Monday, September 30, 2019



மருமகன் பாலமுரளி--மகள்  உமா-- பேத்திகள் சௌந்தர்யா-- கௌசல்யா
வீட்டுக் கொலு!

அடுக்கடுக்காய் பொம்மைகள் நன்றாய் அடுக்கி
எடுப்பாக வைத்தே வருவோர்கள் பார்க்க
தினந்தோறும் பக்தி மணங்கமழ வாழும்
மனநிலைக்கு வாழ்த்துகள் கூறு.

இல்லறத்தில் நல்லறத்தை நாள்தோறும் போற்றுகின்றார்!
எல்லோரும் தங்கள் கடமைகளைச் செய்தேதான்
இவ்வுலகில் முன்னேறும் கோலத்தில் வாழ்கின்றார்!
பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா

இதயத்துடிப்பும் படியேறுதலும்!

படியேறி வீட்டுக்குள் சென்றால் இதயம்
துடிக்கும் துடிப்பில் களைப்போ தழுவ
உடலோ துவண்டுச் சரிகிறதே! கண்ணே!
நடைதளர வைக்கும் வயது.

மதுரை பாபாராஜ்
09.09.2019


ரகு-- அமுதா-- நான்சி
இல்லத்தில்  கொலு!

30.09.2019

அன்பாய்  அமுதா ரகுவீரன் வாழ்கின்ற
பண்பகத்தில் தாயும் உடனிருக்க பாசமகள்
புன்னைக ஏந்துகின்ற நான்சி மகிழ்ந்திருக்க
கண்கவரும் வண்ணக் கொலுவின் அழகினைக்
கண்டு களிக்கின்றோம்  நாம்.

பிரமாண்ட மாக அழகுசெய்த அம்மன்
அலங்காரம்! ஆகா அருமை! அந்தச்
சிலைக்கு நிகரோ சிலைதான் உணர்வோம்!
கலைமிளிரும் பேரழகு தான்.

பக்தி வரலாறைச் சொல்கின்ற பொம்மைகள்
அக்கறையாய் இங்கே அடுக்கிவைத்த கோலத்தில்
பக்தி ரசமுடன்  அக்காதான் பாடுகின்றார்!
இத்தகைய காட்சியைக் காணக்கண் கோடிவேண்டும்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்
வசந்தா






கோசல் வீட்டுக் கொலு

மருமகன் ராஜ்குமார்-- மகள் பிருந்தா-- 

பேரன் கோசல் வீட்டுக் கொலு!

                29.09.2019

ஆதிகால பொம்மை முதலாக இன்றைய
காஞ்சிநகர் அத்தி வரதரும்  கண்கவர
அங்கே  அணிவகுக்க நன்றாய் அடுக்கிவைத்த
கண்காட்சி நன்றுதான் காண்.

பக்தி மணங்கமழப் பாடினார்  நாட்டமுடன்!
நற்றமிழ்ப் பாட்டில் உலகை மறந்தேதான்
சுற்றமுடன் கேட்டு ரசித்தோம்! செவிக்குணவும்
சிற்றுண்டி நன்கு சுவையாய் வயிற்றுக்கும்
வற்றாத அன்புடன் தந்தார் மகிழ்வுடன்!
முத்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்
வசந்தா

டிக்டிக் திக்திக்!

ஒவ்வொரு வீட்டிலும் காலைப் பொழுதிலே
பள்ளிக்கு வாண்டுகளை நாளும் அனுப்பிடத்
துள்ளிதுள்ளி அம்மாவும் அப்பாவும் சேர்ந்தேதான்
எள்ளளவுச் சோர்வும் உணராமல் பார்க்கின்றார்!
செல்லமே! தூக்கம் கலைந்தே எழுகவென்பார்!
பிள்ளை, துயிலை விலக்க மறுப்பார்!
அள்ளி இழுத்துப் போர்வையால் மூடித்தான்
கள்ளவிழி பார்ப்பார் நடித்து.

பதறி  மணிப்பொறியைப் பார்ப்பார்
வியந்து!
துடிதுடிக்க, நேரமாச்சு! எச்சரிக்கை தந்தும்
மசமச வென்று புறப்படும் பிள்ளை!
இதயமோ டிக்டிக் மணிப்பொறியை திக்திக்
உடன்பார்க்கும் கோலந்தான் சொல்.

