Friday, February 28, 2020

பிப்ரவரி 2020

மிகுநாளாண்டு!

LEAP YEAR

இத்தகைய ஆண்டில் வருகின்ற பிப்ரவரித்
திங்களுக்கு மொத்தம் இருபத்து ஒன்பதுநாள்!
மற்றைய ஆண்டில் இருபத்தெட் டாகுமிங்கே!
இத்தகைய ஆண்டுகள் நான்கால் வகுபடும்!
இஃதே மிகுநாளாண் டாம்.

மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

🙏
ஒற்றைப் பறவை மரக்கிளையில் உட்கார்ந்தே
அப்பா! விடிந்ததே நற்பொழுது! நம்கடமை
எத்திசையில் என்றே நினைக்கிறதோ என்னவோ?
எப்படியும் போகும் பொழுது.

மதுரை பாபாராஜ்

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

உறவே உயிர்ப்பு!

வீடுதேடி வந்தோரை  நாடி வரவேற்றால்
கூடுகட்டும் நல்லுறவு! வாழ்க்கை இணக்கமாகும்!
பார்த்தபோதும் பாராமல் சென்றால் இறுக்கமாகும்!
பாரில் உறவே உயிர்ப்பு.

வந்த விருந்தினரை அன்பாய் வரவேற்கும்
பண்பறிந்து வாழ்ந்தால் மகிழ்ச்சி பெருகிவரும்!
இந்த விருந்தோம்பல் என்றும் இருவருக்கும்
சொந்தமாகும் போற்றப் பழகு.

மதுரை பாபாராஜ்

Thursday, February 27, 2020

பாடலா? பண்ணா?

பாடலைக் காட்டிலும் பண்களின் தாக்கமே
தாகத்தைத் தூண்டி முணுமுணுக்க வைத்துவிடும்!
நாடறிய நம்மை அறியாமல் உள்ளமோ
ஊடகமாய் ஒன்றும் உணர்.

மதுரை பாபாராஜ்

Wednesday, February 26, 2020

உறவே உயிர்ப்பு!

வீடுதேடி வந்தோரை  நாடி வரவேற்றால்
கூடுகட்டும் நல்லுறவு! வாழ்க்கை இணக்கமாகும்!
பார்த்தபோதும் பாராமல் சென்றால் இறுக்கமாகும்!
பாரில் உறவே உயிர்ப்பு.

மதுரை பாபாராஜ்
27.02.20

Sent by Balamurali

Replace Excuses with Effort. Replace Laziness with Determination
and everything else will fall into Place.

Good morning

இயலாமைக் காரணத்தை உங்களது நல்ல
முயற்சியால் மாற்றுங்கள்! சோம்பலை நாளும்
உறுதியால் மாற்றுங்கள்! மற்றவை எல்லாம்
வெகுமதியாய் வந்துசேரும் இங்கு.

மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி

மருமகன் ரவி அனுப்பியது

அன்பான சொற்கள் சுருக்கம் எளிமையாய்
இங்கே இருந்தாலும்
சொற்களின் தாக்கமோ
உண்மையில் எல்லையற்ற தாக இருக்குமிங்கே!
என்புருகும் அன்பே அது.

மதுரை பாபாராஜ்

Sent by Balamurali

Replace Excuses with Effort. Replace Laziness with Determination
and everything else will fall into Place.

Good morning

இயலாமைக் காரணத்தை உங்களது நல்ல
முயற்சியால் மாற்றுங்கள்! சோம்பலை நாளும்
உறுதியால் மாற்றுங்கள்! மற்றவை எல்லாம்
வெகுமதியாய் வந்துசேரும் இங்கு.

மதுரை பாபாராஜ்


பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பிய படம்


காலை வணக்கத்தை ஆங்கிலத்தில் செந்தமிழில்
நீலமலர்க் கூட்டமும் பச்சை நிறமேந்திக்
கோலமிகுப் பேரெழில் சிந்தும் இயற்கையும்
சாரமுடன் சொல்வதை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு
(அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:86)

பாறையில் நிற்கும் பறவையே! உன்பார்வை
யார்வரவைப் பார்க்கிறது? வந்த விருந்தினர்
போய்விட்டார் இங்கே வருவிருந்தைக் காண்பதற்கா?
 ஆர்வம் விருந்தோம்பல் தான்.

மதுரை பாபாராஜ்

Morning walk in Dubai....

சிங்கங்கள் மற்றும் புலிகள் கடற்கரையில்
தங்களின் எல்லைக்குள் காலாற கம்பீரம்
எங்களுக்கே என்றே நடைபோடும் காட்சியைக்
கண்டால் பிரமிப்பு சிலிர்ப்பு.

மதுரை பாபாராஜ்

Tuesday, February 25, 2020

நண்பர் எழில்புத்தன் அனுப்பிய கருத்தோவியம்

வாழ்க்கையோ கைரேகை போன்றது! மாறாத
சூழல் உடையது! அற்புத முத்திரையை
நாளும்  பதிவுசெய்வோம்!
வாழ்ந்திருப்போம் நேசிப்போம்!
வாழ்வின் சிறுபொழுதும்  வீணடிக் காமல்நாம்
பார்த்து கவனமுடன் நாளும் செயல்படுவோம்!
ஏனென்றால் காலம் விடுமுறை யற்றது!
காணும் கனவுக்கோ
காலா வதியில்லை!
மேலும் இடைநிறுத்தப் பொத்தான் கிடையாது!
வாழ்வை ரசிப்போம் மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

அவைப்பேச்சு!

பேச்சில் கருத்து வளமிருந்தால் கேட்பவர்கள்
பேச்சை ரசித்திருப்பார்!  பேச்சாளர்
ஆற்றலைப்
போற்றிப்  புகழ்ந்திருப்பார்! கூச்சலே பேச்சானால்
கேட்போர் முகச்சுழிப்பார் கூறு.

மதுரை பாபாராஜ்

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

கடுக்கனை வாங்கத்தான் நண்பருடன் சென்றேன்!
கடுக்கன் விலைகேட்டே மூச்சுத் திணற
கடுக்கன்னே வேண்டாம் எனச்சொன்னேன்! நண்பர்
இடுக்கண் களைவதாம்  நட்பு.

