Thursday, March 31, 2022
அறிவோ அறிவு
அறிவோ அறிவு!
மெய்யறிவு பட்டறிவு மற்றும் பகுத்தறிவு
தெள்ளத் தெளிவான நுண்ணறிவு, நல்லறிவு
கெட்ட அறிவென்றே மாந்தர் பயன்படுத்தும்
சுற்றில் அறிவுவகை பார்.
மதுரை பாபாராஜ்
நாங்களும்தூங்குகிறோம்
நாங்களும் தூங்குகிறோம்!
தூங்கலாம் என்றே படுக்கின்றோம்! ஆனாலும்
தூக்கம் வரவில்லை! வேதனை எங்களை
ஆட்டிப் படைக்கின்ற நேரத்தில் தூங்கவா?
மாறிமாறி நாங்கள் புரண்டே படுத்திருப்போம்!
தூக்கமோ எங்களையும் மீறி வரவேண்டும்!
தூங்குகிறோம் நாங்களும் என்று.
மதுரை பாபாராஜ்
வசந்தா
Wednesday, March 30, 2022
தொடர் ஓட்டம்
தொடர் ஓட்டம்!
RELAY RACE!
உடன்சென்று பள்ளியிலே விட்டுவிடும் வாழ்க்கை
கடந்துபோகும்! வந்துவிடும் கல்லூரி வாழ்க்கை
நடைபோடும் பேரழகைக் கண்டேதான்
நாமும்
படைபோன்ற கம்பீரம் கொள்வோம்
ரசித்து!
அடலேறாய்ப் போய்வருவார் பார்.
படிப்பை முடித்துப் பணிக்களம் செல்வார்!
படிப்படியாய் முன்னேற்றம் இல்லறம் காண்பார்!
வியந்தேதான் பார்ப்போம் வளர்ச்சியைப் பார்த்து!
அவரவர் வாழ்க்கையே மூச்சு.
வாழ்க்கை தொடர்ஓட்டம் போலத் தொடர்ந்திடும்!
ஆட்கள்தான் மாறுவார் ஓட்டமோ மாறாது!
காட்சிகள் மாறமாற நாளும் இயங்குவார்!
மாற்றமே மாறா தது.
மதுரை பாபாராஜ்
Tuesday, March 29, 2022
நண்பர் வீதி விடங்கன்
நண்பர் வீதி விடங்கன் அனுப்பியதன் கவிதை ஆக்கம்!
பகுத்தறிவே துணை!
தேவைகள் இல்லாமல், சிக்கல்கள் இல்லாமல்,
ஈவிரக்கம் இன்றியே புண்படுத்தல் இல்லாமல்,
வாழ்வில்லை! ஆனாலும் நம்மை வழிநடத்தி
அர்த்தமுள்ள வாழ்க்கையைப் பூவுலகில் காண்பதற்கே
உள்ளத்தைப் பக்குவ மாக்கும் பகுத்தறிவு
நம்மிடமே உள்ளதை நம்பு.
மதுரை பாபாராஜ்
நா காக்க
நாகாக்க!
பல்லறம் காப்பதால் நாவிங்கே பாதுகாப்பாய்
உள்ளது! நாள்தோறும் தன்னறம் பின்பற்றிச்
சொல்லறம் காத்தலே நாவுக்கு நன்மைதான்!
இல்லையேல் தீமைதான் செப்பு.
மதுரை பாபாராஜ்
Monday, March 28, 2022
மாற்றம்
வளர்ச்சி மாற்றம்!
சின்னக் குழந்தையாய் நாள்தோறும் கைபிடித்து
வந்தவர்கள் இன்று வளர்ந்துவிட்ட காரணத்தால்
அங்கங்கே கையசைத்துச் செல்கின்றார் பார்த்தேதான்!
அன்பின் பரிமாற்றம் பார்.
மதுரை பாபாராஜ்
ஐயா தமிழியலன் பேச்சின் சாரம்
ஐயா தமிழியலன் காணொளிப் பேச்சின் சாரம்!
இல்லறம் சிக்கல் நிறைந்ததே! என்றாலும்
இல்ல உறவுகளைக் காக்கின்ற நல்லறத்தில்
தள்ளாமல் ஈடுபட்டே சந்தித்து வாழவேண்டும்!
தள்ளி ஒதுங்குதல் தீது.
மதுரை பாபாராஜ்
: புறநானூறு
பாடல் 193
பாடியவர்: ஓரேருழவர்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே.
