Wednesday, November 30, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


வேலையைத் தாமத மாக்க பலமுகவர்

நாள்தோறும் உண்டு! அதிகமாய்ச்

சிந்தித்தல்!

வாழ்விலே எந்த அளவு தவிர்க்கிறோமோ

வாழ்வின் செயல்திறன் அந்த அளவுக்கு

நாளும் அதிகரிக்கும் செப்பு.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, November 29, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


ஆயிர மாயிரமாய் நேர்மறைக் காட்சிகள்

பூவிதழ்போல் இங்கே மலர்ந்திருக்கு! ஒன்றிரண்டு

பூநாகம் போன்ற எதிர்மறைக் காட்சிகளை

ஏன்நினைக்க வேண்டுமிங்கே? வாழ்க்கையில் மாறுபட்ட

பாடம் புகட்டவந்த தென்றே ஒதுக்கவேண்டும்!

நேர்மறையே நல்லது! செப்பு.


மதுரை பாபாராஜ்

 

Monday, November 28, 2022

பறவையின் தாய்க்கடமை


Dr.Ashraff posting in FB

பறவையின் தாய்க்கடமை!

51 நாள்கள்!

கூடுகட்டி முட்டைகளை நாளும் அடைகாத்து்

பாடுபட்டுக் குஞ்சுகளின் தேவைக்கே ஊட்டிஊட்டி

ஆளாக்கி வானில் பறந்து திரியுமட்டும்

தாய்ப்பறவை ஆற்றும் கடமைக்கு ஈடேது?

தாய்ப்பாசம் தாய்ப்பாசந் தான்.


மதுரை பாபாராஜ்


 

மகள் ஜெயந்தி ஆனந்த்


மகள் ஜெயந்தி ஆனந்துக்கு வாழ்த்து!


கடமையில் மூழ்கி கருத்துடன் கோப்பை

படிக்கும் ஜெயந்தியின் கம்பீரம் போற்று!

புதுமைப்பெண்! ஆற்றலால் சாதிக்கும் மங்கை!

குறள்நெறி போற்றிக் குவலயம் மெச்ச

சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

29.11.22

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்கு கவிதை!


எதுவுமே சும்மா  கனிந்து விடாது!

எதற்கும் முயற்சிகள் தேவையே! நாமோ

முயற்சியை நாளும் முதலீடு செய்தே

இலக்குகளை நோக்கி நடக்கவேண்டும் நாம்தான்!

இலக்கை அடைவோம் முயன்று.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


திருப்தி அடைந்ததும்  லட்சிய தாகம்

இருக்கவே கூடாது என்றில்லை! உள்ளம்

சிறந்த எதிர்கால ஏற்றத்தைக் காண

விடைதேட லாகும் உணர்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் இசக்கிராஜன்


நண்பர் இசக்கிராஜனுக்கு வாழ்த்து!


தற்போது சிட்னியில் இருக்கின்றார்!


உலகிலே எங்குசென்ற போதும் இசக்கி

பழமொழி மற்றும் குறள்பதிவை நாளும்

மறக்காமல் தந்தே கடமையைச் செய்யும்

சிறப்பில் மிளிர்கின்றார் செப்பு.


மதுரை பாபாராஜ்

26.11.22

 

Thursday, November 24, 2022

அறவுரை--அறிவுரை

 அறவுரை-- அறிவுரை!


புலனத்தில் மற்றும்  முகநூலில் சொல்லும்

அறவுரைகள் மற்றும் அறிவுரைகள் எல்லாம்

சிறப்பாக உள்ளன! நடைமுறை யானால்

சிறப்பாக வாழ்விருக்கும்! சூழ்நிலைகள் வாழ்வைத்

தடம்புரள வைக்கிறதே இங்கு.


மதுரை பாபாராஜ்


யாரை நோவது?

 யாரை நோவது?


காலில் விழுந்தவுடன் ஆசிகள் கேட்பதற்குக்

காலில் விழுந்தாரோ என்றெண்ணி நின்றிருந்தேன்!

கால்களை வாரி விழச்செய்தார் மண்மீது!

