Sunday, June 30, 2019

வலி!

உள்ளத்தில் ஓடும் உணர்ச்சிகளைச் சொற்களாக்கி
அள்ளித் தெளித்தேதான் ஆறுதலை நாடுகின்றேன்!
சொல்லி முடித்ததும்  ஒன்றும் தெரியாத
தைப்போல
மெல்ல நகர்ந்தேதான்  எந்தச் சலனமும்
இல்லாமல் சென்றால் இதுவரை சொன்னதில்
எள்ளளவும் உண்மையே இல்லையா? பொய்தானா?
உள்ளத்தைத் தைத்த கணைவலி போகவில்லை!
சொல்வாயா ஆறுதலை  நீ?

மதுரை பாபாராஜ்




Friday, June 28, 2019

கவிஞர்கள் சங்கமம்

28.06.19

இன்றைய தலைப்பு

நாற்காலி!

நாட்டிலும் வீட்டிலும் எங்கேநாம் சென்றாலும்
நாற்காலி இல்லா இடங்களே இல்லையென்பேன்!
ஆற்றல் மிளிரத் தச்சர் உழைப்பாலே
தோற்றம் பெறும் இது.

விளையாட்டில் கூட இசைநாற் காலி
களைகட்டிப் பார்க்கும்! குழந்தை முதலாய்
நரைவிழுந்த தாத்தாக்கள் பாட்டிகள் நாடும்
விளையாட்டுப் பொருளாகும் இங்கு.

ஆட்சியைக் கைப்பற்றி மக்களுக்குத் தொண்டாற்ற
நாற்காலி ஆசையே தேர்தலில் காரணமாம்!
நாட்டில் பணிநிறைவு செய்தபின் அன்றாடம்
வீட்டுக்குள் ஓய்வெடுப்போம் உட்கார்ந்து
பேசுவோம்!
காற்றாட சாய்ந்தால் மகிழ்வு.

இருந்த நிலையிலும் கைகொடுத்த நண்பன்!
இருப்பை இழந்தே இறந்த நிலையில்
ஒருவாறாய் உட்கார வைத்தே வணங்க
வருவோர்க்கு வாய்ப்பளிக்கும் நாற்காலி தானே!
பெருமிதம் நாற்காலிக் குண்டு.

மதுரை பாபாராஜ்

Thursday, June 27, 2019



மருதாணி!

கொழுந்து இலை
கொட்டப் பாக்கு
கலந்து அரைச்சுக்
கலைநயம் சிந்தவே
கைகளில் வரைந்திடுவோம்!

மருதாணி காஞ்சிபோனா
கையெல்லாம் செம்பவளம்
வண்ணமாக மாறிவிடும்
வலம்வந்து மகிழ்ந்திருப்போம்!

வசந்தா பாபாராஜ்

பேச வெறுப்பா?

என்னென்ன பேசினோம்! எப்படிப் பேசினோம்!
கண்ணாலே பேசினோம்! சைகையால் பேசினோம்!
இந்தநேரம் அந்தநேரம் இல்லாமல் பேசினோம்!
சின்ன இடையூறும் மாமலைபோல் தோன்றியதே!
அந்த அளவுக்குப் பேசினோம்! வேலைக்குச்
சென்றுவந்து வீட்டுக்குள் வந்தே அமர்வதற்குள்
அன்பைப் பொழிந்தே அடுக்கடுக்காய்ப் பேசித்தான்
இன்ப மகிழ்ச்சியில் ஒன்றிக் களித்தோமே!
இன்றெனக்கு வேலையில்லை! வாட்டும் முதுமையிலே
இங்கே வருமானம் நின்றுவிட்ட கோலத்தில்
நம்மைத் தனிமைச் சிறையிலே காலமோ
பொன்விலங்கைக் கட்டி முடக்கியதே! பேசுகின்ற
எண்ணம் உனக்கில்லை! என்னை வெறுக்கின்ற
வண்ணம் கொடுமையென்ன செய்தேன்? தெரியவில்லை!
என்னை உயிரென்றாய்! உயிரோட்டம் என்றுரைத்தாய்!
நம்பினேன்! நம்பினேன்! இன்றோ தவிர்க்கின்றாய்?
என்னை விலக்கிப் புறக்கணிக்கும் போக்கெடுத்தாய்!
அன்பே அனலானால் முள்ளானால்
என்செய்வேன்?
கண்ணீர் நெருப்பை விழுங்கி உயிர்துடிக்க
உன்நினைவில்  வாழ்கின்றேன்  நான்.

மதுரை பாபாராஜ்



மலைபோல் அமைதி ஏன்?

சுவரிடத்தில் பேசு பதிலொன்று கூறும்!
மரங்களிடம் பேசு பதிலொன்று கூறும்!
தரையிடத்தில் பேசு பதிலொன்று கூறும்!
இவையெல்லாம் கூறும் உணர்விருந்தும் ஏனோ
மலைபோல் இருக்கின்றார் இங்கு.

மதுரை பாபாராஜ்




Hand in hand!

Care and Control
Go hand in hand!
Fame and Blame
Go hand in hand!
Victory and Defeat
Go hand in hand!
Silence and Shout
Go hand in hand!
Sun and Rain
Go hand in hand!
Spring and Autumn
Go hand in hand!
Yes and No
Go hand in hand!
Team and Unity
Go hand in hand!
If go berserk
Grips slip from hands !

