Thursday, December 31, 2020
50 இடனறிதல்
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
50 இடனறிதல்.
குறள் 491:
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது.
பகைவரை அற்பமென்றே எண்ணாமல்
தாக்கும்
இடத்தில் செயல்பட்டே தாக்கு.
குறள் 492:
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.
வலிமை இருந்தும் அரணும் இருந்தால்
பயனுடன் வெற்றியுண்டு செப்பு.
குறள் 493:
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.
தக்க இடத்தைத் தெரிவுசெய்து, தற்காத்தே
அக்கறையாய்த் தாக்கும் வலிமையற்ற
வேந்தருக்கும்
வெற்றி கிடைக்கும் உணர்.
குறள் 494:
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
தக்க இடமறிந்து தாக்கினால் நம்பகைவர்
வெற்றி பெறுதல் அரிது.
குறள் 495:
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
முதலைக்கு நீருக்குள் வெற்றி! தரையில்
முதலைக்குத் தோல்வி! உணர்.
குறள் 496:
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
கடலுக்குள் ஓடாது சக்கரத் தேர்தான்!
படகோ நிலத்திலே செல்லாது! மாந்தர்
இடமறிந்தால் சாதிக்க லாம்.
குறள் 497:
அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி யிடத்தாற் செயின்.
அஞ்சாமல், செய்யும் செயலை இடனறிந்து
எண்ணியே செய்யவேண்டும் செப்பு.
குறள் 498:
சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
சின்னப் படையெனினும் தக்கஇடம் தேர்ந்தெடுத்தால்
அஞ்சும் பெரும்படை பார்த்து.
குறள் 499:
சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோ டொட்ட லரிது.
அரண்வலி இல்லை! படைவலி இல்லை!
அவரிருக்கும் வாழ்விடத்தில் தாக்குதல்
செய்தால்
எளிதல்ல வெற்றியென்று செப்பு.
குறள் 500:
காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.
வேலெறியும் வீரரைக் கொன்றயானை சேற்றிலே
வீழ்ந்துவிட்டால் குள்ளநரி கொன்றுவிடும்! யானைக்கும்
சூழ்நிலை மாறினால் கேடு.
ஓதம் சுற்றியது ஊர்
பாலாவுக்கு வாழ்த்து!
கவிஞர் பாலாவின் சங்கச் சுரங்கம்!
மூன்றாம் பத்து 02.01.21
ID 81795655462
மாதர் மடநல்லார், மணலின் எழுதிய
பாவை சிதைத்தது' என அழ, ஒருசார்;
'அகவயல் இள நெல் அரிகால் சூடு
தொகு புனல் பரந்தெ'னத் துடி பட, ஒருசார்;
'ஓதம் சுற்றியது ஊர்' என, ஒருசார்;
------------------------------------------------------------------
தலைப்பு: ஓதம் சுற்றியது ஊர்.
பரிபாடல் காட்டுகின்ற வைகையின் வெள்ளம்
புரியும் திருவிளை யாடலின் காட்சி
விரிகின்ற பாடல் வரியெடுத்தார் பாலா!
களிக்கவைக்கும் பாலாவை வாழ்த்து.
ஓதம் தமிழர் கலமோட்டும் நுட்பமாகும்!
ஓதம் கழிஓதம் மற்றும் கடல்ஓதம்
ஓதமோ இங்கே இருவகை சொல்கின்றார்
ஈடற்ற செம்பொருளைப் பார்.
கழிஓதம் என்றால் கடல்நீர் கரையை
வழிதேடி நாடும்! கடல்ஓதம் ஆழி
அலைநாடி ஓடுகின்ற நேரத்தில் நாளும்
கலங்களில் ஏறி கடலுக்குள் செல்வார்!
இயற்கை அறிவே மிகும்.
ஓதம் அதிகமாய் உள்ளபோது அன்பரே
ஏனோ தலைவியை விட்டுவிட்டுச் செல்கின்றாய்?
தோழி வினவும் அகப்பாட்டும் உள்ளது!
வாழிய பாலாவின் தொண்டு.
மதுரை பாபாராஜ்
கழி ஓதம்:TIDE TOWARDS SHORE-- HIGH TIDE
கடல் ஓதம்: TIDE TOWARDS THE SEA-- LOW TIDE
.
Wednesday, December 30, 2020
49 காலமறிதல்
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
49 காலமறிதல்
குறள் 481:
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
பகல்பொழுதில் கோட்டானைக் காகமோ வெல்லும்!
பகைவெல்லக் காலத்தைப் பார்.
குறள் 482:
பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
பருவத்தில் செய்யும் செயல்கள் வளத்தை
நிலையாகக் கட்டும் கயிறு.
குறள் 483:
அருவினை யென்ப உளவோ கருவியாற்
கால மறிந்து செயின்.
கருவியுடன் கால மறிந்தேதான் செய்தால்
பெருஞ்செயலும் செய்தல் எளிது.
குறள் 484:
ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
காலம் இடமறிந்து செய்வதைச் செய்துவிட்டால்
ஞாலம் வசப்படும் இங்கு.
குறள் 485:
காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்.
காலம் கனியுமட்டும் காத்திருப்பார்
ஞாலத்தை
ஆள்வதற்கே எண்ணுவோர் தான்.
குறள் 486:
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
ஊக்கமுள்ளோன் பின்வாங்கிச் செல்தல்
கடாஒன்று
தாக்கிடப் பின்செல்தல் போல்.
குறள் 487:
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
உள்ளத்தில் கோபம் இருந்தாலும் காலநேரம்
துல்லியமாயப் பார்த்தே அறிவுடையார்
கோபத்தை
அள்ளித் தெளிப்பார் கனன்று.
குறள் 488:
செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
காணிற் கிழக்காந் தலை.
பகைவருக்கு நேரம் வரும்வரை காத்தால்
பகைவரே வீழ்வார் கவிழ்ந்து.
குறள் 489:
எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
செயற்கரிய செய்ய பொறுத்திருந்து காலம்
துலங்கியதும் செய்தல் அறிவு.
குறள் 490:
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
கொக்குபோல் காத்திருந்து வாய்ப்பு வரும்போது
கொத்திப் பயன்படுத்தப் பார்.
