Tuesday, March 31, 2015

கோயிலும் சாக்லேட்டும்!
--------------------------------------------
கோயிலுக்குச் சென்றால் தலைவிதி மாறுமென்பார்!
தாவித்தான் சென்றிடுவோம்! மாறாத ஏக்கந்தான்!
சேய்களுக்குச் சாக்லேட்டைத் தந்தே சிரிக்கவைத்துப்
பார்ப்பது போல்தான் இது.

மோசடி!
------------------
வானத்தை வில்லாய் வளைப்பேன்! பெருங்கடலை
பானமாய்  நானோ பருகிடுவேன் !பூமணலை
தேனே! கயிறாய்த் திரித்திடுவேன்! என்பார்கள்!
ஈனமன மோசடிதான் சொல்.

இயற்கைக் காட்சிகள்!
------------------------------------
வளைகளை நோக்கித்தான் நண்டுகள் ஓடும்!
மலர்களை நோக்கித்தான் வண்டுகள் தாவும்!
நிலங்களை நோக்கித்தான்  வான்மழை பாயும்!
குளமீனை நோக்கிநிற்கும் கொக்கு.

முடிச்சுகள் நீங்கும்!
----------------------------------
வாழ்வின்முடிச்சுகளை நீக்கும் மயற்சியில்
தோல்வியும் வெற்றியும் மாறிமாறி வந்தாலும்
சோர்வினறி நாளும் கணவன் மனைவியும்
தோள்கொடுத்தால் நீங்கும் முடிச்சு.

Monday, March 30, 2015

இன எழுச்சி!
----------------
உற்றுக் கவனித்தால் எல்லாம் இனங்களைச்
சுற்றி நிகழ்வதை நீக்கமற காணலாம்!
நற்றமிழே! சாதிஇனம் இல்லையென்று சொல்கின்றார்!
அத்தனையும் இங்கே முரண்.

இதுதான் அழகு!
-------------------
சிரிக்கின்ற வாய்ப்பை மனிதஇனம் மட்டும்
புவியிலே பெற்றிருக்கும் பொன்னான வாய்ப்பாம்!
சிரிக்க மறுப்பது நோயாகும்! கண்ணே!
சிரிப்பே முகத்தின் அழகு.

உழைப்பே மதிப்பு !
--------------------
உழைக்க மனமிருந்தால் நாள்தோறும் இங்கே
பிழைக்க வழிகளும் வாய்ப்புகளும் உண்டு!
உழைக்க மறுத்தேதான் சோம்பேறி யானால்
நிழலும் நகைக்கும் உணர்.

ஊடகத் திரையில்
தமிழுக்குத் தலைகுனிவு!
SUDA SUDA CHENNAI
--------------------------
தமிழ்மொழியைப் போற்றுகின்ற ஊடகத்தில் கூட
தமிழ்ச்சொல்லை ஆங்கிலத்தில் காட்டுகின்றார்! தாயே!
தமிழைக் களங்கப் படுத்துவதை  மாற்று!
தமிழைத் தமிழில்  எழுது.

மருத்துவர் கூறும் அறிவுரை கேட்டுக்
கருத்தாய் சிகிச்சை முடித்தால் நமக்கும்
முழுக்குணம் உண்டாம்! இல்லையேல் என்றும்
அரைகுறை யாகும் குணம்.
------------------------------------

நமக்கேன் மருத்துவர்?
------------------------
மருத்துவர் சொன்னபடி மூன்றுநாட்கள் கேட்போம்!
மருந்தால் சிறிது குணம்தெரியும்! நாமோ
மருந்தை நிறுத்தி வியாக்யானம் பேசி
மருத்துவராய் மாறிடுவோம் நாம்.

எச்சரிக்கை!
--------------
திரைப்பட வாழ்க்கை கடல்பயணம் போல!
கரைதெரியும் போதே கரைநோக்கிச் சென்றால்
கரையேறும் வாழ்க்கை! கரைவிலகிப் போனால்
கரைகாணத் தத்தளிப்பார் பார்.

இயற்கைக்கு நிகரேது?
-----------------------
என்னதான் மின்விசிறி சுற்றிச் சுழன்றேதான்
அன்பாய்க் குளிர்க்காற்றைத் தந்தாலும்--தென்பொதிகைத்
தென்றல் தெளிக்கும் குளுமைக்கோ ஈடில்லை!
கொஞ்சும் இயற்கையே தாய்.

