Wednesday, March 30, 2016

மேகமே பதில் சொல்!
------------------------------------------
மேகங்களே!
கடலில்
தெக்கு தெக்கு என்று
தண்ணீர் இருக்கிறது!
உங்களை யார்
முகந்துகொள்ள
வேண்டாமென்று
சொன்னது?
கருமேகமாக
மாறி
மழைபொழிய
வேண்டாமென்று
யார்
சொன்னது?
நல்லார் ஒருவர் உளரேல்
அவர்பொருட்டுஎல்லார்க்கும் பெய்யும் மழை
என்று ஔவையார்
சொல்லி இருக்கின்றார்!
அவரது வாக்கு பொய்க்கலாமா?
இங்கே ஒருவர்கூடவா
நல்லவரில்லை?

மேகமே! உன் பதிலென்ன?

மேகத்தின் மறுமொழி

நல்லவர்கள் கெட்டவர்கள் எல்லோரும் சேர்ந்ததுதான்
இவ்வுலகம் பாவலரே! மூலவித்து
செங்கதிரோன்
சொல்வதைக் கேட்போமா நாம்?

நல்லவரோ கெட்டவரோ வெப்ப மயமாக்கி
தொல்லுலகைப் பாழ்படுத்தி நிற்கின்றார் நாள்தோறும்!
எல்லையற்ற தண்ணீரை ஆவியாக்கும்
நற்பணிக்கோ
தொல்லை இதுதான் உணர்.

ஓசோன் படலத்தில் ஓட்டை விழுமளவு
நாசத்தை சந்தித்தும் என்கடமை செய்தாலும்
நாடறிய நல்லவர்கள் வாழ்ந்தாலும்
மேகத்தைக்
கூடுகட்ட என்முயற்சி தோற்கிறதே!
என்செய்வேன்?
பாடுபட்டு பார்க்கின்றேன் நான்.

பணம்

உணவளித்துப் பாருங்கள் போதுமென்று  சொல்வார்!
பணமளித்துப் பாருங்கள் போதுமென்று சொல்லும்
மனமே வராது!  பணம்படுத்தும் பாடு
குணத்தைக் கெடுத்துவிடும் கூறு.

உழைப்பே மதிப்பு

இருக்கும் வரையில் உழைத்தால் மதிப்பு!
இருப்பவ ருக்கே சுமையானால் உன்னைத்
துரும்பாகப் பார்ப்பார்! விலகித்தான் செல்வார்!
பெருமையுடன் உன்கடமை செய்.

இல்லறம்

எனக்குப் பிடித்தவை எல்லாமே கண்ணே!
உனக்கும் பிடிக்கவேண்டும் என்பதில்லை! ஆனால்
தினமும் இருவரும் விட்டுக் கொடுத்தால்
மனமொன்றிப் போகும்! பிணக்குகள்  நீங்கும்!
மணங்கமழும் இல்லறந் தான்.

இப்பிறவியே மெய்!

சென்ற பிறவி நமக்குத் தெரியாது!
எந்தப் பிறவி அடுத்த பிறவியோ?
இன்றெதற்கு?  தேவையற்ற கூச்சல் குழப்பங்கள்?
இந்தப் பிறவி மனிதனாக வாழ்வோம்!
பண்பகமாய் வாழ்வதற்குப்  பார்.


மணிவிழா வாழ்த்துப்பா

நாள் 03.04.2016 பிள்ளையார்பட்டி

மணிவிழா இணையர்
கெஜராஜ்.   மல்லிகா

இல்லற முத்துக்கள்

மகன் கார்த்திக் சுப்பாராஜ்- திரைப்பட     இயக்குனர்
மருமகள் சத்தியப் பிரேமா--
மருமகன் கார்த்திகேயன்
மகள்.         தேவிகாராணி
பேரன்.        சஞ்சய்
-----------------------------------------------------------------
பெற்றோர்கள் ஆசியுடன் உற்றார் உறவினர்கள்
சுற்றத்தார் நண்பர்கள் பிள்ளையார் பட்டியிலே
நற்றமிழால் வாழ்த்த மணிவிழா கொண்டாட்டம்!
அற்புதமாய் வாழ்க மகிழ்ந்து

மணிவிழா காணும் கெஜராஜ் இணையர்
தமிழ்போல வாழ்க! வளமுடன் வாழ்க!
மணிக்குறள் கூறும் அறங்களைப் போற்றி
இனிமையாய் வாழ்கபல் லாண்டு.

