Saturday, January 30, 2016

தைத்திங்கள் விடியல்

விண்ணின் கரங்களோ மேகத்தைக் கீழ்தள்ள
மண்ணின் கரங்களோ மேகத்தை மேல்தள்ள
அங்கே இயற்கையின் கைப்பந்தாட் டந்தன்னை
கண்ணெதிரே கண்டேன் ரசித்து.

திருமண நாள் வாழ்த்து

           27.01.2016

     பெறுநர்:
மகன் எழிலரசன்---மருமகள் சத்யபாமா

-------------------------------------------------------------
    செல்லப் பேரன்கள்

 நிகில் அபிசேக்-- வருண்ஆதித்யா
----------------------------------------------------------------
வள்ளுவத்தை வாழ்வாக்கி இல்லறத்தில் நாள்தோறும்
நல்லறத்தைப் பின்பற்றி நற்றமிழ்போல் வாழியவே!
பல்வளங்கள் சூழ்ந்திருக்க பைந்தமிழ்போல் வாழியவே!
பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து

ஆசிகள் வழங்குவோர்
வசந்தா -- பாபாராஜ்

Tuesday, January 26, 2016

பாப்பாப் பாடல்

பாப்பா பாப்பா குடியரசு
நமது நாட்டுக் குடியரசு!

விடுதலை பெற்ற பின்னாலே
அரசியல் சட்டம் உண்டாச்சு!

நீதியின் முன்னே நாமெல்லாம்
சமமாய் நிற்கும் குடிமக்கள்!

அறவழி நின்றே வாழ்வதற்கே
உரிமைகள் தந்த நாளிதுவே!

அனைத்து மதத்தின் நல்லிணக்கம்
ஒன்றே நமது குறிக்கோளாம்!

அன்பு நட்பு தோழமையே
இந்தியத் தாரக மந்திரமாம்!

ஒற்றுமை யாக வாழ்ந்திடுவோம்
வல்லர சாக மாற்றிடுவோம்!

மொழிப்போர்

மொழிப்போர் தியாகிகள்
           நாள் 25.01.2016
------------------------------------------------
செந்தமிழைக் காப்பதற்குத் தங்களது இன்னுயிரைத்
தந்த, தியாகத் தமிழரின்தாள்தொட்டே
என்றும் நினைத்தே வணங்குவோம்! அந்தநாள்கள்
நெஞ்சில் விதைத்த உணர்வு.

எண்ணற்ற போராட்டம் எண்ணற்ற இன்னல்கள்
அன்றிருந்து இன்றுவரை தொட்டுத் தொடர்கிறதே!
வண்டமிழைக் காக்கும் கரங்களாக மாறுவோம்!
அம்மா! புறச்சதியும் உட்சதியும் என்னசெய்யும்?
நம்மொழிக்கு நாம்தானே காப்பு.

குடியரசுநாள்

மக்களாட்சிமலர்ந்தநாள்
       
 26.01.2016
--------------------------------------------------
இந்திய நாடு விடுதலை பெற்றாலும்
இந்தியா மக்களாட்சித் தேரில் உலாவந்த
இந்தத் திருநாள் குடியரசு நாளாகும்!
இந்தியர்கள் நின்றார் நிமிர்ந்து.

அரசியல் சட்டத்தை அம்பேத்கார் அண்ணல்
தரமான பண்புத் தலைமையில் தந்தார்!
மலர்ந்தது இந்தியர்கள் வாழ்வில் உரிமை!
வரவேற்றது நாடே மகிழ்ந்து

மக்கள் உரிமையுடன் நல்லொழுக்கப் பாதையில்
அக்கறை கொண்டு பொறுப்புடன் நாட்டிலே
ஒற்றுமையைக் காத்தேதான் வாழவழி தந்தநாள்!
எப்பகையும் தோற்றுவிடும் பார்.

Sunday, January 24, 2016

நேர்மறையே உற்சாகம்!

எப்பொழுதும்" ஏதோ இருக்கின்றேன்" என்பதற்கும்
நற்றமிழே" நன்றாய் இருக்கின்றேன்" என்பதற்கும்
எத்துணை வேறுபாடு? உள்ளம் எதிர்மறைக்குள்
சுற்ற அனுமதித்தால் சோர்வில் உருக்குலையும்!
உற்சாகம் நேர்மறையே சொல்.

Lot of difference between "My health is so so"
and " oh! I am fine".
If negative attitude is allowed, fatigue grips you.
Always speak positive words.