மதுரை பாபாராஜ்
48 வலியறிதல்
குறளுக்குக் குறள்வடிவில் கருத்து
48 வலியறிதல்
குறள் 471:
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்.
செயல்வலிமை தன்வலிமை மாற்றான்
வலிமை
துணைவலிமை ஆய்ந்துசெயல் செய்.
குறள் 472:
ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்.
செயல்களைச் செய்ய மனமொன்றி விட்டால்
செயலை முடிக்கலாம் கூறு.
குறள் 473:
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
வலிமை தெரியாமல் எப்படியோ செய்து
நலிவடைந்தோர் ஏராள முண்டு.
குறள் 474:
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
தன்னை வியந்துகொண்டு மற்றவரைக் கேட்காமல்
என்றும் செயல்பட்டால் கேடு.
குறள் 475:
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
வண்ண மயிலிறகைக் கூட அளவின்றி
வண்டியில் ஏற்றினால் பாரம் தாங்காது!
வண்டியச்சு வீழுமே தூர்ந்து.
குறள் 476:
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.
மரநுனிக்குச் சென்று கிளைமுறிந்து வீழ்தல்,
அளவுக் கதிகமாய் தன்வலிமை எண்ணிச்
செயலிலே தோற்றல்! ஒன்று.
குறள் 477:
ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.
வருவாய்க்கு ஏற்ப வழங்கவேண்டும்! மீறித்
தருதல் பொருளுக்குக் கேடு.
குறள் 478:
ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.
வரவுக்குள் நாளும் செலவென்றால் இங்கே
வரவில்லை, தீங்கில்லை சாற்று.
குறள் 479:
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
அளவறிந்து வாழவில்லை என்றாலோ
வாழ்க்கை
வளம்சரிந்து வீழும் உணர்
குறள் 480:
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
அளவுக் கதிகமாய் வாரிக் கொடுத்தால்
வளமழிந்து போய்விடும் இங்கு.
மதுரை பாபாராஜ்
Tuesday, December 29, 2020
காரைக்குடி ரியாவுக்கு வாழ்த்து
செல்லப் பேத்தி ரியாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
பெற்றோர்:
அப்பா: அரவிந் - அம்மா பவித்ரா
அகவை 3 நிறைவு 4 தொடக்கம்
30.12.20
மூன்றை நிறைவுசெய்து நான்கில் அடியெடுத்து
மங்களமாய் வாழ்கின்ற பேத்தி ரியாவுக்கு
அன்புடன் எங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைத்
தந்து மகிழ்கின்றோம் சூழ்ந்து.
பெற்றோரும் சுற்றமும் நண்பர்கள் எல்லோரும்
வற்றாத ஆசிகளும் வாழ்த்தும் பொழிகின்றார்!
கற்றுத் தெளிந்தேதான் முன்னேறி வாழியவே!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
வாழ்த்தும் இதயங்கள்
குமரப்பன்-- சாவித்திரி
பாபாராஜ்-- வசந்தா
[
47 தெரிந்து செயல்வகை
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
47 தெரிந்து செயல்வகை
குறள் 461:
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.
செயல்படும் முன்னால் விளைவைக் கணித்துச்
செயலில் இறங்கவேண்டும் சாற்று.
குறள் 462:
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள் யாதொன்று மில்.
தெரிவுசெய்த மாந்தருடன் சிந்தித்துச் செய்தால்
எளிதாய் முடியும் செயல்.
குறள் 463:
ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார்.
என்றோ வருமென்றே இன்றிருக்கும் கையிருப்பை
இங்கே இழக்கமாட்டார் நல்ல அறிவுடையார்!
என்றுமே ஆசை அழிவு.
குறள் 464:
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்.
இழிவு வருமென் றஞ்சுவோர் அந்தச்
செயல்களை மேற்கொள்ளார் சாற்று.
குறள் 465:
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.
முறையாகச் செய்யாத எச்செயலும் இங்கே
பகைவர்கள் காலூன்ற வாய்ப்பு.
குறள் 466:
செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
செய்வதற் கஞ்சுவதைச் செய்தாலும் செய்வதைச்
செய்யாமல் விட்டாலும் கேடு.
குறள் 467:
எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு.
எண்ணிச் செயல்பட்டால் உயர்வு! தொடங்கியபின்
எண்ணுதல் ஏற்படுத்தும் தாழ்வு.
குறள் 468:
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
படைபோல் துணையிருந்த போதும் செயலை
முறையின்றிச் செய்தால் இழப்பு.
குறள் 469:
நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
நல்லதைக் கூட இயல்பறிந்து செய்யவேண்டும்!
இல்லையென்றால் நல்லதாலும் கேடு.
குறள் 470:
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு.
உயர்ந்தோர் பழிக்கும் செயல்களைச் செய்தால்
உலகம் ஏற்காது சாற்று.
மதுரை பாபாராஜ்
46 சிற்றினம் சேராமை
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
46 சிற்றினம் சேராமை
குறள் 451:
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
சிற்றினத்தைச் சேர பெரியோர்கள் அஞ்சுவார்!
சுற்றமென்பார் கீழ்மக்கள் சூழ்ந்து.
குறள் 452:
நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு.
நிலத்தியல்பால் தண்ணீர்தான் மாறும்! இனத்தின்
இயல்பினை ஏற்கும் அறிவு.
குறள் 453:
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னா னெனப்படுஞ் சொல்.
மனத்தால் இயற்கை அறிவும் இனத்தால்
அனைவராலும் இப்படிப் பட்டவன் என்றே
குணத்தால் புகழுரும் உண்டு.
குறள் 454:
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
கினத்துள தாகும் அறிவு.
மனஇயல்பே மாந்தர் அறிவெனினும் வாழ்வில்
இனஇயல்பே உண்மை அறிவு.
குறள் 455:
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
மனமும் செயலுமிங்கே தூய்மையாய்
ஆக
இனத்தூய்மை ஒன்றே தளம்.
குறள் 456:
மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை.
மனத்தூய்மை யாலே புகழ்வரும்! சார்ந்த
இனத்தூய்மை நற்செயலின் தூது.
