Friday, March 30, 2018

பாடல். 7

அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே
தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையா னாகல் இனிது.
--------------------------------------------------------------------------------------------------
மறைகளைச் சொல்தல் அறவோர்க்( கு) இனிது!
முறையான இல்லறப் பாசம் இனிது!
படைகளுக்கோ அஞ்சாத வீரம் இனிது!
முறையற்ற தானதைத் தந்தைசொன் னாலும்
மறுப்பதே என்றும் இனிது.

பாடல். 6

ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
காப்படையக் கோடல் இனிது.
--------------------------------------------------------------------------------------------------------
இயன்ற அளவில் அறம்செய்! இனிது!
உயர்ந்தோர் அறவுரையைக் கேட்ப( து)  இனிது!
வளங்களுடன் கல்வி அனைத்தும் இருந்தும்
தரங்குறைக்கும் நானென்ற ஆணவம் இல்லா
உளங்கொண்டோர் தம்மைத் துணையாக ஏற்கும்
நிலையொன்றே வாழ்வில் இனிது.


காவிரி மேலாண்மை வாரியமே தீர்வு!(30.03.2018)

நீரின்றி அமையாது வாழ்க்கை!

காவிரி மேலாண்மை வாரியத்தை கட்டமைத்தே
காவிரி சிக்கலுக்குத் தீர்வுகாண வேண்டுமென்று
சீரிய தீர்ப்புதனை உச்சநீதி மன்றத்தின்
நீதிபதி சொல்லியும் எந்த அரசுமிங்கே
பாதியடி கூட எடுத்துவைக்க வில்லையே!
நீதியைப் போற்றவேண்டும் நாடு.

விளைநிலங்கள் எல்லாம் வறண்டு வெடிக்க
மலைப்பில் உழவர்கள் திண்டாடி நிற்க
களைப்புடன் வானத்தை அண்ணாந்து பார்த்தும்
நிலைமைக்கே அஞ்சுகின்றார் காண்.

நாள்கள் கெடுவும் முடிந்துவிட்ட நேரத்தில்
நாடெல்லாம் போராட்ட கோலம்! திட்டமென்ற
ஆங்கிலச் சொல்லின் பொருள்விளக்கம் கேட்கின்றார்!
ஏங்கும் நிலைமாறு மா?

பழிபோடும் ஆட்டத்தை ஆடாமல் நல்ல
வழிகிடைக்க சிந்தனையைத் தீட்டுவதே நன்று!
அழிவைத் தடுத்தல் அரசின் கடமை!
தெளிவாய் முடிவை எடு.



வரைமுறையுடன் வாழ்வோம்!

எந்தத் தலைமுறை கண்டதே காட்சியென்றும்
கொண்டதே கோலமென்றும்  வாழ்கிறதோ -- அந்தத்
தலைமுறை முன்னேறத் தத்தளிக்கும்! வாழ்க்கை
நிலைகுலைந்தே வீழ்ந்திருக்கும் ! சொல்.

காவிரி மேலாண்மை வாரியம் அமை!(26.03.2018)

காவிரி மேலாண்மை வாரியத்தை கட்டமைத்தே
காவிரி சிக்கலுக்குத் தீர்வுகாண வேண்டுமென்று
சீரிய தீர்ப்புதனை உச்சநீதி மன்றத்தின்
நீதிபதி சொல்லியும் எந்த அரசுமிங்கே
பாதியடி கூட எடுத்துவைக்க வில்லையே!
நீதியைப் போற்றவேண்டும் நாடு.

விளைநிலங்கள் எல்லாம் வறண்டு வெடிக்க
மலைப்பில் உழவர்கள் திண்டாடி நிற்க
களைப்புடன் வானத்தை அண்ணாந்து பார்த்தும்
நிலைமைக்கே அஞ்சுகின்றார் காண்.

நாள்கள் எண்ணப் படுகின்ற நேரத்தில்
நாடெல்லாம் போராட்ட கோலம்! கெடுமுடியும்
நாளுக்குள் மத்தியும் மாநிலமும் நற்செய்தி
தூதளித்துக் காப்பாற்றித் தா.

திருமதி மல்லிகா கஜராஜ் பிறந்தநாள் வாழ்த்துப்பா!