வாழ்க்கையானது வேட்டைக்காரன் களர்நிலத்தில் துரத்தும் மான் படும் துன்பம் போல இடர்ப்பாடு உடையதுதான். என்றாலும் அதிலிருந்து அவன் தப்பமுடியாது. அதள் = தோல்பறை எறிதல் = அடித்தல் களர்நிலம். நீண்ட களர்நிலம். வெண்ணிறக் களர்நிலம். களர்நிலம் என்பது நேற்றுநிலம். அந்த நிலத்தில் வேடன் ஒருவன் புல்லுண்ணும் புல்வாய் மானை வேட்டையாடத் துரத்துகிறான். அந்த மான் அவனிடமிருந்து தப்பிப் பிழைக்கவும் முடியும். இதனை ஒருவன் என்னிப் பார்க்கிறான். தட்குதல் = தளையாய் அமைதல் அவனுக்கு மான் களரில் ஓடுவது போன்ற துன்பம். ஒக்கல் வாழ்க்கையால் துன்பம். மனைவி, மக்கள் போன்ற ஒக்கல் வாழ்க்கையால் துன்பம். அவனால் தப்பிப் பிழைக்க முடியவில்லை. ஒக்கல்-வாழ்க்கை அவனுக்குத் தளை. துன்பப் பட்டேனும் அவர்களைக் காப்பாற்றியே ஆகவேண்டும். இதுதான் வாழ்க்கை. மாட்டைத் தளைக்கயிற்றில் கட்டி வைத்திருப்பர். தளைதல் = கட்டுதல் பாடலில் இரண்டு சீர்களைக் கட்டிப்போடுதல் தளை. மனைவி மக்களைது துன்பப்பட விட்டுவிட்டுத் துறவு பூணுதல் கூடாது என்கிறது, இந்தப் பாடல்.
Sunday, March 27, 2022
ஐயா தமிழியலன் பேச்சுக்கு வாழ்த்து
ஐயா தமிழியலன் காணொளிப் பேச்சுக்கு வாழ்த்து!
இலக்கியநெறிச் சிந்தனைகள்--2
முந்நீர்!
ஊற்றுநீர் ஆற்றுநீர் வேற்றுநீர் என்றிணைந்தக்
கூட்டுநீர் இங்கே கடலென்ற முந்நீராய்த்
தோற்றம் உருவெடுக்கும் என்றேதான் சங்ககாலப்
பாட்டில் அறிவியல் சிந்தனையைச் செந்தமிழர்
காட்டிவிட்டார் என்றே தமிழியலன் பேசியதைக்
கேட்டேன்! மகிழ்ந்தேன்நான் இன்று.
மதுரை பாபாராஜ்
கணியன்,தென்காசி
கம்பராமாயணம்!
கவிதைச்செறிவை எடுத்துக் காட்டியவர் கணியன் கிருஷ்ணன், தென்காசி
இல்லறம் துறந்த நம்பி,
எம்மனோர்க்காகத் தங்கள்
வில் அறம் துறந்த வீரன்
தோன்றலால், வேத நல் நூல்
சொல் அறம் துறந்திலாத
சூரியன் மரபும், தொல்லை
நல் அறம் துறந்தது' என்னா,
நகை வர நாண்
உட்கொண்டான்.....4014
அருமை அருமை
இல்லறம் வில்லறம் சொல்லறம் நல்லறம்
சொல்லாடல் கொண்டே படைத்திட்டார் கம்பரென்றே
தென்காசி போற்றும் கணியன் எடுத்தாண்டார்!
வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.
மதுரை பாபாராஜ்
Saturday, March 26, 2022
நண்பர் எசக்கிராஜன்
அனுப்பியவர் நண்பர் எசக்கிராஜன்
நண்பர் அனுப்பியதற்குக் கவிதை!
ஆகூழை நாமோ பதிவேற்றம் செய்யலாம்!
காலத்தை நாமோ பதிவிறக்கம் செய்தலோ
வாழ்வில் முடியாது! கூகிளால் வாழ்க்கையின்
கேள்வி களுக்கெல்லாம் தீர்வளிக்க ஏலாது!
நாமிங்கே மெய்ப்பொருளைக் காண நுழையவேண்டும்!
வாழ்வின் நிலைமையை ஏற்றுவாழக் கற்கவேண்டும்!
வாழ வளைந்து கொடு.
மதுரை பாபாராஜ்
வசந்தாவின் கருத்து
என்உடலில் கால்சியம் ஊறுவதுபோல் கவிதைகள் ஊறி வருகிறது என்றேன்!
