Tuesday, January 29, 2019

குழந்தைகளுக்குக் குறளமுதம்

குறள் 8:

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

கண்ணே செல்லப் பேத்தியே
கையில் என்ன திருக்குறளா

ஆமாம் தாத்தா உங்களிடம்
பொருளை அறியக் கொண்டுவந்தேன்

இந்தக் குறள்தான் என்தாத்தா
விளக்கம் சொல்லித் தாருங்கள்

ஆகா அருமை சொல்கின்றேன்
உன்னை நானும் மெச்சுகின்றேன்

அறவழி் நடக்கும் சான்றோரின்
அறிவுரை கேட்டு நடந்திட்டால்

துன்பக் கடலைக் கடக்கலாம்
மற்றவர் கடப்பதோ அரிதாகும்

அறவழிச் சான்றோர் ஒழுக்கத்தைப்
போற்றி் நடந்தால் வாழ்வினிலே

வாழ்க்கைக் கடலை நீந்தலாம்
மற்றவர் நீந்த முடியாது...

குழந்தைகளுக்குக் குறளமுதம்

குறள் 7:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

இந்தக் குறளுக்குப் பொருளென்ன
மாமா நீங்கள் சொல்லுங்க

செல்லக் கண்ணே வந்துட்டேன்
தெரிந்த பொருளைச் சொல்கின்றேன்

இணையே இல்லா நற்பண்பை
தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்கும்

சான்றோர் நமக்கு வழிகாட்டி!
நடப்போம் அவரைப் பின்பற்றி!

அவரது நெறியில் நாம்வாழ்ந்தால்
கவலை இன்றி வாழ்ந்திடலாம்!

அவரைத் தவிர்த்து வாழ்பவர்க்கு
கவலை தீர வழியில்லை!

நாமும் சான்றோர் வழிநடப்போம்
மனதின் கவலையை மாற்றிடுவோம்

குழந்தைகளுக்குக் குறளமுதம்

குறள் 6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

அம்மா அப்பா வாங்க
குறளைச் சொல்லித் தாங்க

அக்கா தம்பி நாங்க
ஆர்வத் தோடு வந்தோம்

சொல்லித் தந்தால் மகிழ்வோம்
சொன்னால் பொருளை அறிவோம்

நம்மிடம் உள்ள ஐம்புலனைக்
கட்டுப் படுத்தி வாழ்கின்ற

தூயோன் போற்றும் நெறிகளையே
ஒழுக்கத் துடனே பின்பற்றும்

நல்லோர் ஈட்டும் நற்புகழால்
ஒளிரும் வாழ்வே நிலையாகும்

புலன டக்கம் இல்லாதோர்
உயர்ந்தோர் எனினும் கீழோரே!

நாமும் புலன்களை அடக்கித்தான்
நிமிர்ந்தே வாழ்வோம் உலகத்தில்

குழந்தைகளுக்குக் குறளமுதம்

குறள் 5:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

அப்பா அப்பா இங்கேவா
அய்ந்தாம் குறளைச் சொல்லித்தா

வள்ளுவர் என்ன சொல்றாரு
வந்தே நீயும் சொல்லித்தா

வந்தேன் மகனே உன்னிடத்தில்
குறளின் பொருளைச் சொல்கின்றேன்

இறைவனின் உண்மைப் பொருளுணர்ந்து
ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்து

புகழை நாட்ட விரும்புவோர்கள்
நன்மை தீமை இரண்டையும்

சமநிலை கொண்டே பார்ப்பார்கள்!
சலனம் இன்றி வாழ்வார்கள்!

இந்தப் பொருளை நீயுணர்ந்து
உன்னைச் செம்மைப் படுத்திக்கொள்!

குழந்தைகளுக்குக் குறளமுதம்

குறள் 4

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

அம்மா அம்மா சொல்லித்தா
அடுத்த குறளைச் சொல்லித்தா

வாம்மா  நீதான் பக்கத்தில்
வாகாய் நானும் சொல்லிடுவேன்

விருப்பு வெறுப்பு இல்லாமல்
வாழும் இறைவனைச் சரணடைந்தால்

நமக்குத் துன்பம் நெருங்காது
நிம்மதி யோடு வாழ்வோம்நாம்

விருப்பு வெறுப்பு அற்றவர்கள்
இறைவன் நிலைக்கு ஒப்பாவார்.