யாரைத்தான் நோவது? சொல்.


மதுரை பாபாராஜ்


Wednesday, November 23, 2022

நண்பர் பன்னீர்செல்வம்


நண்பர் பன்னீர்செல்வம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


பூவிலே தேனை உறிஞ்சுகின்ற எண்ணத்தில்

பூவின்மேல் வந்தமரப் பார்க்கிறதே வண்ணத்துப்

பூச்சிகள் காலைப் பொழுதிலே! நண்பரும்

காலை வணக்கத்தைத் தூதுவிட்டார் நட்புடனே!

நான்மகிழ்ந்தேன் நன்றி நவின்று.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, November 22, 2022

கைப்பிடிச் சாம்பல்!

 கைப்பிடிச் சாம்பல்!


பல்சுவை நாடகம் போன்றதே வாழ்வாகும்!

பல்வேறு வேடங்கள் பல்வேறு மாந்தர்கள்

எல்லோரும் ஆற்றலுக் கேற்ப நடிக்கின்றார்!

எல்லாம் அனுபவித்தே ஓய்ந்தபின் சாய்கின்றார்!

நல்லவர் கெட்டவர் பேதமின்றி மின்தகனம்!

அள்ளித் தருகிறது கைப்பிடிச் சாம்பலை!

எல்லோர்க்கும் இப்படித்தான் வாழ்வு.


மதுரை பாபாராஜ்

ஆமைகள்


ஆமைகளுக்கு இடங்கொடுக்காதே!


நன்றி: 

நூல் உலக அமைதிக்குக் குறள்காட்டும் வழி!


பக்கம் 39


           நூலாசிரியர்

திருக்குறள் தூதர் முனைவர்

மு.க. அன்வர்பாட்சா!


ஆமை நுழையவிட்ட வீடோ உருப்படாது!

ஆமைகள் என்னென்ன என்றேதான் பட்டியலைக்

காணவைத்தார் அன்வர்தான் தன்னுடைய புத்தகத்தில்!

நாமும் கடைபிடித்தால் நன்று.


பிறனில் விழையாமை,  வெஃகாமை,

மற்றும்

புறங்கூறா மைபயன்க ளற்றசொல் லாமை

கறைபடிந்த கள்ளாமை, கோபத்தைத் தூண்டும்

வெகுளாமை, இன்னாசெய் யாமை உயிரை 

வதைக்கின்ற கொல்லாமை, கல்லாமை, கீழ்மை

நடைபோடும் சிற்றினம் சேராமை, மந்த

நிலைதரும் பொச்சாவா மைபிறரின் உள்ளம்

உளைச்சலுடன் நோகவைக்கும் தீய குணமாம்

வெருவந்த செய்யாமை, மற்றும் இடுக்கண்

அழியாமை, கூட்டம் நிறைந்த அவையில்

நடுங்காத அஞ்சாமை, நாளும் பெரியார்

வெறுக்க பிழையாமை, கள்ளுண்ணா மையும்

பதினேழு ஆமைகள் உள்ளில் நுழைந்தால்

எதுவும் உருப்படாது பார்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை!

மற்றவரின் ஈடுபாடு, சார்ந்திருத்தல்

 தொந்தரவு

இத்தகைய சூழலால் பாதிப்பே இல்லாமல்

சற்றும் நமது செயலில் குறையில்லை

என்பதைநாம் இங்கே உறுதிசெய்ய வேண்டும்பார்!

இந்தநிலை இங்கே சவாலான ஒன்றுதான்!

நம்செயலில் நாமோ கருத்திலே வைக்கவேண்டும்!

நம்கவனம் நம்செயலில் தான்.


மதுரை பாபாராஜ்

 

Sunday, November 20, 2022

குறள்தூதர் அன்வர்பாட்சா நூல்


உலக அமைதிக்குக் குறள்காட்டும் வழி!


           நூலாசிரியர் 

தமிழ்ச்செம்மல், குறள் தூதர்

முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்களுக்கு வாழ்த்து!