Babaraj

அலைகளின் ஆணை!

26.06.19

கடலலைகள் மேகத்தைத் தட்டி எழுப்பி
உடனடியாய் ஆவியாகும் நீரை முகர்ந்தே
சடசட வென்றே மழைபொழியச் சொல்ல
படபட வென்றே தமிழக மண்ணில்
மடமட வென்றே மழைபெய்த காட்சி
மகத்துவம் கண்டோம் மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

மண்ணில் வெண்ணிலவு!

பெண்ணின் புருவம் மழைத்துளியால் நனைந்ததால்
அங்கங்கே கண்ணைச் சிமிட்டித் திறந்ததால்
வெண்விழிகள் மண்ணகத்தில் வெண்ணிலவாய்க் காட்சிதர
அம்மா அழகோ அழகு.

மதுரை பாபாராஜ்

Wednesday, June 26, 2019

பட்டமரம்!

அற்புத மானவன் என்பார் சிலரிங்கே!
அற்பமான வன்தான் எனச்சொல்லும் மாந்தருண்டு!
குற்றமென்ன செய்தேன்? எனக்கே புரியவில்லை!
இப்படியா? அப்படியா? யார்சொன்ன போதிலும்
வற்றிவிட்ட ஏரிதான் நான்.

வற்றிவிட்ட ஏரிக்கோ என்றும் மதிப்பில்லை!
சுற்றிவிட்ட பம்பரம் நின்றால் மதிப்பில்லை!
கொட்டிவிட்ட பாலை எவரும் மதிப்பதில்லை!
எத்திவிட்ட பந்துக்கும் இங்கே மதிப்பிருக்கும்!
பட்டமரத் திற்கா மதிப்பு?

மதுரை பாபாராஜ்

Tuesday, June 25, 2019

பேசு!

இருக்கும் வரையில் மனம்திறந்து பேசு!
தருணத்தை விட்டால் இருக்கமாட்டார் நாளை!
இருப்பவர் இங்கே இருந்தவ ரானால்
இருப்பாரோ பேச அவர்?

மதுரை பாபாராஜ்

கவிஞர்கள் சங்கமம்!

போதை அடிமைகள்!

26.06.19

இதற்கடிமை! இல்லை அதற்கடிமை என்றே
எதற்கடிமை யானாலும் போதைக் கடிமை
சிதைத்துவிடும் நாளும் உடல்நலத்தை! மற்றும்
பதறவைத்தே உன்றன் குடும்பத் தாரைக்
கதறவைக்கும் மற்றவர் முன்னால்தான்! அய்யோ!
அடலேறே இப்பழக்கம் ஏன்?

மதுரை பாபாராஜ்

Monday, June 24, 2019

பெற்றோரே தெய்வம்!

பெற்றோரைப் பார்க்காமல் நாள்தோறும் கோயிலுக்குள்
சுற்றிவந்தே பக்தியுடன் நின்றே கடவுளைச்
சுற்றுவதில் எந்தப் பயனுமில்லை!  மாந்தரே!
பெற்றோரே தெய்வம் உணர்.

மதுரை பாபாராஜ்

குப்பைப் பிறவியா?

முதற்கட்ட வாழ்க்கை நினைத்தால் இனிக்கும்!
அதற்கடுத்த கட்டம் பரபரப்பின் உச்சம்,!
இதற்கடுத்த கட்டம் சுமையோ சுமைகள்!
இதற்கடுத்த வாழ்க்கை கடமை நிறைவு!
இதற்கடுத்த சூழல் தனிமைத் தவிப்பு!
எதற்கெடுத்தாலும் என்னை ஒதுக்கியே வைக்கும்
அகத்தின் உறவுகள் மற்றும் உயிரும்
முகத்தில் அறைகின்ற கோலத்தில் வாழ்க்கை!
நகரும் நாள்தோறும் இங்கு.

ஒப்பிட்டே ஒப்பிட்டே என்னை அவமதிக்கும்
ஒப்பீட்டை என்முன்னே என்னுயிரே செய்துவிட்ட
அப்பட்ட காட்சிகளே உள்ளத்தில் வந்துவந்தே
நிற்கவைத்து நாளும் துடிக்கவைத்துப் பார்க்கிறதே!
பத்தாண்டாய் என்னைத்தான் பந்தாடிப் பந்தாடி
எட்டி உதைத்து மகிழ்ந்தே சிரிக்கின்றார்!
அப்படி நானென்ன குப்பைப் பிறவியா?
மற்றவர் தங்கச் சுரங்கமா? அய்யகோ!
எத்தனை நாள்துடிப்பேன் நான்?

சாவே! விரைவிலே வந்து தழுவிக்கொள்!
தேடி வருவாய்! நடிக்கமாட்டாய்! அன்புடனே
ஓடி வருவாய்!  உறவிலே உண்மையுடன்
நாடி வருவாய்! எவருடனும் ஒப்பிட்டே
சாடமாட்டாய்! என்னைப் புறக்கணிக்கும் உள்ளமின்றி
ஆகாகா! வாராய் விரைந்து.

மதுரை பாபாராஜ்





பேசுவதை நிறுத்தியதேன்?

எவ்வளவு நேரந்தான் பேசாமல் உட்கார்வாய்?
உள்ளத்தில் ஊற்றெடுக்கும் எண்ண இயக்கங்கள்
எல்லாமே நின்றதோ? நேரிலே நானிருந்தும்
எள்ளளவும் பேசப் பொருளில்லை? என்னவளே!
சொல்லிப் பயனில்லை யே.

