Thursday, April 30, 2015

ரிங்மாஸ்டர்!
---------------------
பெற்றோரைப் பார்த்து பயந்துவாழும் பிள்ளைகள்
பெற்றோர்,விலங்கை அடக்க சவுக்கேந்தும்
வட்டரங்க ரிங்மாஸ்டர் தானோ? எனநினைத்தே
எட்டடி தள்ளிநிற்பார் பார்.

Wednesday, April 29, 2015

நியாயமல்ல!
-----------------
உழைப்பவரைப் பார்த்துத் தொழிலாளி என்பார்!
பிழைப்பவரைப்  பார்த்து முதலாளி என்பார்!
உழைப்பைச் சுரண்டிவாழும் மாந்தருக்குச் செல்வம்
மலைபோல் குவிகிறதே ஏன்?

Image result for mini idli images
சின்னஞ்சிறு இட்லிகள்!
(மினி இட்லி)
-----------------------;
சிறுசிறு இட்லிகள் சுட்டே அடுக்கி
நறுமணம் தூவுகின்ற சாம்பாரை ஊற்றி
விறுவிறுப் பாகவே சாப்பிட்டால் ஆகா!
மறுக்காமல் ஏற்கும் வயிறு.

பாவேந்தரை வணங்குவோம்!
--------------------
முடைநாற்றம் வீசுகின்ற மூடப் பழக்கம்
கடைவிரிக்கும் போக்கைக் கடுமையாய்ச் சாடி
நடைபோட்ட தன்மானப் பாவலர் சிங்கம்!
அறைகூவல் இட்ட முரசு.

Tuesday, April 28, 2015

வரவும் செலவும்!
---------------------
வரவுக்குள் வாழ்வில் செலவிருக்கு மென்றால்
உரசலும் இல்லை! உளைச்சலும் இல்லை!
வரவுகளை மீறும் செலவினங்கள் என்றால்
உரசல் உலுக்கும் நிதம்.

வதந்தீ!
------------------------
கருப்பாக வாந்தி எடுத்ததாய்ச் சொன்னார்!
கருங்காக்கை போல்நிறத்தில் என்றார் ஒருவர்!
கருநிறக் காக்காவாய் வாந்தியென்று சொல்லி
ஒருவர் முடித்தார் வியந்து.

நேரடியாய்ச் சொன்னால் சொல்பவரும் கேட்பவரும்
ஓரணியில் நின்று புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கும்!
யாரிடமோ சொல்லிவிட ஊர்வலம் சென்றேதான்
வேரிடத்தில் போகும் நிலையிலே  இப்படித்தான்!
நேரடியாய்ச் செய்தியைச் சொல்.

Monday, April 27, 2015


உ வே சா! நினைவு நாள்!
     28.04.2015
------------------------------------------------------------
இலக்கிய ஏடுகளைச் சேகரித்த தாத்தா!
இலக்கிய நூல்களின் அச்சாணி தாத்தா!
உரமானார்!வேரானார் ! சான்றான்மைப் பண்பில்
உயர்ந்தார் தமிழ்த்தாத்தா! இங்கு.

ழகரம்
----------
உழைத்தான் உழைத்தான் உழவன் உழைத்தான்!
உழைத்த உழைப்பால் தழைத்த நிலத்தை
உழுதான் உழவன்! பழுத்த பயனால்
செழிப்பில் திளைத்தான் மகிழ்ந்து.

விடியல் காட்சி!
---------------------
கிழக்கில் கதிரவன் பொன்னொளியைத் தூவ
அழகழகாய்ப் பூக்கள் மலர்ந்து சிரிக்க
வரவேற்பைப் புள்ளினங்கள் பண்ணமைத்துப் பாட
கரவொலியைச் சோலை இலைகள் எழுப்ப
பொலபொல வென்றே விடியல் பொழுது
உலகில் விடிந்தது காண்.

சிறகு!
---------
சிறகு முளைத்த குழந்தைகள் எல்லாம்
பறந்து பறந்தே உயரத்தில் செல்ல
சிறகின் வலுவிழந்த பெற்றோர் விழிகள்
கிறங்கித்  தவித்திருக்கும் பார்த்து.

