Sunday, February 28, 2010

கம்பராமாயணக் காட்சி

-- இராமன் காடேகும் செய்தி கேட்ட மக்கள் கருத்து

"ஆளான் பரதன் அரசு "என்பார்; "ஐயன் இனி
மீளான், நமக்கு விதி கொடிதே காண்!" என்பார்;
"கோளாகி வந்தவா கொற்ற முடிதான்" என்பார்;
"மாளாத நம்மின் மனம் வலியார் யார்?" என்பார் (1801)
-------------------------------------------------------------------------------------------------------

பரதனுக்கு ஆட்சியைத் தாய்தந்த போதும்
பரதன் தனக்குரிமை இல்லா அரசை
அரசாட்சி செய்ய இசையமாட்டான் என்றே
ஒருசிலர் கூறுவார் பார்.

தலைவன் இராமனோ கானகம் சென்ற
நிலையேற்ற பின்பு நகருக்குள் மீண்டும்
வருவதற்கே ஒப்பமாட்டான்! நம்விதி இங்கே
இருக்கிறதே என்பார் சிலர்.

அணிசெய்யக் காத்திருக்கும் மங்களம் பொங்கும்
மணிமகுடம் இன்றிங்கே தீமை பொழியும்
தனிக்கோளாம் தூமகேது கோளாகி ராமன்
வனம்செல்லச் செய்ததென்பார் ! சூழ்ந்து..

இத்தகைய தீங்கினைக் கேட்டபின்பும் கண்டபின்பும்
எப்படி நம்முயிர் நீங்காமல் வாழ்கின்றோம்?
இப்படி வன்நெஞ்சர் யார்தான் இருப்பாரோ?
உற்றபழி வந்ததென்பார் நொந்து.

மதுரை பாபாராஜ்
=========================================================





கம்பராமாயணக் காட்சி
கண்ணுள் புகுந்தவனும் வில்லை ஒடித்தவனும்
ஒன்றுதானா என்றறிய சீதையோ -- வண்ண
வளையலைத் தொட்டுச் சரிபார்க்கும் சாக்கில்
உளமாரப் பார்த்தாள் உவந்து.
------------------------------------------------------------------------------------------
கம்பராமாயணக் காட்சி

கோசலை புலம்புதல்

கானகம் நோக்கி மைந்தன்
கடமையாய் விரைந்தே செல்வான்!
தேனகக் கணவன் நீயோ
திகைத்திட வைத்து விட்டு
வானகம் நோக்கிச் செல்வாய்!
வாழ்விலே கணவன் மைந்தன்
மான்விழி என்னை விட்டே
மறைதலும் தருமம் தானா?

கம்பராமாயணக் காட்சி

கணவனைத் துச்சமென எண்ணிய கைகேயி

காட்டில் திரியவேண்டும் ராமன்என்றும் தன்மகனோ
நாட்டில் முடிசூட்ட வேண்டுமென்றும் -- கேட்டு
வரம்பெற்றாள் கைகேயி! சொன்னசொல் மாறா
தயரதனும் தந்தான் தளர்ந்து.

எப்படி மன்றாடிக் கேட்டான் தசரதன்!
இப்படி அப்படி என்றே அசையாமல்
அப்படியே நின்றாள் கைகேயி!வென்றுவிட்டாள்!
அப்பப்பா ! காரிகைதான் கல்.

காரிகையின் வஞ்சத் தூரிகை தீட்டிய
காரிருள் ஓவியத்தின் வக்கிரம் தாங்காமல்
தேர்மன்னன் நொந்து விழுந்தான்! துடித்தான்!
பாரில் துயிலிழந்தான்! பார்.

தசரதனின் சோக நிலைகண்டு கோழி
சிறகினை மார்பில் அடித்தே அலற
கடமை தவறாத ஆதவன் அன்றும்
கடமையாய் வந்தான் உதித்து.

மதுரை பாபாராஜ்


கம்பராமாயணக் காட்சி
----------------------------------------
வசிட்டன் மனநிலை
(இராமன் இலக்குவன் மரவுரிக் கோலத்தில் )
----------------------------------------------------------------------
அன்னவர் முகத்தினோடு அகத்தை நோக்கினான்;
பொன் அரைச் சீரையின் பொலிவு நோக்கினான்;
என்இனி உணர்த்துவது? எடுத்த துன்பத்தால்,
தன்னையும் உணர்ந்திலன்,உணரும் தன்மையான்.(1857)
===============================================================
மரவுரி ஏந்தும் இருவரையும் பார்த்தான்!
வலம்வரும் ஊனக்கண் கொண்டே -- அவர்கள்
முகத்தையும் நெஞ்சத்தை ஞானக்கண் ணாலும்
அகம்நொறுங்கப் பார்த்தான் உணர்ந்து.

மதுரை பாபாராஜ்


கம்ப ராமாயணக் காட்சி
--------------------------------------
சுமித்திரையிடம் இராம இலக்குவர் விடைபெற்றுச் செல்லுதல்
---------------------------------------------------------------------------------------------------
இருவரும் தொழுதனர்;இரண்டுகன்று ஒரீஇ
வெருவரும் ஆவினின், த்தையும் விம்மினாள்;
பொறு அரும் குமரரும் போயினர் புறம்
திரு அரைத்துகில் ஒரீஇச் சீரை சாத்தியே. (1847)
=================================================================
தாய்ப்பசுவின் கண்முன் ஒருசேர ஒரேநேரம்
சேய்க்கன்று இரண்டும் பிரிந்துசெல்லும் கோலத்தை
பார்ப்பதுபோல் தேம்பி நடுங்கி அழுதிருந்தாள்!
தாய்மனம் நொந்தது பார்.

மதுரை பாபாராஜ்

கம்ப ராமாயணக் காட்சி
--------------------------------------
இராமனுக்கு இலக்குவன் மறுமொழி
-------------------------------------------------------------
"நீர் உள எனின் உள மீனும் நிலமும்;
பார்உள எனின் உள யாவும்; பார்ப்புறின்
நார்உள தனு உளாய்?நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளம்?அருளுவாய்!" என்றான்.( 1851)
===============================================================
நீர்நிலைகள் உள்ளதால் மீன்களும் பூக்களும்
பாரில் உயிர்வாழும்!பூமி இருந்தால்தான்
சீராய் உயிரினங்கள் வாழுமண்ணா! எங்களுடன்
யாரிருந்தால் வாழ்வோம்?பகர்.

தாய்க்கு நிகரான சீதையும், நானுமிங்கே
யாரிருந்தால் நிம்மதியாய் வாழ்ந்திருப்போம்?-- நேர்மையின்
ஊற்றே! நீங்களே கூறுங்கள்! என்றேதான்
கேட்டான் இலக்குவன் தான்

மதுரை பாபாராஜ்


கம்ப ராமாயணக் காட்சி
------------------------------------------------------------------
இராமர் இலக்குவர் மரவுரிக் கோலம் கண்டு
பொதுமக்களின் துயரம்.
============================================
"மண்கொடு வரும் என வழி இருந்தது யாம்,
எண்கொடு சுடர்வனத்து எய்தல் காணவோ ?
பெண்கொடு வினை செயப்பெற்ற நாட்டினில்
கண்கொடு பிறத்தலும் கடை" என்றார் சிலர்.(1884)
==================================================
அரசுரிமை ஏற்று மணிமகுடம் தாங்கி
அரசாள ராமன் வருவான்பார் என்றே
அரண்மனையில் காத்திருந்தோம்! எங்களது எண்ணம்
கரைந்தே அழிந்தது காண்.

கானகம் நோக்கியவன் செல்கின்ற காட்சியைக்
காணவேண்டும் என்பதற்கா காத்திருந்தோம் நாங்களிங்கே!
ஊனமணப் பெண்ணின் இழிசெயலைப் பார்த்திருக்கும்
ஊன்கண்ணைத் தாங்கல் இழிவு.

மதுரை பாபாராஜ்

கம்பராமாயணக் காட்சி
----------------------------------------------
சீதை அதிர்ச்சி அடைதல்:
-----------------------------------------------
அழுது , தாயரொடு , அருந்தவர் , அந்தணர் , அரசர்
புழுதி ஆடிய மெய்யினர் , புடைவந்து பொருமப்
பழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா
எழுது பாவையன்னாள் மனத்துணுக்கமொடு எழுந்தாள்.(1914)
=============================================================
அரசகோலம் ஏந்தும் கணவனைப் பார்க்கப்
பரபரப்பாய்க் காத்திருந்தாள் சீதை -- மரவுரிக்
கோலத்தில் ராமனைப் பார்த்ததும் நேரிழையாள்
சீரழிந்தாள் ! நொந்தாள் அதிர்ந்து.
----------------------------------------------------------------------------------------------------------

கம்பராமாயணக் காட்சி
----------------------------------------------

எழுந்த நங்கையை மாமியர் தழுவினர் ; ஏங்கிப்
பொழிந்த உண்கணீர் புதுப்புனல் ஆட்டினர்; புலம்ப
அழிந்த் சிந்தையள் , அன்னம், இதுஇன்னது என்று அறியாள்,
வழிந்தநீர் வெடுங்கண்ணினள், வள்ளலை நோக்கி.(1915)
============================================================
திரண்டுவந்த மாமியர் கண்ணீரைப் பார்த்து
கலக்கமுடன் காரணத்தைத் தேடி -- தவழ்ந்துவந்தாள்
தன்விழிகள் கண்ணீரைச் சிந்த இராமனை
அன்பரசி பார்த்தாள் அழுது.

