Thursday, October 31, 2019

2014 ஆம் ஆண்டு டில்லி சுற்றுலாப் பயணக் கவிதை:

தீன்மூர்த்தி பவன்
------------------------------------------

உலக அமைதிக்குப் பாடுபட்ட நேரு
வலம்வந்து நாளும் பரபரப்பாய் வாழ்ந்த
அழகான இல்லம் வரலாறாய் மாறி
வரவேற்று நிற்கிறதே இன்று.


இந்திராகாந்தி இல்லம்
------------------------------------------
உலக கவனத்தை இந்தியாவை நோக்கி
சுழலவைத்தார் இந்திரா காந்தி! தனது
உயிர்மெய்க் காப்பாளன் காலனாக மாறி
உயிர்பறித்தான்! பூச்செண்டை மண்ணிலே சாய்த்தான்!
தளிரோ கருகுதல்போல் வீழ்ந்து மடிந்தார்!
புவியே அழுததே அன்று.

மகாத்மா காந்தி நினைவிடம்!
----------------------------------------------------------
அன்னியர் பல்லாண்டு பாதுகாத்து ஒப்படைத்த
அண்னலை ஆறுமாதங் கூடஇங்கே காக்கவில்லை!
இந்தியன் சுட்டுக் கொன்றுவிட்டான் பாதகன்!
புன்னகை பூத்து வழிபாடு கூட்டத்தை
தன்னகம் பார்க்க நடந்துவந்த அண்ணலை
குண்டுகளால் தாக்கி அழித்தான் கொடியவன்!
கண்ணீர் ததும்பிநிற்க பார்த்தேன்! துடித்தேன்!
இன்னொரு காந்தி கிடைப்பாரா? ஏங்குகின்றேன்!
அண்ணலைப் போற்றி வணங்கு.

மதுரை பாபாராஜ்




Wednesday, October 30, 2019

திருக்குறள் குழந்தைப்பாடல
------------------------------------------------------
ஒழுக்கம் உடைமை-- 14
--------------------------------------------------------------------
தனிமனித ஒழுக்கம் தலை நிமிர வைக்கும்!
--------------------------------------------------------------------
ஒழுக்கம் உயர்வின் வழியாகும்!
உயிருக்கும் மேலாய்க் காப்போமே!

தடைகள் எத்தனை வந்தாலும்
தலைநிமிர்ந் தேதான் காப்போமே!

ஒழுக்கம் உடையவன் உயர்ந்தவனாம்!
இல்லா தவனே தாழ்ந்தவனாம்!

வேதம் சொல்வோன் கற்றதையே
மறந்து போனால் படித்திடலாம்!
ஒழுக்கந் தவறிப் போனாலோ
இழிந்த குலத்தான் எனச்சொல்வார்!

பொறாமை கொண்ட மனிதனிடம்
செல்வம் என்றும் நிலைக்காது!

ஒழுக்கம் இல்லா மாந்தரிடம்
உயர்வு என்றும் நிலைக்காது!

ஒழுக்கம் என்னும் விளக்கணைந்தால்
வாழ்வில் இருள்தான் சூழுமென்றே
ஒழுக்கந் தன்னைப் போற்றிடுவார்!

ஒழுக்கப் பண்போ இன்பந்தான்!
தவறிய ஒழுக்கம் துன்பந்தான்!

ஒழுக்கம் பேணும் சான்றோர்கள்
தீய சொற்கள் பேசமாட்டார்!

மக்களுடன் ஒத்து வாழாதோர்
கற்றுத் தெளிந்தவர் என்றாலும்
அறிவிலி என்றே பரிகசிப்பார்!

மதுரை பாபாராஜ்

வான்பரப்பு மேலே கடல்பரப்பு கீழிருக்க
வானளக்கத் தங்கள் சிறகுகளைத் தாம்விரித்தே
காலை வணக்கத்தைத் தூதுவிடும் காட்சிகண்டோம்!
வாழ்த்தி மகிழ்கிறோம் இங்கு.

மதுரை பாபாராஜ்
வசந்தா

இறப்பும் நடப்பும்!

இறப்பின் வகைகள் ஆயிரம்! ஆனால்
இறப்பின் பொழுதில் உணர்ச்சிப் பிழம்பாய்
நடப்போம்! தொலைக்காட்சி ஊடக மெல்லாம்
படபடப்போம்! ஆர்ப்பரிப்போம்! சற்றுநாள் செல்லும்!
கடமையில் மூழ்கிடுவோம்! ஒன்றினை விஞ்சி
அடுத்தது ஏற்பட்டால் ஆர்ப்பரிப்போம் மீண்டும்!
தொடர்கதை யாக ஐம்பதாண்டாய்க் காணும்
நிகழ்வுகள் தானே  எனக்கு.