எழுப்பி பல்துலக்க வைத்துக், குளிக்கும்
குழந்தைக்கு உடல்துடைத்துச் சீருடை போட்டு
தளராமல் காலுறை காலணிகள் மாட்டி
துவளாமல் சாப்பாடு கட்டிக் கொடுத்து
ஒருவழியாய் பள்ளியின் பேருந்தில் ஏற்றிக்
கரமசைக்கும் காட்சியைக் காண்பார் ரசித்து!
மலையேறும் சாதனை தான்.


மதுரை பாபாராஜ்


 ஆ. முதல். நா. வரை!

ஒன்றும் அறியாத சின்னஞ் சிறுபருவம்
அம்மாவை நம்பிக் கடவுளை நாள்தோறும்
நின்றே வணங்கினேன்! தெய்வக் குழந்தையோ
என்றே எனைப்பார்த்துச் சொன்னார் உறவினர்!
நெஞ்சிலே பக்தித் தளிர்.

ஆத்திகமா? நாத்திகமா? கேள்விக் கணைகளின்
தாக்கம் அணிவகுக்க உள்ளத்தி்ல் வாதங்கள்
மாற்றிமாற்றி என்னைப்  புரட்ட நாத்திகத்தின்
கூற்றை இளம்பருவம் ஏற்றது முன்வந்து!
ஏற்று நடந்தேன் உவந்து.

படிப்பை முடித்துப் பணிக்களம் சென்றேன்!
வெடித்துக் கிளம்பிய வாதங்களை வைத்தேன்!
நதியென ஓடினேன்! எட்டுதிக்கும் சென்றேன்!
விதியை மதிவெல்லும் என்றேன்
விரைந்தே!
அதிரடிப் பேச்சிலே அம்மா அயர்ந்தார்!
எதிரணி தோற்றார் தளர்ந்து.

இல்லறம் ஏற்றேன்! இணையராய் மாறினோம்!
பல்வேறு சூழ்நிலைகள் பந்தாடிப் பார்த்ததே!
நல்லறம் பேண இரண்டு குழந்தைகள்
வெல்லமாய்த் தித்திக்க வாழ்க்கை வளர்ந்தது!
நல்லவை கெட்டவை வாழ்வில் அரங்கேற
உள்ளம் கலங்கிட கொள்கைப் பிடிதளர
எல்லோர்க்கும் நல்லவனாய் நான்.

குழந்தை களுக்கோ உடல்நலச் சிக்கல்
கலங்கிய போது கடவுளை வேண்டு
நலம்கிடைக்கும் என்றேதான் தூண்டிலைப் போட்டார்!
நலம்கிடைத்தால் போதுமென்றே கொள்கையைத் தள்ளி
வலம்வருவார் யாரெனினும் தான்.

கடமை முடித்துப் பணிநிறைவு பெற்றேன்!
உடலின் முதுமைப் பருவ அணைப்பில்
படர்ந்தது பக்குவம்! நானோ உணர்ந்தேன்!
நடப்பவை எல்லாம் நடந்தாகும் வாழ்வில்!
தடுக்க, தவிர்க்க முடியாது வாழ்வில்!
கடமையே தெய்வம்! குடும்பமே கோயில்!
அகவிளக்காய் ஏந்துகிறேன் இன்று.

மதுரை பாபாராஜ்




அப்படியும் இப்படியும்!

வளமான சூழ்நிலையில் அப்படியும் வாழ்வோம்!
வளமற்ற சூழ்நிலையில் இப்படியும்
வாழ்வோம்!
வளவாழ்வில் இப்படித்தான் என்றால் கருமி!
வளமற்ற வாழ்வில் அப்படித்தான் என்றால்
உலகம் நகைக்கும் உணர்.

மதுரை பாபாராஜ்

மணநாள் வாழ்த்துப்பா!

இணையர்:
மதுரை பாபாராஜ் -- வசந்தா

நாள்.

29.05.1975-- 29.05.2019

நாற்பத்து நான்காண்டு காலமாக இல்லறத்தை
ஊற்றெடுத்த பண்புகளால் நாளும் உயர்த்தித்தான்
ஏற்றத்தைத் தந்தவள்! உற்றார் உறவினர்கள்
போற்றும் விருந்தோம்பல் பண்பேந்தும் அன்பரசி!
மாற்றங்கள் ஏமாற்றம் அனைத்திலும் தோள்கொடுத்தாள்!
மாற்றுக் கருத்தைக் கடிதோச்சி மெல்லத்தான்
சாற்றுவாள்! பேசி முடிவெடுப்போம் ஒற்றுமையாய்!
நேற்று தொடங்கியது போல உள்ளதே
நாற்றுநட்ட எங்கள் மணவாழ்க்கை இங்கே!
காற்றாய்ப் பறந்ததே நாற்பத்து நான்காண்டு!
ஏக்கமற்ற வாழ்க்கைத் தொடர்.