கம்பராமாயணக் காட்சி
----------------------------------------------

ராமன் கூறுதல்
---------------------------
"பொருவுகில் எம்பி புவி புரப்பான்;புகழ்
இருவர் ஆணையும் ஏந்தினென்; இன்றுபோய்க்
கருவி மாமழைக் கல்கடம் கண்டுநான்
வருவென், ஈண்டு வருந்தலை நீ" என்றான்.(1917)
----------------------------------------------------------------------------

நாடாள வேண்டும் பரதனென்றும் நானிங்கே
காடேக வேண்டுமென்றும் தாய்தந்தை ஆணையிடார்!
காடேகி நான்வருவேன் ! மாதே ! வருந்தாமல்
மாடத்தில் இருஎன்றான்! நின்று.

சீதை வருந்துதல்
-----------------------------------------
நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும்,
மேயமண் இழந்தான் என்றும் விம்மிலர்;
"நீ வருந்தலை;நீங்குவென் யான்";என்ற
தீய வெம்சொல் செவிசுடத் தேம்புவாள்.(1918)
====================================================
தங்கணவன் கானகம் செல்கின்றான் என்பதற்கோ
மன்னன் அளித்த அரசுரிமை-- சென்றதற்கோ
சீதை அழவில்லை! இராமன் உதிர்த்திட்ட
கூடறுக்கும் சொற்கேட்டாள் வெந்து.



கானகம் சென்று வருகின்றேன்! நீயிங்கே
தேனகத்தில் சற்றும் வருந்தாமல் வாழ்ந்திரு!
மானே1 எனச்சொன்ன வெங்கொடுமைச் சொற்களால்
மானவள் தேம்பிநின்றாள்! பார்.

கம்பராமாயணக் காட்சி
--------------------------------------------------------
ராமன் சீதையைத் தேற்றுதல்
---------------------------------------------------------
"வல்லரக்கரின் மால் வரை ஊடு எழும்
அல் அரக்கின் உருக்கு அழல்காட்டு அதர்க்
கல் அரக்கும் கடுமைய அல்ல நின்
சில் அரக்கு உண்ட சேவடிப் போது" என்றான்.(1921)
============================================================
அரக்கர்கள் வாழும் மலையைக் கடக்கும்
கலக்கமிகு நேரத்தில் செம்பஞ்சு -- மலர்போன்ற
நின்பாதம் நோகுமம்மா! கற்கள் உறுத்துமம்மா!
என்றான் இராமன் கனத்து.
------------------------------------------------------------------------------------------------------
கம்பராமாயணக் காட்சி
------------------------------------------------
சீதையின் மறுமொழி
-----------------------------------------------------------------------------------------
பரிவு இகந்த மனத்தொரு பற்று இலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்
பிரிவினும் சுடுமோ பெருங்காடு? என்றாள். (1922)
------------------------------------------------------------------------------------------
பெண்ணென்றும் எண்ணி இரங்காமல், அன்பரசி
உன்மனைவி என்கின்ற பற்றுதலும் இல்லாது
என்னைப் பிரிவதற்கு முற்படுவதை என்னென்பேன்?
இன்னலை ஏதென்பேன்? யான்.

கானகம் என்ன கடுமையா? அய்யகோ!
தேனகத்தில் நானிருக்க கானகத்தில் நீயிருக்க
ஈனமான அப்பிரிவைக் காட்டிலும் சுட்டெரிக்கும்
வேனலாமோ அக்காடு ? சொல்.
-------------------------------------------------------
கம்பராமாயணக் காட்சி
-------------------------------------------------------
இராமனின் மனநிலை
-------------------------------------------------------
அண்ணல் அன்ன சொல் கேட்டனன்; அன்றியும்
உள்நிவந்த கருத்தும் உணர்ந்தனன்;
கண்ணீன் நீர்ககடல் கைவிட நேர்கிலன்;
எண்ணுகின்றனன், "என் செயற் பாற்று?' எனா.(1923)
------------------------------------------------------------------------------------------
சீதையின் சொற்களைக் கேட்ட இராமனோ
கோதையின் உள்ளக் கருத்தை உணர்ந்தேதான்
சீதை தவித்திருக்க உள்ளம் இசையவில்லை!
யாதுசெய்வேன்? என்றான் உழன்று.
----------------------------------------------------
சீதை மரவுரி உடுத்து எதிர் தோன்றுதல்
---------------------------------------------------------------------------
அனைய வேலை, அகல் மனை எய்தினாள்;
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்;
நினைவின், வள்ளல் பின்வந்து, அயல் நின்றனள்;
பனையின் நீள்கரம் பற்றிய கையினாள்.(1924)
----------------------------------------------------------------------------------------
அன்பரசி சீதையை யாருமே தூண்டாமல்
தன் கணவன் ராமன் உடுத்திய தைப்போல
அங்கே மரவுரிக் கோலத்தில் வந்தவள்
அண்ணலைப் பற்றிநின்றாள் சார்ந்து.
-------------------------------------------------------------------------------------------------------------
இலக்குவன்,இராமன்,சீதை செல்லுதல்
----------------------------------------------------------------------
"சீரை சுற்றித் திருமகள் பின்செல,
மூரிவில்கை இளையவன் முன் செலக்
காரை ஒத்தவன் போம்படி கண்ட அவ்
ஊரை உற்றது, உணர்த்தவும் ஒண்ணுமோ?" ( 1930)
===================================================

மரவுரி சுற்றிய சீதையோ பின்னும்
பெரியவில்லை ஏந்தி இலக்குவன் முன்னும்
கருமேக ராமன் இடையிலும் செல்ல
கலுழ்ந்தனர் இக்கோலம் கண்டு.


----------------------------------------------------------------------------
கம்பராமாயணக் காட்சி
--------------------------------------
தேரோட்டி சுமந்திரனின் ஏக்கம் ததும்பும் கேள்விகள்
----------------------------------------------------
"தேவியும் இளவலும் தொடரச் செல்வனைப்
பூ இயல் கானகம் புக உய்த்தேன் என் கோ?
கோவினை உடன் கொடு குறுகினேன் என் கோ?
யாவது கூறுகேன் இரும்பின் நெஞ்சினேன்"?(1955)
======================================================
என்னை எதிர்வந்து கேட்கின்ற மக்களிடம்
உங்களைக் கானகத்தில் விட்டுவிட்டேன் என்பேனா?
என்னுடன் நீங்களும் வந்தீர்கள்! என்பேனா?
என்னசொல்லித் தேற்றுவேன் நான்?
------------------------------------------------------------------------------------------------------------------------------
"தார் உடை மலரினும் ஒதுங்கத் தக்கிலா
வார் உடை முலையொடு மதுகை மைந்தரைப்
பாரிடைச் செலுத்தினேன்: பழைய நண்பினேன்,
தேரிடை வந்தனென் , தீதிலேன் என் கோ?"(1956)
=========================================================================
சீதையை ராம இலக்குவரைக் காட்டினிலே
வேதனைக்கு உள்ளாக்கி கால் நோக செல்லவிட்டு
சோதனையே இன்றி சுகமாக நான்வந்தேன்
தோதாக என்பேனா?நான்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
வன்புலக் கல்மன மதி இல் வஞ்சனேன்,
என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்பால்
உன் புலக்கு உரியசொல் உணர்த்தச் செல்கேனோ?
தென்புலக் கோமகன் தூதில் செல்கேனோ?(1957)
========================================================================
மனமுடைந்து வாடும் தசரதனைப் பார்த்து
குணக்குன்று நீசொன்ன சொற்களைச் சொல்லி
வணங்கவா? த்ற்கின் இயமனுக்குத் தூதாய்
இணக்கமுடன் செல்லவா? நான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
"நால்திசை மாந்தரும் நகர் மாக்களும்
"தேற்றினர் கொணர்வர் என்சிறுவன் தன்னை"என்று
ஆற்றின அரசனை, ஐய! வெய்ய என்
கூற்று உறழ் சொல்லினால் கொலை செய்வேன் கொலோ?(1958)
==========================================================================
மக்களெல்லாம் ராமனைத் தேற்றிக் கொணர்ந்திடுவார்
இக்கணமே என்றே உயிர்வாழும் மாமன்னன்
அக்கறையாய்ப் பார்க்க கொடுஞ்சொல்லைச் சொல்வதால்
குட்றம் சுமப்பதா?நான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
"அங்கிமேல் வேள்வி செய்து, அரிதின்பெற்ற, நின்
சிங்கஏறு அகன்றது" என்று உணர்த்தச் செல்கெனோ?
எங்கள் கோமகற்கு இனி என்னில், கேகயன்
நங்கையே கடைமுறை நல்லள் போலுமால்.(1959)
============================================================================
உன்னன்னைக் கைகேயி இன்னலைத்தான் தூவினாள்!
என்சொல்லோ மன்னனின் இன்னுயிரைப் போக்கிவிடும்!
மண்ணுலகில் கைகேயி நல்லவளாய் மாறிவிட
என்னை பலியிடவோ நான்?
---------------------------------------------------------------------------------------------------------------------------------

கம்பராமாயணக் காட்சி
-------------------------------------------------
இராமன் கூறிய தத்துவம்
--------------------------------------------------
நிறப்பெரும் படைக்கலம் நிறத்தின் நேர்உற
மறப்பயன் விளைக்குறும் வன்மை அன்று; அரோ
இறப்பினும் , திருஎலாம் இழப்ப எய்தினும்
துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே.(1964)
===================================================
போர்க்கள வீரமோ வீரமல்ல ! வாழ்விலே
தாழ்வுநிலை வந்தபோதும் செல்வங்கள் சென்றபோதும்
வாழ்வில் அறவழியில் துன்பத்தைச் சந்திப்போர்
வீரராவார் இவ்வுலகில் தான்.