குறள் 457:
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழுந் தரும்.
மனநலம் செல்வம் கொடுக்கும்! புகழை
இனநலம் நாளும் தரும்.
குறள் 458:
மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநலம் ஏமாப் புடைத்து.
மனநலம் கொண்டவராய் வாழ்ந்தாலும் சேர்ந்த
இனம்சார்ந்தே பாதுகாப்பாம் சாற்று.
குறள் 459:
மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தி னேமாப் புடைத்து.
மனநலம் நேர்மறை இன்பம் தரும்!
இனநலத்தால் நிற்கும் நிலைத்து.
குறள் 460:
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்.
நல்லினம்போல் நற்றுணை வேறில்லை!
தொல்லையினம் போலில்லை கேடு.
மதுரை பாபாராஜ்
தர்சனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து
பேரன் தர்சனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து
பெற்றோர்:
பிரபாகர்-- பத்மா
29.12.20
கல்லூரி வாழ்க்கைத் தொடங்கும் பருவமிது!
பல்கலைகள் கற்றேதான் வித்தகனாய் ஆகவேண்டும்!
தெள்ளத்தெளிவாக கற்றே வளரவேண்டும்!
எல்லோரும் போற்றவாழ்க நீடு.
பெற்றோர் கடமை படிக்கவைத்தல்! செய்கின்றார்!
பெற்றோர்க்கு நற்பெயர் வாங்கித் தரவேண்டும்!
மற்றவர்கள் பாராட்டி வாழ்த்தினால் பேருவகை!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
Monday, December 28, 2020
நண்பர் IG சேகர் அனுப்பிய படம்
நண்பருக்கு வணக்கம்!
வீடுதேடும் புறா!
தோப்பாய் இருந்த இடத்தை அடுக்ககமாய்
மாற்றிவிட்டார்! கூடுகட்ட எங்கும் இடமில்லை!
வீட்டுக்குள் உள்ள குளிரூட்டும் பெட்டிமேல்
கூட்டைத்தான கட்டவேண்டும்! குஞ்சுகளைக் காப்பாற்றி
நாட்டிலே வாழவேண்டும் நான்தான்! கிளையிலே
நாட்டமுடன் உட்கார்ந்தே அங்குமிங்கும் பார்க்கின்றேன்!
கூட்டை உருவாக்க எந்தவீட்டைத் தேர்ந்தெடுக்க?
ஆர்வமுடன் நண்பர் வணக்கத்தைத் தந்துவிட்டுப்
போகவேண்டும் வீடுதேடி நான்.
மதுரை பாபாராஜ்
45 பெரியாரைத் துணைக்கோடல்
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
45
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
45 பெரியாரைத் துணைக்கோடல்
குறள் 441:
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
அறிவார்ந்த சான்றோரின் நட்பை, திறமை
அறிந்தே தெரிவுசெய்தல் நன்று.
குறள் 442:
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
தற்பொழுது துன்பத்தை நீக்கி வரும்துன்பம்
பற்றாமல் காப்போரை நாடு.
குறள் 443:
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
பெரியவர்களைப் போற்றியே தக்கவைத்துக் கொள்ளல்
பெரும்பேறாம் வாழ்வில்! உணர்.
குறள் 444:
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.
தன்னைவிட அறிவிற் சிறந்த பெரியாரின்
பண்புவழி செல்தலே நன்று.
குறள் 445:
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.
சூழ்ந்திருக்கும் சான்றோர்கள் ஆள்வோரின் கண்களாகும்!
ஆள்வோர் துணைக்கொள்ளல் நன்று.
குறள் 446:
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
தக்கவரை ஏற்றே அவர்வழியில் சென்றிருந்தால்
எப்பகையும் தீண்டாது சாற்று.
குறள் 447:
இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
இடித்துரைத்து நற்றுணை யாவோர் வழியில்
நடப்போர்க்குக் கேடுசெய்வார் யார்?
குறள் 448:
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
இடித்துரைக்க அஞ்சுவோர் சூழ்ந்திருந்தால் ஆட்சி
முடிச்சவிழ்ந்த நெல்லிமூட்டை தான்.
குறள் 449:
முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.
முதலில்லை என்றால் வரவில்லை! தாங்கும்
அகமற்றோர் சூழ்ந்திருந்தால் நன்மை இல்லை!
தடைவந்தால் தக்கதுணை நன்று.
குறள் 450:
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
நல்லார் தொடர்பைத் தவிர்த்தல், பலரது
தொல்லையைத் தேடலினும் கேடு.
மதுரை பாபாராஜ்
44. குற்றங்கடிதல்
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
44. குற்றங்கடிதல்
குறள் 431:
செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
இறுமாப்பு கோபம் இழிசெயல் அற்றோர்
பெறுகின்ற செல்வம் உயர்வு.
குறள் 432:
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
பேராசை தேவையற்ற தன்மானம் வக்கிரம்
கேடாம் தலைமைக் குணர்.
குறள் 433:
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
தினையளவு குற்றம் புரிந்தாலும் சான்றோர்
பனையளவாய்ப் பார்ப்பார் இடிந்து.
குறள் 434:
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை.
குற்றம் பகையமையக் காரணம்! என்றென்றும்
குற்றம் தவிர்த்தலே பண்பு.
குறள் 435:
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
வருமுன்னர் காக்கத் தவறுகின்ற வாழ்க்கை
நெருப்பின்முன் வைக்கோல்போர் போல்.
குறள் 436:
தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.
தன்குற்றம் நீக்கிப் பிறர்க்குற்றம் நீக்குகின்ற
பண்பிற்கோ ஈடில்லை கூறு.
குறள் 437:
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
பயன்படாமல் சேமிக்கும் செல்வமோ எந்தப்
பயனுமின்றிப் பாழாகும் சாற்று.
குறள் 438:
பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.
பற்றுடன் சேர்த்துவைத்த செல்வத்தை
ஈயாத
குற்றமே குற்றமாம் கூறு.
குறள் 439:
வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
தன்னையே தானே வியந்துகொண்டு
தன்னலத்தால்
நன்மைசெய் யாததோ கேடு.