மதுரை பாபாராஜ்

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

நதிநீரில் நாரை மிதந்துவர, வானில்
நதிமீது நாரை பறந்துவர,விண்ணில்
கதிர்வட்டம் பார்க்க,மலைத்தொடர்
காட்சி
செதுக்குகின்ற காலை வணக்கத்தைக் கூறும்
நெறிபிறழா நட்பினை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பிய படம்

கண்கவரும் பூக்கள் வணக்கத்தை ஏந்திவந்த
பண்பு சுமந்துவரும் நட்பின் நறுமணத்தை
நன்கு ரசித்தோம் மகிழ்ந்தோம் வணங்குகிறோம்!
நன்றிசொல்லி வாழ்த்துகின்றோம் இன்று.

மதுரை பாபாராஜ்
வசந்தா
26.02.20

அருள்தாஸ் உன்பிரிவால்
நாங்கள்
ஏக்கத்தின் பிடியில்!

மதுரை
பென்னர்!
பழுத்த மரத்தில்
கூடுகட்டி வாழ்ந்தன
பறவைகள்!

திடீரென்று
பருவ மாற்றத்தால்
பறவைகள் கலைந்து
சென்றன!

எங்கெங்கோ சென்று
வாழ்ந்து வருகின்றன!

பல ஆண்டுகள் ஓடிவிட்டாலும்
தொடர்பு வானம்
அப்படியே இருந்தது!

மீண்டும்
2020 ஆம் ஆண்டு
பிப்ரவரி 22 ஆம் நாள்
பறவைகள் சந்தித்தன!

சில பறவைகளைக் காணவில்லை!
இயற்கையுடன் கலந்துவிட்டன!

அருள்தாஸ் என்ற பறவை
மதுரையிலேயே இருந்தும்
வரமுடியாத
நோய்த்தாக்கம்!

வாய்ப்பிருந்தவர்கள்
பார்த்தனர்!

எத்தனை பறவைகள்
நிரந்தரமாய்
மறைந்துவிட்டன!

இதோ! இன்று!
அருள்தாஸ்!
மேலும் ஒரு பறவை
உயிர்ச் சிறகை
விரித்துவிட்டது!
நம்மை விட்டுப்
பறந்துவிட்டது!

தேம்புகின்றோம் நாம்!

ஏக்கத்தின் பிடியில்
பாபாராஜ்


அருள்தாஸ்! அன்றிருந்து இன்றுவரை!

சிறுவனாக வாழ்ந்தபோது பக்கத்து வீட்டில்
துறுதுறு வென்று விளையாடிச் சீண்டும்
குறும்புத் தனங்களை எண்ணுகின்றேன் இன்று!
சிறுவன் பருவம் இனிப்பு.

நாமிருவர்  சுண்டுப் பலகை விளையாடும்
நேரத்தில் சுண்டுப் பலகை எடுத்தேதான்
வீட்டைப் பிரிக்கின்ற தட்டித் துளைவழியே
வேகமாகச் சென்றிடுவாய்! அம்மாவை நானழைத்து
வாகாக வந்திடுவேன் கேரம்போர்டைத் தந்திடுவாய்!
ஆகா நினைத்தால் சிரிப்பு.

காலம் பிரித்தாலும் பென்னரில் ஒன்றுசேர்ந்தோம்!
ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டம் எல்லாமே
ஊற்றெடுக்க அந்த இளமைப் பருவத்தில்
ஆடி முடித்தோம் இல்லற வாழ்வேற்றோம்!
ஓடி உழைத்தோம் உயர்ந்து.

கடமைப் பொறுப்பிலே காலம் கரைய
குழந்தைகள் வாழ்வை அமைத்துக் கொடுத்தோம்!
களத்தில் களைப்பு  முதுமை வயது
பலவித நோய்கள் சிகிச்சைகள் என்றே
அலைச்சலில் சென்றது வாழ்வு.

முதுமையின் தாக்கம் முடக்க முடக்க
தடுமாற்றம் தள்ளாட வைக்க முணங்கும்
கடுமையோ நேரடி வாய்ப்பைக் கெடுக்க
தொலைப்பேசி பேச்சிலே காலம் கரைய
பழையதைப் பேசிச்  சிரித்தோம் மகிழ்ந்தோம்!
அழைப்புவந்தால் சென்றிடலாம் என்று.

அருள்தாஸ் அழைப்பு வந்ததும்   சென்றாய்!
இருளில் தனிமை உணர்வை அடைந்தேன்!
அருளே! உனக்கின்று நாளை எனக்கே!
உருள்கின்ற காய்களில் ஒன்று.

மதுரை பாபாராஜ்
25.02.20





நண்பர் எழில் புத்தன் அனுப்பிய கருத்தோவியம்


உணர்வைத் தக்கவைத்து உழைத்துக் கொண்டே இருங்கள்!

கடலளவு துன்பங்கள் சூழ்ந்தாலும் உள்ளம்
உடையாமல் நம்பிக்கைப் பாலத்தைக் கட்டிக்
கடல்மீது நாமே நடப்பதே வாழ்வின்
மகத்துவம் காட்டும் அழகு.

மதுரை பாபாராஜ்

Monday, February 24, 2020


பேரன்களுக்கு வாழ்த்து!

பெறுநர்:
சுசாந்த்/ கோசல் / தர்சன்/ பிரசன்னா

பள்ளிப் படிப்பை நிறைவுசெய்து கல்லூரி
செல்லும் அடுத்த பருவம் மலர்கிறது!
பண்பும் பொறுப்பும் கடமையும் ஒன்றிணைய
நன்னெறி வாழ்க்கையில் நாளும் நடைபோடு!
என்றென்றும் பெற்றோரின் ஆசி வழிகாட்டும்!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

ஆசிகள் வழங்கும்
பாபா தாத்தா
வசந்தா பாட்டி
25.02.2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

தலைகீழாய்த் தொங்குகின்ற வாழைப்பூ மீது
தலைகீழாய்ப் பற்றிநிற்கும் இந்தப் பறவை
நிலையிலே ஏழைகள் வாழ்வை நகர்த்தும்
கலைசொல்லிக் காட்டுதோ  சொல்?

மதுரை பாபாராஜ்

நடைபாதை நடப்பதற்கே!

நடைபாதை மக்கள் நடப்பதற்கே என்றே
நடைபாதை மீது அறிவிப்பு கண்டேன்!
நடைபாதை மீதே கடைகள் பொருள்கள்
அடைத்துவைத்த காட்சி! இதனுடன் இந்தக்
கடமை அறிவிப்புக் கேற்ப  நடக்க
இடமெங்கே? மக்கள் நடப்பதெங்கே நாளும்?
நடக்க இடம்கொடுத்தால் நன்று.