உலகே இப்படித்தான்!
--------------------------------------------
மெய்சொன்னால் நம்பமாட்டார் பொய்சொன்னால் நம்புகின்றார்!
பொய்சொல்ல வானமே எல்லையாம்! மெய்சொல்ல
புள்ளி இடமில்லை! பொய்களை மெய்யென்றே
மெய்களே நம்பும் உலகு!

அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங் கருணை!

தைப்பூச நாளில்

வள்ளலாரை வணங்கு
-----------------------------------------------
வள்ளலார் வாழ்ந்திருந்த செந்தமிழ் நாடென்றே
உள்ளும் நினைவிலே மேனி சிலிர்க்கிறது!
வெள்ளைத் துறவி! தெளிவான சன்மார்க்கம்!
உள்ளதானந் தன்னில் சிறந்ததானம் அன்னதானம்!
சொல்லிய வள்ளலாரை வாழ்த்து.

தேரோட்டம்!
------------------------------
வாழ்க்கை, உருள்பெருந் தேருக் கிணையாகும்!
நாள்தோறும் நம்பிக்கை அச்சாணி பூட்டித்தான்
தேரோடும் கோலமுண்டு! நம்பிக்கை மட்டுமே
தாழ்வுகளைத் தாங்கவைக்கும் சாற்று.

Friday, January 22, 2016

திரைப்படக்காதல்!
--------------------------------------
நடப்பாள்!திரும்பித்தான் பார்ப்பாள்! சிரிப்பாள்!
கடக்கும் பொழுதோ காதலன் வந்தே
எடக்கு மடக்காக பேசுவான்!அவளோ
மனதில் ரசித்தே எரிந்து விழுவாள்!
தினமும் கனவிலே கட்டிப் புரள்வார்!
கனலோ புனலாகும் காதலென்பார்! காதில்
நமக்கெல்லாம் சூட்டுவார் பூ.

Thursday, January 21, 2016

பீனிக்ஸ் பறவை!
------------------------------------
சுழற்சி முறையில் மறுபிறவி காணும்
தழல்பறவை பீனிக்ஸ் கதிரோன் உறவு
வகையில் திளப்பது! முன்னோர் எரிந்த
தழலினது சாம்பல் இருந்தே உயிர்த்தே
எழுந்திடும் புள்ளாம்! கிரேக்க புராணம்
விளம்பிடும் கூற்றாம் உணர்

Wednesday, January 20, 2016

பொறுக்கமாட்டார்!
-----------------------------------------------------------
ஒன்றாய் இருந்தால் வலிமைதான்! இவ்வுலகம்
ஒன்றை இரண்டாக்கி மூன்றுபேர் சேர்ந்துவந்து
அம்மம்மா நான்காக்கி ஐந்துபேரைத் தூண்டிவிட்டு
கண்டபடி வேடிக்கை ஆறுபேர் பார்த்திருக்க
துண்டைப் பெரிதாக்க ஏழுபேர் வந்திடுவார்!
கண்முன்னே எட்டாய்ச் சிதறவைத்தே தேங்காய்ச்சில்
ஒன்பதாக துள்ளி விழுவதைப்போல் ஆக்கிவிட்டே
நன்றாக பத்துபேர்முன் கேலிப் பொருளாக்கிச்
சென்றிடுவார் இங்கே நகைத்து.

என்றும்அவள் மங்கலமே!

கணவன் இருந்தால்தான் மங்கலம் என்னும்
மனப்போக்கை மாற்று! திருந்து!-- மனதார
வாழ்ந்தவளின் மங்கலம் என்றும் அவளுடன்தான்!
கோலமாற்றம் கேடில்லை கூறு.

நேதாஜி பிறந்தநாள்
23.01.2016
----------------------------------------
நன்முறையும் வன்முறையும் ஒன்றிக் கலந்ததே
இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டம்!
தன்வழியில் போராடி நாட்டு விடுதலைக்குத்
தன்பங்கைத் தந்தவர் நேதாஜி! வங்கத்தின்
சிங்கத்தைப் போற்றுவோம் இன்று.

Saturday, January 16, 2016

நூல்
------------
நூலின்றி ஆடையில்லை! கற்பதற்குத் தூண்டுகின்ற
நூலின்றி  ஊறும் அறிவில்லை! கண்மணியே!
நூலிரண்டில் ஒன்றோ உடல்மானம் காப்பதற்கும்
நூலிரண்டில் ஒன்றோ அவைமானம் காப்பதற்கும்
வேர்களை ஊன்றும் உணர்.