மதுரை பாபாராஜ்

பேச்சே பகை!

பேசியே நேரம் கழித்த இளமையெங்கே?
பேசப் பொருளின்றி ஏங்கும் முதுமையெங்கே?
பேசத் துணையிருந்தும் பேசாத வாழ்வின்று!
பேச முயன்றும் முகஞ்சுழிக்கும் போக்கிலே
பேசுகின்ற பேச்சே பகை.

மதுரை பாபாராஜ்


வளர்வதும் ஏன்?

உளைச்சல் அலையலையாய்த் தேடிவந்து தாக்கும்
நிலையெடுத்தால் நிம்மதி் தோன்றுமா கண்ணே?
களைகள் மலைபோல் வளர்வதைப் போல
உளைச்சல் வளர்வதும் ஏன்?

மதுரை பாபாராஜ்

வேலிக்குள் நிம்மதி!

வேலிக்குள் நிம்மதியாய் வாழ்ந்திருந்த காலம்போய்
வேலிதாண்டிச் சென்றதால் வேதனையில் வாழ்கின்ற
கோலத்தை ஏந்தும் கொடுமைக்கே உள்ளானோம்!
காலமே மாற்றவழி காட்டு.

மதுரை பாபாராஜ்

காட்சிப்பிழை!

கண்ணெதிரே காட்சிப் பிழைகள் அணிவகுத்துக்
கண்மயக்கம் கொள்ள அரங்கேற்றம் செய்கிறதே!
என்னுள்ளம் ஆயிரம் தேள்களின் தாக்குதல்போல்
புண்படும் வேதனையில் தான்.

மதுரை பாபாராஜ்

மறக்க முடியவில்லை!

நடந்ததை, சொன்னதை  நாள்தோறும் நானும்
மறக்க முயன்றாலும் உள்ளமோ அந்த
நிகழ்வுகளைக் கண்முன் சிறகடிக்க வைத்தே
குதறிக் குதறுவதேன் கூறு?

மதுரை பாபாராஜ்

எங்கே நிம்மதி?

நிம்மதியைத் தேடி அலைகின்றேன் நாள்தோறும்!
அம்மம்மா! முள்ளில் புரண்டு துடித்தால்தான்
நிம்மதி இங்கே வருமென்றால் புரள்கிறேன்!
நிம்மதியே வந்து தழுவு.

மதுரை பாபாராஜ்



திகைத்தேன்!

எதிர்பார்த்த திக்கிருந்தே எந்தக் கணையும்
எறியவில்லை யாரும்! எதிர்பாராத் திக்கில்
எறிகுண்டை வீசி நிலைகுலையச் செய்தார்!
வெடித்ததும் நின்றேன் திகைத்து.

மதுரை பாபாராஜ்

இயல்பு!

உற்றார் உறவினர்கள் சூழ்ந்தே இருந்தாலும்
உற்றதுணை யாக வருவதற்கோ சூழ்நிலைகள்
சற்றுமிங்கே ஒத்து வராமல் தடுத்துவிடும்!
இத்தரணி வாழ்வின் இயல்பு.

மதுரை பாபாராஜ்

Friday, June 21, 2019

சொல்!

கல்லுக்கும் ஈரமுண்டு! முள்ளுக்கும் அன்புண்டு!
வில்லுக்கும்  பாசமுண்டு! வாளுக்கும் நேசமுண்டு!
உள்ளத்தில் ஒன்றிணைந்த அந்த உயிருக்கேன்
எள்ளளவும் இஃதில்லை! சொல்.

மதுரை பாபாராஜ்

Tuesday, June 18, 2019

ஓரெழுத்துக் கவிதை

ஓரெழுத்துக் கவிதை!

பூவுக்குத் தேனுறவா? தேனுக்குப் பூஉறவா?
பூவுக்கு வண்டுறவா? வண்டுக்குப் பூஉறவா?
பாவுக்குச் சொல்லுறவா? சொல்லுக்குப் பாஉறவா?
ஆவுக்குப் பாலுறவா? பாலுக்கே ஆஉறவா?

காவுக்குத் தென்றலோ? தென்றலுக்குக் காஉறவோ?( சோலை)
கூதான் குயிலுறவோ? அந்தக் குயிலுக்குக்
கூஉறவோ?( கூவுதல்) கூவுக்( உலகம்) குறவே
இயற்கையோ?
தூவுக்குத்( வெண்மை) தூய்மை உறவுதானோ? தூய்மைக்கே
தூஉறவோ? பாலுறவோ? வெண்பஞ் சுறவுதானோ?

பேவுக்கு( மேகம்) வானுறவோ? வானுக்குப் பேஉறவோ?
நாவுக் குறவிங்கே வன்சொல்லா? இன்சொல்லா?
நேவுக்கே என்புறவோ? என்புக்கு  நேஉறவோ? ( அன்பு)
நூவுக்கு( யானைக்கு) நீள்துதிக்கை என்றும் உறவாகும்!

மதுரை பாபாராஜ்





பேச வெறுப்பா?

