Monday, March 23, 2009

கம்பராமாயணக் காட்சி

---------------------------------------
தசரதன் உடலை எண்ணெய்க் கொப்பரையில் இடுதல்
----------------------------------------------------------------------------------------------
"செய்யக்கடவ செயக்கு உரிய
சிறுவர் ஈண்டையர் அல்லர்;
எய்தக் கடவபொருள் எய்தாது
இகவா என்ன இயல்பு?" என்னா,
"மையல் கொடியாள் மகன் ஈண்டு
வந்தால் முடித்தும் மற்று" என்னாத்
தையல் கடல்நின்று எடுத்து அவனைத்
தைலக் கடலின்தலை உய்த்தான்" (2010)
========================================================

தசரத மன்னன் உயிர்பிரிந்த போது
மகன்கள் ஒருவரும் பக்கத்தில் இல்லை!
மகனாம் பரதன் வரும்வரையில் வேந்தன்
உடல்தன்னைத் தைலக் கடாரத்தில் இட்டுக்
கெடாமல் இருக்குமாறு பாதுகாக்கச் சொன்னான்
அறவோன் வசிட்டன்தான் அங்கு.
-------------------------------------------------------------------------------------

Saturday, March 21, 2009

ஆக்கலும் மனிதனே ! அழிப்பதும் மனிதனே

போர்க்களம் -- விமானத்தைக் கண்டு பதறும் சிறுவர் சிறுமியர்
-------------------------------------------------------------------------------------
பறக்கும் விமானத்தைப் பார்த்தால் உள்ளம்
சிறகடித்துத் துள்ளும் மகிழ்ந்து -- பதறுகின்றோம்
நாங்கள் விமானத்தைப் பார்த்தால் ! குண்டுகளை
ஏந்திவந்து தாக்குமோ ? என்று.

ஆக்கலும் மனிதனே ! அழிப்பதும் மனிதனே !
-----------------------------------------------------------------------------
விண்ணில் விமானம் பறக்கவிட்டுச் சாதித்தான்!
மண்ணில் அனைவரும் கண்டு மகிழவைத்தான் !
குண்டுகளால் தாக்கி அழியவைத்தான்! எல்லாமே
தந்தான் மனிதன்தான் ! பார்.

Friday, March 20, 2009

குழந்தை மனம்

பாசமழை பெய்து விளையாடக் கூடுகின்ற
நேசமிகு பச்சைக் குழந்தைகள் -- வேகமாய்ச்
சீறும் எரிமலையாய் மாறியே அப்படியே
வேறுபட்டும் நிற்பார் சொல்.

வேறுபட்டார் என்றே விலக்கிவிட்டுப் போய்விட்டால்
மாறுபாட்டை எல்லாம் மறந்துவிட்டு -- மாறிக்
குழந்தைகள் மீண்டும் ஆடிநிற்பார் கூடி!
குழந்தைகள் என்றும் புதிர்.

கடவுளே ஏற்காத பக்தி

மன்னிக்கும் பண்பற்ற பக்தியை எந்நாளும்
எந்தக் கடவுளும் ஏற்கமாட்டர் -- என்றும்
மனத்தில் பெருந்தன்மைப் போக்கை வளர்த்து
மனையில் நிம்மதியைத் தா.

நடுநிலையைப் பேண்

பெற்ற திருமகளா ! வந்த மருமகளா!
குற்றம் எவர்செய்த போதிலும் -- சற்றும்
நடுநிலை கோணாது சொல்லித் திருத்து!
நடுநிலையே ஒற்றுமையின் வேர்.