மனைவி வசந்தாவின் கருத்தைக் கவிதை ஆக்கினேன்!
வசந்தாவின் கருத்து:
கால்சியம் உங்கள் உடலிலே ஊறினால்
கால்சியம் கல்லாய் சிறுநீ ரகத்திலே
சேர்ந்தேதான் தொல்லை கொடுக்கும்! கவிதைகள்
ஊறிவந்தால் நல்ல கருத்துகள் சேர்ந்துவரும்!
கால்சியம் ஊறவேண்டாம் நாளும் கவிதைகள்
ஊறட்டும் என்றாள் சிரித்து.
மதுரை பாபாராஜ்
நண்பர்கள் கருத்து
Engengum Kavidhai
Ellamum Kavidai
Jadikketha moodi
Moodiketha Jadi
Fenner venugopal
கம்பர் வீட்டு தறியும் ( தாரகையும்) கவி பாடும் .
VOV C Anbu
நாங்கள் தங்களை நாளும்
பாராட்ட
நற்கவிதையால் எங்களை
நாளும் இன்புறச் செய்யவும்.
படத்தைப் பார்த்தேன்
புன்னகையால் பூரித்தேன்.
கணியன் கிருஷ்ணன்
தென்காசி
பாபாவின் கவிதை மழையில் நனைவதே
வசந்தமாம் காரணம்
வசந்தாம்மா அவர்களின்
வாழ்த்துச்செரிவால்
என்று உணர்வாய்
கண்டு.
வேலு முனியப்பன்
மதுரை
ஜோடி நல்ல ஜோடிதான் 😀
VOV CR
அதுவும் சரி.
கா.இராமசாமி
பெரியகுளம்
அம்மாவின் கருத்து!
அருமையான கருத்து!
கவிதைகள் ஊறட்டும்!
கவித்தேனாய் மாறட்டும்!
களிப்புடன் படித்து
கவிதையாய் பருகுவோம்!
VOV இமயவரம்பன்
💐🙏🌹🙏🌷🙏🌺🙏🌸🙏🤝
கிளி
முயற்சி கூலி தரும்!
கிளிக்குத் தாகம் எடுத்ததாம்
தென்னை மரத்தில் அமர்ந்ததாம்
இளநி தன்னைப் பார்த்ததாம்
அலகால் கொத்தி எடுத்ததாம்
கொத்திக் கொத்தித் துளையிட்டே
இளநி தன்னைத் தலைகீழாய்ப்
பிடித்தே வாயில் வைத்தேதான்
இளநீர் தன்னைக் குடிக்கிறதே!
பார்க்கப் பார்க்க அழகுதான்!
கிளிக்கும் இளநீர் சுவைதானே!
தேவை என்றால் முயற்சிவரும்
முயற்சி திருவினை ஆகிடுமே!
முயன்றால் வாழ்வில் வெற்றியுண்டு!
முயன்றே நாமும் வாழ்ந்திடுவோம்!
மதுரை பாபாராஜ்
Friday, March 25, 2022
மூத்தோர் சொல் அமிர்தம்!
மூத்தோர் சொல் அமிர்தம்!
பெரியவர்கள் சொல்லைப் புறக்கணிக்காதே!
பெரியவர்கள் சொல்வது நல்லதற் கென்றே
வழிமொழிந்தே ஏற்று நடப்பதே நன்று!
பெரியவர்கள் சொல்லைப் புறக்கணித்து வாழ்ந்தால்
தெளிவின்றித் தத்தளிப்பார் செப்பு.
மதுரை பாபாராஜ்
Thursday, March 24, 2022
Wednesday, March 23, 2022
KRS என்ற நண்பர் தம்பா
KRS K.R.SUNDARRAJAN
மாசற்ற நட்பின் விழுது பேராசான் தம்பா!
காரைக்குடியில் 1966 களில்அரும்பிய நட்பு இன்றும் தொடர்கிறது.
காலை வணக்கத்தை நாள்தோறும் கூறுகின்ற
காரைக் குடிதம்பா நட்பில் திளைக்கின்றேன்!
ஆசானாம் தம்பா நலமுடன் வாழ்கவே!
மாசற்ற நட்பின் விழுது.
மதுரை பாபாராஜ்
வளைந்து கொடு
சூழ்நிலைக்கு வளைந்துகொடு!
வைபவ் வளாகம்!