Sunday, March 29, 2015

தூண்டலும் துலங்கலும்
----------------------------------------
குத்து விளக்காக ஆற்றல் இருந்தாலும்
குத்து விளக்கின் திரியாக வாய்ப்புகளை
ஒப்படைத்துத் திரிகளைத் தூண்டிவிடும் பண்பால்தான்
அற்புதத்தைச் செய்யும் விளக்கு

முள் நகைக்கிறது!
-------------------------------:
முள்ளை கிராமத்தார் கால்மிதித்தால் முள்ளொடியும்!
முள்ளை நகரமக்கள் கால்மிதித்தால் கால்விரலை
முள்ளொடிக்கும்! இங்கே வலிமையுள்ள  மாந்தர்யார்?
எள்ளிநகை யாடுது முள்.

விருந்தும் மருந்தும்
---------------------------------
இருப்பிடந்தான் சொர்க்கம்! இதைவிட்டுச் சென்றால்
விருந்தும் மருந்துமிங்கே மூன்றுநாள் என்ற
கருத்துதான் உண்மையெனத் தோன்றவைக்கும் காலம்!
கருத்துணர்ந்து வாழ்தலே நன்று.

சிக்கித் தவிப்போர்!
----------------------
விட்டுக் கொடுக்கும்  அடிப்படைப் பண்பினைக்
கற்றுத் தெளியாமல் கர்வமுடன் வாழ்பவர்கள்
நற்றமிழே! சிக்கலெனும் தூண்டிலுக்குள் தாங்களே
சிக்கித் தவிப்பவர்க ளாம்.

மீண்டும் வருமோ?
-------------------
சுடுசோறை அம்மா உருட்டிக் கொடுக்க
குடும்பத்தார் உட்கார்ந்து கைநீட்டி வாங்கி
சுறுசுறுப்பாய் போட்டிபோட்டுச் சாப்பிட்ட சூழல்
வெறுங்கனவாய்ப் போனதேன் இன்று?

குருவிகள் பலியாடு!
-----------------------------------------
செல்போன்கள் கோபுரத்தால் நாட்டில் குருவியினம்
இல்லாமல் போகுமென்று சொல்கின்றார்! கூச்சலிடும்
செல்போன்தான் வேண்டுமாம்! சிட்டுக் குருவிகளின்
மெல்லிசை வேண்டாமாம் ஏன்?

உறவை மதிப்போம்!
----------------------
நல்லதுக்குப் போக முடியாமல் போனாலும்
உள்ளமே! கெட்டதுக்கு நாமோ ஆறுதல்
சொல்வதற்குப் போகவேண்டும்! இத்தகைய பண்பில்தான்
கல்வெட்டாய் நிற்கும் உறவு.

இறைவன் விரும்புவது

இறைவன் விரும்புவது
-------------------------
இருகரங்கள் நீட்டி இறைவனை வேண்டி
தொழுவதைக் காட்டிலும் ஏழைகள் வாழ
ஒருகரம் நீட்டி அறங்களைச் செய்தால்
அருளைப் பெறுவோம் நிதம்.

வழிகாட்டி
------------------------
பெரியவர்கள் கூறும் அறிவுரைகள் எல்லாம்
சரியில்லை என்றே புறக்கணிககும் வாழ்க்கை
தெளிவற்ற பாதைப் பயணம்போல் ஆகும்!
தவிக்கவைத்துப் பார்க்கும் தினம்.

உழைப்பின் சிறகு!
-----------------------------------------
உறங்கி விழித்தால் விடியல்! தெருவில்
இறங்கி நடந்தால்தான் வாழ்க்கை! ஏற்றம்
இறக்கந்தான் பக்குவம்! நாளும் உழைப்பின்
சிறகே உயர்வைத் தரும்.

வீண்கற்பனை தவிர்!
--------------------------------------------------
அப்படித்தான் என்று தனக்குள் கற்பனையைத்
தட்டிவிட்டு நெஞ்சு படபடத்து--எப்படியோ
கேட்பதற்குச்  சென்றால் எதுவுமே நடக்கவில்லை!
காற்றிழந்த வண்ணபலூன் தான்

இதுதான் ஒற்றுமை!
----------------------
பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் மனமுவந்து
ஒன்றாய் மகிழ்ந்து திருமணத்தை இன்பமாய்
மங்கலம் பொங்க நடத்துகின்ற கோலத்தில்
கண்டேன் பெருந்தன்மை இங்கு.