மருந்துத் துறையில் நுழைந்தவர் இன்றோ
பெருமை மிளிரும் கலைத்துறை தன்னில்
அருமைப் புகழ்சேர் நடிகராய் ஆனார்!
அருந்தமிழ்போல் வாழ்க வளர்ந்து.

அன்புடன்
மதுரை பாபாராஜ்
வசந்தா

இணைந்து வாழ்த்தும் இதயங்கள்

ரவி-- சுபாதேவி-- சுசாந்த் சிரிராம்
எழிலரசன்--  சத்யபாமா
நிகில் அபிசேக்-- வருண் ஆதித்யா

Labels:

உணவகத்தில்

இட்லியா? தோசையா? பூரியா? பொங்கலா?
இட்லிரெண்டு! தோசரெண்டு! பூரிரெண்டு!பொங்கலொண்ணு!
இட்லிதோசை சட்னியுடன் சாம்பாரு கொண்டுவா!
உப்பிவரும் பூரிக்( கு) உருளைக் கிழங்குவேணும்!
அட்டகாசப் பொங்கலுக்கு சாம்பாரு சட்னிதான்!
எப்படி இந்த உணவு?

ஏசுவைத்தொழு

ஏசுவைத் தொழு

மாசற்ற ஏசுநாதர் நீசர்கள் கூட்டத்தால்
கூடதிர வெங்கொடுமைக் குள்ளானார்! சுற்றிநின்றோர்
நாடதிர தேம்பி அழுதிருந்தார் வெள்ளியன்று!
நாடுபோற்ற மூன்றாம்நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார்!
ஏசுவை எண்ணித் தொழு.

கால சுழற்சி!

நம்குழந்தை பேசவா என்றழைக்கும்! நாமன்றோ
எங்களுக்கு நேரமில்லை என்றே பரபரப்போம்!
இன்று வளர்ந்தபின்  செல்லமே! கொஞ்சநேரம்
எங்களுடன் பேசென்போம்! நேரமில்லை எங்களுக்கு
என்றே விரைந்திருப்பார் பார்.

அலங்கோலம்

சிகை
அலங்காரம்
அன்று!

சிகை
அலங்கோலம்
இன்று!

ஆண்களும்
பெண்களும்
அலங்கோலத்தை
அழகென்றே
சொல்லி
அலைகின்றார்!

நன்மைக்கா
தீமைக்கா
புரியவில்லை!

முட்டுச்சந்து
Cul- de- sac

இப்படித்தான் வாழ்க்கை இதற்குள்தான் வாழ்வென்ற
சுற்றுக்குள் வாழப் பழகிவிட்டால் அன்றாடம்
எத்தனை முட்டு வழிகள் தடுத்தாலும்
அத்தனையும் தாண்டலாம் இங்கு.

அனார்!

அனார்கலி
ஆடல்பேரழகி!
சலீம்
இளவரசன்!
அக்பரின்
மைந்தன்!

அனார்கலி
சலீம்
இரண்டு
மனித அன்பில்
காதல் அரும்பியது!
அரும்பலாமா?
அரச அரண்மணையில்
அகல்விளக்கு
நுழையலாமா?

காதலை
மலரவிடலாமா?

அரும்பு
அரும்பு நிலையிலேயே
இரும்புக் கரத்தால்
கசக்கப்பட்டது!
அனார்கலி
வரலாறானாள்!

ஒன்றின் மகிமை

ஒன்றின்றி ஒன்றில்லை!ஒன்றுடன் ஒன்றாக
ஒன்றித்தான் ஒன்றிலே ஒன்றாகி ஒன்றுக்குள்
ஒன்றுடன் ஒன்றாக்கி ஒன்றாக ஒன்றிடும்
ஒன்றுதான் ஒன்றென் றுணர்.

Tuesday, March 22, 2016

கப்சிப் காராவடை

கப்சிப் காராவடை!

