Friday, January 31, 2020

வேலியால் என்ன பயன்?

ஓரிடத்தில் வெற்றியாளர்! ஓரிடத்தில் தோல்வியாளர்!
யாரைப் புகழ்வது? யாரைப் பழிப்பது?
வேரில் பழுதா? கிளையிலே குற்றமா?
வேலியால் என்ன பயன்?

மதுரை பாபாராஜ்

மனக்குரங்கும் குணக்குயிலும்!

பணம்கொடுக்கும் காரணத்தால் மற்றவர்கள் எல்லாம்
தனக்கடிமை என்று நினைத்தேதான் ஆடும்
மனக்குரங்கைக் கட்டுப் படுத்தவேண்டும்
வாழ்வில்!
குணக்குயிலைப் பாடவிட்டுப் பார்.

மதுரை பாபாராஜ்

பழமொழி

தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறே.

அள்ளிஅள்ளி பிள்ளைக்கு ஊட்டிவிட்டு மிஞ்சியதைக்
கிள்ளி உணவருந்தி தன்பசியைத் தீர்த்திருப்பாள்!
தாயெனினும் பிள்ளை எனினும் வாழ்விலே
வாயும் வயிறுமென்றும் வேறு.

மதுரை பாபாராஜ்

Thursday, January 30, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

அப்படி என்னதான் பார்வையோ உன்பார்வை!
சுற்றத்தைப் பார்க்கிறாயா?
அத்தானைப் பார்க்கிறாயா?
கல்லின் முனையிலே நன்றிருக்கும் ஆபத்தை
உள்ளம் உணர்த்தட்டும் இங்கு.

மதுரை பாபாராஜ்

உறுதிவேண்டும் ஆனால் முரடனாக வேண்டாம்!
உருகவைக்கும் அன்பினைக் காட்டு! ஆனால்
உருகி  பலவீனம்  ஆகி விடாதே!
பணிவுவேண்டும்! ஆனால்நீ கோழையா காதே!
கருவம்கொள் ஆனால் ஆணவம் வேண்டாம்!

மதுரை பாபாராஜ்

Wednesday, January 29, 2020

உடலின் இரண்டு பக்கங்கள்!

பன்முக ஆற்றலைத் தன்னுள்ளே கொண்டிருக்கும்
பண்பகம்! அன்பகம்! மற்றும் அறிவகம்
என்றே அகத்துள் அகங்களைத் தாங்குகின்ற
நன்னெறிக் கூடமான கூடு.

துர்நாற்றம் வீசுகின்ற குப்பைக் கிடங்காகும்!
பல்வேறு நோய்கள் படரும் குளமாகும்!
தொல்லையில் சிக்கவைக்கும்  ஆசையின் ஊற்றாகும்!
கள்ளங் கபடுள்ள கூடு.

மதுரை பாபாராஜ்

உறவுகள் மின்னிணைப்பைப் போல! கெட்ட
உறவுகள் எல்லாம் கொடுக்கும் அதிர்ச்சி!
சிறந்த உறவுகள் வாழ்வில் ஒளியின்
சுடரைப் பரப்பும் உணர்.

மதுரை பாபாராஜ்

ரோசாவின் மொட்டுகள் பூக்களைத் தூதுவிட்டு
ராமசாமி காலை வணக்கத்தைக் காணவைத்தார்!
நண்பரின் நட்பில் திளைக்கின்றேன்
நாள்தோறும்!
பண்பினை நன்றியுடன் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

மகாத்மா காந்தி நினைவுநாள்!

30.01.2020

தியாகிகள் நாள்!

இன்னொரு காந்தி வேண்டும்
 என்றொரு தாகம் நெஞ்சில்
பன்முறை எழுந்த போதும்
 பகற்கன வென்றே தோன்றும்!

தன்னலம் பொசுங்கிப் போக
 தாய்த்திரு நாடு வாழ
இன்னொரு காந்தி வேண்டும்
 என்றிது செயலாய் மாறும்?

இந்திய நாட்டின் விடுதலைக்கே
 இன்னுயிர் ஈந்தனர் தியாகிகள்!
என்றும் நினைத்தே வணங்குவோம்!
  இந்திய நாட்டை உயர்த்துவோம்!

மதுரை பாபாராஜ்

Tuesday, January 28, 2020

தாரா முரளிக்கு வாழ்த்து!

சிறந்த கலைப்பண்பாட் டாளர் விருதின்
சிறப்பிற்கு  முரளியின் ஆற்றல், உழைப்பு,
தடம்பதிக்கும்  ஈடுபாடு  நாளும் பதித்த
முயற்சியின் வித்தே இது.

வெளிச்சம் தொலைக்காட்சி தாரா முரளி
புவியில் புகழ்பெற்றுப் பல்லாண்டு வாழியவே!
தொழிலிலே காட்டுகின்ற அக்கறையும் ஆர்வமும்
பலவிருதைப் பெற்றுத் தரும்.

மதுரை பாபாராஜ்

பிரசாந்த் மருத்துவமனைக்கு வாழ்த்து!

தமிழுணர்வு!

எங்கும் தமிழே! எதிலும் தமிழ்ச்சொற்கள்
அங்கங்கே
நன்கு மொழிபெயர்க்கப் பட்டே  இணையாக
இங்கே உள்ளதைப் பார்த்தேன்! தமிழென்றும்
நம்வாழ்வில் நிற்கும் நிலைத்து

மனிதநேயம்

மாற்றுத் திறனாளி  ஆற்றலுக்கு மின்தூக்கி
ஏற்ற இறக்க இயக்கத்தில் வாய்ப்பளித்தே
ஊற்றெடுக்கும் நல்ல மனிதநேயப் பண்பினைக்
காட்டிய நற்பணிக்கு வாழ்த்து.

மருத்துவர்கள்

ஈடுபாடும் அக்கறையும் நோயாளிக் கேற்றவாறு
ஆறுதல் தந்தே குணமளிக்கும் பண்புகளும்
பாடுபடும் தன்மை அணுகுமுறை எல்லாமே
வாடுகின்ற நோய்க்கு மருந்து.

செவிலியர்கள்

நீலவண்ணச் சீருடை போட்டேதான் நோயாளி
காலமுறைக் கேற்றவண்ணம் நாளும் சிகிச்சையை
நேரந் தவறாமல் சற்றும் முணங்காமல்
புன்னகை யோடு தருகின்றார்!  இச்சிகிச்சை
நன்கு குணமாக்கும் நம்பு.

பராமரிப்புத்துறை

நோயாளி தங்கும் அறைகளையும்  அந்தந்த
நோயாளி மற்றும் உடனிருப்போர் தேவைகளைக்
கேட்டதும் இங்கே வசதிகளை ஏற்படுத்தி
நாள்தோறும் தூயதொரு சூழ்நிலையை
நன்றாக
பார்த்துப் பராமரிக்கும் ஊழியர்கள் ஈடுபாடு
வாழ்க வளர்க நிலைத்து.

உணவுத்துறை

நல்ல தரமான உணவுகளை நோய்களின்
எல்லைகளுக் கேற்றவாறு நேரந் தவறாமல்
கொண்டுவந்து சேர்க்கின்ற பாங்கோ அருமைதான்!
அன்பான பண்பிதுதான் போற்று.

பொது

எல்லோரும் எல்லாத் துறையினரும் பண்புடனே
நல்மனங் கொண்டே நிறுவனம் முன்னேற
அல்லும் பகலும் உழைக்கின்றார் ஆனமட்டும்!
வல்லவர்கள் நல்லவர்கள்  கொண்ட நிறுவனம்
தெள்ளுதமிழ் போல்வாழும் நீடு.

நிர்வாகம்

ஒன்றிணைந்த மற்றும் குழுஉணர்வில் பாடுபடும்
பன்முக ஆற்றல் மிளிர்கின்ற நிர்வாகம்
என்பதை ஊழியர்கள் காட்டுகின்ற அர்ப்பணிப்புத்
தன்மை உணரவைக்கும் இங்கு.