கம்பராமாயணக் காட்சி
-------------------------------------------------
இலக்குவன் சுமந்திரனிடம் கூறியவை:
---------------------------------------------------------------------
"உரைசெய்து எம்கோமகற்கு உறுதி ஆக்கிய
தரைகெழு செல்வத்தைத் தவிர , மற்றொரு
விரைசெறி குழலிமாட்டு அளித்த மெய்யனை
அரைசன் என்று இன்னம் ஒன்றுஅறையற் பாலதோ?"(1977)
============================================================
உனக்குத்தான் இவ்வரசு என்றுசொல்லி விட்டு
மனைவிக்கு வாக்குறுதி தந்து இராமன்
வனமேகச் செய்த தசரதனை மன்னன்
எனக்கூறல் நன்றோ? உரை.
------------------------------------------------------------------------------------------------------
"கானகம் பற்றி நற்புதல்வன் காய்உணப்
போனகம் பற்றிய பொய்இல் மன்னற்கு, இங்கு
ஊன்அகம் பற்றிய துயரொடு இன்னும் போய்
வானகம் பற்றிலா வலிமை கூறு" என்றான். (1978)
========================================================
காட்டில் கிடைக்கும் உணவுகளை ராமனோ
கூட்டிவைத்தே உண்ண , அறுசுவை உண்டியை
நாட்டில் ருசித்து மகிழும் அரசனிடம்
காட்டின் துயரத்தைச் சொல்.


என்றே மனக்கொதிப்பை லெட்சுமணன் சீறியே
சிந்தினான் கோப அனல்மழையை அங்கேதான்!
தன்னுடைய ஏமாற்ற எண்ணத்தை இவ்வாறு
தன்கருத்தாய்க் கூறினான் சாற்று.
-------------------------------------------------------


கம்பராமாயணக் காட்சி
-------------------------------------------------
சீதா தேவி வருந்தாது வழி நடத்தல்
----------------------------------------------------------------
சிறுநிலை மருங்குல் கொங்கை ஏந்தியசெல்வம் என்னும்
நெறி இருங்கூந்தல் நங்கை சீறடி நீர்க்கொப்பூழின்
நறியன தொடர்ந்துசென்று நடந்தன; நவையுள் நீங்கும்
உறுவலி அன்பின்ஊங்கு ஒன்றுஉண்டு என உணர்வதுண்டோ?(1987)
------------------------------------------------------------------------------------------------------------------------
சீதையின் மெல்லிய பாதங்கள் நீர்க்குமிழி
ஊடகம்போல் மென்மை படைத்தவை! அத்தகைய
பாதங்கள் ராமனைப் பின்பற்றிச் செல்வதற்குத்
தோதாய் வலிமையைப் பற்றது என்றாலோ
தோகை கணவன்மேல் வைத்திருக்கும் அன்பிற்கு
ஈடாக ஒன்றுண்டோ ? கூறு.
--------------------------------------------------------------------
தசரதன் "ராமன் வந்துவிட்டானா" எனல்
-------------------------------------------------------------------------
"இரதம் வந்துற்றது" என்று, ஆங்கு யாவரும் இயம்பலோடும்
"வரதன் வந்துற்றான்" என்ன, மன்னனும் மயக்கம் தீர்ந்தான்;
புரைதபு கமலனாட்டம் பொருக்கென விழித்து நோக்கி,
விரத மாதவனைக் கண்டான் " வீரன் வந்தனனோ?" என்றான்.(1992)
=====================================================================
ராமனை ஏற்றிச் சுமந்துசென்ற தேரங்கே
தேனகத்தில் வந்துநின்ற சேதிகேட்டு மன்னனோ
ஊன்விழிகள் துள்ள முனிவனிடம் வந்தானா
ராமன்? எனக்கேட்டான் துடித்து.

கம்பராமாயணக் காட்சி
--------------------------------------------------------------------------
தசரதன் தளர்தலும் முனிவன் செல்லுதலும்
-------------------------------------------------------------------------------
"இல்லை" என்று உரைக்கலாற்றான்;
ஏங்கினன் முனிவன் நின்றான்;
நல்லவன் முகமே நம்பி
வந்திலன் என்னும் மாற்றம்
சொல்லலும், அரசன் சோர்ந்தான்;
துயர்உறும் முனிவன், "நான்இவ்
அல்லல் காண்கிலேன்" என்னா,
அங்கு நின்று அகலப்போனான்.(1993)
================================================
ராமன் வரவில்லை என்பதைச் சொல்லாமல்
ஞானமுகம் வாடக் குறிப்பல் உணர்த்தினான்!
மாமன்னன் மீண்டும் மயங்கிச் சரிந்துவிட்டான்!
ஞானமுனி நீங்கினான் விட்டு.
--------------------------------------------------------------------------------------
கம்பராமாயணக் காட்சி
--------------------------------------------------------------------------
தசரதன் உயிர் பிரிதல்
----------------------------------------------------------------------------
நாயகன் பின்னும் தன் தேர்ப்பாகனை நோக்கி " நம்பி
சேயனோ? அணியனோ?" என்று உரைத்தலும், தேர்வலானும்
"வேய்உயர் கானம் தானும், தம்பியும், மிதிலைப் பொன்னும்
போயினன், என்றான்; என்ற போழ்தத்தே ஆவி போனான்.(1994)
==================================================================
இராமனோ தூரத்தில் வருகின் றா னோசொல்?
ஆனமட்டும் கேட்டான் சுமந்திரனை நோக்கித்தான்!
மூவரும் காட்டுக்குள் சென்றுவிட்டார் என்றதுமே
ஆவியை நீத்தான் அதிர்ந்து.

கம்பராமாயணக் காட்சி
---------------------------------------
தசரதன் உடலை எண்ணெய்க் கொப்பரையில் இடுதல்
----------------------------------------------------------------------------------------------
"செய்யக்கடவ செயக்கு உரிய
சிறுவர் ஈண்டையர் அல்லர்;
எய்தக் கடவபொருள் எய்தாது
இகவா என்ன இயல்பு?" என்னா,
"மையல் கொடியாள் மகன் ஈண்டு
வந்தால் முடித்தும் மற்று" என்னாத்
தையல் கடல்நின்று எடுத்து அவனைத்
தைலக் கடலின்தலை உய்த்தான்" (2010)
========================================================
தசரத மன்னன் உயிர்பிரிந்த போது
மகன்கள் ஒருவரும் பக்கத்தில் இல்லை!
மகனாம் பரதன் வரும்வரையில் வேந்தன்
உடல்தன்னைத் தைலக் கடாரத்தில் இட்டுக்
கெடாமல் இருக்குமாறு பாதுகாக்கச் சொன்னான்
அறவோன் வசிட்டன்தான் அங்கு.
--------------------------------------------------------------------------------------------------

கம்பராமாயணக் காட்சிகள

=======================
விழித்தெழுந்த மக்கள் இராமனைக் காணாது வருந்துதல்
----------------------------------------------------------------------------------------
வருந்தா வண்ணம் வருந்தினார்
மறந்தார் தம்மை; வள்ளலும் ஆங்கு
இருந்தான் என்றே இருந்தார்கள்
எல்லாம் எழுந்தார்; அருள் இருக்கும்
பெருந் தாமரைக்கண் கருமுகிலைப்
பெயர்ந்தார்; காணார்;பேதுற்றார்;
"பொருந்தா நயனம் பொருந்து நம்மை
பொன்றச் சூழ்ந்த", எனப் புரண்டார்.(2014)
========================================================

தாமரைக் கண்ணான் இராமனோ தங்களுடன்
சேமமாய்த் தூங்குகிறான் என்றெண்ணி மக்கள்தாம்
ஆவலுடன் அங்கிருந்தார்! அண்ணலைக் காண்பதற்கு
நேயமுடன் நின்றார் எழுந்து.

திரண்டெழுந்து சென்றார் இராமனைக் காண!
கலங்கினார் காணாது! என்றுமே தூங்கா
நயனங்கள் இன்றோ சதிசெய்து தூங்கி
துயரத்தைத் தந்ததென்றார் அங்கு .

வருந்தி வருந்தி தரையில் விழுந்தார்!
புரண்டு புரண்டே அழுதார்! துடித்தார்!
இரண்டு விழிகளையும் தொட்டுப் பழித்தார்!
உழன்றார் உளைச்சலில் நொந்து.








