Saturday, July 31, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்:


நண்பர் IG சேகர் அனுப்பிய படம்:

நண்பருக்கு வணக்கம்.

சட்டமன்றப் பேரவை நூற்றாண்டு விழா!

02.08.21

பறவையே! நாளை எழுச்சிவிழா காண

சுடர்முகம் தூக்கு! மகிழ்ச்சியில் துள்ளு!

உடனே பறந்துசென்று செய்தியைச் சொல்லு!

நடப்போம் தலைநிமிர்ந்து தான்.


மதுரை பாபாராஜ்

 

மருமகன் ரவி அனுப்பிய படம்.

 மருமகன் ரவி அனுப்பிய படம்.


ஏமாற்றி விட்டார் என்றேதான் குற்றத்தை

மற்றவர்மேல் வீசாதே! மற்றவரை நோக்கி 

அளவுக்கு மீறிய உந்தன் எதிர்பார்ப்பே

குற்றமென்றே ஏற்றுக்கொள் இங்கு.


மதுரை பாபாராஜ்

இளமை--முதுமை!

 இளமை--முதுமை!


இளம்பறவை கூடுவிட்டுச் சென்று கடமைக்

களத்தில் பரபரப்பாய் நாள்தோறும் சுற்ற

உளமோ தவிக்க  முதியோரோ கூட்டை

அளந்தேதான் கூட்டுக்குள் வாழ்கின்றார் சோர்ந்து!

பருவத்தின் மாற்றமே வாழ்வு.


மதுரை பாபாராஜ்


வாய்ப்பை ஏற்றுக்கொள்

 வாய்ப்பை ஏற்றுக்கொள்


கடலுக்குள் மூழ்கும் ஒருவனுக்குத் தக்கை

கிடைத்தாலே பற்றிக் கரையேறப் பார்ப்பான்!

கிடைக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்வில்

தடையகற்றி முன்னேற்றம் காண்.


மதுரை பாபாராஜ்


விரக்திநிலை மனிதன்

 விரக்திநிலை மனிதன்


உடலில் நடுக்கம்! மனதில் உளைச்சல்!

நடையில் தளர்வு! நிகழ்வில் கலக்கம்!

உடைந்து சிதறுமோ என்ற விரக்தி!

படைகூட்டித் தாக்கும் நிலை.


மதுரை பாபாராஜ்

வேதனையில் துடிப்பவன் நிலை!

 வேதனையில் துடிப்பவன் நிலை!


வேதனையின் உச்சத்தில் வெந்தேதான் துடிக்கின்றேன்!

வீடெல்லாம் நெருப்பு வளைத்திருக்கும் கோலத்தில்

வீட்டுக்குள் சிக்கித் தவித்தே

மயங்கிவிட்டேன்!

காற்றுடன் வந்த நெருப்பு சுவைத்திருக்க

காற்றோடு காற்றானேன் காண்.


மதுரை பாபாராஜ்


Friday, July 30, 2021

செல்விருந்தும் வருவிருந்தும்!


அதிகாரம்:விருந்தோம்பல் 

குறள் எண்:8

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு


செல்விருந்தும் வருவிருந்தும்!


உறவுகள் தங்கிப் பழகிய நாட்கள்

சிறப்பாய் இருந்தன! ஆகா அருமை!

பறவைகள் கூட்டைவிட்டுச் சென்றதுபோல் தங்கள்

கடமை அழைக்கவே கூடுநோக்கிச் சென்றார்!

அகஏக்கம் செல்விருந்து தான்


வருகின்றார் நாளை உறவினர்கள்! ஆகா!

வருவிருந்தைக் காண மகிழ்ந்திருக்கும் இன்பம்

அருவியென ஓடிவந்தே நம்மைக் குழந்தைப்

பருவத்தில் நிற்கவைக்கும் சொல்.


மதுரை பாபாராஜ்

 

Thursday, July 29, 2021

விகடனில் கவிஞர் பாலாவின் தமிழ்நெடுஞ்சாலை!



விகடனில் கவிஞர் பாலாவின் தமிழ்நெடுஞ்சாலை!

பானைத்தடம்!

தேடலின் நாயகர் பாலா விகடனின்

ஏடு மணக்க தமிழ்நெடுஞ் சாலையில்

ஆர்வமுடன் தன்பயணத் தேரோட்டம் காணவைக்கும்

பார்வை அருமை அழகு.


பானை பிடித்தவள் பாக்கிய சாலியென்ற

கால மொழியில் புதுமையைச் சேர்த்தேதான்

பானையைத் தொட்டவன் பாக்கிய சாலியென்றே

பாலா உரைத்ததை வாழ்த்து.