சிறந்த குறள்களைத் தூதுவிட்டு நூலைப்

படைத்திருக்கும் அன்வரின் ஆற்றலுக்கு வாழ்த்து!

கடைநிலை மாந்தரும் கற்றுத் தெளிய

முயன்றதில் வெற்றிபெற்றார் வாழ்த்து.


குறள்களும், கூறும் கதைகளும் நம்மை

அறவழியில் சிந்திக்கத் தூண்டும் முனைந்து!

அறநெநெறிக் கதைகள் இதயம் வருட

அலைபாயும் உள்ளம் சலனம் தவிர்த்து

முறைப்படி வாழவழி காட்டுகின்றார் அன்வர்!

மடைதிறந்த வெள்ளம்போல் செந்தமிழ்ச் சொற்கள்

படைத்திருக்கும் பாங்கினை வாழ்த்து.


தொடர்ந்து படைப்புகளை அன்வர்தான் தந்தே

தடம்பதித்துச் சாதனை நாட்டியே வாழ்க!

குறள்தூதர் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்



 

தம்பிக்கு விருது!


தம்பி கெஜராஜ் பெற்ற விருதுக்கு வாழ்த்து!

படம்: விக்ரம் - கமல்படம்


இளவல் விருதுபெற்றார் வாழ்த்துகிறேன் அண்ணன்!

பலவிருது பெற்றேதான் பல்லாண்டு வாழ்க!

இளவல் கெஜராஜ் அகங்குளிர வாழ்க!

வளமுடன் வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

 

Saturday, November 19, 2022

புதுமனை புகுவிழா இராமாநுசன்


நற்றமிழர் இராமாநுசனார் புதுமனை புகுவிழா!


பாரம் பரிய அடுப்புவைத்துப் பால்பொங்க

சீரும் சிறப்பும்  திகழ புதுவீட்டில்

ஊரறிய நல்லதோர் நற்குடும்பம் சேர்ந்தேதான்

வாழ்த்திசைக்க மங்கலமாய் இந்த நிகழ்விங்கே

காலம் கனியவைத்த மாண்பு.


குறள்நெறி போற்றிக் குவலயம் மெச்ச

சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா


 

Thursday, November 17, 2022

மருமகன் ரவி

மருமகன் ரவி அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்!


உங்களது சிக்கலை யாரும் தெரிந்துகொள்ள

இங்கே விரும்பு வதில்லை! இருந்தாலும்

ஒவ்வொருவர் உள்ளமும் நீங்கள் மகிழ்ச்சியாக

உள்ளது எப்படி என்றே அறிந்துகொள்ள

துள்ளுகின்றார் இங்கே உணர்.


புன்னகைத்து வாழுங்கள்! 

புரட்டுங்கள் உலகத்தை!


மதுரை பாபாராஜ்


 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை!


எந்தவொரு வேலையென் றாலும்நாம்  நேரத்தில் 

செய்ய  முயற்சிவேண்டும்! தாமதம் செய்தாலோ

செய்யும் முயற்சி அளவுகூடும்! வேலையை 

நிம்மதியாய்ச் செய்வதற்குக் கற்றல் விவேகமாகும்!

என்றும் கடமையே கண்.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, November 16, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நாளைப் பொழுதை நினைத்துக் கடமையைத்

தேவையின்றித் தள்ளிவைத்தல் நல்லதல்ல! சிக்கலை

ஆவலுடன் அங்கங்கே அப்போதே தீர்க்கவேண்டும்!

ஆர்வமுடன் ஒவ்வொரு நாளும் மனத்திலே

தோன்றும் திருப்தி நிலையோ உயர்வாகும்!

நாளையோ கேள்விக் குறி.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, November 15, 2022

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!


நம்பிக்கை கொண்டால் அமைதியைக் கூடநாம்

நன்கு புரிந்துகொள்வோம்! நம்பிக்கை இல்லையெனில்

ஒவ்வொரு சொல்லையும் நாமோ தவறாக

எண்ணிக் கலங்குவோம்! நம்பிக்கை ஒன்றுதான்

நம்முறவின் ஆன்மா உணர்.