இராமன் வனம் புகுந்ததையும்
தசரதன் இறந்த்தமையையும் அறிந்து வருந்துதல்
=====================================================
புக்கார், அரசன் பொன்னுலகம்
போனான் என்னும் பொருள் கேட்டார்;
உக்கார் நெஞ்சம், உயிர் உகுத்தார்;
உற்றது எம்மால் உரைப்ப அரிதால்;
தக்கான் போனான் வனம் என்னும்
தகையும் உணர்ந்தார்;மிகை ஆவி
அக்காலத்தே அகலுமோ? அவதி
என்று ஒன்று உளதானால்?(2019)
=====================================================
வானகம் சென்றான் தசரதன் என்பதையும்
கானகம் சென்றான் இராமன்தான் என்பதையும்
ஊனகம் கேட்டிருக்க உள்ளம் உடைந்தனர்!
ஏன்வாழ வேண்டுமென்றார்? பார்.

நினைத்ததும் இவ்வுயிர் போய்விடுமா? என்ன!
அனைத்துமே காலம் கணிப்பதுதான் வாழ்வில்!
நினைக்கின்றார் சாவதற்கு! ஆனால் நேரம்
கனியவில்லை !வாழ்கின்றார் ! காண்



மூவரும் மருத நிலக் காட்சிகள் கண்டு செல்லுதல்.
====================================================
அளிஅன்னது ஓர் அறல் துன்னிய
குழலாள்; கடல் அமுதின்
தெளிவு அன்னது ஓர் மொழியாள்;
நிறைதவம் அன்னது ஓர் செயலாள்;
வெளி அன்னது ஓர் இடையாளொடும்
விடை அன்னது ஓர் நடையான்
களிஅன்னமும், மடஅன்னமும்
உடன் ஆடுவ கண்டான். (2023)
===========================================
கருமணல் போலச் செறிந்தநல் கூந்தல்,
திருப்பாற் கடலமுதச் சொற்களும், கற்புச்
செருக்கின் ஒழுக்கமும், ஆகாயம் போல
இருக்கிறதோ அன்றி இல்லையோ என்றே
கருதுவதைப் போன்ற இடையழகும் கொண்ட
கலையெழில் சீதையுடன் ராமன்,வழியில்
விளையாடும் ஆண்அன்னம் பெண்அன்னம் கூடும்
மருதநிலக் காட்சியைப் பார்த்தார்! ரசித்தார்!
பருகினார் கண்களால் பார்.



அஞ்சு அம்பையும்,அய்யன் தனது அலகு அம்பையும் அளவா
நஞ்சங்களை வெலல் ஆகிய நயனங்களை உடையாள்,
துஞ்சும் களிவரி வண்டுகள் குழலின்படி சுழலக்
கஞ்சங்களை மஞ்சன்கழல் நகுகின்றது கண்டாள்.(2024)
=============================================================
திருவடியா? அல்லது தாமரைப் பூவா?
பிரித்தறிய ஏலாமல் வண்டுகள் சூழ்ந்து
ராமனின் காலடியைக் கண்டு நகைப்பதைக்
கோமகள் பார்த்தாள் ரசித்து.





கம்பராமாயணக் காட்சிகள
=======================
மாகந்தமும் மகரந்தமும், அளகம் தரும் மதியின்
பாகம்தரும் நுதலாளொடு, பவளம் தரும் இதழான்
மேகம்தனி வருகின்றது மின்னொடு என, மிளர்பூண்
நாகம் தனி வருகின்றது பிடியொடு என, நடவா,(2025)
======================================================
மணக்கின்ற கூந்தல் பிறைநிலவு நெற்றி
தனக்கென ஏந்திவரும் சீதையுடன் செம்மை
மணக்கும் இதழ்கொண்ட ராமனோ அங்கே
அணங்குடன் வந்தான் நடந்து.

எப்படி வந்தான்? இடிமுழக்கம் செய்யாமல்
எப்படி மேகமொன்று மின்னலுடன் மட்டுமே
முற்றும் தனித்து வருவது போலத்தான்
குற்றமற்றோன் வந்தான் நடந்து.

கிம்புரி பூணணிந்த கம்பீர ஆண்யானை
தன்னுடைய பெண்யானை யோடெந்த ஆரவாரம்
இன்றித் தனித்து வருவதுபோல் காட்டிலே
சென்றானே சீதையுடன் தான்.



தொளை கட்டிய கிளை முட்டிய சுருதிச்சுவை அமுதின்,
கிளை கட்டிய கருவிக் கிளர் இசையின், பசை நறவின்,
விளை கட்டியின், மதுரித்து எழுகிளவிக் கிளி விழிபோல்,
களைகட்டவர் தலைவிட்டுஎறி குவளைத் தொகை கண்டாள்.(2026)
===================================================================
புல்லாங் குழலின் இசையை, நரம்புயாழ்
மெல்லிசையை, தேனின் இனிமையை, கற்கண்டின்
பாகினிமை, காட்டிலும் பச்சைக் கிளிபோல
பாகுமொழி சீதையின் கண்கள்ஒத்து கூட்டமாய்
ஆடும் கருங்குவளைக் கொத்தைக் களைஎன்றே
ஓடிப் பறித்தே உழவர்கள் அங்கெறிந்து
நாடிநின்ற காட்சியைப் பார்த்து ரசித்திருந்தாள்
ஈடற்ற சீதைதான் அங்கு.



அருப்பேந்திய கலசத்துணை, அமுதுஏந்திய மதமா
மருப்பேந்திய எனலாம் முலை, மழைஏந்திய குழலாள்
கருப்பேந்திரம் முதலாயின கண்டாள்; இடர்காணாள்;
பொருப்பேந்திய தோளானொடு விளையாடினள், போனாள்.(2027)
================================================================
அழகின் அமுதக் கலசமாய் சீதை
செழிக்கும் மருதவழி செல்கின்ற போது
பிழியும் கரும்பாலை கண்டுதான் சென்றாள்
வழித்துயர் எல்லாம் மறந்து.

மலைபோன்ற தோளுடைய மேகவண்ணன் ராமன்
சிலைஏந்தி சீதை யுடன்சென்றான்! அந்தச்
சிலைமேனி சித்திரத்தாள் இன்பம் கனிய
விளையாடிச் சென்றிருந்தாள் வென்று.



பல்நந்து உகுதரளம் தொடர் படர்பந்திகள் படுநீர்;
அன்னம்துயில் வதி தண்டலை; அயல்நந்து உறையும் புளினம்,
சின்னம் தருமலர் சிந்திய செறி நந்தனவனம், நன்
பொன் நந்திய நதி, கண்டு உளம் மகிழ்ந்தனர், போனார் (2028)
================================================================
முத்து திரண்டிருக்கும் நீர்நிலைகள்; அன்னங்கள்
தத்தித் துயில்கின்ற சோலைகள், பூச்சிகள்
சுற்றும் மணற்குன்று, பூங்கா, நதிகளையும்
சுற்றுமுற்றும் பார்த்தார் ரசித்து.





கம்பராமாயணக் காட்சிகள்
==============================
மூவரும் கங்கைக் கரையை அடைதல்
=========================================
பரிதி பற்றிய பல்பகல் முற்றினர்,
மருதவைப்பின் வளம்கெழு நாடு ஒரீஇச்
சுருதிகற்று உயர் தோம்இலர் சுற்றுறும்
விரிதிரைப் புனல் கங்கையை மேவினார்.(2030)
---------------------------------------------------------------------
வெண்பா!
----------------
பரிதி ஒளியின் பலபகளைத் தாண்டி
மறுத்த வளங்கொண்ட கோசல நாட்டைப்
பிரிந்து, முனிவர்கள் வாழ்கின்ற கங்கைக்
கரையை அடைந்தனர் காண்
-----------------------------------------------------------------------------
முனிவர்கள் ராமனைக் காணவருதல்
=======================================
கங்கை என்னும் கடவுள் திருநதி
தங்கி வைகும் தபோதனர் யாவரும்
"எங்கள் செல்கதி வந்தது" என்று ஏம்உறா
அங்கண் நாயகற் காணவந்து அண்மினார்.(2031)
==================================================
வெண்பா
-------------
கங்கைக் கரையில் இராமனோ வந்துவிட்டான்!
என்றசேதி கேட்டு முனிவர்கள், தாங்களே
சென்றடையத் தேடும் புகலிடமே இங்குவந்து
நின்றதென எண்ணி இராமனைக் காண்பதற்கு
வந்தனர் அண்ணல் இருக்குமிடம் நாடித்தான்!
அன்பன் அருளே அருள்.
----------------------------------------------------------------------------------------------
கங்காதேவி இராமனைப் போற்றுதல்
=====================================
கன்னி நீக்க அரும் கங்கையும் கைதொழாப்
'பன்னி நீக்க பாதகம் பார் உளோர்
என்னின் நீக்குவர், யானும் இன்று என்தந்த
உன்னின் நீக்கினேன்; உய்ந்தனன் ஆம்' என்றாள்.(2038)
=========================================================
பாவங்கள் செய்த மனிதர்கள் என்னிடம்
ஆவலுடன் வந்தேதான் நீராடிப் போக்குவார்!
நேயமுடன் அந்தந்தப் பாவத்தை நான்சுமந்தேன்!
கார்முகமே! சித்திரமே! என்னைநீ தோற்றுவித்தாய்!
நீவந்தே என்னிடத்தில் நீராடி நின்றதாலே
பாவங்கள் என்னைவிட்டு நீங்க கடைத்தேறி
கூவுகின்றேன நான்தான் மகிழ்ந்து.
----------------------------------------------------------------------------------

கங்கை செவிலித்தாய் போல் நீராட்டுதல்
===========================================
நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால்
நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி
உரைத்த சீதை தனிமையை உன்னுவாள்
திரைக்கை நீட்டிச் செவிலியின் ஆட்டினாள்.(2043)
================================================
வெண்பா
---------------
சீதை, தனியாக வந்ததை எண்ணித்தான்
வேகமாய் ஆடும் அலைக்கரத்தை நீட்டியே
மாதரசி கங்கை செவிலித்தாய் போலவே
கோதிவிட்டு நீராட்டி னாள்.




