யார் குற்றம்?
------------------------
வரப்பில் நடந்துசென்றான்! வானில் பருந்தின்
விரல்களில் பாம்பு நெளிந்தது! பாம்பு
விரலில் இருந்து நழுவிக் கீழே
வரப்பிலே சென்றோன் கழுத்தில் விழுந்து
மரணத்தைத் தந்தது! பார்.
A man asked an Artist :
How do you make such beautiful things from a stone ?
He replied :
Beauty is already hidden there, I just remove Extra Stone.
Your Happiness is hidden within yourself,
Just Remove Your Worries...
அழகான கற்சிலையை எப்படிச் செய்தாய்?
சிலைசெதுக்கும் சிற்பியிடம் கேட்டார் ஒருவர் !
அழகிங்கே கல்லுக்குள் ஏற்கனவே உண்டு!
விலக்கினேன் தேவையற்ற கற்களை இங்கே
சிலையழகு வந்ததென்றான் பார்.
எது சரி?
--------------------
பெரியவர்கள் காலில் விழுந்தெழும் பண்பைச்
சரியில்லை என்றும் அடிமைத் தனத்தின்
இழிவென்று சொல்லும் கருத்து சரியா?
மரியாதை மற்றும் பணிவென்று சொல்தல்
சரியா? எதுசரி? சொல்.
அளவு மீறினால் அழிவு!
--------------------------------------
கண்மையைப் பெண்கள் அளவாக தீட்டுதல்போல்
நம்தமிழில் இங்கே மொழிக்கலப்பை ஏற்கலாம்!
அண்ணா உரைத்தார்! அளவிங்கே மீறினால்
துன்புறும் அன்னைத் தமிழ்.
மற்றவர்கள் உன்னைக் கவனிக்க வேண்டுமென்று
சற்றும் உரக்கத்தான் பேசாதே! --பக்குவம்
கொண்ட தரமான பண்புகளைப் பார்த்தேதான்
உன்னையிங்கே நாடிவந்து கேட்கவேண்டும்! அத்தகைய
பண்பை வளர்க்கவேண்டும் நீ.
கைக்கிளை!
நாட்டு நடப்பு
----------------------- ---
வருமானம் இல்லை! வகைவகையாய் நோய்கள்
பெருக்கெடுக்கும் காதலுடன் ஒட்டியுற வாட
ஒருதலைக் காதலாக வம்புசெய்து நின்றால்
வருமோ விருப்பம்? விளம்பு.
இறந்தும் வாழ்வோம்!
-----------------------------------
அன்னதானம் நாளும் வயிற்றின் பசியடக்கும்!
இங்கே இரத்ததானம்! போகும் உயிர்பிழைக்கும்!
கண்தானம்! நீங்கள் இறந்தபின்னும் வாழவைக்கும்!
கண்தானம் செய்வோம் மகிழ்ந்து.
சுழற்சி மயக்கம்!
---------------------------------
ஞால சுழற்சியின் எல்லைத் தொகுப்புக்குள்
காலம் இயக்கி இயங்கவைக்கும் வாழ்விலே
காலம் நகர்த்தும் சுழற்சி மயக்கத்தில்
நாளும் இயங்குகின்றோம் இங்கு.
களைகளை நீக்கு!
-------------------------------
சிக்கல்கள் வாழ்க்கையில் தோன்றும்! இயல்புதான்!
அக்கறை கொண்டே களைகளை நீக்கவேண்டும் !
பற்றிப் படரவிட்டால் நிம்மதி போய்விடும்!
சிக்கல் முடிச்சைக் கழற்று.
குழந்தைகளைக் காக்குமா
அரசும் பள்ளிகளும்?
--------------------------------------
பள்ளிக் குழந்தையின் புத்தக மூட்டையால்
அய்யோ! முதுகு வளைந்திடும் என்றேதான்
சொல்கின்றார்! செந்தமிழே! பிஞ்சுகளைக் காப்பதுயார?
நல்லரசே! ஏதேனும் செய்.
அந்தந்தப் பள்ளியின் நிர்வாகம் முன்வந்தே
இந்தக் கொடுமையை இங்கே களையவேண்டும்!
துன்பமுடன் நாளும் முகஞ்சுளித்துச் செல்கின்றார்!
பிஞ்சுகளைக் காத்தல் பொறுப்பு.
புறத்தோற்றம் பொய்!
---------------------------------
கண்களுக்குத் தோன்றும் தெளிவான நீலவானம்
தன்னகத்தே கொண்டுள்ள கூச்சல் குழப்பத்தை
கண்கள் உணராது! மாந்தரும் அவ்வாறே!
கண்களால் காண்பதெல்லாம் பொய்.
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு!
----------------------------------------------------------
அம்மா உணவகம் எல்லோர்க்கும் நல்லதுதான்!
அம்மா! நடுத்தர ஏழை குடும்பத்தைப்
பந்தாடும் டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்!
புண்ணியம் கோடிகோடி உண்டு.
10000000
00000001
--------- -------------------
ஒன்றைத் தொடர்ந்தேதான் பூஜ்யங்கள் ஏழிருந்தால்
என்றும் தலைவராக கோடீஸ் வரரிங்கே!
ஒன்றிங்கே பூஜ்யத்தைத் தொடர்ந்திருந்தால் மக்களாக
என்றும் தெருக்கோடி தான்.
தோல்வி முகட்டில்!
-----------------------------------
வெற்றிப் படிகளில் வாழ்க்கை எனநினைத்துக்
கொட்டி முழக்கிய நேரத்தில்--தட்டிவிட்டுத்
தோல்வியின் தோள்களில் ஏற்றிப் பறந்திருந்தால்
வாழ்க்கையே தோல்விதான் கூறு
முரண்!
--------------------
குளிரூட்டப் பட்ட அறையில் இருந்தும்
வழிந்தோடும் வியர்வை சூடாக என்றால்
பிழிந்து கசக்கித் துவட்டும் கவலை
அளிக்கும் அழுத்தங்கள் தான்.
வாழ்வில் தென்றல் வீசும்!
--------------------------
பெரியோர்கள் கூறும் அறிவுரைகள், நல்ல
வழிகாட்டும் என்றேதான் நம்பவேண்டும் கண்ணே!
கவிழ்க்கின்ற எண்ணம் அவர்களுக் கில்லை!
புரிந்துகொள்! தென்றலாகும் வாழ்வு.
மனவலிமை கொள்!
---------------------------------------
எந்தநோய் வந்தாலும் என்னசெய்யப் போகின்றோம்?
அந்தந்த நோய்க்கு மருந்துவாங்கி சாப்பிடுவோம்!
வந்தநோயைச் சந்தித்து வாழும் மனவலிமை
ஒன்றே குணமாக்கும் கூறு.