பொங்கலத்தான் கிண்டிவச்சேன்
நடுவுலத்தான் பாத்திகட்டி
சாம்பாரை ஊத்திவச்சேன்
அப்படியே பெசஞ்சாக்க
வாசந்தான் வாசந்தான்
எட்டுதிக்கும் வாசந்தான்
வாசமுன்னா அம்புட்டு
வாசந்தான் ஏவூட்ல

வாசத்த புடிச்சேதான்
ஏமாமன் வந்தாரு
வந்தவர வாசமிங்கே
கொண்டுவந்து சேத்துருச்சு

என்னபாத்து சிரிச்சாரு
அவரபாத்து நாஞ்சிரிச்சேன்
கண்ணால பாத்துபாத்து
வயிறுவலிக்க சிரிச்சுபுட்டோம்

அந்த நேரம் பாத்தேதான்
அப்பாஅம்மா வந்தாங்க
வந்தத்தா நாங்கபாத்தோம்
பாத்ததுமே

கப்புசிப்பு காராவடை!

சட்டத்தை மதி!

இந்த வயதிற்கு மேல்தான் இளைஞர்கள்
வண்டிகளை ஓட்டவேண்டும் என்ற விதியிருந்தும்
அங்கங்கே சட்டத்தை மீறித்தான் ஓட்டுகின்றார்!
கண்முன்னே பெற்றோர் அனுமதிக்கும் காட்சிகளைக்
கண்டு பதறுதே நெஞ்சு.

தொடுவானம்

குடிக்கின்ற தண்ணீர்! விலைகொடுத்து வாங்கு!
படிக்கின்ற கல்வி! விலைகொடுத்து வாங்கு!
முடியாத ஏழையா? வேடிக்கை பாரு!
விடியல் தொடுவானந் தான்.

கலங்காதே!

அவமானந் தன்னை வெகுமான மாக்கும்
உரம்வேண்டும் நெஞ்சில்! உலகம் வணங்கும்!
தளராமல் நின்றால் தலைநிமிரும் வாழ்க்கை!
கலக்கத்தைக் கண்ணே! விரட்டு.

பட்டறிவே மெய்!

கட்டிக் கொடுக்கின்ற சோறும் மனதோடு
தட்டிக் கொடுக்கின்ற சொல்லும் துணையாக
எத்தனைநாள் கூடவரும்? நீயே உணர்கின்ற
பட்டறிவே மெய்யாகும் பார்.

Sunday, March 20, 2016

உழைப்பே வேர்

விதிவழி வாழ்க்கை !நதிவழி தண்ணீர்!
மதிவழி  வீடு !மொழிவழி பேச்சு!
நிதிவழி வர்க்கம் !நெறிவழி ஏற்றம்!
விதியும் மதியும் உழைப்பு.

இருப்பு

இருப்பின் இருப்பே இருப்பாய் இருக்கும்
இருப்பை இழந்தால் உருவம் இழக்கும்
இருப்பில் உலவும் உயிரும் இருப்பின்
இருப்பே மனிதா உணர்.

நன்றை நாடு!

ஒன்றில் இருந்துதான் ஒன்றிங்கே தோன்றிடும்!
ஒன்றெது நன்றெது நம்மனம் சொல்லிடும்!
நன்றைப் புறக்கணித்தால் நன்மை கிடையாது!
நன்மைக்கு நன்றையே நாடு.

மழை

விழுந்து விழுந்து  மலையை நனைத்து
நழுவி நழுவி நதியாய் மணலைத்
தழுவித் தழுவிப் பரவிப் படர்ந்தே
உருண்டு திரண்டு கடலில் கலந்தே
உருவை இழக்கும் மழை.

கடலில் கலந்த மழைநீரை வெப்பம்
சுடச்சுட ஆவியாய் மாற்றிட, மேகம்
மடமடவென்றே முகந்தே சேர்த்துச்
சடசட வென்று மழையைப் பொழிய
தொடர்கதை இந்தப் பொழிவு.

Friday, March 18, 2016

VOV (VOICE OF VALLUVAR)
-----------------------------
யார்யாரோ எங்கேயோ வாழ்ந்திருந்தோம்! வள்ளுவத்தால்
சேர்ந்தேதான் நட்பிழையைப் பின்னும் கலைத்திறனை
ஆர்வமுடன் கற்கின்ற வாய்ப்பில் திளைக்கின்றோம்!
வாழ்வாங்கு வாழ்வோம் உணர்ந்து.

சூரியப் பூக்கள்

சூட முடியாத சூரியப் பூக்களாய்
காதல் நடைமுறையில் எட்டாமல்
வேதனைக்கே வித்தூன்றும் காட்சிகள் ஏராளம்!
காதலே வாழ்க்கையல்ல வாழ்க்கையக் காதலிப்போம்!
காதலும் ஓரங்கம் தான்.