மகளும் மருமகனும் பேரனும் வாழ்த்த
மகனும் மருமகளும் பேரன்கள் வாழ்த்த
அகங்குளிர வாழ்கின்றோம் நாள்தோறும் இங்கே!
குறள்வழி வாழ்வோம் இணைந்து.

மதுரை பாபாராஜ்

வாழ்த்தும் இதயங்கள்
ரவி--சுபாதேவி-- சுசாந்த் சிரிராம்
எழிலரசன்-- சத்யபாமா
நோக்கில் அபிசேக்-- வருண் ஆதித்யா


தேவதாஸ்


தேவதாஸ்  ஒரு மனிதநேயக் கவிதை!

வாழ்க்கை நிறைவு 16.02.2019

 தாஸ்! கௌசல்யா தாஸ்!



படித்தாய்! பட்டம் பெற்றாய்!
பல நகரங்களில் காலடிகளைப் பதித்து

சென்னையில் வாழ்க்கையைத் தொடர்ந்தாய்!

பன்முக ஆற்றலுடன் உழைத்தாய்!
கலைத்துறையும் உனக்கு இடமளித்தது.

உறவினர் நண்பர்களின் வேடந்தாங்கலே உன்வீடு.

எங்களுக்குச் சென்னை என்றால்
 நீதான் நினைவில் வருவாய்.
சென்னை முகவரியே நீதான்.!

சென்னையில்

எனக்கு அன்னமிட்ட கைகள்
உன்கையும் கௌசல்யா
அக்காவின் கைகளுமே!

நீ
ஒரு காவியம்!
அன்பின் ஓவியம்!
நீ
இருக்கின்றாய் என்ற
நினைப்பே எனக்குத் தெம்பு!

நீதான்
மனிதநேயம்!
எங்கே சென்றாய்?

அப்படி என்ன அவசரம்?
உன் மூச்சுகூட
கௌசல்யா அக்காவின்
பெயராகத்தானே வந்தது!


நாள்தோறும்
நினைத்து நினைத்துக்
குமுறிக் குமுறி அழுவாயே!.
அவர் சென்று ஓராண்டு
இன்னும் ஆகவில்லை!
அவரைத் தேடி
நீயும் சென்றுவிட்டாய்!

நாங்கள் படியேறி வரும்போது
உன்வீட்டில்
ஒரு சிங்கம் உட்கார்ந்து இருப்பதைப்போல கம்பீரமாக
இருப்பாயே!

என்று நாங்கள்
காண்போம் ?
என்ன செய்ய?
நாங்கள் தாங்கத்தான் வேண்டும்.!
தாங்கிக் கொள்கிறோம்
உன் நினைவுகளைச் சுமந்தபடி!


மதுரை பாபாராஜ்







Sunday, September 29, 2019

கருவேப்பிலை!

வருமானம் வந்தகாலம்  சுற்றிவந்த கோலம்
வருமானம் நின்றகாலம் எட்டித்தான் நின்றார்!
கருவேப் பிலையைச் சமையல் மணக்க
கருத்தாய்ப் பயன்படுத்திப் பின்னே எறியும்
ஒருநிலை கொண்டதே வாழ்வு.

மதுரை பாபாராஜ்

துறவறம்!

அக்கரைக்கு இக்கரை பச்சை!

இல்லறத்தில் சிக்கல்! துறவறம் ஏற்றால்தான்
நல்லதென்றே எண்ணி மனிதன் இல்லறத்தைத்
தள்ளிவைத்தே நிம்மதியைத் தேடியே ஓடுகின்றான்!
எல்லைகளில் மாற்றத்தை ஏற்று.

கமண்டலம் ஏந்தித்தான் காவி உடுத்தி
தனக்கென தாடி சடாமுடி தன்னை
வளர்த்தே  துறவறக் கோலத்தை ஏற்றே
இமயமலை நோக்கிப் பயணத்தில்  போனான்!
மனதில் குடும்ப நினைவு.

