Tuesday, December 31, 2019

வசந்தாவின் தந்தை தெய்வத்திரு ஆதிகேசவன் நினைவுநாள்!

வணங்குகிறோம்!

நாள்: 01.01.2020

நேர்மையும் வாய்மையும் வாழ்வியலாய்ப் போற்றித்தான்
தூய்மை மிளிர வாழ்ந்தவர் என்றேதான்
தாரணியில்  இங்கே புகழ்பெற்று வாழ்ந்தவர்!
தாள்தொட்டே நாங்கள் வணங்கி நினைக்கின்றோம்!
வாழ்ந்தவரின் ஆசிகளே வேர்.

மதுரை பாபாராஜ்
வசந்தா

நடைமுறை!

நடமாட்டம் இங்கே தடுமாற்றம் ஆனால்
உடைமாற்றக் கூட இயலாமல் போகும் !
தடந்தோள்கள் கூட சுமையாகிப் போகும்!
மடைமாற்றம் கூட பயனற்றுப் போகும்!
நடைமுறை வாழ்க்கைதான்  இஃது.

மதுரை பாபாராஜ்

Monday, December 30, 2019

நிர்வாக ஆற்றல்!

சொல்வதைப் புண்படுத் தாமல் எடுத்துரைக்கும்
நல்ல அணுகுமுறை நிர்வாக ஆற்றலாகும்!
உள்ளம் துடிக்க உரைப்பதோ நல்லதல்ல!
உள்ளதை உள்ளபடி்சொல்.

மதுரை பாபாராஜ்

குடித்தால் குடிகெட்டுப் போகுமென்றே சொல்லி
குடிக்கவைக்க இன்று இலக்கினைத் தந்தே
மதுவிற்க ஊக்கம் அளிக்கின்ற காட்சி
படுமோச மாக்கும் உணர்.

மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

நுனிக்கொம்பில் ஏறிவிட்டேன் என்ற பெருமை
தொனிக்கின்ற பார்வை தெரிகிறது இங்கே!
இனியென்ன? காற்றென்னை வீழ்த்த நினைத்தால் 
துணிந்தே விரியும் சிறகு.

மதுரை பாபாராஜ்

யார் பொறுப்பு?

பரோட்டா பலவகையில் நம்மைக் கவரும்!
பரோட்டாவில் கொத்து பரோட்டா, பொறித்த
பரோட்டாவும், எண்ணெய் பரோட்டா, சைவ
பரோட்டாவும் நாவை நடனமாட வைப்பதாகும்!
பரோட்டா வகைகளில் இன்னுமிங்கே  உண்டு!
இரவில் விருந்துணவே இஃது.

இதனால் நமக்கு இரத்த அழுத்தம்
உடலில் செறிமான பாதிப்பு என்றே
விதவித மாகத்தான் நோய்கள் வருமாம்!
 இதைத் தவிர்க்கவேண்டு மாம்.

வீதிக்கு வீதி  கடைபோட்டு விற்கின்றார்!
சாதிமதம் பார்க்காமல் கூட்டமோ கூட்டமாய்
நாடியே உண்டு களிக்கின்றோம் நாளெல்லாம்!
பாதித்தால் யார்பொறுப்பு சொல்?

மதுரை பாபாராஜ்

தவச்சான்றோன் இரமணர் பிறந்தநாள் இன்று!

அருளாசி வேண்டியே வாழ்த்து!

30.12.19

திருச்சுழியில் முப்பதாம் நாளில் டிசம்பர்
இரமணர்  இங்கே பிறந்தார்! பக்திப்
பரவசத்தைப் பின்பற்றி ஆன்மிக நாட்டம்
பெருக்கெடுக்க வாழ்ந்தார் வளர்ந்து.

சிற்றப்பா வீட்டில் இறப்பு நிகழ்விலே
கற்றபாடம் நான்யார்? எனும்தேடல் ஊக்கத்தில்
உற்றார் உறவுகளை விட்டே அகன்றுவிட்டார்!
பற்றைத் துறந்தேதான் உண்மைத் துறவியாய்
வந்துவிட்டார்  அண்ணா  மலையாரின் கோவிலுக்கே!
இங்கே புரிந்தார் தவம்.

ரமணரோ ஆசிரம வாழ்க்கையை ஏற்றார்!
அமைதியான பார்வை அறவுரை என்றே
இமைப்பொழுதும் சோராமல் பேரருள் தந்தார்!
தனைவென்ற அந்தத் தவச்சான்றோன் ஆசி
தனைநாடும் பக்தியை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

Sunday, December 29, 2019

யாரும் உயர்வில்லை யாருமே தாழ்வில்லை!
யாரும் சமமுமில்லை!
ஆனால் தனித்தன்மை
எல்லோர்க்கும் உண்டிங்கே! ஒப்பிடத் தேவையில்லை!
நீங்கள் நீங்களே! நானிங்கே  நானேதான்!
ஏங்காமல் வாழ்வோம் உணர்ந்து.

மதுரை பாபாராஜ்

திருமதி.ஜெயந்தி ஆனந் அனுப்பியது
30.12.19

மென்மை குளிர்ச்சியாய் நீரைப்போல் நீயிருந்தால்
எங்கும் அனுசரித்து வாழ்க்கையில் வாழலாம்!
நீயோ உறுதியாய் பண்பில் கவர்ச்சியாய்
தூய்மையான வைரம்போல் இங்கே இருந்தாலோ
உந்தன் உணர்ச்சியுடன் யாரும் உரசமாட்டார்!
என்றும் அனுசரித்தல்  நன்று.