என்னென்ன பேசினோம்! எப்படிப் பேசினோம்!
கண்ணாலே பேசினோம்! சைகையால் பேசினோம்!
இந்தநேரம் அந்தநேரம் இல்லாமல் பேசினோம்!
சின்ன இடையூறும் மாமலைபோல் தோன்றியதே!
அந்த அளவுக்குப் பேசினோம்! வேலைக்குச்
சென்றுவந்து வீட்டுக்குள் வந்தே அமர்வதற்குள்
அன்பைப் பொழிந்தே அடுக்கடுக்காய்ப் பேசித்தான்
இன்ப மகிழ்ச்சியில் ஒன்றிக் களித்தோமே!
இன்றெனக்கு வேலையில்லை! வாட்டும் முதுமையிலே
இங்கே வருமானம் நின்றுவிட்ட கோலத்தில்
நம்மைத் தனிமைச் சிறையிலே காலமோ
பொன்விலங்கைக் கட்டி முடக்கியதே! பேசுகின்ற
எண்ணம் உனக்கில்லை! என்னை வெறுக்கின்ற
வண்ணம் கொடுமையென்ன செய்தேன்? தெரியவில்லை!
என்னை உயிரென்றாய்! உயிரோட்டம் என்றுரைத்தாய்!
நம்பினேன்! நம்பினேன்! இன்றோ தவிர்க்கின்றாய்?
என்னை விலக்கிப் புறக்கணிக்கும் போக்கெடுத்தாய்!
அன்பே அனலானால் முள்ளானால்
என்செய்வேன்?
கண்ணீர் நெருப்பை விழுங்கி உயிர்துடிக்க
உன்நினைவில்  வாழ்கின்றேன்  நான்.

மதுரை பாபாராஜ்



என்னவள் எங்கே?

என்னை நினைத்தேதான் என்னையே சுற்றிவருவாள்!
கொஞ்சுமொழி பேசிக் குலவிடுவாள்! அன்பிலே
எந்தன் எலும்பை உருக்கி உருகவைப்பாள்!
கண்டதும் துள்ளுவாள் வந்து.

கொஞ்சநேரம் பார்க்காமல் சென்றுவிட்டால்  தேடுவாள்!
அன்புடன்  கூப்பிடுவாள்  என்னைத்தான் பாசமுடன்!
இந்தப் பரபரப்பைப் பார்த்தேதான் மற்றவர்கள்
என்னென்ன கேலிபேசி் இங்கே  சிரிப்பார்கள்!
என்னவள் நாணுவாள் நின்று.

இப்படி வாழ்ந்தவள் இன்றேன் மாறிவிட்டாள்?
நற்றமிழே! நானோ மணிக்கணக்கில் என்னவளை
விட்டுவிட்டு நீங்கித்தான் செல்கின்றேன்! என்னவளோ
சற்றும் கவலையே இன்றி இருக்கின்றாள்!
பற்றற்று வாழ்கின்றாள் ஏன்?

இன்றிருக்கும் என்னவள் என்னவளே இல்லையே!
அன்றிருந்த என்னவளைத் தேடுகின்றேன் ஏங்குகின்றேன்!
சிந்தனையில் தேங்கிவிட்ட சித்திரத்தை எண்ணுகின்றேன்!
என்னுயிராய் என்னையே தன்னுயிராய் எண்ணியவள்
இன்றெங்கே? தேடுகின்றேன் நான்.

மாறிவிட்டாள்! மாற்றங்கள் ஏமாற்ற மாகத்தான்
வாடி வதங்கவைத்துப் பார்க்கிறதே! என்செய்வேன்?
கோடிமுறை சொல்லிவிட்டேன் கேட்க மறுக்கின்றாள்!
தூசியாக எண்ணுவதும் ஏன்?

 மதுரை பாபாராஜ்

வெற்றிடம் நோக்கி!

பரபரப்பாய் வாழ்க்கைப் படிகளில் ஏறி
தரைப்பரப்பைத் தொட்டதும் எல்லோரும் வாழ்த்தி
வரவேற்க இன்பம் மகிழ்ச்சி வளங்கள்
கரங்கொட்டி நின்றிருக்க மெய்மறந்தே நிற்போம்!
இளமைப் பருவம் கடமை முடிந்தே
தளர்நடை போடும் பருவத்தில் சோர்வு
சுரக்கும் முதுமையில் வாட்டும் தனிமைக்
கலக்கத்தில் முன்னேறப் பார்ப்போம் தயங்கி!
பரந்தவெளி மாறியே வெற்றிடம் காண்போம்!
பரபரப்பாய் மற்றவர்கள் எல்லாம் தளத்தில்
கரமசைத்தே ஓட நாமோ நமது
கரங்களைத் தூக்கிட மூச்சுவாங்கும்! அந்தோ
வரவேற்கும் வெற்றிடம் நம்மைத்தான் தூண்டி!
அயர்வுடன் சென்றிருப்போம்!  பேச்சுத் துணையோ
தயக்கமுடன் மெல்ல வரும்.

மதுரை பாபாராஜ்

இறுதியில் தனிமையே!

 இறுதியில் தனிமையே!

தனியாய்ப் பிறந்தோம்! தனியாய் வளர்ந்தோம்!
அணியணியாய்ச் சேர்ந்தே குடும்பம் அமைத்தோம்!
இனிமையாய்  இன்பம்! கசப்பாகத் துன்பம்!
முனைப்புடன் மாறிமாறி வாழ்க்கையில் தாக்க
அணைக்கும் முதுமைப் பருவம் தனியாய்த்
துணையின்றி நம்மைத் தவிக்கவைக்கும் இங்கே!
துணையும் துணைக்கு வரத்தயங்கும் வாழ்க்கை!
தனியே உலகில் பிறப்பும் இறப்பும்!
தனிமைத் துணையே துணை.