குறள் 440:
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
தானெண்ணும் திட்டத்தை மாற்றார் அறியாமல்
காப்பவரைச் சூழ்ச்சியால் வெல்வதும் கூடுமோ?
மாற்றார் வலுவிழப்பார் கூறு.
மதுரை பாபாராஜ்
அம்மாவின் அடுக்களை
அமர்க்களம்!
அடுப்பைக் களிமண்ணால் பூசி அழகாய்
எடுப்பாகக் கட்டி விறகைச் செருகி
பெரிதாக ஒன்றும் சிறிதாக ஒன்றும்
உலைப்பானை மற்றும் சிறுபானை வைக்க
முறையாக காலையில் கோலமிட்ட பின்பே
விறகில் நெருப்பினைப் பற்றவைப்பார் வீட்டில்!
பதறாமல் வெந்நீர் முதலாக வைப்பார்!
மடமட வென்றே பணிகளைச் செய்வார்!
அமர்ந்துகொண்டே நாளும் ருசியாய்ச் சமையல்!
அமர்க்களந்தான் அம்மா திறன்.
மதுரை பாபாராஜ்
பட்டமரம் தளிர்த்தது
அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
மேகத்தின் அன்பால் பட்டமரம் தளிர்த்தது!
விண்மேகம் பஞ்சுப் பொதிபோல பட்டமரப்
பின்னணியில் வெண்பஞ்சு தன்னை மகுடமாய்
அன்புடனே சூட்டி மகிழ்கின்ற காட்சியிலே
என்னை மறந்தேன் ரசித்து.
நல்லாசிரியர். திரு.ராமு அய்யாவின் வாழ்த்து:
வெண்பஞ்சு
மேகத்தை மகுடமாய்ச்
சூட்டியபட்டமரம்.
அருமையான சொல்லாடல்.
மதுரை பாபாராஜ்
Sunday, December 27, 2020
43 அறிவுடைமை
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
43 அறிவுடைமை
குறள் 421:
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
அறிவே பகைவரைத் தாக்கும் கருவி!
பகையழிக்க வொண்ணா அரண்.
குறள் 422:
சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு.
கண்டபடி வாழாமல் நல்வழியைக் காட்டுகின்ற
பண்பின் விளக்கே அறிவு.
குறள் 423:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
எப்பொருளை யார்சொன்ன போதிலும்
மெய்ப்பொருளை
உற்றுநோக்கும் ஆற்ற லறிவு.
குறள் 424:
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
சொல்வதை மற்றவர்கள் ஏற்குமாறு சொல்வதும்
சொல்பவரின் சொற்களை ஆய்ந்து தெளிகின்ற
வல்லமையும் கொண்ட தறிவு.
குறள் 425:
உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு.
உயர்ந்தோரை நட்பாக்கி இன்பதுன்பம் என்ற
இரண்டு் நிலையைச் சமமாகப் பார்க்கும்
தரமான பண்பே அறிவு.
குறள் 426:
எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு.
இவ்வுலகில் சான்றோர்கள் எவ்வழி வாழ்கின்றார்
அவ்வழி வாழ்தல் அறிவு.
குறள் 427:
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
அறிவுடையார் பின்விளைவைச் சிந்திப்பார்! நாளும்
அறிவிலார் சிந்திப்ப தில்.
குறள் 428:
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்.
அஞ்சுவதற்கு அஞ்சாமல் வாழ்தல் அறியாமை!
அஞ்சுதல் சான்றோர் செயல்.
குறள் 429:
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
வருமுன்னே காக்கும் அறிவிருந்தால் துன்பம்
துரும்பாகும் சந்திப்பார் சாற்று.
குறள் 430:
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்.
அறிவிருந்தால் எல்லாம் இருப்பவராம்! மாந்தர்க்( கு)
அறிவில்லை என்றாலோ என்ன இருந்தும்
எதுவுமற்றோர் ஆவார் உணர்.
42 கேள்வி
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
42 கேள்வி
குறள் 411:
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை.
நல்ல கருத்துகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும்
செல்வத்திற் கீடில்லை வேறு.
குறள் 412:
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
செவிகளுக்(கு)இன்சொல் உணவில்லை என்றால்
வயிற்றுக் குணவளிப்போம் கூறு.
குறள் 413:
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
செவியுணவாம் கேள்விஞானம் கொண்டவர்கள் வேள்வித்
தெளிவுள்ள ஆன்றோர்க் கிணை.
குறள் 414:
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை.
கல்லாதோர் கற்றவரைக்கேட்டுத் தெரிதல் நடைதளர்ந்து
தள்ளாடும் மாந்தருக்குக் கொம்பு.
குறள் 415:
இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
வழுக்கும் தரையிலே ஊன்றுகோல் போல
ஒழுக்கநெறி வாழ்வோரின் சொல்.
குறள் 416:
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
மனமொன்றி நல்லவை கேட்டால் பெருமை
உனக்குத்தான் வந்துசேரும் இங்கு.
குறள் 417:
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.
நிறைவான கேள்விஞானம் உள்ளோர் மறந்தும்
அறிவற்றுப் பேசமாட்டார் இங்கு.
குறள் 418:
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
கேள்விஞானம் இல்லாத மாந்தர் செவிகளோ
கேளாச் செவியென்றே கூறு.
குறள் 419:
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.
நுண்ணிய கேள்விஞானம் இல்லாதோர்
என்றுமே
தன்னடக்கம் கொள்தல் அரிது.
குறள் 420:
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்.
கேள்விச் சுவையொதுக்கி வாய்ச்சுவை பின்னலைவோர்
வாழ்ந்தாலும் செத்தாலும் ஒன்று.
மதுரை பாபாராஜ்
41 கல்லாமை
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
41 கல்லாமை
குறள் 401:
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
அரங்கின்றி சூதாடல் போல அறிஞர்
அரங்கில் கல்லாதார் பேச்சு.
குறள் 402:
கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.
கல்லாதார் கற்றவர்முன் சொல்தலோ பக்குவம்
இல்லா பருவத்துப் பெண்மீது மையலைக்
கொள்வது போலாம் உணர்.
