கனவுகள்
--------------------
படிக்கும் பருவத்தில் நாளும் கருத்தாய்ப்
படிக்கும் கனவை நினைவாக்க வேண்டும்!
அறிவுத் திறனை வளர்த்தே உயர்ந்தால்
நெறியுடன் வாழலாம் இங்கு.
நாமிங்கே என்னவாக வேண்டும் என்பதை
நாம்காணும் கல்விக் கனவுதான் நிர்ணயிக்கும்
காண்பதில் ஆக்கபூர்வ மான கனவுகளே
ஊன்றிக் கனியும் உணர்.
பேராசை வண்ணக் கனவுகள் கானலாகும்!
போராடி வெற்றிபெறும் ஆற்றல் கனவுகளே
சீரான வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டும்!
போராடு உன்வசமே வாழ்வு.
வேகத்தை விட்டே விவேகத்தைத் தேர்ந்தெடு!
மோகக் கவர்ச்சியெல்லாம் வாழ்வின் தடைக்கற்கள்!
ஆக்கமும் ஊக்கமும் நம்கனவின் ஆதாரம்!
ஊற்றெடுக்கும் வெற்றி உணர்.
கனவுகாணச் சொன்னவர் அப்துல் கலாம்தான்!
கனவிலும் ஆக்கபூர்வச் சிந்தனைகள் வேண்டும்!
கனவுகள் மெய்ப்படும்! தாய்தந்தை ஆசான்
மனமகிழ்வார் ஆசி பொழிந்து.