மதுரை பாபாராஜ்
அறைஎண்: 2036
28.01.2020


Monday, January 27, 2020



திருமணநாள் வாழ்த்துப்பா

       15 ஆண்டுகள்
---------------------------------------------
           பெறுநர்:
    மகன்            மருமகள்
எழிலரசன்---சத்தியபாமா
----------------------------------------------
            27.01.2020
-----------------------------------------------

பக்குவமாய் இல்லற வாழ்க்கையில் முன்னேறி
முப்பாலாம் வள்ளுவத்தை வாழ்வியலாய் மாற்றித்தான்
இத்தரணி மெச்சவே
இன்பமாக வாழியவே!
நிக்கில்,  வருணும்
மகிழ்ச்சியுடன்  சூழ்ந்திருக்க
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

அன்புடன்
மதுரை பாபாராஜ்
வசந்தா

உடன்வாழ்த்தும் இதயங்கள்
ரவி,சுபா & சுசாந்த்

திருமதி ஜெயந்தி ஆனந்த் அனுப்பிய படம்

நேற்றைய பக்கத்தைப்
பார்க்க முடியாது!
நாளைய பக்கங்கள் வெற்றுத் தாள்கள்தான்!
தூவலை உந்தன் விரல்களால் பற்றிக்கொள்!
ஆவலுடன் ஊக்கம் தருகின்ற சாதனையைரவீரமுடன் ஏற்படுத்திக் காட்டு.

மதுரை பாபாராஜ்
28.01.2020

புதுமனை புகுவிழா வாழ்த்து!

27.01.2020

இணையர்:

பூபாலன்-- ரோகிணி

மகள்: ஜோஸ்னா

உழைப்பும் திறமையும் மூலதன மாக
சளைக்காமல் நல்லுழைப்பால்  முன்னேறி இன்று
கலைமிளிரும் புத்தம் புதுவீட்டில் நீங்கள்
நுழைகின்ற மங்கலத்தை வாழ்த்துகின்றோம் நாங்கள்!
வளம்சூழ வாழியவே நீடு.

பெற்றோர் பெரியோர்கள் உற்றார் உறவினர்கள்
சுற்றிநின்று வாழ்த்திசைக்க வாழியவே பல்லாண்டு!
இத்தரணி மெச்ச இணையரும் ஜோஸ்னாவும்
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

வாழ்த்தும் இதயங்கள்
மதுரை பாபாராஜ்-- வசந்தா
ரவி-- சுபாதேவி-- சுசாந்த் சிரிராம்
எழிலரசன்-- சத்யபாமா--
நிக்கில் அபிசேக்-- வருண் ஆதித்யா

விடியல் ஒன்று; வாழ்க்கை வேறு!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குந்தான் இங்கே!
பிறவியில் ஏற்கும்  தொழிலிலே காட்டும்
திறமைதான் வேறு!  விடியலோ ஒன்றே!
நடைமுறை வாழ்க்கை தினமும் வேறு!
விடியல், நடைமுறை வேறு.

மதுரை பாபாராஜ்

ஈரமனம் கொண்டவள்தான்! ஆனால் பகைப்புலத்தை
வீரமனங் கொண்டேதான் பந்தாடும்  வேழமங்கை!
ஆரணங்கோ தாய்நாட்டைக் காப்பதற்குச்
சீறிநின்றே
சூரமங்கை யாகிடுவாள் காண்.

மதுரை பாபாராஜ்

Friday, January 24, 2020

 வாக்குக்காக கூட்டணிகள்!

அரசியல் கட்சிக் களங்களுக்கு ஏற்ப
தளங்கள் மாறும் நிலையெடுத்தே நாளும்
விளக்கங்கள் மற்றும் முழக்கங்கள் சொல்லும்
கலையிலே விற்பன்னர் தான்.

மதுரை பாபாராஜர

வள்ளுவன் வாக்கு பார்க்க இயலவில்லை

திரு. செ.வ.இராமாநுசன்

வள்ளுவன் வாக்கு!

CANT PLAY THIS VIDEO

இன்றும் ஏனோ ஒளிபரப்பைப் பார்ப்பதற்கு
இங்கே இயலவில்லை
 நண்பரே! ஏனென்றே
மின்தடைக் காரணம் ஒன்றும் புரியவில்லை!
அன்பரே நேரந்தான் பார்.

மதுரை பாபாராஜ்

தனிமைத் துயர்!

இணையர் இருவரில் வாழ்வில் ஒருவர்
தனியராய் வாழ்கின்ற சூழ்நிலை வந்தால்
மனதில் உளைச்சல் உருக்குலைய வைக்கும்!
தினமும் தனிமைத் துயர்.

மதுரை பாபாராஜ்

கூடாநட்பு கேடாய் முடியும்!

கூட்ட மாக தவளைகள்
குளத்தில் வாழ்ந்து வந்தன!

முதுமை வயதுப் பாம்பொன்று
அங்கே வந்து சேர்ந்தது!

குட்டிப் பையன் தவளைக்கு
ஆட்டம் பாட்டம் காட்டியது!

குட்டிப் பையன் மகிழ்ந்திருந்தான்
ஆடிப் பாடி வாழ்ந்திருந்தான்!

அரசன் மகனை எச்சரித்தான்
மகனோ ஏற்க மறுத்துவிட்டான்.

அரசத் தவளையை நாடித்தான்
ஒருநாள்  பாம்பு சென்றது!

அரசே எனக்குப் பசிக்கிறது
தினமொரு தவளை உணவானால்

எந்தன் பசியும் தீருமே
நூற்றுக் கணக்காய்த் தவளைகள்

இங்கே உள்ளன என்றதுபார்!
அரசத் தவளை மறுத்தவுடன்

குட்டிப் பையன் அடம்பிடித்தான்
அரசனும் அதற்குச் சம்மதித்தான்

பாம்போ தினமும் தின்றதுவே
வலிமை்யுடனே வாழ்ந்ததுவே

அரசனும் அரசியும் ஊருக்குச்
சென்ற நேரம் தவளைகளை

பிடித்து உண்டு் மகிழ்ந்ததுபார்
கொஞ்சம் தவளை இருந்தனவே

அரசக் குடும்பம் திரும்பியது
தவளை நிலையை அறிந்தது

அங்கே இருந்த பாம்புவந்து
அரசனைப் பிடிக்கப் பாய்ந்ததுபார்

அரசக் குடும்பம் தப்பியது
பாம்பை அடித்து விரட்டியது

கூடா நட்பு கேடாக
முடியும் உணர்ந்தால் நல்லது!

மதுரை பாபாராஜ்



ஏற்பதும் பொறுப்பதும்!

இன்பமும் துன்பமும் தூதுவரும் வாழ்க்கையில்
இன்பம் மகிழவைக்கும் நேரத்தில் ஏற்பதும்
துன்பம் துவளவைக்கும் நேரம்
பொறுப்பதும்
என்றிருத்தல் வாழ்வின் இயல்பு.

மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி அனுப்பிய படத்திற்குக் கவிதை:

வாழ்க்கையின் சூழ்நிலைகள் வந்துபோகும் தன்மைதான்!
வாழ்க்கை மகிழ்ச்சியா! ஏற்று மகிழுங்கள்!
வாழ்க்கை உளைச்சலா?
ஏற்போம் நிலையில்லை!
நாளையே மாறும் சிறப்பான வாழ்நிலை
காத்திருக்கு நம்புங்கள் இங்கு.

மதுரை பாபாராஜ்

எல்லாம் நன்மைக்கே!