மதுரை பாபாராஜ்

Sunday, February 23, 2020

பகுத்தறிவே மெய்!

எண்சாண் உடலுக்குள் என்னென்ன அற்புதங்கள்!
எண்ணங்கள் கோடிகோடி! ஆற்றல்கள் கோடிகோடி!
பண்புகள்  கோடிகோடி! பக்குவங்கள் கோடிகோடி!
நன்கு பயன்படுத்தி வாழ்ந்தால் உயர்வுண்டு!
கண்டபடி வாழ்ந்தால்  பயனில்லை! தாழ்வுண்டு!
உந்தன் பகுத்தறிவே மெய்.

மதுரை பாபாராஜ்

பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பிய படம்

சிவப்பு மலர்களுடன் பச்சை இலைகள்
உவப்புடன் காலை வணக்கத்தைக் கூறும்
நிலைகண்டேன் நன்றி நவில்கின்றேன் இன்று!
வளர்கின்ற நட்பினை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா

துள்ளித் திரிந்த இளமைப்  பருவமெங்கே?
தள்ளாடி நிற்கும் முதுமைப் பருவமிங்கே!
வெள்ளை நரைமுடியும்
பக்குவப் பார்வையும்
கொள்ளை அழகென்று கூறு.

மதுரை பாபாராஜ் இணையர்

கவிதை 2

நம்பிக்கை!

தலைகீழாய்த் தொங்குகின்ற வாழைப்பூ மீது
தலைகீழாய்ப் பற்றிநிற்கும் இந்தப் பறவை
வழுக்கி விழுமோ? விழும்நிலை வந்தால்
பறந்துவிடும் பத்திரமாய்த் தான்.

மதுரை பாபாராஜ்

Saturday, February 22, 2020

பிடிவாத குணம்!

எதிர்மறைச் சிந்தனைச் சொல்லை இங்கே
புதிரவிழ்க்கும் நேர்மறைச்  சாதனையாய் மாற்றி
அறிவியல் முத்திரை தன்னைப் பதித்தார்!
அறிஞர்கள்  ஞானிகள் இங்கு.

மதுரை பாபாராஜ்

நன்னெறி

நன்னெறியை மறவாதே!

கண்டதே காட்சியென்றும்  கொண்டதே கோலமென்றும்
எண்ணித்தான் வாழும் இளைய தலைமுறை
என்ன விரும்புகின்றார் என்றே புரியவில்லை!
நன்னெறியில் வாழ்ந்தால் சரி.

மதுரை பாபாராஜ்

Friday, February 21, 2020

கடிவாளம்

ஒவ்வாது!

பிடிமானம் இல்லாத மாடியில் வாழ்தல்
கடிவாளம் இல்லா குதிரையில் போதல்
கொடிக்கம்பம் இன்றிக் கொடியேற்றப் பார்த்தல்
நடைமுறைக் கொவ்வா துணர்.

மதுரை பாபாராஜ்

உயரம் தாண்டுதலே வாழ்வு!

வாழ்வின் இயல்பை எழுதலாம் சொல்லலாம்!
வாழ்வில் அதனைச் சந்தித்துச் செல்வதோ
கோலால் உயரத்தைத் தாண்டுதல் போலாகும்!
கோலுடையக் கூடாது! தாண்டவும் வேண்டும்!
வாழ்க்கை புரியாப் புதிர்.

மதுரை பாபாராஜ்

பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பிய படம்

பூத்த மலர்சொல்லும் காலை வணக்கத்தில்
ஊற்றெடுக்கும் நட்பை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்!
ஏற்றமிகு எண்ணத்தால் காலை வணக்கத்தைப்
போற்றி அனுப்புவதை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

குப்பாயம், கண்ணாடி, தாடி உருவத்தில்
அப்பப்பா பேரன் சுசாந்தே! அருமைதான்!
நற்றமிழ்போல் வாழ்க படித்து, வளர்ந்து!
பெற்றோரின் ஆசிகள் உண்டு.

பாபா தாத்தா
வசந்தா அம்மா( பாட்டி)

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

செம்மலர்க் கொத்து விடியல் வணக்கத்தை
அன்புடனே ஏந்தி மணங்கமழக் கொண்டுவந்த
பண்பார்ந்த நட்பினை வாழ்த்தி மகிழ்கிறேன்!
வண்டமிழர் சேகரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

பென்னர் நண்பர்கள் சந்திப்பு!

22.02.2020

நான்மாடக் கூடலில் பென்னர் நிறுவனத்தில்
ஆண்டாண்டு காலம் பணிபுரிந்த நண்பர்கள்
ஜெர்மானஸ் கூடத்தில் சந்திக்கக்
கூடுகின்றார்!
வாழ்த்துகின்றோம் உள்ளம் மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா

முப்பால்!

இப்பாலா? அப்பாலா? எப்பால் இருந்தாலும்
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வள்ளுவரின்
முப்பாலே வாழ்வியலைப் போற்றும் பொதுமுறையைத்
தப்பாமல் காட்டும் அறம்.

மதுரை பாபாராஜ்

தமிழ்நாட்டில் எங்கே தமிழ்?

தமிழ்ப்படம் என்பார்!தமிழ்ப்பெயர் இல்லை!
தமிழ்ப்பாடல் என்பார் ஆங்கிலம் துள்ளும்!
தமிழ்ப்பேச மாட்டார்!  தமிழ்நடிப்பு என்பார்!
தமிழப்பாடல் என்ற விளம்பரத்தைப் பார்த்தால்
தமிழ்ச்சொற்கள் ஆங்கிலத்தில் ஊடகத்தில் ஓடும்!
தமிழ்நாட்டில் எங்கே தமிழ்?

மதுரை பாபாராஜ்

அதிகார வரிசை

குறளமைப்பு! அதிகார வரிசை!

இவர்வைத்தார் என்றும் அவர்வைத்தார் என்றும்
எவரெவரோ வைத்த  கருத்துகளை வைத்தே
அவையில் முடிவிலா வாதங்கள் நாளும்!
எவரிங்கே எப்படி வைத்தாலும் வாழ்வை
இயக்கும் குறள்களைப் போற்று.

மதுரை பாபாராஜ்

ஏமாந்து நிற்பதேன்?

ஏமாறும் மாந்தர்கள் உள்ளவரை நாட்டிலே
ஏமாற்றும் மாந்தர்கள்  நாளும் இருப்பார்கள்!
ஊடகங்கள் காவல் துறையினர் எச்சரித்தும்
வேடதாரிக் கும்பலை நம்பித்தான் செல்கின்றார்!
ஏமாந்து நிற்பதேன் கூறு.

