Saturday, January 31, 2009

சலனத்தை வென்றால் சான்றோன்

சலனத்தைத் தூண்டாத சூழ்நிலையில் நின்று
சலனத்தை வெல்வ(து) எளிது --- உலகில்
சலனத்தைத் தூண்டுகின்ற சூழ்நிலையில் நின்று
சலனத்தை வென்றால் வணங்கு

மதுரை பாபாராஜ்

கம்பராமாயணக் காட்சி

கணவனைத் துச்சமென எண்ணிய கைகேயி

காட்டில் திரியவேண்டும் ராமன்என்றும் தன்மகனோ
நாட்டில் முடிசூட்ட வேண்டுமென்றும் -- கேட்டு
வரம்பெற்றாள் கைகேயி! சொன்னசொல் மாறா
தயரதனும் தந்தான் தளர்ந்து.

எப்படி மன்றாடிக் கேட்டான் தசரதன்!
இப்படி அப்படி என்றே அசையாமல்
அப்படியே நின்றாள் கைகேயி!வென்றுவிட்டாள்!
அப்பப்பா ! காரிகைதான் கல்.

காரிகையின் வஞ்சத் தூரிகை தீட்டிய
காரிருள் ஓவியத்தின் வக்கிரம் தாங்காமல்
தேர்மன்னன் நொந்து விழுந்தான்! துடித்தான்!
பாரில் துயிலிழந்தான்! பார்.

தசரதனின் சோக நிலைகண்டு கோழி
சிறகினை மார்பில் அடித்தே அலற
கடமை தவறாத ஆதவன் அன்றும்
கடமையாய் வந்தான் உதித்து.

மதுரை பாபாராஜ்

பக்குவமற்ற பக்தி வீண்!

உறவை வளர்த்துப் பகையை மறக்கும்
சிறந்த நிலையே மனிதம் -- கடவுளைக்
கும்பிடுவோர் இந்த நிலையடைய வில்லையெனில்
அந்தபக்தி என்றென்றும் வீண்.

Friday, January 30, 2009

கோபம் நெருக்காமல் வாழ்

கோபம் வரும்பொழுது கண்களை மூடிக்கொள்!
கோபத்தில் பேசாதே! கூட்டுக்குள் உள்ளடங்கு !
கோபத்தை ஆளவிட்டால் கொந்தளிப்பே மிஞ்சிநிற்கும் !
கோபம் நெருக்காமல் வாழ்!

மதுரை பாபாராஜ்

Monday, January 26, 2009

சமுதாய வீதியில் முதியவர்

எனக்கென யாரு மில்லை!
ஏன்எனப் புரிய வில்லை!
மனத்தினில் ஏக்கக் கூட்டம்
மலையென வளரக் கண்டேன்!

இருப்பதில் என்ன லாபம்?
இறப்பதில் என்ன நஷ்டம்?
இரண்டுமே ஒன்று தானே?
இறப்பினில் அமைதி கிட்டும்!

கடலினில் மூழ்கும் போது
கைகளில் தக்கை ஒன்று
கிடைத்திட ஏங்கும் உள்ளம்!
கிடைத்ததும் கரையைத் தேடும்!

அன்பெனும் அரவணைப்பே
அப்படிப் பட்ட தக்கை!
எங்குநான் தேடிச் செல்ல?
ஏக்கமே எனது வாழ்க்கை!

இருப்பதால் இன்னல் தொல்லை
என்றுநான் மாறும் போது
இருப்பதை விட்டு விட்டே
இறப்பது மேல்தான் என்பேன்!

மதுரை பாபாராஜ்

இலங்கைத் தமிழைர்களைக் காப்பது நம் கடமை

இன்னுமா வேண்டுகோள்கள் ?
இன்னுமா தீர்மானங்கள்?
இன்னுமா பொறுமைப் பேச்சு?
இன்னுமா உறங்கும் கோலம்?

சிங்கள ராணுவத்தின்
தினவெடுத் தாடும் போக்கில்
என்னருந் தமிழர் கூட்டம்
இன்னலில் கருகு கின்றார்!

தன்னுயிர் உடமை காக்க
தமிழரோ ஓடுகின்றார்!
சிங்கள ராணுவத்தார்
சீறியே கொல்லுகின்றார்!

வீடினை இழந்து விட்டு
வீதியில் வாழும் கோலம் !
காட்சியைப் பார்க்கும் போது
கண்களில் ரத்த வெள்ளம்!

அரசியல் வேறு பாட்டை
அனைவரும் ஒதுக்கி வைத்தால்
அழிந்திடும் தமிழினத்தை
அனைவரும் காக்கக் கூடும்!