மன்னர், அமைச்சர் குழுவினர் எல்லோரும்
ஒன்றாக வேட்டைக்குச் சென்றனர்! மன்னருக்கு
மண்டையில்  முள்கிழித்து ரத்தம் வழிந்தது!
அந்த  அமைச்சரோ எல்லாமே நன்மைக்கே
என்றார்! மன்னர் சிறைப்படுத்தி வைத்துவிட்டார்!
கொஞ்சதூரம் சென்றதும்  காட்டுவாசிக் கூட்டமோ
மன்னரைப் பார்த்து விருந்து கிடைத்தது
மன்னரைத் தின்னலாம் என்றான் தலைவனங்கே!
மன்னருக்குக் காயத்தைக் காட்டினான் காட்டுவாசி!
என்ன இருந்தாலும் "ஊனமான மன்னனை
சாப்பிடக் கூடாது" என்று விடுவித்தான்,!
காயமும் நன்மைக்கே! ஆகா உணர்த்திய
அந்த அமைச்சரை மன்னர் விடுவித்தார்!
என்ன நடந்தாலும் நன்மைக்கே என்றுநாம்
எண்ணவேண்டும் வாழ்க்கையில் தான்.

மதுரை பாபாராஜ்



Thursday, January 23, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை

கீழ்வானில் செங்கதிரோன் காலை எனக்கூற
ஆழ்கடலில்  மீனவர்கள் தங்கள் படகுடன்
ஊர்ந்துசெல்லும் காட்சி அனுப்பிய  நண்பரின்
காலை வணக்கத்தை வாழ்த்து.

இன்னா  நாற்பது--- இனியவை நாற்பது -      --   கீழடி நாற்பது!

இன்னா தவையும் இனியவையும் நாற்பதாக
அந்நாள் இலக்கியத்தில்  வண்டமிழில்
பாடிவைத்தார்!
இந்நாள் வரலாற்றில் கீழடி நாற்பது
செந்தமிழர் தொன்மைக்குச் சான்றாக நாள்தோறும்
சன்நியூஸ் ஊடகத்தில் பாலா  எடுத்துரைக்கும்
பண்புதனைப் பாவினத்தால் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

Wednesday, January 22, 2020

காலைப் பொழுதில் மடித்துவிட்ட வேட்டியும்
மேல்துண்டும் சட்டையும்
ஊரில் வயல்நடுவில்
தென்னைமரப் பின்னணியில்
யாரோ வருகின்றார்?
நண்பர் முருகேசன் தான்.

மதுரை பாபாராஜ்

சிங்கத்தின் ஆணவம்!

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.

தவறாமல்  நாளும் விலங்கிலே ஒன்று
இரையாக வந்து பலியாக வேண்டும்!
அகந்தையுடன் சிங்கம் முழங்கிய தங்கே!
முகம்வாடி நித்தம் விலங்கொன்று வந்தே
பலியாகி நின்ற அவலத்தைக் கண்டே
விலங்குகள்  கூடிப் பேசின அங்கே!
சிறுமுயல் நாளை பலியாக வேண்டும்!
சரிசரி பாருங்கள் எந்தன் அறிவை!
சிரித்தே உரைத்துக் குகையை நோக்கி
மெதுவாய் நடந்தது தாமதம் செய்தே!
குகையின் வாசலில் சிங்கந்தான் நிற்க
குறுமுயலைக் கண்டதும் கோபமாய்ச் சிங்கம்
முயலைப் பிடித்ததும், "வேறொரு சிங்கம்
வரவே பயந்தேநான் ஓடித்தான் வந்தேன்".
உரைத்ததும் காட்டிலே இன்னொரு சிங்கம்?
 முழங்கியே காட்டென்று சிங்கமோ சொல்ல
முயலும் கிணற்றிலே பாரென்று சொல்ல
பயத்துடன் சிங்கமோ எட்டித்தான் பார்க்க
நிழலையே உண்மையென்று நம்பிய சிங்கம்
விழுந்தே இறந்தது பாழுங் கிணற்றுள்!
விலங்குகள் கூட்டம் முயலுக்கு வாழ்த்தை
உளமாறச் சொல்லியே நிம்மதி யாக
உளைச்சலே இன்றி உலவின அங்கே!
.
மதுரை பாபாராஜ்





சாயம் வெளுத்த நரி

சாயம் வெளுத்த நரி!

சாயத்தைப் பூசி நரியொன்று வந்தது!
பார்த்த விலங்குகள் அஞ்சி அரசனாக
ஏற்றது! காட்டில் மழைபெய்ய கூடிநின்று
ஓலமிட்ட குள்ளநரிக் கூட்டத்தைக் கண்டேதான்
சாயநரி ஆர்வத்தில் சேர்ந்தேதான் தானுமங்கே
ஓலமிட மாமழையில் சாயம் கரைந்தோட
சாயம் வெளுத்ததும் மற்ற விலங்குகள்
பார்த்து நகைத்தன பார்.

மதுரை பாபாராஜ்

Tuesday, January 21, 2020

புரிந்து பேசு!

தெரியாத ஒன்றைத் தெரிந்தது போலத்
தெளிவின்றிப் பேசும் அறியாமை வேண்டாம்!
தெரியவில்லை என்றால் தெரிந்து தெளிந்து
புரிந்துகொண்டு பேசுதல் நன்று.

மதுரை பாபாராஜ்

பேரன் நிகில் நண்பன் மோகித் அனுப்பிய படம்

இந்திய நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை
என்பதைக் காட்டுகின்ற வண்ணத்தில் வேறுபட்டு
நின்றாலும் ஒற்றுமையாய் உண்ணுகின்ற
காட்சியைப்பார்!
நம்நாட்டில் ஒற்றுமையே வேர்.

மதுரை பாபாராஜ்
21.01.2020

சிக்காமல் பேசு!

பேச்சிலே சிக்கல்  தவிர்ப்பதே நல்லது!
பேச்சும் அவையறிந்து பேசவேண்டும்! சிக்கலைத்
தூண்டும் பரபரப்புப் பேச்சால் மதிப்பிழப்பார்!
தூண்டிலுக்குள் சிக்காமல் பேசு!

மதுரை பாபாராஜ்

அன்பு மருமகளும் மகளென்றே வாழ்த்து!

DAUGHTER WEEK!

அன்பு மருமகளும் மகளென்றே வாழ்த்து!

19.01.2020--25.01.2020

 ஜெயந்தி -- செல்வகுமார்

இணையர் ஜெயந்தியும் செல்வாவும் அன்பு
பிரசன்னா மற்றும் தருணுடனும் ஆசி
வழங்கிடும் அத்தையும் மாமாவும் சூழ
வளம்பல பெற்றேதான் பன்முக ஆற்றல்
வளர்ந்திட வாழ்க! மனங்குளிர வாழ்க!
வளர்தமிழ் போல்வாழ்க நீடு.

பாபாராஜ்
வசந்தா

நா காக்க!

தேவையற்ற பேச்சை இடம்பொருள் பார்க்காமல்
தேவையின்றிப் பேசினால்  சிக்கலில் சிக்கிடுவார்!
தேவைக் கதிகமாகப் பேசினாலும் சிக்கல்தான்!
நாவை அடக்கப் பழகு.

மதுரை பாபாராஜ்

Monday, January 20, 2020

DAUGHTER WEEK!

அன்பு மகளுக்கு வாழ்த்து!

19.01.2020--25.01.2020

வைதேகி-- மதுசூதனன் வாழ்க!

இணையர் மருத்துவர்கள்  இன்பமாக வாழ்க!
மனைமாட்சி போற்றி மனங்குளிர வாழ்க!
மருத்துவத் தொண்டில் புகழ்பெற்று வாழ்க!
அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

பாபாராஜ்
வசந்தா

DAUGHTER WEEK!

அன்பு மருமகளும் மகளே!

19.01.2020--25.01.2020

மருத்துவர் சத்யா இயக்குநர் கார்த்திக்
அருமை இணையர் அகங்குளிர வாழ்க!
பெருமை புகழ்பெற்று வாழ்வாங்கு வாழ்க!
அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

பாபாராஜ்
வசந்தா

Labels:

அன்பு மகளுக்கு வாழ்த்து!