மதுரை பாபாராஜ்

Thursday, February 20, 2020

பென்னர் நண்பர்கள் சந்திப்புப் பாடல்!

22.02.2020

(திரைப்படப் பாடலை சற்றே திருத்தத்துடன்)

பசுமை நிறைந்த நினைவுகளே
பென்னரில் வாழ்ந்த பறவைகளே

பழகிக் கழித்த தோழர்களே
அவரவர் வாழ்க்கைக்கு செல்கின்றோம்

பசுமை நிறைந்த ....

துறைகளில் நமது திறமையைக் காட்டி
பணிபுரிந்தோமே(2)
நட்பில்  திளைத்தே காலம் முழுதும்
 சிரித்து மகிழ்ந்தோமே (2)
வரவுகளோடு செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே (2)
வாழ்க்கைத் துன்பம் மறந்துபோக வாழ்ந்து வந்தோமே
நாமே வாழ்ந்து வந்தோமே

பசுமை நிறைந்த ....

எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ (2)
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ (2)
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ (2)
உள்ளந் தன்னில் நினைத்து நினைத்து
மயங்கி வாழ்வோமோ
என்றும் மயங்கி வாழ்வோமோ

பசுமை நிறைந்த நினைவுகளே ....


பென்னர் நண்பர்கள் சங்கமம்!

22.02.2020 மதுரை ஜெர்மானஸ் ,காளவாசல்

நன்றி: ரமணி-- லிங்கராஜ்

தேரை இழுத்து நிலைக்குக் கொணர்தல்போல்
நீரிருவர் அல்லும் பகலும் உழைப்பதால்
தேரை நகர்த்தி இழுப்பதால் சாதனையை
ஊர்மெச்சும் என்றும் உணர்ந்து.

நட்பே வலிமை!

பென்னர் நிறுவனம் ஆலமரம்
நிழலில் எத்தனைக் குடும்பங்கள்!

ஒன்றாய்ச் சேர்ந்தே வாழ்ந்திருந்தோம்
குடும்ப உணர்வில் தழைத்திருந்தோம்

உரிமைக் காக குரல்கொடுத்தோம்
உறவுக் காக  கைகொடுத்தோம்

சுவரிருந் தால்தான் சித்திரத்தை
வரைய முடியும் உணர்ந்திருந்தோம்

உழைத்தவர் இங்கே ஆயிரந்தான்
பிழைத்தவர் இங்கே ஆயிரந்தான்

அலைகள் தோன்றி மறைவதைப்போல்
ஊழியர் வந்தார் சென்றார்கள்!

காலம் உருட்டிய காய்களாக
காலம் எங்களை உருட்டியதே

கூடுகள் விட்டே பறவைகள்
பறப்பதைப் போல பறந்துவிட்டோம்

இன்றும் நட்போ தொடர்கிறது
பென்னர் நட்பு மணக்கிறது

ஆண்டுகள் இங்கே சென்றாலும்
நாங்கள் தொடர்பைத் தொடர்கின்றோம்

பிரிந்த போது இருந்தமுகம்
இன்றோ எங்களுக் கில்லையே

அன்பும் நட்பும் மாறவில்லை
பென்னர் வாழ்வை மறக்கவில்லை

ஒவ்வொரு ஆண்டும் இதுபோல
கூடிப் பேச முனைந்திடுவோம்

ரமணி லிங்கா வெங்கடேஷ்தான்
இந்த வெற்றிக்கு வித்திட்டார்

வாழ்க வாழ்க பென்னர்தான்
வாழ்க வாழ்க நட்புதான்!

இருந்தார் என்ற வரம்புக்குள்
எத்தனை பேர்தான் சென்றுவிட்டார்

இங்கே இருக்கும் நாமெல்லாம்
அவரை வணங்கி வாழ்ந்திருப்போம்!

மதுரை நகரை வணங்கிடுவோம்!
ஏக்கத் தோடு பிரிந்திடுவோம்!

மதுரை பாபாராஜ்

பாதரசம்!

வாழ்க்கை  புரியாமல் பாதரசம் போல்விலகி
வாழும் நிலையெடுப்பார்! அன்றாட வாழ்க்கையின்
சூழ்நிலைகள் நாளும் தெரியத் தெரியத்தான்
வாழ்வில் விலகாமல் ஒட்டும் நிலையெடுப்பார்!
வாழ்க்கை உணர்த்தும் சிரித்து.

மதுரை பாபாராஜ்


உணரவைக்கும்!

என்னையோ நல்லவன் என்பார் இருக்கின்றார்!
என்னையே கெட்டவன் என்பார் இருக்கின்றார்!
என்மன சாட்சியே நீதி அரசராம்!
உண்மை உணரவைக்கும் இங்கு.

மதுரை பாபாராஜ்

அடுக்ககத்தில் புறாக்கள்!

Pigeons behind AC in apartment!

குளிரூட்டும் பெட்டிக்குப் பின்னால் புறாக்கள்
ஒளிந்துகொண்டு நாளும் முணுமுணுக்கும் சத்தம்
செவிகளில்  மோதும்! முகஞ்சுழிக்க வைக்கும்!
புவியில் அடுக்கக வீடுகளின் காட்சி
இவைதான்! மரங்களை வெட்டியதால் வந்த
நிலையோ இதுவே உணர்.

மதுரை பாபாராஜ்

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

மணிப்பொறியும் பூவும் விடியல் பொழுதில்
வணக்கத்தை அன்புடனும் நட்புடனும் கூறி
மனதில் மகிழ்ச்சியைத் தூவிய பண்பை
வணங்கியே நன்றியுடன் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

உ வே சா வாழ்க!

சங்க இலக்கியத்தை அச்சிட்டே நாமின்று
தங்குதடை இன்றிப் படிப்பதற்கே வித்திட்டார்!
எங்கெங்கோ சென்றேதான் பாடுபட்டுச் சேகரித்தார்!
அந்தத் தமிழ்த்தொண்டை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

Wednesday, February 19, 2020

பிறப்பொக்கும்!

சாதிமதம் பாராமல் வாய்ப்பை வழங்கிடுவோம்!
மேதினியில் தங்கள் திறமை, உழைப்பாலே
முன்னேறும் மாந்தரைப் போற்றி வரவேற்போம்!
மண்ணகத்தில் மாந்தர் பிறப்பாலே ஒன்றாவார்!
பண்பும் திறமையும்  வேர்.

மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

தட்டுக்குள் மஞ்சள், சிவப்புநிறப் பூக்களை
வட்டமாக வைத்து வணக்கத்தைச் சொல்லுகின்ற
நட்பிற்கும் அன்பிற்கும் நன்றியும் என்வாழ்த்தும்!
நற்றமிழ்போல் வாழிய நீடு.

மதுரை பாபாராஜ்

Tuesday, February 18, 2020

பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பிய படம்

அழகாக பூத்திருக்கும் ரோசா மலர்கள்
அழகான காலை வணக்கத்தைச் சொல்லும்
அழகில் விடிந்ததே நட்புடன் காலை!
உளங்கனிந்த நன்றியுடன்  வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

பெய்யெனப் பெய்யுமே பா!

உள்ளமெனும் வானம் திரட்டும் உணர்ச்சிகள்
நல்மழை மேகமாக ஒன்றும் நிலையெடுத்தால்
துள்ளிவரும்  பாத்துளிச் சொற்கள் நாடிவரும்!
பெய்யெனப் பெய்யுமே பா.

மதுரை பாபாராஜ்

நண்பர் பாலு இமயவரம்பன் பேரனுக்கு விருது வழங்கும் படம்

நட்பின் இருவிழிகள் பாலு  இமயமும்!
மட்டற்ற இன்ப மகிழ்ச்சியில் பாலுவின்
உற்றநண்பர் பேரனாம் ஆதினன் தன்விருதை
பெற்றே மகிழ்கிறான் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

Monday, February 17, 2020

குடி குடியைக் கெடுக்கும்!

குடித்துக் குடித்துக் குடிக்குள்ளே மூழ்கி
குடிக்கே அடிமையாய் மாறியே நோய்கள்
குடியேற சொல்வதைக் கேட்காமல் நாளும்
குடித்துக் குடியழிப்பார் கூறு.

மதுரை பாபாராஜ்

திருமதி ஜெயந்தி ஆனந் அனுப்பிய படம்

உங்களது எண்ணங்கள் உங்கள் தடைக்கற்கள்!
உங்களது அச்சங்கள்
உங்களின் எல்லைகள்!
உங்களது நம்பிக்கை
உங்கள் தளைகளாகும்!
ஒவ்வொன்றும் உங்களுக்குள் தான்.

மதுலை பாபாராஜ்

நண்பர் பெங்களூர் பென்னர் ரகுநாத் அனுப்பிய படம்

எந்த மணிக்கும் ஒலியில்லை மற்றவர்
வந்தே அந்த மணியை அடிக்குமட்டும்!
பண்ணில்லை பாட்டுக்கு!
மற்றவர் பாடுமட்டும்!
உந்தன் உணர்வை
மறைக்காதே! ஏனென்றால்
அந்த உணர்வுக்கோ இங்கே மதிப்பில்லை
மற்றவர் உள்ளம் உணருமட்டும்! வாழ்வியலின்
தத்துவ உண்மை இது.

மதுரை பாபாராஜ்

காற்று!

நன்றி: விக்கிபீடியா

வடக்கில் இருந்துவீசும் காற்றுதான் வாடை!
மேற்கில் இருந்துவீசும் காற்றுதான் கச்சான்!
கிழக்கில் இருந்துவீசும் காற்றுதான் கொண்டல்!
தெற்கில் இருந்துவீசும் காற்றுதான் சோழகம்
தெற்கில் இருந்துவீசும் மென்காற்று தென்றல்!
தென்மேற்கு காற்றுதான் சோழகக் கச்சான்!
தென்கிழக்குக் காற்றுதான் சோழகக்
கொண்டல்!


மதுரை பாபாராஜ்


நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

🙏தாய்ப்பறவை உள்ளுணர்வால் சேய்ப்பறவை வாயிலூட்ட
சேய்ப்பறவை உள்வாங்கித் தன்பசி யாறுகின்ற
தாய்மை உணர்வை வெளிப்படுத்தும் காட்சியில்
வேர்விடும் அன்பினை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

உதிக்கும் கதிரோனின் பின்னணியில் பூக்கள்
அதிகாலை நேரத்தைச் சொல்லி அசைந்தே
வணக்கத்தைக் கூறுகின்ற நட்பே அழகு!
வணக்கமுடன் தந்தேன்என் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் துபாய் வெங்கடேஷ் அனுப்பிய படம்

🙏உயர்ந்திருக்கும் கோபுரங்கள் எல்லாம் மனிதா!
உயர்வான எண்ணங்கள் உன்னை உயர்த்தும்
வளர்த்துக்கொள் என்றே உணர்த்தினாலும் மாந்தர்
உயர உணர்ந்தாரோ  சொல்?

மதுரை பாபாராஜ்

நண்பர் விஜயகுமார் அனுப்பிய படம்

வாய்மை வளமை இரண்டையும் காட்டுகின்ற
தூயவெள்ளைப் பூக்களோ பச்சை இலைகள்மேல்
நேயமுடன் காட்சிதர காலை வணக்கத்தை
காலத்தே தந்ததை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பிய படம்

கடற்கரை மீது சிவப்புநிற ரோசாக்கள்!
கடலின் விளிம்பில் கதிரோன் வரவு!
படரும் ஒளியோ விடியலைச் சொல்ல
படம்தரும் செய்தியை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்



A TO Z

Amity
Brings
Charm and
Delight!

Enmity
Fuels
Grudging and
Hostility!

Integrity
Justifies
Kindness and
Loyalty!

Magnanimity
Nurtures
Obedience and
Patience!

Quality
Reverberates
Serenity  and
Transparency!

Uniqueness
Values
Worthiness and
Xeniality!

Youth is
Zeal.

Babaraj

மருமகன் ரவி அனுப்பிய படம்

சொல்லில் மாசற்று இரு!

நேர்படப் பேசு! எதைச்சொல்ல வேண்டுமோ
தேர்ந்தெடுத்துப் பேசு! உனக்கெதிராய்ப் பேசுவதை,
பார்த்துப் புறணிபேசும்  பேச்சைத் தவிர்த்துவிடு!
வார்த்தை வலிமையை
உண்மையும் அன்புமுள்ள
ஈர்க்கும் திசையில் திருப்பு.

மதுரை பாபாராஜ்

காதலர் நாள் வாழ்த்துகள்!
மகள் சுபாவுக்கு அனுப்பியவர்
மருமகன்  ரவி!

