பொருட்பால் அதிகாரங்கள்:
39--108
*இறைமாட்சி* சொல்லும் அரசனின் மாண்பை!
முறையான *கல்விப்* பயன்களைச் சொல்லி
அறிவிலியாய் ஆக்குகின்ற *கல்லாமை*
கூறும்!
நெறியுடன் *கேள்வி* யின் நற்பயனைக் காட்டி
*அறிவுடைமைச்* செல்வமென்றார் போற்று.
*குற்றம் கடிதலில்* குற்றத்தைச் சாடுகின்றார்!
குற்றமற்று வாழ *பெரியார் துணைவேண்டும்!*
*சிற்றினம் சேராமல்* வாழ்தலே நல்லதென்றார்!
முற்றும் *தெரிந்து செயலாற்றல்* வேண்டுமென்றார்!
இப்படி வாழ்தலே நன்று.
தன்வலிமை நன்கறிதல் தானே *வலியறிதல்!*
நன்கு செயல்புரிய *காலம் அறியவேண்டும்!*
வென்று நிமிர *இடனறிதல்* வேண்டுமென்றார்!
நம்பிக்கை கொள்ள *தெரிந்து தெளிதலென்றார்!*
நன்கு எடைபோட்டே எந்தச் செயலையார்
செய்வார் என்றே *தெரிந்து வினையாடல்*
என்றுமே காக்குமென்றார் காண்.
சுற்றத்தைப் பேணுதல் *சுற்றந் தழாலாகும்!*
சற்றும் மறக்காமல் உன்கடமை யாற்றுதலே
*பொச்சாவா மையென்றார்* வள்ளுவர் அன்புடனே!
சுற்றமே காக்குமென்றார் சொல்.
*செங்கோன்மை* இல்லாத ஆட்சி *கொடுங்கோன்மை!*
அஞ்சுவதைச் செய்யாத பண்பே *வெருவந்த
செய்யாமை!* நம்பியோர் வாழ பரிவுகாட்டும்
உள்ளமே *கண்ணோட்டம்!* என்றே
உணர்த்துகின்றார்!
எல்லாமே சான்றாண்மைப் பண்பு.
உளவாளி ஆற்றல்கள் *ஒற்றாடல்* ஆகும்!
உளங்கனிந்த *ஊக்கம் உடைமையாய்* மாறி
துளியும் *மடியின்மை* கொண்டுவாழ்தல் நன்று!
புவியில் முயற்சியே *ஆள்வினையு டைமை!*
தவிக்கவைக்கும் துன்பம் எனினும் *இடுக்கண்
அழியாமையே* என்றும் துணிவு.
*அமைச்சில்* அமைச்சரின் பண்புகள் உண்டு!
இணையற்ற *சொல்வன்மை* என்னவென்று சொல்லி
*வினைத்தூய்மை* நன்மைகள் சேர்க்குமென்றார் அய்யன்!
*வினைத்திட்பம்* கொண்டவரை மன்னர் புகழ்வார்!
*வினைசெயல்வகை* என்றால் செயலாற்றல் என்றார்!
வினைவிளக்கம் தந்தார் புகழ்ந்து.
*தூதிலே* தூதனின் பண்புகளைப் பார்க்கின்றோம்!
மேதினியில் *மன்னரைச் சேர்ந்தொழுகும்*
நேரத்தில்
நாமிங்கே நாளும் பழகும் முறைசொன்னார்!
மாற்றார் மனக்குறிப்பை இங்கே *குறிப்பறிதல்*
கற்றவர்கள் தெய்வத்திற் கொப்பு.
*அவையறிதல்* என்றால் அவையறிந்து பேசல்!
அவையிலே பேச படித்தவர்கள் நிற்றல்
*அவையஞ் சாமை*
நிலைகுலைந்தால் கற்றகல்லி வீணென்றே நாணும்
நிலையெடுத்தார் வள்ளுவர் தான்.
*நாடு* தலைப்பில் எதுநாடு? சொல்கின்றார்!
நாடுகாத்து நிற்கும் *அரணை* விளக்குகின்றார்!
தேடும் *பொருள்செயல்வகை* தன்னிலே சேர்த்துவைத்தால்
கேடுசெய்ய முன்வந்து நிற்கமாட்டார் மற்றவர்கள்!