மதுரை பாபாராஜ்

Friday, June 14, 2019


 பரந்து கெடுக உலகியற்றியான்.     
                   
நடைபாதை ஓரம்  அழுக்குப் படிந்த
உடையணிந்து கொண்டு முகத்திலே மீசை,
அடர்த்தியான தாடி வளர்ந்திருக்கும் கோலம்!
கிடைக்காதா இங்கே உணவென்று  குப்பைக்
கிடங்கிற்குள் தேடித் துருவித்தான் பார்க்கும்
 கடையனைக்  கண்டேனே இன்று.

கண்மணியே! கற்கண்டே! செந்தமிழே! பொன்வண்டே!
என்றெல்லாம் கொஞ்சி மகிழ்ந்திருப்பாள் தாயன்று!
வந்தவழியும் வாழ்ந்த வழியும் இவனுக்கு
என்னென்ன இன்னலைத் தந்ததோ? அய்யகோ!
தந்ததுயார்? இக்கோலம் இங்கு?

வள்ளுவர் இப்படிக் கண்டதனால்  அன்றேங்கி
உள்ளம் பதைக்க பரந்து கெடுகவே
இவ்வுலகில் இந்தநிலை தந்தவன் என்றேதான்
துள்ளிக் கடிந்தாரோ  சொல்?

இன்பத்தில் துள்ளும் ஒருவர்க்கம்! பேரலைத்
துன்பத்தில் சிக்கித் தவிக்கும் ஒருவர்க்கம்!
இந்த இருவர்க்க பேதங்கள் நீங்கவேண்டும்!
அந்தநிலைக் காண்ப தறிவு.

மதுரை பாபாராஜ்

GREEN TRENDS EXPERIENCE!

HAIRCUT!

KUSHAL AT WORK!

White band tied
Around the neck!
Black shawl covered
From neck to legs!
Kushal gripped stylishly
The comb and scissors !
Started obeying his  commands!
To tune the customer hair!
What an amazing experience!
Finishing touches beautify the hair!
That is the real
Customer satisfaction!

Madurai Babaraj
Customer
9003260981


 சித்தார்த்தன் புத்தரானார்!

கபில வத்து நாட்டிற்கு
சுத்தோதனந் தான் அரசரானார்!
அவரது அரசி மகாமாயி
அழகும் பண்பும் நிறைந்தவராம்!

கருவுற் றிருந்த மகாராணி
வசந்த காலப் பருவத்தில்
தனது பெற்றோர் நாட்டிற்குப்
பயணந் தன்னை மேற்கொண்டார்!

அழகிய லும்பி தோப்பினிலே
சால மரத்தின் கீழேதான்
குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்!
மகனைத் தானே பெற்றெடுத்தார்!

மீண்டும் திரும்பி அரண்மனைக்கே
வந்தார் மகிழ்ச்சி பொங்கத்தான்!
இளவர சனையோ சித்தார்த்தன்
என்ற பெயரில் அழைத்தார்கள்!

இந்தக் குழந்தை ஒருநாளோ
ஞானம் தேடிச்  சென்றேதான்
ஞானி யாகி புத்தராவார்!
சான்றோர் சொல்லி வாழ்த்தினரே!

படிப்படி யாக வளர்ந்தவனோ
பருவப் படியிலே ஏறியதும்
திருமணம் முடிக்க தந்தைதான்
விரும்பி ஏற்பாடு செய்திட்டார்!

அழகும் குணமும் நிறைந்திட்ட
அன்பரசி யான யசோதராவை
இளவர சனுக்கு மணமுடித்தார்!
இல்லற வாழ்க்கை தொடங்கியது!


அரண்மணை வாழ்வை அனுபவிக்க
இளவர  சனுக்கு வேண்டியதை
எல்லாம் தந்தே மகிழவைத்தார்!
பார்த்துப் பார்த்துச் சுற்றிவந்தார்!

பக்குவ மான இளவரசன்
வெளியே உலகைக் காண்பதற்கு
விருப்பப் பட்டான் தேடலுடன்!
ஒருநாள் சென்றான் காண்பதற்கு!

முதியவர் ஒருவர் தள்ளாடும்
நிலையைக் கண்டான் அங்கேதான்!
முதுமை வந்தால் மனிதர்கள்
இப்படித் தானோ எனவியந்தான்!

எலும்பும் தோலு மாகத்தான்
இருந்தவன் ஒருவனைக் கண்ணுற்றான்!
அழகு கம்பீரம் போயேதான்
சுருக்கம் விழுந்த நிலைகண்டான்!

இறந்து போன ஒருவனையோ
தோளில் சுமந்து சென்றிருந்த
காட்சியைக் கண்டே கலங்கிவிட்டான்!
சோகம் மனதைக் கவ்வியது!

நானும் மனைவியும் உறவுகளும்
ஒருநாள் இப்படித் தான்போவோம்!
முதுமை, நோய்களைத் தவிர்த்திடவோ
உலகில் நம்மால் முடியாது!