14.02.2020

மலர்க்கொத்து!

மகளோ மகிழ மலர்க்கொத்(து) அனுப்பி
மனமுவந்தே காதலர்நாள் வாழ்த்தை இன்று
அனுப்பினார் எங்கள்  மருமகன்! நன்றி!
மனவாழ்த்தே அன்பின் உரு.

மதுரை பாபாராஜ்
வசந்தா

Saturday, February 15, 2020

திருமதி. ஜெயந்தி ஆனந்த் அனுப்பிய படம்

நடக்கும் பொழுது பெருங்கற்கள் நம்மை
நடைபாதை விட்டே ஒதுங்கவழி காட்டும்!
நடைபாதை மீது சிறுசிறு கற்கள்
சறுக்கிவிட்டுக் கீழே  விழவைக்கும் நம்மை!
நடையில் கவனமே காப்பு.

மதுரை பாபாராஜ்

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்


வண்ண மலரிதழ்கள்! வண்ணத்துப் பூச்சிகள்!
மென்மையாய்க் காலை வணக்கத்தை நட்புடனே
அன்பாய் உரைக்கின்ற பண்பை வணங்குகிறேன்!
நண்பரை நன்றியுடன் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

Friday, February 14, 2020

திருமதி.ஜெயந்தி ஆனந்த் அனுப்பிய படம்

உங்கள் கனவைத் தரம்தாழ்த்தி மெய்யுடன்
இங்கே பொருத்தும் முயற்சியைக் கைவிடுங்கள்!
நம்பிக்கை தன்னைத் தரமுயர்த்தி உங்களது
எண்ண இலக்குடன் நீங்கள் பொருத்துங்கள்!
என்றும் உழைப்பே உயர்வு.

மதுரை பாபாராஜ்



நண்பர் இமயத்திற்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

15.02.2020

வெள்ளைப் பறவைகள் பின்னணியைச் சித்தரிக்க
வெள்ளை மனங்கொண்ட  நண்பர் இமயமோ
உள்ளத்தைக் கொள்ளைகொள்ள முன்னணியில் பார்க்கின்றார்!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.

மதுரை பாபாராஜ்
வசந்தா

எடுப்பார் கைப்பிள்ளை!

எடுப்பார்கைப் பிள்ளையாக வாழ நினைத்தால்
எடுத்ததற் கெல்லாம் அடுத்தவரைக் கேட்போம்!
அடுத்தவர் சொல்வதே வேதவாக் காகும்!
தடுமாற்றம் வாழ்வாகும்! சிந்தனைக் கூட்டில்
அடுத்தவர் ஆதிக்கம் கூடும்! அறிவை
அடகுவைத்து வாழ்வோம் உணர்.

மதுரை பாபாராஜ்

வேடிக்கை பார்!

நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும்
நடைமுறை வாழ்க்கை மனிதனாக மாறு!
விடைகளைத் தேடி வினாவைத் தொடுத்தால்
கிடைப்பது ஏமாற்றந் தான்.

மதுரை பாபாராஜ்

கடமையே கடவுள்!

வழிபட்ட போதும் வழிபடாத போதும்
பழிவந்து சேராது! எல்லோரும் தங்கள்
கடமையை நாளும் உணர்வுடன் செய்தால்
கடவுள் வழிபாடு தான்.

மதுரை பாபாராஜ்

உன்சுமை!

எண்ணற்ற கோயிலுக்கு எப்படித்தான் சென்றாலும்
உன்வாழ்வில் என்ன நடக்கும்? நடந்தேறும்!
இங்கே நடப்பதை யார்தடுக்கக்  கூடும்சொல்?
உன்சுமை  உன்னோடு தான்.

மதுரை பாபாராஜ்

கருத்து: திருமூலர் பாடல்

வதந்தி!

பார்வையற்றோர் யானையைத் தொட்டே
காதுகளை,
தூற்றும் முறமென்றார், காலை உரலென்றார்
வாலைத் துடைப்பமென்றார்,  நீண்ட
துதிக்கைக்கு
ஈடாய் உலக்கையென்றார், கோல முதுகையோ
மாமலை யென்றார்கள், கொம்பான தந்தத்தை
ஆகாகா தண்டென்றார்  தூண்டும் வதந்திகளை
நாடறிய இப்படித்தான் மக்களே நம்புகின்றார்!
ஏடறிய சொன்னேன் முயன்று.

மதுரை பாபாராஜ்


Wednesday, February 12, 2020

குறள் 848:

ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.

கலைஞர் உரை:

சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத  நோயாகும்.

இப்படியும் மாந்தர்!

சொன்னாலும் கேட்கமாட்டார்; தன்னால் புரியாது!
இந்த நிலையுள்ள மாந்தருக்கோ என்றென்றும்
அந்த நிலையே வாழ்க்கை முழுவதும்
நின்று நிலைக்கின்ற நோய்.

மதுரை பாபாராஜ்






குறள் 27:

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு

கலைஞர் உரை:

ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்

புலனடக்கம்!

வாய்மூடி கண்மூடி கேட்கும் செவிமூடி
ஊர்ந்துவந்து தூண்டும் மணம்நாடா மூக்குமூடி
பார்ப்பதற் கெல்லாம் அலையாத மெய்மூடி
வாழ்ந்தால் மனிதன் மனிதம்  தழைத்திருக்க
வாழ்வாங்கு வாழ்ந்திருப்பான்  பார்.

மதுரை பாபாராஜ்

வந்துகொண்டே இருப்பார்கள்!

கவிஞனுக்குப் பட்டம் கொடுத்துவிட்டால் போதும்
புவியெது? வானமெது? என்றறி யாமல்
பறந்திருப்பான்  காகிதப் பட்டமாக நாளும்!
உறங்கமாட்டான் இந்தச் சமுதாயக் கேட்டை
விடமாட்டேன்! சீர்திருத்திப் பார்க்கும் கடமை
நடமாடும் வீரனென்பான்! நெஞ்சை நிமிர்த்தி
களமாட முந்திநிற்பான்! ஆண்டுகள் ஓடும்!
தொடங்கிய அந்த இடத்திலேயே நிற்பான்!
முடங்கித் தவிப்பான்! முயற்சி அயரும்!
நடமாட்டம் தள்ளாடும்! அங்கே இவன்போல்
தடம்பதிப்பேன் என்ற முழக்கம் அரும்பும்!
அடப்போப்பா! என்பான் சலித்து.