மதித்தால் சிறப்பு!
-----------------------------------
வாழ்ந்து முடித்தவர்கள் வாழத் துடிப்பவர்க்கு
வாழவழி காட்டும் கடமையுண்டு! பக்குவமும்
ஆழ்ந்த அனுபவமும் பண்புடன் வாழவைக்கும்!
கீழ்ப்படிந்து ஏற்றால் சிறப்பு.

இப்படியும் தலைவர்!
------------------------
சொந்தநாட்டில் ஆயிரம் சிக்கல்கள் உண்டெனினும்
எந்தெந்த நாட்டுக்குத் திட்டமிட்டுச் செல்லவேண்டும்
என்றேதான் சிந்திப்பார்! துள்ளித்தான் சென்றிடுவார்!
அன்னிய நாட்டைநாம் ஊட்டி வளர்த்திட்டால்
சொந்தநாடு தானாய் வளருமாம்!செந்தமிழே!
பொன்னான தத்துவத்தைப் பார்.

Sunday, April 26, 2015

தூரத்துப் பச்சை!
-------------------------------------------
தூரத்துப் பச்சையே கண்ணுக் கழகாகும்!
தூரம் குறைந்து நெருங்கிப் பழகுகின்ற
நேரத்தில் சொல்லுக்குச் சொல்லிங்கே தப்பென்றால்
வேரறுந்து போகும் உறவு.

விலக்கமுடியாது!
--------------------------------------
நீரடித்து நீர்விலகக் கூடுமோ? வேற்றுமை
யாரூன்றிக் கூத்தடித்த போதிலும் இல்லறத்தில்
வேரூன்றி மேலோங்கும் சொந்த உறவுகளை
யார்விலக்கக் கூடும்? விளம்பு.

இப்படியானால் எப்படி?
-----------------------------------------------
தூண்டுகோலே சுட்டெரித்தால் ஊன்றுகோலே தட்டிவிட்டால்
வான்மழையே நஞ்சானால் தோணிகளே தள்ளிவிட்டால்
பூவினங்கள்  முள்ளானால்  பூமி வழிமறுத்தால்
நாமிங்கே என்செய்ய? சொல்.

சிறகு!
-----------------------------
சிறகு முளைத்த குழந்தைகள் எல்லாம்
பறந்து பறந்தே உயரத்தில் செல்ல
சிறகின் வலுவிழந்த பெற்றோர் விழிகள்
கிறங்கித் தவித்திருக்கும் பார்த்து.

உறவும் உரிமையும்!
-------------------------
சார்ந்திருத்தல் என்பதற்குப் பிள்ளையைக் காப்பகத்தில
பார்ப்பதற்கு  விட்டுவிட்டுச் செல்லும் உறவாகும்!
சேர்ந்திருத்தல் என்பதற்குப் பாட்டிதாத்தா அன்புடன்
பார்க்கும் உரிமையென்று சொல்.

Saturday, April 25, 2015

பாரதி விஷன் சார்பில்
கவிமாமணி விருது விழா!
--------------------------
நங்கநல்லூர் வாழ்க வளமுடன் அரங்கத்தில் 25.04.15 ஆம் நாள் விழா நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் கவிஞர் இராம்.மோகன்தாஸ் அய்யா  சிறப்பான ஏற்பாடுகள்
செய்திருந்தார்.38 கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன் விருதுவழங்கி சிறப்புரையாற்ற
தமிழ் வளர்ச்சித் துறை  இயக்குநர் கா.மு.சேகர் வாழ்த்துரை வழங்கினார்.எனக்கும் விருது கிடைத்தது.

மதுரை பாபாராஜ்


நடக்காதவரை நல்லது!
------------------------
பூமி கீழிருக்க வானம் மேலிருக்க
நாமோ இரண்டின் இடையே நடக்கின்றோம்!
பூமி நடுங்கினாலும் வானம் குலுங்கினாலும்
நாமோ அதிர்ச்சியில் தான்.

கணினியே மழலையாய்
------------------------;
தாயின் மடியில் குழந்தைகள்! அன்று!
தாயின் மடியில் கணினிகள் இன்று!
சேய்களும் மாறி கணினியுடன் ஆடுகின்றார்!
வாழ்வே கணினி மயம்.