26.03.18

மருந்துத் துறையில் சிறந்த கணவர்!
திரையில் சிறந்த நடிகராக இன்று!
திரையின் இயக்குநராய் அன்புமகன் கார்த்திக்!
மருத்துவ ராக மருமகள் சத்யா!
கருத்தாய்க் கணினித் துறையில் மகள்தான்!
ஒருங்கிணைக்கும் பன்முக ஆற்றல் மிளிரும்
மருமகன் கார்த்தியுடன் அன்பான பேரன்
பெருமைமிகு சஞ்சய் உடன்சூழ வாழ்க!
அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்
வசந்தா

உடன்வாழ்த்தும்இதயங்கள்

ரவி- சுபா - சுசாந்த் ஸ்ரீராம்
எழிலரசன்- சத்யபாமா- நிகில் அபிசேக்- வருண் ஆதித்யா

Labels:

இனியவை நாற்பது


பாடல். 5

கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ்
செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்
எய்துங் திறத்தால் இனிதென்ப யார்மட்டும்
பொல்லாங் குரையாமை நன்கு.
-----------------------------------------------------------------------------------------
கொல்லாமை வாழ்வில் இனிது!நடுநிலை
தொய்வின்றி வேந்தனோ தீர்ப்பளித்தல்  தேனினிதாம்!
நல்முறையில் ஆள்தலே நாட்டிற் கினிதாகும்!
உள்ளத்தைப் புண்படுத்தும் பொல்லாங்கு கூறாமை
எல்லோர்க்கும் என்றும் இனிது.

பாடல். 4

யானையுடைப் படை காண்டல் மிக இனிதே;
ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை முன் இனிதே
கான் யாற்று அடை கரை ஊர் இனிது; ஆங்கு இனிதே
,மானம் உடையார் மதிப்பு.
------------------------------------------------------
யானைப் படைகொண்ட வேந்தனின் வாழ்க்கையோ
ஆனமட்டும் வெல்லும் முயற்சிக்( கு) இனிதாகும்!
ஊனை வளர்க்க பிறஉயிரைக் கொன்றுண்ணும்
ஈனத்தை விட்டொழித்தல் என்றும் இனிதாகும்!
தேனக ஆறுகள் சூழ்ந்த ஊரினிது!
மானமுடன் வாழ்தல் இனிது.

பாடல். 3

ஏவது  மாறா இளங்கிளைமை முன்இனிதே
நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே
ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே
தேரிற்கோள் நட்புத் திசைக்கு.
---------------------------------------------------------------------------------------------------------------
சொன்னதைச் சொன்னபடி செய்கின்ற ஏவலரைக்
கொண்டிருக்கும் பேறோ இனிது! குற்றத்தில்
கொஞ்சமும் ஈடு படாமலிங்கு கற்பதோ
என்றும் இனிதாம்! உழவரின் வேளாண்மை
மண்ணுயிர் காத்தல் இனிது! திக்கெல்லாம்
சென்றாலும் நல்லா ருடன்நட்( பு) இனிதாகும்!
பின்பற்று வாழ்வே இனிது.

இனியவை நாற்பது


பாடல் 2

உடையான் வழக்கு இனிது; ஒப்ப முடிந்தால்,
மனை வாழ்க்கை முன் இனிது; மாணாதாம் ஆயின்,
நிலையாமை நோக்கி,நெடியார், துறத்தல்
தலையாகத் தான் இனிது நன்கு.
----------------------------------------------------------------------------------------
பொருளிருந்து தந்துதவும்  ஈகை இனிது!
இருமனம் ஒன்றாய்ப் பிணக்குகள் இன்றிப்
பெருமை மிளிரும் மனையோ இனிது!
தரணியின் வாழ்க்கை நிலையற்ற தென்றே
உளத்தால் துறத்தல் இனிது.

இனியவை நாற்பது

கவிதை வடிவில்

பாடல். 1

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகவினிதே
நற்சவையில் கைக்கொடுததல் சாலவும் முன்னினிதே
முத்தேர்  முறுவலார்  சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.
---------------------------------------------------------------------------------------------------------------------
பிச்சை  எடுத்தேனும்  கற்ப தினிதாகும்!
கற்றவை நல்லவையில்  கைக்கொடுத்தல்  கற்றதினும்
முற்றும் இனிதாகும்! முத்தான பல்மிளிறும்
இத்தரை மாதரின் வாய்ச்சொல் இனிதாகும்!
கற்றறிந்த சான்றோர் துணைகொள்ளல்  மேதினியில்
எப்பொழுதும் வாழ்வில் இனிது.