குறள் 403:
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
கல்லாதார் நல்லவரே கற்றவர் கூட்டத்தில்
தள்ளிநின்று பேசாதார் இங்கு.
குறள் 404:
கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளார் அறிவுடை யார்.
கல்லாதார் கற்றவர்முன் பேசினால் கற்றவர்
கல்லாரை ஏற்கமாட்டார் கூறு.
குறள் 405:
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
கற்காமல் கற்றவர்முன் பேசினால் மெய்த்தன்மை
சட்டென்று காட்டிவிடும் சாற்று.
குறள் 406:
உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
இருப்பதுபோல் தோற்றமுள்ளோர் கல்லாத மாந்தர்!
களர்நிலத்திற் கொப்பாவார் சாற்று.
குறள் 407:
நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்
மண்மாண் புனைபாவை யற்று.
ஒன்றுமே கற்காமல் தோற்றப் பொலிவுள்ளோர்
மண்பொம்மைக் கொப்பாவார் காண்.
குறள் 408:
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
நல்லவரை வாட்டும் வறுமையினும் கல்லாதார்
செல்வம் மிகவும் கொடிது.
குறள் 409:
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு.
மேலோரா? கீழோரா? கல்விப் பெருமை
யால்வரும் நற்புகழால் தான்.
குறள் 410:
விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்.
உலகிலே கற்றவர் கல்லாதார்க் குள்ள
நிலைகளின் வேறுபாடே மாந்தருக்கும் காட்டு
விலங்கிற்கும் உள்ளதென்று செப்பு.
மதுரை பாபாராஜ்
அஷ்ரப்புக்கு வாழ்த்துகள்
வாழ்த்துகள்!
அஷ்ரப் உரை அருமையான உரை!
தலைப்பு
தமிழர் வாழ்வில் வாள்வரி!( புலி)
வாள்வரியின் தாக்கங்கள் சங்க இலக்கியக்
காலம் முதலாக இன்றுவரை எப்படி
நாளும் வளர்ந்தது என்ற வரலாறை
ஆர்வமுடன் தந்தார் புள்ளி விவரமுடன்!
பாரே வியக்கும் மகிழ்ந்து.
நடுநிலைப் பார்வை! வெளிப்படைத் தன்மை!
விறுவிறுப் பாகப் பேசிய பாங்கு!
எடுத்த தலைப்பில் தொடுத்த கருத்து
நடையோ அருமை! அழகு.
மதுரை பாபாராஜ்
Saturday, December 26, 2020
40 கல்வி
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
40 கல்வி
குறள் 391:
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
கற்பதை ஐயமின்றிக் கற்கவேண்டும்!
கற்றபின்
கற்றதை வாழ்க்கையில் போற்று.
குறள் 392:
எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
எண்ணும் எழுத்தும் படிப்பறிவின் கண்களாம்!
மண்ணுலக வாழ்வின் உயிர்.
குறள் 394:
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
மனம்மகிழ பேசி, பிரிவில் கலங்கி
மனம்வாடல் சான்றோரின் பண்பு.
குறள் 395:
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
செல்வந்தர் முன்னே வறியவர்போல் கற்றவர்முன்
கல்லாதார் கற்கவேண்டும்! கற்கச் சுணங்கினால்
கல்லார் கடையர்தான் காண்.
குறள் 396:
தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
தொட்டேதான் தோண்டும் அளவுக்கு நீரூறும்!
கற்கும் அளவே அறிவு.
குறள் 397:
யாதானும் டாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
பாரெல்லாம் வாழ்ந்திடலாம் என்றறிந்தும், சாகுமட்டும்
ஆர்வமின்றி கற்பதில்லை! ஏன்?
குறள் 398:
ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.
ஒருபிறப்பில் கற்றால் தலைமுறை ஏழும்
அருமையாய் வாழும் நிமிர்ந்து.
குறள் 399:
தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
தாம்கற்ற கல்வி உலகை மகிழ்விக்கும்
பாங்கறிந்து கற்பார் தொடர்ந்து.
குறள் 400:
கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
ஈடில்லா செல்வமே கல்வி! இதற்கிணை
வேறுசெல்வம் எங்குமில்லை சொல்.
39 இறைமாட்சி
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து!
பொருட்பால்
39 இறைமாட்சி
குறள் 381:
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு.
படையுடன், குடிமக்கள், செல்வம், அமைச்சர்,
நிறைவான நட்பு, அரணென ஆறும்
உடையதே வல்லரசில் ஏறு.
குறள் 382:
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு.
துணிவு, இரக்கம், அறிவுடைமை, ஊக்கம்
எனநான்கும் வேந்தன் இயல்பு.
குறள் 383:
தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு.
சோம்பலின்மை, கல்வி, துணிவு இவைமூன்றும்
நாடாள்வோர் போற்றுகின்ற பண்பு.
குறள் 384:
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு.
அறநெறியைப் போற்றி, கொடுமை தவிர்த்து,
மறத்தில் தவறாமல் மானத்தைக் காக்கும்
நிறைவினைக் கொண்ட தரசு.
குறள் 385:
இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
பொருளீட்டிக் காத்தும், வகுத்தும் முறையாய்ச்
செலவழிக்க வல்ல தரசு.
குறள் 386:
காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.
தோற்றம் எளிமை! கடுஞ்சொல்லே பேசமாட்டான்!
போற்றுவார் நல்லாட்சி என்று.
குறள் 387:
இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.
இன்சொல்லே பேசுவார்! ஏழைக்குத் தந்திடுவார்!
பண்புடையோர் மாட்டே உலகு.
குறள் 388:
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்.
நெறிமுறை போற்றியே மக்களைக் காப்போன்
சிறந்த அரசனாவான் செப்பு.
குறள் 389:
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு.
பெரியோர் அறிவுரை கேட்டு நடக்கும்
அரசின்
நிழலில் தழைக்கும் உலகு.
குறள் 390:
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.
வறியவர்க்கு ஈதல், கருணை,நடுநிலை,
மக்கள்
குடிகாத்தல் வேந்தர்க் கழகு
Friday, December 25, 2020
தங்கை கலாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து
தங்கை கலா நவநீதகிருஷ்ணனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து.