நினைவுகளின் தாக்கம் சலனத்தைத் தந்தே
மனதைப் பலநிலையில் அங்கே இழுத்தே
மணித்துளி நாளும் யுகமாக மாற
தனிமையை விட்டே துணைகளை நாடி
பனிமலையில் இங்கே துறவிநிலை விட்டே
அணியணியாய் ஒட்டி உறவாடும் வாழ்வில்
அமைதியைக் காணலாம் என்றான் அவன்தான்!
இமயமோ அக்கரைக்கு இக்கரை பச்சை!
மனமே! உணரென்று கூறிச் சிரிக்க
தனக்குள் நகைத்தான் நடந்து.

மதுரை பாபாராஜ்

நடந்தால் நல்லது!

அமைச்சர்கள் எல்லோரும் கோட்டையில் இல்லை!
இமைப்பொழுதும் சோராமல் மக்களிடம் சென்று
தினையளவுக் குற்றம் குறையெனினும் கேட்டு
வினையாற்றும் கோலத்தைப் பார்.

துறையெல்லாம் ஊழலின்றி வேலைகள்
நாளும்
கறைபடியா கைகளுடன் ஓடோடிச் சென்று
குறித்தநேரம் மக்களைப் பார்த்தே அன்பாய்
நிறைவேற்றும் ஆர்வத்தைப் பார்.

திறப்பு விழாக்களா? ஆட்சியரை வைத்தே
சிறப்பாக அங்கே நடத்துகின்ற கோலம்!
எளிமை சுருக்கம் நிகழ்வின் நடப்பு!
குழப்பமே இல்லா நிலை.

அமைச்சர் வருகைக்கு மாணவர்கள் மக்கள்
குமுறியே காத்திருக்க வேண்டாம்! விழாக்கள்
அமைச்சரின்றி அந்தப் பகுதியில் வாழ்வோர்
துணைக்கரம் நீட்ட நிகழ்வு.

தேர்தலா? வேட்பாளர் மற்றும் நால்வருடன்
தேர்தல் பரப்புரை செய்வார்! படைதிரட்டி
பாரிலே மன்னர்போல் கூட்டமாக  செல்லமாட்டார்!
நேர்மையும் வாய்மையும் மூச்சு.

குடிமைப் பொருட்கள் வீடுதேடி வந்தே
குடிமக்கள் இல்லறத்தைச் செம்மையாய் வாழ
நெறிபிறழா ஆட்சி கடமை உணர்வில்
வறுமைப்
பிடியவிழ்க்கும் திட்டத்தைப் போற்று.

மதுக்கடைகள் எல்லாம் மூடிவிட மக்கள்
மதுவை மறந்து குடும்பக் கடமையிலே மூழ்கி
தடுமாற்றம் இல்லாமல் வீட்டில்  மகிழ்ச்சி
படர்ந்திருக்க வாழ்கின்றார் காண்.

லஞ்சமில்லை ஊழலில்லை எந்தத் துறையிலும்
வஞ்சம் அரசியல் சாயமே இல்லாமல்
செங்கோல் வளையாத ஆட்சி  நடக்கிறது!
கண்விழித்துப் பார்த்தேன்! கனவு!

மதுரை பாபாராஜ்

Saturday, September 28, 2019

கீழடி சங்கநாதம்!

நீண்ட தமிழர் வரலாறு கீழடியில்
மீண்ட வரலாறாய் இன்றோ உலகத்தில்
வாழ்ந்த  வரலாறைக்  கூறுவதால் தன்பெருமை
ஊன்றும் வரலாறாய்த் திக்கெட்டும் சங்கநாதம்
கேட்கிறது வாழ்வோம் நிமிர்ந்து.

மதுரை பாபாராஜ்

Friday, September 27, 2019

ஈரடி குறள்கள் நாலடி வெண்பாக்கள்

 ஈரடி குறள்கள் நாலடி வெண்பாக்கள்
நேரடி வாழ்க்கை நெறிகளைச் சொல்வன!
கீழடி ஆய்வில் கிடைத்த பொருள்களோ
பாரதிரப் பைந்தமிழர் பண்டை வரலாற்றின்
வேரடியைக் காட்டும் நிமிர்ந்து.

மதுரை பாபாராஜ்
ஆலடி வைகோ என்பவர் முகநூல் பதிவு

Thursday, September 26, 2019

உழைப்பே உயர்வு!