மதுரை பாபாராஜ்

குறளும் குழாயொலியும்!

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:335)


குறளும் குழாயொலியும்!

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:335)


குழாயைத் திறந்தேன் சுடுநீர்த் துளிகள்
துளித்துளி யாக விழுந்தது விக்கல்
ஒலியெழுப்ப அங்கே தயங்கித் தயங்கி
பலியாடாய்ப் பார்த்தேன் சிரித்து.

தொட்டி நிறைந்தே அறமுடன் கூப்பிடும்!
சற்றேநாம் சோம்பலுடன் தாமதமாய் நாம்சென்றால்
விக்கலும் வந்துவிடும்  நீர்வரத்து நின்றுவிடும்!
அக்கறையும் நேரமும் போற்று.

மதுரை பாபாராஜ்


நண்பர் வீஓவி இராமசாமி அனுப்பியது.
30.12.19

நீலவண்ண மென்மையான ரோசா மலர்களுடன்
கீழே படர்த்துள்ள முள்ளின் கிளைகண்டேன்!
வாழ்விலே இன்பம் மலரானால் துன்பமோ
கீழுள்ள முள்ளாய்  உறுத்தும் நிலையுண்டு!
வாழ்வில் இரண்டும் இயல்பு.

மதுரை பாபாராஜ்

பேரன் நிகில் நண்பன் மோகித் அனுப்பிய படம்:

மங்கல மஞ்சளில் சம்பங்கிப் பூக்களை
கண்கவரத் தட்டில் அடுக்கி நடுவிலே
வெண்மல்லி மொட்டுகள் வைத்தே வணக்கத்தைப்
பண்புடன் தந்த்தை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்
30.12.19

நண்பர் IG சந்திரசேகர் 30.12.19 ஆம் நாள் அனுப்பிய படம்

ஒற்றைக்கால் ஊன்றி தவம்செயினும் வான்கோழி
எக்காலும் தோகை மயிலாமோ செந்தமிழே?
எத்தகைய செம்மொழி என்றாலும் தாய்த்தமிழ்போல்
இத்தரணி மீதுண்டோ சொல்?

மதுரை பாபாராஜ்

காலை வணக்கம்!

விடியல் பொழுதின் இயற்கை இதழ்கள்
படிப்படி யாக மலர்ந்து மலர்ந்து
மகிழ்ச்சி மணம்வீச காலை வணக்கம்
அகங்குளிரத் தந்தேன் உவந்து.

மதுரை பாபாராஜ்

குறளுக்குக் கவிதை!

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:17)


பாற்கடலோ நீர்க்கடலோ வான்மழை பெய்கின்ற
ஆற்றல் அளவினைச் சார்ந்தே வாழ்கிறது!
ஆற்றல் வறண்டால் உலகே வறண்டுவிடும்!
நூற்கடல் கூறும் வழிபாடும் ஓய்ந்துவிடும்!
வான்மழையே வாழ்வின் உயிர்.

மதுரை பாபாராஜ்

Saturday, December 28, 2019

புதிதல்ல

புதிதல்ல இத்தகைய வாழ்வியல்!

பாத்திரத்திற் கேற்றாற்போல் தண்ணீர் வடிவத்தை
ஏற்கும் நிலைபோல இன்று குழந்தைகள்
அப்பாவும் அம்மாவும் வேலைபார்க்கும் சூழலுக்கே
அப்படியே மாறித்தான் வாழ்கின்றார் நாள்தோறும்!
இப்படித்தான் மாற்றம் உணர்.

அன்றும் இன்றும் என்றும்!

கட்டிடம், பள்ளி, விவசாயம், ஆலைகளில்
இத்தகைய வேலைக்கு ஆண்பெண் இருவரும்
பற்றுடன் சென்று பணிபுரிந்த கோலமுண்டு!
சுற்றத்தார் அன்னார் குழந்தைகளைப் பேணினார்!
எப்படியும் வாழ்விதுதான் இங்கு.

மதுரையில் அன்றுகண்ட காட்சி!

மதுரைமில் ஆலை! பகல்நேர வேலை!
குடும்பத்துப் பெண்கள்  அணியணி யாக
விறுவிறுப்பாகச் சென்றார்! குழந்தைகள் வீட்டில்
தனியாக அண்டைவீட்டார் பார்க்க வளர்ந்தார்!
தனிமனித தேவைக்கே வாழ்வு.

இன்று!

காலையில் போனால் இரவில் வருகின்றார்!
காலைமுதல் மாலைவரை பிள்ளைகள் வீட்டிலே!
தாத்தாவும் பாட்டியும் ஆயாவும் மாறிமாறி
ஏற்பார் பொறுப்புகளைத் தான்.

இருவர் வருமானம் வாழ்க்கையின் தேவை!
கருத்தாய்க் குழந்தைகள் இந்த நிலையைப்
புரிந்துகொண்டு நாளும் அனுசரித்து வாழும்
கலையறிந்தார் இங்கே உணர்.

மதுரை பாபாராஜ்

குழந்தைப் படங்களின் பெயர்கள்!

மொழி ஒரு சிக்கலே அல்ல!