மதுரை பாபாராஜ்

மனிதத் தேனீ ரா.சொக்கலிங்கம் அவர்களுக்குப் பிறந்தநாள்
வாழ்த்துப்பா!

13.02.2020

எண்ணற்ற நற்பணிகள் ஆரவார மில்லாமல்
என்றென்றும் செய்துவரும் பண்பாளர் சொக்கலிங்கம்
பொன்மன இல்லத்  தரசி அலமேலு
என்றும் துணையிருக்க அன்புமகன் இராம்குமார்,
அன்னையுடன் வாழ்வாங்கு வாழ்க
அவனியிலே!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

வாழ்த்தும் இதயங்கள்
மதுரை பாபாராஜ்-- வசந்தா
மற்றும் குடும்பத்தார்

குறள்:

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்
(அதிகாரம்:வெகுளாமை குறள் எண்:306)

கலைஞர் உரை:

சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.


அற்புதமா? அற்பமா?

எத்தனை அற்புதப் பண்புடன் வாழ்ந்தாலும்
அத்தனையும் அற்பமாகும் சீறும் சினம்மட்டும்
சற்றும் குறையாமல் வாழும் நிலையெடுத்தால்!
அற்பத்தால் அற்புதம் பாழ்.

மதுரை பாபாராஜ்


மனைவி-- பெற்றோரை வாழவைப்போம்!

நம்பிக் கரம்பிடித்து வந்தவளை வாழவைப்போம்!
நம்மைக் கரம்பிடித்து வாழவைத்துப் பார்க்கின்ற
பெற்றோரை நன்றியுடன் வாழவைப்போம் நாள்தோறும்!
இப்படி இல்லறத்தைப் போற்று.

மதுரை பாபாராஜ்

Tuesday, February 11, 2020

ஏணி

ஏணி ஏணியாகவே!

கல்வியைக் கற்றுத் தருகின்ற ஆசிரியர்
எல்லோரும் ஏணிகளாய்த் தங்கிவிட ஏணிகளால்
பல்முனை ஆற்றல் வளர்த்தவர்கள் ஏறித்தான்
நல்லவராய் வல்லவராய் முன்னேறி எங்கெங்கோ
இவ்வுலகில் மாற்றமுடன்  வாழ்கின்றோம் நாள்தோறும்!
பல்வேறு மாணவரை இங்கே உருவாக்கி
உள்ளம் மணங்கமழ வாழ்த்தி அனுப்புகின்ற
கள்ளமற்ற ஏணியானோர்  ஏணியாக நிற்கின்றார்
இவ்வுலகில் நாள்தோறும் தான்.

மதுரை பாபாராஜ்

Monday, February 10, 2020

நிலையான சொந்தம்!

சொந்தசொந்தம் வந்தசொந்தம்  என்றேதான் வாழ்க்கையில்
எந்தசொந்த மானாலும்  இங்கே நிலையில்லை!
பண்பால் விளைந்த புகழ்மட்டும் சொந்தமாக
என்றும் நிலைத்திருக்கும் இங்கு.

மதுரை பாபாராஜ்

திருமதி.ஜெயந்தி ஆனந்த் அனுப்பிய படம்

எழிலான ஒவ்வொரு காலைப் பொழுதும்
விழித்திடுவோம் நன்றி
உணர்வுடன்! இன்று
நடப்பவை எல்லாமே நன்றாய் நடக்கும்!
அகத்தில் எதிர்பார்ப்போம் நாம்.

Sunday, February 09, 2020

நண்பர் O.K அனுப்பிய காணொளி

[2/9, 3:53 PM] Oksirnew: Fish eat birds.
The sea off the Republic of Seychelles  is calm. Suddenly a fish leaps out of the sea to feed the wuyou gull. Initially, the story of a fish eating a bird came only from a fisherman's story. In the absence of any photographic evidence, the director of the crew thought this was a worthwhile risk for a 30-year career. So the crew of four took 800 kg of filming equipment, which includes an anti-shake camera, came to a remote atoll in the Republic of Seychelles where it was shot. It took several weeks to finally capture the rare fish shot.
[2/9, 5:03 PM] Madurai Babaraj:

பறவைகள் தங்கள் இரைகளைக் கவ்வ
சிறகடித்துக் கீழிறங்கும் நேரத்தைப் பார்த்து
கடலலைக்குள் வந்தே பறவைமேல் பாய்ந்து
லபக்கென்றே மீனோ பிடித்து விழுங்கும்
கடற்காட்சி அற்புதம் தான்.

மதுரை பாபாராஜ்



நண்பர் லிங்கராஜ் அனுப்பிய காலை வணக்கம்

"MORNING COFFEE"
  In the JOURNEY OF LIFE,
    we pass pleasures and
        pain. There will be
        sunshine and rain:
There will be loss and gain.
      But we must learn to
*SMILE AGAIN and AGAIN*
Good Day & Good Luck.

காலைக் குளம்பி!

வாழ்க்கைப் பயணத்தில் இன்பத்தை,துன்பத்தை
நாம்கடந்து செல்வோம்!
ஒளியும் மழைப்பொழிவும்
காண்போம்! சிரிப்போம்!
 மகிழ்ந்து முகமலர்ந்து!
வாய்விட்டு நாம்சிரித்தால் நோய்விட்டுப் போகுமென்பார்!
வாழ்வின் இயல்பில் நட.

மதுரை பாபாராஜ்

Saturday, February 08, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

காலை வணக்கத்தை மஞ்சள் நிறப்பறவை
ஆழமான நட்புடனே
தந்தே மகிழ்கிறது!
தோழமை அன்பின் வெளிப்பாடே இப்பண்பு!
வாழ்த்துகிறேன் நண்பரை இங்கு.

மதுரை பாபாராஜ்

திருமதி ஜெயந்தி ஆனந்த அனுப்பிய படம்

எப்படிப் பேசவேண்டும் நாமென்று சொல்வதற்குக்
கற்பிக்க எந்த வகுப்புமில்லை!  ஆனாலும்
எப்படிப் பேசுகிறோம்  என்பதே நம்தரத்தை
முற்றும் கணிக்கும் உணர்.

மதுரை பாபாராஜ்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

மலைபோல் வளர்ந்திருக்கும் செல்வங்கள் எல்லாம்
கரைந்து கரைந்து மடுவாகிப் போகும்
நிலைவந்து சேர்ந்திடும் நோய்கள் தொடர்ந்தால்!
பழமொழி உண்மை உணர்.