DAUGHTER WEEK!

அன்பு மகளுக்கு வாழ்த்து!

19.01.2020--25.01.2020

பொம்மியும் அன்பான கார்த்திகேயன்,சஞ்சையும்
இன்பமாக இல்லறத்தில் பாசமுடன் வாழியவே!
பன்முக ஆற்றலுடன் நேசமுடன் வாழியவே!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு!

பாபாராஜ்
வசந்தா


DAUGHTER'S WEEK!

அன்பு மகள்நாள்!

19.01.2020-- 25.01.20

ரம்யாவும்  அன்பான நாரா யணனும்
நன்கு நடனமாடும் பண்புமகள் திவ்யாவும்
வண்டமிழ்போல் வாழ்வாங்கு வாழ்க மகிழ்ந்து!
பன்முக ஆற்றல் மிளிர்ந்திட சேர்ந்தேதான்
இன்பமுடன் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்
வசந்தா

சிரிப்பு!

சிரிக்கும் உணர்ச்சி மனிதருக்கே
சிறப்பாய்  இருக்கு தெரிஞ்சுக்கோ!

நகைச்சுவை உணர்ச்சி இல்லையென்றால்
தற்கொலை செய்து கொண்டிருப்பேன்
என்றே சொன்னவர் காந்தியண்ணல்!

வாய்விட்டுச் சிரித்தால் நமக்கிங்கே
நோய்விட்டுப் போகும் பொன்மொழியாம்!

சிரித்து வாழ்ந்தால் நிம்மதிதான்-- பிறர்
சிரிக்க வாழ்ந்தால் உளைச்சல்தான்!

சிரிப்பே அருமை மருந்தாகும்
கவலை நோய்கள் பறந்துவிடும்!

தனியாய் நீயும் சிரிக்காதே!
சிரித்தால் பைத்தியம் என்பார்கள்!

அன்பாய் சிரித்தால் மதித்திடுவார்!
ஆணவச் சிரிப்போ அழித்துவிடும்!
இன்முகச் சிரிப்பே இன்பந்தான்!
ஈனச் சிரிப்போ துன்பந்தான்!
உண்மைச் சிரிப்பே அழகாகும்!
ஊனச் சிரிப்பே அசிங்கந்தான்!
எதற்கெடுத் தாலும் சிரிக்காதே!
ஏளன மாகச் சிரிக்காதே!
ஐயம் கொண்டு் சிரிக்காதே!
ஒற்றுமை காண சிரித்திருப்போம்!
ஓரம் பேசி சிரிக்காதே!
ஔவைத் தமிழைப் புகழ்ந்தேதான்
மாசே இன்றி சிரித்திருப்போம்!





மருமகன் ரவி அனுப்பிய படம்

வெற்றியான வாழ்வை விடவும் சிறந்ததோ
எப்போதும் இங்கே திருப்தியான வாழ்வாகும்!
வெற்றியை மாற்றார்
அளப்பார்!திருப்தியை
முற்றும் அளப்பது நாம்.

மதுரை பாபாராஜ்

DAUGHTER'S WEEK!

அன்பு மகள்நாள்!

19.01.2020-- 25.01.20

ஆர்த்தியும் அன்பான கோவிந்தும், அத்தையும்
ஆர்வமுடன் ஆடுகின்ற  மைந்தனும்
சேர்ந்திருக்க
நேர்த்தியாக பல்வளங்கள் பெற்றேதான் வாழியவே!
வாழ்வாங்கு வாழியவே நீடு.

மதுரை பாபாராஜ்
வசந்தா

DAUGHTER( IN LAW)WEEK!

அன்பு மருமகளும் மகளே!

19.01.2020--25.01.2020

பத்மா, கணவர் பிரபாகர், பிரியாவும்
தர்சனும் சேர்ந்திருக்க இன்பமுடன் வாழியவே!
வள்ளுவத்தைப் பின்பற்றி வாழ்வாங்கு வாழியவே!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.

பாபாராஜ்
வசந்தா

அன்பு மகள்நாள்!

DAUGHTER'S WEEK!

அன்பு மகள்நாள்!

19.01.2020-- 25.01.20

சித்ரா சரவணன் அன்பான தேஜுவுடன்
இத்தரணி மெச்ச மகிழ்ச்சியாக வாழியவே!
நற்றமிழ்போல் பல்லாண்டு வாழ்கவே!
இல்லறத்தில்
நல்லறத்தைப் போற்றிவாழ்க நீடு.

மதுரை பாபாராஜ்
வசந்தா

DAUGHTER( IN LAW)WEEK!

அன்பு மருமகளும் மகளே!

19.01.2020

வினோவும், கணவர் ரவிமோகன், ஆகாஷ்
குணமகள் கீர்த்தனாவும் சூழ்ந்திருக்க அத்தை
அருணா உடனிருக்க இன்பமுடன் வாழ்க!
பெருமையுடன் வாழ்கபல் லாண்டு.

பாபாராஜ்
வசந்தா

DAUGHTER'S WEEK!

அன்பு மகள்நாள்!

19.01.2020-- 25.01.20

பிருந்தா அன்பான ராஜ்குமார், கோசல்
பெருமையுடன் இல்லறத்தில் நல்லறத்தைச் சேர்த்தே
பெருமிதத்தில் வாழியவே! அத்தையுடன்  வாழ்க!
அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்
வசந்தா

அன்பு மகள்நாள்!

DAUGHTER'S WEEK!

அன்பு மகள்நாள்!

19.01.2020-- 25.01.20

அன்பு உமாவுடன் பாலுவும்,சௌந்தர்யா,
நன்மகள் கௌசியும் இல்லறத்தில் பாசமுடன்
பன்முக ஆற்றல் மிளிரத்தான் வாழ்கவே!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்
வசந்தா

DAUGHTER( IN LAW)WEEK!

அன்பு மருமகளும் மகளே!

19.01.2020

மருமகள் சத்யா கணவர் எழிலும்
அரும்புகள் நிக்கில், வருணுடன் வாழ்க!
பெருமையுடன் பன்முக ஆற்றல் மிளிர
அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

பாபாராஜ்
வசந்தா

DAUGHTER'S WEEK!

அன்பு மகள்நாள்!

19.01.2020-- 25.01.20

அமுதா, ரகுவும்  அன்பான நான்சி
இமையாக என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க!
தமிழ்போல் தழைத்தேதான் பல்லாண்டு வாழ்க!
இனிமையான இல்லறத்தில் நல்லறத்தைப் போற்றி
கனிவுடன் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்
வசந்தா



Sunday, January 19, 2020

DAUGHTER'S WEEK!

அன்பு மகள்நாள்!

19.01.2020

அன்பு மகளே! அருமைக் குலமகளே!
பண்பு மகளே! கணவர் ரவியுடனும்
அன்பு மகனாம் சுசாந்த்துடனும் நாள்தோறும்
பன்முக ஆற்றல் மிளிர மகிழ்ச்சியுடன்
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

பாபாராஜ்-- வசந்தா

நண்பர் இராமசாமி அனுப்பிய படத்திற்குக் கவிதை

தயக்கமின்றி அக்கறை கொள்பவர்கள்,எல்லை
வரையறை இன்றி நினைப்பவர்கள்,மற்றும்
தகவலில்லை என்றாலும் மாறாமல் உள்ளோர்
எவரோ அவரே சிறந்த உறவு!
அவரே உறவின் அழகு.

மதுரை பாபாராஜ்
19.01.2020

Saturday, January 18, 2020

நண்பர் ,IG சேகர் அனுப்பிய படம்

பூக்கூடை! கூடைக்குள் பூக்களும், தேனீக்கள்
பூக்களைச் சுற்றிப் பறக்கின்ற காட்சியுடன்
காலை வணக்கத்தைக் கூறுகின்ற நட்பினை
வாழ்த்தி மகிழ்கின்றேன் இன்று.