Monday, March 16, 2009

தமிழ் மொழிபெயர்ப்பு

POET KABIR'S POPULAR LINES:
-------------------------------------------------------
IF I TURN THE WHOLE EARTH INTO PAPER, ALL THE TREES INTO PENS
AND THE SEVEN SEAS INTO INK , EVEN THEN THE GREATNESS OF
THE LORD CANNOT BE FULLY DESCRIBED.
===========================================================

தமிழ் மொழிபெயர்ப்பு
----------------------------------------
இவ்வுலகைத் தாளாக்கி, நிற்கும் மரங்களை
எல்லாம் எழுதுகோல்கள் ஆக்கி , எழுகடலை
மையாக்கி னாலும் கடவுள் மகத்துவத்தை
வர்ணிக்க ஏலாது காண்.

மதுரை பாபாராஜ்

வாழையடி வாழை

-----------------------------------------
ஓடி விளையாடிக் கீழே விழுந்தெழுந்தும்
பாடிப் பறக்கின்ற பால பருவத்தை
ஊதியே தள்ளிவிட்டுப் பள்ளிக்குச் செல்வதற்கு
நாடியே நிற்பார் அடுத்து.

பள்ளிப் பருவத்தில் சாதனை முத்தை
அள்ளி அரவணைக்க ஊக்கமுடன் கற்றிடுவார்!
பிள்ளை படிக்கும் அழகினைப் பெற்றோர்கள்
சொல்லி மகிழ்ந்திருப்பார் காண்.

கல்லூரிக் காளைப் பருவத்தைத் தொட்டேதான்
எல்லாத் துறைகளிலும் கால்பதிக்க நாடுவார்!
எல்லையோ வானந்தான்! ஆனமட்டும் வெற்றியுடன்
நல்வாய்ப்பை நாடுவார் பார்.

வாய்ப்பு வளத்தால் ஒருவாறாய் வேலைக்குப்
போய்வந்து சம்பளம் வாங்கியதும் தாய்தந்தை
கால்களைத் தொட்டேதான் ஆசிகளை வாங்கிடுவார்
வழ்விலே நம்பிக்கை வைத்து.

மணப்பருவம் வந்ததும் இல்லறத்தை ஏற்க
குணவதியின் கைத்தலம் பற்றி -- மணக்கும்
குடும்பப் பொறுப்பை இருவரும் போற்றி
பெறுவார் குழந்தை இரண்டு.

குழந்தை வளர்ப்பில் கரைந்திடும் காலம்!
மழலைக் குறும்புகள் வாழ்வின் கவர்ச்சி!
வளரும் பருவங்கள் மாற அவர்கள்
வளர்ச்சியைக் காண்பார் மகிழ்ந்து.

குழந்தைக்கு இங்கே குழந்தை பிறக்கும்!
தளர்ந்த பருவத்தில் பேரக் குழந்தை
தழுவி விளையாட கண்குளிரப் பார்த்து
பெருகும் மகிழ்ச்சிதான் வழ்வு.

தாத்தாவும் பாட்டியும் ஓட முடியாமல்
போற்றி வளர்த்திருப்பார்! பேரக் குழந்தைகள்
தாத்தாவை பாட்டியை வம்பிழுத்து நாள்தோறும்
கூத்தாட வைத்திருப்பார் கூறு.

நேற்றுநம் பெற்றோர்க்கு! இன்று நமக்குதான்!
வீட்டில் நம்பிள்ளை நாளை சுமந்திருக்கும்!
நாட்டில் வாழையடி வாழைதான் இக்கடமை!
வீட்டுக்கு வீடிதுதான் பார். .

Sunday, March 15, 2009

கம்பராமாயணக் காட்சி
--------------------------------------------------------------------------
தசரதன் உயிர் பிரிதல்
----------------------------------------------------------------------------
நாயகன் பின்னும் தன் தேர்ப்பாகனை நோக்கி " நம்பி
சேயனோ? அணியனோ?" என்று உரைத்தலும், தேர்வலானும்
"வேய்உயர் கானம் தானும், தம்பியும், மிதிலைப் பொன்னும்
போயினன், என்றான்; என்ற போழ்தத்தே ஆவி போனான்.(1994)
==================================================================
இராமனோ தூரத்தில் வருகின் றா னோசொல்?
ஆனமட்டும் கேட்டான் சுமந்திரனை நோக்கித்தான்!
மூவரும் காட்டுக்குள் சென்றுவிட்டார் என்றதுமே
ஆவியை நீத்தான் அதிர்ந்து.