Tuesday, March 17, 2015

மாப்பிள்ளை வீட்டார்!
-------------------------;
மாப்பிள்ளை என்றால் துரும்பும் சிலிர்த்துநிற்கும்!
கூப்பாடு போட்டு மணப்பெண் வீட்டாரை
ஆட்டிவைத்துக் கண்கலங்க வைக்கும் காட்சியில்
மாட்டி விழிக்கவைப்பார் பார்.

இரண்டு மனங்கள் இணையும் விழாவில்
முரண்டு பிடிக்கும் முரட்டுக் குணங்கள்
தரத்தைக் குறைத்துத் தலைகுனிய வைக்கும்!
உலகம் உணருமா? சொல்.

திருந்தச் செய்!
------------------
செய்யும் தொழிலோ எதுவாய் இருந்தாலும்
செய்வதில் உள்ளத்தை ஒன்றிணைத்து நேர்த்தியாக
செய்தால் தொழில்தான் வளரும் செழித்தோங்கும்!
எல்லாம் உழைப்பின் பயன்

வாழையடி வாழை!
-----------------------
கணவன் புனலாவார்! மாமனார் மாமி
அனலாவார்! அன்றிருந்து இன்றுவரை இந்த
மனப்பாங்கே இல்லறத்தில் நாம்காணும் காட்சி!
மனைவியை ஏற்பார்! மனைவியின் பெற்றோர்?
மனைக்குள் நுழைந்தால் முறைப்பார்! தமிழே!
நினைத்தால் சிரிப்புதான் பார்.

சிரித்து வாழ்வோம்
--------------------
எவரையும் வீழ்த்த நினைக்காதே! நாளும்
அனைவரின் அன்பையும் வெல்வது நன்று!
எவரையும் பார்த்து நகைக்காதே! ஆனால்
அனைவருடன் சேர்ந்து சிரி.

மொழியாக்கம்
மதுரை பாபாராஜ்

பண்பலைகள்!
------------------
வாழ்க்கை அழகான பூந்தோட்டம்! தோட்டத்தைப்
பார்த்து வளர்த்தே சோலையாக மாற்றுவதும்
நாள்தோறும் பிய்த்தெறிந்து பாலையாக மாற்றுவதும்
ஆழ்மனப் பண்பலைகள் தாம்.

பரபரப்பும் ஓய்வும்

பரபரப்பும் ஓய்வும்!
----------------------
திங்கள் முதலாக வெள்ளி வரையிலும்
அன்றாடம் காலைப் பொழுதின் பரபரப்பு!
இங்கே சனிக்கிழமை மற்றும் ஞாயிறில்
அந்தப் பரபரப்புக்(கு) ஓய்வு.

மனிதப் பிறவி!
----------------
குயிலாய்ப் பிறந்திருந்தால் பாடி மகிழ்வான்!
மயிலாய்ப் பிறந்திருந்தால் ஆடி மகிழ்வான்!
புவியில் மனிதப் பிறப்பெடுத்தான் நாளும்
தவித்துத் துடிக்கின்றான் பார்.

தேய்மானம்!
-----------------
இயந்திரங்கள் நாளடைவில் தேய்மானம் பெற்றுத்
தளர்ந்தே இயங்கும் மெதுவாக, நாமும்
வளர்பிறையில் தேய்மானம் பெற்றுத் தளர்வோம்!
தளர்ச்சியே  தேய்மானம் பார்.

இது சரியல்ல!
------------------
வளமான வாழ்க்கையோ எட்டாக் கனியாய்ப்
பலருக்கும்  இங்கிருக்க சிலருக்கு மட்டும்
வளங்கள் அமுத சுரபியாய் வாழ்க்கை
வழங்குவதேன்? தாயே! விளம்பு.

Friday, March 13, 2015

நாட்டு நடப்பு!
-----------------------------
வாழ்க்கையின் சாலையில் எண்ணற்ற ஊர்வலங்கள்!
ஊர்வலங்கள் இன்பத்தை துன்பத்தை ஏந்திவரும்!
ஊராரோ கூடிநின்று வேடிக்கை பார்த்திருப்பார்!
ஊர்வலங்கள் செல்லும் நிதம்.

பறவையின் வாழ்க்கை!
-------------------------------------------
இரவெல்லாம் தங்குவது கூட்டில்! பகலில்
இரைதேடிச் செல்வதுவோ நாட்டில்! சிறகை
விரித்தே பறந்துசெல்லும் வானில்! பறவை
இருப்பதில் திருப்திகாணும் பார்.