21.03.22 இரவு 10.00 மணி
ஒற்றை மரங்களோ அங்கங்கே நின்றிருக்க
சுற்றிலும் உட்கார கல்லிருக்கை போட்டிருக்க
உட்கார்ந்தேன் கல்லிருக்கை தன்னிலே! மின்தூக்கி
பார்த்தேன் வசந்தா வரவில்லை!
ஆனாலும்
மாடிப் படியில் இறங்கிவந்தாள்!
போயழைத்தேன்!
ஏனோதான் மின்தூக்கி அங்கே இயங்கவில்லை!
சூழ்நிலையின் சொற்படிதான் நாம்.
மதுரை பாபாராஜ்
Tuesday, March 22, 2022
Monday, March 21, 2022
உலகக்கவிதைநாள் வாழ்த்து
உலகக் கவிதைநாள் வாழ்த்து!
21.03.22
உள்ளத் துணர்ச்சியைத் தெள்ளத் தெளிவாக
அள்ளி வழங்கும் கலையே கவிதையாம்!
எல்லைகள் தாண்டி இதயத்தை ஈர்க்கின்ற
சொல்லே கவிதையாம்! செப்பு.
கருத்தை விதைப்பதே என்றும் கவிதை!
வரம்புக்குள் நாளும் படைக்கலாம்! தாண்டி
வரம்புமீறி நின்று படைக்கலாம்!ஆனால்
கவித்துவம் ஏந்தும் கவி.
தென்றலாய் நாளும் வருடும் கவிதையுண்டு!
வன்புயலாய்ச் சீறவைத்துப் பார்க்கும்
கவிதையுண்டு!
பாவினங்கள் வாளின் முனையினைக் காட்டிலும்
கூராகும் என்றே உணர்.
மதுரை பாபாராஜ்
Sunday, March 20, 2022
முள்மேல் விழுந்த துணி
முள்மேல் விழுந்த பட்டுத்துணி!
சிக்கல்கள் முள்மேல் விழுந்த விலையுயர்ந்த
பட்டுத் துணிபோல! பார்த்தே எடுக்கவேண்டும்!
சற்றே பிசகினால் முள்ளோ விரல்களைக்
குத்திக் கிழித்துவிடும் இல்லை துணிகிழியும்!
சற்றே பொறுமையாய்ப் பார்த்து கவனித்தே
சிக்கலுக்குத் தீர்வுகண்டால் நன்று.
மதுரை பாபாராஜ்
காலம் புகட்டும்
காலம் புகட்டும் பாடம்!
சொல்லித் திருந்தலாம்! பட்டுத் திருந்தலாம்!
சொல்லியும் பட்டும் திருந்தவில்லை என்றாலோ
துல்லியமாய்க் காலம் புகட்டிவிடும் பாடத்தால்!
உள்ளத்தைப் பண்படுத்தும்! சொல்.
மதுரை பாபாராஜ்
Saturday, March 19, 2022
வாழ்க்கைப் படங்கள்
படங்களுக்குக் கவிதை!
வாழ்க்கை கடந்துவந்த பாதை நிகழ்வுகளை
வாழ்வில் நினைக்கவைக்கும் தோற்றப் படங்களின்
காட்சி அணிவகுப்பு! காண்பதே இன்பந்தான்!
தோற்றத்தின் மாற்றமே வாழ்வு.
மதுரை பாபாராஜ்
இவையெல்லாம் படங்கள்
ஆனாலும் நம்மைத் தூக்கிச் சுமந்த வாழ்க்கைப்
பாடங்கள்.எப்படி இருந்தோம் என்பது படம்
எப்படி இருந்துகொண்டு
இருக்கிறோம் என்பது
பாடம்.தாங்கள் அனுப்பி
உள்ளது படமல்ல.இப்படி
இருங்கள் என்று சொல்லும்
பாடம்...பாபா ஐயா.
கணியன் கிருஷ்ணன்
தென்காசி
Friday, March 18, 2022
விருந்தோம்பல்
விருந்தோம்பல்!
அழையா விருந்தாளி வந்தாலும் கூட
வரவேற்கும் பண்பே விருந்தோம்பல் பண்பு!
பகைவரையும் நண்பராக்கும் இப்பண்பே நம்மை
அகங்குளிர வைக்கும் உணர்.
மதுரை பாபாராஜ்
அழலில் புழு
அழலில் புழு!
சிலுவையில் என்னை அறைந்துவிட்ட கோலம்!
அழுதழுது வாழ்க்கையே புண்பட்ட கோலம்!
எழுகடலும் என்னைப் புரட்டிவிட்ட கோலம்!
அழலில் புழுவானேன் சாற்று.