மதுரை பாபாராஜ்

Friday, February 07, 2020

எனது விழிகள்/ கரங்கள்

எனது விழிகள்/ கரங்கள்

இரண்டு விழிகள் இரண்டு கரங்கள்
இயங்கும் நிலையைத் தனித்தனி யாக
இயக்கத் தொடங்கும் முரண்களைக்  கண்டேன்!
விலகியே நின்றால் இயக்கம் கலங்கும்!
இரண்டும் இரண்டும்  இணங்குதல் வாழ்வு!
முரண்பட்டு நிற்பதும் ஏன்?

மதுரை பாபாராஜ்

Thursday, February 06, 2020

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

இளமஞ்சள் வானில் கதிரோன் எழுச்சி!
தளும்புகின்ற தண்ணீர்!
சிவப்புநிறப் பூக்கள்!
வெளுப்புநிற வாத்து சிறகடிக்கும் காட்சி!
அருமை வணக்கத்தை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

திருமணநாள் வாழ்த்துப்பா!

இணையர் :
மருமகன் ரவி -- மகள் சுபாதேவி

பேரன்.          : R.S.சுசாந்த் ஸ்ரீராம்

நாள்: 07.02.2020

இருபதாண்டுகள்!  20

இணையற்ற இல்லறத்தில்  நல்லறத்தைப் போற்றி
இருபதாண்டு சாதனையில்
பல்வளங்கள் பெற்றே
பெருமையுடன்  வாழும்
இணையராக நீங்கள்
இருவரும் உள்ளத்தால்
அன்புடனே வாழ்க!
அருமை மகனுடன்
பல்லாண்டு வாழ்க!
அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு!

வாழ்த்தும் இதயங்கள்
மதுரை பாபாராஜ் -- வசந்தா

உடன்வாழ்த்தும் இதயங்கள்
எழிலரசன் -- சத்யபாமா
நிகில் அபிசேக்-- வருண் ஆதித்யா

பெரியவர் துரைசாமி திருவாசகம் விசாகையில் இருந்து அனுப்பிய படம்

எடுத்த முடிவில் பொறுப்புணர்வு வேண்டும்!
தொடுக்கும் அணுகு முறையில் வளைந்து
கொடுத்தே அனுசரிக்க வேண்டும்,! இதுவே
தடையற்ற வெற்றிக்கு வித்து.

மதுரை பாபாராஜ்
07.02.20

Tuesday, February 04, 2020

நிழல்!

மனைவியோ நோயில் படுத்துவிட்டால் நாளும்
கணவன் நிழலாக மாறவேண்டும்! இங்கே
மனைவிக்கே கண்ணிமையாய்  ஆகவேண்டும்! கண்ணே!
மனையறம் என்பதே இஃது.

மதுரை பாபாராஜ்

EsakkiRajan:

 *The man who never alters his opinion is like standing water, and breeds reptiles of the mind.*

*-Blake *


தன்கருத்தை மாற்றாத உள்ளம் படைத்தவர்கள்
மண்ணகத்தில் தேங்கிநிற்கும் தண்ணீரைப் போன்றவர்கள்!
தன்மனத்துள் பூச்சி புழுக்களை உற்பத்தி
செய்துவாழும்  அற்பர்கள் தான்.

மதுரை பாபாராஜ்

நீர்க்குமிழி!

இறுதிப் பயணத்தில் எப்படிப் போவோம்?
உறுதியாய் யாரிங்கே சொல்ல முடியும்!
சடுதியில் வந்தே சடுதியில் போகும்
உடலில் இருந்தே உயிர்.

மதுரை பாபாராஜ்

Monday, February 03, 2020

மருமகன் ரவி அனுப்பிய படம்

பணிக்குழுவில் நீங்கள் சிறந்தவர் என்று
கணிப்பதைக் காட்ட முயற்சிக்க வேண்டாம்!
குழுவிற்கு நீங்கள் சிறப்பென்று காட்ட
முயற்சித்தல்  என்றும் நன்று.

மதுரை பாபாராஜ்

மாத்திரையும் மாத்திரையும்!

தமிழில் எழுத்துக்கு மாத்திரை உண்டு!
தமிழின் உயிரோட்டம்  மாத்திரையில் என்றால்
தமிழின் வளமும் நலமும் பெருகும்!
மனிதன் உயிரோட்டம் மாத்திரையில் என்றால்
மனிதன் வளமும் நலமும்  குறையும்!
மனிதவாழ்வில்  மாத்திரை ஊறு.

மதுரை பாபாராஜ்


 யார் நீ?

தேடலைத் தேடினால்  தேடலின் உட்பொருள்
ஊடகக்  கூட்டுக்குள் இங்கே உலவுவதை
நாடறிய,  நீயறிய உள்ளம் உணர்த்திவிடும்!
தேடலுக்குக் காண்பாய் விடை.

மதுரை பாபாராஜ்

Sunday, February 02, 2020

நண்பர் IG திரு.சேகர் அனுப்பிய படம்

மரக்கிளையில் உட்கார்ந்து பார்த்திருக்கும் புள்ளே!
 பரபரப்புப் பார்வையின் உட்பொருள் என்ன?
பரந்து விரிந்துள்ள இந்த உலகில்
அவரவர்க்கு வாழ்க்கை இனிது.

மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி அனுப்பிய படம்

எல்லா விரல்களும் நீளத்தில் ஒன்றல்ல!
எல்லாம் வளைந்தால் சமமாக உள்ளன!
இவ்வுலக வாழ்வில் அனைத்துச் சூழலுக்கும்
மெல்ல வளைந்தே அனுசரித்தால் வாழ்க்கையும்
இவ்வுலகில் என்றும் எளிது.

மதுரை பாபாராஜ்

திருமதி ஜெயந்தி ஆனந்த் அனுப்பிய படம்!

வாக்குறுதி,கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்பு
ஊற்றெடுக்கும் நட்புக்குத் தேவையில்லை கண்மணியே!
நட்புக்குத் தேவையெல்லாம் நேர்மையும் நம்பகமும்
மட்டுமே என்றே உணர்.

மதுரை பாபாராஜ்

பேரன் நிகில் நண்பன் மோகித் அனுப்பிய படம்

குளத்திலே செந்தா மரைப்பூக்கள் காட்சி
உளங்கவர காலை வணக்கத்தைக் கூறி
தரமான நட்பைத் தெரிவிக்கும் பண்பை
உளமார நன்றியுடன் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்