தசரதன் தளர்தலும் முனிவன் செல்லுதலும்

கம்பராமாயணக் காட்சி
--------------------------------------------------------------------------

"இல்லை" என்று உரைக்கலாற்றான்;
ஏங்கினன் முனிவன் நின்றான்;
நல்லவன் முகமே நம்பி
வந்திலன் என்னும் மாற்றம்
சொல்லலும், அரசன் சோர்ந்தான்;
துயர்உறும் முனிவன், "நான்இவ்
அல்லல் காண்கிலேன்" என்னா,
அங்கு நின்று அகலப்போனான்.(1993)
================================================
ராமன் வரவில்லை என்பதைச் சொல்லாமல்
ஞானமுகம் வாடக் குறிப்பல் உணர்த்தினான்!
மாமன்னன் மீண்டும் மயங்கிச் சரிந்துவிட்டான்!
ஞானமுனி நீங்கினான் விட்டு.
--------------------------------------------------------------------------------------

தசரதன் "ராமன் வந்துவிட்டானா" எனல்

கம்பராமாயணக் காட்சி
--------------------------------------------------------------------------

"இரதம் வந்துற்றது" என்று, ஆங்கு யாவரும் இயம்பலோடும்
"வரதன் வந்துற்றான்" என்ன, மன்னனும் மயக்கம் தீர்ந்தான்;
புரைதபு கமலனாட்டம் பொருக்கென விழித்து நோக்கி,
விரத மாதவனைக் கண்டான் " வீரன் வந்தனனோ?" என்றான்.(1992)
=====================================================================
ராமனை ஏற்றிச் சுமந்துசென்ற தேரங்கே
தேனகத்தில் வந்துநின்ற சேதிகேட்டு மன்னனோ
ஊன்விழிகள் துள்ள முனிவனிடம் வந்தானா
ராமன் எனக்கேட்டான் துடித்து.

சீதா தேவி வருந்தாது வழி நடத்தல்

கம்பராமாயணக் காட்சி
-------------------------------------------------

சிறுநிலை மருங்குல் கொங்கை ஏந்தியசெல்வம் என்னும்
நெறி இருங்கூந்தல் நங்கை சீறடி நீர்க்கொப்பூழின்
நறியன தொடர்ந்துசென்று நடந்தன; நவையுள் நீங்கும்
உறுவலி அன்பின்ஊங்கு ஒன்றுஉண்டு என உணர்வதுண்டோ?(1987)
------------------------------------------------------------------------------------------------------------------------
சீதையின் மெல்லிய பாதங்கள் நீர்க்குமிழி
ஊடகம்போல் மென்மை படைத்தவை! அத்தகைய
பாதங்கள் ராமனைப் பின்பற்றிச் செல்வதற்குத்
தோதாய் வலிமையைப் பற்றது என்றாலோ
தோகை கணவன்மேல் வைத்திருக்கும் அன்பிற்கு
ஈடாக ஒன்றுண்டோ ? கூறு.