அனிதா சுபஸ்ரீ தளிர்ச்செல்வன் சுர்ஜித்
மனதை உலுக்கிப் பிழிந்த இறப்பு!
மனதில் உறைந்தவை ஏராளம்! கேள்விக்
கணைகளுக் கெங்கே விடை?

மதுரை பாபாராஜ்

இந்தப்பிறவியே உண்மை!

சென்ற பிறவி தெரியாது! வாழ்கின்ற
இந்தப் பிறவி தெரிகிறது!சென்றபின்னே
எந்தப் பிறவி எடுப்போம்  தெரியாது!
உண்மையாய் வாழ்ந்திருப்போம் இன்று.

நல்லதும் கெட்டதும் இப்பிறவிப் பக்கங்கள்!
உள்ளதை உள்ளவாறே ஏற்றுக் கடக்கவேண்டும்!
நன்மைக்கோ இப்பிறவி தீமைக்கோ முற்பிறவி
என்ற நிலைவேண்டாம் காண்.

முந்தைப் பிறவியா? இந்தப் பிறவியா?
எந்தப் பிறவியோ என்றேதான் கேட்பதை
விட்டுவிட்டு உள்ளத்தில் மாசின்றி  உன்கடமைச்
சுற்றை நிறைவேற்று இன்று.

மதுரை பாபாராஜ்



அவா அறுத்தல்

குறள் 369:

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்
துன்பத்துள் துன்பங் கெடின்

சாலமன் பாப்பையா உரை:

ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.


EFFECT OF AVARICE!

Avarice Brings Calamity Demolishing Efficiency Goodness Harming Industriousness Justness Kindness
Loyalty Magnanimity Nobility Obedience Perseverance Quality Reliability Sincerity
Truthfulness Uniqueness Virtue Worthiness and makes You   Zero.

Babaraj

நீயே மாற்றமாய் இரு!

மாற்றத்தை ஏற்கலாம் ஏற்காமல் போகலாம்!
மாற்றமாக நாமிருந்தால்
ஆக்கபூர்வ மாற்றத்தை
மாற்றமாய்  நாம்தந்தே
மாற்றங்கள் ஏமாற்ற
மாகாமல் மாற்றலாம் நாம்.

மதுரை பாபாராஜ்

Tuesday, October 29, 2019

திருக்குறள் குழந்தைப் பாடல்
--------------------------------------------------
அடக்கம் உடைமை-- 13
--------------------------------------------------------------------
அடக்கத்தின் மறுபக்கமே புகழாகும்
--------------------------------------------------------------------
அடக்கம் இருந்தால் ஒளிமயந்தான்!
அடங்காப் பண்போ இருள்மயந்தான்!

அடக்கம் என்பது செல்வந்தான்!
காப்பது நமது கடமைதான்!

இந்தப் பண்பைப் பெரியோர்கள்
உணர்ந்தே இங்குப் புகழ்வார்கள்!
இந்தப் பண்பின் முன்னாலே
மலையின் உயரம் மடுவாகும்!

பணிந்து நடத்தல் சிறப்பாகும்!
செல்வம் உள்ளோர் கடைப்பிடித்தால்
மேலும் மதிப்பார் உலகத்தார்!

ஐம்புலன் தன்னை ஒருபிறப்பில்
அடக்கி வாழ்ந்தால் எழுபிறவி
தன்னைக் காக்கும் கவசந்தான்!

கட்டுப் பாடே இல்லாமல்
நாவைப் பேச அனுமதித்தால்
துன்பந் தன்னில் சிக்கவைக்கும்!

தீமை விளையும் ஒருசொல்லால்
முன்னர் செய்த அறங்களெல்லாம்
விழலுக் கிறைத்த நீராகும்!

நெருப்புக் காயம் ஆறிவிடும்!
தீச்சொல் சுட்ட புண்மட்டும்
உள்ளந் தன்னில் வடுவாகும்!

சினத்தைக் காத்துக் கற்றறிந்தே
அடக்கம் கொண்டு வாழ்பவனை
அறங்கள் நாளும் காத்திருக்கும்!

மதுரை பாபாராஜ்

தமிழுணர்வு கொள்!