மதுரை பாபாராஜ்

Friday, January 23, 2009

புறங்கூறாதே

விண்ணகத்தைப் பார்த்தேதான் எச்சிலைத் துப்பினால்
நம் எச்சி நம்முகத்தில் தான்விழும் -- நம்முடைய
சொந்தத்தை நாமே புறங்கூறி வாழ்வதும்
அந்தநிலைக்கு ஒப்பென்றே கூறு.

மதுரை பாபாராஜ்

ஈனத்தின் வக்கிரம்

விபத்து நடந்த இடத்தில் கிடந்த
சடலத்தில் உள்ள நகைகள் -- உடைமையை
ஈனமனங் கொண்டே களவாடிச் சென்றுவிட்டான்!
ஈனத்தின் வக்கிரம் அது.

மதுரை பாபாராஜ்

Tuesday, January 20, 2009

கம்பராமாயணக் காட்சி!

கண்ணுள் புகுந்தவனும் வில்லை ஒடித்தவனும்
ஒன்றுதானா என்றறிய சீதையோ -- வண்ண
வளையலைத் தொட்டுச் சரிபார்க்கும் சாக்கில்
உளமாரப் பார்த்தாள் உவந்து.

மதுரை பாபாராஜ்

குழப்பத்தில் மனது !

குழப்பங்கள் கொக்கரித்துச் சிரிக்குதம்மா!
கூண்டுக்குள் கிளியாகத் துடிக்குதம்மா!
அலைக்கழிக்கும் எண்ணங்கள் ஆடுதம்மா!
அலைபோல எழுந்தேதான் சீறுதம்மா!

தூண்டிலிலே மீனாக்கிப் பார்க்குதம்மா!
துன்பத்தின் தீநாக்குப் படருதம்மா!
ஊனுறக்கம் கலையவைத்து உலவுதம்மா!
உளைச்சலையே விளைச்சலாக்கிப் பெருக்குதம்மா!

என்னென்ன சொன்னாலும் அடங்கவில்லை!
ஏனிந்த நிலைஎன்றே விளங்கவில்லை!
என்னபாவம் செய்தேன்நான்? புரியவில்லை!
ஏனிந்த மனக்குழப்பம் ?தெரியவில்லை!

மதுரை பாபாராஜ்

Sunday, January 18, 2009

கர்ணனின் மனைவி

கர்ணன் அரச பரம்பரை என்பது
கர்ணனுக்கும் கண்ணனுக்கும் குந்திக்கும் -- பாரில்
தெரியும்!இருந்தாலும் வேந்தனின் ஆற்றல்
மிளிர்ந்திட வாழ்ந்தான் நிமிர்ந்து.

எண்ணற்ற ஆற்றல்கள் ஏந்தினாலும் தேரோட்டி
மைந்தன்தான் தன்கணவன் என்றெண்ணி அம்மனைவி
அன்பு மதிப்பைக் கணவனுக்கோ எள்ளளவும்
தன்பங்காய்த் தந்ததில்லை இங்கு.

போர்க்களம் நோக்கிப் புறப்படும் நேரத்தில்
ஆரத்தி சுற்றியேதான் வாழ்த்தி வழியனுப்ப
வேல்விழியாள் அங்கே வராமல் புறக்கணித்தாள்!
நேரிழையாள் ஆணவத்தைப் பார்.

சாதிச் செருக்கின் மயக்கத்தில் கர்ணனைச்
சோதித்துப் பார்த்தாள் இல்லாள்தான் -- வேதனையில்
போர்முனைக்குச் செல்லும்முன் தன்னுயிராம் இல்லாளைப்
பார்க்க நினைத்திருப்பான் ! போ.

கர்ணனோ போரிலே மாண்ட பிறகுதான்
கவ்விய பொய்மை கலைகிறது -- தன்தவறை
எண்ணி உருகிப் புலம்புகின்றாள்! என்செய்ய ?
மன்னன் வருவானோ மீண்டு?

சாதிவெறிக் காலடியில் நானிருந்தேன்!என்னவனை
வேதனைக்கே உள்ளாக்கி வேடிக்கை பார்த்திருந்தேன்!
மேதினியில் என்னைப்போல் இக்கொடுமை கட்டவிழ்த்த
வேறொருத்தி உண்டோ ?விளம்பு.

எண்ணற்ற ஆற்றல்கள் கொண்ட கணவனை
என்னுடைய ஆணவத்தால் துச்சமாகப் பார்த்தேனே!
என்மனமே என்னை வெறுக்கிறதே!என்செய்வேன்?
பண்பகத்தை என்றுகாண்பேன்?நான் .