உறுத்தல்

மனசாட்சி நம்மை மதிக்கின்ற வண்ணம்
குணக்குன்றாய் வாழ்ந்தால் குவலயமே போற்றும்!
குணக்கேட ராகி குறுக்குவழி சென்றால்
மனசாட்சி கொல்லும் நகைத்து.

ஓசைகளும் எழுச்சியும்
----------------------------------------
உளியின் ஓசை
சிலையின் எழுச்சி!

அலைகளின் ஓசை
கடலின் எழுச்சி!

சலங்கை ஓசை
நாட்டிய எழுச்சி!

அருவியின் ஓசை
நீரின் எழுச்சி!

பண்களின் ஓசை
இசையின் எழுச்சி!

சொற்களின் ஓசை
மொழியின் எழுச்சி!

மழலையின் ஓசை
இனிமையின் எழுச்சி!

எழுசீர் ஓசை
குறளின் எழுச்சி!


சிறகுக்குள் வானம்


சிறகுக்குள் வானம்!

நூலாசிரியர்
பாலாவுக்கு

சிறகுக்குள்
வானம்
என்னைச்
சிறைப்படுத்திய
வானம்!

தமிழின் நடை
நடையின் வேகம்
வேகத்தில் விவேகம்
சொல்லி மாளாது
சொற்கள் போதாது!

நிகழ்வுகளின்
தோரணம்
கருத்துகளின்
ஊர்வலம்
தொய்வின்றி
என்னை
தொடர்ந்து
படிக்க வைத்தது!
முடிக்கச் செய்தது!

வள்ளுவரை வணங்குவோம்!
----------------------------------------------------------
வாழ்வியல் நற்கருத்தை உள்ளடக்கி வள்ளுவர்
பாவினத்தில் ஏழேழு சொற்களில் அற்புதமாய்
ஆயிரத்து முந்நூற்று முப்பது  தேன்குறளால்
வேலிகளைத் தாண்டாமல் வாழவழி காட்டுகின்றார்!
வேலிக்குள் வீறுநடை போடு.

Friday, January 15, 2016

பொங்கலோ பொங்கல்!
------------------------------------------------
பொங்கலிடும் பானையில் கொத்துமஞ்சள் கட்டிவைத்துச்
செங்கரும்பு நிற்கவைத்தே உற்றார் உறவினர்கள்
இங்கே மகிழ்ச்சியுடன் சூழ்ந்திருக்க
பொங்கலங்கே பொங்குகின்ற நேரத்தில் செந்தமிழால்
பொங்கலோ பொங்கலென்றே கூவித்
திளைத்திடுவோம்!
ஒன்றாக வாழ்த்திடுவோம் நாம்.

சர்க்கரைப் பொங்கலுடன் வெண்பொங்கல் சாம்பாரும்
நன்கு மணங்கமழ வாழை இலைபோட்டே
பண்பு மிளிரப் பகிர்ந்துண்ணும் கோலங்கள்
கண்கொள்ளாக் காட்சிதான் காண்.

உழவில்லை என்றால் உலகில்லைஎன்றும்!
உழவர்கள் தந்த உழைப்பிற்கு நன்றி
வழங்குகின்ற பொன்னாளே இந்தத் திருநாள்!
உழவருக்கு நன்றி நவில்

போகி
--------------
பழையதைப் போக்கிப் புதியதை ஏற்போம்!
களைந்தெறி உட்பகை ஆணவம் தன்னை!
தழைக்கவைஆக்கபூர்வ பண்புகளை நாளும்!
உழைப்பால் உயரப் பழகு.

இரண்டும் உண்டு!
------------------------------------+
நான்வந்த பாதையிலே பூக்கள் கிடந்தபோது
மான்போலத் துள்ளி மகிழ்ந்து நடந்துவந்தேன்!
தேன்மலரைத் தாண்டியதும் முள்ளினங்கள் கண்சிமிட்ட
நானோ முகஞ்சுழித்துத் தான்நடந்தேன்! அம்மம்மா!
தாங்கினேன் பூக்களைப் பார்த்து.

Tuesday, January 12, 2016

அன்று வீரம் ; இன்று ஈரம்
----------------------------------------------------
குடிக்காமல் வீரத்தைக் காட்டு! நாளும்
படித்தேதான் வீரத்தைக் காட்டு! ஒழுக்கக்
கொடிபிடித்தே வீரத்தைக் காட்டு! விலங்கைப்
பிடிப்பதா வீரம்? உரை.