கீழடியில் பானைத் தடங்கண்டே பூரிப்பில்

வேழமென நின்றே ரசித்துப் படமெடுக்கும்

கோலத்தில் புன்னகை பூத்தார் எழுச்சியுடன்!

ஞாலமெலாம் போற்றவாழ்க நீடு.

மதுரை பாபாராஜ்


முத்திரை வரிகள்:


காலத்தின் கருப்பையில் காயாத பனிக்குடம்போல்; 


இது வெறும் பானைகளின் பயணம் போலத் தோன்றலாம். ஆனால் ஹரப்பாவின் நலிவிற்குப் பின்னர் வட இந்தியாவில் இருவேறு பண்பாடுகள் சந்தித்த சூழல்களின் ஆகச்சிறந்த தடயம் இது.


 இலக்கியம் மட்டும்தான் பானை செய்யும் குயவரை ‘முதுவாய் குயவ’, ‘கலம் செய் கோ’, ‘வேட்கோ’ என்று போற்றுகிறது. நகர வழிபாட்டு முறையில் குயவருக்குள்ள பூசாரிப் பொறுப்பையும் சங்க இலக்கியம்தான் ஆவணப்படுத்துகிறது. 


பானையைத் தொட்டவன் பாக்கியசாலி!


எத்தனை கோடி இன்பங்கள் வைத்தாய் தமிழே!


பயணிப்பேன்...


 

அய்யா துரைசாமி திருவாசகம் வீட்டில் தோட்டம்!


அய்யா துரைசாமி திருவாசகம் வீட்டில் தோட்டம்!


நிலமங்கை அம்மா துரைசாமி அய்யா

வளர்க்கின்றார் வீட்டிலே தோட்டத்தை! அங்கே

மலர்ந்திருக்கும் பூக்களை தூயநட்பின் 

தூதாய்

இளங்காலை நேரம் அனுப்பினர் நன்றி!

உளமங்கனிந்த அன்பே மகிழ்ச்சி.


மதுரை பாபாராஜ்

வசந்தா

 

மருமகன் ராஜ்குமாருக்குப் பிறந்தநாள் வாழ்த்து!



மருமகன் ராஜ்குமாருக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


 நாள்:29.07.21


அகவை 50 பொன்விழா!


இல்லற முத்துக்கள்:

மனைவி: பிருந்தா

மகன்:  கோசல் கல்யாண்


சிவகங்கை சீமையை விட்டேதான் நான்கு

வயதிலே எங்களுடன் வந்தார் மதுரைக்கு!

அழகான நான்மாடக் கூடலிலே வாழ்க்கை

நிலைத்தது! பாவாவும் மாறுத லாகி

தமிழ்நகர்  வந்தார் குடும்பத் தோடு!

மலைக்கவைக்கும் மாற்றந்தான் ராஜ்குமார் வாழ்வில்!

வளம்பல பெற்றுவாழ்க நீடு.


அறவழி வாழ்கை சிறப்பு!

 அன்பைப் பகிர்வதில் களிப்பு!

சிறப்புகள் பெற்ற கல்வி!

 சிந்தை கவரும் பண்பு!

புதுக்கவி தைகளில் வேந்தர்

 பக்தி நெறியில் பயணம்!

கடமை தவறாத உள்ளம்!

 கருணையே இவரது இல்லம்!


பொன்விழா காணுகின்ற பொன்மன ராஜ்குமார்

அன்பு மனைவி, மகனின் மகிழ்ச்சியுடன்

பெற்றோரின் ஆசியுடன் நண்பர்கள் உறவினர் 

எத்திசையும் வாழ்த்திசைக்க நூறாண்டு வாழியவே!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு்.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்


வசந்தாவுக்கு வாழ்த்து!

 

வசந்தாவுக்கு வாழ்த்து!


நாற்காலி போட்டேதான் சாய்ந்தே அமர்ந்துகொண்டு

காதிலே கைபேசி வைத்தேதான் பேசுகின்ற

கோலத்தில் ஆகா வசந்தா அருமைதான்!

வாழ்வாங்கு வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

எரிமலை

 எரிமலை


!

எரிமலை என்றே தெரியாமல் மேகம்

எரிமலை உச்சியைத் தொட்டே தவழும்!

எரிமலைச் சூழ்நிலை வாழ்விலே என்றே

தெரிந்தபின்போ உள்ளம் தகித்திட மேனி

நடுங்கிட  அச்சத்தின் கோரப் பிடியில்

குமுறுகின்றோம் வாழ்விலென்று கூறு.


மதுரை பாபாராஜ்

Wednesday, July 28, 2021

கலைஞரின் கனவை நினைவாக்கிய மகன் ஸ்டாலின்!

 கலைஞரின் கனவை நினைவாக்கிய மகன் ஸ்டாலின்!