மதுரை பாபாராஜ்

Wednesday, January 07, 2009

நெருடலற்ற வாழ்வுக்கு

அறத்தை ஏந்தும் சொற்களையே
அகத்தில் ஏந்திச் சொல்லுங்கள் !
மறந்தும் துரோக மகுடிக்கு
மயங்க வேண்டாம் வெல்லுங்கள்!

பறக்கும் பொய்மை வல்லூறைப்
பாய்ந்து பிடித்துத் திருத்துங்கள்!
சிறக்க வைக்கும் வாய்மைக்கு
சிரத்தைத் தாழ்த்தி நில்லுங்கள்!

அன்னை தந்தை ஆசானை
அகத்தில் வைத்துப் போற்றுங்கள்!
தன்னை வைத்தே எடைபோடும்
தன்ன லத்தை மாற்றுங்கள்!

என்றும் இங்கே தமிழ்விளக்கை
இல்லந் தோறும் ஏற்றுங்கள்!
பொன்னும் மணியும் இன்பமென்று
போற்றும் மனதைத் தூற்றுங்கள்!

மதுரை பாபாராஜ்
1985

துள்ளும் நெஞ்சம்

தொலைவினில் இருக்கும் போது
துள்ளுது நெஞ்சம் பேச
அலையென அருகில் வந்தால்
அகத்தினில் ஊடல் பொங்கிச்

சிலையென மௌனம் பூண்டு
சிந்தனைச் சிறையில் இன்னல்
மலையென வளரச் செய்யும் !
மயங்கிட வைத்துக் கொல்லும் !

அன்புடன் மழைக்க ரங்கள்
அவனியைத் தழுவி நின்றால்
இன்புறும் உயிரி னங்கள்
எழுச்சியை விதைத்துப் பாடும் !

அன்பினில் உலவும் உள்ளம்
அடிக்கடி வாட நேர்ந்தால்
இன்னலின் கரம்பி டித்து
இயற்றிடும் சோகப் பாட்டு!

உருகிடச் செய்யும் அன்பே !
உலகினில் உன்னை யாரோ
அரும்பிடச் செய்தார்? அந்த
அறிஞனைப் பார்க்க வேண்டும்!

சுருக்கெனத் தைக்கும் முள்ளும்
சுடச்சுடப் பரவும் தீயும்
வருத்திட வீசும் காற்றும்
வணங்கியே உன்முன் தோற்கும்!

மதுரை பாபாராஜ்
1985

கவிதை

வேலென விழிகள் சொல்ல
வில்லெனப் புருவம் சொல்ல
பாலெனப் பருவம் சொல்ல
படையென இடையோ சொல்ல

நூலென உருவம் சொல்ல
நூதனம் இதழ்கள் சொல்ல
பூவெனப் பெண்மை சொல்ல
பொலிவுடன் நின்றாள் பாவை!

அலையென நடையோ சொல்ல
அருவியை வளையல் சொல்ல
கலைஎனச் சிரிப்போ சொல்ல
காரெனக் கூந்தல் சொல்ல

மலைத்திடச் செய்யும் வண்ணம்
மனதினில் புகுந்து கொண்டு
நிலைத்தவள் பெயரைக் கேட்டால்
நித்திலக் கவிதை என்பேன்!

மதுரை பாபாராஜ்
1985

Monday, January 05, 2009

உலகியல் உண்மை

கணவனை உலகில் விட்டுக்
காரிகை இறந்து விட்டால்
கணவனோ சுமையாய் ஆவான் !
காப்பவர் முகஞ்சு ழிப்பார்!

என்னதான் பார்த்த போதும்
இல்லறத் துணைவி பார்க்கும்
பொன்மனத் தியாகப் பார்வை
புவியினில் எவர்க்கும் இல்லை!

மனைவியின் மடியில் சாய்ந்து
மன்னவன் போக வேண்டும்!
கணவனும் மானத் தோடு
காசினி விட்டுப் போவான்!

கணவனைப் பிரிந்து வாழும்
காரிகை தினமும் சுற்றம்
மணந்திட வாழ்வாள்!ஏக்கம்
மனதினில் பெருமூச் சாகும்!

மங்கையின் இறுதி மூச்சு
மண்ணகம் ஏந்தும் மட்டும்
மங்கையோ ஒளிவி ளக்காய்
மனையிருள் நீக்கி வாழ்வாள்!

மதுரை பாபாராஜ்

Sunday, January 04, 2009

இல்லறக்கொலை

கத்தியின்றி இரத்தமின்றி கொலை!