என்னமதம் என்னசாதி என்றுகேட்டால்
நாமெல்லாம்
இந்துஎன்று சொல்லாமல் நாங்கள் தமிழென்றே
அஞ்சாமல்   சொல்லி நிமிர்ந்திருப்போம்
மண்ணகத்தில்!
செந்தமிழே நம்மதம்! சொல்.

மதஉணர்வு  நம்மை விலக்கிப் பிரிக்கும்!
மதத்தை விலக்கி தமிழுணர்வு கொண்டால்
மகத்தான ஒற்றுமை நல்லிணக்கம் தோன்றும்!
அகத்தில் தமிழுணர்வு கொள்.

மதுரை பாபாராஜ்

சந்தேகம்!

சந்தேக தீப்பொறியைச் சூழ்நிலைகள் தூண்டிவிட்டால்
வெந்துழலும் உள்ளம் அமைதி இழந்துவிடும்!
எந்ததேரம் பார்த்தாலும் தன்னந் தனிமையிலே
இங்கே தவித்திருக்கும் சொல்.

கேட்கத் துடித்தாலும் கேட்கத் தயங்கிநிற்கும்!
கேட்கின்ற கேள்விகளை ஒத்திகைப் பார்த்திருக்கும்!
ஓட்டைப் பானையிலே நண்டாக கேள்விபதில்
காட்சி  எடுத்திருக்கும் ஆனால் விடையின்றி
தீப்பொறி சுற்றிவரும் சூழ்ந்து.

மதுரை பாபாராஜ்

இயற்கையின் நியதி!

பூக்கள் மலர்வதைப் பார்த்தால் மனங்குளிரும்!
பாக்கள் படைத்தால் கவிஞன் மனங்குளிரும்!
ஈக்கள் உறவாட பூக்கள் மனங்குளிரும்!
ஊற்றால்  குளிரும் உலகு.

மதுரை பாபாராஜ்

Monday, October 28, 2019

தையலின் தையல்!

தையல் இயந்திர ஊசியில் நூல்நுழைப்பாள்!
கையால் உருளையைச் சுழற்றியே கால்களால்
ஓசை எழுப்பவே கால்தட்டை ஆட்டுவாள்!
தைப்பாள் துணியை நூலால்தான் நேர்த்தியாக!
தையலின் ஆற்றலைப் பார்.

மதுரை பாபாராஜ்
29.10.19

திருக்குறள் குழந்தைப் பாடல்
--------------------------------------------------
நடுவுநிலைமை -- 12
-----------------------------------------------
நடுநிலையே சிறந்த அறமாகும்
-------------------------------------------------------

நீதி என்றும் வழுவாமல்
நடுநிலை காப்பதே அறமாகும்!

இப்படி உள்ளவர் செல்வங்கள்
பரம்பரைக் கெல்லாம் உதவிடுமே!

நடுநிலை தவறும் பண்பாலே
மலைபோல் செல்வம் குவிந்தாலும்
அற்பம் என்றே ஒதுக்கிவிடு!

நடுநிலை போற்றிய பண்பாளன்
என்பதைப் புகழும், பழியுந்தான்
உலகில் காட்டும் அளவுகளாம்!

வறுமையும் வளமும் அணியல்ல!
நடுநிலை சான்றோர் அணியாகும்!

நடுநிலை விட்டே தவறிவிட்டால்
கெடுநிலை அவனை அழித்திடுமே!


நீதி மானின் வறுமையினை
பெருமை என்பார் சான்றோர்கள்!

சாயா துலாக்கோல் போலத்தான்
நடுநிலை கொண்டோர் சான்றோராம்!

ஒருதலைத் தீர்ப்பு சொல்லாத
நியாயப் பண்பே நடுநிலையாம்!

நுகர்வோர் நிலையில் தான்நின்று
வணிகம் செய்தல் வணிகருக்கு
சிறப்பைக் கொடுக்கும் ஒழுங்காகும்!

மதுரை பாபாராஜ்



இன்றுபோல் என்றும் வாழ்க!

முத்தமிழ் மூவேந்தர் முப்போகம் மும்மாரி!
எப்போதும் வாழ்த்திசைத்துப் பாடும் உவமைகள்!
இப்படியே மூவரும் என்றென்றும்  அன்பாலே
 ஒன்றுபட்டே ஒற்றுமையாய் வாழ்க! உள்ளத்தில்
தந்தை சிதம்பரம் அய்யாவைப் பின்பற்றி
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

போதும் சுர்ஜித் எழுந்து வா!