மதுரை பாபாராஜ்

 Vovemayavaramban: 

நன்று அய்யா!

நன்றி!

நம்பிக்கை நமது தும்பிக்கை!

நம்பி கைவைத்தால்

நலமே பயக்கும்!

புரிதலே ஆதாரம்!

புரிந்து நடந்தால்

தவிர்க்கலாம் சேதாரம்!

தழைக்குமே பரிவாரம்!

 Madurai Babaraj: புறத்தில் வான்மழை!

அகத்தில் கவிதை மழை!

கருத்தெல்லாம் தேன் மழை!

இமயத்தின் நட்பிற்கோ வாழ்த்து மழை!

பாபாV

Vovemayavaramban: 

தங்கள் அன்பு மழையால்

அங்கமெங்கும் இன்ப மழை!

நன்றி அய்யா!🙏🙏

 

Monday, November 14, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் அவர்களின் ஆங்கிலச் சொல்லோவியம்!


வெற்றி மணக்கின்ற வாழ்க்கைக்கு நல்லொழுக்கம்

என்பது முக்கிய மானதாகும்! பின்பற்றும்

எண்ணம் மிகவும் துணைபுரியும்

நாள்தோறும்!

உன்வாழ்வின் பாதையாய் மாற்று.


மதுரை பாபாராஜ்

 

சாதனையாளர் இளம்பிறைக்கு வாழ்த்து!



 

அருமையான சாதனை!

சாதனையாளர் இளம்பிறைக்கு வாழ்த்து!

 இளம்பிறை சாதித்த சாதனைக்கு வாழ்த்து!
வளர்பிறை யாக  வளர்தமிழ் போல
பலவெற்றி பெற்றே மகிழ்ச்சியாக வாழ்க!
வளமுடன் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

எல்லைக்குள் வாழப் பழகு

 எல்லைக்குள் வாழப் பழகு!


சின்னப் பிள்ளைகள் என்னென்ன செய்தாலும்

கண்மூடி கண்டிக்கும் வண்ணம் பெரியவர்கள்

தங்களின்  மூக்கை நுழைப்பது நல்லதல்ல!

நம்எல்லைக் குள்ளே இருப்பதே நல்லது!

எல்லைக்குள் வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்

மருமகன் ரகுவீர கணபதி


மருமகன் ரகுவீர கணபதிக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத்திருநாள்: 14.11.22

மணிவிழா ஆண்டில் நுழைகின்ற நீயோ

மகத்தாக வாழ்க! மனங்குளிர வாழ்க!

பலவளங்கள் பெற்று மகிழ்ச்சியாக வாழ்க!

நலமுடன் வாழ்கநூ றாண்டு.


பன்முக ஆற்றலால் முன்னேறும் பண்பகமே!

அன்பாய் அமுதாவும் பாசமகள் நான்சியும்

ஒன்றித்  திளைத்திருக்க  இன்பமுடன் வாழியவே!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்-- வசந்தா

குடும்பத்தார்

 

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தனின் ஆங்கிலச் சொல்லோவியம்!


நன்கு செயலாற்ற உள்ளம் தெளிவாக

இங்கிருத்தல் தேவையாம்! தொந்தரவு

மற்றுமுள்ள 

தேவையற்றே ஊறும் தகவலை நாமிங்கே

நீக்குதல் நல்லது! பார்.


மதுரை பாபாராஜ்

Sunday, November 13, 2022

இன்று மழை 13.11.22


இன்று காலை சென்னையில் மழை!

13.11.22

மின்னல் இடியும் கனமழையும் சேர்ந்தேதான்

சென்னை நகரைக்  கலக்கிய கோலத்தைக்

கண்டோம்! பதறினோம்! நாங்கள் திகைத்திருந்தோம்!

என்னமழை என்று வியந்து.


மதுரை பாபாராஜ்

கவிஞர் இமயத்தின் வாழ்த்து:

கண்டால் கவிதை!

கேட்டால் கவிதை!

நின்றால் கவிதை!

நடந்தால் கவிதை!

மழையென கவி தரும்

கவிஞர் பாபாவை போற்று!