கருப்பு மறைந்து சிவப்பு மலரும்

கருத்தை உரைக்கும் கழகக் கொடியே!

உரைத்தார் கலைஞர் உயர்ந்தார் உலகில்!

கலைஞர் மகனாம் தளபதி ஸ்டாலின்

கலைஞர் கனவை நினைவாக மாற்ற

தகைசால் தமிழர் விருதினைத் தோழர்

பொதுவுடமை ஏந்தல் சங்கரய்யா வுக்கு

விருப்புடன் தந்தே நினைவாக்கிப் பார்த்தார்!

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

அன்பு மகளுக்கு நன்றி!

 அன்பு மகளுக்கு நன்றி!

முருகேசனுக்கு ரூ1500 அனுப்பியதற்கு நன்று

ஆயிரத்து ஐநூறை மாமா கணக்கிலே

ஆர்வமுடன் இன்றே வரவுவைத்த பாங்கிற்கு

தாழ்மையுடன் நன்றி நவில்கின்றேன் தந்தைநான்!

வாழ்விலே பெற்றநல் பேறு.


மதுரை பாபாராஜ்

தகைசால் தமிழர்

 மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த தகைசால் தமிழர்


விருதுபெறும்  சங்கரய்யா அவர்களுக்கு வாழ்த்து!


பொதுவுடமைப் பூங்காவில் பூத்தவர் தோழர்!

எதற்குமே ஆசைப் படாதவர்! ஏந்தல்!

அகத்திலே நேர்மை நியாயத்தைக் கொண்டு

நடக்கின்ற பண்பாளர் அய்யா!தகைசால்

தமிழர் விருதுக் குகந்தவர்! வாழ்த்து!

இமைப்பொழுதும் சோராத தொண்டரைப் போற்று!

தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


தகைசால் தமிழர் விருதின் சிகரத்

தொகைபத்து லட்சத்தை மக்கள்  நலத்தை

அகத்திலேந்தி சங்கரய்யா  நன்கொடையாய்த் தந்தார் !

முதல்வர் நிவாரணத் திட்டம் பயனுறவே!

பண்பாளர் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

அய்யா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படம்!

 படத்திற்கு கவிதை!

அய்யா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படம்!



அதிகாரம்:சுற்றந்தழால் குறள் எண்:527

காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உளவென்றார் வள்ளுவர்!

காக்கை இரண்டும் காத்திருக்கோ அய்யாவின்

வீட்டில் எதிர்பார்த்து தான்.

மதுரை பாபாராஜ்

Tuesday, July 27, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம். பறவையே கேள்!

 

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்.

பறவையே கேள்!

தோன்றின் புகழுடன் தோன்றுக!

செய்தி: கொரோனா கால உண்மை நிகழ்வு:

மூச்சுத்திணறலுடன் முதியவரும் இளைஞரும் மருத்துவ மனைக்கு வந்தனர். உயிர்க்காற்று தருவதில் சிக்கல். முதியவர்," நான் வாழ்ந்து முடித்தவன். அவர் வாழ வேண்னடியவர். அவருக்குக் கொடுத்துக் காப்பாற்றுங்கள்," என்று கூறிவிட்டு வீட்டுக்குச் சென்று மரணத்தை ஏற்றார்.

-----------------------------------------------------------------

வாழப் பிறந்தவர்கள்! வாழத் துடிப்பவர்கள்!

வாழ்ந்து முடித்தவர்கள் என்ற வரையறைக்குள்

வாழ்க்கை அடங்கிடும்! வாழப் பிறந்தவர்கள் 

வாழ்வின் முதல்நிலை!

வாழத் துடிப்பவர்கள் வாழ்வின் இடைநிலை!

வாழ்ந்து முடித்தவர்கள் வாழ்வின் கடைநிலை!

வாழ்வின் கடைநிலை மாந்தர் முதலிரண்டு

சாரார்கள் வாழவழி காட்டல்  கடமையாம்!


மதுரை பாராஜ்

நண்பர்நடிகர் சௌந்தர் அனுப்பிய படமும் சொல்லோவியமும்.

 ActorSoundar Actor: 

"One of the first conditions of happiness is that the link between man and nature shall not be broken.” -Leo Tolstoy   

#WorldNatureConservationDay2021 #MannukkumMakkalukkum

 நண்பர்நடிகர் சௌந்தர் அனுப்பிய படமும் சொல்லோவியமும்.


தமிழாக்கம்

இயற்கைக்கும் வாழும் மனிதனுக்கும் உள்ள

இடைவெளி தன்னை உடைக்காமல் வாழ்தல்

மகிழ்ச்சிக் கான நிபந்தனை யாகும்!