சுர்ஜித்  செல்லம் எழுந்து வா
நலமாய் நீயும் எழுந்து வா

மீட்புப் பணிகள் தொடர்கிறது
அஞ்சாமல் நீ எழுந்து வா

நாடே உனக்கு வழிபடுது
இன்றே நீயும் எழுந்து வா

சாதி மதங்கள் கடந்தேதான்
ஒன்றாய் நின்றே தொழு கின்றோம்

வேதனை தீர்க்க எழுந்து வா
வெற்றி்யோடு எழுந்து வா

அமைச்சர், களப்பணி யாளர்கள்
அயரா மல்தான் உழைக்கின்றார்

தம்பி உடனே எழுந்து வா
ராஜா உடனே எழுந்து வா

பெற்றோர் உற்றார் உறவினர்கள்
மகிழ்ந்தே வாழ எழுந்து வா

மதுரை பாபாராஜ்

Sunday, October 27, 2019

நடிகரும் நாமும்!

கோடிகோடி யாக நடிகர் வளம்சேர்க்க
கோடியிலே வாழ்கின்ற மக்கள் படம்பார்க்க
ஓடி விரைகின்றார்,! இந்தப் பொழுதுபோக்கோ
நாடித்தான் செல்வோர் உரிமைகள் என்றாலும்
ஈடில்லா பற்றால் இவர்படமா? பார்க்கவேண்டாம்!
சாடி, அவர்படமா? நன்றாய் இருக்காது!
வாதிட்டே நேரத்தை வீணடிக்க வேண்டாமே!
வேதனையும் உள்ள உளைச்சலுமே கூடுமிங்கே!
ஆகமொத்தம் அந்த நடிகர் இதையெல்லாம்
சாதனையாய் எண்ணி் நகர்ந்திடுவார்!
மக்கள்தான்
ஊடகமாய் மாறிமாறி சண்டையிட்டு நிற்பார்கள்!
வேதனைப் போக்கினை மாற்று.

மதுரை பாபாராஜ்



விளையாட முடியாது



விளையாட முடியாது பாப்பா!

ஓடி விளையாடு பாப்பா! நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!

பாரதியே பாடிவிட்டாய் அன்று!
பாரதியே! என்ன நிலை இன்று?

விளையாடப் போகாதே பாப்பா
வரிசையாக தேர்விருக்கு பாப்பா!

மூணாவது வந்துட்டா பொதுத்தேர்வு
ஐந்தாவது வந்துட்டா பொதுத்தேர்வு

எட்டாவது வந்துட்டா பொதுத்தேர்வு
பத்தாவது பதினொண்ணு பொதுத்தேர்வு

பன்னிரண் டாம்வகுப்பில் பொதுத்தேர்வு
இதமுடிச்சு கல்லூரி போகணுமே

கல்லூரிக்கு போகணுமா நுழைவுத்தேர்வு
மருத்துவ ராகணுமா நீட்தேர்வு
பொறியியல் சேரணுமா ஒரு தேர்வு

இப்படித்தான் தேர்வுக்கே படிக்கவேண்டும்
அதுக்குத்தான் சொல்றேன்நான் பாப்பா

விளையாடப் போகாதே பாப்பா
நீ
தேர்வுக்குத் தயாராகு  பாப்பா!

எத்தனையோ தேர்விருக்கு பாப்பா!
அத்தனைக்கும் தயாராகு பாப்பா!

மதுரை பாபாராஜ்




Saturday, October 26, 2019

இப்படித்தான் கொண்டாட்டம்!

நம்பிக்கை உள்ளதோ இல்லையோ இல்லத்தார்
அன்பில் கலந்தேதான் ஒன்றாக நின்றேதான்
சின்னஞ் சிறுசுகள் உள்ளம் மகிழ்ந்திருக்க
கொண்டாடி ஊருடன் ஒத்துவாழ்ந்தால்  நிம்மதி!
நம்கொள்கை நம்முடன் தான்.

புராணக் கதைகளை நம்பியிங்கே யாரும்
தயாராய் கொண்டாடும் போக்கில்லை! ஏதோ
விதவிதமாயப் புத்தாடை போடுவதும் பண்டம்
விதவிதமாய்ச் செய்தே உறவுகள் சேர்ந்து
படம்பிடித்துப் பார்க்கும் பொழுதுபோக்காய் இங்கே
படபடப் பட்டாசைப் பிள்ளைகள் போட்டு
அகமகிழ்வு கொள்கின்றார் காண்.