இவற்றைக் கண்ட இளவரசன்
இதயம் ஆழ்ந்து எண்ணியது!
அனைத்தும் மாயை என்றேதான்
உணர்ந்தான் நடந்தான் தனிமையிலே

இருபத் தொன்பது வயதினிலே
இளமை ததும்பும் பருவத்தில்
ராகுலன் பிறந்த நாளினிலே
அரண்மனை விட்டே ஏகிவிட்டான்!

அரச வாழ்க்கை பிடிக்கவில்லை!
வளங்கள் இன்பம் பிடிக்கவில்லை!
மனைவி மகனை விட்டுவிட்டே
ஞானம் தேடிப் புறப்பட்டான்!

அரச உடையைக் களைந்தெறிந்தான்!
துறவுக் கோலம் ஏந்திவிட்டான்!
துன்பத் திற்குத் தீர்வுகாண
நாட்டை விட்டே சென்றுவிட்டான்!

அலைந்தான் திரிந்தான் கயாசென்றான்!
அருகில் இருந்தது கிராமந்தான்!
இரந்தே வாழத் தகுந்த இடம்
இதுவென் றறிந்தே  தங்கிவிட்டான்!

போதி மரத்தின் கீழமர்ந்தான்!
தோலும் எலும்பும்  எஞ்சினாலும்
நகர மாட்டேன் இங்கிருந்து!
ஞானம் அடைய சூளுரைத்தான்!

முப்பத் தைந்து வயதினிலே
முழுமை யான ஞானத்தை
அடைந்தே புத்தராய் உயர்ந்திட்டான்!
அடக்கம் பொறுமை உருவானான்!

மதுரை பாபாராஜ்

 தனிமைச்சிறை!

உடலிலே சோர்வுடன் உள்ளமும் சோர்ந்தால்
கடல்நீர் வற்றிக் கடலே வறண்டதுபோல்
நடைதளரும்! தள்ளாடும்! அய்யோ! தனிமைச்
சிறையில் துடிக்கும்! சிறகு கழன்றே
பறக்கும் திறனிழக்கும் பார்.

மதுரை பாபாராஜ்

தமிழ்த்தேனீ மோகன் அய்யா அவர்களுக்கு இரங்கல்!

11.06.19

இலக்கியச் சோலையில் வீசிவந்த தென்றல்!
பலருக்கு ஊக்கத்தைத் தந்துவந்த ஏந்தல்!
குழந்தையிடம் கூட சினங்கொள்ளா தூயோன்!
இயற்கை அடைந்துவிட்டார் என்கின்ற செய்தி
கலங்கவைத்துப் பார்க்குதம்மா! என்ன கொடுமை?
உளத்தால் வணங்குகிறோம் நாம்.

மதுரை பாபாராஜ்
வசந்தா

புதுமனை புகுவிழா வாழ்த்து!

14.06.2019

பெறுநர்:

மருத்துவர் இணையர் :

மதுசூதனன்----வைதேகி

புதுமனையில் வீடு கட்டிப்
 புதுவீட்டில் இல்ல றத்தை
மது,வை தேகி இணையர்
 மகிழ்ந்தேதான்  தொடரு கின்றார்!

பெற்றோர் பெரியோர் ஆசி
 பெருமையைச் சேர்க்கும் வண்ணம்
உற்றார் உறவினர் சூழ
 உவகையில் திளைத்து வாழ்க!

மக்களைக் காப்ப தற்கு
 மருத்துவத் தொண்டை ஏற்றீர்!
அக்கறை கொண்டே நாளும்
 அவனியில் தொடர்ந்து வாழ்க!

இல்லறச் சோலை தன்னில்
 இன்பமாய் வாழ்க! வாழ்க!
நல்லறம் காத்து வாழ்க!
 நற்றமிழ்க்  குறள்போல் வாழ்க!

வாழ்த்தும் இதயங்கள்
மதுரை பாபாராஜ்
வசந்தா

வேரிழந்த மரம்!

சொல்லொன்றை வீசினாள்! அய்யகோ சொல்லல்ல
முள்ளாகி உள்ளத்தைத் தைத்துத் துடிக்கவைத்துச்
சுள்ளென்றே குத்திக் கிழித்தது!  தூக்கமோ
தள்ளி விலகியது! சாற்று.

வாளெடுத்துக் குத்திக் கிழித்திருந்தால் தூக்கமுண்டு!
வேலெடுத்தே பாய்ச்சும் நிலையெடுத்தால் தாங்குவேன்!
தேள்களை மேயவிட்டால் பார்த்தே ரசித்திருப்பேன்!
ஆழமாகச் சொல்லை இதயத்தில் பாய்ச்சிவிட்டாள்!
வேரிழந்த மரமானேன் நான்.

சொல்லெல்லாம் தீப்பிழம்பு! இப்படியுப் அப்படியும்
உள்ளப் பரப்பெல்லாம் பற்றிப் படர்ந்தேதான்
துள்ளித் துடிக்கவைத்து வேடிக்கை பார்க்கின்றாள்!
சொல்லி அடிக்கின்றாள் ஏன்?

மதுரை பாபாராஜ்
13.06.19


படைப்பும் படிப்பும்!

படைப்பாளர் இங்கே எழுதிவைத்துச் சென்றார்!
படைப்பைப் படித்தவர்கள் தங்கள் கருத்தைப்
படைப்பாளர் இப்படி அப்படி என்றே
உடைக்கின்ற போக்கு சரிதானா? சொல்லின்
கறைபடியா மெய்ப்பொருளைத் தந்தால் விவேகம்!
அதைவிட்டுத் தங்கள் வழியில் வளைத்து
நிறைகுறை காண்பதோ தீது.