நருட்டோ---சாக்கே--தக்கூரா---சின்சான்--டோரிமான்--டிடெக்டிவ்

குழந்தை இயங்கு படங்களோ நாளும்
பலமொழிகள் பேசி வருகிறது! நாட்டில்
குழந்தைகள் ஆர்வமுடன் பார்த்து ரசிக்கும்
களமாக மாறியது வீடு.

மொழிகள் கவலையே இல்லை! நடிப்பின்
தெளிவும் அசைவுகளும் போதும்,! ஜப்பான்
மொழிப்படம் பார்க்கின்றார்! கதையைப் புரிந்து
பெயர்களைச் சொல்கின்றார் இங்கு.

நாடுகளின் எல்லை மொழிகளின்  எல்லைகள்
கோடுகளைத் தாண்டி குழந்தை உலகமோ
ஏடுகளைத் தாண்டியே ஊடக வாழ்வினை
நாடுகின்றார் நாள்தோறும் இங்கு.

கதைபுரிந்தால் போதும்! மொழித்தேவை வேண்டாம்!
நடைமுறை வாழ்வில் குழந்தைகள் போக்கு
இதையொட்டிப் போக தலைமுறை மாற்றம்
எதையொட்டிப் போகுமோ சொல்.?

மதுரை பாபாராஜ்

நண்பர் திரு.பூரணசந்திரன் அனுப்பிய படம்

பூர்ணசந்ரன் தாத்தாவும் பாட்டியும் அன்பான
பேரக் குழந்தைகள் முத்தமிழ்போல் மூவருடன்
பாசப் பொழிவில் மகிழ்ச்சியுடன்  நிற்கின்றார்,!
நேசம் வெளிப்படவே தான்.

மதுரை பாபாராஜ்

28.12.19

Friday, December 27, 2019

நன்றி நன்றி நன்றி!

அமுதா-- நான்சி--வருண்--ஆகாஷ்-- கீர்த்தனா--சுசாந்-- நிக்கில்

26/27.12.19

குழந்தைகள் கூட்டம் விளையாடி சேர்ந்து
பலவாறாய் நாளும் உறவாடி தூங்கி
மகிழ்ந்திருந்த கோலத்தைக் கண்டே ரசித்தோம்!
அகமகிழ்ந்தார் எல்லோரும் இங்கு.

அன்பு மகளமுதா  புன்சிரிப்பு நான்சியும்
எங்களுடன் தங்கி மகிழ்ந்திருந்தார்! நாள்களோ
இன்னுமிங்கே நீளாதா என்றேங்கி பார்த்திருந்தோம்!
அன்புடன் மீண்டும் வருவோம் எனச்சொல்லி
இன்று புறப்பட்டார் இங்கு.


மதுரை பாபாராஜ்

நண்பர் லிங்கராஜ் அனுப்பிய படம்

தேநீர் துளசி எலுமிச்சை
மூன்றுடன்
கோப்பை ததும்பத் ததும்ப வணக்கத்தை
ஊற்றுகின்றார் லிங்கராஜ்! ஆகா அருமைதான்!
ஏற்றேன் ரசித்தேன்! மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்
28.12.19

நண்பர் மனிதத்தேனீ சொக்கலிங்கம் நட்பிற்கு வாழ்த்து!

விஜயா பிரிண்டர்ஸ் வாழ்க!

அச்சகச் சேவையில் 73 ஆண்டுகாலம் !

எழுபத்து மூன்றாண்டு கால உழைப்பில்
விழுதாக ஊன்றியுள்ள அச்சகத் தொண்டுவாழி!
நம்பிக்கை நாணயம் மூச்சாக வாழும்
நண்பராம்  நற்றமிழ்ச் சொக்கலிங்கம் வாழ்க!
செழுந்தமிழ்போல் வாழ்வாங்கு வாழவேண்டும் இங்கு!
அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மஞ்சள்பை காந்தி படமேந்தும் நாட்காட்டி
நன்றி மறவா நிறுவனர் நூலுடன்
கைக்குட்டை பச்சை நிறவிசிறி நாட்குறிப்பு
கையடக்க சாவிக்கொத்( து) ஏழுபொருள் அன்பளிப்பு
மெய்சிலிர்க்க சொக்கலிங்கம் நட்புடன்
தந்ததை
தெள்ளுதமிழ்ப் பாவினத்தால் வாழ்த்து.

என்றும் நட்புடன்
மதுரை பாபாராஜ்

பேரன் நிகில் அபிசேக் நண்பன் மோகிட் அனுப்பிய படத்திற்குக் கவிதை:

பச்சைப் பசேலென்ற புல்வெளியில் காலையில்
புற்களை மேய்கின்ற ஆடுகளின் கூட்டத்தை
விண்முட்டும் மாமலைகள் கண்டு் ரசித்திருக்க
வந்திருக்கும் காலை வணக்கப் படத்திற்கு
நன்றி நவில்கின்றேன் இங்கு.

மதுரை பாபாராஜ்

இட்லியின் கதை
————————
அரிசியாய் இருந்தேன்.

அரைத்தார்கள் வதைத்தார்கள்
நீரிலே கரைத்தார்கள்.

நெருப்பிலே வேகவைக்க
பொறுத்தது போதும்
என பொங்கி எழுந்தேன்

ஆனால் ...