25.12.20
சிறுமியாய் மாணவியாய் இல்லறம் போற்றும்
சுறுசுறுப்பு இல்லத் தரசியாய் பிள்ளை
பொறுமை வளர்ப்பிலே அம்மாவாய்க் கண்டேன்!
அடுத்த தலைமுறை கண்டே அவர்கள்
கொடுத்து மகிழ்ந்தனர் பேத்திகளை! இன்றோ
துறுதுறு வென்றேதான் பாட்டியாக காட்சி
குடும்ப அரங்கத்தில் கண்டார் கலாதான்!
நறுந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
Thursday, December 24, 2020
பறவைகள் ஏமாற்றம்
குடும்பம் ஊருக்குப் போனதால் பறவைகள் ஏமாற்றம்!
சாளரத்தை மூடிவிட்டே ஊருக்குப் போய்விட்டார் !
ஆர்வமுடன் காக்கா புறாவும் உணவுதேடி
ஆசையுடன் வந்தே கரைகிறது! பார்க்கிறது!
ஏமாந்து போகிறது பார்.
பொங்கல் முடிந்து வருகின்றார் அப்போது
வந்தால் உணவுடன் தண்ணீர் கிடைக்குமே!
அன்புடன் வைப்பார்கள் உண்ணலாம்!
வாருங்கள்!
உங்களுக்குத் தீரும் பசி.
மதுரை பாபாராஜ்
மாசற்ற ஏசுவை வாழ்த்துவோம்
மாசற்ற ஏசுவை வாழ்த்துவோம்!
மாட்டுத் தொழுவத்தில் அன்று பிறந்தேதான்
ஊற்றெடுத்த சோதனையின் கொம்பொடித்துச் சாதனையாய்
மாற்றிய மாசற்ற நற்கருணை ஏசுநாதர்
நாட்டுக்கே நல்வழி காட்டினார் முன்வந்து!
ஆற்றிய தொண்டுகளும் அற்புதமும் ஏராளம்!
போற்றுவோம் வாழ்த்துவோம் சூழ்ந்து.
புத்தாண்டு வாழ்த்து!
அனைத்துமத நல்லிணக்கம் நாளும் வளர்க!
மனைதோறும் அன்பும் மகிழ்ச்சியும் சூழ்க!
இணையற்ற வல்லரசு இந்தியாவாய்
மாற்றத்
துணைநிற்போம்! சூளுரைப்போம்! நாம்.
மதுரை பாபாராஜ்
38 ஊழ் ( அறம் நிறைவு)
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
38 ஊழ் ( அறத்துப்பால் நிறைவு)
குறள் 371:
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்று மடி.
ஆக்கபூர்வ ஊக்கமா சோர்வில்லை! சோர்வுவந்தால்
ஆக்கம் அழியும் உணர்.
குறள் 372:
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூ ழுற்றக் கடை.
பேரழிவுச் சூழல் அறியாமை ஆட்கொள்ளும்!
ஆக்கநிலை கூட்டும் அறிவு.
குறள் 373:
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.
என்னதான் கற்றிருந்த போதிலும் நம்முள்ளே
உண்மை அறிவே மிகும்.
குறள் 374:
இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
ஒருவருக்குச் செல்வம்! ஒருவர்க் கறிவு!
இருநிலை கொண்டதே வாழ்வு.
குறள் 375:
நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.
நல்லதைச் செய்தால் கெடுதியாக, தீயதைச்
செய்தாலோ நல்லவை யாக விளைவுகள்!
எல்லாம் இயற்கையே இங்கு.
குறள் 376:
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
உரியவை எப்படியும் வந்துசேரும்! உனக்கோ
இலையென்றால் தங்காது சாற்று.
குறள் 377:
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது.
எதுவெனினும் அப்பயனைத் துய்த்தல் இயற்கை
வகுக்கும் வியூகந்தான் சாற்று.
குறள் 378:
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.
கடக்கவேண்டும் துன்பத்தால் என்றே இயற்கைத்
தடைவிதித்த காரணத்தால் இங்கே வறியோர்
துறவியாக வில்லை உணர்.
குறள் 379:
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.
நல்லதைக் கண்டு மகிழ்பவர்கள் துன்பத்தில்
அல்லல் படுவதேன் சொல்?
குறள் 380:
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
வாழ்வில் இயற்கையின் ஆற்றலே வெல்கிறது!
தோல்விதான் மற்றவைக்கு இங்கு.
37 அவா அறுத்தல்
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
37 அவா அறுத்தல்
குறள் 361:
அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
புவிவாழ்வில் துன்பம் வளர்வதற் கெல்லாம்
தவிக்கவைக்கும் ஆசையே வித்து.
குறள் 362:
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
துன்பம், பிறவிவேண்டாம் என்றேதான் சொல்லவைக்கும்!
துன்பமோ ஆசையால் தான்.
குறள் 363:
வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்ப தில்.
ஆசைப் படாத நிலைக்கொத்த செல்வமில்லை!
வேறுசெல்வம் இல்லை நிகர்.
குறள் 364:
தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்
தூய்மையோ பேராசை யற்ற நிலையாகும்!
வாய்மையே அத்தூய்மை தரும்.
குறள் 365:
அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்ற திலர்
பற்றற்றவர் ஆசையே அற்றவர்! மற்றவர்
பற்றற்றோர் ஆகமாட் டார்.
குறள் 366:
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.
வஞ்சித்துப் பார்ப்பதே ஆசைதான்! அவ்வாசைக்(கு)
அஞ்சிவாழ்தல் வாழ்வின் அறம்.
குறள் 367:
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.
அவாவை விலக்குகின்ற மாந்தருக்கு
இந்தப்
புவியில் அறவாழ்க்கை உண்டு.
குறள் 368:
அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
அவாவை ஒழித்தவர்க்குத் துன்பமில்லை! ஆசை
உலாவந்தால் என்றும் துயர்.
குறள் 369:
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்
துன்பத்துள் துன்பங் கெடின்.
துன்பம் எனப்படும் ஆசையே இல்லையெனில்
இன்ப மயமாகும் வாழ்வு.
