Saturday, October 31, 2015

பெருமிதம்!
--------------------------
முயற்சிகள் வெற்றி யடைந்து புகழின்
கரவொலி கேட்கின்ற நேரத்தில் அன்று
கலங்கித் தவித்த தடைகள் மறந்து
மலரும் பெருமிதப் பூ.

வேடதாரி!
------------------------
மறதி ! இயற்கைதான் ! எல்லையும் உண்டு!
மறதியை இங்கே தொழிலாக மாற்றி
குடங்குட மாகத்தான் பொய்களைச் சொல்லி
நடப்பவர் வேடதாரி தான்.

Wednesday, October 28, 2015

குளிர்காய்தல்!
----------------------------
நெருங்கிப் பழகு நெருடல் புரியும்!
நெருடல் புரிந்தால் விலகிப் பழகு!
நெருப்பில் குளிர்காய்தல் போலப் பழகு!
நெருஞ்சியாய்க் குத்தாது வாழ்வு.

நேர்வழியே நிம்மதி!
---------------------------------------------------------
நேர்வழியில் வாழ்ந்திருந்தால் முன்னேற்றம் தாமதமாய்
வாரி அணைத்தாலும் தாயின் அரவணைப்பைப்
போலிங்கே நிம்மதிதான்! ஆனால் குறுக்குவழி
மூர்க்கத் தனத்தால் திரண்டுவரும் முன்னேற்றம்
ஊர்மெச்ச வந்தாலும் நோயின்  அரவணைப்பைப்
போல்தான் பதறவைக்கும் பார்.

வீடு
-----------------
அன்று! பரபரப்பாய் மங்கலமாய் நாள்தோறும்
வந்தவர்கள் சென்றவர்கள் என்றே விருந்தினர்கள்
கொண்டாடிக் கண்குளிர வாழ்ந்திருக்கக் கண்டவீடோ
இன்று தரைமட்டந் தான்.

தரைமட்ட மானவீட்டை மீண்டுமிங்கே கட்டிக்
கலைவண்ணம் கண்கவரப் பூசிடுவார் நாளை!
களைகட்ட வேறொருவர் வாங்கித்தான் வாழ்வார்!
சுழற்சிப் பிடியில்தான் சொத்து.

Saturday, October 24, 2015

தாய்ப்பால் ஞானப்பால்!
-----------------------------------------------
தாய்ப்பால் கொடுக்கின்ற நேரம் மடிமீது
தாய்முகத்தைச் சேய்பார்க்கும் ஆர்வமுடன்! சேய்தலையை
தாயங்கே கோதிவிட்டே அன்பைப் பொழிந்திருப்பாள்!
தாய்ப்பால் மகிமையைப் பார்.

நினைவில் நிற்கும்
மதுரை மில் சங்கொலி!
----------------------------------------------
ஆலையின் சங்கொலி மாமதுரை ஊர்முழுதும்
வேளை தவறாமல் கேட்டிருப்போம்!வீடுகளில்
நேரத்தைச் சங்கொலி கேட்டேதான் மாற்றுவோம்!
காலத்தின் மாற்றத்தால் பேரிரைச்சல் ஓலத்தில்
ஆலையின் சங்கொலி போச்சு.

பேராசை
-----------------------
நாள்தோறும் பொன்முட்டை போடுகின்ற வாத்துக்குள்
பார்த்தால் சுரங்கம் இருக்குமென்ற பேராசை
ஆர்வத்தைத் தூண்டிவிட வாத்தையே வெட்டிவிட்டான்!
பேராசை கொண்டான்! இழந்தான் இருந்ததையும்!
காலம் நகைத்தது காண்.

கடிதோச்சி மெல்ல....குழந்தையை
------------------------------------------------------------------
அடிப்பது போல அருகிலே சென்று
அடிப்பாரோ என்றே நடுங்கிடும் நேரம்
அடிக்காமல் விட்டுவிட்டுச் செல்லமாய்த் தட்டும்
நெறியால் திருந்துவார் நம்பு.

பதர்!
--------------
அடிபட்டுச்  சாலையில்  கீழே விழுந்து
துடிக்கின்ற நேரம் கிடைத்த பொருளை
வெறியுடன்  இங்கே எடுத்தே திருடும்
நெறிகெட்டோர் !அற்பப் பதர்.