என்னே சுவை என்று
உண்டல்லவா முடித்துவிட்டார்கள்

மருமகன் ராஜ்குமார் எழுதியது

எங்கோ படித்தது. யாரோ அனுப்பியது.அதைவைத்து எழுதிய கவிதை!

இட்லியைப்போல் எழு!

இட்லிமாவை  நாளும் குழிக்குள்ளே தள்ளினாலும்
சற்றும் சளைக்காமல் பொங்கி எழுந்தேதான்
இங்கே நிமிர்கிறதே இட்லியாக! நாமதைப்போல்
சந்தித்துச்  சாதித்தல் வாழ்வு.

மதுரை பாபாராஜ்

Thursday, December 26, 2019

இந்தப் பொன்மொழிக்கொரு புதிய கவிதை நம் கவிஞர்கள் வரைவார்களாக...

கவிஞர் கமல்குமார் வீஓவி

Walk the talk else stop the talk.
Be true to yourself. You can cheat all but yourself.

சொல்வதைச் செய்யவேண்டும் இல்லைநீ சொல்லாதே!
உனக்கேநீ உண்மையாய் நாள்தோறும் வாழவேண்டும்!
ஏமாற்றக் கூடும் அனவரையும்! உன்னைநீ
ஏமாற்றக் கூடுமோ சொல்.

மதுரை பாபாராஜ்

சபாஷ்... மிக நன்று👏👏👌
கமல்குமார்

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி யாகி விடும்
(அதிகாரம்:வலியறிதல் குறள் எண்:476

ஒற்றைப் பறவை கிளையில் கவனமாய்
எச்சரிக்கை கொண்டே நுனிக்கொம்பைப் பார்த்தேதான்
நற்றமிழே! முன்னேறப் பார்க்கிறது! வாழ்க்கையில்
கற்கவேண்டும் இப்பாடம் நாம்.

மதுரை பாபாராஜ்

Mobile is not just a phone!
It  provides
Tons of recipes!
Tons of advisors!
Tons of doctors!
Tons of counselleors!
Tons of natural therapy!
Tons of rumour mongers!
Tons of positive thoughts!
Tons of negative thoughts!
All are available in one mobile!
We are all carriers!
We have to  walk,talk and stock
Cautiously!

Madurai Babaraj

அற/அறிவுரை

அறவுரை வேண்டும் அறிவுரை வேண்டாம்!
அகவை முதிர்ச்சியைப் பிள்ளைகள் பெற்றால்
அவரவர் வாழ அறவுரை தேவை!
அவர்களுக்குத் தேவை அறிவுரை யல்ல!
அவரவர்கள்  வாழ்வார்கள் நம்பு.

மதுரை பாபாராஜ்

Wednesday, December 25, 2019

அமர் அனுப்பிய படம் 26.12.19

கைவைத்தால் தண்ணீர்தான் ஊற்றெடுக்கும் என்பதால்
வைகை எனப்பெயர் வந்ததாகக் கூறுவர்!
வைகையில் தண்ணீர் பெருக்கெடுக்கும் காட்சிகண்டேன்!
பொய்யில்லை மெய்தான் உணர்.

மதுரை பாபாராஜ்

கவிஞர் குறளடியான் அகவை 70!

நூறாண்டு வாழ்க!

நற்கூடல் மேடைகளில் எங்கள் குறளடியான்
சொற்கூட்டிப் பாடுகின்ற ஆற்றலை எண்ணுகின்றேன்!
அற்புதமாய் ஆற்றலைத் தக்கவைத்து
வாழ்கின்றார்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

உள்ளத்தில் கள்ளமற்ற வெள்ளந்தி நண்பராவார்!
எல்லோர்க்கும் நல்லவராய் நல்லதையே சிந்திக்கும்
வள்ளுவத்தை வாழ்வியலாய் மாற்றி குறளடியான்
இல்லறத்தார் சூழ்ந்திருக்க வாழ்கின்றார்
வாழ்த்துவோம்!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.

செந்தமிழ்த் தொண்டர்! மனித்தேய ஆர்வலர்!
புண்படுத்திப் பார்க்காமல் பண்படுத்தும் பண்பாளர்!
அன்றிருந்து இன்றுவரை நட்பைத் தொடர்பவர்!
செந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மகனுக்கு அகவை 40

இனியவை நாற்பதாக வையகத்தில் வாழ்க!
மனிதத்தைக்  காக்கும் குறள்களை வாழ்வில்
மனதாரப் பின்பற்றி வாழியவே! நீடு!
குணக்குன்றாய் வாழ்க  குறளடியான் மைந்தன்!
மனையறம் காத்துவாழ்க நீடு.

மதுரை பாபாராஜ்
வசந்தா



பணத்தின் சாதனை!

சாதி மதங்கள் இனங்கள் மொழிகளை
மேதினியில் பார்க்காமல் வாழ்வில்  புழங்குகின்ற
ஈடில்லா ஒற்றுமைக்கு வித்தூன்றும் சாதனையைச்
சாதிக்கும் இங்கே பணம்.

மதுரை பாபாராஜ்

Kavignarkamalkumar:
வணக்கம். இன்று சூரிய கிரகணம். அது முடியும் வரை ஏதும் உண்ணக் கூடாதாம். நண்பர்கள் பசி தாங்க மாட்டார்களே என்று தட்டு நிறைய இட்டிலி படைக்கிறேன்.

