!
ஊடகத்தில் வேடிக்கை தான்.

Saturday, March 18, 2017

பிறப்பொக்கும்!

பிறக்கும் கணக்கோ அனைவருக்கும் ஒன்று!
சிறக்கும் கணக்கிலோ வேறுபாடு உண்டு!
திறமை உழைப்பின் அளவுகோல் கொண்டே
சிறப்பின் கணக்களப்பார் செப்பு.

Friday, March 17, 2017


தூதுவளை சிகிச்சை!

தூதுவளை முள்ளிலையை அப்படியே சாறெடுத்துத்
தோதாக தேன்கலந்து தேக்கரண்டிச் சாறுதனை
மூன்றுநாள்கள் ஒவ்வொரு வேளைப் பருகிவந்தால்
காணாமல் போகும் இளைப்பும் இருமலும்!
நாணமின்றி இன்றே முயல்.


தமிழெழுத்து 247

உயிரெழுத்துப் பன்னிரண்டு! மெய்பதி னெட்டு!
உயிர்மெய் இருநூ றுடன்பதி னாறு!
நளினமாய் அஃகுடன் சேர்த்தெண்ணு! மொத்தம்
இருநூற்று நாற்பத்தே ழாம்

புனிதன்


புனிதன்

அழுக்காறு
அவா
வெகுளி
இன்னாச்சொல்
நான்கைத் துறந்தால்
மனிதன்
புனிதனாவான்!
-------------------------------------------------
தாயை
மறந்தால்
உயர்வில்லை!
தமிழை
மறந்தால்
வாழ்வில்லை!



புறக்கணிக்காதே!

உலக அளவில் தமிழர் திரண்டார்!
கலகமில்லை வன்முறை இல்லவே இல்லை!
எழுச்சியைப் பார்த்து விரைவிலே தீர்ப்பை
எழுது விவேக மாய்.

தமிழ்நாடு என்றவொரு காரணத்தால் இங்கே
தமிழனின் சிக்கலைக் கேட்க மறுக்கும்
இழிநிலை உள்ளதென்ற உள்ளுணர்வே இந்த
எழுச்சியின் பின்னணி பார்.

உடல்--எதிர்மறையும் நேர்மறையும்

கழிவுக் கிடங்கு! உணர்ச்சிக் குமிழி!
அழிவின் பயணம்! அகந்தைச் சுரங்கம்!
தெளிவின் குழப்பம்! உட்பகைக் கூடம்!
ஒளியில் இருள்தேடும் கூடு.

அழகின் சுரங்கம்! உணர்வின் அருவி!
இளகும் மெழுகு! கருணையின் ஊற்று!
சுழற்சியின் தென்றல்! கடமை விளக்கு!
இரக்கம் துடிக்கும் துடிப்பு.


மதவெறி

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்- குறள்

இரந்தும் உயிர்வாழ்வோர் இங்கே இருக்க
இராமருக்குக் கோயில்கட்ட வேண்டுமென்றே கேட்கும்
ஒருகூட்டம் உள்ளதே! கூசவில்லை உள்ளம்?
சுருக்கென்று தைக்கிறதே முள்.



ஏன்?

ஆடிஓடி வாழ்ந்திருந்தே ஓய்கின்ற நேரத்தில்
கூடிழக்கும் நாளிங்கே வாராதோ என்றேங்கி
வாடிநிற்கும்  நெற்பயிர்போல் வானத்தைப் பார்த்தேங்கும்!
நாடியதும் ஓடியதும் ஏன்?



மெத்தனமேன்?

மீனவர்கள் நாளும் இலங்கைக் கடற்படையால்
வேண்டுமென்றே தாக்கப் படுகின்றார்! ஆனாலும்
மத்திய ஆட்சியோ மெத்தனமாய் உள்ளதேன்?
சற்றும் புரியவில்லை யே!


தன்னலம் நல்லது!

கொஞ்சம் குடித்தாலும் ரொம்பக் குடித்தாலும்
உன்னலம் பாதிக்கும்! உன்குடும்பம் பாதிக்கும்!
தன்னல எண்ணத்தால் நாளும் தவிர்க்கவேண்டும்!
தன்னலம் கொள்வது நன்று.

விழிமாசு!

புறவிழி மாசைச் சிகிச்சைகள் நீக்கும்!
அகவிழி மாசைத் திருக்குறள் நீக்கும்!
குறள்நெறி போற்று! குணக்குன்றாய் மாறு!
வசமாகும் வாழ்க்கை உணர்.

Thursday, March 02, 2017

உள்ளொன்றும் புறமொன்றும்

அகவழி பாடே மரியாதை ஆகும்
புறவழி பாடோ நடிப்புதான் என்பேன்!
முகமூடி தன்னைக் கழற்றப் பழகு!
அகமாசை நீக்கப் பழகு.

இப்பிறவியே உண்மை!

கடந்த பிறவி ? கவலைப் படாதே!
நடக்கும் பிறவியில் நற்பண்பைப்  போற்று!
அடுத்த பிறவி? கவலைப் படாதே!
நடப்பதை யாரறிவார்?  சொல்.