இலக்குவன் சுமந்திரனிடம் கூறியவை

கம்பராமாயணக் காட்சி
-------------------------------------------------

"உரைசெய்து எம்கோமகற்கு உறுதி ஆக்கிய
தரைகெழு செல்வத்தைத் தவிர , மற்றொரு
விரைசெறி குழலிமாட்டு அளித்த மெய்யனை
அரைசன் என்று இன்னம் ஒன்றுஅறையற் பாலதோ?"(1977)
============================================================
உனக்குத்தான் இவ்வரசு என்றுசொல்லி விட்டு
மனைவிக்கு வாக்குறுதி தந்து இராமன்
வனமேகச் செய்த தசரதனை மன்னன்
எனக்கூறல் நன்றோ? உரை.
------------------------------------------------------------------------------------------------------
"கானகம் பற்றி நற்புதல்வன் காய்உணப்
போனகம் பற்றிய பொய்இல் மன்னற்கு, இங்கு
ஊன்அகம் பற்றிய துயரொடு இன்னும் போய்
வானகம் பற்றிலா வலிமை கூறு" என்றான். (1978)
========================================================
காட்டில் கிடைக்கும் உணவுகளை ராமனோ
கூட்டிவைத்தே உண்ண , அறுசுவை உண்டியை
நாட்டில் ருசித்து மகிழும் அரசனிடம்
காட்டின் துயரத்தைச் சொல்.

என்றே மனக்கொதிப்பை லெட்சுமணன் சீறியே
சிந்தினான் கோப அனல்மழையை அங்கேதான்!
தன்னுடைய ஏமாற்ற எண்ணத்தை இவ்வாறு
தன்கருத்தாய்க் கூறினான் சாற்று.

இராமன் கூறிய தத்துவம்

கம்பராமாயணக் காட்சி
-------------------------------------------------

நிறப்பெரும் படைக்கலம் நிறத்தின் நேர்உற
மறப்பயன் விளைக்குறும் வன்மை அன்று; அரோ
இறப்பினும் , திருஎலாம் இழப்ப எய்தினும்
துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே.(1964)
===================================================
போர்க்கள வீரமோ வீரமல்ல ! வாழ்விலே
தாழ்வுநிலை வந்தபோதும் செல்வங்கள் சென்றபோதும்
வாழ்வில் அறவழியில் துன்பத்தைச் சந்திப்போர்
வீரராவார் இவ்வுலகில் தான்.

தேரோட்டி சுமந்திரனின் ஏக்கம் ததும்பும் கேள்விகள்

கம்பராமாயணக் காட்சி
--------------------------------------


"தேவியும் இளவலும் தொடரச் செல்வனைப்
பூ இயல் கானகம் புக உய்த்தேன் என் கோ?
கோவினை உடன் கொடு குறுகினேன் என் கோ?
யாவது கூறுகேன் இரும்பின் நெஞ்சினேன்"?(1955)
======================================================
என்னை எதிர்வந்து கேட்கின்ற மக்களிடம்
உங்களைக் கானகத்தில் விட்டுவிட்டேன் என்பேனா?
என்னுடன் நீங்களும் வந்தீர்கள்! என்பேனா?
என்னசொல்லித் தேற்றுவேன் நான்?
------------------------------------------------------------------------------------------------------------------------------
"தார் உடை மலரினும் ஒதுங்கத் தக்கிலா
வார் உடை முலையொடு மதுகை மைந்தரைப்
பாரிடைச் செலுத்தினேன்: பழைய நண்பினேன்,
தேரிடை வந்தனென் , தீதிலேன் என் கோ?"(1956)
=========================================================================
சீதையை ராம இலக்குவரைக் காட்டினிலே
வேதனைக்கு உள்ளாக்கி கால் நோக செல்லவிட்டு
சோதனையே இன்றி சுகமாக நான்வந்தேன்
தோதாக என்பேனா?நான்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
வன்புலக் கல்மன மதி இல் வஞ்சனேன்,
என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்பால்
உன் புலக்கு உரியசொல் உணர்த்தச் செல்கேனோ?
தென்புலக் கோமகன் தூதில் செல்கேனோ?(1957)
========================================================================
மனமுடைந்து வாடும் தசரதனைப் பார்த்து
குணக்குன்று நீசொன்ன சொற்களைச் சொல்லி
வணங்கவா? த்ற்கின் இயமனுக்குத் தூதாய்
இணக்கமுடன் செல்லவா? நான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
"நால்திசை மாந்தரும் நகர் மாக்களும்
"தேற்றினர் கொணர்வர் என்சிறுவன் தன்னை"என்று
ஆற்றின அரசனை, ஐய! வெய்ய என்
கூற்று உறழ் சொல்லினால் கொலை செய்வேன் கொலோ?(1958)
==========================================================================
மக்களெல்லாம் ராமனைத் தேற்றிக் கொணர்ந்திடுவார்
இக்கணமே என்றே உயிர்வாழும் மாமன்னன்
அக்கறையாய்ப் பார்க்க கொடுஞ்சொல்லைச் சொல்வதால்
குட்றம் சுமப்பதா?நான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
"அங்கிமேல் வேள்வி செய்து, அரிதின்பெற்ற, நின்
சிங்கஏறு அகன்றது" என்று உணர்த்தச் செல்கெனோ?
எங்கள் கோமகற்கு இனி என்னில், கேகயன்
நங்கையே கடைமுறை நல்லள் போலுமால்.(1959)
============================================================================
உன்னன்னைக் கைகேயி இன்னலைத்தான் தூவினாள்!
என்சொல்லோ மன்னனின் இன்னுயிரைப் போக்கிவிடும்!
மண்ணுலகில் கைகேயி நல்லவளாய் மாறிவிட
என்னை பலியிடவோ நான்?
------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலக்குவன்,இராமன்,சீதை செல்லுதல்