மானச உணவு. மகிழ்ந்து உண்க.

இட்டிலிக்கு சாம்பார் இனிதான கூட்டுதான்
சட்டினி யோடு மிளகாய் பொடியுமே
வட்டமான தட்டினிலே வண்ணமாய் மின்னுதே
பிட்டுபிட்டுத் தின்பாய் மகிழ்ந்து

கமல்
26.12.2019

மதுரை பாபாராஜ்:
படித்ததில் பிடித்தது

*When it is a question of money, everybody is of the same religion*.

*-Voltaire*

*Good morning *
*2612*

Vovmeignaniprabakarababu:
நன்று😊😊

இட்டிலிக்குச் சட்டினி இன்பம் அளித்தது
தட்டினில் மீதமே வைக்காது கொட்டிச்
சுவைத்துப் புசித்தேன் சுகமே அடைந்தேன்
அவற்றின் சுவையோ அமுது

Kavignarkamalkumar:
பணமென்று வந்தாலே பாரோர்க்கு மனமொன்று
என்றறிந்த சான்றோர்கள் செப்பினார் நன்கு
தனமென்று வந்தக்கால் தாரணியில் சாய்ந்த
பிணமும் திறந்திடும் வாய்!

கமல்
26.12.2019

பாபாவின் கருத்துப் பதிவை ஒட்டி...

மதுரை பாபாராஜ்:
காலைப் பொழுதில் கவிதை மழைப்பொழிவில்
சோலைக் குயில்களின் சொக்கவைக்கும் இன்னிசை
தேன்மழையாய் காதிலே பாயுதே பாவலர்காள்!
கானமழை கேட்போம் தொடர்ந்து.

மதுரை பாபாராஜ்

Kavignarkamalkumar:
நன்றி. இந்த இரு வெண்பாவும் தங்களால் தூண்டப் பட்டவையே.🙏

தாய் தாய்தான்!

தாய்கேட்பாள் சாப்டாயா? என்றேதான் ஆனாலும்
சேய்கள் முகஞ்சுழிக்கும் அம்மாவைப் பார்த்துதான்!
தாயின் அருமை தெரியாது உள்ளவரை!
தாய்போனால் கேட்பது யார்?

மதுரை பாபாராஜ்
25.12.19

தலைசிறந்த பத்து மனிதருள் நீங்கள்
நிலைகொண்ட மாண்பினை வாழ்த்தி மகிழ்வோம்!
அவையடக்கம் கொண்டிருக்கும் பண்பாளர் பாலா
அவனியிலே வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்
வசந்தா

Tuesday, December 24, 2019

நண்பர் IG சந்திரசேகர் அனுப்பிய படம்

வால்நீண்ட நீலம் கருப்பு சிவப்பென்று
கோலத்தைக் கொண்ட பறவை அலகிலே
லாவகமாய் செம்பழத்தைக் கவ்வ வணக்கத்தை
காலையிலே கூறுவதை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்
25.12.19

வெளிச்சம் தொலைக்காட்சி வள்ளுவன் வாக்கு நிகழ்ச்சியைப் பார்ப்போம்! கேட்போம்!

காலைப் பொழுதிலே ஐந்து மணித்துளிகள்
நாளும் ஒதுக்கி வெளிச்சம் தொலைக்காட்சி
வள்ளுவன் வாக்கு நிகழ்ச்சியைப் பாருங்கள்!
தெள்ளுதமிழ் ராமா நுசனார் விளக்கத்தை
அள்ளிப் பருகி கருத்தைப் பகிருங்கள்!
வள்ளுவம் போற்றும் குடும்பத்தார் ஊக்கத்தில்
வள்ளுவம் வாழும் உணர்.

மதுரை பாபாராஜ்

Sunday, December 22, 2019

நண்பர் IG சந்திரசேகர் அனுப்பியது


கிளையில் அமர்ந்து சிறகை விரித்துப்
பறக்கத் துணியும் பறவையே! விண்ணில்
இடரில்லை என்றுதான் நம்பியே செல்க!
சிறகுகளை நம்பிப் பற.

மதுரை பாபாராஜ்
23.12.19

இன்று
நன்று.
துறவி சீடர்கள் நீர்க்குவளை
விளக்கம் அருமை.

நானென்ற தன்னலம்  நீங்கி மனதிலே
நாமென்ற நேர்மறை காட்டும் பொதுநலம்
சேர்கின்ற பண்பு மலர்ந்துவிட்டால் அந்தநிலை
பாரில் தலைமைக்குப் பண்பு.

மதுரை பாபாராஜ்
23.12.19

மாண்புமிகு கக்கன் அவர்களை வணங்கு!

நினைவுநாள் 23.12.19

வாய்மையை வாழ்வாக்கி நேர்மையை மூச்சாக்கி
தூய அரசியலின் தூதுவராய்  வாழ்ந்தவர்!
இன்னலைச்  செய்தவர்க்கும் நன்மையைச் செய்தவர்!
தன்னலம் இல்லாத கக்கன் அவர்களை
என்றும் வணங்கியே வாழ்த்து.

மதுரை பாபாராஜ்


உள்ளதும் போய்விடும்!

பொய்களே மூலதன மானால் வளர்ச்சிகள்
மெய்போலத் தோற்றத்தைத் தந்தே மகிழவைக்கும்!
இல்லாத லாபம் இருப்பது போல்தோன்றும்!
பொய்மேகம் இங்கே கலையத் தொடங்கினால்
உள்ளதும் போய்விடும் பார்.