கம்பராமாயணக் காட்சிகள்
==========================
காணிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு குகன் வேண்டுதல்
===========================================================
இருத்தி நீ என்னலோடும், இருந்திலன்;எல்லை நீத்த
அருந்தியன், "தேனும் மீனும் அமுதினுக்கு அமைந்த ஆகத்
திருத்தினென்,கொணர்ந்தேன்;என்கொல் திருவுளம்?என்ன,வீரன்
விருத்த மாதவரை நோக்கி முறுவலன்,விளம்பலுற்றான்.(2062)
=================================================================
வெண்பா
----------------
காணவந்த அன்புக் குகனை அமருமாறு
தேனொழுகச் சொன்னான் இராமன்தான் -- வானளவுப்
பண்பாய் மரியாதை தந்தே அமரவில்லை
நின்றிருந்தான் அங்கே குகன்.

தேனுடன் மீனும் உணவாக உங்களுக்கு
நானிங்கே கொண்டுவந்தேன் உம்கருத்து யாதென்றான்!
ஈனமனம் இல்லாமல் அண்ணல் இளநகை
பூண்டே உரைத்ததைப் பார்.
--------------------------------------------------------------------------------------------
இராமன் காணிக்கையைப் பாராட்டுதல்
=========================================
அரிய, தாம்உவப்ப,உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக்கொணர்ந்த,என்றால், அமுதினும் சீர்த்த அன்றே!
பரிவினில் தழீஇய என்னின் பவித்திரம்;எம்மனோர்க்கும்
உரியன;இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ!"என்றான்.(2063)
===================================================================
வெண்பா
---------------
அன்பினால் உண்டான பக்தி தெரியுமாறு
கொண்டுவந்த எந்த உணவெனினும் அவ்வுணவு
நன்சுவை ஏந்தும்!அமிழ்தினும் நன்றுதான்!
உண்பதற்கும் தூய்மைதான் சொல்.

எனக்கும் தவம்புரியும் சான்றோர் களுக்கும்
மனதார ஏற்பதற்கும் ஏற்றதுதான்! நாங்களும்
உண்டுவிட்ட காரணத்தால் உண்டதுபோல் ஏற்கின்றோம்
அன்புடன் என்றான் மகிழ்ந்து.


கம்பராமாயணக் காட்சி
==================================================
இராமனும் சீதையும் தருப்பைப் புல்லில் துயிலுதல்
==================================================
மாலைவாய் நியமம் செய்து,மரபுளிஇயற்றி,வைகல்
வேலைவாய் அமிழ்து அன்னாளும்,வீரனும் விரித்த நாணல்
மாலைவாய்ப் பாரின் பாயல் வைகினர்; வரிவில் ஏந்திக்
காலைவாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான்.(2070)
===============================================================
அமிழ்தினை ஒத்திருக்கும் சீதையும், அண்ணல்
தவநெறிச் சான்றோன் இராமனும் அங்கே
தருப்பைப்புல் மீதேதான் அந்த இரவில்
கரங்கொண்டு தூங்கினார் காண்.

தம்பி இலக்குவன் துஞ்சாமல் வில்லேந்தி
கண்ணயர்வு இன்றி விடியல் வரும்வரைக்கும்
நின்றேதான் காவல் புரிந்திருந்தான் பாசமுடன்!
என்னே கடமை உணர்வு.

நறுமணம் சூழ்ந்திருக்கப் பஞ்சுமெத்தை மீது
படுத்துறங்க வேண்டிய சீதை,இராமன்
உறுத்தும் தருப்பைப்புல் மேலே அன்று
படுத்த கொடுமையைப் பார்.















தாமரை மலர்தல்
=====================
செஞ்சவே சேற்றில் தோன்றும் தாமரை, தேரில் தோன்றும்
வெஞ்சுடர்ச் செல்வன் மேனி நோக்கின விரிந்த,வேறுஓர்
அஞ்சன ஞாயிறு அன்ன ஐயனை நோக்கிச் செய்ய
"வஞ்சிவாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்ததன்றே!(2073)
===============================================================
சூரியனைக் கண்டவுடன் தாமரைப் பூமலரும்!
நேரிழையாள் சீதை முகமோ கருவண்ண
ராமனைப் பார்த்ததும் செவ்வண்ணப் பூவான
தாமரை யாய்மலர்ந்த தங்கு.
----------------------------------------------------------------------------------------------------------
. கங்கை கடந்து செல்லுதல்
==========================
பாலுடை மொழியாளும்,பகலன் அனையானும்
சேலுடை நெடுநல்நீர் சிந்தினர் விளையாடத்
தோலுடை நிமிர்கோலில் துழவிட,எழும் நாவாய்
காலுடைநெடு ஞெண்டின் சென்றது கடித்து அம்மா!(2083)
========================================================
கயலினங்கள் துள்ளி விளையாடும் கங்கை
வழங்குகின்ற நீரெடுத்தே சீதை, இராமன்
குழந்தைகள் போலத்தான் மாறிமாறி வீசி
விளையாடிச் சென்றார் மகிழ்ந்து.

நண்டொன்று வேகமாய்ச் செல்வதுபோல் ஓடமும்
அண்ணலும் அன்பரசி சீதையும் லெட்சுமணன்
அன்புடனே கூடவர கங்கையில் சென்றது!
கண்கொள்ளாக் காட்சிதான் சொல்.
===========================================================






குகனுக்கு இராமன் மறுமொழி
==============================================================
அன்னவன் உரைகேளா, அமலனும் உரை நேர்வான்;
"என்னுயிர் அனையாய் நீ; இளவல் உன் இளையான்;
இந்நன்னுதல் அவள் நின்கேள்; நளிர்கடல் நிலமெல்லாம்
உன்னுடையது; நான் உன்தொழில் உரிமையில் உள்ளேன்.(2090)
==============================================================
என்னுயிர் போன்றவன்நீ! என்தம்பி உன்தம்பி!
என்னவள் சீதை உனக்குக் கொழுந்தியாள்!
உன்னேவல் ஏற்கும் உரிமை யுடையவன்நான்!
உன்னுடைய திந்த உலகு.

"துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல்;
முன்பு உளம் ஒரு நால்வேம்;முடிவு உளது என உன்னா
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்.(2091)
===============================================================
துன்பம் இருந்தால்தான் இன்பம் தெரியவரும்!
பின்வரும் இன்பத்தை எண்ணாமல் நம்பிரிவை
எண்ணிக் கவலைப் படாதே! உன்னுடன்
இன்றோடு ஐவரானோம் பார்.
குகன் விடைபெறுதல்,இராமன் முதலியோர் கானகம் புகுதல்
------------------------------------------------------------------------------------------------
பணிமொழி கடவாதான், பருவரல் இகவாதான்
பிணி உடையவன் என்னும் பேதினன், விடை கொண்டான்;
அணிஇழை மயிலோடும், ஐயனும், இளையோனும்
திணிமரம் நிறை கானில் சேண் உறுநெறி சென்றார். (2094)
===============================================================
பிரிவுத் துயர மயக்கத்தில் அங்கே
நலிவுற்ற தூயோன் குகனோ நகர்ந்தான்!
இலக்குவனும்,ராமனும், சீதையும் காட்டு
வழியில் நடந்தனர் சேர்ந்து.
===============================================================

கம்பராமாயணக் காட்சி
========================
இராமன் வனம்புகுந்த காலநிலை
---------------------------------------
பூரியர் புணர்மாதர் பொதுமனம் என,மன்னும்
ஈரமும் உளது,இல் என்று அறிவுஅரும் இளவேனில்,
ஆரியன் வரலோடும், அமுதுஅளவிய சீதக்
கார்உறுகுறி வானம் காட்டியது அவண் எங்கும்.(2095)
=======================================================
பஃறொடை வெண்பா
====================
ஈரம் இரக்கம் தவிர்க்கும் பொதுப்பெண்டிர்
நேரமனம் போல இளவேனில் காலமென
சார்ந்துரைக்க ஏலாமல், துள்ளும் வறட்சிநிலை
பார்க்கும் முதுவேனில் என்றுரைக்க ஏலாமல்
தோய்ந்திருக்கும் காலநிலை கொண்டிருந்த கோலங்கள்
கார்வண்ணன் ராமனின் காலடிகள் பட்டதும்
தேனமுதம் ஒன்றிக் கலந்த குளிர்காலம்
கானக மேனியில் பூத்துக் குலுங்கவைத்து
வானகம் வாழ்த்தினைத் தூவிக் களித்தது!
கானகத்தின் காலமாற்றம் பார்.
==========================================================
இராமன் சீதைக்குக் காட்டிய வழியிடைக் காட்சிகள்
==================================================
"நெய்ஞ்நிறை நெடுவேலின் நிறம்உறு திறம்முற்றிக்
கைஞ்நிறை நிமிர்கண்ணாய்! கருதின இனம் என்றே
மெய்ஞ்நிறை விரி சாயல் கண்டு, நின்விழி கண்டு,
மஞ்ஞையும் மட மானும் வருவன இவைகாணாய்!"(2100)
============================================================
சீதையுன் மேனியின் சாயலைக் கண்டேதான்
தோகைமயில் நாடிவரும் உள்ளங்கை போலளவில்
பாகுவிழி கொண்டதனால் மான்கள் உனைனாடித்
தேடிவரும் காட்சிகளைப் பார்.