மதுரை பாபாராஜ்

பயணத்தில்!

யார்முந்தப் போகின்றார்? வாழ்க்கைப் பயணத்தில்?
நீமுந்திப் போய்விட்டால் என்னை மதிப்பாரோ?
நான்முந்திப் போய்விட்டால் உன்னை மதிப்பார்கள்!
வான்மழை போல உதவும் உள்ளத்தால்
தூண்போலத்  தாங்கிப் பிடிப்பாய்க் குடும்பத்தை!
நானிருந்தால் மேலும் சுமையாகித் தத்தளிப்பேன்!
நீதானே எந்தன் உயிரோட்டம்! கண்மணியே!
நீயின்றி் நானில்லை! நானின்றி நீயுண்டு!
நீதானே என்னியக்கக் கூறு.

மதுரை பாபாராஜ்

Saturday, June 08, 2019

கொடுத்துவைத்த இல்லம்!

குழந்தைகள் வந்துபோகும் வீடு
அது
குதூகலம் தவழ்கின்ற கூடு!

இடையூறு இருந்தாலும் இன்பம்
அங்கே
நெருங்காது எக்காலும் துன்பம்!

விளையாடும் நேரத்தில் சண்டை
அய்யோ
கோபங்கள் கொந்தளிக்கும் விந்தை!

டூபோட்டுச் செல்வார்கள் உடனே
அட
போங்களென்றும் சொல்வார்கள் அங்கே!

ஐந்துமணித் துளிகளுக்குள் சேர்வார்
ஆகா
சண்டையை மறந்தேதான் மகிழ்வார்!

இப்படித்தான் குழந்தைகள் உள்ளம்
கண்ணே
நாள்தோறும் மகிழ்ச்சியிலே துள்ளும்!

குழந்தைகள்  பேசுவது  வெல்லம்
அந்த
மழலைக்கு ஈடுண்டோ சொல்லு?

மதுரை பாபாராஜ்






மறக்க முடியவில்லை!

என்னைப் பிடிக்கவில்லை! ஏனோ தெரியவில்லை?
என்னை நெருப்பிற்குள் தள்ளிச் சிரிக்கின்றாள்!
என்ன அணுகுமுறை இந்த அணுகுமுறை?
கண்ணீர் வழிந்தாலும் நானோ சிரித்தேதான்
இங்கே மறைக்கின்றேன் நொந்து.

என்மனதை எப்படித்தான் மாற்றிக் கணித்தாலும்
எங்கெங்கோ சுற்றி அலைந்தேதான் மீண்டுமிங்கே
என்னைத் தொடங்கிய புள்ளிக்கே கொண்டுவந்து
புண்படுத்திப் பார்ப்பதேன்சொல்?.

இப்படிக் கோலமோ? இல்லை இருக்காது!
அப்படிக் கோலமோ? சேசே! இருக்காது!
முற்றும் அழித்தாலும் முந்திவந்தே நிற்கிறதே
பட்டபாடு! என்செய்வேன்? நான்.

சென்றதெல்லாம் செல்லட்டும் என்றே புதிதாக
என்மனதை மாற்றி நினைப்பேன்! நினைத்ததும்
அங்கே புதிதாக  என்னைக் குதறுகின்ற
வண்ணம் துடிதுடிக்க வைக்கும் நிகழ்வொன்று
முன்வந்தே துன்பம் தரும்.

காலில் விழவேண்டாம்! காவடித் தூக்கவேண்டாம்!
கால்களை வாரி விடவேண்டாம்! உண்மையாய்
உள்ளத்தில் அன்பு மரியாதை தந்தாலே
நல்லவ ராவார் உணர்.


மதுரை பாபாராஜ்


வண்ணப்பார்வை தவிர்!

காய்தல் உவத்தலின்றி இங்கே கருத்துகளை
நேர்மை நடுநிலைப் பண்புகள் மீறாமல்
யாரிங்கே சொன்னாலும்  ஏற்கும் நிலைவேண்டும்!
பார்வையில் வண்ணமேன் கூறு?

மதுரை பாபாராஜ்

Thursday, June 06, 2019

நண்டும் உள்ளமும்!

வளைதேடி ஓடுகின்ற நண்டும், வாழ்வின்
உளைச்சலை விட்டே அமைதியைத் தேடி
அலைபாயும் உள்ளமும் ஒன்றே! ஆனால்
வளைகிடைக்கும் நண்டுக்கே! உள்ளத் திற்கோ
உளைச்சல் அலைபோல மாறிமாறி வந்து
கலங்கவைக்கும் நித்தமும் தான்.

மதுரை பாபாராஜ்

மேகவிதைப்பு!

CLOUD SEEDING!

கார்மேகக் கூட்டத்தை மேக விதைப்பாலே
நேராய் உருவாக்கி வான்மழையை உண்டாக்கிப்
பார்க்கும் அறிவியலில் நன்மையும் தீமையும்
பாரிலுள்ள நாட்டிற்கே உள்ளதென்று கூறுகின்றார்!
வேதிப் பொருள்களால் தோல்நோய்கள்
மொய்க்குமாம்!
வான்மழையை உண்டாக்க  மற்றும் தடுப்பதற்கு
மேக விதைப்பைப் பயன்படுத்தும் நாடுகளே!
தாகத்தில் வாழும் நாடுகளில் நீந்திவரும்
மேகத்தை வக்கிரத்தால் இங்கே தடுக்கவேண்டாம்!
மேக விதைப்பை உயிர்காக்கும் வான்மழையைத்
தூண்டப் பயன்படுத்த லாம்.