Sunday, March 25, 2018

முல்லைத்திணை- தலைவி கூற்று

பாடல் 110

பாடலாசிரியர்: கிள்ளிமங்கலங்கிழார்

வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு
யார் ஆகியரோ தோழி! நீர
நீலப் பைம் போது உளரி, புதல
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி,
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த
வண்ணத் துய்ம் மலர் உதிர, தண்ணென்று
இன்னாது எறிதரும் வாடையொடு
என் ஆயினள்கொல் என்னாதோரே?

மயில்தோகைக் கண்போல் கருவிளைப் பூவோ
எழிலாய்ப் பூத்திருக்க காற்றுவீசி நீரில்
மலர்ந்துள்ள மலரை உலுக்கியே ஆட்ட
வளர்ந்துள்ள ஈங்கைச் செடியில் உதிர
குளிர்ச்சியான காற்றோ கொடுமை புரிய
மலரன்ன நான்படும் பாட்டைத் தலைவன்
உளத்திலே எண்ணாமல் வாழ்கின் றாரே!
தலைவனோ வந்தால்தான் என்ன? வராமல்
அலைந்தால்தான் என்ன எனக்கு?



எல்லாம் நம்கையில்!

துரும்பையும் தூணாக்கிப் பார்க்கலாம்! தூணைத்
துரும்பாக்கிப் பார்க்கலாம்! எல்லாம்நம்  கையில்!
துரும்புகளைத் தூணாக்கும்போக்கைத் தவிர்த்தே
இருப்பதில் நிம்மதி கொள்.



வருண் ஆதித்யா பிறந்தநாள் வாழ்த்து!

24.03.2018

எங்கள் வருண் ஆதித்யா
இன்று உனக்கு பிறந்தநாள்!

அன்னை தந்தை ஆசானை
வணங்கி வாழ்ந்தால் நல்லது!

நன்றாய் படித்து முன்னேறு
நாளும் உழைத்தே முன்னேறு!

திறமை உனது செல்வந்தான்
அதனை வளர்த்து முன்னேறு!

நண்பர்கள் சூழ்ந்தே வாழ்த்துகின்றோம்

உறவினர் சூழ்ந்து வாழ்த்துகின்றோம்!

வாழ்க வாழ்க பல்லாண்டு
தமிழ்போல்  வாழ்க பல்லாண்டு.

வாழ்த்துகின்றோம்
நண்பர்கள்



புள்ளிகள்!

இப்புள்ளி அப்புள்ளி எப்புள்ளி ஆனாலும்
அப்புள்ளி என்றும் தனிமனித நல்லொழுக்கக்
கட்டமைப்புப் புள்ளியாக வாழ்ந்தால் பெரும்புள்ளி!
மற்றபடி வாழ்ந்தால் அவரே கரும்புள்ளி!
அக்கறையாய் நல்லொழுக்கம் பேண்.



ஆண்டாள்

ஆண்டாளோ ஆண்டவரை ஆள்கின்ற ஆண்டாளாய்
ஆண்டாளே ஆனதாலே ஆண்டவரும் ஆண்டாளின்
ஆண்டவ பக்தியால் ஆண்டாளை ஆண்டுகொண்டார்!
ஆண்டாளும் வென்றாள்பார் ஆண்டு.



ரதவலம் தேவையில்லை!(19.03.2018)

ரதவலம் என்ற பெயரிலே நாட்டில்
மதவலம் போகும்   வெறித்தனப் போக்கைத்
தடைசெய்ய வேண்டும்! நாட்டின் அமைதி
உடைபடும் சிந்தனையைத் தூற்று.

பாடல் 109

தோழியின் கூற்று,!

பாடலாசிரியர்:
நம்பி குட்டுவனார்

முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை
புணரி இகுதிரை தரூஉந் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்
இன்னது மன்னோ நன்னுதற் கவினே.