மக்களை மதி!

மக்களாட்சி தத்துவத்தில் ஆட்சிப் பொருளாக
மக்களைப் பார்த்தால்தான் ஆட்சி நிலைத்திருக்கும்!
மக்களைக் காட்சிப் பொருளாய் நினைத்துவிட்டால்
மக்களாட்சி மாக்களாட்சி தான்.

விளிம்பில்

நடந்தால் உளைச்சல்  இருந்தால் உளைச்சல்!
இடமே உளைச்சல் இருப்பே உளைச்சல்!
உடலே உளைச்சல் மனமே உளைச்சல்!
படபடப் பேதான் நிதம்.

வெற்றிடம்

வெற்றிடத்தை வெற்றிடத்தால் வெற்றிடமாய் ஆக்கிவிட்டால்
வெற்றிடத்தில் வெற்றிடமே வெற்றிடமாய்த் தோன்றுமிங்கே!
வெற்றிடம் வெற்றிடமே! வெற்றிடத்தில் வேறென்ன?
வெற்றிடம் வெற்றிடந் தான்.

நாமே காரணம்

நாமே காரணம்

அமைந்திருக்கும் வாழ்வை அமளியாக்கிப் பார்த்தால்
சுமைக்கள மாகும்! உளைச்சலே கூடும்
இமைப்பொழுது நிம்மதியும் காணாமல் போகும்!
அமைதியெல்லாம் நம்கையில் தான்.

கிராம வாழ்க்கை
இயற்கை வாழ்க்கை

கம்மாக் கரையில் நின்று கொண்டு
வேப்பங் கிளையை ஒடித்தே அந்தக்
குச்சியில் பல்லை விளக்கும் காட்சி!

ஆல மரத்து மேடையில் பெரிசுகள்
ஆர அமர உட்கார்ந் தேதான்
அரட்டை அடித்து மகிழும் காட்சி!
ஆகா ஆகா அருமை தானே!

இடுப்பில் குடத்தை சுமந்து கொண்டு
புறணிகள் பலவும் பேசிப் பேசி
வெட்கத் தோடு நடந்து சென்றே
தண்ணீர் எடுக்கும் மகளிர் காட்சி!

வீட்டுத் திண்ணையில் மங்கைய ரெல்லாம்
பல்லாங் குழியை ஆடும் காட்சி
பார்க்கப் பார்க்க பரவசந் தானே!

கிட்டிப் புள்ளுடன் பம்பர ஆட்டம்
சடுகுடு சடுகுடு கோலி குண்டு
சிலம்பம் எல்லாம் இங்கே உண்டு
கீத்துக் கொட்டகை திரப்படம் பார்த்தால்
கூத்து கட்டும் ஆடலைப் பார்த்தால்
ஆகா ஆகா சிரிப்போ சிரிப்பு!

இயற்கை யோடு ஒன்றிய வாழ்க்கை
வெள்ளந்தி யாகப் பேசும் மக்கள்
கிராமந் தானே கிராமந் தானே!

பிடிவாதம் வேண்டாம்!

பிடிவாத வட்டத்தில் இல்லறம் நாளும்
தறிகெட்டே ஓடினால் இங்கே இணக்கம்
இடிமின்ன லாகும்! புயல்மழை தாக்கும்
பறிபோகும் நிம்மதிதான் பார்.

புலவர் இளங்குமரனார்

முகவை இராமானுசரின்
கற்கும் தாகம்
-------------------------------------------------

கவிராயர் வீட்டிற்குள் வந்தார் ஒருவர்
புவிபோற்றும் அய்யாவே! கற்பதற்கு வந்தேன்!
தவிக்கும் எனக்கந்த வாய்ப்பை மறுத்தால்
அளிக்கவில்லை வாய்ப்புதனை என்றென் கழுத்தை
அரிந்தேதான் சாவேன் என்றுரைத்தார் அய்யோ!
அரிவாளும் கையுமாய் கல்வித் துடிப்பைத்
தெளிவாய் உணர்ந்துகொண்டு கற்றுத் தருவேன்
உயிரை விடாதே! கலங்காதே என்றார்!
தெளிவாக நன்னூல் பிறநூல்  உரையை
அளித்த முகவை இராமா னுசனார்
கவிராயர் ஆன நிகழ்வு.