வள்ளுவம் சொல்லும் நற்கருத்தை
மனதில் ஏந்தி நடைபோடு.


குழந்தைகளுக்குக் குறளமுதம்
குறள் 3:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
------------------------------------------------------------
அம்மா அப்பா வாங்க
அருகில் வந்து சொல்லுங்க

மூன்றாம் குறளைப் பாருங்க
முத்தாய்க் கருத்தைக் கூறுங்க

மலரைப் போன்ற மனதிற்குள்
போற்றும் இறைவன் திருவடியை

நினைத்தே வாழும் மாந்தர்கள்
நிலைத்த புகழுடன் வாழ்வார்கள்

அவரே வாழ்வின் வழிகாட்டி
அவரைப் போற்றி வாழ்வோம்நாம்

அந்தப் பண்பே புகழ்சேர்க்கும்
நீடு வாழ வழிகாட்டும்!

மனதில் பதித்துப் பின்பற்று
வையகம் உனது வசமாகும்!

குழந்தைகளுக்குக் குறளமுதம்

குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

அம்மா அப்பா வாங்க
இந்தக் குறள சொல்லுங்க

படிச்சு முடிச்ச பெற்றோரே
என்ன பொருளோ சொல்லுங்க!

செல்லக் குட்டி என்கண்ணே
சொல்லித் தாரேன் கேட்டுக்க

உரிய வயதில் படித்துக்கொள்
ஒழுக்கந் தன்னைக் கற்றுக்கொள்

அடக்கம் பணிவே இமையாகும்
அதுவே வாழ்வின் வழியாகும்

அறிவில் மூத்த சான்றோரை
வணங்கும் பண்பைக் கற்காதோர்

என்ன கல்வி கற்றாலும்
எந்தப் பயனும் இல்லையம்மா!

பெரியோர் ஆசிகள் வாழவைக்கும்
வணங்கி வாழக் கற்றுக்கொள்

அம்மா அப்பா புரிந்துகொண்டேன்
நன்றி நன்றி உங்களுக்கு!

குழந்தைகளுக்குக் குறளமுதம்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
------------------------------------------------------
அம்மா இங்கே வாவா
அருமைக் குறளைச் சொல்லித்தா

இந்தோ வந்தேன் என்செல்லம்
குறளே அமுதம் என்செல்லம்

மொழியின் முதலோ அகரந்தான்
தமிழுக்கு அதுவே சிகரந்தான்

உலக மொழிகள் அனத்திற்கும்
முதலாம் எழுத்தே அகரந்தான்!

உலகின் மூலச் சான்றோர்கள்
ஆதி பகவன் எனச்சொல்வோம்!

இதுதான் முதலாம் திருக்குறளாம்
கற்பது உந்தன் கடமையாம்

நன்றி நன்றி என்னம்மா!
ஆசை முத்தம் உனக்கம்மா!

சிக்கலோ சிக்கல்!

சிக்கலுக்குள் சிக்கலைச் சிக்கவைத்தால்  சிக்கலும்

சிக்கலையே சிக்கலாக்கி சிக்கலும் சிக்கலும்

சிக்கிசிக்கி சிக்கலே சிக்கலின் சிக்கலை சிக்கலின்றி

சிக்கலுக்குத் தீர்வைத் தரும்.

எழிலரசன் -- சத்யபாமா திருமணநாள்

வாழ்த்துப்பா!

மகன்கள்:

நிக்கில் அபிசேக்-- வருண் ஆதித்யா

27.01.2019

வள்ளுவத்தின் இல்லறத்தை வாழ்வியலாய்ப் போற்றுங்கள்!

நல்லறத்தை நாளும் ஒளிவிளக்காய் ஏற்றுங்கள்!

பல்வளங்கள் பல்கிப் பெருகிடவே வாழியவே!

நல்லவராய் வல்லவராய் மைந்தர்கள் இவ்வுலகில்

கல்வியில் முன்னேறி வெற்றியுடன் வாழியவே!

எல்லோரும் வாழ்த்துகின்றோம் சூழ்ந்து.



பெற்றோர்:
மதுரை பாபாராஜ்
வசந்தா

உடன்வாழ்த்தும் இதயங்கள்:

ரவி-- சுபாதேவி-- சுசாந் சிரிராம்.

வள்ளுவத்தால் நீக்கு!

கடமைகள் தம்மைக் கடவுளாய்ப் போற்று!