மதுரை பாபாராஜ்

சுர்ஜித்தே எழுந்து வா!

ஆழ்துளை ஆழக் கிணற்றுக்குள் சுர்ஜித்தே!
ஆழத்தில் நேற்று விழுந்துவிட்டாய்!  இங்கேபார்!
வேழமென நீயிங்கே மீண்டெழுந்து வந்துவிடு!
நேயமுடன் வேண்டுகிறோம் வா.

அரசும் துறைகளும் மக்களும் சேர்ந்து
பலவழியில் உன்னைத்தான் மீட்டெடுத்துப்
பார்க்க
சுழன்றே பணியாற்றி நிற்கின்றார் சூழ்ந்து!
நலமுடன் நீயெழுந்து வா.

மதுரை பாபாராஜ்
26.10.19
8.58  pm

Thursday, October 24, 2019

தங்கை ராஜிக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

23.10.19


என்தங்கை ராஜிக்கு இன்று பிறந்தநாள்!
பன்முக ஆற்றலுடன் அன்றிருந்து இன்றுவரை
நன்றாக இல்லறத்தைக் கண்ணுங் கருத்துமாக
பண்புடன் எல்லோரும் போற்றுகின்ற வண்ணத்தில்
அன்பாய் நடத்துவதை வாழ்த்து.

இன்பத்தில் துன்பத்தில் தோளோடு தோள்நின்று
உங்கள் குழந்தைகளை நாளும் வளர்த்தேதான்
இங்கே படிக்கவைத்து ஜோதிபாவா காட்டுதலில்
நன்மக்க ளாக்கியதை வாழ்த்து.

மகன்கள் மருமகள்கள் மற்றும் உங்கள்
மகளும் மருமகனும் பேரன்கள் பேத்தி
அகங்குளிர சூழத்தான் அன்புடன் வாழ்க!
மகத்தாக பல்லாண்டு வாழியவே நீடு!
சிறப்பாக வாழ்கபல் லாண்டு.

 வாழ்த்தும் இதயங்கள்
மதுரை பாபாராஜ்-- வசந்தா

உடன்வாழ்த்தும் இதயங்கள்
ரவி-- சுபா-- சுசாந்த்
எழில் -- சத்யா-- நிகில்-- வருண்


தம்பி கெஜராஜ் பல்லாண்டு வாழ்க!

பிறந்தநாள்: 24.10.19

திரைத்துறையில் பல்வேறு வேடங்கள் ஏற்றே
கலைத்திறமை தன்னை வெளிப்படுத்தும் தம்பி
வளர்தமிழ்போல் வாழியவே  சுற்றங்கள் சூழ!
நலமுடன் வாழ்கபல் லாண்டு.

வாழ்த்தும் இதயங்கள்
மதுரைபாபாராஜ்--வசந்தா

உடன்வாழ்த்தும் இதயங்கள்
ரவி-- சுபா-- சுசாந்த்
எழில்-- சத்யா-- நிகில்-- வருண்

Tuesday, October 22, 2019

தனிமையிலே இனிமை காண முடியுமா

தங்குமடம்.!

தங்கும்  மடங்கள்தான் இவ்வுலகம்! இல்லங்கள்!
இன்றிருப்போர் நாளையில்லை! நேற்றிருந்தோர் இன்றில்லை!
என்றிருக்கும் வாழ்விலே
ஆணவத்தில் துள்ளுகின்றார்!
என்னுடைமை உன்னுடைமை என்றே விலகிநிற்கும்
தன்னலத்தில் வாழ்கின்றார்!
தன்னிலையில் தாழ்கின்றார!
எந்தப் பொருளும், எவரும் வரமாட்டார்
உன்னுடன் அந்த இறுதிப் பயணத்தில்!
உன்முறை என்றுவரும் என்றே தெரியாது!
வந்தாலும் எப்படி எங்கே? தெரியாது!
மண்ணகமே தங்குமடம் மாந்தரே துள்ளவேண்டாம்!
தங்குமடம் எத்தனைநாள்? சொல்.

மதுரை பாபாராஜ்

தங்க ஊசி!

தங்கஊசி  என்பதால் கண்ணுக்குள் குத்தினால்
புண்படத்தான் செய்யும்! எதையுமே எல்லைக்குள்
வைத்துப் பழகினால் நிம்மதியாய் வாழலாம்!
எச்சரிக்கை என்றுமே நன்று.