நன்றி:
நூல் இனிக்கும் இலக்கணம்
ஆசிரியர்:
புலவர் இரா.இளங்குமரனார்

ஏழைக்கு வாழ்வளி
----------------------------------------
தேவையற்ற குப்பை எனநாம் எறிந்ததைத்
தேவையென் றிங்கே எடுத்தே நாள்தோறும்
ஆவலுடன் வாழ்வில் பயன்படுத்தும் துன்பத்தில்
ஏழைகள் வாழ்வதோ நாட்டின் அவமானம்!
வாழவைக்கும் நல்லாட்சி தா.

உலைவாயை மூடலாம்

தலைகுனிந்து வந்துநிற்க வேண்டிய மாந்தர்
தலைநிமிர்ந்து வாழ்கின்ற கோலத்தைக் கண்டேன்!
உலைவாயை மூடலாம்! ஊர்வாயை மூடும்
நிலையுண்டோ நற்றமிழே! சொல்

Wednesday, March 09, 2016




கவிதை எழுதவா?

செய்தித்தாள் வீசுபவர் பால்காரர் காய்காரர்
எல்லோரும் வந்து கதவைத்தான் தட்டுவார்!
செல்லமாய்ப் பேரனும் பேத்தியும் சீண்டுவார்!
இவ்வளவு காலை இசைகளை மீறித்தான்
மல்லுகட்டி பாவலன் பாவெழுத வேண்டுமிங்கே?
நல்ல சவால்கள் தாம்.

எங்கே போகிறோம்?

திரைப்படப் பாடலில் ஆங்கிலச்
சொற்கள்!

தமிழ்ப்பாட்டில் தேவையற்ற ஆங்கிலச் சொற்கள்!
தமிழ்த்தாயோ வெட்கித் தலைகுனிந்தாள்! கண்ணே!
கனியிருக்க காய்கவரும் உத்திகள் ஏனோ?
இனியும் திருந்துவாரோ? சொல்.


கரகாட்டம்
-------------------
பல்லாட்டம் சொல்லாட்டம் தள்ளாட்டம் எல்லாமே
உள்ளாட்டம் கொண்டே கரகாட்டம் போடவைத்துத்
துள்ளவைக்கும் அம்மா முதுமைப் பருவந்தான்!
எள்ளிநகை யாடும் உலகு.


காகங்கள்

சப்பாத்தி பூரி மணம்வந்தால் கூட்டமாக
அப்பப்பா எத்தனை காகங்கள் ! நாடிவந்து
அப்படியே கொத்தாகத் தன்னலகில் கொத்தித்தான்
மற்றதை ஏமாற்றும் பார்.


குழந்தைப் பாடல்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
------------------------------------------------------+------
அம்மா இங்கே வாவா
அருமைக் குறளைச் சொல்லித்தா

இந்தோ வந்தேன் என்செல்லம்
குறளே அமுதம் என்செல்லம்

மொழியின் முதலோ அகரந்தான்
தமிழுக்கு அதுவே சிகரந்தான்

உலக மொழிகள் அனத்திற்கும்
முதலாம் எழுத்தே அகரந்தான்!

உலகின் இயக்கம்  இறைவன்தான்
ஆதி பகவன் எனச்சொல்வோம்!

இதுதான் முதலாம் திருக்குறளாம்
கற்பது உந்தன் கடமையாம்

நன்றி நன்றி என்னம்மா!
ஆசை முத்தம் உனக்கம்மா!

ரசித்த காட்சி

அளிகள் மலரில் அமர்ந்தே மதுவைத்
துளித்துளி யாகச் சுவைத்ததை மேலே
கிளிகள் கிளையில் அமர்ந்தே ரசித்த
எழிலில் திளைத்திருந்தேன் நான்.



TEN COMMANDMENTS

ZERO PLUS ONE IS ONE
MOTHERLAND IS SECOND TO NONE

ONE PLUS ONE IS TWO
LIFE IS NOTHING BUT TRUE

TWO PLUS ONE IS THREE
BE USEFUL LIKE PLANTAIN TREE

THREE PLUS ONE IS FOUR
POSITIVE THOUGHTS YOU STORE

FOUR PLUS ONE IS FIVE
WORK HARD AND ALWAYS STRIVE

FIVE PLUS ONE IS SIX
AVOID PLAYING TRICKS

SIX PLUS ONE IS SEVEN
NOTHING BUT HOME IS HEAVEN

SEVEN PLUS ONE IS EIGHT
DISCIPLINE MAKES YOUR LIFE BRIGHT

EIGHT PLUS ONE IS NINE
SMILE MAKES YOUR FACE SHINE

NINE PLUS ONE IS TEN
HUMANISM EARNS YOU CROWN.