"குன்றுஉறை வயமாவின் குருளையும், இருள்சிந்திப்
பின்றின எனல் ஆகும் பிடி தருசிறு மாவும்
அன்றில பிரிவு ஒல்லா அண்டர்தம் மனை ஆவின்
கன்றொடு விளையாடும் களியன பல காணாய்!"(2104)
===========================================================
சிங்கம் புலிகளின் குட்டிகளும் யானையின்
கன்றுகளும் அங்கே இடையர்கள் வீடுகளில்
வந்து பசுங்கன் றுடனே விளையாடும்
கண்கொள்ளாக் காட்சியைப் பார்.
"அடிஇணை பொறைகல்லா என்று கொல், அதர் எங்கும்
இடையிடை மலர்சிந்தும் இனம்மரம் இவை காணாய்!
கொடியினொடு இளவாசக் கொம்புகள், குயிலே! உன்
துடிபுரை இடைமானத் துவள்வன இவை காணாய்!"(2110)
=============================================================
சீதையே! உன்பாதம் நோகுமென்று கற்கள்மேல்
பாதை முழுவதும் பூக்கள் நிரப்பியது!
தோகையே! பூங்கொம்பு உன்னிடைபோல் ஊசலாடி
ஆகா! அசைவதைக் காண்.
பாரத்துவாசர் இராமனைக் கண்டு வருந்துதல்
=============================================
அம்முனி வரலோடும், அழகனும் மலர்தூவி
மும்முறை தொழுதான்;அம்முதல்வனும் எதிர்புல்லி,
"இம்முறை உருவோ நான் காண்குவது?" எனஉள்ளம்
விம்மினன்;இழி கண்ணீர் விழிவழி உக நின்றான்.(2117)
========================================================
பரத்துவாச சான்றோன் இராமனிடம் வந்தார்!
மலர்களால் தூவியே மும்முறை ராமன்
வலம்வந்தான்!வந்தபின் வீழ்ந்து வணங்க,
களங்கமற்ற மாமுனி ராமனை ஆரத்
தழுவினார்! ராமனின் கோலத்தைக் கண்டு
கலங்கினார்! கண்ணீர் சொரிந்தார்!சான்றோன்
உளமார நொந்தார் உணர்.
============================================================
பரத்துவாச முனிவன் காரணம் கேட்டல்
=======================================================
"அகல்இடம் நெடிது ஆளும் அமைதியை, அதுதீரப்
புகலிடம் எமதாகும் புரையிடை,இதுநாளில்,
தகவுஇல் தவவேடம் தழுவினை வருவான் என்?
இகல்அடு சிலைவீர! இளையவனோடும்?" என்றான்.(2118)
============================================================
பூமியை நீண்டகாலம் ஆள்வதை விட்டுவிட்டுக்
காவிகள் வாழ்கின்ற காட்டுக்குள் வந்ததேன்?
ஆவியும் ஏற்காத கோலமுடன், தம்பியுடன்
நீவந்த காரணத்தைச் சொல்.
----------------------------------------------------------------------------------------------------

முனிவன் வருந்துதல்
------------------------------------
உற்றுள பொருள் எல்லாம் உணர்வுற உரைசெய்தான்;
நற்றவமுனி,அந்தோ!விதிதரும் நவை" என்பான்;
"இற்றது,செயல்உண்டோ? இனி"என இடர் கொண்டான்;
"பெற்றிலள் தவம் அந்தோ பெரும் நிலமகள்"என்றான்.(2119)
================================================================
விளக்கமாக ராமன் உரைத்ததைக் கேட்டான்!
சுழன்றிடும் ஊழ்வினையால் வந்ததீங்கு என்றான்!
உலகம் அரசனாய் உன்னைத்தான் பார்க்க
தவம்செய்ய வில்லையென்றான் பார்.













பரத்துவாசன் மீண்டும் வினவுதல்
---------------------------------------------------------
"துப்புஉறு துவர்வாயின் தூமொழி இவளோடும்
அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது" என்னா
ஒப்புஅறும் மகன் உன்னை"உயர் வனம் உற ஏகு" என்று
எப்பரிசு உயிர் உய்ந்தான் என்துணை அவன்?" என்றான்.(2120)

சீதை உடனிருக்க ஆட்சி புரிவதற்குப்
பாதையைக் காட்டியே கேட்டான் “தசரதன்
காடேக உங்களுக்கு ஆணையிட்டே எவ்வாறு
கூடேந்தி வாழ்கின்றான் சொல்?”
-----------------------------------------------------------------------------------------------------------
தன்னுடன் தங்குமாறு முனிவன் வேண்டுதல்!
================================================
அந்த இடத்தின் அருமை பெருமைகளைச்
சங்கத் தமிழால் முனிவன் எடுத்துரைத்தான்!
தங்களுடன் தங்குமாறு ராமனிடம் கூறினான்!
மங்களம் தங்குமென்றான் பார்த்து. (2123)

இராமனின் மறுமொழி!
=======================
பரத்துவாசன் சொன்னதைக் கேட்டுவிட்டு ராமன்
அருகிலே உள்ள அயோத்திநகர் மக்கள்
பெருந்திரளாய் வந்திடுவார் என்றேதான் சொன்னான்!
அருந்தவத்தான் ஏற்றான் புரிந்து. (2126)
பரத்துவாசன் கருத்து
-------------------------------------
கூட்டமிங்கு வந்துவிட்டால் எங்களுக்கு இடையூறே!
நாட்டமுடன் சித்திர கூடத்தில் தங்குங்கள்!
வாட்டமின்றி நீங்களங்கே வாழலாம் என்றுரைத்தார்
மாதவத்தான் ஆசீர் வதித்து.(2127)

மாரீசன் வதைப்படலம்
=============================
இராவணனுக்கு மாரீசன் அறிவுரை
----------------------------------------------------------------
அடுத்தவர் நாட்டைக் கவர்தல், தினமும்
கொடுங்கோல் முறையில் வரிவசூ லித்தல்
அடுத்தவர் இல்லாளை இச்சித்தல் ,மூன்றும்
மறுத்தோர் உயர்ந்தவ ராம்.(3348)
====================================================
ராமன் மானைப் பின்தொடர்தல்!
=====================================
மூன்றடி கேட்டே அளந்தன கால்களன்று!
மானினைப் பற்றிவர அக்கால்கள் வேகமாய்த்
தேன்மகள் சீதையின் ஆசை நிறைவேற
நீண்டன ஆர்வமுடன் இன்று.

ஓடிய ராமனின் வேகத்தை யார்கணிக்க?
வாடியவள் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளவேண்டும்!
ஈடில்லா நாயகன் கால்கள் விரைந்திட
ஓடினான் மானைத் தொடர்ந்து.(3410)
==============================================

Friday, February 26, 2010

அன்புள்ள பாபாராஜ்

குறுந்தொகை
படித்தேன்


குறுமைக்குக் குறுமை
எளிமைக்கு எளிமை
நல்ல சிந்தனை
நல்ல ஓட்டம்


நல்ல முயற்சி
தொடரட்டும்
முழுமையாக நிறைவேறட்டும்


அன்புடன்


2010/2/27 Sengai Podhuvanar செங்கைப் பொதுவன் \ பொதுவன் அடிகள

Thursday, February 25, 2010

குறுந்தொகைக் காட்சிகள்

================================
பாடல் 1. குருதிப்பூ(செங்களம் படக் கொன்று) பாடியவர்: தீப்புத் தேளார்
======================= ============================
அவுணர் படையை அழித்த முருகன்
தவம்செய்யும் குன்றமிது!மேலும் -- களத்தின்
குருதிநிறச் செங்காந்தள் பூக்கள் மலிந்து
பரவிநிற்கும் நாடென் றறி .
======================================================
பாடல்2. நறுமணக் கூந்தல் (கொங்குதேர் வாழ்க்கை)
பாடியவர்:இறையனார்
=======================================================
என்னவளின் கூந்தல் மணத்திற் கிணையாக
இன்னுமொரு பூமணம் உள்ளதோ?-- தும்பியே!
என்னைத் திருப்திப் படுத்துகின்ற எண்ணமின்றி
நன்றாக ஆய்ந்தறிந்து சொல்.
===================================================