மதுரை பாபாராஜ்

நண்பர் கவிஞர் முருகுவின் வயல்

இயற்கையுடன் ஒன்றி இயல்பாக வாழும்
அழகுதமிழ் ஆசான் முருகேசன் நாளும்
வயலில் உழந்தும் உழவின் உழைப்பின்
தயவிலே வாழ்கின்றார் சாற்று.

பாபா

Monday, October 21, 2019

ஓவியர் மனு இளம்பன் அவர்களுக்கு வாழ்த்து!

வலக்கை இழந்தும் இடக்கை கொண்டே
அழகாக ஓவியம் தீட்டுகின்ற ஆற்றல்
மலைக்கவைக்க நாமோ ரசிக்கின்றோம் பார்த்து!
வளமுடன் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

Sunday, October 20, 2019

வாழ்வின் இயல்பு!

முதுமை வயதில்  இணையர் இருந்தும்
மெதுவாய் நகர்கிறது நாள்தோறும் நாள்கள்!
இணையரில் இங்கே ஒருவரில்லை என்றால்
தினமும் பொழுதைக் கழித்தல் கொடுமை!
இணையின்றி வாழ்தல் துயர்.

இருவராய் வாழ்ந்தோர் ஒருவராய் வாழும்
ஒருநிலை வந்தால் துரும்பையும் இங்கே
நகர்த்த துணையினைத் தேடும் அவலம்
அகத்தினில் ஏங்கவைக்கும் இங்கு.

மதுரை பாபாராஜ்

துப்பார்க்குத் துப்பாய

மழைவேண்டும்! தேவைக் கதிகமாய் வேண்டாம்!
நிலைகொள்ளா வெள்ளமாய் வந்தே அழிக்கும்
மழைவேண்டாம்,!   இங்கே உழவால் உலகம்
தழைக்கும் மழைவேண்டும் பெய்.

மதுரை பாபாராஜ்


யாரும் எளிதாக "சுட்டு விட" முடியாத சுட்டசெங்கல்
சிந்துவெளிச் செங்கல்!
#
"சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு" சங்க இலக்கியம்

ஆர்.பாலகிருஷ்ணன்

செங்கல்லைப் பண்டைய
செந்தமிழன் செம்மையாய்த்
தன்வாழ்வில் பக்குவமாய் நாளும்
பயன்படுத்தி
வந்ததைக் கீழடி ஆய்வுகள் காட்டுவதைக்
கண்டே நிமிர்ந்தோம் மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

ஜான்மோசஸ்

ஜான்மோசஸ் பிறந்தநாள் வாழ்த்து

பச்சை நிறத்துண்டு தோளிலே, வேட்டியை
அட்டகாச மாக இடுப்பிலே சுற்றித்தான்
கட்டியே வெண்நிறச் சட்டை  மடக்கிவிட்டு
எப்போதும் கண்ணாடி தன்னை அணிந்தேதான்
நற்றமிழில் பாரதி பாக்களுடன் மேடையிலே
கொட்டி முழக்குகின்ற ஜான்மோசஸ் வாழியவே!
வெற்றியுடன் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்
வசந்தா


Saturday, October 19, 2019

வள்ளுவம் தந்த ஊக்கத்தில்! 1

பெற்றோரை வழிபடு!

குறள் 1:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
அகரம் எழுத்தின் முதன்மைபோல் பெற்றோர்
முதன்மையாம் இங்கே நமக்கு.

குறள் 2

கற்றதனால் ஆன பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
பெற்றோரைப் பேணி வணங்காதோர் கற்றிருந்தும்
சற்றும் அறிவற்றோர் சாற்று.

குறள் 3:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
மலர்போன்ற நல்மனப் பெற்றோர் மகிழ
வளர்ந்தாலே வாழலாம் நீடு.

குறள் 4:

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
சீண்டும் விருப்புவெறுப்  பில்லாத பெற்றோரை
வேண்டிவாழ்ந்தால் துன்பமில்லை சொல்.

குறள் 5:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
அருமையான பெற்றோரை உள்ளம் உணர்ந்தால்
இருவினைகள் தீண்டாது செப்பு.

குறள் 6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
நெறிப்படுத்தி ஆசைகளை விட்டுவிட்ட
பெற்றோர்
நெறிநடந்தால் வாழலாம் நீடு.

குறள் 7:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
இணையற்ற பெற்றோர் வழிநடந்தா
லன்றி
மனக்கவலை தீர்வதில்லை சாற்று.