உடைத்தால் இனத்திற்கு அழிவு.


மதுரை பாபாராஜ்

பிள்ளையின் செயல் பெற்றோர்க்கே!

 பிள்ளையின் செயல் பெற்றோர்க்கே!

பெற்றோர்க்கு நற்பெயர் பெற்றுத் தருகின்ற

நற்செயலைப் பிள்ளைகள் செய்தால் கொடுத்துவைத்தோர்!

பெற்றோர்க்கு கெட்டபெயர் பெற்றுத் தருகின்ற

அற்பச் செயல்களைப் பிள்ளைகள் செய்திருந்தால்

பெற்றோர்க்(கு) அவமானம்! சொல்.


மதுரை பாபாராஜ்

Monday, July 26, 2021

நண்பர் அன்பு அனுப்பிய ஓவியம்

 [

VOV C.ANBU: 

DREAM is not what you see in sleep, DREAM is something which doesn't let you sleep. – Dr. A.P.J Abdul Kalam. ...


நண்பர் அன்பு அனுப்பிய ஓவியத்திற்கு கவிதை ஆக்கம்:


தூக்கத்தில் காணும் கனவு கனவல்ல

தூங்க விடாமல் எதுஉன்னைத் தூண்டவைத்துப்

பார்க்கிறதோ அந்தக் கனவே கனவாகும்!

ஆர்வம்,முயற்சிதான் அஃது.


மதுரை பாபாராஜ்

Sunday, July 25, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம் வணக்கம்.

 நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

வணக்கம். 

பறவையே! இன்றைய கவிதை இது!


நன்னெறியே புகழ்!


நன்னெறியில் பிள்ளைகள் வாழ்ந்தால் உலகத்தார்

என்னதவம் செய்தனரோ பெற்றோர் எனப்புகழ்வார்!

நன்னெறியில் பிள்ளைகள் வாழவில்லை என்றாலோ

என்னபாவம் செய்தனரோ பெற்றோர் எனஇகழ்வார்!

நன்னெறியே என்றும் புகழ்.


மதுரை பாபாராஜ்


Friday, July 23, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்! மொழியாக்கம்:


 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!

மொழியாக்கம்:

நம்மிடம்  சுற்றியுள்ள ஒவ்வொன்றின் மீதிலும்

எப்படி  அக்கறை காட்டுகின்றோம்!

அப்படி

நாமிங்கே சந்திக்கும் ஒவ்வொரு மாந்தரும்

நேசமும் அன்பும் மரியாதையும் காட்டுவ

தற்கே உரியவராம் சொல்.


மதுரை பாபாராஜ்

Wednesday, July 21, 2021

நண்பர் ராவ் வாழ்க பல்லாண்டு!

 நண்பர் ராவ் வாழ்க பல்லாண்டு!


பென்னர் மதுரை நிறுவனத்தின் ஆற்றலுள்ள

காசாளர் ராவென்றால் புன்னகை அன்பரென்பேன்!

மாசற்ற தோழரென்பேன்! மகத்தான நண்பரென்பேன்!

வேடமின்றி தன்கருத்தைச் சொல்கின்ற

வேந்தரென்பேன்!

நாடறிய வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

Tuesday, July 20, 2021

முயல்பொம்மையை உருவாக்கிய திருமதி நிலமங்கை துரைசாமி அனுப்பிய ஒளிப்படம்!

 


முயல்பொம்மையை உருவாக்கிய

திருமதி நிலமங்கை துரைசாமி அனுப்பிய ஒளிப்படம்!


முயலே முயலே வெள்ளை முயலே

முழிச்சுப் பார்க்கும் முயலே முயலே!

நல்ல வேளை உன்னைப் போல

நீளக் காது எங்களுக் கில்லை!

சிறிய காதால் இப்படி ஒட்டுக் 

கேட்கும் மனிதருக்கு நீளக் காது 

இருந்தால் வம்புகள் ஏரா ளந்தான்!


பாபாராஜ்


[7/21, 11:43] VOVDuraisamythiruvasagam:

 அருமை. இதனால்தான் நீங்கள் உரை கண்ட  நம் வள்ளுவர்  ஒரு அதிகாரத்தையே அருளினார் போலும்.

VOVDuraisamythiruvasagam: என் வெகு எளிமையான பஞ்சு பொம்மைக்கு இத்தனை அழகிய கவிதை எழுதிய கவிஞருக்கு நன்றி. 🙏

திருமதி உமா பாலு அனுப்பிய படம்

 திருமதி உமா பாலு அனுப்பிய படம்


உண்மையான நண்பர்கள்!