வளைவான காலும் வளைந்த முதுகும்
அழகைப் பறைசாற்ற நீந்தும் இறால்மீன்
வளங்கொண்ட நாட்டிலே மீனவன், அன்பன்!
கலந்து பழகினாலும்  என்தலைவி வாடும்
நிலைதந்தே இங்கே பிரிவான் அழகு
மிளிர்கின்ற நெற்றி பிரிவுத் துயரால்
ஒளியிழந்த கோலத்தைப் பார்.

Saturday, March 17, 2018

அன்புமகனுக்குப் பிறந்தநாள்
           வாழ்த்துப்பா!
   
      அகவை: இனியவை நாற்பது

                           40

                     15.03.18

மகன்:             மருமகள்:
எழிலரசன்-- சத்தியபாமா

பேரன்கள்:
நிக்கில் அபிசேக் 
வருண்ஆதித்யா


ஊற்றெடுக்கும் சாதனைகள் உன்பெயரை வாழ்த்திசைக்க
நாற்பதைத் தொட்டுத் தொடர்கின்ற வாழ்விலே
ஏற்றங்கள் என்றும் துணைநிற்க வாழியவே!
மாற்றங்கள் காண்பாய் மகிழ்ந்து.

மனைமாட்சி மங்கலம் தங்கித் தழைக்க
மனைவி, மகன்களின்  அன்பில் உறவில்
தினமும் திளைத்தேதான் வாழ்கபல் லாண்டு!
மனதார வாழ்த்துகின்றோம் சூழ்ந்து.

இனியவை நாற்பதில் இன்பமுடன் வாழ்க!
துணிச்சல்  உழைப்பு முயற்சியுடன் வாழ்க!
கணினி நிறுவனம் தழைத்தோங்கி வாழ்க!
மனிதம் தழைக்க குறள்நெறியில் வாழ்க!
தமிழ்போல வாழ்கபல் லாண்டு.!

மதுரை பாபாராஜ்
வசந்தா

உடன்வாழ்த்தும் இதயங்கள்


ரவி-- சுபா தேவி -- சுசாந்த் ஸ்ரீராம்


நேரமறிந்து செல்!

சொந்தக் குழந்தைகளோ இல்லை உறவுகளோ
எந்தநேரம் சென்றால் வரவேற்பார் என்றறிந்தே
அந்தநேரம் செல்லவேண்டும்!
கண்டநேரம் நாம்சென்றால்
அன்பும் முகஞ்சுழிக்கும் சொல்.



காவிரி-- தீர்ப்பை மதி!

நீதிமன்றத் தீர்ப்பைப் புறக்கணிக்கும் எண்ணத்தில்
வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல! தாய்நாடே!
காவிரி யாறு தனியுடைமை சொத்தல்ல!
மாற்றாந்தாய்ப் போக்கில் அரசு செயல்பட்டால்
ஊற்றெடுக்கும் உட்பகை தான்.


தன்னம்பிக்கை நாயகன்

STEPHEN HAWKING


இயலாமை தாக்கினாலும் உந்தும் முயற்சி
உரமாக என்னால் முடியுமென்றே நாளும்
உரமாகி விஞ்ஞான சாதனை வானில்
உயர்ந்தார் கலந்தார் வணங்கு.



வள்ளுவத்தைச் சீண்டாதே! 12.03.18

செந்தமிழைச் சீண்டுவோர்கள் எங்கெங்கே வாழ்ந்தாலும்
கண்டிக்கச் சீறி எழுந்திடுவோம்! ஆர்ப்பரிப்போம்!
எந்தத் தடையெனினும் தாண்டும் நிலையெடுப்போம்!
செந்தமிழ்த் தாயே அருள்.

வள்ளுவத்தை வம்புக் கிழுப்பவர்கள் பாவிகளே!
கிள்ளி எறிகின்ற கீரையா  வள்ளுவம்?
செல்லரித்த வாதத்தை மீண்டும் அரங்கேற்றும்
குள்ளநரித் தந்திரம் வெல்லா(து) ஒருபோதும்!
 உள்ளக் கொதிப்பினைக் காட்டு.

பிறப்பொக்கும் என்றுரைக்கும் வள்ளுவம் எங்கே?
பிறப்புகளில் நால்வருணம் காட்டிப் பிரித்த
முடைநாற்ற சாத்திரக் குப்பைகள் எங்கே?
கடைவிரிக்கும் போக்கை நிறுத்து.