மாவீரன் அலெக்சாண்டர்
--------------------------------------------------
பேராசை வேண்டாம்
---------------------------------------------------
வெற்றிமீது வெற்றிபெற்றேன்! நாடுகளை வென்றெடுத்தேன்!
இப்போது நானோ மரணப் படுக்கையில்!
வெற்றி மகுடங்கள் என்னுடனா ஓடிவரும்?
சுற்றிலும் வெற்றிடமே! கல்லறையில் வைக்கும்முன்
வெற்றி வெறிபிடித்த இந்தக் கரங்களை
முற்றும் திறந்துவைத்து மூடுங்கள்! செத்தபின்பு
செத்தைகூட நம்முடன் வாராதே என்பதை
மக்கள் உணரட்டும் இங்கு.

விவேகானந்தர் பிறந்த நாள்
      (12.01.2016)
----------------------
விவேகா னந்தர் முழக்கத்தைக் கேட்டே
அனேகர் வியந்தனர்! இந்திய நாட்டின்
அமைதித் துறவியின் அறிவுத் திறனில்
இமைக்க மறந்தனர் அன்று.

பாசவலை
------------------------
நீர்நிலையின் பாசம் வழுக்கவிட்டுத்  தள்ளிவிடும்!
வாழ்க்கையின் பாசம்இழுக்கவைத்துத் துள்ளவைக்கும்!
நீர்நிலைப் பாசத்தைக் கால்பதித்துத் தாண்டலாம்!
வாழ்க்கையின் பாச வலையிலே சிக்கினால்
நாளும் துடிக்கின்ற மீன்.

கணவன் மனைவி!
-------------------------------------
நெட்டையோ குட்டையோ சேர்ந்துவாழ்தல் நல்லது!
வெட்டிவிட்ட துண்டுகளாய் வெவ்வேறு திக்குகளில்
ஒட்டாமல் வாழ்வதா இல்லறம்? கண்மணியே!
வெற்றியே ஒற்றுமையில் தான்..

தேர்வலம்!
-------------------------------
கட்சிகளே ஆட்சி அமைக்க முடியுமென்ற
கட்டாயச் சூழ்நிலையில் வாக்காளர் உள்ளனர்!
அப்படி ஆட்சி அமைக்கின்ற கட்சியிங்கே
அப்படியே வள்ளுவத்தின் சாரத்தை நற்றமிழே!
அச்சாணி யாக்கினால் ஆட்சியென்னும் தேருக்கு
மக்களாட்சி ஊர்வலந்தான் பார்

Sunday, January 10, 2016

ஓகோ!
----------------
பாறையில் கற்களில் மோதிமோதி ஓடிவந்தேன்
ஆடையின்றி வந்தே மலைநடுவில் வெண்ணிற
ஆடைகட்டி காற்சலங்கை கட்டி இசைமீட்டி
ஊடறுத்தே நான்விழுந்தேன் பேரழகுச் சித்திரமாய்!
ஆகா! அருவியன்றே சொல்லிச் சிலிர்த்தனர்!
ஓகோ! அருவியா! நான்

அமைதியே அழகு

அமைதிக் கருகில் அமதியாய்ச் சென்று
அமைதியைப் பார்த்தால் அமைதி ரசித்தே
அமைதியாய்ப் பார்க்கும்! அழகில் மிளிரும்
அமைதி அழகே அழகு.

கடல்
----------
அலைகள் எழும்போ தெழுந்தே உயரும்!
அவைகள் விழும்போதோ தாழ்ந்தே மறையும்!
நிலைகளும் வாழ்விலே இப்படித்தான் மாறும்!
சலனமின்றி ஏற்கும் கடலைப்போல் கண்ணே!
நிலைகளை ஏற்கப் பழகு.

காலையில் எழுந்ததும் சிரிப்போம்

சோலை மலரினங்கள் பூத்துச் சிரிப்பதுபோல்
காலைப் பொழுதில் விழித்தெழுந்து நாமிங்கே
சோலை மலராய் சிரித்த முகத்துடன்
நாளை வரவேற்போம் வா.

மனிதப் புனிதர்
------------------------------------------
சூழ்நிலையே தோன்றாமல் நல்லவராய் வாழ்ந்திடலாம்!
சூழ்நிலைகள் தோன்றி உலுக்கிடும் நேரத்தில்
சூழ்நிலையை வென்று தலைநிமிர்ந்து நிற்பவரைச்
சூழ்ந்து வணங்கும் உலகு.