 

Saturday, November 12, 2022

குறள்தூதர் அன்வர்


குறள்தூதர் அன்வருக்கு வாழ்த்து!


மிதிவண்டி பார்க்கின்ற நேரத்தில் நாளும்

மதித்தே திருக்குறளை அன்வர் எழுதிச்

செறிவுடனே ஊரில் பரப்பிய செய்தி

அறிந்தேதான் வாழ்த்துகிறேன் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் பன்னீர்செல்வம்!


நண்பர் பன்னீர் செல்வம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மலர்மேல் மழைவிழக் கூடாதென் றேதான்

அழகாய்க் குடையிருக்க வான்மழைத் தாரை

பொழிந்தேதான் சில்லுனு வானிலையை மாற்ற

மனங்கவரும் காலைப் பொழுதிலே தூதாய்

வணக்கத்தைக் கூறியதை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

Friday, November 11, 2022

குறும்பா வேந்தர் ரவி


குறும்பா வேந்தர் ரவி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத் திருநாள் : 12.11.22

பல்கலைப் பாடங்கள் மற்றும் விருதுகள்

பல்வகையில் சாதனைகள் நாட்டிப் புகழ்மணக்கும்

வல்லவர் நண்பர் ரவியிங்கே நற்றமிழ்போல்

பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்




இல்லறத்தில் துறவறம்

 இல்லறத்தில் துறவறம்!


இல்லறத்தில் வள்ளுவர் கூறும் துறவறம்

பிள்ளைகளை விட்டுவிட்டுச் செல்வதல்ல! பேராசை

உள்ளப் பொறாமை, மாக்களாக்கும் கோபதாபம்,

சொல்லிலே இன்னாச்சொல் 

எல்லாம் துறந்தே  இணக்கமாக

வாழ்வதற்கே

நல்லறம்  கூறுகின்றார் காண்.


மதுரை பாபாராஜ்


சந்திரன் மதுரை


அசையும்படம் அனுப்பிய சந்திரனுக்கு நன்றி!


மூன்று புறாக்கள் மழையைத் தவிர்ப்பதற்கு

பாங்காய்க் குடைக்குள்ளே நின்றிருக்க கோப்பையில்

சூடாய்க் குளம்பி தயாராய் இருக்கிறது!

ஆர்வமுடன் இந்த அசையும் படந்தன்னை

மாமதுரை ஊரிருந்து சந்திர சேகரன்

காலை அனுப்பினார் காண்.


மதுரை பாபாராஜ்

 

தந்தைக்கு நினைவேந்தல்


தந்தை தெய்வத்திரு முத்துசுப்பு அவர்களின் நினைவேந்தல்!


11.11.1980--11.11.22!


கடமை-- நேர்மை-- வாய்மை!


இறப்புக்கு முந்தைய நாள்கூட கென்னட்

மருத்துவக் கூடத்தில் பேத்தியின் பேரன்

சிகிச்சையின்  கோப்புகளைத் தந்தே கடமை

முடிந்தது இன்றுடன் என்றே உரைத்தார்!

விடிந்த மறுநாள் மதியம் இறந்தார்!

கடமையே மூச்சாய்க் கடைசிவரை வாழ்ந்தார்!

உடைமையாய் நற்பண்பைக் கொண்டேதான் வாழ்ந்தார்!

நினைவுநாள் தந்தைக்கு இன்று! வணங்கி

நினைக்கின்றோம் நாள்தோறும் இங்கு.


மதுரை பாபாராஜ்

குடும்பத்தார்

 

குறள் சிறிது; கருத்து பெரிது!


குறள் சிறிது; கருத்து பெரிது!


புல்லின் நுனியில் உருவில் சிறிதாக

உள்ள  பனித்துளியோ ஓங்கி உயர்ந்த

பனையின் உருவினைக் காட்டும்! அதுபோல்

குறளின் சிறிய உருவில் பெரிய

கருத்துகள் உள்ளாடும் காண்.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, November 09, 2022

மருத்துவர் ஸ்ரீமதிக்கு வாழ்த்து


இருளர் பழங்குடி ஸ்ரீமதி, நாட்டின்

மருத்துவ ராகி முதல்நிலை கண்டார்!