துன்பமான நேரத்தில் துணைநிற்போர் மட்டுமே

பண்புள்ள நண்பர்கள்! மற்றவர்கள் எல்லோரும்

அன்றாடம் கூடி மகிழ்ந்திருந்து செல்கின்ற

தன்னலம் கொண்டவ

 ராம்.

மதுரை பாபாராஜ்

நண்பர் எழில் புத்தன் அனுப்பிய படம்:

 நண்பர் எழில் புத்தன் அனுப்பிய படம்:



நன்மை நடந்தாலும் ஏற்போம்! நடக்கவில்லை

என்றாலும் ஏற்போம்! அணுகுமுறை

இப்படி

வந்துவிட்டால் வாழ்வில் நமது மகிழ்ச்சியை

எத்தகைய சூழலும் ஒன்றுமே செய்யாது!

பக்குவமே வாழ்க்கையின் வேர்.


மதுரை பாபாராஜ்

Monday, July 19, 2021

சூழலால் தலைகுனிவு

 சூழலால் தலைகுனிவு


தலைநிமிர்ந்து  வாழும் குடும்பச் சூழல்

தலைகுனிந்து வாழவைத்துப் பார்த்தால்-- உளைச்சல்

அலைக்கழிக்க உள்ளம் நிலைகுலையும்! மானம்

அலையில் துரும்பாகும் கூறு.


மதுரை பாபாராஜ்


தறிகெட்ட வாழ்க்கை!

 தறிகெட்ட வாழ்க்கை!

உடலின் அழகில் மயங்கி மயங்கி

குடும்பத்தை விட்டே அலைகின்ற உள்ளம்

தடம்மாறிச் செல்லும்! தடுமாறிச் செல்லும்.!

தரமிழந்த வாழ்க்கை! தறிகெட்ட வாழ்க்கை!

கழன்று விழுகின்ற அச்சு.


உருக்குலைந்து போகும் அழகையே மாந்தர் 

நிரந்தரம் என்றே அலைகின்றார் பாவம்!

வலைக்குள்ளே சிக்கிவிட்ட மீனாய்த் துடிப்பார்!

தலைகுனிந்தே வாழ்வார் சாற்று.


மதுரை பாபாராஜ்




Sunday, July 18, 2021

காகமும் மயில்களும்


காகமும் மயில்களும்!

மரத்தின் மேலே ஒருகாகம்
உட்கார்ந் திருந்த நேரத்தில்

மயில்கூட் டத்தைப் பார்த்ததுவே
மயிலின் தோகையை ரசித்ததுவே

அதுபோல் தோகை எனக்கிருந்தால்
அழகாய்த் தோன்றுவேன் எனநினைத்து

கீழே கிடந்த இறகுகளை
எடுத்து வாலாய்ப் பொருத்தியதே

மயில்களுக் கருகில் சென்றதுவே
வினோதத் தோற்றத்தைக் கண்டவுடன்

மயில்கள் வெறுத்து ஒதுங்கினவே!
தன்னினக் காகக் கூட்டத்தை

நாடிச் சென்றே நின்றதுவே
காகக் கூட்டம்  மிரண்டதுவே!

நாமோ நாமாக இருக்கவேண்டும்
வேடம் போட்டால் வெறுத்திடுவார்!

இதுதான் கதையின் நீதியாம்
உணர்ந்தே நடப்போம் நாமிங்கே!


மதுரை பாபாராஜ்



Saturday, July 17, 2021

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

 நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


பறவையே!

இந்தக் குறுந்தொகைப் பாடலைக் கேட்டுவிட்டுச் செல்:


குறுந்தொகை 40


பாடியவர்: செம்புலப் பெயனீரார்

பாடல்


யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி யறிதும்

செம்புலப் பெயனீர் போல

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

------------------------------------------------------------


--

அன்பரசி! உன்தாயும் என்தாயும் எவ்வகையில்

இங்கே உறவினர்? உன்தந்தை என்தந்தை

என்ன முறையில் உறவினர்கள்? நம்மிதயம்

அன்பில் கலந்ததும் எப்படியோ? முன்பின்னே

இம்மண்ணில் நாமிருவர் சந்தித்த நாளென்றோ?

செம்மண்ணில்  நீர்கலந்தே ஒன்றிய கோலம்போல்

அன்பால் இதயங்கள் நம்மைத்தான் சேர்த்ததுவே!

அன்பே இணைப்பின் உயிர்.


மதுரை பாபாராஜ்

Thursday, July 15, 2021

நண்பர் I G சேகர் அனுப்பிய பறவைகள் படம்!

 நண்பர் I G சேகர் அனுப்பிய பறவைகள் படம்!



பறவைகளே இன்றைய கவிதை!


எல்லை மீறினால் !

ஐம்பெரும் பூதங்களும் ஐம்புலன்களும்!