பூவில் அமர்ந்து ரசிக்கும் பறவையே!
பூவின் அழகிலே மெய்மறந்த புள்ளினமே!
யாரிங்கே தேடி வருகின்றார்? அப்படி
ஆர்வமுடன் பார்க்கின்றாய்? சொல்.

Thursday, April 23, 2015

எல்லோரும் காரணம்!
--------------------------
கண்ணே! மணியே! கனியமுதக் கற்கண்டே!
என்றெல்லாம் பாராட்டி சீராட்டிப் பார்த்தமகள்
இன்றோ தெருத்தெருவாய்ப் பிச்சை எடுக்கின்றாள்!
என்னபாவம் செய்தாள் இவள்?

விதியென்று சொல்லிச் சமுதாயம் பார்க்கும்!
மதிபிறழ்ந்த மாதென்று மாந்தர்கள் பார்ப்பார்!
மதிமுகத்தாள் முற்பிறவிப் பாவமென்றும் சொல்வார்!
இதுவோ? அதுவோ? குடிமகளைக் காக்கும்
துடுப்பாக  வேண்டும் அரசு.
----------------------------------------

தெய்வத் திருமணம்!
சித்திரைத் திருவிழா!
-------------------------------------
தெய்வத் திருமணம் என்றாலும்  அங்கேயும்
இல்லறக் கோபதாபம் ! அண்ணனின் ஆவேசம்
எல்லாமே உண்டு! மனித மரியாதை
இல்லையென்ற ஆதங்கம் உண்டு.

Wednesday, April 22, 2015

வாடிக்கையாளர்கள்!
-----------------------
வாடிக்கை  யாளர்கள் தொல்லையா? இல்லையில்லை!
வேடிக்கை பார்க்கின்ற கூட்டமா? இல்லையில்லை!
நாடித் துடிப்பாவார்! வாணிகத் தேருக்கே
ஈடில்லா அச்சாணி யாம்.

நதியும் நாணலும்
----------------------
நதியுன்னைத் தொட்டதால் நாணலே! நீயேன்
மதிமயக்கம் கொள்கின்றாய்? நாணத்தால் உந்தன்
மதிமுகத்தை மண்பார்க்க நிற்கின்றாய்? இக்கோலம்
நடிப்பா? துடிப்பா? விளம்பு.

உறவுகளுக் கில்லை இயற்கை மரணம்!
சிறகடிக்கும் ஆணவம், உள்ளத்தின் போக்கு,
மடமை  இவற்றால் உறவின் துடிப்பை
அடக்கி நிறுத்துகின்றார் பார்.

மொழியாக்கம்
மதுரை பாபாராஜ்

Monday, April 20, 2015

போலி உண்மையல்ல!
--------------------------------------
ஒப்பனை செய்துகொண்டு உண்மையாக உள்ளதை
எப்படியோ போலி அழகாக மாற்றுவார்!
அப்பப்பா! போலியை உண்மையென்று போற்றுவார்!
எப்படி ஏற்பது? சொல்.

Sunday, April 19, 2015

ரசித்து வாழ்வோம்!
---------------------
குழந்தைகள் சுட்டித் தனம்செய்யும் நேரம்
பரபரப்பாய் மாற்றி சுறுசுறுப்பாய் நம்மை
இயங்கவைத்துப் பார்த்துச் சிரிக்கும் அழகாய்!
இயல்பாக வாழ்வோம் ரசித்து.

மதுரை பாபாராஜ்

Saturday, April 18, 2015

பேச்சுத்துணை!
-------------------------------
பேச அழைப்பார்! இளமைப் பரபரப்பில்
பாசத்தை விட்டொதுக்கி நாமோ அலைந்திருப்போம்!
நாடகக் காட்சிகள் மாறும் முதுமையில்!
பேச விரும்புவோம் யாரும் வரமாட்டார்!
பேசத் தவிக்கும் மனது..