மதுரை பாபாராஜ்

Saturday, December 21, 2019

VOV ல் நண்பர் அஷ்ரப் பதிவுசெய்த படம்

தோகைமயில் நிற்கின்ற பின்னணியில் வேலவன்!
பொங்கும் அலைகளாடும் ஆழியின் பின்னணியில்
செங்கதிரோன்! காலை விடிந்ததெனக்  கூறுகின்ற
தன்மையைக் காட்டும் படம்.

மதுரை பாபாராஜ்


கணிதமேதை இராமாநுசன் புகழ் வாழ்க!
சீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan, டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்த கணித அறிஞர்.
-----------------------------------------------------------------
பள்ளிப் பருவத்தில் ஏழ்மை வறுத்தெடுக்க
கிள்ளும் பசிக்கோ உணவாகத் தண்ணீரை
அள்ளிப் பருகித்தான் பள்ளிக்குச் சென்றாராம்!
பள்ளிக்குச் செல்லாமல் கோயில் வளாகத்தில்
தெள்ளத் தெளிவாய்க் கணக்குகளைப் போடுவாராம்!
தொல்லை கொடுத்த வறுமையிலும் எண்கணிதம்
எல்லையற்ற ஆற்றலைக் கொண்டே உயர்ந்தவராம்,!
நல்லவர் வல்லவரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

நட்பின் முகங்கள்!

உதவிகள் செய்வதற்கு முன்னணியில்  நிற்பார்!
மடமட வென்றேதான் வந்துவந்து செல்வார்!
உறவிருக்கும் ஆனால் உரிமையோ இல்லை!
முகநக நட்பின் முகம்.

சிக்கலுக்குள் சிக்கிக் குடும்பம் தவித்திருக்கும்!
அப்பொழுது தானாக வந்தே துணைநிற்பார்!
இத்தகைய நட்போ அகநக நட்பிற்கே
முத்திரை யான முகம்.

மதுரை பாபாராஜ்

Friday, December 20, 2019

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

தோகை மயிலது பார்த்திருக்க பூக்களோ
பூவிதழை நன்கு விரித்தே மலர்ந்திருக்க
ஓவியம் காலை வணக்கம் அகவிட
தூவிய அன்பினை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்
21.12.19


20 நூல்கள் படைத்ததற்காக பேரன் நிகில் நண்பன் மோகித் வீட்டில் இருந்து அனுப்பியது.

மதுரை பாபாராஜ் கவிதை நூல்கள் இதுவரை:

1.கவிச்சாரல் 1981

2.கவியமுதம் 1984

3.மகர விளக்கு  1985

4.மரபுகளின் அருவி1989

5.மகிழம்பூ1997

6.கிளிஞ்சல்கள் 2002

7.மகரயாழ் 2004

8.அற்புதத்தரு 2095
(சீரடி சாய்பாபா அற்புதங்கள்
 கவிதை வடிவில்)

9.திருக்குறள் பேழை    2006

திருக்குறள்.  2008
 (வெண்பா வடிவில்)
10.அறத்துப்பால்
11. பொருட்பால்
12. இன்பத்துப்பால்

13.வசந்தம் 2010

14.பூச்சரம். 2012
 (அகரவரிசைக் கவிதைகள்)

15.தேனருவி 2014

16.வாழ்வியல் அந்தாதி2015

17.கம்பராமாயணம் 2015
( அயோத்தி முதல்
கிட்கிந்தை வரை )     

திருக்குறள்   2018

18.அறத்துப்பால் - ஆங்கிலம்

19. இன்பத்துப்பால் - ஆங்கிலம்

20. இன்பத்துப்பால் குழந்தைகளுக்காக
       ( அச்சில்)

அச்சில் வராத நூல்கள்:

திருக்குறள் 22/23.குழந்தைப்பாடல்--அறம்,பொருள்

24.கம்பராமாயணம் குறள் வெண்பா

25.மனக்குறள் அகரவரிசை

26திருக்குறள்--ஆங்கிலவிளக்கம்_-
பொருட்பால்

27.பாரதியின் புதிய ஆத்திச்சூடி


28.வெளிச்சம் தொலைக்காட்சி
        அறத்துப்பால் விளக்கம்
         (380 குறள்கள்)


நண்பர்களின் வாழ்த்துகள்:

 சாகித்ய அகாதமி விருது பெற வாழ்த்துக்கள்....
மோகித்தின்
படம் நனவாகட்டும்....👍🏽👍🏽👍🏽

 நண்பர் பாலுநடராஜனின் வாழ்த்து

அருமை, இது குடியரசுத் தலைவர் விருதைவிட உயர்ந்தது, பாராட்டுக்கள்

இதை எனது அருமை நண்பர் மனிதத்தேனீ
மதுரை இரா.சொக்கலிங்கம் அனுப்பினார். சிறந்த பண்பாளர்.கவியரசு கண்ணதாசன்நற்பணி மன்றத்தலைவர். மதுரையில் முக்கியமானவர்.VIP

 அருமை ஐயா!
உயர்ந்த விருது கிடைத்துள்ளது தங்களுக்கு!
வாழ்த்துகள்!
வணக்கம்!