பார்த்துப் பழகு!

பரபரப் பான நட்பில்
பக்குவத் தெளிவே இல்லை!
எவரது நட்பென் றாலும்
ஏற்பதற் குள்ளே யோசி!

நல்லவர் தானா? அன்றி
பொல்லா தவரா? என்றே
உள்ளத் தாலே கணித்து
உறவிழை பின்ன வேண்டும்!

வலையிலே சிக்கிய மீனாய்
வம்பினில் மாட்டிக் கொண்டே
நிலைதடு மாற வேண்டாம்!
நிம்மதி இழக்க வேண்டாம்!

Tuesday, March 01, 2016

ஜவ் மிட்டாய்! ஜவ் மிட்டாய்!
--------------------------------------------------------
வாங்க வாங்க ஜவ்மிட்டாய்!
ஓடி வாங்க ஜவ்மிட்டாய்!

உயரமான கம்பொன் றின்
உச்சியில் மிட்டாய் மகுடந்தான்

வண்ணக் கலவை பார்ப்போரின்
கண்ணைக் கவர்ந்தே இழுக்கும் பார்!

குழந்தைகள் கூட்ட மாகத்தான்
கூடி நிற்கத் தொடங்கிடுவார்!

பலவகை யான வடிவங்கள்
பரபரப் பாக செய்திடுவார்!

குழந்தைக் கையில் கடிகார
வடிவில் மிட்டாய் கட்டிவைப்பார்!

இன்னொரு குழந்தை கரத்தினிலே
மயிலின் வடிவம் கட்டிவைப்பார்!

செல்ல மாக கன்னத்தில்
மிட்டாய் பட்டை ஒட்டிவைப்பார்!

இப்பொழுது தெல்லாம் தெருவினிலே
ஏனோ அவர்கள் வருவதில்லை!

அந்தக் காலம் நான் கண்ட
காட்சியை கவிதை ஆக்கிவிட்டேன்!


தந்தை பெரியாரின் தாக்கம் இருப்பதால்
இங்கே மதவெறித் தூண்டில் செயல்படாது!
எங்கே மதவெறிக் கூத்தாட்டம் உள்ளதோ
அங்கே இணக்கம் இறுக்கமாய்  மாறிவிடும்!
என்றும் நடுக்கமே வாழ்வு.



உன்னுள்ளே


உன்னுள்ளே

அவரவர் எல்லைக் குள்ளே
அவரவர் அரச ராவார்!
எவரெவ ரான போதும்
எல்லையை மீறல் தீது!
தவறெனின் ஏற்றுக் கொள்ளும்
தவநிலை ஏந்த வேண்டும்!
தவறிலை என்றால் நிமிர்ந்தே
தனிநடை பயில வேண்டும்!


சிணுங்கியின் சிணுங்கல்
------------------------------------------------+
TOUCH ME NOT PLANT LAMENTS
----------------------------------------------------++---
என்னைத்தான் தொட்டு விளையாடிப் பார்த்திருந்த
சின்னஞ்  சிறுவர் சிறுமியர்--- இன்றோ
தொடுதிரையைத் தொட்டுற வாடுகின்றார்! பார்த்தேன்!
புதுமையில் நாட்டத்தைப் பார்.

தாழ்வாய் நினைக்காதே

ஆடிமாத காற்றிலே அம்மி பறக்குது!
காகிதம் என்னாகும்? என்றே நினைக்காதே!
காகிதம் நேர்வழியா? காற்று  நெருங்காது!
ஆடித் திளைத்திருந்த அம்மி குறுக்குவழி
நாடி இருக்கலாம் காண்.

முகத்தின் அழகு

முகத்தின் அழகு!

நேர்மை நியாயம் இருவிழிக ளாகவேண்டும்!
வாய்மை இதழ்களின் பூமொழிக ளாகவேண்டும்!
கேள்செவிகள் நல்லதையே நாள்தோறும் கேட்கவேண்டும்!
பார்த்தால் முகத்தில் அகம்.