கம்பராமாயணக் காட்சி
-----------------------------------------
----------------------------------------------------------------------
"சீரை சுற்றித் திருமகள் பின்செல,
மூரிவில்கை இளையவன் முன் செலக்
காரை ஒத்தவன் போம்படி கண்ட அவ்
ஊரை உற்றது, உணர்த்தவும் ஒண்ணுமோ?" ( 1930)
===================================================

மரவுரி சுற்றிய சீதையோ பின்னும்
பெரியவில்லை ஏந்தி இலக்குவன் முன்னும்
கருமேக ராமன் இடையிலும் செல்ல
கலுழ்ந்தனர் இக்கோலம் கண்டு.

Monday, March 09, 2009

காற்றழுத்த மண்டலம்

பெருங்கடலில் காற்றழுத்த மண்டலங்கள் தோன்றி
செருக்குடனே நின்றும், நகர்ந்தும் -- நெருங்குகின்ற
நாட்டில் மழைபெய்து நன்மைக்கும் தீமைக்கும்
ஊற்றாகும் இவ்வுலகில்! பார்.

புகைப்பதை நிறுத்து

புகைக்கும் பழக்கம் புகைத்திடும் மார்பை!
வகைவகையாய் நோய்கள் வளைத்துநின்று தாக்கும்!
புகைந்திட வேண்டாம்! விழிப்புணர்வு கொள்வோம்!
புகைப்பதை என்றும் நிறுத்து.

Sunday, March 08, 2009

இப்படி ஆள்தல் இழிவு

---------------------------------------------
சாக்கடை துர்நாற்றம், வண்டிகலின் பேரிரைச்சல்
தாக்கும் கொசுப்படைகள், ஈக்களும் பூச்சிகளும்
நாட்டமுடன் மொய்த்திருக்கும் தின்பண்டத் துண்டுகள்
ஆட்சிசெய்யும் ஏழையின் வீடு.