மகிழ்ச்சியாய் வாழ்க!
------------------------------------
வெளிப்படைத் தன்மை இணையருக் குள்ளே
தெளிவாய் இருந்தால்  மனக்குமுறல் இல்லை!
எரிச்சலைத் தோற்றுவிக்கும் வேறுபா  டில்லை!
தெளிவே மகிழ்ச்சிக்குத் தூது.

Friday, April 17, 2015

தேசிய கீதத்தை மதிப்போம்!
---------------------------------------------
மூன்றுமணி நேரம் நிகழ்ச்சிகளைப் பார்த்திருப்பார்!
மூன்று மணித்துளிகள் நாட்டுப்பண் கேட்காமல்
ஏனோ எழுந்தேதான் ஓடுகின்றார்? செந்தமிழே!
ஈனம் இதுதான் உணர்.

கூடற்ற பறவைகள்!
---------------------
காக்கைச் சிறகின் அணைப்பில் குயில்வளரும்!
காப்பகக் கூட்டின் அரவணைப்பில் பெற்றோரின்
காப்பற்ற சேய்வளரும்! ஏங்கும் இதயமுடன்!
கூட்டின் கதவுகள் வேறு.

முகங்கள்!
--------------
நடிக்கின்ற பொய்முகமா? நம்புகின்றார்! மானே!
நடிக்காத மெய்முகமா? நம்பவில்லை! அம்மா!
நடிப்பெது? உண்மையெது? என்பதற்கு சாட்சி?
துடிக்கும் மனசாட்சி தான்.

வம்பளக்க வேண்டாம்!
-------------------------
அன்பு நிரந்தரமா? உள்ளம் மகிழ்ந்திருக்கும்!
தெம்பு  நிரந்தரமா? உள்ளம் நிமிர்ந்திருக்கும்!
வம்பு நிரந்தரமா? உள்ளம் துவண்டுவிடும்!
வம்பளக்கும் எண்ணத்தை மாற்று.

Thursday, April 16, 2015

நேரத்தை மதிப்போம்!
----------------------
அவரவர் நேரம் அவரவர்க்குத் தேவை!
வளவள என்றேதான் பேசாமல் நேர
அளவறிந்து பேசு! சுருக்கமாகப் பேசு!
அவரவர் நேரத்தைப் போற்று.

மதுரை பாபாராஜ்

Tuesday, April 14, 2015

கொதிகலன்
----------------------
அதிகார வர்க்கத்தின் ஆணவப் போக்கால்
தறிகெட்டுப் போய்விடும் நாட்டுமக்கள் வாழ்க்கை!
எதிர்மறைச் சிந்தனையைத் தேக்கும் குணத்தால்
கொதிகலன் போலாகும் வாழ்க்கை

மகிழ்ச்சியாய் வாழ்வோம்!
----------------------------
இருக்கின்ற சூழ்நிலையை இன்பமாய் மாற்றும்
ஒருகலையைக் கற்றுத் தெளிந்துவிட்டால்  வாழ்வில்
ஒருபோதும் உளைச்சலும் கோபமும் நம்மை
நெருங்காது நாளும்! உணர்.

பருவம்
----------------------
வசந்தம்!
மரங்களில்
பசுமை!
நமக்கு
இளமை!
இலையுதிர் காலம்!
மரங்களில்
வெறுமை!
நமக்கு
முதுமை!
மரங்களுக்கு
மீண்டும் வசந்தம்!
நமக்கு?

முறுக்கு
----------------------------------
தாலி கட்டும் வரை
மாப்பிள்ளை முறுக்கு!
தாலி கட்டியதும்
மாப்பிள்ளையே முறுக்கு!

மனம்
----------------
இறுக்கம்
மனதில்!
தொடுத்தவர்
யாரோ?
இணக்கம்
மனதில்!
கொடுத்தவர்
யாரோ?
-------------------

Sunday, April 12, 2015

குறளே நீக்கும்!
------------------
புற அழுக்கை  நாளும் குளியலால் நீக்கு!
அகஅழுக்கை நாளும் திருக்குறளால் நீக்கு!
அகத்தூய்மை பெற்றுவிட்டால்  நிம்மதிதான் வாழ்க்கை!
அறவழிக்கே அதுதானே வித்து.

