Thursday, May 17, 2018



சீரும் தங்கையும்

சீர்கொண்டு வந்தால்தான் தங்கையென்றார்! ஏழேழு
சீர்களாக நானும் குறள்சீரைத் தந்துவந்தேன்!
சீரும் சிறப்புடனும் வாழ்கவென்றே வாழ்த்தினேன்!
சீரேற்றாள் தங்கை படித்து.


அன்னையர் நாள் வாழ்த்து!

13.05.18

தியாகமென்ற சொல்லுக்கு வேர்ச்சொல்லே அன்னை!
தியாகமென்றால் என்னவென்று தியாகமென்ற சொல்லே
தியாகத்தை அன்னை யிடமிருந்து கற்ற
தியாகத் திருஉரு தாய்.

என்னதுமில்லை! உன்னதுமில்லை!

என்னது!உன்னது!என்றெல்லாம் சண்டையிட்டே
வன்பகையாயச் சேர்த்ததெல்லாம் வெள்ளத்தில் போனபோது
என்னதும் உன்னதும் ஒன்றாகி எங்கெங்கோ
கண்டபடி மாறியதே! என்னதும் உன்னதும்
எங்கென்று சொல்வாயா கூறு.

Sunday, May 13, 2018



இன்னா நாற்பது

ஆசிரியர் கபிலர்

பாடல் 5

சிறை இல் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா;
உறை சோர் பழங் கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா;
முறை இன்றி ஆளும் அரசு இன்னா; இன்னா,
மறை இன்றிச் செய்யும் வினை.
-------------------------------------------------------------------------------------------------------------------
காக்கின்ற வேலியின்றிக் கன்னல் பயிரினத்தைக்
காப்பது துன்பமாகும்! வான்மழை வீட்டுக்குள்
ஊற்றுமாறு கூரை இருக்கின்ற வீட்டிலே
வாழ்தலோ துன்பமாகும்! நீதி மறந்தேதான்
ஆட்சி நடந்தால் அத்தகைய ஆட்சியோ
நாட்டுக்கே துன்பமாகும்! சூழ்ச்சி வலைபின்னும்
கூட்டுச் சதிச்செயல்கள் துன்பமாகும்! மக்களைத்
தாக்கினால் துன்பமயம் நாடு.

இன்னா நாற்பது

ஆசிரியர் கபிலர்


பாடல்: 04

எருது இல் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா
;கருவிகள் மாறிப் புறங்கொடுத்தல் இன்னா;
திருவுடையாரைச் செறல் இன்னா; இன்னா,
பெரு வலியார்க்கு இன்னா செயல்.
------------------------------------------------------------------------------------
எருதின்றி வாடும் உழவரிடம் உள்ள
நிலத்திலே ஈரம் இருந்தாலும் அந்த
நிலத்தால் பயனில்லை,துன்பமே! போரில்
கருவிகளை விட்டுவிட்டுத் தோல்வியால் ஓடும்
ஒருநிலை துன்பமே! செல்வந்த ரோடு
சுருக்கென்று கோபம் அடைதலோ துன்பம்!
கருத்தும் திறமையும் உள்ளவர்க்குத் தீங்கு
தருவது துன்பம் தரும்.

இன்னா நாற்பது

ஆசிரியர் கபிலர்

பாடல் 3
கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;
நெடுநீர்ப் புணை இன்றி நீந்துதல் இன்னா;
கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா
,தடுமாறி வாழ்தல் உயிர்க்கு.
------------------------------------------------------------------------
கொடுங்கோல் அரசன் குடிமக்க ளாக
உறுத்தலுடன் வாழ்வது துன்பம்! தெப்பம்
உறுதுணை யாயின்றி ஆழியை நீந்தும்
படுதுணிச்சல் துன்பம்! புண்படுத்தும் வன்சொல்
தொடுப்போர் தொடர்பிங்கே துன்பம்! அலைபோல்
தடுமாறும் உள்ளம் துன்ப மயந்தான்!
தடுமாற்றம் துன்பத்தின் ஊற்று.

இன்னா நாற்பது

ஆசிரியர் கபிலர்

பாடல் 2

பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;
ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;
பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா
காப்பு ஆற்றா வேந்தன் உலகு.
---------------------------------------------------------------------------------------------
தவமேற்போர் கூடத்தில் கோழியும் நாயும்
இரைச்சலைக் கூட்டுவதால் துன்பமாகும்! இல்லாள்
அவையடக்கம்  இன்றிக்  கணவனின் சொல்லைப்
புவியிலே மீறுதல் துன்பந்தான்! மாதர்
பகுப்பற்ற  கோலப் புடவை அணிதல்
கொடுப்பது துன்பந்தான்! காப்பதற்கு வேந்தன்
உறுதுணை யற்றநாடு  துன்பந்தான்! இஃதை
நடுநிலை கொண்டுணர்ந்தால் நன்று.