இத்தகைய சூழ்நிலையில் கோடிகோடி மக்களிங்கே
நித்தம் கடைத்தேற்றம் காணாமல் வாழ்கின்றார்!
எப்படியோ வாழட்டும் என்றே அரசுகள்
இப்படி ஆள்தல் இழிவு.
----------------------------------------------------------------------------------------------

சீதை மரவுரி உடுத்து எதிர் தோன்றுதல்

கம்பராமாயணக் காட்சி
----------------------------------------------------------------------------

அனைய வேலை, அகல் மனை எய்தினாள்;
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்;
நினைவின், வள்ளல் பின்வந்து, அயல் நின்றனள்;
பனையின் நீள்கரம் பற்றிய கையினாள்.(1924)
----------------------------------------------------------------------------------------
அன்பரசி சீதையை யாருமே தூண்டாமல்
தன் கணவன் ராமன் உடுத்திய தைப்போல
அங்கே மரவுரிக் கோலத்தில் வந்தவள்
அண்ணலைப் பற்றிநின்றாள் சார்ந்து.
-------------------------------------------------------------------------------------

இராமனின் மனநிலை

கம்பராமாயணக் காட்சி
-------------------------------------------------------
அண்ணல் அன்ன சொல் கேட்டனன்; அன்றியும்
உள்நிவந்த கருத்தும் உணர்ந்தனன்;
கண்ணீன் நீர்ககடல் கைவிட நேர்கிலன்;
எண்ணுகின்றனன், "என் செயற் பாற்று?' எனா.(1923)
------------------------------------------------------------------------------------------
சீதையின் சொற்களைக் கேட்ட இராமனோ
கோதையின் உள்ளக் கருத்தை உணர்ந்தேதான்
சீதை தவித்திருக்க உள்ளம் இசையவில்லை!
யாதுசெய்வேன்? என்றான் உழன்று.
----------------------------------------------------

சீதையின் மறுமொழி

கம்பராமாயணக் காட்சி
------------------------------------------------
சீதையின் மறுமொழி
------------------------------------------------
பரிவு இகந்த மனத்தொரு பற்று இலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்
பிரிவினும் சுடுமோ பெருங்காடு? என்றாள். (1922)
-----------------------------------------------
பெண்ணென்றும் எண்ணி இரங்காமல், அன்பரசி
உன்மனைவி என்கின்ற பற்றுதலும் இல்லாது
என்னைப் பிரிவதற்கு முற்படுவதை என்னென்பேன்?
இன்னலை ஏதென்பேன்? யான்.

கானகம் என்ன கடுமையா? அய்யகோ!
தேனகத்தில் நானிருக்க கானகத்தில் நீயிருக்க
ஈனமான அப்பிரிவைக் காட்டிலும் சுட்டெரிக்கும்
வேனலாமோ அக்காடு ? சொல்.
----------------------------------------------

ராமன் சீதையைத் தேற்றுதல்

கம்பராமாயணக் காட்சி
--------------------------------------------------------

"வல்லரக்கரின் மால் வரை ஊடு எழும்
அல் அரக்கின் உருக்கு அழல்காட்டு அதர்க்
கல் அரக்கும் கடுமைய அல்ல நின்
சில் அரக்கு உண்ட சேவடிப் போது" என்றான்.(1921)
============================================================
அரக்கர்கள் வாழும் மலையைக் கடக்கும்
கலக்கமிகு நேரத்தில் செம்பஞ்சு -- மலர்போன்ற
நின்பாதம் நோகுமம்மா! கற்கள் உறுத்துமம்மா!
என்றான் இராமன் கனத்து.
-----------------------------------------------------------

சீதை வருந்துதல்

கம்பராமாயணக்காட்சி
--------------------------------------------
-----------------------------------------
நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும்,
மேயமண் இழந்தான் என்றும் விம்மிலர்;
"நீ வருந்தலை;நீங்குவென் யான்";என்ற
தீய வெம்சொல் செவிசுடத் தேம்புவாள்.(1918)
====================================================
தங்கணவன் கானகம் செல்கின்றான் என்பதற்கோ
மன்னன் அளித்த அரசுரிமை-- சென்றதற்கோ
சீதை அழவில்லை! இராமன் உதிர்த்திட்ட
கூடறுக்கும் சொற்கேட்டாள் வெந்து.