குறள் 8:

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
அறக்கடலாம் பெற்றோர் அறிவுரை  கேட்போர்
பிறகடலை நீந்தல் எளிது.

குறள் 9:

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
மேனிப் பொறிகள் இருந்துமற்ற தன்மைபோல்
தான்பெற்றோர் தாள்வணங்கார் வாழ்வு.

குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
பிறவிக் கடலைக் கடப்பவர்கள் பெற்றோர்
தடம்தவிர்த்தால் ஏலா துணர்.

மதுரை பாபாராஜ்






























Thursday, October 17, 2019

வசந்தாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

17.10.2019

இல்லற ஓவியத்தை நல்லறத் தூரிகையால்
எல்லோரும் போற்றுமாறு நாளும் படைத்துவரும்
நல்ல மனம்கொண்ட எங்கள் வசந்தாவே!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.

வாழ்த்தும் குடும்பத்தார்
மதுரை பாபாராஜ்
சுபாதேவி-
ரவி
சுசாந்த்
எழிலரசன்
சத்யபாமா
நிகில் அபிசேக்
வருண் ஆதித்யா

Wednesday, October 16, 2019

Attitude Altitude!

Trials and tribulations
In the life
Create formidable
Stumbling blocks!
Weak minded people
Become cowards!
And scapegoats!
Strong minded people
With their willpower
Think positively and
Convert the stumbling blocks
Into stepping stones
And walk over with a smile.
Attitude chistles your Altitude!

S.P.Babaraj

Tuesday, October 15, 2019

அடுக்ககம் போன்ற அழகான கூட்டில்
மிடுக்காக வண்ணப் பறவைகள் கூடி
எடுப்பாக வாழ்கின்ற ஒற்றுமையில் வாழ்க்கை!
கொடுக்கும் வணக்கத்தை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

Friday, October 11, 2019

திரு.பி்.கே. சந்திரசேகரன் அவர்களுக்கு
90 -- வது பிறந்தநாள் வாழ்த்து!

11.10.2019

இலக்கியத்  தென்றல் சந்திர சேகர்
வயதின்று தொண்ணூறு! பார்த்தால் இளைஞர்!
செயல்வேகம் கண்டே வியக்கின்றேன்!
இந்த
வயதிலும் ஆர்வமுடன் தொண்டாற்றும் வீரர்!
நயத்தக்க நாகரிகம் உள்ள மனிதர்!
நலமும் வளமும் நனிசூழ வாழ்க!
வளர்தமிழ்போல்  வாழ்கபல் லாண்டு.

உங்கள் ஆசிகளை நாடும்
மதுரை பாபாராஜ்
வசந்தா.      

Thursday, October 10, 2019

இந்தியாவின் மாண்புமிகு மோடி--
சீனாவின் மாண்புமிகு ஜின்பிங்
வரலாற்றுச் சந்திப்புக்கு வாழ்த்து!

11/12.10. 2019-- மகாபலிபுரம்!

உலகம் வள்ளுவத்தைப் பின்பற்றட்டும்!

மாமல்லர், பாறையில் யானைப் படம்வரைய
மாமல்லர் தந்தை அதைப்பார்த்து சிற்பிகளால்
பாறைகளில் கோயில்  செதுக்கி நகருக்கு
மாமல் லபுரம் பெயர்வைத்  ததாக செய்தியுண்டு!
ஊரறிய பல்லவரைப் போற்றும் கலைநகரம்
பாரறிய சுற்றுலா மையமாக மாறியதே!
காலம் அளித்த கொடை.

இந்தியாவின் மாண்புமிகு மோடி அவர்களும்
செஞ்சீனா மாண்புமிகு ஜின்பிங் அவர்களும்
சந்தித்துப் பேசுகின்றார்  மாமல் லபுரத்தில்!
இந்த வரலாறை ஏற்படுத்தும் வல்லமை
கொண்டிருக்கும் ஆளுமையை வாழ்த்து.

இந்தியா சீனா உறவு வலுப்பெற்றே
எங்கும் அமைதியுடன்  வாழட்டும் மக்களெல்லாம்!
அன்பில் மணக்கின்ற நட்பு மலரட்டும்!
வன்முறை தீவிர வாதம் மறையட்டும்!
நன்னெறிகள் வள்ளுவத்தைப் பின்பற்றி
நாடெல்லாம்
தங்கித் தழைக்கட்டும் சாற்று.

மதுரை பாபாராஜ்




மதிப்பிற்குரிய சி.என் அவர்களுக்குப்
பிறந்தநாள் வாழ்த்து!