குடும்பத்தை நாள்தோறும் கோயிலாய் மாற்று!

நடைபோடும் இல்லறத்தில் மெய்விளக்கை ஏற்று!

அகமாசை வள்ளுவத்தால் நீக்கு.

தமிழ்மணக்கும் !

நல்லதமிழ்ச் சொல்லிருக்க வாயில் நுழையாத

பல்லிடுக்கில் காற்றுவரும் சொல்லெதற்கு மானிடனே!

வெல்லநிகர்ச் செந்தமிழால் பேசி மகிழ்ந்திருப்போம்!

உள்ளம் தமிழ்மணக்கும் பார்.


பேட்ட உருவான விதம்!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

சன் டிவி 26.01.19

உங்கள் குழுவின் உழைப்பு தெரிகிறது!
என்ன முயற்சிகள்! எத்தனைக் கோணத்தில்
கொண்டு செலுத்திய அற்புதக் காட்சிகள்!
கண்கள் சிலிர்ப்பில்  வியந்து விரிந்திட
சண்டைக் களங்களில் சூப்பர்ஸ்டார் வேகத்தில்
மின்னலின் வேகமோ தோற்று மறைந்துவிடும்!
தம்பிமகன் கார்த்திக்கை வாழ்த்து.

கார்த்திக்கின் காட்சி விளக்கும் திறமையில்
தேர்ந்த இயக்குநரின் வீச்சை உணர்ந்தேன்நான்!
ஆர்வமுடன் தன்னெதிர் பார்ப்புகளை முன்வைக்கும்
நேர்த்தியைக் கண்டு ரசித்தேன்! மகிழ்ந்து!
கார்த்திக் இமயந்தான் நீ.

மதுரை பாபாராஜ்

Labels:

இன்னா! 1.

இந்தித் திணிப்பென்றும் செந்தமிழுக் கின்னா!
அன்னிய ஆதிக்கம் இந்தியாவுக் கின்னா!
கண்டபடி வாழ்தலோ வாழ்க்கைக்கே இன்னா!
புண்படுத்தல் இன்னா உணர்.

தியாக விளக்கு

இந்தி எதிர்ப்புத் தியாகிகள் நாள்!

25.01.1965

தாய்மொழி செந்தமிழைக் காப்பதற்குப் போராட்டம்
வேரோடி நின்றபோது முன்வந்தே நாடிவந்துப்
போராடி இன்னுயிரை ஈந்த தியாகிகளை
காலமெலாம் நாமோ நினைத்தே வணங்குவோம் !
ஞாலத் தியாக விளக்கு.

Wednesday, January 23, 2019

ஆசை தவிர்!

வண்ணவண்ணக் கற்களால் வீட்டுத் தரைகளைக்
கண்கவரப் போட்டே  அழகுபார்க்கும் ஆசையால்
அந்தத் தரைகள் வழுக்கிவிட தள்ளாட்டம்!
அம்மா! விலைகொடுத்து நாள்தோறும் வாங்குகின்றார்!
என்றென்றும் ஆசை தவிர்.

ஏக்கம் தீருமா?

தலையிலே முள்மகுடம்!  தோளில் சிலுவை!
மலைப்பில் வறுமையுடன் தள்ளாடும் வாழ்க்கை!
உழைத்தும் திருவோடே நாளும் கரத்தில்!
சுளைகள் அனைத்தும் கசப்பு.

ஒத்துழைப்போம்!

திருவிழாக்கள் வந்தால் தெருவெல்லாம் குப்பை
பெருகிக் குவியும் மலைபோல எங்கும்!
பெருக்கியும் வாரியும் துப்புரவுத் தொண்டைத்
தெருவிலே  கடமையாய் எண்ணிப் புரிவார்!
ஒருநாள் வரவில்லை,துர்நாற்றம் வீசும்!
தெருக்களிலே தொட்டிகள் வைத்திருந்த போதும்
செருக்குடனே  மக்கள் வெளியிலே வீசி
தெருவெல்லாம் குப்பை சிதறிவிழும் கோலம்!
இருகரம் இங்கே இணந்தால்தான் தூய்மை
அரங்கேறும்!  ஒத்துழைப்போம் நாம்.

Saturday, January 19, 2019

படமும் கவிதையும்

ஓய்ந்து களைக்கின்ற நேரத்தில் பின்னோக்கிப்
பார்த்தால்தான் முள்ளும் மலரும் கடந்துவந்த
பாதையும் நம்மை வியப்படைய வைத்திருக்கும்.!
ஈடற்ற காலக் கணிப்பு.