புலமை வறுமை!

எந்தன் திறமையைப் பாராட்டி ஆகாகா
அன்பாய் விருதுகளை அள்ளி வழங்கினார்!
இந்த விருதுகளை வைப்பதற்கோ இல்லத்தில்
எங்கும்  இடமில்லை! என்செய்வேன்? ஏதுசெய்வேன்?
என்னில்லம் ஓலைக் குடிசைதான்! தந்ததென்ன
பொன்பொருளா? விற்பதற்கு? சொல்.




உயிர்த்துடிப்பு நீ!

பெண்ணே! மலராக வாழ்ந்தது போதுமே!
உன்னைக் கசக்கத் துடிக்கின்றார் பாவிகள்!
பொன்மனம் கொண்டது போதுமே! பாவிகள்
உன்னை உருக்கத் துடிக்கின்றார்! மண்ணகத்தில்!
தென்றலாய் வீசியது போதுமே! மென்மையைப்
பந்தாடிப் பார்க்கின்றார் பாவிகள்! உள்ளத்தால்
அன்பைப் பொழிந்தது போதும்! இரக்கமின்றி
வம்பிழுத்து வாடவைத்துப் பார்க்கின்றார் பாவிகள்!
 இங்கே பொறுமையாய் வாழ்ந்தது போதுமே!
பொங்கி எழுந்தேதான் போராடு! சுண்டிவிட
என்னநீ அஃறிணையா? இல்லை! உயர்திணை!
நின்றே எதிர்கொள்! மறுபக்கம் காட்டவேண்டும்!
உன்வலிமை உன்னிடம்! இன்றே உணர்ந்திடு!
பெண்ணே! உயிர்த்துடிப்பு நீ.

கருணைக் கொலை



கருணைக்கொலை
கருணையும் கொலையும் முரண்!

சட்டங்கள் இங்கே அனுமதிக்கும்! ஏனென்றால்
குற்ற உணர்ச்சிகள் சட்டத்திற் கில்லையே!
உற்றார் உறவினர் எல்லாம் போராடி
சுற்றிநின்று கைபிசைந்து நின்றிருக்க இன்னுயிரோ
பற்றகற்றி இங்கே இயற்கையாய் யாக்கையை
விட்டகன்றால் என்றும் உறுத்தலின்றி வாழலாம்!
மற்றபடி வாட்டும் மனது.

தந்தை பெரியார்.

முடைநாற்றம் வீசுகின்ற மூடப் பழக்கம்
நடைகட்ட வேண்டுமென்றே ஆர்ப்பரித்த  சிங்கம்!
தடைகளை மீறிப் பகுத்தறிவை ஊட்டி
கடையனுக்கும் இங்கே விழிப்புணர்வைத் தந்த
அடலேறே தந்தைபெரி் யார்.

Tuesday, March 06, 2018



கூடுகள் வீடுகள்!

கூடுகளை விட்டுப் பறவைகள் செல்வதைப்போல்
வீடுகளை விட்டு மனிதர்கள் செல்கின்றார்!
பாடுபட்டே நாள்முழுதும் இங்கே உழைத்துவிட்டுக்
கூடுகளை நோக்கிவரும் புள்ளினங்கள் மாலையிலே!
வீடுகளை நாடிவந்து சேரும் மனிதஇனம்!
கூடுகளும் வீடுகளும் வாழ்வு.



CAPE TOWN DAY ZERO

நீரின்றி வாழ முடியா துலகமென்றார்
பார்போற்றும் வள்ளுவர்! கேப்நகர் நீரின்றி
வாழ வழியின்றி தத்தளிக்கும் கோலத்தில்
வாடி வதங்குகின்ற நாள்கள் தொலைவிலில்லை!
பாதிப்பை இங்கே உலகத்தின் நாடுகளோ
பார்க்கும் நாளோ விரைந்தே வருகிறது!
காக்கும் வழிகாண் விரைந்து.

மதவாதம் எடுபடாது!

தந்தை பெரியார் பகுத்தறிவு மண்ணகத்தில்
சந்துமுனைச் சிந்தாம் மதவாத ஊளைகள்
என்றும் எடுபடாது! மக்களின் ஒற்றுமை
பந்தாடிப் பார்க்கும்  உணர்.