தினமும் கடவுளை வணங்கினாலும் வாழ்வில்
புனல்போல இன்பம் அனல்போல துன்பம்
மனக்கடலில் தோன்றி மறைவதே உண்மை!
நமது உழைப்பே உயர்வு.


Monday, September 23, 2019

பாமரர்க்கும் பரிமேலழகர்!

பரிமே லழகர் புலமையைக் காட்டித்
தெளிவுரை தந்தார் குறள்களுக்கே அன்று!
எளிமையாய்ப் பாமரர் போற்றும் உரையை
அளித்தார் குறள்குரிசில் ராசேந்ரன் இன்று!
பொழிந்திடுவோம் வாழ்த்துகள் சூழ்ந்து.

மதுரை பாபாராஜ்

Sunday, September 22, 2019

விட்ட இடமும் தொட்ட இடமும்!

சிந்து சமவெளி விட்ட இடங்களும்
சங்க இலக்கியங்கள் தொட்ட இடங்களும்
இன்றிங்கே கீழடியில் ஆய்வில் கிடைத்திருக்கும்
பண்டைப் பொருள்களோ பாலாவின் கூற்றையே
உண்மையெனக் கூறுது கேள்.

மதுரை பாபாராஜ்

மனிதவகை!

கேட்டுத் தருவோர் மனிதநேயம் மிக்கவர்கள்!
கேட்காமல் தந்துதவும் மாந்தர் கொடைவள்ளல்!
கேட்டும் கொடுக்காதோர் வாட்டும் கருமிகள்!
நாட்டில் மனிதவகை இஃது.

மதுரை பாபாராஜ்

Friday, September 20, 2019

இல்லறத்தின் வேர்!

தந்தையை, தாயைப் பணிந்து வணங்கவேண்டும்!
சொந்த உறவுகளை நாளும் மதிக்கவேண்டும்!
அன்பால் இணையர் உறவாடி வாழவேண்டும்!
என்றும்  குழந்தைகளைப் பேணி வளர்க்கவேண்டும்!
நன்னெறியே இல்லறத்தின் வேர்.

மதுரை பாபாராஜ்

Monday, September 16, 2019

தேர்வு தேர்வு!

17.09.2019

தேர்வெழுதி தேர்ச்சிபெற்றும் தேர்வுக்குத் தேர்வெழுதி
தேர்ச்சிபெற்றும் அந்தந் துறைத்தேர்வின்
தேர்வெழுத
தேர்வுகளே தேர்வுகண்டு சோர்ந்து வெறுக்கின்ற
தேர்வு முறையோ  தவறு.

மதுரை பாபாராஜ்

Friday, September 13, 2019

தாளமாற்றம்!

வாழ்க்கையின் ஏற்றத்தைத் தாழ்வுகளைப் பார்த்துவிட்டேன்!
காலத்தின் எல்லையிலே கைகோர்த்து நிற்கின்றேன்!
ஞாலம் சிரிக்கிறது! ஞானம் தவிக்கிறது!
தாளமாற்ற ஆட்டத்தில் நான்.

மதுரை பாபாராஜ்

Sunday, September 08, 2019

சந்ராயன் 2

தடைகளைத்தாண்டும் தடந்தோள்கள் உண்டு!


அகங்களில் திக்திக் நொடிகள் துடிக்க
நகர்ந்தாய் நகர்ந்தாய் நிலவினை நோக்கி
நகர்ந்து நகர்ந்து நெருங்கிய போது
சடக்கென்றே உந்தன் தொடர்பை இழந்தோம்!
படர்ந்த பரப்பில் வெகுதூரம் சென்று
நடந்தபோதோ மௌனமாகி விட்டாய்! ஏனோ?
தடைகளைத் தாண்டி தடந்தோள் நிமிர்த்தி
விடைகண்டே மீண்டும் விரைந்தே வருவோம்!
தகத்தகாய வெண்ணிலவே! சந்ராயனை மீண்டும்
அகங்குளிர நாங்கள் அனுப்பும் பொழுது
மகத்தான நல்வரவை அன்பாய்த் தருவாய்!
மகுடமேற்கும் இந்திய நாடு.

மதுரை பாபாராஜ்

Thursday, September 05, 2019

சந்ராயன் விண்கலம் ஆகா நிலப்பரப்பில்
நின்றதும் உள்ளிருந்து லேண்டர் வெளிவந்த
கண்கொள்ளாக் காட்சியோ அற்புதம்! வாழ்த்துகள்!
இன்னும் இருநாள்! நிலவின் பகுதியில்
தன்னுடைய ஆய்வைத் தொடங்கும்! ஒளிப்படங்கள்
வந்தவரை நன்றுதான் இங்கு.