ஒற்றைப் பறவையே! யார்வரவைப் பார்க்கின்றாய்?
சற்றே திரும்பமாட்டாய்? யார்மீது கோபமோ?
விட்டுவிட்டுச் சென்ற இணையை எதிர்பார்த்து
இத்தனை ஏக்கமா? சொல்.

மதுரை பாபாராஜ்

குறள்வழிச் சாலை என்று பெயரிடுக!

சென்னை தொடங்கி குமரி வரையிலும்
உண்டாகும் சாலைக்கு சூட்டும் பெயராக
இங்கே குறள்வழிச் சாலை எனவைத்தால்
வண்டமிழ் வாழும் நிமிர்ந்து.

V
VOV CHANDRA SEKAR IG ( RTD)

விளையாட்டுக் காட்டும் வரிப்புலிகள் மூன்று!
தலையாட்டிப் பார்க்கும்
மரங்களின் கூட்டம்!
மலைக்கவைக்கும் காட்சியுடன் காலை வணக்கம்
சுளையாகத் தந்தவரை வாழ்த்து.

நடிப்பு!

திண்டாட்டம் என்றசொல் மாறித்தான் எல்லோர்க்கும்
கொண்டாட்டம் எந்நாளோ அந்நாளே பொன்னாளாம்!
பந்தி முடித்தே எறியும் இலைகளை
உண்ணப் பொறுக்குகின்ற வன்கொடுமை உள்ளவரை 
கொண்டாட்டப் போக்கோ நடிப்பு.

 தைப்பொங்கல்-- 15.01.2019

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!

தையே வருக!தமிழ்ப்புத்தாண்டே வருக!

தமிழ்ப்புத் தாண்டின் தொடக்கமே தைத்திங்க ளாகும்!
கணித்தது  பொய்யில்லை!கல்வெட்டுச் சான்றால்
தமிழினம் கொண்ட தனித்தன்மை கண்டோம்!
தமிழ்ப்புத் தாண்டை வரவேற்று வாழ்த்து!
தமிழ்மணக்க கூடிநின்று வாழ்த்து.

உழவர் திருநாள்

கைகூப்பி வாழ்த்துவோம்!

உயிரூட்டி நாளும் நடமாட வைக்கும்
செயலி உழவரைக் கைகூப்பி வாழ்த்து!
உயர்த்தி மகிழ்வோம் உழைப்பை மதித்து!
உளமார நன்றியைக் கூறு.
--------------------------------------------------------------
16.01.19

திருக்குறள் பொதுமுறை!

வள்ளுவர்நாள் வாழ்த்து!

வாழ்வியல் நற்கருத்தை உள்ளடக்கி வள்ளுவர்
பாவினத்தில் ஏழேழு சொற்களில் அற்புதமாய்
ஆயிரத்து முந்நூற்று முப்பது தேன்குறளால்
வேலிகளைத் தாண்டாமல் வாழவழி காட்டுகின்றார்!
வேலிக்குள் வீறுநடை போடு.

எங்கெங்கு வாழ்ந்தாலும் மக்களின் வாழ்வியல்
பண்பும், தனிமனித நல்லொழுக்கப் பண்புகளும்
இங்கே பொதுவாகும்! செந்தமிழே வள்ளுவத்தை
என்றும் பொதுமுறையாய்ப் போற்று.

வாழ்வியல் இரண்டடியில்!

நடந்தால் இரண்டடி! வாழ்விலே நாமும்
தடம்மாறிச் செல்லாமல் வாழவழி காட்டும்
குறளும் இரண்டடி! மாசின்றி  நாமும்
கடைப்பிடித்து வாழ்வோம் நிமிர்ந்து.

மனசாட்சி வழிகாட்டி!

சொன்னதைச் செய்திடுவான் என்பார் சிலரிங்கே!
சொன்னதைச் செய்யமாட்டான் என்பார் சிலரிங்கே!
உந்தன் மனசாட்சி் காட்டி உணர்த்துகின்ற
நன்னெறியில் வாழ்தல்  சிறப்பு.

வியப்புக் குறிகளின் ஆட்சி!