குறள் 370:
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
வாழ்க்கையில் ஆசையை நீக்கிவிட்டால்
நீங்காத
பேரின்பம் காண்ப தியல்பு.
Wednesday, December 23, 2020
36 மெய்யுணர்தல்
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
36 மெய்யுணர்தல்
குறள் 351:
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
பொய்ப்பொருளை மெய்ப்பொருளாய் எண்ணும் அறியாமை
துயரைத் தருமே! உணர்.
குறள் 352:
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
உருமயக்கம் நீங்கியே மெய்த்தோற்றம் கண்டால்
உருவாகும் வாழ்வில் தெளிவு.
குறள் 353:
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து.
ஐயந் திரிபற வாழ்பவர்க்கு வானம்
உலகினும் பக்கமாம் சாற்று..
குறள் 354:
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு.
மெய்யுணர்வைக் கண்டும் தெளிவடை யாதோர்
அய்ம்புலன் அடக்கினாலும் வீண்.
குறள் 355:
எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
எப்பொருள் தோற்றமும் ஏமாற்றும்!
மெய்ப்பொருள்
முற்றும் உணர்தலே நன்று.
குறள் 356:
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
கற்றறிந்து மெய்ப்பொருள் ஏற்ற துறவியர்
சற்றும் விரும்பமாட்டார் இல்லறத்தை மீண்டுமிங்கே!
இத்தகைய பண்பே துறவு.
குறள் 357:
ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
ஆய்ந்தறிந்து மெய்ப்பொருளில் தோய்ந்தவர்கள் மீண்டுமிங்கே
ஆய்வதில்லை இப்பிறப்பை இங்கு.
குறள் 358:
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு.
பிறவியின் மெய்ப்பொருளைக் கண்டறிந்தே இந்தப்
பிறவி அறியாமை நீக்கு.
குறள் 359:
சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.
ஆர்த்தெழும் துன்பம் விலகிட துன்பத்தின்
காரணமான பற்றை விலக்கு.
குறள் 360:
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடு நோய்.
ஆசை, வெறுப்பு, அறியாமை இல்லாத
வாழ்வை நெருங்காது கேடு
Tuesday, December 22, 2020
35 துறவு
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
35 துறவு
குறள் 341:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்.
ஆசையை எப்பொருளின் மீதுநாம் நீக்கினோமோ
கேடில்லை அப்பொருளால் தான்.
குறள் 342:
வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல.
தூண்டிலிடும் பற்றைத் துறந்துவிட்டால் நன்மைகள்
ஊன்றி வளரும் உணர்.
குறள் 343:
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
அடக்கவேண்டும் அய்ம்புலனை! ஆசை வெறியை!
துறவின் ஒழுக்கம் இது.
குறள் 344:
இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.
துறவெனில் பற்றற்று வாழ்தலே! ஆசை
தொடர்ந்தால் சலனமே வாழ்வு.
குறள் 345:
மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க் குடம்பும் மிகை.
பற்றைத் துறந்தோர்க்(கு) உடம்பே மிகையாகும்!
மற்ற தொடர்பேனோ சொல்?
குறள் 346:
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.
யானென்றும் மற்றும் எனதென்றும் எண்ணாதோன்
ஞானமுடன் வாழ்வான் உயர்ந்து.
குறள் 347:
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
பற்றுகளைப் பற்றி விடாதோரைத் துன்பங்கள்
பற்றித் தொடரும் தொடர்ந்து.
குறள் 348:
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
அனைத்தும் துறந்தோர் துறவி!
சலனச்
சுனையே அறியாமை ஊற்று.
குறள் 349:
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
பற்றைத் துறந்துவிடு இன்பதுன்பம் தீண்டாது!
மற்றபடி என்றால் பிறவியை ஆட்டுவிக்கும்!
பற்றே பிறவித் துயர்.
குறள் 350:
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
பற்றுகளை விட்டவரைப் பற்றும் முடிவெடுத்தால்
பற்றுகளை நீக்கலாம் நாம்.
.
34 நிலையாமை
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
34 நிலையாமை
குறள் 331:
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
எல்லாம் நிலைத்தவை என்றே நினைக்கின்ற
பொல்லா அறியாமையே கேடு.
குறள் 332:
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அருவிளிந் தற்று.
கூட்டம் திரள்வதுபோல் செல்வங்கள் சேர்கிறது!
கூட்டம் கலைவதுபோல் சேர்ந்த வளமனைத்தும்
காற்றாய் மறைந்துவிடும் காண்.
குறள் 333:
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
சற்றும் நிலையற்ற செல்வங்கள் உள்ளபோதே
முற்றும் அறம்செய் நிலைத்து.
குறள் 334:
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.
நாளெனில் வாழ்நாள் தனைக்குறைக்க
வெட்டுகின்ற
வாளாகும் இங்கென் றுணர்.
குறள் 335:
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யாப் படும்.
வாழ்விலே விக்கி உயிர்போகும் முன்னமே
சோர்வின்றி நல்லறம் செய்.
குறள் 336:
நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.
பெருமையுடன் நேற்றுவாழ்ந்தோர் இன்றில்லை என்ற
நிலையாமை கொண்டதிவ் வாழ்வு.
குறள் 337:
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல.
கரையும் குமிழிதான் வாழ்வென் றுணரார்
அலைகின்றார் கோடியாசை கொண்டு.
குறள் 338:
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு.
உடலுடன் நம்முயிர் நட்பென்பது முட்டை
கிடக்கப் பறக்கும்புள் போல்.
குறள் 339:
உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
உறங்குவது போன்றதே சாவு! உறக்கம்
கடந்து விழித்தல் பிறப்பு.
குறள் 340:
புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சி லிருந்த உயிர்க்கு.
ஒட்டி உடம்புடன் வாழ்ந்த உயிருக்கு
வேறிடம்
கிட்டவில்லை யோஇங்கு? சொல்.
மதுரை பாபாராஜ்
Monday, December 21, 2020
33 கொல்லாமை
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
33 கொல்லாமை
குறள் 321:
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
அறச்செயல் என்றால் கொலைதவிர்த்தல்! செய்தால்
உறுத்தும் தீவினைகள் சூழ்ந்து.