பாடல் 3. நிலத்தினும் நீரினும்(நிலத்தினும் பெரிதே;வானினும் உயர்ந்தன்று;)
பாடியவர்:தேவகுலத்தார்
==================================================================
தலைவன்மேல் நான்கொண்ட மாசற்ற அன்போ
நிலப்பரப்பை விஞ்சும் அகலம் -- அழகான
வானத்தை விஞ்சும் உயரம் ! கடல்நீரை
நாணவைக்கும் ஆழம் ! உணர்..
==================================================================
பாடல் 6. துஞ்சாதேனே!(நள்ளென்ற றன்றே, யாமம்; சொல் அவிந்து )
பாடியவர்:பதுமனார்
==================================================================
தாயும் உறவினரும் ஊராரும் எல்லோரும்
நோய்தரும் நள்ளிரவின் இப்பொழுதில் தூங்குகின்றார்!
நீயும் உறங்குகின்றாய் தோழியே!காய்கின்றேன்
தேய்கின்றேன் தூக்கமின்றி நான்.
==================================================================
17. முதிர்ச்சி அடைந்தால்! பாடியவர்:பேரெயின் முறுவலார்
================================================================
பாடல்:மாஎன மடலும் ஊர்ப்ப;பூஎனக் ………
--------------------------------------------------------------
காமம் மிகுந்தால் மடல்குதிரை ஏறுவேன்!
நாணமின்றி நானோ எருக்கமாலை சூடுவேன்!
ஆணவத்தில் ஊரார் இருந்தாலோ வேறுசெயல்
ஆனமட்டும் செய்திடுவேன்!சொல்.
---------------------------------------------------------------------------------------------------------

18. சிறிதும் பெரிதும் ( பாடியவர்:கபிலர்)
============================================
பாடல்:வேரல் வேலி வேர்க்கோட் பலவின் ....
==============================================
சிறுகொம்பில் தொங்கும் பெரும்பலாவைப் போல
சிறுஉயிரில் தூங்குகின்ற காமம் பெரிதே!
அறிந்துகொள்! வந்து மனந்துகொள்! என்றே
அறிவுரையைத் தோழிசொன்னாள்! அங்கு.
--------------------------------------------------------------



21.யான் தேறேன்--பாடியவர்:ஓதலாந் தையார்
======================================================
பாடல்:வண்டுபடத் ததைந்த கொடியஇணர் இடையிடுப
===========================================================
கொன்றை மலர்பூத்த காலந்தான் கார்காலம்
என்றேதான் சொன்னாலும் நம்பமாட்டேன்!-- என்தலைவன்
பொய்சொல்லும் நெஞ்சினன் அல்லவே!கார்காலம்
மெய்யல்ல!ஏற்கமாட்டேன் !போ.

25. குருகும் உண்டு -- பாடியவர்:கபிலர்
============================================
பாடல்:யாரும் இல்லை;தானே களவன்;....
--------------------------------------------------------------நானும் அவரும் களவில் திளைத்திருந்தோம் !
நானோ விரைந்துவந்தே உன்னை மணம்புரிவேன்
மானே! எனச்சொன்னார்!மாறுவாரோ?சாட்சியிங்கே
மீன்பிடிக்கும் நாரைமட்டும் தான்.

28.அறியாது துஞ்சும் ஊர் --பாடியவர்:அவ்வையார்
=======================================================
பாடல்:முட்டு வேன்கொல்? தாக்கு வேன்கொல்?....
--------------------------------------------------------------
என்காம நோயை எவரும் அறியாமல்
நன்றாய் உறங்குகின்றார்!எப்படிச் சொல்வேனோ?
என்தோழி!முட்டுவேனோ?தாக்குவேனோ?கூவுவேனோ?
என்செய்வேன்?நானறியேன்!பார்.








30.யான் அளியேன் --பாடியவர்:கச்சிப்பேட்டு நன்னாகையார்
==================================================================
பாடல்:கேட்டிசின் வாழி - தோழி! - அல்கல்,.....
----------------------------------------------------------------------------------------------------------------------
சொன்னதுபோல் அன்பர் வரவில்லை!ஆனாலும்
என்னைத் தழுவுதல்போல் நானோ கனவுகண்டேன்!
கண்மயக்கம் நீக்கிப் படுக்கையைத் தொட்டபோது
நன்குணர்ந்தேன் என்தனிமைத் தீ.

35. கண் நாணில(பாடியவர்:கழார்க்கீரன் எயிற்றி )
====================================================
பாடல்:நாண்இல மன்ற , எம் கண்ணே -- நாள்நேர்பு,.....
--------------------------------------------------------------------------------------------------
அன்பர் பிரிந்துசென்ற நாளில் இணங்கிய
கண்களோ, இந்தக் குளிர்ப்பருவந் தன்னிலே
இன்னும் வரவில்லை என்றே அழுகிறதே!
கண்களுக்கோ நாணமில்லை ! பார்.

40. நெஞ்சம் கலந்தன!பாடியவர்:செம்புலப் பெயனீரார்)
=========================================================.
பாடல்: யாயும் ஞாயும் யாரா கியரோ?
--------------------------------------------------------------
நம்முடைய பெற்றோர்கள் எவ்வகையில் சொந்தமாவார்?
கண்மணியே!நானிங்கே நீயிங்கே எப்படி
ஒன்றுபட்டோம்? செம்மண்ணில் நீர்கலந்த தன்மைபோல்
நெஞ்சங்கள் ஒன்றின! பார்.






43. இருபேர் ஆண்மை!(பாடியவர்:அவ்வையார் )
==================================================
பாடல்:'செய்வார் அல்லர்' என்று யான் இகழ்ந் தனனே;....
--------------------------------------------------------------
பிரிவதை எண்ணமாட்டார் என்றேதான் நானும்
பிரிவதைத் தாங்கமாட்டேன் என்றே அவரும்
இருநிலைப் போரில் இதயங்கள் சோர்ந்தே
வருந்தினோம் கண்மூடிக் கொண்டு.

ஒருவரை மட்டுமே நல்லபாம்புத் தீண்டிச்
சுருக்கென்று கவ்வினாற்போல் என்னுடைய நெஞ்சம்
பெருக்கெடுக்கும் துன்பத்தில் தோய்ந்து கலங்கும்
ஒருநிலை பெற்றதேன்? சொல்.


44.பிறர் பலரே (பாடியவர்:வெள்ளி வீதியார்)
===================================================
பாடல்:காலே பரிதப் பினவே; கண்ணே ..........
--------------------------------------------------------------
கால்களும் ஓய்ந்தன!கண்களும் சோர்ந்தன!
ஊர்ந்திடும் விண்மீன்கள் எண்களைக் காட்டிலும்
பாரிலே ஆடவர்கள் உள்ளனர்!காதலர்
யாரெனத் தேடுவேன்?சொல்.

49.பிரியாத பேருறவு (பாடியவர்:அம்மூவனார்)
===================================================
பாடல்:அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து ..............
--------------------------------------------------------------
காரன்னம் கூடும் கடற்கரை நாடனே!
தூயதான இப்பிறவி போயும் மறுபிறவி
தாளவிழும் போதும் உனக்கு மனைவியாகும்
வாழ்வே எனக்குவேண்டும்! ஆம்.
---------------------------------------------------------------------------------------------------------

58.நோன்று கொளற்கு அரிது (பாடலாசிரியர்:வெள்ளி வீதியார் )
=================================================================
பாடல்:இடிக்கும் கேளிர்!நும்குறை ஆகம் .......
==================================================================
என்னை இடித்துரைக்கும் போக்குள்ள மாந்தரே
என்னுடம்போ காமநோய் தாக்கி அழிவதற்கு
முன்பாக அந்த அழிவைத் தடுத்திடுங்கள்!
நன்மை அதுவொன்றே யாம்.

கதிரவன் சூட்டிலே பாறையில் வெண்ணெய்
தகித்தே உருகுவதைக் கையில்லா ஊமை
துடிப்புடனே பார்ப்பதுபோல் என்னுயிரைக் காமம்
நசிப்பதைக் காத்தல் அரிது.

மதுரை பாபாராஜ்


60. காண்டலும் இனிதே (பாடலாசிரியர்:பரணர் )
===================================================
பாடல்:குருந்தாட் கூதளி ஆடிய நெடுவரைப் ...........
=====================================================
தேன்கூட்டைக் கண்டு முடவனோ உள்ளங்கை
ஏந்திக் குவியவைத்துக் கூடிற்குக் கீழ்வைத்தே
ஏங்கித்தான் நக்குவான் ! என்னவனைக் காண்பதொன்றே
மான்விழிக்கும் இன்பமாகும் இங்கு.

மதுரை பாபாராஜ்









67.நினையாரோ (பாடலாசிரியர்:அள்ளுர் நன்முல்லை)
============================================================
பாடல்:உள்ளார் கொல்லோ -- தோழி! -- கிள்ளை....
===========================================================
பெண்ணணியாம் பொற்காசு மாலையின் நூலிங்கே
நைந்ததும் புத்தம் புதுநூலை மாற்றுவர்!
அந்நிலையில் மாதரின் நகமோ கிளிமூக்காய்
அங்கிருக்க பொற்காசு வேப்பம பழம்போல
கண்களுக்குத் தோன்றுமாம்!நம்தலைவர் காட்டிலே
கண்கவர் பச்சைக் கிளிமூக்கில் அப்பழத்தைக்
கண்டவுடன் நம்நினைவு தோன்றாதோ?என்தோழி!
என்றேதான் கேட்கின்றாள் பார்.