மதுரை பாபாராஜ்
Thursday, March 17, 2022
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை வடிவம்!
நம்பிக்கை கொள்தல் அருமை உணர்வாகும்!
நம்பிக்கை தன்னை வளர்ப்பது என்பதோ
என்றும் நிலையான மற்றும் தொடர்ச்சியான
பண்பட்ட வாழ்வின் முயற்சியாகும்! வாழ்க்கையில்
என்றும் சிறிய பணியில் தொடங்கவேண்டும்!
பின்னர் வரம்பை விரிவாக்கம் செய்யவேண்டும்!
என்றும் சிறப்பைத் தரும்
மதுரை பாபாராஜ்
பத்மஸ்ரீ தமிழறிஞர் சாலமன் பாப்பையா
பத்மஸ்ரீ தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்களை வணங்குகிறேன்!
கம்பன் இலக்கியத்தைக் கம்பன் கழகத்தில்
செந்தமிழ்த் தீங்கனிச் சாறாய்ப் பிழிந்தளித்தே
என்றுமிங்கே பாமரரும் கேட்டு மகிழ்கின்ற
வண்ணமிங்கே பேசினார் வாழ்த்து.
பட்டிமன்ற பாப்பையா தூங்கா நகரத்தின்
ஒப்பற்ற பண்பாளர்! பண்பாட்டுக் காவலர்!
நற்றமிழ்த்தாய் பெற்ற தவப்புதல்வர்
பேராசான்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
Wednesday, March 16, 2022
Tuesday, March 15, 2022
Monday, March 14, 2022
அப்பா
அப்பா!
அப்பா சுமைகளோ வேறு விதங்கள்தான்!
எப்போதும் தன்கடமை தன்னைத் தவறாமல்
அப்பா பணிக்களத்தில் காணுகின்ற இன்பதுன்பம்
எல்லாம் குடும்பத்திற் கே!
வாழ்க்கையில் தென்றல் வருடுகின்ற நேரத்தில்
சார்ந்திருக்கும் தன்குடும்பம் கண்டே சிரித்திருப்பார்!
வாழ்க்கையில் வன்புயல் வீசுகின்ற நேரத்தில்
சார்ந்திருக்கும் தன்குடும்பம் கண்டே மனத்திற்குள்
சோர்வும் புறவெளியில் புன்சிரிப்பும் ஏந்துவார்!
ஏற்பார் பலவேடம் இங்கு.
மதுரை பாபாராஜ்
Vovkaniankrishnan:
குடி செயல் வகைக்காக
அதாவது குடும்பத்தை உயர்த்துவதற்காக குடும்பத்
தலைமைப் பொறுப்பில்
இருக்கும் அப்பாவின்
செயல்பாடுகள் இருக்கிறதே அதுதான்
அப்பப்பா!!!
பாபாவின் பாடலோ
அடேங்கப்பா! !!
அம்மா
அம்மா!
பத்துமாதம் மட்டுமா வாழ்வில் சுமக்கின்றாள்?
எப்போதும் ஏதோ ஒருகோலம் ஏற்றேதான்
எப்படியும் நாளும் சுமக்கின்றாள் அம்மாதான்!
இல்லறத்தின் ஆணிவேர் தாய்.
விட்டுக் கொடுக்கும் தியாக மனப்பான்மை,
சுற்றம் சிறக்கவைக்கும் பக்குவப் பண்புகள்,
தன்னலத்தை விட்டே குடும்பம் தலைநிமிர
என்றும் துணையாவாள் தாய்.
மதுரை பாபாராஜ்
VOV தீத்தாரப்பன்
தாய் ஒரு சுமைதாங்கி என்பதைக் காட்சிப் படுத்திவிட்டீர்கள்! வள்ளுவரும் தாயைச் சொல்லும் இடங்களிலெல்லாம் ( குறள் எண்கள்: 69,656,923,1047) எவ்வளவு உயர்வு கொடுக்கிறார் என்பதைப் பார்க்கிறோம்! ஒருவர் துறவி ஆகிவிட்டால் வயதில் மூத்தோரும் தந்தையும் கூட அவர் காலில் விழவேண்டும் என்ற வழக்கம் இருக்கிறது! ஆனால் அந்தத் துறவி தன் தாயின் காலில் விழுந்து வணங்கவேண்டும் என்ற சிறப்பு தாய்க்கு இருக்கிறது! பட்டினத்தாரும் ஆதிசங்கரரும் தங்கள் தாய் இறந்தபோது இறுதி மரியாதை செய்தனர்!