போகிற போக்கில்!
--------------------
(பள்ளியின் அருகே நண்பர்கள்:
என்னசார் கையிலே அப்ளிகேஷன்!
நண்பர்:மூன்று மாத குழந்தைக்கு இப்பொழுதே வாங்கிவிட்டேன் சார்.
முதல் நபர்:சூப்பர் பிளானிங் சார்.
---------------------------------------------------------------------------------------------------------
மூன்று  வயதிலே பள்ளியில் சேர்ப்பதற்கு
மூன்றுமாதம் ஆனவுடன்  விண்ணப்பம்  வாங்குகின்றார்!
தேன்சிட்டுத் தோளில் சிறகு முளைக்குமுன்பே
வான்வெளியைக் காட்டுகின்றார் பார்.

காற்றா? கதிரவனா?

காற்றா? கதிரவனா?
        போட்டி
----------------------
காற்று பலமாக வீசியது! மேல்துண்டை
ஆற்றலுடன் பற்றித் தக்கவைத்தான்! ஆதவன்
ஊற்றெடுக்கும்  வெப்பத்தை வீசியதும் மேல்துண்டை
தூக்கி எறிந்துவிட்டான் பார்.

Wednesday, March 11, 2015

வாழையடி வாழை!
---------------------
தந்தைக்குத் தொண்டாற்றி தந்தையின் மைந்தனுக்குத்
தொண்டாற்றி மைந்தனின் மைந்தனுக்குத் தொண்டாற்றி
தொண்டர்கள்   திண்டாடி வாழ்வார்! தலைவரும்
வம்சமும் கோடிகளில் பார்.

பயனற்றவை!
------------------
உழைப்பற்ற செல்வம்! ஒழுக்கமற்ற கல்வி!
மழையற்ற நாடு! மணமற்ற பூக்கள்!
விளைச்சலற்ற தோட்டம்! நரம்பற்ற வீணை!
இவைகள் இருந்தாலும் வீண்.

தப்பான அளவீடு!
--------------------
திரைப்படத்தில் வந்தால் பெரும்புள்ளி என்னும்
நிலைப்பாட்டைக் காட்டும் அளவீடு தப்பு!
திரையுலகைத் தாண்டி திறமையுடன் வாழ்வோர்
கரைதேடிச் சுற்றும் படகு.

கழனிப் பானையில்
விழுந்த சோறு!
---------------------
அதிகம் வடிந்தமுன் சோறு, கழனி
வடிகின்ற பானையில் வந்துவிழும்! ! கண்ணே!
அதிகம் படித்துவிட்டோம் என்றெண்ணி வாழ்வில்
குதிப்போரும் இப்படித் தான்.

எல்லாமே நேரந்தான்!
------------------------
நல்லநேரம் வந்தால் கருங்கல்லும் மாணிக்கக்
கல்லாகும் !  தேடிவந்து தேர்ந்தெடுப்பார்! செந்தமிழே!
பொல்லாத நேரமென்றால் பொன்னையும் மண்ணென்றே
எள்ளிநகை யாடுவார் பார்.

Saturday, March 07, 2015

செய்தியும் கவிதையும்!
--------------------------------------------------------

"இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும்
தமிழக மீனவர்கள் சுடப்பட்டால் அதை எங்கள் நாட்டு
சட்டம் ஏற்றுக்கொள்ளும்."

--இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க
(தி இந்து தமிழ் 08.03.15 பக்கம்--12)
-----------------------------------------------------------------------------------------------------------------

இலங்கையின் எல்லைக்குள் மீனவர் சென்றால்
இலங்கையின் சட்டமோ சுட்டுப் பொசுக்கும்!
இலங்கையின் மீனவர்கள் இங்கே நுழைந்தால்
இரக்கத்தைக் காட்டுமாம் இந்தியாவின் சட்டம்!
இலங்கைக்குக் காவடித் தூக்கு.

மதுரை பாபாராஜ்

புள்ளிகள்
-----------------------------
புள்ளியில் இங்கே தொடங்கிய வாழ்க்கையோ
புள்ளிகள் புள்ளிகளாய்ப் பல்கிப் பெருகியே
புள்ளிக்குள் புள்ளியாய் மீண்டும் ஒடுங்கிவிடும்!
புள்ளி மறைந்துவிடும் பார்

குழப்பம் தவிர்!
------------------
மனிதநேயம் வேறு மனக்குமுறல் வேறு!
மனிதன் இரண்டையும் போட்டுக் குழப்பித்
தனிமரமாய் நின்று தவித்தேதான் வாழ்வான்!
மனிதன் திருந்துவ தென்று?