-----------+--------------------------------------------------

நிலம் , நீர் , தீ , காற்று, வானம்!

--------------------------------------------------------------------

நிலநடுக்கம் வந்தால் அழிவோ பெரிதாகும்!

எழுகடல் நீரும் திரண்டு சுனாமி

உருவெடுத்தால் சொல்லியே மாளாது துன்பம்!

நெருப்பின் பொறிகள் உலகையே அழிக்கும்!

செருக்குடன் வீசும் புயற்காற்றால் வையம்

இருந்த இடம்தெரியா வண்ணம் அழியும்!

பரந்திருக்கும் வானம் வெடித்து மழையை

உலகிலே வெள்ளமாக்கி கூத்தாட்டம் போட்டால்

அழிவிற்கோ எல்லயில்லை சாற்று.


ஐம்பெரும் பூதங்கள் எல்லைக்குள் நாள்தோறும்

அன்பாய் அடங்கி இருந்தால் அழிவில்லை!

ஐம்புலனை மாந்தர் அடக்கியே வாழ்ந்திருந்தால்

அண்டாது வாழ்வில் அழிவு.

மதுரை பாபாராஜ்

ஓட்டைகள்

 ஓட்டைகள்


!

ஓட்டைகள் புல்லாங் குழலிலென்றால் இன்னிசை!

ஓட்டைகள் மேனியில் என்றால் உயிரோட்டம்!

ஓட்டைகள் கூரையில் என்றால் வறுமைநிலை!

ஓட்டைகள் இல்லறத்தில் என்றால் உளைச்சல்கள்!

ஓட்டை இருக்குமிடம் சார்ந்து.


மதுரை பாபாராஜ்

Wednesday, July 14, 2021

பெருந்தலைவர் காமராசரை வணங்குவோம்!

 பெருந்தலைவர் காமராசரை வணங்குவோம்!



கடமை நாயகர் பிறந்தநாள்:15.07.21


சிறந்த மனிதர் சிவகாமி மைந்தர்!

பிறவிக்கு நாளும் சிறப்பளித்த ஏந்தல்!

கடமையில் நேர்மை எளிமையான வாழ்க்கை

தடம்பதித்த காமராசர் நற்புகழ் வாழ்க!

மகத்தான நம்மவரைப் போற்று!


விருதுபட்டி என்றிருந்த ஊரின் பெயரை

விருதுநகர் என்றுமாற்றி ஊருக்கே மெச்சும்

விருதளித்தார் காமராசர்! நாட்டிற்கு நல்ல

பெருமை அளித்தார் உணர்.


சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் 

கோடாமை சான்றோர்க்கணியென்றார் அய்யன்!

இமைப்பொழுதும் சோராமல் தொண்டாற்றி வாழ்ந்த

அமைதிப் புரட்சியின் வித்து.


நேர்மை நியாயம் எளிமை நடுநிலைமை

வாழ்வியலாய்ப் பின்பற்றி வாழ்ந்தவர் காமராசர்!

ஏழை எளியவரின் வாழ்வுயரப் பாடுபட்ட

ஏந்தலைப்  போற்றிப் புகழ்.


பொதுவாழ்வில் இப்படித்தான் வாழவேண்டும் என்ற

பொதுநலத் தொண்டின் இலக்கணம்

தந்த

நடுநிலைப் பண்பாளர்  காமராசர் என்பேன்!

பொதுமக்கள் தொண்டரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்






Tuesday, July 13, 2021

தலைநிமிர்ந்து வாழ்வோம்!

 இன்று காலையில் எழுதிய கவிதை

தலைநிமிர்ந்து வாழ்வோம்!

புலனடக்கம் இல்லாதோர் வாழ்க்கையோ யானை

குளத்துக்குள் சேற்றில் சிக்கியதைப் போலாம்!

அலைபாய்ந்தே சீரழிவை நாடாதே! என்றும்

தலைநிமிர்ந்து வாழ்வதே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்.

 நண்பர் IG சேகர் அனுப்பிய படம்.


திராவிட மாதிரி!

DRAVIDIAN MODEL!


மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குத் திடம்!


அனைவரையும் உள்ளடக்கி எண்ணும் வளர்ச்சி

மனங்குளிரத் தோன்றும் தொலைநோக்குத் திட்டம்!

அழைக்கும் திராவிட மாதிரிக் காக

உழைப்போம் உயர்வோம் உணர்ந்து


பொங்கும் அலைகளில் போய்வரும் கப்பல்போல் 

நம்இலக்கை நோக்கியே நம்பயணம் வெற்றியுடன்

முன்னெடுத்துச் செல்லவேண்டும்! முந்துநடை செல்லுகையில்

முற்போக்(கு) இலக்கொன்றே முன்.