மதுரை பாபாராஜ்

Thursday, January 16, 2020

படிப்பினைத் தருவது வாழ்வு!

இடிமின்னல் காற்று மழையென்று சுற்றித்
துடிக்கவைக்க வெட்டவெளிப் பொட்டலில் நின்று
துடிப்பதும், வாழ்விலே இன்பதுன்பம் சூழ
அடிக்கடி சந்தித்து வெற்றிதோல்வி ஏற்றே
படிப்பினைக் கற்பதும் ஒன்று.

மதுரை பாபாராஜ்

சுற்றந்தழால்!

சுற்றத்தை விலக்காதே!

சுற்றத்தை விட்டு விலகித்தான் வாழாதே!
சுற்றத்தை என்றும் விலக்கித்தான் வாழாதே!
சுற்றம் நிழலாகும்! நாளை துணையாகும்!
சுற்றமுடன் வாழப் பழகு.

மதுரை பாபாராஜ்


திருக்குறள் பண்பாட்டுச் சிற்பி விருது வள்ளுவர் கோட்டத்தில் சி.ரா.அவர்களுக்கு வழங்கப்பட்டது

திருக்குறள் பண்பாட்டுச் சிற்பி
வள்ளுவர் குரல். குடும்ப நெறியாளர்
மேதகு.இராசேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துப்பா!

16.02.2020

சுங்கத் துறையில் பணிபுரிந்து சாதனைகள்
அங்கங்கே அந்தத்  துறையிலே செய்தாலும்
அங்கேயும் தேன்குறள்கள் தம்மை வளாகத்தில்
எங்கும் பொறித்தவரை வாழ்த்து.

வீட்டில் நுழைந்ததும்  வள்ளுவர் சிற்பமே
வாசலில் நம்மை வரவேற்கும்! சொல்லொன்று
செய்யும் செயலொன்று என்றேதான் வாழாமல்
சொன்னதை வள்ளுவத்தைப் பின்பற்றி
வாழ்கின்றார்,!
புன்னகைக்கும் வள்ளுவரைப் போற்று.

திருக்குறள் பண்பாட்டுச் சிற்பியே வாழ்க!
இருவரிக் குறளை இதயத் துடிப்பாய்த்
துடிக்கவைத்தே வாழும் இராசேந்ரன் வாழ்க!
அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

மல்லையில் வள்ளுவர் மணற்சிற்பம்!

16.02.2020

உலகத்தின் மானுட நல்லொழுக்கப் பண்பை
இயல்பான வாழ்க்கையின் எல்லையாய்த் தந்த
இணையற்ற வள்ளுவர்க்கு
மல்லையில் சிற்பம்
அமைத்ததை வாழ்த்தி வணங்கு.

மதுரை பாபாராஜ்

Wednesday, January 15, 2020

வள்ளுவர் நாள்!

16.01.2020

முக்கடலின் சங்கமத்தில் விண்முட்ட நிற்கின்றாய்!
முப்பாலில் இவ்வுலக மாந்தரின் வாழ்வியலைக்
கச்சிதமாய்த் தந்தே உலகப் பொதுமுறைக்கே
வித்திட்டாய்! ஆசிகளைத் தா.

மதுரை பாபாராஜ்

 வீட்டில் தைப்பொங்கல் 2020

15.01.2020

இணையராய்ச் சென்றே கரும்புகள் வாங்கி
கனத்தைப் பொருட்படுத் தாமல்
தோளில்
சுமந்தே நடந்துவந்தோம்! வீட்டுக்குள்
வந்து
சுவற்றில் கரும்புகளைச் சாய்த்தேதான் வைத்தேன்!
சுவைக்கும்  சுமைதான் கரும்பு.

பொங்கலோ பொங்கல் 15.01.2020

சர்க்கரைப் பொங்கலுடன் வெண்பொங்கல்  பொங்கிவரப்
பொங்கலோ பொங்கலென்று கூவினோம்! சாம்பாரும்
கண்கவர்  சட்னியும் பொங்கல் வடைகளும்
வாழைப் பழங்கள்  இலையில் படைத்தேதான்
காலைப் பொழுதில் வழிபட்டோம் கூடிநின்று!
நாளும் உழைக்கும் உழவருக்கு நன்றிகூறி
வாழ்த்தினோம் வாழ்கவென்றே இங்கு.

மதுரை பாபாராஜ்






1330 குறள்களுக்கும் படப்புதிர் !

சாதனை நாயகன் அஷ்ரப் வாழ்க!

வள்ளுவரின் ஆயிரத்து முந்நூற்று முப்பது
தெள்ளுதமிழ்த் தேன்குறள்கள் தம்மைப்
புதிர்ப்படத்தால்
அள்ளி வழங்கியே நாள்தோறும் வள்ளுவர்
கூட்டுக் குடும்பத்தார் மாலைமணி ஏழரைக்கு
ஊற்றெடுக்கும் ஆர்வத்தால் பங்கேற்று
அப்புதிருக்(கு)
ஏற்ற குறளெண்ணைக் கூறவைப்பார்!
வெற்றியாளர்
யாரென்ற பட்டியலைப் பார்த்தேதான் வாழ்த்துவோம்!
தேர்ந்தெடுத்த அக்குறளும் ஆங்கிலமும்
அப்படத்தில்
சேர்த்தளிப்பார் அஷ்ரப்தான் இங்கு.

இமாலயச் சாதனை நாயகன் அஷ்ரப்
இமயம்போல்  வாழ்கவே! புன்னகை மன்னன்
குறள்நெறி  போற்றுகின்ற வித்தகர் வாழ்க!
சிறப்புடன் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்
15.01.2020

ஜல்லிக்கட்டு!

வாடி வாசல் திறந்தாச்சு
காளைகள் சீறிப் பாய்கிறது

வேக மாக வருகிறது
வாசலில் வீரர் கூட்டத்தான்

முந்தி முந்தி வருகிறது
கவனம் எல.லாம் காளைமேல்

தமிலைப் பிடிக்க உற்சாகம்
பொங்கிப் புரள  நிற்கின்றார்

காளைகள் வெளியே வந்ததுமே
மாட்டைப் பிடிக்கும் வீரர்கள்

பாய்ந்தே அடக்கப் பார்க்கின்றார்
ஒருசிலர் வெற்றி அடைகின்றார்

ஒருசிலர்  சரிந்தே வாழ்கின்றார்
வெற்றி தோல்வி  கேள்வியில்லை

முயற்சி ஒன்றே மூச்சாகும்
பாரம் பரியம் வீச்சாகும்!

மதுரை பாபாராஜ்

Tuesday, January 14, 2020

நண்பர் இராமசாமி அனுப்பிய காணொளி

15.01.2020

ஆங்கில எழுத்தைக்  கலைமிளிரும் ஓவியமாய்
ஆர்வமுடன் கோடுகளால் ஒன்றிணைத்தே உண்டாக்கி
பொங்கல் மகத்துவத்தைக் கண்முன்னே கொண்டுவந்த
கண்கவர் ஆற்றலை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!

15..01.2020

இல்லங்கள் தோறும் தமிழ்மணம் வீசவேண்டும்!
உள்ளங்கள் செந்தமிழைப் போற்றிப் புகழவேண்டும்!
எல்லோரும் செந்தமிழில் பேசும் நிலைவேண்டும்!
தெள்ளுதமிழ்ப் புத்தாண்டை  வாழ்த்து.

அகரவரிசையில் தைப்பொங்கல் வாழ்த்து!