இதுதான் வாழ்க்கை!
--------------------
உறவின் தொடர்புக்கும் அந்தத் தொடர்பின்
தொடர்ச்சிக்கும் கால வரையரை உண்டு!
தொடர்ச்சியின் கண்ணி ஒதுங்கி விலகும்!
உறவின் சுழற்சி உணர்.

உறவுகளும் நட்பும் உதிர்வதுபோல் தோன்றும்!
தொடர்பறுந்து போன உறவுகள் மீண்டும்
தொடர்கின்ற வாய்ப்புவந்து  சேரும்! மலரும்!
நடப்பதை யார்தடுக்க? சொல்.

பொம்மையாக மாறு!
-------------------------
கவிதைக்குக் கரு:மங்கையர்
மலர் ஏப்ரல் 2015
பக்கம் 77
------------------------
பொம்மையைத் தந்தால் குழந்தை வசப்படுமா?
பொம்மையாக தாய்தந்தை மாறி குழந்தையுடன்
அன்பாய் விளையாடிப் பேசி மகிழ்ந்தால்
என்றும் குழந்தை வசமாகும் இன்பமுடன்!
அன்பால் வசப்படுத்தப் பார்.

Wednesday, April 08, 2015

உதிர்ந்த இலைகளைக் கூட்டிக் குவித்தேன்!
அதிரடியாய்க் காற்றோ கரங்களால் அள்ளிச்
சதிராடி மீண்டும் தரையிலே வீச
மதிமயங்கி நின்றேனே நொந்து.

குழந்தை மகிழட்டும்!
---------------------------------
குழந்தை   மகிழ்ச்சியைக் கட்டுப் படுத்தி
வளர்ப்பதும் வண்ணத்துப் பூச்சி சிறகை
இரக்கமின்றி  குண்டூசி கொண்டேதான் குத்திக்
கலங்கவைத்துப் பார்ப்பதும் ஒன்று.

ஏனிப்படி?
---------------------
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! சரிதான்!
பிறந்தபின் வாழ்க்கை புரட்டுகின்ற கோலம்
இறக்கின்ற வரைக்கும் பிறப்பைப்போல் ஒன்றாய்
தடம்பதிப்ப தில்லையே ஏன்?

அடுக்கக வாழ்க்கை
----------------------------------
தனித்தனி வீடுகளாய்க் கட்டியது மாறி
அணியணியாய் மற்றும் அடுக்ககங்கள் கட்டும்
மனித ரசனைகள் மாற்றத்தில் இன்று
கனிந்துவிட்ட காட்சியைப் பார்.

தனித்தனியாய் வாழ்ந்தாலும் ஒற்றுமையாய் வாழும்
தனிமனிதப் பக்குவமும் விட்டுக் கொடுக்கும்
மனப்போக்கும்  கற்கின்றார்! வாழ்வை ரசிக்கின்றார்!
மனமாற்றம் கொள்கின்றார் இங்கு.

Monday, April 06, 2015

முறையாக வாழ்வோம்

முறையாக வாழ்வோம்!
----------------------------------------
இறைவன் இருக்கின்றான்! ஆத்திகம் சொல்லும்!
இறைவனே இல்லையென்று நாத்திகம் சொல்லும்!
குறைசொல்லிச்  சாடுதல் தேவையற்ற வேலை!
முறையாக வாழவழி காட்டு.

நிறுவனமே கோயில்!
-------------------------------------
பணிக்களம் என்பது கோயிலைப் போல!
தனிமனித நல்லொழுக்கம் வேரூன்றி நிற்க
புனிதம் மணக்க நிறுவனத்தை நாளும்
கனியவைக்கும் பக்தியைக் காட்டு.

அகமுடையாளின் கடமை
         உணர்வு!
--------------------------------------------
முகநூலை விட்டுவிட்டுச் சற்றே எழுந்தே
அகநூல் இயங்க பொருள்வாங்கி வாங்க!
முகநூலை நானும் ரசித்திடுவேன் என்றே
அகமுடையாள் சொன்னாள் சிரித்து.

விடை தெரியாமலே
------------------------------------
அடுத்த பிறவியில் நம்பிக்கை இல்லை!
எடுத்த பிறவி எதற்கெடுத்தேன்? என்று
தொடுத்த வினாவின் விடையறியு முன்னே
படுத்துச் சரிந்துவிட்டேன் நான்.