Wednesday, January 06, 2016

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்
அறிவித்த பொங்கல் பரிசு
07.01.2016
------------------------------------------------------------------
ஒருகிலோ பச்சரிசி சர்க்கரை மற்றும்
கரும்புடன் ரொக்கத் தொகையாக நூறும்
அரும்புகின்ற பொங்கல் நாளின் தொகுப்பு
பரிசாய் வழங்குகின்றார் வாழ்த்து.

ஒழுக்கமுடன் வாழ்வோம்

கற்றது கைம்மண் ணளவுதான்  என்றாலும்
கற்பதைக் கற்றுத் தெளிந்து புரிந்துகொண்டே
கற்றதற் கேற்ப ஒழுக்கமுடன் வாழ்ந்தால்
கற்றதில் அர்த்தமுண்டு காண்.

Tuesday, January 05, 2016

திருப்பூர் குமரன் வாழ்க

11.01.2016
------------------------------------+----------
ஆங்கிலேயர் ஆட்சி அடக்குமுறைக் கஞ்சாமல்
ஏந்திவந்த நாட்டுக் கொடியை இறுதிவரை
தாங்கிப் பிடித்துத் தியாக விளக்கானார்!
ஏங்கி வணங்குவோம் இன்று.

தாயை, தந்தையை வணங்கு!
-------------------------------------------------------------
இல்லை கடவுள்! .இருக்கு கடவுளென்றே
எல்லையற்ற வாதங்கள் சுற்றிச் சுழன்றாலும்
எல்லார்க்கும் நல்லது கெட்டது வந்துவந்து
துள்ளவைக்கும் உண்மையைப் பார்.

எதற்கிந்த வாதம்? எதற்கிந்த சாடல்?
கடவுளைப் பற்றிக் கவலைப் படாமல்
கடமையைச் செய்வதே வாழ்க்கை நெறியாம்!
நடமாடும் தெய்வங்கள் பெற்றோரை நாளும்
அகத்தில் வணங்கித்தான் போற்று.

சலவையாளர் வாழ்க

சலவையாளர் வாழ்க!
--------------------------------------------
அடித்துத் துவைத்துக் கசக்கிப் பிழிந்து
கொடியில் வெயிலில் உலர்ந்த பிறகு
மடித்து மடித்துச் சலவை புரிந்து
மடிப்புக் கலையால் மனதைக் கவர்ந்து
புதிய உடையாய்ச் சலவையாளர் மாற்றும்
மதியின் உழைப்பினை வாழ்த்து.

Monday, January 04, 2016

அனுசரி
-------------------
அனுசரித்து வாழ்ந்தால் அமைதி பெருகும்!
அனுசரிக்கா விட்டால், அமளி பெருகும்!
அனுசரிக்கப் பழகு அகந்தை விலகும்!
அனுசரிப்பே வாழ்வின் முகம்.

வேதனையின் வித்து!
----------------------------------------
நாட்காட்டி மற்றும் விளம்பரத் தாள்களில்
போற்றும் கடவுள்,நடிகர், தலைவர்கள்
காட்சிகளைப் போட்டுதான் விற்பார்! பழசானால்
தூக்கி எறிகின்றார் குப்பையிலே! தேவையா?
போற்றுவோரை உள்ளத்தில் வீட்டில் வணங்குங்கள்!
நாட்டில் நடுத்தெருவில் தூக்கி எறிகின்ற
காட்சிகளோ வேதனையின் வித்து.

பேராசை!
---------------------
மானுக்கு மீன்பிடிக்கும் ஆசையோ பேராசை!
மீனுக்கு மான்பிடிக்கும் ஆசையோ பேராசை!
தானுண்டு தன்னெல்லை உண்டென்று வாழ்ந்திருந்தால்
தோணுமா பேராசை சொல்?

Cowards die many times before their death;
Valiant never tastes death but once.
SHAKESPEARE

கோழை பலமுறை சாகின்றான்! மண்ணுலகில்
வீரன் ஒருமுறைதான் சாகின்றான்! வள்ளுவத்தின்
சாரமுடன் வாழ்பவன் வீரன்! மறந்துவிட்டுச்
சாரமின்றி வாழ்பவன் கோழைத் தனத்திற்குத்
தாளமிடும் மானிடன்தான் சாற்று.