மதுரை பாபாராஜ்

Monday, September 02, 2019

மாற்றம் இயல்பு!

உலகத்தின் தோற்றம் அறிவியலின் மாற்றம்!
வளர்ச்சி நிலைகளோ அங்கங்கே தோன்றும்
இயற்கை இயல்பினை ஏற்றே நிலைக்கும்!
உயிரின மாற்றம் இயல்பு.

மதுரை பாபாராஜ்


Sunday, September 01, 2019

சந்தம்

இந்தமழை அந்தமழை
எந்தமழை என்றாலும்
சொந்தமழை சொக்கவைக்கும்
சந்தமழைக் கீடாமோ?

வந்தமழை விண்ணிருந்து
வந்தமழை வளங்காணத்
தந்தமழை அந்தமழை
இந்தமழை என்றாகி

உண்ண உணவளித்து
உணவாகத் தான்மாறி
உயிரினத்தைக் காக்குமழை
அந்தமழை ஆனதம்மா!

மதுரை பாபாராஜ்

96 வயதில் ஆழ்கடல் நீச்சலில் புதிய சாதனைக்கு வாழ்த்துகள்!

மேல்கடலில் நீச்சல் பயிற்சிக்கே மூச்சிரைக்கும்!
ஆழ்கடலில் எந்தவிதச் சிக்கலும் இல்லாமல்
பாரிலே தொண்ணூற்று ஆறு வயதிலே
ஆழ்கடல் நீச்சலில் தன்னுடைய சாதனையை
தானே முறியடித்துச் சாதனை தந்துள்ளார்!
சாதனை நாயகனை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

கருப்பு வெளிச்சம்!

அறியாமை என்னும் கருப்பு இருட்டை
அறிவின் வெளிச்சம் திருக்குறள் நீக்கும்!
அறம்பொருள் இன்பமென முப்பாலே வாழ்க்கை
சிறக்க வழிகாட்டு மாம்.

தனிமனித நல்லொழுக்கம் தங்கித் தழைத்தால்
கனிந்துவரும் வாழ்வில் கருப்பின் நிழலோ
படராமல் நிம்மதி என்னும் வெளிச்சம்
துணிந்து படரும் உணர்.

வன்முறையின் வண்ணம் கருப்பு! தூண்டுகின்ற
எண்ணங்கள் மாய வலைதன்னில் சிக்கவைக்கும்!
பண்பழிந்து சிக்கியதும் வாழ்வில் வெளிச்சத்தை
என்றுகாண்பார்? செந்தமிழே! சொல்.

தீய வழியிலே சேர்த்த செல்வங்கள்
பாயும் வெளிச்சம் கருப்பாகும்! வந்ததைப்போல்
தேயும்! விரைந்தே மறையும்! உளைச்சல்கள்
நோயாய்த் துடிக்கவைக்கும் இங்கு.

வறுமையின் வண்ணம் கருப்பே! மனமோ
பொறுமை வெளிச்சத்தில் செம்மை நெறியில்
நிமிர்ந்தேதான் சந்தித்தால் அந்த நிலையைப்
புனிதமெனப் போற்றும் உலகு.

உழவின் நிறமே வெளிச்சம்! வறண்டு
மழையின்றிப் போனால் உழவே கருப்பு!
உழவர்கள் வாழ்வில் கருப்பு படிந்தால்
 உலகில் வெளிச்சந்தான் ஏது?

கருப்பு கவர்ந்திழுக்கும்! ஆனால் வெளிச்சம்
விருப்பு வெறுப்பின்றி நிற்கும்! உலகில்
கருப்பைத் தவிர்த்து வெளிச்சத்தை ஏற்றால்
அருமைதான் வாழ்க்கை உணர்.






பாடலோ பாடல்!

பாடலைத் தாவென்றார்! பாடும் அலைதரவா?
பாடும் சிலைதரவா? பாடும் கலைதரவா?
பாடும் மலைதரவா? பாடும் வலைதரவா!
பாடலைத் தந்தேனே கேள்.

அலை-- கடல்
சிலை-- உளியோசை
கலை-- இசை
மலை-- அருவி
வலை-- மீனவர்பாடல்

மதுரை பாபாராஜ்