உண்மைதான் நண்பரே
மற்றதைத் தேடி நாம்செல்ல வேண்டும்
இந்த உள்ளார்ந்த விருது நம்மைத் தேடி வந்துள்ளது

இது நண்பர் இராமாநுசனார் அனுப்பியது. வள்ளுவர் குறள் குடும்பம். தினமும் வெளிச்சம் தொலைக்காட்சியில் பொருட்பால் விளக்கம் அளித்துவருகிறார் .எனது நண்பர்.இராணுவ அலுவலகத்தில் இஞ்சினியர்.

நிகிலின் அப்பா,அம்மா,அத்தை,மாமா அனைவரும் படத்தைப் பாராட்டி உள்ளனர்.



Thursday, December 19, 2019

காவல்துறைக்கு ஒத்துழைப்போம்!

நாட்டிலே சட்டம் கடமையைச் செய்தாலே
ஊற்றெடுக்கும் குற்றங்கள் ஓடி
ஒளிந்து விடும்!
நாட்டுமக்கள் சட்டத்தை நாளும் மதித்துவாழ்ந்தால்
நாட்டில் தனிமனித நல்லொழுக்கம் வேரூன்றும்!
போற்றாதே வக்கிரத்தை! மாறு.

காவல் துறையினர் தங்கள் கடமைகளை
ஆவலுடன் செய்கின்றார்! மக்களும் சட்டத்தை
நாளும் மதிக்கவேண்டும்! இத்தகைய பண்பாடே
நாட்டை நெறிப்படுத்தும் சொல்.

மதுரை பாபாராஜ்

IG திரு.சந்திரசேகர் அனுப்பியது

வண்ணக் கிளியே எதையெண்ணிப் பார்க்கிறாய்?
உன்கால்கள் பற்றி இருக்கும் கிளைதானே
உன்னுடைய நம்பிக்கை! எங்களைக் காப்பதோ
நம்பிக்கை என்னும் கிளைகளே! வாழ்க்கையே
நம்பிக்கைப் பின்னணியில் நம்பு.

மதுரை பாபாராஜ்
19.12.19

தலைமைப்பண்பு!

கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனாய்
கருத்தைத் தலைவர்கள் சொல்வதா? கண்ணே!
கருத்தைக் குழப்பாமல் தெள்ளத் தெளிவாய்
உரைத்தல் தலைமைக்குப் பண்பு.

மதுரை பாபாராஜ்

தேன்கூடுகளைக் கலைக்காதே!

அங்கங்கே பாடுபட்டுத் தேன்கூட்டைத்  தேனீக்கள்
கண்கவரக்  கட்டுதல்போல் கட்டித்தான் வாழ்கின்றார்!
எண்ணத்தில் வேற்றுமை என்றும் கிடையாது!
அங்கங்கே தேன்கூட்டைப் பார்த்துப் பொறாமையால்
கண்மூடித் தாக்குகின்றார் தேனீக்கள்  கூட்டத்தை
இங்கே கலைக்கின்றார் ஏன்?

மதுரை பாபாராஜ்

இருமுனை வாள்!

திரைப்படத்தில் வன்முறை ஆபாசம் இந்த
இரண்டைத் தடைசெய்தால் நேர்மறை எண்ணம்
தழைக்கும்! எதிர்மறை எண்ணம் குறைந்தே
பழிவாங்கும் வக்கிரம் தோன்றாது வாழ்வில்!
அழிவோ  இருமுனை வாள்.

மதுரை பாபாராஜ்

நடப்பதை யாரறிவார்?

கடவுளைக் கும்பிட்டு வாழ்ந்தாலும் , இல்லை
கடவுளைக் கும்பிடாமல் வாழ்ந்தாலும் வாழ்வில்
நடப்பது நாளும் நடந்தே முடியும்!
நடப்பதை யாரறிவார் சொல்?

மதுரை பாபாராஜ்

ஒப்பிடாதே

ஒப்பிடாதே!

திருமணம் செய்வதற்கு முன்னொரு வாழ்க்கை!
திருமணம் செய்தபின் ஏற்பதோர் வாழ்க்கை!
ஒருசிலர்க்கு முந்தைய வாழ்க்கை இனிக்கும்!
ஒருசிலர்க்குப் பிந்தைய வாழ்க்கை இனிக்கும்!
இருப்பதை ஏற்கின்ற பக்குவம் பெற்றால்
இரண்டையும் ஒப்பீடு செய்யமாட்டோம் இங்கு!
முரண்களை ஊதிப் பெரிதாக்க வேண்டாம்!
தரணியில் வாழலாம் நன்கு.

மதுரை பாபாராஜ்


அண்ணியார் திருமதி. J.அருணாபாய்
பல்லாண்டு வாழ்க!

பிறந்தநாள்வாழ்த்து!

18.12.19

விருந்தோம்பல் பண்பிலே வித்தகர்! பிள்ளை
விரும்புவதை நாளும் திறைவேற்றி வைப்பார்!
இருக்கும் இடத்தைக் கலகலப் பாக்கி
சிரித்துப் பழகும் உறவு.

தஞ்சை நகரில் கனராவங்(கி) வேலைக்கு
அந்த இருசக்க(ர) வாகனத்தில் சென்றிருந்த
கோலமோ காலமாற்றம் செய்துவிட்ட விந்தைதான்!
கோலத்தை ஏற்றார் துணிந்து.