கானகம் சென்று வருகின்றேன்! நீயிங்கே
தேனகத்தில் சற்றும் வருந்தாமல் வாழ்ந்திரு!
மானே1 எனச்சொன்ன வெங்கொடுமைச் சொற்களால்
மானவள் தேம்பிநின்றாள்! பார்.
----------------------------------------------------------------------------------------------

Friday, March 06, 2009

கம்பராமாயணக் காட்சி

----------------------------------------------

ராமன் கூறுதல்
---------------------------
"பொருவுகில் எம்பி புவி புரப்பான்;புகழ்
இருவர் ஆணையும் ஏந்தினென்; இன்றுபோய்க்
கருவி மாமழைக் கல்கடம் கண்டுநான்
வருவென், ஈண்டு வருந்தலை நீ" என்றான்.(1917)
----------------------------------------------------------------------------

நாடாள வேண்டும் பரதனென்றும் நானிங்கே
காடேக வேண்டுமென்றும் தாய்தந்தை ஆணையிடார்!
காடேகி நான்வருவேன் ! மாதே ! வருந்தாமல்
மாடத்தில் இருஎன்றான்! நின்று.

கம்பராமாயணக் காட்சி

----------------------------------------------

எழுந்த நங்கையை மாமியர் தழுவினர் ; ஏங்கிப்
பொழிந்த உண்கணீர் புதுப்புனல் ஆட்டினர்; புலம்ப
அழிந்த் சிந்தையள் , அன்னம், இதுஇன்னது என்று அறியாள்,
வழிந்தநீர் வெடுங்கண்ணினள், வள்ளலை நோக்கி.(1915)
============================================================
திரண்டுவந்த மாமியர் கண்ணீரைப் பார்த்து
கலக்கமுடன் காரணத்தைத் தேடி -- தவழ்ந்துவந்தாள்
தன்விழிகள் கண்ணீரைச் சிந்த இராமனை
அன்பரசி பார்த்தாள் அழுது.

சீதை அதிர்ச்சி அடைதல்:

கம்பராமாயணக் காட்சி
----------------------------------------------
-----------------------------------------------
அழுது , தாயரொடு , அருந்தவர் , அந்தணர் , அரசர்
புழுதி ஆடிய மெய்யினர் , புடைவந்து பொருமப்
பழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா
எழுது பாவையன்னாள் மனத்துணுக்கமொடு எழுந்தாள்.(1914)
=============================================================
அரசகோலம் ஏந்தும் கணவனைப் பார்க்கப்
பரபரப்பாய்க் காத்திருந்தாள் சீதை -- மரவுரிக்
கோலத்தில் ராமனைப் பார்த்ததும் நேரிழையாள்
சீரழிந்தாள் 1 நொந்தாள் அதிர்ந்து.
----------------------------------------------------------------------------------------------------------

Monday, March 02, 2009

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நினை

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நினை
=========================================
நாள்தோறும் பார்க்கின்ற காட்சிகளையும் அன்றுதான்
பார்க்கின்ற ஆர்வமுடன் பார்க்கவேண்டும் -- வாழ்விலே
இன்று புதிதாய்ப் பிறந்தோம் எனநினைக்கும்
எண்ணமே கற்பதின் வித்து.

மதுரை பாபாராஜ்

இதுதான் நட்பு

வளங்கள் வளரும் நிலையில் வருவார்!
வளங்கள் மறையும் நிலையில் நகர்வார்!
வளமா? வறுமையா?நட்பின் இழைகள்
தளராமல் உள்ளதே நட்பு.

மதுரை பாபாராஜ்

காழ்ப்புணர்ச்சி தேவையா?

மற்றவ ரிடத்தில் இருக்கும் குறைகளை
மட்டுமே பேசுவது கேவலம் -- குற்றம்
குறைகளை விட்டு நிறைகளைப் பேசு!
மறைந்துவிடும் காழ்ப்புணர்ச்சி தான்.

மதுரை பாபாராஜ்