15.01.2020

அனைத்துமத நல்லிணக்கம்
ஆல்போல் தழைக்கட்டும்!
இன்சொற்கள் பேசுவோம்!
வன்சொற்கள் தவிர்ப்போம்!
ஈகை மனம் வளர்ப்போம்!
ஈனத் தனம்  வெறுப்போம்!
உழைப்பால் முன்னேறுவோம்!
ஊக்கமுடன்  செயல்படுவோம்!
எளிமையாய் வாழ்ந்திடுவோம்!
ஏணியாய் உதவிடுவோம்!
ஐந்துபேரை அரவணைப்போம்!
ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்போம்!
ஓடிவரும் தடைதகர்ப்போம்!
ஔவைத் தமிழ்மொழியை
 மூச்சாக்கி வாழ்ந்திடுவோம்!
எஃகைப்போல் உறுதிகொள்வோம்!
வள்ளுவத்தை வாழ்வியலாய்ப்
பின்பற்றி வாழ்ந்திடுவோம்!

மதுரை பாபாராஜ்
வசந்தா

Monday, January 13, 2020

பணிவு! கோழைத்தனமல்ல!

தாழ்வு மனப்பான்மை வாழ்வின் தடைக்கல்லாம்!
காழ்ப்புணர்ச்சி பாற்குடத்தில் உள்ள துளிநஞ்சு!
வாழ்வில் உயர்வு மனப்பான்மை ஆணவமே!
வாழ்வில் பணிவே உயர்வு.

மதுரை பாபாராஜ்

போகி வாழ்த்து!

14.01.2020

எதிர்மறை எண்ணங்கள் தம்மை விலக்கி
எதிலுமே நேர்மறை எண்ணத்தைத் தேக்கி
நதிபோல் எல்லைக்குள் வாழ்வதற்குக் கற்போம்!
புகையின்றி உள்ளப் புகைச்சலின்றி போகி
மகத்துவத்தை என்றென்றும் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

Sunday, January 12, 2020

வாய்மையே வெல்லும்!

அரிசியட்டைக்கே பொங்கல் பரிசு!

13.01.20

அரிசியட்டை உள்ளவர்க்கே பொங்கல் பரிசாம்!
சர்க்கரை மட்டுமே வாங்குவோ ருக்கு
அரசின் பரிசில்லை என்றே மறுத்துவிட்டார்!
அரசின் நடுநிலைப் பார்வை அருமை!
தரமறுத்தார் வந்துவிட்டேன் நான்.

மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்
13.01.20

கம்பீர மாக கழுத்தைத் திருப்பியே
எங்கோநீ  பார்க்கின்றாய் வண்ண மயிலினமே!
இந்திய நாட்டின் பெருமிதப் பார்வையோ?
நண்பரின் வாழ்த்துதான் நட்பு.

மதுரை பாபாராஜ்

வாழ்த்துகள் வாழவைக்கும்!

வாய்மணக்க வாழ்த்துங்கள்! உள்ளம் மணங்கமழ
வாழ்த்தி மகிழுங்கள்! வாழ்வாங்கு வாழ்கவென்றே
வாழ்த்துங்கள்!  வாழ்த்தவாழ்த்த வாழ்க்கை வளமாகும்!
வாழ்த்துப்பா வாழவைக்கும் நீடு.

குறள்போல வாழ்க! குவலயம் மெச்ச
சிறப்புடன் வாழ்க! வளம்பெற்று வாழ்க!
திறம்பட வாழ்க! புகழுடன் வாழ்க!
அகங்குளிர வாழ்த்துதல் நன்று.

மதுரை பாபாராஜ்

வேடம் வேண்டாம்!

ஆத்திகமோ நாத்திகமோ நல்லொழுக்கம் இல்லாமல்
போற்றுகிறேன் என்பது வேடமின்றி வேறென்ன?
ஏட்டுச் சுரைக்காய் கறிசமைக்கத் தோதாமோ?
போற்றுவதை வேடமின்றிப் போற்று.

மதுரை பாபாராஜ்

Saturday, January 11, 2020

எல்லைதாண்ட வேண்டாம்!

முடிவற்ற வாதம் இருமுனைக் கத்தி!
வெடிப்பதற்கு நேரத்தைப் பார்த்திருக்கும் குண்டு!
வெடித்துவிட்டால் சேதம் அனைவருக்கும் உண்டு!
எதிலுமே எல்லைகள் தாண்டினால் தொல்லை!
நதிபோல் கரைக்குள்ளே ஓடு.

மதுரை பாபாராஜ்

பேரன். நிக்கிலின் நண்பன் மோகித் வீட்டில் அனுப்பிய படத்திற்கு கவிதை:

காலை வணக்கத்தை ஏந்திவரும் கோப்பையில்
சோலை மலரினத்தைக் கண்கவரக் கொத்தாக்கி
காலையிலே நட்பு மணக்க அனுப்பிவைத்த
கோலத்தை வாழ்த்துகிறோம் நாம்.

மதுரை பாபாராஜ்
வசந்தா
12.01.2020

மாறத் தெரிந்தால் வாழலாம்!

காட்டுக்குள் வாழ்ந்தவை நாட்டுக்குள் வந்தன!
நாட்டுக்குள் வாழ்ந்தவர் காட்டுக்குள் சென்றனர்!
நாட்டில் அமைந்ததற் கேற்ப அனுசரித்து
காட்டில் இருந்தவை வாழ்ந்தன ஏற்றேதான்!
காட்டுக்குள் சென்றவர்கள் அங்கே அனுசரித்து
வாழ  புலம்பி முகஞ்சுழித்து காட்டுவாழ்க்கைத்
தேவையில்லை என்றுவந்தார் மீண்டுந்தான் நாட்டுக்கு!
தேவை சகிக்கின்ற பண்பு.

மதுரை பாபாராஜ்

சகித்து வாழப் பழகு!

அனைவருக்கும் வாழ்க்கை கடந்துதான் போகும்!
மனைதோறும் சிக்கல்கள் வந்துவந்து போகும்!
தினந்தோறும் சூழ்நிலையைச் சந்தித்தே வாழ்வோம்!
மனதால் சகிப்பதே வாழ்வு.

மதுரை பாபாராஜ்

Friday, January 10, 2020

நண்பர் இராமசாமி அனுப்பிய படத்திற்கு கவிதை:

11.01.2020

கோப்பை மலர்களைத் தட்டில் விழவைத்து
நாட்காட்டி காட்டி மலர்கின்ற நன்னாளோ
பொன்னாளாய் ஆகட்டும் என்றேதான்
வாழ்த்துகின்ற
அன்பினை நட்பினை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

அம்மாவின் முடிவு

அம்மாவின் அந்த ஐம்பத்திரண்டு நாள்கள்!

தெய்வத்திரு.தேவகி முத்துசுப்பு

18.12.1983 -- 13./14.02.1984

கென்னட் மருத்துவமனை மதுரை !

கோமா. COMA

ஏகா தசிமுடிந்தே என்தாய் நினைவிழந்தார்!
வேகமாய் நாங்கள் சிகிச்சைக்குச் சேர்த்துவிட்டோம்!
 வந்தார் மருத்துவர்கள்  பார்த்தனர்! கைபிசைந்தே
நின்றனர் கோமாவில் சென்றுவிட்டார் என்றனர்.!
கண்கள் அசைகிறது மூச்சு விடுகின்றார்
கைகால் அசைகிறது ஆனால் உணர்ச்சியில்லை!
என்ன பேசினாலும் தாய்க்கோ விளங்கவில்லை!
சுற்றிநின்று பார்த்தோம் நாம்.

ஐம்பத் திரண்டாம் நாளில் மருத்துவர்
வந்தார் சிகிச்சையை வீட்டில் தொடரலாம்
என்றார் மருத்துவக் கூடத்தை
 விட்டகன்றோம்!
வந்துவிட்டோம் வீட்டுக்(கு! ) இரவிலே அம்மாவோ
தந்தை படத்தை விழியால் சுழற்றித்தான்
என்னமாய் பார்த்தார்! ஒருமுறை சுற்றிநின்ற
எங்களையும்   பார்த்தார்! மறுநாள் இறந்தார் !
தாயின் முடிவே இஃது.