புரையோடினால்!
--------------------
நீதிநெறி மாறுபட்டு தண்டனைகள் வேறுபட்டு
மேதினியில் எல்லாம் தலைகீழாய் மாறிவிட்டால்
சூதுவாது குள்ளநரித் தந்திரங்கள் நாள்தோறும்
கூடுகட்டிக் கொண்டாடும் கூறு.

தன்வினை!
-----------------------
நம்குடும்பம் இப்படி அப்படி என்றேதான்
நம்மையே நாமே குறைகூறிப் பேசுவதும்
விண்ணகம் நோக்கித்தான் எச்சியைத் துப்புவதும்
ஒன்றுதான் கண்ணே உணர்

Thursday, March 05, 2015

நாம்தான் பொறுப்பு!
---------------------------------------------
உடல்நலத்திற் கேற்ப நடக்கவேண்டும்! இல்லை
நடக்கும் வயதை அனுசரிக்க வேண்டும்!
புறக்கணிப்பேன் இந்த இரண்டையும் என்றால்
படபடக்க வைக்கும் நிதம்.

மாடிப்படிகள்!
----------------
சிறுவயதில் மாடிப் படிகளில் ஓட்டம்!
அடுத்த பருவம் குதியாட்ட ஓட்டம்!
அடுத்த பருவம் துள்ளலுடன்  ஓட்டம்!
முதுமைப் பருவம் படிப்படி யாக
மெதுவாக ஏறுவோம்  நாம்.

உழைப்பே உயர்த்தும்!
-----------------------
உன்னால் அறிமுகமா?என்னால் அறிமுகமா?
சொந்தம் உறவெல்லாம் என்றும் துணைவராது!
உந்தன் திறமையால் மட்டுமே முன்னேற்றம்!
உன்னை உயர்த்தும் உழைப்பு.

முன்னேறும் வழி!
-----------------------
எந்தவழி தென்படுமோ அந்தவழி உன்வழி
என்றேதான் எண்ணிச் செயல்பட்டால் வாழ்க்கையில்
முன்னேற்றம் உண்டாக வாய்ப்புகள் தேடிவரும்!
உன்வாழ்க்கை உன்னால்! உணர்.

வாய்ப்பை வசப்படுத்து!
---------------------------
தண்ணீரில் நாம்விழுந்து தத்தளிக்கும் நேரத்தில்
தண்ணீரில் தக்கை கிடைத்தாலும் பற்றித்தான்
நம்முயிரைக் காக்க முயற்சிப்போம்! வாழ்வதற்குக்
கண்ணெதிரே தக்கைதான் வாய்ப்பு.

இவர்தான் செல்வந்தர்!
------------------------
செல்வந்தர் என்பது வங்கியில் அன்றாடம்
உள்ள பணத்தொகை இல்லையம்மா! எப்பொழுதும்
உள்ளத்தில் தேக்கிப் பொழியவைக்கும் அன்பென்னும்
நல்ல கருணைதான் பார்.

கல்வியின் பயன்!
----------------------
மனத்தை வளப்படுத்தி நற்பண்பைப் பேணும்
குணக்குன்றாய் மாந்தரை மாற்றுகின்ற ஆற்றல்
தினந்தோறும் கற்கின்ற கல்விக்கே உண்டு!
மனம்கற்கும் பக்குவமே பண்பு.

Sunday, March 01, 2015



சிலநேரம் நாமோ சிலரைத் தவிர்த்து
விலகுவோம்! நாம்விரும்ப வில்லையென்றா? இல்லை!
உலகிலே நம்வாழ்வில் முன்னேற்றம் காண
களம்காணும் எண்ணத்தில் தான்.

மதுரை பாபாராஜ்
மொழியாக்கம்

சராசரி மனிதனுக்கு
     எங்கே மதிப்பு?
-------------------------------------------------------------
தெருவில் இறங்கி பொதுமக்கள் என்னும்
பெருங்கடலில் சென்று கலந்துவிட்டால் நாமோ
ஒருதுளிதான்! வீட்டிற்குள் சென்றுவிட்டால் நம்மைப்
பெருங்கடலாய்ப் பார்ப்பார் மதித்து.