மதுரை பாபாராஜ்

What a world is this?

Care is misunderstood as control!
Affection as possessiveness!
Pure love as perversion!
Honesty as hostility!
Smile as vengeance!
Sweet words as piercing dagger!
Generosity as  opportunism!
Harmony as hatred!
Forgetting and forgiving  as cowardice!
Positive as negative!
Negative as positive!
What a world is this?

Madurai Babaraj

தேரோட்டம்!

யார்வந்த போதும் வரவில்லை என்றாலும்
தேரை இழுப்பவர்கள் யாரெனினும்  தேரோடும்!
வாழ்க்கைத்தேர் அப்படியே! ஓடும் இயல்பாக!
வாழ்க்கையை வாழவழி காண்!

மதுரை பாபாராஜ்

Wednesday, June 05, 2019

அவமானம்!

வருமானம் இல்லை உயிரும் வெறுக்கும்!
துருப்பிடித்துப் போன பொருளும் ஒதுக்கும்!
உருவின் நிழலும் பகைத்து நகைக்கும்!
பெருத்த அவமானம் வாழ்வு.

புரண்டு படுத்தாலும் தூக்கமில்லை! தூங்கக்
கரமிரண்டை வைத்தாலும் கண்கள் மறுக்கும்!
உலகமே தூங்கும்! வருமான மற்ற உள்ளம்
கலக்கத்தில் வாழும்  துவண்டு.

மருமகள் வினோவுக்கு நன்றி!

வலப்பக்க சட்டை கிழிந்ததை முயன்றே
தையல் இயந்திரத்தில் தைத்தார் வினோதான்!
தையலே! நேர்ப்படுத்தி தந்ததற்கு நன்றி!
முயற்சியைச் செந்தமிழால் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

நா

முப்பத் திரண்டு முரடருக்கும் அஞ்சாமல்
ஒற்றைநா போடும் சிலம்பாட்டம்
முப்பத் திரண்டை  அஞ்சவைத்தே வென்றுவிடும்!
அப்பப்பா மங்கையின் நா.

மதுரை பாபாராஜ்

இதுவரை சென்றுவந்த சுற்றுலா!

பயணஏற்பாட்டாளர்கள்!

துபாய்(  குடும்பச் சுற்றுலா: மகள்,பேரன் சுசாந்த்துடன் மருமகனைப்பார்க்க)
கர்நாடகா-- மாருதி்டிராவல்ஸ்( பக்திச்சுற்றுலா)
மலேசியா-- சிங்கப்பூர்( தம்பி்கெஜா தலைமை- மகன்,மருமகள், பேரன் நிக்கிலுடன் இன்பச் சுற்றுலா) அந்தமான்--  ஸ்ரீ டிராவல்ஸ்- இன்பச் சுற்றுலா
டில்லி,குளுமணாலி-- வாகா எல்லை--முருகன் டிராவல்ஸ் இன்பச் சுற்றுலா
தாய்லாந்து--ஸ்ரீ டிராவல்ஸ்- இன்பச்சுற்றுலா
டில்லி-- கொல்கத்தா--  நாதுள்ளா கணவாய்-- முருகன் டிராவல்ஸ் இன்பச் சுற்றுலா

கவிதை

எந்தெந்த நாட்டுக்கோ சுற்றுலா சென்றுவந்தோம்!
கண்கள் ரசித்திருந்த காட்சிகளில் மெய்மறந்தோம்!
எண்ணற்ற மாந்தர்கள் கள்ளங் கபடின்றி
அங்கங்கே நட்பாய்ப் பழகிய பாசத்தில்
அம்மா! மகிழ்ந்திருந்தோம்! அந்த அனுபவங்கள்
எங்களை ஆட்கொள்ள இன்றும் நினைக்கின்றோம்!
இந்தப் பிறவியில் நாங்கள் கொடுத்துவைத்தோம்!
இங்குநாங்கள் உள்ளவரை நெஞ்சில் சுமந்திருப்போம்!
என்றுநாங்கள் சந்திப்போம் சொல்.?

மதுரை பாபாராஜ்
வசந்தா

Monday, June 03, 2019

யாரோ?

உணர்ச்சியைத் தந்த  தாரோ?
 உளைச்சலைத் தந்த தாரோ?
அனலினில் உருட்டிய தாரோ?
 அலைகளில் புரட்டிய தாரோ?

இருட்டிலே பூட்டிய தாரோ?
 இரும்பினைச் செருகிய தாரோ?
உருவினைக் குலைத்த தாரோ?
 உளத்தினைத் துளைத்த தாரோ?

அமைதியைக் கலைத்த தாரோ?
 அமளியை விதைத்த தாரோ?
சுமைகைளை ஏற்றிய தாரோ?
 சுடச்சுட சுட்டது  யாரோ?

படுவதை ரசிப்ப தாரோ?
 பட்டதன் காரண  மாரோ?
சுடுமணல் வீசிய தாரோ?
 துடிப்பதை ரசிப்ப தாரோ?

மதுரை பாபாராஜ்
03.06.19