தாயை மறக்காதே!
---------------------------------------
எந்த மொழியெனினும் கற்றுத் தெளிந்துவிட்டால்
பின்னாளில் வாழ்வில் பயன்படலாம்---என்றாலும்
தாய்மொழியை இங்கே மறப்பதும் பெற்றெடுத்த
தாயை மறப்பதும் ஒன்று.

நகர்கின்ற காய்கள்!
--------------------------------------
காலம் நகர்த்துகின்ற  காய்கள் மனிதர்கள்!
கோலத்தை மாற்றும் இடங்களை மாற்றிவைக்கும்!
தாளத்தை மாற்றும்! எவரெங்கு யாருடன்
வாழவேண்டும் என்று கணித்தேதான் மாந்தர்கள்
சேர வழிகாட்டும் செப்பு.

யார்காப்பாரோ?
--------------------------------------
நேர்மைக்கோ நெத்தியடி! வாய்மைக்கோ வாய்ப்பூட்டு!
சேர்ந்ததெல்லாம் இப்படித்தான் என்றானால் எப்படித்
தேர்ந்து தெளிவது நம்நாடு? அப்பப்பா!
யார்காப்பார்?வந்து துணிந்து!

தமிழின் ஏக்கம்!
(எனக்கும் பொருந்தும்)
--------------------------------------------
ஆங்கிலத்தை வாழ்வின் தமிழாக மாற்றிவிட்டார்!
ஏங்குதம்மா தாய்த்தமிழ்தான் தன்னையே தேடித்தான்!
தூங்குவோரை நாமோ எழுப்பலாம்! நாள்தோறும்
தூங்குவது போல்நடித்தால் யாரெழுப்பக் கூடுமிங்கே?
தேன்தமிழின் ஏக்கம் உணர்.

கொக்கரக்கோ

உருளைக் கிழங்கோ உருட்டும் வயிறை!
பருப்பு வகையோ படுத்தும்--இருந்தாலும்
மக்கள் சுவைத்து மகிழ்ந்திருக்க வயிற்றுக்குள்
கொக்கரக்கோ கூவல்தான் கேள்.

மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு வேண்டுகோள்!
31.12.2015
-----------------------------------------------------------
எந்தெந்த நாட்டுக்கோ தேடியோடும் எங்களது
இந்திய நாட்டுப் பிரதமரே! நம்முடைய
இந்திய மீனவரை நாளும் சிறைப்பிடிக்கும்
அந்தோ இலங்கைக் கடற்படை தாக்குதலை
கொஞ்சம் தலையிட்டுத் தீர்க்கின்ற ஆற்றலை
எங்களுக்காக காட்டாத தேன்?

அட்டகாசம் செய்கின்றார் கேட்கத் தயக்கமேன்?
கொட்டடியில் போடுகின்றார் கேட்கத் தயக்கமேன்?
எப்பொழுதும் தண்டனை! கேட்கத் தயக்கமேன்?
தக்க நடவடிக்கை இல்லை! தயக்கமேன்?

இலங்கைக் கடற்படை மீனவரைத் தாக்கி
கலங்கவைத்துப் பார்க்கின்ற வேதனைப் பிழிவில்
கலங்குகின்றோம் தீர்ப்பதே உங்கள் கடமை!
முயற்சிக்க வேண்டுகிறோம் நாம்.

Sunday, January 03, 2016

இரவல் நிலைக்காது
---------------------------------------
இரவில் ஒளியுடன் வாழ்ந்த நிலவு
உலவி முடித்து விடியலின் வானில்
தளர்ந்தே ஒளியிழந்த கோலம்! கதிரோன்
வளர்ந்தான் கிழக்கில் பறித்தான் ஒளியை
நிலவும் மங்கியது பார்.

பக்குவப்படு!
--------------------------
நேற்றுபோல்  இன்றில்லை இன்றுபோல் நாளையில்லை!
மாற்றங்கள் வந்து மலைத்திட வைத்தாலும்
ஏற்கும் அணுகுமுறைப் பக்குவத்தால்  நற்றமிழே!
தோற்றோடும் கோழைத் தனம்.

நடந்தால் சரி!
----------------------------
இதுதான் நடக்கும்! அதுதான் நடக்கும்!
எதுதான் நடக்கும்? எவரறிவார் தாயே!
எதுநடந் தாலும் நடப்பது நன்றாய்
அதுவாய் நடந்தால் சரி.