குறள் 322:
பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை
பகிர்ந்துண்டும் வாழ்வே சிறப்பாகும்.!
அந்தப்
பகிர்ந்துண்ணும் பண்பே உயர்வு.
குறள் 323:
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
பண்பில் சிறந்தது கொல்லாமை! பின்னரே
நன்றென்பார் பொய்யாமை பண்பு.
குறள் 324:
நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழும் நெறி.
இவ்வுலகில் எந்த உயிரையும் கொல்லாமை
நல்லற மாகும் உணர்.
குறள் 325:
நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
தலைச்சுமை வாழ்வென அஞ்சித் துறவில்
நுழைவோரைக் காட்டிலும் தீமையென அஞ்சிக்
கொலைசெய்யா தோரே உயர்வு.
குறள் 326:
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லா துயிருண்ணுங் கூற்று.
கொல்லாமைப் பண்புடைய மாந்தரைச் சாவுகூட
வெல்லத் தயங்கிநிற்கும் கூறு.
குறள் 327:
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை.
தன்னுயிரே போனாலும் மற்றோர் உயிரைக்
கொன்றெடுக்கும் எண்ணமோ தீது.
குறள் 328:
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.
கொன்றால் மலைப்பயன் வந்தாலும் சான்றோர்க்கோ
அந்தநன்மை என்றும் இழிவு.
குறள் 329:
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
கொலைபுரிந்து வாழ்வோரைச் சான்றோர் என்றும்
இழிபிறவி என்றெண்ணு வார்.
குறள் 330:
உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
பிணியில் வறுமையில் வாடுவோரைப் பார்த்து
மனம்பதைக்க பாதகம் செய்திருப்பார் அன்றே
எனச்சொல்வார் சான்றோர் இடித்து.
மதுரை பாபாராஜ்
32 இன்னா செய்யாமை
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
32 இன்னா செய்யாமை
குறள் 311:
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
சிறப்பான செல்வங்கள் வந்தாலும்
பிறரை
அகம்நோகத் துன்பங்கள் செய்யாமல் வாழ்வோர்
அகத்திலே மாசற்றோர் தான்.
குறள் 312:
கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள். கடுங்கோபம் கொண்டே வதைப்போரைக் கூட
பொறுத்திருப்பார் மாசற்றோர் இங்கு.
குறள் 313:
செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.
சும்மா இருப்போரைத் துன்புறுத்து வோருக்கோ
துன்பத்தைத் தந்தால் துயர்.
குறள் 314:
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
துன்பத்தைச் செய்தாலும் செய்தவர் நாணுமாறு
நன்மையைச் செய்தலே நன்று.
குறள் 315:
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை.
துடிக்கவேண்டும் மற்றவர் துன்பத்தை
எண்ணி!
துடிப்பற்றோர் மாந்தரல்ல சொல்.
குறள் 316:
இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்.
துன்பமென்றுத் தானெண்ணும் துன்பத்தை மற்றவர்க்கோ
என்றும் தவிர்த்தலே பண்பு.
குறள் 317:
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
எவரெனினும் உள்ளத்தால் எள்ளளவும்
தீமை
தவறியும் செய்யாமை நன்று.
குறள் 318:
தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.
துன்பம் நமக்குவந்தால் வாடுகிறோம்! மற்றவர்க்குத்
துன்பத்தை நாம்செய்வ தேன்?
குறள் 319:
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.
பிறருக் கொருமுறை துன்பத்தைச் செய்தால்
மறுமுறை உண்டு நமக்கு.
குறள் 320:
நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
தீயவை செய்தவர்க்கே தீயவை வந்துசேரும்!
தீயவை நாடாதார் மற்றவர்க்குச் செய்யாமல்
தூயவாழ்க்கை வாழ்தல் சிறப்பு.
மதுரை பாபாராஜ்
Sunday, December 20, 2020
இலர் பலர.
இலர் பலர் !
இலராக இங்கே பலராக உள்ளார்!
உளராக நாளும் சிலராக உள்ளார்!
சுரண்டுவோர் மற்றும் சுரண்டப் படுவோர்
இரண்டுவர்க்கம் காரண மாம்.
மதுரை பாபாராஜ்
31 வெகுளாமை
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
31 வெகுளாமை
குறள் 301:
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்.
செல்லு மிடத்தில் சினம்காத்தல் நல்லது!
செல்லா இடத்திலே காத்தாலும் காக்காமல்
துள்ளினாலும் ஒன்றே உணர்.
குறள் 302:
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற.
நம்கோபம் செல்லா இடத்திலே தீது! செல்லுமிடந்
தன்னிலே காட்டினாலும் தீது.
குறள் 303:
மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்.
மறக்கவேண்டும் கோபத்தை யாரெனினும்! இல்லை
அதனால் பெருகிவரும் கேடு.
குறள் 304:
நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற.
முகமலர்ச்சி மற்றும் அகமகிழ்ச்சி இங்கே
மறையும் சினங்கொள் பவர்க்கு.
குறள் 305:
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
தன்னையே காக்க சினங்கொள்ளக் கூடாது!
கொண்டால் தனக்கே அழிவு.
குறள் 306:
சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
சினங்கொண்ட மாந்தரைக் கோபம் அழிக்கும்!
இனச்சுற்றம் சேர்ந்தழியும் சாற்று.
குறள் 307:
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
நிலத்தை அறைந்தவனின் கைவலிக்கும்! அந்த
நிலையே சினங்கொண் டவர்க்கு.
குறள் 308:
இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
அனல்போல தீமைகள் செய்தோன் மனம்வருந்தி வந்தால் கோபப் படாத
குணங்கொள்ளும் பண்பே அழகு.
குறள் 309:
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி யெனின்.
உள்ளத்தில் கோபமே கொள்ளாதோன்
எண்ணிய
தெல்லாம் பெறுவான் உணர்.
குறள் 310:
இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
இறந்தார்க்கே ஒப்பாம் சினமுடையோர்!
துறவிச்
சிறப்புடையோர் கோபமற்றோர் தான்.
மதுரை பாபாராஜ்