கொலு
-----------------
பொம்மை அணிவகுப்பைப் பார்த்தால் பரவசத்தில்
இங்கே குழந்தையாய் மாறி வியப்புடன்
நெஞ்சம் குறுகுறுக்க கண்கள் ரசித்திருக்கும்!
பொம்மைகள் என்றால் களிப்பு.

இல்லற அமைப்பு!
-----------------------------------------
ஆல மரமிங்கே ஊன்றிக் கிளைவிட்டுக்
காலமாற்றப் போக்கில் கிளைகள் விழுதுவிட்டுக்
காலூன்றி ஆலமரத்தைத் தாங்கிப் படர்ந்திருக்கும்
கோலமே இல்லறம் பார்.

வேறு வழி?
-------------------------
விலைவாசி ஏற்றமோ விண்முட்ட நிற்கும்
மலைச்சிகரம் போல உயர்வதைப் பார்த்து
மலைக்கின்றார் மக்கள்! முணுமுணுத்தே வாழும்
நிலையிலே வாழ்கின்றார் பார்.

மனைவி வசந்தாவுக்கு
பிறந்தநாள் வாழ்த்து
          17.10.2015
-----------------------------------------+---------
இல்லறப் பண்புகளை வாழ்வில் கடைப்பிடித்து
நல்லறங்கள் நாள்தோறும் சூழ உறவினர்கள்
உள்ளம் மகிழ விருந்தோம்பல் பண்பகமாய்
இவ்வுலகில் வாழ்கின்றாய்! வள்ளுவம் போற்றவே
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீ.

மனவாசம்--வனவாசம்!
-------------------------------------------------
கணவன் மனைவி குழந்தைகள் சேர்ந்து
மனமொன்றி வாழும் அமைப்பே குடும்பம்!
மனவாசம் செய்யும் குடும்பத்தை விட்டு
வனவாசம் செய்வதா நன்று?

திருந்துவாரா?
----------------------------------
நற்கருத்தைச் சொல்லும் திருக்குறளைப் போற்றுகின்றோம்!
துப்பாக்கி வீச்சருவா வேல்கம்பு சுற்றிநின்று
வெட்டிக் கொலைசெய்யும் காட்சி திரைப்படத்தில்
அப்படியே காட்டுகின்றார்! பிஞ்சு மனங்களில்
நற்கருத்தா  ஊறும்? உரை.

கிட்டப்பார்வை!
-----------------------------------
எட்டநின்று பார்த்திருந்தால் எல்லாம் குளிர்ச்சிதான்!
கிட்டப்போய் பார்த்தால்தான் பண்புகளின் மாறாட்டம்!
இப்படியா!இவ்வளவா?என்றே வியக்கவைக்கும்!
இப்படித்தான் உண்மை உரு.

தாயின்  வலிமை!
--------------------------------------
தாயின் அணுகுமுறை ஆக்கபூர்வ சக்தியானால்
சேயின் மனநிலை மாறிவிடும்! தாழ்வுமனம்
போய்விடும்! புத்துணர்ச்சி உண்டாகும்! சாதனை
நாயகனாய் மாறிடுவான் சேய்.

Saturday, October 10, 2015

உச்சம்
Thousands of scorpions
Gnawing at my heart
--Shakespeare
Macbeth
--------------------------
ஆயிரம் தேளினம் நெஞ்சை உலுக்கினால்
ஏழிசை மீட்டவா?வீணை நரம்புகள்
கூவி முரண்பட்டுத் தானே அறுந்துவிடும்!
பாவியின்கோலத்தைப் பார்.

சுட்ட வடு!
-------------------------
பட்டாசைப் பற்றவைத்துச் சாலையிலே வீசுதல்போல்
நற்றமிழே! புண்படுத்தும் சொற்களை உள்ளத்தில்
சட்டென்று வீசிவிட்டுச் செல்கின்றார்! நோகவைத்துப்
பற்றி எரிகிறது பார்.