10.10.2019

பென்னர் கணக்குத் துறையின் தலமையில்
கண்ணுங் கருத்துமாய் நாளும் உழைத்தேதான்
முன்னேறி வந்தவர்! எங்களுக்கோ ஆசான்தான்!
தன்னல மின்றியே கற்றுக் கொடுத்தவர்!
அன்றிருந்து இன்றுவரை மாறாத நட்புடன்
பன்முக ஆற்றலுடன் பண்பகமாய் வாழ்கின்றார்!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

Wednesday, October 09, 2019

பேச்சைக் குறை!

பேசுபேசு என்றே இடைவெளி இல்லாமல்
பேசுகின்ற கோலத்தில் வாழ்கின்றோம் நாள்தோறும்!
கைபேசி கையில் இருப்பதால் எப்போதும்
வைக்காமல் காதிலே வைத்தவண்ணம்
பேசுகின்றோம்!
கைவலிக்கும் என்றே செவியில் ஒலிகேட்க
மைக்கைத்தான் வைத்தே மணிக்கணக்கில் பேசுகின்றார்!

நடந்தாலும் பேச்சு! மிதிவண்டி பைக்கில்
கடந்தாலும் பேச்சு! விபத்தைத்  தெரிந்தும்
அடங்காமல் பேச்சு! தனிமையில்  தானாய்
நவரசங் காட்டித்தான் கையசைத்துப் பேசும்
உவகையை என்னென்பேன் நான்!

மதுரை பாபாராஜ்

Tuesday, October 08, 2019

படுத்துகின்றாய்!

08.10.19

முதுமைப் பருவம் கணவனைக்  கூட
படுத்துகின்றாய் என்றே சினப்பாள் மனைவி!
எடுத்தெறிந்து பேசும் நிலைகளை நாமோ
துடைத்தெறிந்து வாழப் பழகு.

மதுரை பாபாராஜ்

Monday, October 07, 2019

இந்தியர் என்றே சொல்வோம்

Sunday, October 06, 2019

மாறுபாடு வேறுபாடு!

மாறுபாடு வேறுபாடாய் மாறிவிட்டால் கூறுபோட்டு
வேறுபாடு வேரோட வைத்தே பிரித்துவிடும்!
மாறுபாடு கொண்டாலும் வேறுபாடு தோன்றாமல்
மாறுபாடு கொள்ளலாம் இங்கு.

மதுரை பாபாராஜ்

Thursday, October 03, 2019

வான்புகழ் வள்ளுவன் வான்தொட்டு நின்றிருக்க
வானகத்தில் செங்கதிரோன் மெல்ல எழுந்தேதான்
பூமணக்கும்  இவ்வுலகைத்  தட்டி எழுப்புகின்ற
கோலத்தைக் கண்டேதான் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

Wednesday, October 02, 2019

பறித்தது யார்?

பறவைகள் கூடுகட்டி வாழ்ந்த இடத்தில்
மடமட வென்றே அடுக்ககம் கட்டிக்
குடியேறி வாழ்கின்றோம்! அந்தப் பறவை
குடியேறத் தத்தளிக்கும் காட்சியைக் கண்டால்
துடிக்கிறதே உள்ளம் துவண்டு.

தோப்பாக நின்ற இடமெல்லாம் வீடுகளைத்
தோதாக கட்டிக் குடியேறி மற்ற உயிரினங்கள்
வேகமாக வந்துபோகும் பாதை
பறித்துவிட்டோம்!
பாதகம் செய்கின்றோம் பார்.

இங்கே திறந்திருக்கும் சாளரங்க ளுக்குள்ளே
கொஞ்சம் இடங்கிடைத்த போதும் துழைந்தேதான்
தங்க இடம்தேடும் புள்ளினத்தை ஓடிஓடி
எங்களைத் தொந்தரவு செய்யாதே  என்றேதான்
சன்னல் கதவுகளை மூடி விரட்டுகிறோம்!
நம்மைப் புறாக்கள் வியப்புடன் நோக்குதடா!
என்ன பரிதாபம்? போ.

மதுரை பாபாராஜ்


Tuesday, October 01, 2019

கதவைத் திறப்பதா வேண்டாமா என்றே
கதவைப் பிடித்தேதான் நிற்கின்ற மாதே!
உடையழகும் உன்னழகும் தச்சன்  திறனின்
மகத்துவத்தைப் பாடுகின்ற தே.

மதுரை பாபாராஜ்

அன்பே நீ அங்கே