கோடுபோட்டுக் காட்டுகின்றார் கூறு.
*படைமாட்சி* நாட்டுப் படையின் பெருமை!
*படைச்செருக்கில்* நாட்டின் பெருமிதம் கூறி
நடைமுறையில் *நட்பு* விளக்கம் அருமை!
முறையாகத் தேர்ந்தெடுக்க *நட்பாராய் தல்பார்!*
சிறப்பான நட்பைப் *பழைமையில்* தத்தார்!
தடம்புரள வைக்கின்ற *தீநட்பைச்* சொல்லி
கறைபடிய வைக்கின்ற *கூடாநட் பென்றார்!*
இறைத்த கருத்தெல்லாம் முத்து.
*பேதைமை* மாந்தரை வாட்டுமெனக் கூறி
மேதினியில் *புல்லறி வாண்மையே* என்றும்
தீதென்றார்! *இகலாம்* பகையைத் தவிர்த்தலே
சேதமற்ற வாழ்வென்றார்! அம்மா *பகைமாட்சி*
வேகத்தை விட்டே விவேகத்தைக் கூறும்!
போர்செய்ய என்றும் *பகைத்திறம் கண்டே*
போர்செய்தால் வெற்றிதான் உண்டு.
*உட்பகை* இங்கே உடனிருந்தே கொல்கின்ற
முற்றிய நோய்! *பெரியாரைப் பிழையாமை*
எப்போதும் நிம்மதி! *பெண்வழிச் சேறலோ*
பித்தனாக்கும்! என்றும் *வரைவின் மகளிரோ*
நித்தமும் வேடமேந்தி மோசடி செய்பவர்கள்!
எச்சரிக்கை தந்தவர் அய்யன்!
போதை அறிவை மயக்குமென்றே மன்பதைக்குத்
தூதனுப்ப *கள்உண்ணா மைதந்தார்!*
கேட்போமே!
*சூது* பொருளை இழக்கவைத்தே பாழாக்கும்!
வேதனையே வாழ்வாகும் கேள்.
உணவே மருந்தானால் இங்கே *மருந்தே*
உணவாகும் கோலமோ அண்டாது வாழ்வோம்!
குடிமக்கள் பண்பே *குடிமையாம்* என்றார்!
நெறிபோற்றும் வாழ்விங்கே *மானமாம்* பார்!
*பெருமை* இலக்கணம் இஃதென்றார் இங்கு!
பெருமைதரும் பண்புகளே *சான்றாண்மை* என்றார்!
உயர்தரப் பண்பே *பண்புடைமை* யாகும்!
தளமாகும் வள்ளுவமே வாழ்வு.
*நன்றியில் செல்வமோ* நன்மை பயக்காது!
மன்பதையே! *நாணுடைமை* என்றால் பழிச்செயல்கள்
செய்வதற்கு நாணுதல்! *குடிசெயல்வகை*
என்றாலோ
பல்வகைப் பண்பால் குடியுயர்த்தல் என்றாரே!
தெள்ளுதமிழ் வள்ளுவத்தை வாழ்த்து!
உலகத்தின் அச்சாணி யாகும் *உழவு!*
உழவில்லை ஒன்றுமில்லை! *நல்குரவோ* துன்பம்!
*இரவு!* பிறரிடம் கேட்டுப் பெறும்வாழ்க்கை என்றார்!
*இரவச்சம்!* மற்றவரைக் கேட்கவே அஞ்சும்
நிலைதந்த அந்தப் படைத்தவனைச் சாடும்
நிலையெடுத்தார் வள்ளுவர் தான்.
கயவரும் நல்லவரும் தோற்றத்தால் ஒன்று!
*கயமை* அதிகாரம் தெள்ளத் தெளிவாய்க்
கூறும்
விளக்கமுடன் இந்தப் பொருட்பால் குறள்கள்
பழம்போல் கனிந்ததே பார்.
மதுரை பாபாராஜ்
பொருட்பால் அதிகாரங்கள்: ..... What a job (nee .... gr8 pleasure in the morning....!) No words to thank... Let me delve into he ocean you've given me... Didn't want to wait for translation of this into Tamil...give this message in Tamil... Koti.. Koti.. namaskarams
VovSubramanian,Thane