மருத்துவத் தொண்டாற்றி சாதனை செய்தே

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

10.11.22

 

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை!


உங்கள் முயற்சிகள் எப்போதும்  வீணல்ல!

என்றும் முடிவு விரைவாக

உங்களது 

எண்ணத்திற் கேற்ப கிடைக்காது! ஆனாலும்

உங்கள் முயற்சிகள் முன்னேற்றப் பாதையில்

நன்கு நகர்கிறது காண்.


மதுரை பாபாராஜ்

 

கோலம்

 காலம் அணிவிக்கும் கோலம்!


கடந்தகாலம் தென்றல் தழுவிய போது

சிறப்பான வாழ்க்கை எனநினைத்தேன் நான்தான்!

எதிர்காலம் இங்கே புயலாக மாறி

புதிரின் சுழலிலே சிக்குவேன் என்றே

துளியும் நினைத்ததில்லை இங்கு.


மதுரை பாபாராஜ்

யார்தடுப்பார்?


நடப்பதை யார்தடுக்கக் கூ(டும்?


எத்தனைக் கோயில்கள் சென்றாலும் அங்கேநாம்

எத்தனை பூசைகள் செய்தே கடவுளை

எப்படி வேண்டினாலும் வாழ்வில் நடப்பதோ

எப்படியும் இங்கே நடந்துவிடும்! ஆனாலும்

மக்களோ கோயிலைத் தேடி அலைகின்றார்!

இத்தரணி வாழ்க்கைதான் செப்பு.

மதுரை பாபாராஜ்


ஊரெல்லாம் ஓடி

உலகெல்லாம் வலம்வந்து

பாட்டெல்லாம் பாடி

பரிதவிக்கும் மடநெஞ்சே

ஏடெல்லாம் தேடி

எங்கெங்கோ சென்றாயே

கூடெல்லாம் குடியிருக்கும்

கொற்றவனைக் காணலியோ?


VOV SUBRSMANIAN,THANE


Tuesday, November 08, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில் புத்தன் அவர்களின் ஆங்கிலச்்சொல்லோவியம்?


மகிழ்ச்சியைக் காட்டுகின்ற பாதை வழியை

அகத்தால் உணர்ந்து கவனித்தல் நன்று!

நடைபோடும் சிக்கலை எண்ணியே வாழும்

நிலைகளை விட்டு மகிழ்ந்தேதான் வாழ்க!

பலவழிகள் உண்டே! உணர்.


மதுரை பாபாராஜ்

 

ENOUGH IS ENOUGH

 ENOUGH IS ENOUGH!


DARTS FROM ALL DIRECTIONS

PIERCE ME EVERYWHERE!

CAUSING PAIN AND AGONY

AND ROLL ME IN ANGUISH!

TORTURING ME AND TAUNTING ME!

WHAT SIN I DID? I DONT KNOW?

WHAT IS MY FAULT? I DONT KNOW?

CLUTCHES OF CRUELTY 

GRIP ME TIGHTLY!

TORTURE WAVES TOSSING ME!

INFLICTING WOUNDS AND BRUISES!

ALL MY WAYS BLOCKED!

ALL MY DOORS CLOSED!

RUNNING HITHER AND THITHER

MURMURING WITH UNBEARABLE PAIN!

OH! MY ETERNAL SLEEP!

DESCEND ON ME!

WAITING TO HUG YOU!

HUG ME AND TAKE ME 

FROM THIS DUSTY EARTH!

AND MEANINGLESS LIFE!

ENOUGH IS ENOUGH!

I AM NOT BLAMING ANYBODY!

I AM CURSING MYSELF!


BABARAJ



இன்பத்துப்பால் வாழ்த்துப்பா


மதுரை பாபாராஜ்:

மதிப்பிற்குரிய முனைவர் அர.சிங்கார வடிவேலன் அய்யா அவர்கள் 1970 ல் அழகப்பா கல்லூரியில்  எனக்குத் தமிழாசிரியர். அவர் எனது இன்பத்துப்பால் நூலுக்கு வெண்பா வாழ்த்து வழங்கி எனக்குப் பெருமை சேர்த்தார்.