மதுரை பாபாராஜ்




.

Monday, July 12, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

காலைப் பொழுதில் மலர்ந்திருக்கும் பூக்களே!

கீழ்த்திசையின் வானத்தில் செங்கதிரோன் தோன்றித்தான்

பாரில் துயிலெழுப்பும்


காட்சி அருமைதான்!

வேரோடும் நட்பினை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் அன்பு அனுப்பிய அற்புத ஓவியம்!

 நண்பர் அன்பு அனுப்பிய அற்புத ஓவியம்!


ஓவியருக்கு வாழ்த்து!

கற்பனையும் கைத்திறனும் ஒன்றிணைய ஓவியத்தை

அற்புதமாய்த் தீட்டிவிட்டார்! நேராய், தலைகீழாய்

எப்படிப் பார்த்தாலும் கோலம் மாறாமல்

இப்படித் தோன்றவைத்த ஓவியரை வாழ்த்துவோம்!

நற்புகழ் வாழியவே நீடு.

மதுரை பாபாராஜ்

குறள்தொண்டர் கணியன் கிருஷ்ணன் வாழ்க!

 குறள்தொண்டர் 

கணியன் கிருஷ்ணன் வாழ்க!


நண்பர் கணியன் கிருஷ்ணன் குறளார்வத்

தொண்டால் அருமையாய் வள்ளுவத்தைச் சாறாக

இங்கே பிழிந்தளித்து எல்லோரும்

நற்பயனைத்

தங்குதடை யின்றிப் பெறுவதற்கே

 உழைக்கின்றார்!

அன்பரோ வாழியவே நீடு.


மதுரை பாபாராஜ்


நண்பர் தமிழியலன் அய்யாவுக்கு வாழ்த்து!

 நண்பர் தமிழியலன் அய்யாவுக்கு வாழ்த்து!



தமிழியலன் பாக்கள் தமிழ்மணக்கும் பாக்கள்!

இமிழ்கடல் ஓசையை விஞ்சுகின்ற சந்தம்!

அமைதியும் புன்னகையும் ஏந்தும் உருவம்!

தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

Sunday, July 11, 2021

மகள் திருமதி உமா பாலு அனுப்பிய சொல்லோவியம்!

 மகள் திருமதி உமா பாலு அனுப்பிய சொல்லோவியம்!



உன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு தப்பையும்

நன்குணர்ந்து நேர்மறையாய்ச் சிந்தித்தால் நீயிங்கே

உந்தன் கடந்தகாலம் என்னும் சிறைக்குள்ளே

என்றுமே கைதியாக வாழமாட்டாய்! ஆனால்நீ

உந்தன் எதிர்காலந் தன்னை வடிவமைக்கும்

பண்பட்ட சிற்பியாவாய் பார்.


மதுரை பாபாராஜ்

நண்பர் பென்னர் நாகு அனுப்பிய படம்!

 நண்பர் பென்னர் நாகு அனுப்பிய படம்!


வான்பருந்துக் கஞ்சி புறாவந்த போதன்று

தேன்கருணை கொண்டே சிபிமன்னர் காத்தார்!

வான்மழையைக் கண்டேதான் அஞ்சும் புறாக்கள்!

ஆகா! நனையாமல் நிற்க குடையை

வாகாக தந்த சிபிமன்னர் யாரோ?

மேகமே! சொல்வாயா நீ?


மதுரை பாபாராஜ்

Friday, July 09, 2021

நவரசா-- குறும்படங்கள் வெற்றிபெற வாழ்த்து!

 நவரசா-- குறும்படங்கள் வெற்றிபெற வாழ்த்து!


பற்றிப் படரும் சுவைகளாம் ஒன்பதை

வெற்றிக் குறும்பட மாக வழங்குகின்றார்!

பக்குவப் பட்ட இயக்குநர்கள் வாழ்கவே!

வெற்றி நடைபோட வாழ்த்து.


அமைதியான தோற்றம், செயல்பாடு கொண்ட

அமைதி இயக்குநர் கார்த்திக் திரையில்

தடம்பதித்துச் சாதனைகள் செய்தார் உழைத்து!

தொடரட்டும் தொண்டுகள் 

நீடு.


மதுரை பாபாராஜ்

Labels:

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 நண்பர் IG சேகர் அனுப்பிய படம்



உங்களுக்கு மட்டும்தான் ஒட்டி உறவாடும்

இந்தநிலை உள்ளதென்றே எண்ணவேண்டாம் -- எங்களுக்கும்

உண்டிங்கே! மீண்டெழுவோம் நாங்கள்

கொரோனாவின்

வன்கொடுமை நீங்கி யதும்.


மதுரை பாபாராஜ்

Thursday, July 08, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!

 நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!



வண்ணக் கிளியே! வண்ணக் கிளியே!

வணக்கம் கூறும் வண்ணக் கிளியே!

கடலில் அலைகள் உள்ளது போல

கொரோனா அலைகள் மாறி மாறி

வருகிற தென்றே  சிலரும், இல்லை

வராது என்று சிலரும் உரைக்கின்றார்!

வருமுன் காப்பதே நன்றென சொல்கின்றார்!

முகக் கவசம் போட்டு கைகழுவி

அகவாழ்க்கை மேற்கொள்வோம் இங்கு.


மதுரை பாபாராஜ்

காணொளி அனுப்பியவர் திருமதி.ஜெயலட்சுமி,பெங்களூரு


காணொளி அனுப்பியவர் திருமதி.ஜெயலட்சுமி,பெங்களூரு


 மதுரையில் மழை

07.07.21

மாரியம்மன் தெப்பக் குளத்தில் மதுரையில்

மாரிபெய்த காரணத்தால் நேற்று நிரம்பிய

காணற் கரியகாட்சி! கண்கொள்ளாக் காட்சியிது!

நாடு செழிக்கட்டும் நன்கு.


மதுரை பாபாராஜ்

Tuesday, July 06, 2021

திருமதி உமா பாலமுரளி அனுப்பிய சொல்லோவியம்!

 திருமதி உமா பாலமுரளி அனுப்பிய சொல்லோவியம்!


மொழிபெயர்ப்பு

உனது உள்மனத்தை நன்றி உணர்வில்

நிலைக்கின்ற வேர்களாய் ஊன்றவை! மற்றும்

உனது கிளைகளாக ஆசிகளை நாளும்

படரவிட்டு வாழவேண்டும் என்றும்

உலகில்!

தரமான பண்பே உயர்வு.


மதுரை பாபாராஜ்

திருமதி. கோவிந்தம்மாள் வெங்கடாசலம் நினைவேந்தல் பா!

 திருமதி. கோவிந்தம்மாள் வெங்கடாசலம் நினைவேந்தல் பா!


வணங்குகிறோம் நினைந்து!

அகரம் தொடங்கி அகிலம் முடிய

அகத்தில் பதியவைத்து நற்பண்பை ஊட்டி

அகங்குளிரப் பார்த்தவர்!கடமை முடித்துப் 

பறந்தாரே கூடுவிட்டு! ஏங்குகிறோம் நாங்கள்!

வணங்குகிறோம் நாளும் அனைவரும் சேர்ந்து!

நினைத்தேதான் வாழ்ந்திருப்போம் இங்கு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

Sunday, July 04, 2021

குறள்தூதர் அன்வருக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

 குறள்தூதர் அன்வருக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


05.07.21

குறள்தூதர் அன்வர் அறுபத் திரண்டில்

சிறப்பாய் அடியெடுத்து வைக்கின்றார்! வாழ்க!

குறள்நெறி போற்றிக் குவலயம் மெச்ச

சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

Friday, July 02, 2021

திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!



பிறந்தநாள்: 02.07.21


குறள்நெறி போற்றிக் குவலயம் மெச்ச

சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.


பேச்சாளர் பாவலர் நாடாளு மன்றத்தின்

ஆற்றல் உறுப்பினர் என்றேதான் பன்முக

ஆளுமை கொண்டவர்! புன்னகை பூத்திருக்கும்

கோலமுகம் ஏந்தி மனிதநேயத் தொண்டராக

நாளும் வலம்வரும் நற்றமிழ் ஆர்வலர்!

வாழியவே பல்லாண்டு நீடு.


அன்புக் கணவராம் சேகரும் இல்லறத்

தென்றல்   மகள்களுடன் மற்றும் மருமகன்

நண்பர்கள் உற்றார் உறவினர்கள் சூழ்ந்திருக்க

கண்போன்ற பெற்றோரின் ஆசியுடன்

வாழியவே!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


வாழ்த்தும் இதயங்கள்

மதுரை பாபாராஜ்

வசந்தா

Thursday, July 01, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!

 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!



மொழிபெயர்ப்பு!


வாழ்வில் பலவகைச் சூழல் அனுபவத்தில்

நாமோ பலவடி கட்டி பயன்படுத்திச்

சூழல் உணர்த்தும் இயற்கை அழகினைக்

காணவேண்டும்! இப்படி மாற்றிநாம்  பார்த்தால்தான்

நாமோ மனதில் அமைதியுடன் வாழலாம்!

பார்க்கும் அணுகுமுறை நிம்மதிக்கு

வேராகும்!

வாழ்வோம் சூழல் உணர்ந்து.


மதுரை பாபாராஜ்