கணவனின் இலையில் சேறும்
கயவனின் இலையில் சோறும்
குணவதி இட்டால் அந்தக்
கொடுமையைக் கொலைதான் என்பேன்!

மனைவியைத் தவிக்க விட்டு
மற்றவ ளோடு சுற்றும்
கணவனின் துரோகம் இங்கே
கண்டனக் கொலைதான் என்பேன்!

மனைவியை அடிமை யாக்கி
வக்கிர மனத்தால் ஆட்டும்
கணவனின் விலங்குப் போக்கு
களைநிகர்க் கொலைதான் என்பேன்!

கணவனைத் துச்ச மாகக்
கருதியே மாற்றார் முன்னே
மனைவியோ ஏசும் போக்கை
மலைநிகர்க் கொலைதான் என்பேன்!

இல்லற ஒழுக்கந் தன்னை
இருவரும் ஏற்றே வாழ்ந்தால்
நல்லறத் தென்றல் வீசும்!
நாளெலாம் இன்பம் பாடும்!

மதுரை பாபாராஜ்

வடுமனப் பார்வை வேண்டாம்!

நிகழ்வுகள் நெருட லானால்
நெஞ்சமோ கொதித்துப் போகும்!
மடமட வென்றே சாயும்
மரங்களாய் அமைதி வீழும்!

தேற்றுவார் தேற்றி னாலும்
தேறிட மறுத்துப் பேசும்!
ஆற்றினில் அடித்துச் செல்லும்
ஆலிலை நிலையை ஏற்கும்!

சூழ்நிலைக் கைதி யாகும்!
சுடுதணல் புழுவாய் மாறும்!
பாழ்நிலை நோக்கி நாளும்
பதறியே துடித்து வாழும்!

கோபமோ சூறைக் காற்றைக்
கொந்தளித் தேதான் சீறும்!
சீறலில் சொற்கள் கூட
சிறுமையை ஏந்திக் கொட்டும்!

நடுநிலை உணர்வைக் கொண்டு
நடப்பதைப் புரிந்து கொண்டு
வடுமனப் பார்வை இன்றி
வாழ்ந்திடு அமைதி தோன்றும்!

மதுரை பாபாராஜ்

இப்படி வேண்டுமா?இறுதி ஊர்வலம்?

இறந்தவர் உடலை இங்கே
இறுதிஊர் வலத்தில் வைத்தே
உறவுகள் சுற்றம் சூழ
ஊரெலாம் கூடி நிற்க

மறைந்தவர் மாண்பை எல்லாம்
மனத்திரை போட்டுக் காட்ட
இறைவனை வேண்டிக் கொண்டே
எரிதணல் மூட்ட வேண்டும்!

அவரவர்க் கடமை தன்னை
அமைதியாய்ச் செய்ய வேண்டும்!
பரபரப் பான போக்கில்
பார்ப்பவர் நடுங்கும் வண்ணம்

விரசமாய் ஆடிக் கொண்டும்
வெடிகளை வெடித்துக் கொண்டும்
தெருவினை அடைத்துக் கொண்டும்
செல்வது தேவை தானா?

மதுரை பாபாராஜ்

Saturday, January 03, 2009

கணவன் மனைவிக்கு எழுதிய கவிதை

நீ ஒரு நெருப்பு வளையம் -- உன்
நிழலுக்கும் இல்லை சலனம் !

அன்பைப் பொழிவதில் மழைதான் --அதில்
அனைவரும் நனைந்தே மகிழ்வார்!

சிறுவர் பெரியவர் என்றே -- நெஞ்சில்
சிறிதும் பேதம் இல்லை!

பக்குவம் கனிந்த உள்ளம் -- நல்ல
பண்புகள் உலவும் இல்லம்!

கடமை உனது மூச்சு -- அந்தத்
தடமே உனது பேச்சு!

உண்மையாய் உன்னிடம் இருந்தால் --அந்த
உண்மைக்கே நீதான் அடிமை!

குடும்பத் தேரை இழுப்பதில் -- உந்தன்
குணங்கள் தானே தலைமை!

எனக்கெனப் பிறந்த இனிமை -- நான்
உனக்கென வாழும் கவிதை.

மதுரை பாபாராஜ்

மங்கையர் மலர் ஜனவரி 2009 தலையங்கம்

"ஒருவார்த்தை” என்னும் தலையங்கம் சொல்லும்
கருத்துக்கள் அத்தனையும் உண்மை -- கருத்துடன்
ஊடகங்கள் ஏற்றுச் செயல்படுத்த முன்வந்தால்
நாடு தலைநிமிரும்! பார்.

மதுரை பாபாராஜ்
சென்னை- 600 088