மதுரை பாபாராஜ்

மாண்புமிகு லாலபகதூர் சாஸ்திரி நினைவுநாள்!

11.01.2020

வாய்மையை நேர்மையை வாழ்வியலாய் மாற்றியவர்!
தூய்மை தனிமனித நல்லொழுக்கம் இவைகளை
மூச்சாக்கி வாழ்ந்தவர்
லால்பகதூர் சாஸ்திரி!
போற்றுவோம் இன்று நினைந்து.

மதுரை பாபாராஜ்

கொசுக்கள்!

சிற்றுண்டி அங்காடி! நண்பர்கள் உட்கார்ந்தார்!
சுற்றிக் கொசுக்கள் தலைமேலே இன்னிசை!
தட்டிவிட்டுச்  சிற்றுண்டிப் பட்டியலைப் பார்த்தார்!
சிற்றுண்டி தங்களுக்கு ஏற்பத்தான் சொல்லிவிட்டார்!
சிற்றுண்டி தந்தார்! கொசுக்களைத் தட்டிவிட்டே
எப்படியோ சாப்பிட்டார் அங்கு.

மதுரை பாபாராஜ்

வெண்பா அல்ல உன்பா!

வெண்பா இலக்கணத்தை ஏற்காத இந்தப்பா
வெண்பாவே இல்லப்பா! அப்பப்பா! இந்தாப்பா
என்னப்பா நான்சொல்ல
வெண்பா கிடையாது!
 உன்பா  எனச்சொல்வாய்  நீ.

மதுரை பாபாராஜ்

மதுரை பாபாராஜ்

கனிகளைத் தவிர்க்கும்!
காய்களை ஏற்கும்!

வெண்பா!

கனிகளை நாடாமல் காய்களை நாடும்
தனித்தன்மை கொண்டது வெண்பா! -- கனிச்சுவை
விஞ்சும் கருத்துச் சுளைகளைக் காய்ச்சீர்கள்
கொண்டுவந்தே ஊட்டும் உணர்.

மதுரை பாபாராஜ்

Thursday, January 09, 2020

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு
(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:336)

பொழிப்பு (மு வரதராசன்): நேற்று இருந்தவன் ஒருவன், இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

தந்தை தெய்வத்திரு முத்துசுப்பு அவர்கள்
காலையில் இருந்தார்! மாலையில் இல்லை!

10.11.1980

MY DUTY IS OVER!

கென்னட் மருத்துவக் கூடத்தில் பிள்ளைகள்
நன்கு சிகிச்சை முடிந்து வெளிவந்தார்!
என்தந்தை கோப்புகளை மேலிருக்கும் சொற்களைச்
சொல்லியே தந்தார்! மனமோ துணுக்குற்று
தந்தையேன் இப்படிச் சொன்னார்? ஒன்றுமில்லை
என்றே சமாதானம் சொல்லி அடக்கியது!
அன்றே கடைசிநாள்! தந்தை மறுநாளோ
மண்ணகம் விட்டகன்றார் காண்.

11.11.1980

காலைப் பொழுதிலே தந்தையிடம் சொல்லிவிட்டு
ஆர்வமுடன் அன்றோ அலுவலகம் சென்றுவிட்டேன்!
மாலை மணியோ மூன்று! தொலைப்பேசி
வந்தது! என்மனைவி என்னை அவசரமாய்
வந்துவிடச் சொன்னாள் தந்தை உடல்நிலை
என்னமோ செய்கிறது என்றாள்! உடனேநான்
சென்றடைந்த போதங்கே தந்தையைச்
சுற்றிநின்று தேம்பி அழுதனர்! மருத்துவரை
நானோ அழைத்துவந்து காட்டினேன்! சோதித்தார்
வேதனைச் செய்தி உறுதிசெய்தார்! என்தந்தை
காலமாகி விட்டார்! காலையில் வாழ்ந்திருந்தார்!
மாலையில் இல்லை உயிர்.

மதுரை பாபாராஜ்

Wednesday, January 08, 2020

பெருந்தன்மையே மனிதம்!

அண்மைத் தொடர்புகளே இன்றி திடீரென்று
சொந்தம் உறவென்று கொண்டாடும் உள்ளத்தில்
உண்மை இருக்குமா என்றே நினைப்பதில்
என்ன தவறாகும் சொல்?

பெருந்தன்மை கொண்டேதான் ஏற்கும் நிலையோ
பெருந்தன்மைக் கோழைத் தனமல்ல என்ற
அருமையான பக்குவப் பண்பினைக் காட்டும்!
பெருந்தன்மைப் பண்பே மனிதம்.

மதுரை பாபாராஜ்

தமிழண்டா!

PEARLKIDS SCHOOL STUDENT!

மோகன்--வினோ
இணயர் மகன் ஆகாஷ்!

ஊதாக் கரைவேட்டி சட்டையும் இன்றிங்கே
தோதாய் அணிந்தே அழகான ஆகாஷ்
தமிழனென்று சொல்வோம் தலைநிமிர்ந்து நிற்போம்!
இமிழ்கடல் போல முழங்குகிறான் இங்கே!
தமிழண்டா! ஆகாஷ்தான் இங்கு.

மதுரை பாபாராஜ்

Tuesday, January 07, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம். 08.01.2020

இருவண்ணம் கொண்ட பறவையோ கல்லில்
கருத்தாக உட்கார்ந்தே பார்த்திருக்க காலை
விருந்தாகும் இக்காட்சி காலை வணக்கம்
தருகின்ற நட்பினை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

வறட்டு இருமலுக்கு

எலுமிச்சை சாறை  இளஞ்சூட்டு நீரில்
கலந்தேதான் தேனையும் சேர்த்துப்  பருகு!
வறட்டு இருமல் குறையும்! முயன்றால்
கிடைக்கும் குணமாம் உணர்.

மதுரை பாபாராஜ்

Monday, January 06, 2020

துவாதசி இந்த ஆண்டு!

07.01.2020

காய்கள் வகையோ இருபத்து ஒன்றினைச்
சேர்த்தேதான் கூட்டுக் குழம்பாக வைத்திருந்தார்!
அப்பளம், ஒன்பது காய்களுடன், தயிர்இஞ்சி
பச்சடி மற்றும் புதினா துவையல், இலையிலே
வெண்சோறும் வைத்தேதான்  துவாதசி
என்றாரே!
இன்சுவையை ஏற்றேன் ரசித்து.

மதுரை பாபாராஜ்

வெறும்சட்டை போட்டால் குளிர்தாங்க வில்லை!
வெதுவெதுப் பாக குளிராடை போட்டே
குளிர்தாங்கும் வண்ணந்தான் ஆடையை  மாற்றி
குளிரை எதிர்கொண்டேன் இன்று.

மதுரை பாபாராஜ்

Sunday, January 05, 2020

முதல் -- இடை -- கடை

பெற்றோரின் சொற்கேட்டு சொல்வதெல்லாம்  பின்பற்றி
முற்பகுதி வாழ்க்கை
நடக்கும்! இடைப்பகுதி
இப்படியும் அப்படியும்
செல்லும்! கடைப்பகுதி
எப்படியோ போகட்டும்
என்றே ஒதுங்கிவிடும்!
இத்தரணி வாழ்வின் இயல்பு.

மதுரை பாபாராஜ்

பற்றை விடுவதன் மெய்ப்பொருள்!

பற்றை விலக்கென்றால் இல்லாள் குழந்தைமீது
பற்றை விலக்கென்று அர்த்தமல்ல! தன்னலப்
பற்றை விலக்கி கடமைகளைச் செவ்வனே
பற்றுடன் செய்யவேண்டும் என்றே பொருளாகும்!
முற்றும் ஒதுங்குதல் தீது.

மதுரை பாபாராஜ்

புன்னகைக்கே மதிப்பு!