இன்னா நாற்பது

ஆசிரியர் கபிலர்

பாடல் 1

பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா;
தந்தை இல்லாத  அழகு இன்னா;
அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா;
 ஆங்கு இன்னா,மந்திரம் வாயா விடின்.
-------------------------------------------------------------------------------
சுற்றமற்ற வீட்டின் அழகெல்லாம் துன்பந்தான்!
உற்றதுணை தந்தையற்ற மைந்தன் அழகிங்கே
எப்பொழுதும் துன்பம்! எதிர்நீச்சல் வாழ்வாகும்!
முற்றும் துறந்த துறவோரின் இல்லத்தில்
நற்றமிழே! உண்டு களிப்பதோ துன்பந்தான்!
உச்சரிக்கும் மந்திரங்கள் நன்மை தராவிடில்
எக்கணமும் துன்பந்தான் சொல்.

Saturday, May 12, 2018



இனியவை நாற்பது நிறைவு

பாடல் 40

பத்துக் கொடுத்தும், பதி இருந்து, வாழ்வு இனிதே;
வித்துக் குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே;
பற்பல நாளும் பழுது இன்றிப் பாங்கு உடைய
கற்றலின் காழ் இனியது இல்.
-----------------------------------------------------------------------------------------
பத்துப் பொருள்கொடுத் தேனும் உறவூரில்
பற்றுடன் வாழ்தல் இனிதே! விதைநெல்லை
சுற்றி விதைத்துண்ண உள்ளதை  உண்ணாமல்
பற்றைத் தவிர்த்தல் இனிதாகும்! நாள்தோறும்
கற்றுத் தெளிய பயன்தரும் நூல்களைக்
கற்பதுபோல்  நற்செயல் ஏந்தும் இனிமைக்குச்
சற்றும் நிகரில்லை வேறு.


பாடல் 39

பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இனிதே;
துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே;
உற்ற பொலிசை கருதி, அறன் ஒரூஉம்
ஒற்கம் இலாமை இனிது.
------------------------------------------------------------------------------------------
பிச்சை எடுத்துண்போர்  கோபம் அடையாமல்
முற்றும் அமைதியாய் வாழ்தல் இனிதாகும்!
கொட்டித் துடிக்கவைக்கும் துன்பம் சுழன்றாலும்
சற்றும் எவரிடமும் சொல்லாத பண்பினிது!
அட்டியின்றி பேராசைத் தூண்டினாலும் நேர்வழியை
விட்டு விடாமல் அறவழி நீங்காமல்
குற்றமின்றி வாழ்தல் இனிது




பாடல் 38

சிற்றாள் உடையான் படைக்கல மாண்பு இனிதே
;நட்டார் உடையான் பகை ஆண்மை முன் இனிதே
;எத்துணையும் ஆற்ற இனிது என்ப, பால் படும்
கற்றா உடையான் விருந்து. 38
---------------------------------------------------------------------------------------------
ஆயுதம் ஏந்தும் இளைஞர் படையினிது!
ஆல மரம்போன்ற சுற்றத்தைக் கொண்டோரின்
வேல்நிகர்த்த வன்பகை நீக்குகின்ற மாண்பினிது!
ஆவுடன் கன்றுள்ளோன் வீட்டு விருந்தினிது!
ஈவிரக்கப் பண்பே தலை.


பாடல் 37

இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே;
கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே;
தட மென் பணைத் தோள் தளிர் இயலாரை
விடம் என்று உணர்தல்.
--------------------------------------------------------------------------------------
துள்ளும் இளமைப் பருவத்தை வாட்டுகின்ற
பொல்லா முதுமையென எண்ணல் இனிதாகும்!
உள்ளத்தால் ஒன்றிவாழும் சுற்றத்தார் இன்சொல்லைத்
துய்த்தல் இனிதாகும்! மூங்கிலொத்த தோள்களும்
அல்லிமலர்  மென்மையும் கொண்ட மகளிரை
கொல்கின்ற நஞ்சாய் உணர்தல்   இனிதாகும்!
எல்லாம் நிலையில்லை இங்கு.