மதுரை பாபாராஜ்

Tuesday, February 23, 2010

நம்பிக்கையே நிம்மதி

========================
உள்ளங்கள் எண்ணுவதைக் கண்டறியும் வாய்ப்புவகை
எள்ளளவும் இங்கில்லை! ஆகவேதான் நிம்மதி!
சொல்வதை நம்புகின்றோம்!இல்லையேல் நாள்தோறும்
முள்ளுறுத்தும் வேதனைதான் சொல்.

செம்மை மாதர்!

=========================
படிதாண்டாப் பத்தினி என்றநிலை மாறி
படிதாண்டா விட்டாலோ பட்டினிதான் என்றே
படிதாண்டிச் சென்றபோதும் பத்தினியாய் வாழும்
நெறிமுறையை ஏற்றார் விழைந்து.

மதுரை பாபாராஜ்

Sunday, February 21, 2010

கடையனின் நிலை!

---------------------------------------
இடைவெளி விட்டே இடிமழை என்றால்
தடைகளைத் தாண்டிப் பயணம் தொடரும்!
இடைவெளி இன்றிப் புயல்மழை என்றால்
கடையனுக்குத் தேற்றமுண்டோ ?சொல்.

பாதிப்பு!

--------------
உலுக்கும் நிகழ்வுகள் உள்ளத்தைத் தாக்கிக்
கலக்கத்தைத் தந்தால் மனிதன் -- நிலைகுலைந்து
தள்ளாடி சோர்விழந்து வெற்றிடத்தைப் பார்த்தேதான்
தள்ளுவான் காலத்தை! சாற்று.

மதுரை பாபாராஜ்

நதிகள் கலக்கும் கடல்

=======================
பருவங்கள் என்னும் நதிகள் அனைத்தும்
ஒருவாறாய் இன்பத்தில் துன்பத்தில் நாளும்
புரண்டுப் புரண்டு கலக்கும் கடலே
தளரும் முதுமை! உணர்.

மொழிக்கலப்பு

===============================================
கரு:அறிஞர் அண்ணாவின் கருத்து
================================================
பெண்கள் விழிகளுக்கு மைதீட்டும் சிற்றளவில்
வண்டமி ழோடு வடமொழிச் சொற்களோ
வந்து கலந்தால் துயரில்லை! மீறினால்
செந்தமிழைத் தேடவேண்டும் செப்பு.

--மதுரை பாபாராஜ்

Thursday, February 18, 2010

கடையேழு வள்ளல்கள்

===========================
நற்றமிழின் சொல்லெடுத்துக் கவிதை யாத்து
நல்லாட்சி வேந்தரவர் குணந லன்கள்
முற்றத்து நிலவொளியாய் மிளிரும் வண்ணம்
முறையாக எழுதிவைத்தார் புலவர் மக்கள்!

கொடைமடத்தில் சிறந்தவனாம் அதிய மானின்
கொடைப்புகழோ நிலைக்கின்ற வண்ணம் அவ்வை
தடையின்றி அருநெல்லிக் கனியைத் தந்தாள் !
தமிழவ்வை இங்குவாழ வேண்டும் என்றே
படையரசன் அக்கனியைத் திருப்பித் தந்தான்!
பண்பினிலே சிகரமாக உயர்ந்து நின்றான்!
மிடுக்குடனே முதற்சிலையாய் புகழைப் பெற்றான்!
மேதினியே போற்றுதடா என்றும்!என்றும்!

நெடும்படைபோல் பாணர்கள் வந்த போதும்
நெஞ்சாரக் கொடைஈந்து உயர்ந்து நின்றான்!
உடும்பொன்றின் உடல்தைத்து , அதற்குப் பின்பு
உரல்போன்ற தலையுடைய பன்றி தைத்து,
அடுத்தங்கு புள்ளிமான் ஒன்றைத் தைத்து ,
அஞ்சுதற்கு அரியபெரும் புலியைத் தைத்து,
நெடுமலையை யொத்தவேழம் தன்னைச் சாய்த்து
நிமிர்ந்தவல்வில் ஓரிஎன்பான் சிலையிரண்டு!

வாட்டுகின்ற கடும்வறுமை மறையும் வண்ணம்
வாரிவாரி வழங்கிநின்றான்! பாணர்,மற்றும்
பாட்டியற்றிக் களித்துநின்ற புலவர் கட்கும்
பரந்தமன அன்பிற்கும் வள்ளன் மைக்கும்
கூட்டுறவுத் தலைவனென உரைக்கும் வண்ணம்
குளிரடிக்கும் மயிலுக்கே என்றே எண்ணி
போட்டிருந்த பொன்னாடை தன்னைப் போர்த்தி
புனிதபேகன் உயர்ந்துநின்றான் சிலைமூன் றாக!

மலர்ந்தாடும் சோலைஎன்றும், மணற்பரப்பு
மலைபோலக் குவிந்திருக்கும் பாலை என்றும்
நிலந்தழுவும் மழைஇங்கே பார்ப்பதில்லை!
நெடுங்கடைக்கண் வந்துநிற்கும் பாணர் மற்றும்
புலவர்கள்,விறலியர்கள் மகிழும் வண்ணம்
பொன்பொருளைப் பேதமின்றி மழையைப் போல
வளங்கொழிக்க ஈந்ததாலே வள்ள லான
மாப்புகழ்க் காரியவன் சிலையோ நான்கு!


கனிகுலுங்கும் மரம்நாடிப் புள்ளி னங்கள்
களிப்புடனே செல்லுதல்போல் மாவே ளாயின்
தனிச்சிறப்பாம் கொடைச்சிறப்பை அறிந்து வந்தோர்
தழுவிநிற்கும் வறுமையைக் களையும் வண்ணம்
கனிவுடனே பொருட்களுடன் வேழம் ஈந்து
கடையேழு வள்ளலிலே ஒருவன் ஆனான்!
கனிமனத்தோன் நீலநாகம் நல்கி நின்ற
கலிங்கத்தை உவந்தளித்தான்! சிலையோ ஐந்து!

படுந்துயரை எடுத்துரைக்கும் முன்னுணர்ந்து
படரிருளை நீக்குகின்ற கதிரைப் போல
கொடுத்திட்டான் செல்வத்தை அள்ளி அள்ளி!
கொற்றவனைச் சார்ந்திருந்த பாண ரெல்லாம்
சுடுவறுமைப் பிடியவிழ்ந்து இருந்த தாலே
தோன்றுகின்ற பொழுதுக்கு ஏற்ற வண்ணம்
தொடுக்கின்ற பண்மறந்தார்! வள்ளன்மையின்
தூயமன நள்ளியவன் சிலையோ ஆறு!

வாடிநின்ற பாணரகம் மலரும் வண்ணம்
மகிழ்ச்சியுடன் ஈந்துவந்து வாழ்ந்தி ருந்தான்!
தேடித்தான் தவழ்ந்ததம்மா கொழுகொம் பொன்றைத்
தேனமுத வெண்முல்லைக் கொடிதான் அங்கே!
நாடித்தான் தேரோடு விரைந்தானம்மா!
நளினமாக நிறுத்தியேதான் கொடியைத் தாங்கி
பாடிவீடு சமைப்பவனோ தேரின் மீது
படரவிட்டான்! பாரியவன் சிலையோ ஏழு!

கடையேழு வள்ளல்கள் போர்க்களத்தில்
கணைபட்டு வீழ்ந்துபட்ட நிலையறிந்தால்
மடைதிறந்த வெள்ளம்போல் துயரம் நெஞ்சில்
வழிந்தோடி துடிக்கவைக்கும் நிலையைப் பெற்றேன்!

-- மதுரை பாபாராஜ்

Friday, February 12, 2010

நாவும் பெண்ணினமும்!

நாவும் பெண்ணினமும்!
========================
முப்பத்து இரண்டு முனைப்பற்கள் மத்தியில்
எப்பொழுது என்னநேரும் என்றேதான் நாள்தோறும்
தத்தளிக்கும் நாவைப்போல் பெண்ணினமும் இவ்வுலகில்
தத்தளித்து வாழ்கிறது சாற்று.

--- மதுரை பாபாராஜ்

கரு:பட்டிமன்ற நாவலர் லியோனி அவர்களின் கருத்துரை

ஒழுக்கத்தைப் பேண்!

==========================
ஒழுக்கம், உணர்வில் கல்ந்து நிலைத்தால்
சலனம் நெருங்கிடவும் அஞ்சும்--ஒழுக்கம்
உணர்ச்சியைப் போலவே தோன்றி மறைந்தால்
குணமிழந்து நாணவைக்கும்! கூறு.

--- மதுரை பாபாராஜ்

வீட்டுக்கு வேர்!

=================
ஆமை, முதுகிலே கூட்டைச் சுமப்பதுபோல்
பூமகள் எங்குசென்ற போதிலும் -- ஆமைபோல்
வீட்டுக் கடமைகளை எண்ணிச் சுமந்திருப்பாள் !
வீட்டுக் கவள்தானே வேர்.

-- மதுரை பாபாராஜ்