VOVCR:

பாபா

இது ஆசிரியப்பா... 

இல்லை

ஆசிரியர் பா👍🌺🌷😀

 

Sunday, November 06, 2022

நண்பர் எழில்புத்தன்

 


நண்பர் எழில்புத்தன் அவர்களின் ஆங்கிலச்சொல்லோவியம்!


நீங்களிங்கே திட்டமிட்டு வேலை நிறைவேற

எண்ணினால் செய்யுங்கள்! சுற்றுப் புறநிலைகள்

மற்றும் அறைகூவல் என்றேதான் சாக்குபோக்கு

சொல்லவேண்டாம்! எப்படியும் வேலையைச் செய்யவேண்டும்!

கண்போல் கருதி உழை.


மதுரை பாபாராஜ்

Saturday, November 05, 2022

இன்றுபோல் நாளையுண்டோ?

 இன்றுபோல் நாளையுண்டோ?


இன்றுபோல் நாளை இருப்பதில்லை! வாழ்விலே!

என்று எதுநடக்கும் யாரறிவார்? யாருமில்லை!

சென்றதா இன்று? திருப்திகொள் தோழனே!

இன்றுபோல் நாளையுண்டோ? சொல்.


மதுரை பாபாராஜ்

ஐயா வலையபட்டி கன்னியப்பன. பேத்தி!

கவிஞர் வலையபட்டி கன்னியப்பன் அவர்களுக்கு வாழ்த்து!

வெள்ளைக் குதிரையில் ஏறி நிவேதிதா

முல்லைக் குறுநகை காட்டும் அழகிலே

தெள்ளுதமிழ்த் தாத்தா வலையபட்டி கன்னியப்பன்

துள்ளுகின்றார் வாழ்த்தைக் குவித்து.


மதுரை பாபாராஜ்

 

Friday, November 04, 2022

நணபர் பாலு அனுராதா இணையருக்கு வாழ்த்து

 நண்பர் பாலு -- அனுராதா இணையருக்கு மணநாள் வாழ்த்துகள்!


வள்ளுவத்தைப் போற்றுகின்ற பாலு அனுராதா 

இல்லறத்தின் அன்பு இணையராம்!

வாழ்த்துகின்றோம்!

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

Thursday, November 03, 2022

பாபா--சண்முகம்--சி.ஆர்

 



நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச் சொல்லோவியம்!


செயல்பாடு என்ப தெளிதல்ல நாளும்!

சிலநேரம் நம்கரங்கள்  கூட அசுத்தம்

பரவலாம் நம்பணியை நாமோ முடிக்க!

தயங்கவேண்டாம்  எந்த நிலைகளுக்கும் செல்ல!

செயல்பட வேண்டும் முனைந்து


மதுரை பாபாராஜ்

 

Wednesday, November 02, 2022

திருமதி நிலமங்கை துரைசாமி


திருமதி நிலமங்கை துரைசாமி அவர்களின் கைவண்ணம்

தாயின் மடியில் குழந்தை மகிழ்ந்திருக்க

தாயோ பெருக்கெடுக்கும் அன்பில் சிரித்திருக்க

தாயன்பைக் காட்டும் நிலமங்கை அம்மாவின்

தாய்சேய் படமோ அழகு.


மதுரை பாபாராஜ்

எளிமையான ஓவியத்திற்கு மிக அருமையாள ஆசு கவிபடைத்த ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம்.

துரைசாமி திருவாசகம்

விசாகை

 

Tuesday, November 01, 2022

ஐயா துரைசாமி திருவாசகம்


ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படம்:

தடைகளைத் தாண்டி நதியிங்கே ஓடும்!

அயராமல்  தண்ணீரை இங்கே இடையில்

பயன்தந்து மக்களை வாழவைக்கும் நாளும்!

கடைசியில் ஆழி இலக்கு.

மதுரை பாபாராஜ்