சிக்கலுக்குள் சிக்கல்!
-------------------------------------------
சிலந்திவலைச் சிக்கலுடன் நூல்கண்டு சிக்கல்
கலந்து கலங்கடிக்கும் வாழ்க்கையின் போக்கில்
தளரவைக்கும் சூழ்நிலைச் சிக்கலும் சேர்ந்தால்
குழப்பங்கள் கூத்தாடும்! கூறு.

குழந்தை மனம் பெறுவோம்!
-------------------------------------------------------
குழந்தையை நாள்தோறும் பெற்றோர்கள் ஏசும்
குழந்தைத் தனங்களை விட்டுவிட்டு நாளும்
குழந்தை மனம்பெற்றால் இல்லறத்தில் இன்பம்
தழைக்கும் நிலைக்கும் உணர்.

இதுவா பண்பு?
----------------+-------------
SADDIST
--------------------------------
மற்றவர்கள் துன்பத்தில் இன்பத்தைக் காண்பவர்கள்
அற்பத் தனமான ஆணவத்தைக் கொண்டவர்கள்!
பித்தர்கள்! ஈனமனக் கூத்தை ரசிப்பவர்கள்!
புற்றரவம் எவ்வளவோ மேல்.

திரும்பிப்பார்த்தால்
-------------------------------------
விளிம்பிலே நின்று திரும்பித்தான் பார்த்தால்
நெளிவு சுழிவுடன் ஒற்றையடிப் பாதை தெளிவற்ற கோலம்!
இழுத்தேன் பெருமூச்சு! இப்படியா வந்தோம்?
தொழுதேன் மலைத்தேன் திகைத்து.

பொம்மலாட்டம்!
------------------------------------
மனிதர்கள் பொம்மலாட்ட பொம்மைகள்! நூலின்
முனையைப் பிடித்திழுத்தே ஆடவைத்துப் பார்க்கும்
வினையை முடுக்குவோன் எங்கிருந்தோ ஆட்ட
மனைதோறும் ஆடுகின்றோம் நாம்.

ஆசைக் கதவுகளை மூடு!
-----------------------------------------------
வீட்டுக் கதவுகளை மூடுகின்ற மாந்தர்கள்
கூட்டுக்குள் ஆசைக் கதவுகளை மூடாமல்
நாட்டில் அலைகின்ற வாழ்க்கையால் நிம்மதி
போச்சென்றே தேடுகின்றார் பார்.

பள்ளிமணி காலையில் நாராசம் காதுக்கு!
தள்ளாடி அய்யோ எரிச்சலுடன் வந்துசேர்வார்!
பள்ளிமணி மாலையில் தேனருவி காதுக்கு!
துள்ளிச் சுறுசுறுப்பாய் ஓடுவார் வீடுநோக்கி!
பள்ளிமணி வேறுபாட்டைப் பார்.

மொழியாக்கம்
மதுரை பாபாராஜ்

மனிதமிருகம்!
----------------------------
தனிமனித நல்லொழுக்கம் தங்கித் தழைக்கும்
மனிதனை எல்லா உயிரினமும் போற்றும்!
மனிதன் தறிகெட்டுப் போய்விட்டால் அந்த
மனிதன் விலங்கினும் கீழ்

அண்ணலை வணங்குவோம்
----------------------
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்! குறள்கருத்தைத்
தன்மூச்சாய்ப் பின்பற்றி வாழ்ந்திருந்தார் காந்தியண்ணல்!
என்றும் வணங்குவோம் நினைந்து.

சுண்டலோ சுண்டல்!
------------------------------------------
மாங்காயைத் துண்டாய் நறுக்கி, துண்டுகளைத்
தேங்காய்த் துருவலில் சேர்த்தேதான் சுண்டலையும்
ஆங்காங்கே பச்சைக் கருவேப் பிலையிணுக்கத்
தூவி கடற்கரையில் விற்கின்றார்! ஆர்வமுடன்
கூவியே !நாள்தோறும் தான்.

நிறுவன இலக்குகள்!
------------------------------------------
இலக்குகளுக் கேற்ப அளவுகள் தந்தால்
இலக்குகளைச் சாதிக்க வாய்ப்பிருக்கும்!ஆனால்
அளவுச் சுமையை அதிகரித்துத் தந்தால்
இலக்குகள் எட்டாக் கனி.