தள்ளுபடி தர்றோம் நகைவாங்க வாங்கவாங்க!
எல்லோரும் சென்று நகைவாங்கி வந்தாலோ
உங்கள் நகையை உடனேயே விற்கலாம்!
உங்களுக்கு நல்ல விலையில் பணம்தர்ரோம்
என்றும் அழைக்கின்றார்! மக்கள் மிரள்கின்றார்!
இந்த இரண்டு விளம்பரங்கள்   தேவையா?
பொன்நகையை  வாங்கவேண்டாம்! விற்கவேண்டாம்! வாழ்க்கையில்
புன்னகைக்கே என்றும் மதிப்பு.

மதுரை பாபாராஜ்

Saturday, January 04, 2020

மயக்கமா?

பெருசு தொடங்கி சிறுசு முடிய
கரங்களில் பற்றித்தான் கண்கள் துழாவ
இரண்டு  செவிகளில் மாறிமாறி வைத்தே
மயங்கித் திரிகின்றார் கைபேசி கொண்டு!
உலகே மயக்கத்தின் பின்.

மதுரை பாபாராஜ்

அன்றும் இன்றும்!

இணையரிடம் உரிமை மாற்றம்!

கணவன் வெளியிலே சென்றாலோ அன்று
கணவனைப் பார்த்து வழியனுப்பி வைப்பாள்!
இணையர் உறவில் இதெல்லாம் மாறி
மனைவி கணவன் எவர்சென்ற போதும்
வெளியிலே நின்று வழியனுப்ப மாட்டார்!
தனித்தனி  யாகிவிட்டார்  இன்று.

அன்றெல்லாம் சம்பளத்தை ஒன்றாக்கிக் கூட்டுறவாய்
அன்றாடம் ஏற்றே செலவழித்தார்! இன்றிங்கே
என்பணம் உன்பணம் என்றேதான் பேசுகின்ற
தன்னலப் போக்கு தழைக்கிறதே! வேதனை!
ஒன்றோ இரண்டாகிப் போச்சு?

உனக்குநான் என்றும் எனக்குநீ என்றும்
மனக்கோட்டை கட்டி மணமுடித்த பின்பு
தினந்தோறும் வாழ்க்கையின் உண்மை நிலையை
மனமே அறிகின்ற போது கலையும்
கனவுகளை ஒவ்வொன்றாய்ச் சந்திப்பார் இங்கு!
மனக்கோட்டை வீழும் சரிந்து.

மதுரை பாபாராஜ்







PEARLKIDS பொங்கலோ பொங்கல்!
--------------------------------------------
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்
பொங்குக பொங்கலடா!

மங்கலம் எங்கும் தங்கட்டும் என்றே
வாழ்த்துச் சொல்வோமடா!

உழவரை நம்பி உலகம் வாழுது
உரக்கச் சொல்வோமடா!

உழவரை உயிரினம் வணங்கி மகிழும்
உண்மை உண்மையடா!

மழையும் உழவும் உலகைக் காக்கும்
உயிரைக் காக்குமடா!

இயற்கைத் தாயை வணங்கும் திருநாள்
பொங்கல் திருநாளே!

நம்மைக் காக்கும் மாடுக ளுக்கு
மாட்டுப்பொங்கலடா!

நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி சொல்வோமடா!

குழந்தைகள் நாமோ படிப்போம் படிப்போம்
படித்துத் தெளிவோமே!

படித்ததை நினைவில் நிறுத்தி நாமும்
அதன்படி வாழ்வோமே!

ஒழுக்கம் காத்து உயர்வோம் வாழ்வில்
நிமிர்ந்து வாழ்வோமே!

தாயும் தந்தையும் நமது தெய்வம்
வணங்குதல் கடமையடா!

நம்மைச் செதுக்கும் சிற்பி ஆசான்
வாழ்க்கை வழிகாட்டி

PEARL KIDS   பள்ளி சிறந்த பள்ளி
என்றே சொல்வோமே!

வள்ளுவன் கூறிய குறள்வழி வாழ்ந்து
பெருமை சேர்ப்போமே.






லட்சிய விளக்கினை ஏந்தும் நெஞ்சில்
 சலனக் காற்று கூடாது!

வெற்றியே இன்றித் தோல்வியே வரினும்
 விழியைக் கசக்கக் கூடாது!

உற்றார் பெற்றோர் நண்பர் என்றே
 உள்ளம் மயங்கக் கூடாது!

நெற்றிக் கண்ணாய்ச் செயல்பட வேண்டும்
 நெளிவு சுளிவு கூடாது!

நேர்மைப் பயணப் பாதை மீது
 நெருப்பைத் தூவும் நிலைவரலாம்!

கூரிய வேலாய்ப் பழிகள் துள்ளிக்
 கூட்டைத் தாக்கும் நிலைவரலாம்!

ஈரமே அற்ற ஈனத் தனங்கள்
 இன்னல் விதைக்கும் நிலைவரலாம்!

பாரமாய் இந்த வாழ்க்கை தோன்றும்
 பாதகம் சுரக்கும் நிலைவரலாம்!

பிறப்பவர் எல்லாம் இறப்பது உறுதி
 பிறகேன் கலங்கிட வேண்டுமடா?

நெறியைப் போற்று! நேர்வழி காட்டு!
 நெஞ்சில் நிம்மதி கூடுமடா!

வறுமையில் வாடி பாரதி போல
 வரலா றாகு போதுமடா!

முறையாய் வாழ்ந்தான் உலகில் என்றே
முடிவில் சொன்னால் போதுமடா!

மதுரை பாபாராஜ்

பொங்கலோ பொங்கல்!

பொங்கல் வைக்க கூடுவோம்
பொங்கலோ பொங்கல் பாடுவோம்

வண்ண வண்ணக் கோலங்கள்
வகைவகை யாக போடுவோம்

கண்ணைக் கவர போடுவோம்
கருத்தைக் கவர் போடுவோம்

அடுப்பில் நெருப்பை மூட்டியே
மஞ்சள் கட்டிய பானையில்
அரிசி தண்ணீர் நிரப்பியே
அருமைப் பொங்கல் வைப்போமே

கரும்பை இரண்டு பக்கத்தில்
நிறுத்தி வைத்தே நிற்போமே

சூரியன் வானை வணங்கித்தான்
நன்றி சொல்லிப் பாடுவோம்!

உழவர் வாழ்க வாழியவே
உயிரைக் காப்போர் வாழியவே

வளமாய் வாழ பாடுவோம்
தரமாய் வாழ பாடுவோம்

தைமா தத்தின் முதல்நாளே
தமிழ்ப்புத் தாண்டு நாளாகும்

அடுத்து மாட்டுப் பொங்கல்தான்
அகத்தால் நன்றி கூறிடுவோம்

வள்ளுவர் நாளைக் கொண்டாடு
வாழ்க்கை தழைக்க கொண்டாடு

மதுரை பாபாராஜ்












Friday, January 03, 2020

நண்பர் வீஓவி இராமசாமி அனுப்பிய படம்

இன்றைய தேதியைப் பூக்கள் அழகுசெய்ய
வண்ணக் கிளிகள் சிறகு விரித்திருக்க
வண்ணத்துப் பூச்சிகள்
காற்றில் மிதந்திருக்க
அன்பான காலை வணக்கத்தை நட்புடன்
தந்ததை வாழ்த்துகிறேன் இன்று.

மதுரை பாபாராஜ்

சாலையோரம் தென்னை அணிவகுக்க மூடுபனி
காலையிலே பின்னணிக் காட்சியாக, மாடுபூட்டி
வேலைக்கு மாட்டுவண்டி மீது உழைப்பாளி
காலைப் பொழுதை உசுப்புகின்ற கோலத்தில்
காலை வணக்கத்தை ஏந்திவந்த நட்பிற்கு
வாழ்த்துகள் கூறுகின்றேன் இன்று.

மதுரை பாபாராஜ்