மனித வெடிகுண்டு!
------------------------------------
குடித்துவிட்டுப் போதையிலே தள்ளாடிச் செல்லும்
குடிமகனே! உன்குடும்பம் சீரழிய நீயே
வெடிகுண்டாய் மாறிவிட்டாய்! பார்த்தாயா? இந்த
வெறியாட்டம் தேவையா? சொல்.

Saturday, April 04, 2015

மகிழ்ச்சியான தருணம்!
------------------------
குழந்தைப் பருவம் தலைகுனிந்து பார்ப்போம்!
வளர்ந்து நம்மையும் மீறும் குழந்தை!
வளர்ந்த பருவம்! தலைநிமிர்ந்து பார்ப்போம்!
மலைப்போம் மகிழ்ச்சியில் தான்.

விடாமுயற்சி!
------------------
முயற்சியென்னும் வீணையை மீட்டத் தெரிந்தால்
நரம்பறுந்த போதும் இசைக்கலாம் கண்ணே!
நரம்புள்ள போதும் முயற்சியை விட்டால்
சுரங்கள் முரண்படும்! கேள்.

Friday, April 03, 2015

பணம் பத்தும் செய்யும்!
-----------------------
பணத்தைத் தொடாத வரைக்கும் உறவில்
மனமொன்றிப் போகும்! மணங்கமழும் அன்பு!
பணமே விரிசலை உண்டாக்கும்! நாளும்
மனதை அலைக்கழிக்கும் பார்.

நல்லுறவே உயிர்நாடி!
--------------------------
தொழிலாளர் நிர்வாகம் நல்லுறவை வைத்தே
தொழிலில் உற்பத்தித் திறனும் தரமும்
உயிர்நாடி யாகும்! உயரும் உழைப்பால்
புவியில் நிறுவனந் தான்.

கடமையே கடவுள்!
-------------------------
கடமை தவறாமல் வாழ்ந்தாலே போதும்!
கடவுளருள் கிட்டும்! கடமை மறந்து
கடவுளைக் கும்பிடக் கோயிலுக்குச் சென்றால்
கடவுளருள் கிட்டாது காண்.

இயக்கம் தொடர!
----------------------
செலவுகள் இங்கே சிறிதா? பெரிதா?
அளவிட்டுப் பார்க்காதே! தேவையா என்ற
அளவுகோலை வைத்தே முடிவெடுத்தால் என்றும்
இயங்கும் நிறுவனம் தொடர்ந்து.

ஊடகத் திரையில்
தமிழுக்குத் தலைகுனிவு!
SUDA SUDA CHENNAI
--------------------------
தமிழ்மொழியைப் போற்றுகின்ற ஊடகத்தில் கூட
தமிழ்ச்சொல்லை ஆங்கிலத்தில் காட்டுகின்றார்! தாயே!
தமிழைக் களங்கப் படுத்துவதை  மாற்று!
தமிழைத் தமிழில்  எழுது.

Thursday, April 02, 2015

நிறுவனம் நிலைக்க
----------------------------------
சின்னஞ் சிறிய  செலவையும் பார்த்தேதான்
கண்ணுங் கருத்தாய்ச் செலவழித்தால் அத்தகைய
தன்மை படைத்த நிறுவனந்தான் சாதனையில்
என்றும் நிலைத்திருக்கும் காண்

சுய மதிப்பீடு!
---------------------------
என்னதான் வாழ்ந்தேன்? எடைபோட்டுப் பார்த்தேன்!
உன்வாழ்க்கைச் சாதனை எல்லாம் அரைகுறைதான்
என்றே மனந்தான் இடித்துரைக்க புன்னகைத்தேன்!
உண்மை எனஉணர்ந்தேன் நான்.

இதுவும் குற்றமே!
---------------------------------
பிச்சை எடுப்பது குற்றமென்று சொல்கின்றோம்!
கட்சி பெயரால் கடவுள் பெயராலும்
இச்சையுடன் நன்கொடை கேட்பதும் குற்றமே!
இக்குற்றம் யார்தடுப்பார்? சொல்.