பாடல் 36

அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிதே;
செவ்வியனாய்ச் செற்றுச் சினம் கடிந்து வாழ்வு இனிதே;
கவ்வித் தாம் கொண்டு, தாம் கண்டது காமுற்று,
வவ்வார் விடுதல் இனிது.
---------------------------------------------------------------------------------------------
உள்ளத்தின் மாசாம் அழுக்காறு சொற்களைச்
சொல்லாமல் வாழ்தல் இனிதாம்!சினமென்னும்
பொல்லாத தீய குணத்தைத் தவிர்த்தேதான்
நல்லவராய் வாழ்தல் இனிதாம்! அடுத்தவர்
துய்க்கும் பொருளைப் பறிக்காமல் அப்பொருளை
உள்ளம் மறத்தல் இனிதாகும்! வாழ்க்கையில்
எள்ளளவும் பற்றின்(றி) இரு.



பாடல் 35

ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரிதல் மாண்பு இனிதே;
முன்தான் தெரிந்து முறை செய்தல் முன் இனிதே;
பற்று இலனாய்ப் பல்லுயிர்க்கும் பார்த்து
உற்றுப் பாங்கு அறிதல்
வெற்றி வேல் வேந்தர்க்கு இனிது.
-------------------------------------------------------------------------------
அறிவார்ந்த வேந்தன் ஓரொற்றன் கூறும்
செறிவான செய்தியை வேஏரொரு ஒற்றன்
முடிவுடன் ஆராய்தல் என்றும் இனிது!
நெறிபிறழ்ந்து போகாமல் ஆராய்ந்து பார்த்து
முறைதவறா நீதி வழங்கல் இனிதே! அனைத்தும்
பிறந்தோர் எல்லோரும் என்றும் சமமே!
இதைமனதில் கொண்டு  நடுநிலை யோடு
முறைசெய்தல் நாளும் இனிது.


பாடல் 34

எல்லிப் பொழுது வழங்காமை முன் இனிதே;
சொல்லுங்கால் சோர்வு இன்றிச் சொல்லுதல் மாண்பு இனிதே;
புல்லிக் கொளினும் பொருள் அல்லார் தம் கேண்மை
கொள்ளா விடுதல் இனிது.
-----------------------------------------------------------------------------------------------
தெரியாத ஊர்நோக்கி நாமோ இரவில்
புரிந்ததுபோல்  போகாமல்  உள்ள(து ) இனிது!
தெளிவாகச் சொல்வதை இங்கே மறதி,
துளியுமின்றி சொல்தல் இனிது! கயவர்
வலியவந்து நட்பிழை பின்னுவதை என்றும்
தவிர்த்தலோ வாழ்வில் இனிது.

Wednesday, May 09, 2018


இனியவை நாற்பது 33

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே
தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே
வாய்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர்
தானை தடுத்தல் இனிது. 33

ஊர்மக்கள் இங்கே வெறுக்காத நற்செயலை
ஊரறிய செய்கின்ற ஊக்கம் இனிதாகும்!
சோர்வளிக்கும் சோம்பலின்றி காட்டும் முயற்சிக்குத்
தோள்கொடுக்கும் ஆண்மை இனிதாகும்! வீரமிகு
போர்முனையில்  ஆற்றல் மிளிரும் அரசனுடன்
போரிடும்  வேந்தன் புகழுக்  கினிதாகும்!
பாரிலே நற்புகழை நாட்டு.

இனியவை நாற்பது 32

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

சுற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே
பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே
தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்
பத்திமையிற் பாங்கினியது இல். 32


படித்தவர்கள் கூறும் கருத்தின் பயன்கள்
நெறிப்படுத்தும் பண்போ இனிதாகும்! அன்பின்
துடிப்பின்றி ஆள்பவரின் கீழிங்கே நாளும்
துடிதுடித்து வாழாமை என்றும் இனிதே!
கெடுதிகள் செய்தாலும் அப்படிச் செய்த
கெடுமதி் யாளரிடம் அன்பாய் இருக்கும்
நடுநிலைத் தன்மை இனிது.


மே நாள்  வாழ்த்து!

உழைக்கின்ற வர்க்கம் மகிழ்ச்சியாக  வாழ்ந்தால்
பிழைக்கின்ற வர்க்கம் மகிழ்ச்சியாக வாழும்!
உழைப்போம்! உழைப்பை மதிப்போம் ! உயர்வோம்!
உழைப்பே உலகின் உயிர்.

துப்புரவுத் தொழிலாளரே மேலோர்!

வீட்டுக்குள் நம்குப்பை துர்நாற்றம் வீசினால்
மூக்கைப் பிடித்து நடந்துசெல்வோம்-- கூட்டுகின்றார்
மூக்கைப் பிடிக்காமல் துப்புரவுத் தொண்டர்கள்
நாட்டில் குவிந்திருக்கும் அத்தனைக் குப்பைகளை!
ஆற்றலில் மேலோர் இவர்.