பெரிய வணிக வளாகத்துள் சென்றால்
விழியில் வியப்புக் குறிகளின் ஆட்சி!
குழந்தை மனநிலை பெற்றே கரங்கள்
பரபரக்கும் பொருள்வாங்கத் தான்.

முதுமை கொடுமை!

இளமை முடிந்து முதுமை தொடங்கும்!
கிழவட்டம் நோயில் படுத்த படுக்கை
நிலையில் கிடந்தால் அருகில் இளமை
உளைச்சல் நதியிலே நீந்தும் ! கடமை
அழைக்கும்! மனமோ தவிக்கும்! முதுமை
மலைப்பிலே பெற்றோரின் ஏக்கப் பார்வை
அலைபாய அங்குமிங்கும் ஓடித் திரிவார்!
இளமை கடமை! முதுமை கொடுமை!
சுழற்சியில் வாழ்க்கை உணர்

Thursday, January 17, 2019

பேரன் சுசாந்த் ஸ்ரீராம்
பிறந்தநாள் வாழ்த்து!

15.12.18

அகவை பதினேழு இன்றோ அரும்பும்
மகத்துவம் கண்டு மகிழ்கின்றோம்! பெற்றோர்
அகங்குளிர நற்பண்பும் சுற்றமும் நட்பும்
சிறக்க
நடைபோடு என்றும் மகிழ்ந்து.

படிப்பில் சிகரத்தை எட்டு! கிரிக்கட்
கொடிபறக்க திறமையைக்  காட்டு! உழைக்கும்
நெறியிலே நேர்மையைக் காட்டு! தமிழின்
குறள்நெறி போற்றி சாதனைகள் நாட்டு!
சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்
வசந்தா

உடன் வாழ்த்தும் இதயங்கள்
எழில் -- சத்தியா--
நிகில் அபிசேக்-- வருண் ஆதித்யா

தமிழ்நாடு பொன்விழா!

1968 -- 2018

சங்கர லிங்கனார் உண்ணா விரதத்தை
தன்னந் தனியராக ஏற்றுத் தமிழ்நாடு
என்னும் பெயர்மாற்றக் கோரிக்கை முன்னெடுத்தார்!
அண்ணா,பெருந்தலைவர் எல்லோரும் சொல்லியும்
பின்வாங்கும் எண்ணமின்றி இன்னுயிரை ஈந்துவிட்டார்!
அண்ணா முதல்வர் பொறுப்பேற்றார்! சங்கரர்
எண்ணம் கனிந்ததைப் பார்.

பெற்றெடுத்த தாய்நாடு நம்தமிழ் நாடென்றே
நற்றமிழால் கும்பிடடி பாப்பாநீ என்றுதான்
அப்போதே பாடினான் பாரதி! தமிழ்நாடு
நற்பெயரை
சட்டமன்றம் உச்சரிக்க வாழ்கவென்றே வாழ்த்தினார்கள்!
வெற்றி முழக்கம் இமயமலைச் சாரலிலே
முட்டி எதிரொலித்த அந்த எழுச்சிநாளை
அற்புத மாகத் தமிழ்நாடு பொன்விழாவைச்
சுற்றமுடன் கொண்டாடு வோம்.

சோர்வுக்கு இடம்கொடேல்!

நாள்தோறும் யானையைப் பார்த்தாலும் அன்றுதான்
பார்ப்பதைப்போல் ஒவ்வொரு நாளும் குழந்தைகள்
ஆர்வத்தில்  துள்ளி மகிழ்கின்ற கோலம்போல்
வாழ்விலே ஒவ்வொரு நாளையும் உற்சாகப்
பார்வையிலேபார்க்கும் நிலையெடுத்தால்  எந்நாளும்
சோர்வின்றி வாழலாம் சொல்.

சிக்கனம்!

சிக்கனம் என்றால் கருமித் தனமல்ல!
அற்புதமாய் தேவைக்குள் வாழ்கின்ற வாழ்வியல்!
ஒப்பீடு செய்யாமல் ஆடம் பரமின்றி
ஒற்றுமையாய் வாழ்வதே வாழ்வு.

உறவு

எப்பொழுதோ வந்தால் வரலாறாய் வாழ்த்துவோம்!
அப்பப்ப வந்துபோனால் செய்தியாய் வாழ்த்துவோம்!
எப்பொழுதும் வந்தால் முகச்சிரிப்பால் வாழ்த்துவோம்!
இப்படித்தான் வாழ்வில் உறவு.