சூழ்நிலையின் கைதியாகி வாழ்கின்றார் இன்றிங்கே!
வாழ்நிலை மாற்றம் படிப்படியாய் முன்னேற்றம்!
தேர்ந்தே எழுந்து நடப்பார் விரைவிலே!
சூழ்நிலை மாறிவரும் நம்பு.

இன்று பிறந்தநாள் காண்கின்ற அண்ணியார்
நன்கு நலம்பெற்று வாழியவே பல்லாண்டு!
அன்பு மகனும் மருமகளும் பேத்தியும்
சின்னவாண்டுப் பேரனும் மற்றும் குடும்பத்தார்
சூழ்ந்திருக்க வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ் -- வசந்தா
            குடும்பத்தார்

ஊடகப் பொறுப்பு!

செய்தியைக் காட்டவேண்டும் என்றால் தொடர்புடைய
மக்களிடம்  கேட்டறிந்து  மெய்யா? வதந்தியா?
என்பதை இங்கே சமன்செய்து சீர்தூக்கி
நன்கு  எடைபோட்டுக் காட்டினால் சிக்கலில்லை!
ஊடகத்தின் கூட்டுப் பொறுப்பு.

மதுரை பாபாராஜ்

Wednesday, December 18, 2019

திருமதி ஜெயந்தி ஆனந் அனுப்பியது

18.12.19

செல்வந்தர் இல்லை புகழ்பெற்றோர்  இல்லை
கல்வியிற் சிறந்தோராய் வாழ்வில் இருப்பதோ
எள்ளளவும் உண்மையில்லை! மாசின்றி அன்புடன்
நல்ல எளிமையாய் வாழ்வதே உண்மையாம்!
உள்ளத்தின் மாசகற்றப் பார்.

மதுரை பாபாராஜ்

Tuesday, December 17, 2019

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

அரச இலையிலே நந்தியா வட்டை
இரண்டும், அரளி மரிக்கொழுந்து ரோசா
இருமலர்கள் தண்ணீரில் கிண்ணத்தில் வைத்தே
பெருமையுடன் காலை வணக்கத்தைச் சொல்லும்
பெருந்தன்மைப் பண்பினை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்
18.12.19

நண்பர் IG சேகர் அனுப்பியது.

காலைப் பொழுதில் அமைதியாக நிற்கிறது!
வேளை மலர மலர பருந்தொன்று
குஞ்சைப் பிடிக்கவந்தால் சீறிச் சினந்தேதான்
தன்குஞ்சைக் காக்கும் விரைந்து.

மதுரை பாபாராஜ்
18.12.19

 வள்ளுவத்தின் முடிவற்ற வாதங்கள்!

வள்ளுவம் பள்ளியில் மாணவராய் வந்துசேர்ந்தேன்!
வள்ளுவர் கூறிய பண்புக் கருத்துகளில்
எல்லோரும்  ஒற்றுமையாய்க் கூறுவார்கள் என்றெண்ணி
வள்ளுவத்தை ஆய்ந்த அறிஞர்கள் வாதங்கள்
ஒவ்வொன்றாய்த் தந்தபோது பார்த்தேன் முரண்களை!
நைந்தேன் முரண்களைக் கண்டு.

ஒருவரோ  ஒன்றை உரைத்தால் உடனே
இருவர் மறுப்பார் உடன்பட மாட்டார்!
வரிந்துகட்டி மற்றொருவர் வந்து முரைப்பார்!
எரிமலை போலக் குமுறி வருவார்!
விழிபிதுங்க வேடிக்கை பார்ப்பேன் இருந்து!
தெளிவு கலங்கும் திகைத்து.

வேதக் கருத்தா?  பகுத்தறிவு கூறுவதா? வேகமாய்ச் சொல்லும் மதக்கருத்தா? எக்கருத்து
நாதக் கருத்தாகும் வள்ளுவத்தில்  என்றுகேட்டால்
வாதங்கள் ஊடக வாதம்போல் எம்முடிவும்
கூற இயலாதே இங்கு.

சாதிமதச் சார்பற்ற நற்கருத்தை வள்ளுவத்தின்
நீதிநெறிச் சாரமாக மக்களெல்லாம் வாழ்வதற்கு
ஈடில்லா நூலாக என்றும் பொதுமுறையாய்
மேதினியில் ஏற்போம்நாம் வாதமின்றி என்றுரைப்பேன்!
வாதமற்ற நல்விளக்கம் தா.

மதுரை பாபாராஜ்




1995 November

Fenner KK chennai

K.Krishnamoorthy

1995 அக்டோபர்

பென்னர் மதுரை இருபத் திரண்டாண்டு எந்தன் பணியை நிறைவுசெய்தேன்! வாழ்க்கையின்
எந்தத் திக்கெனினும் சிக்கல்கள் தோன்றியே
என்னைத் திணறவைத்த காலத்தில் நிர்வாகம்
சென்னைக்கு என்னை இடமாற்றம் செய்தார்கள்!
வந்தேன்நான் அக்டோபர் திங்கள் இங்கேதான்!
நம்பிக்கை கொண்டேன் துணிந்து.

இராயபேட்டை பென்னர் அலுவலகம் சேர்ந்தேன்!
உலாநடை போட்டு தினந்தோறும் சென்றேன்,!
பலமாதம் ஆனதும் பிஎம்எப் சென்றேன்!
சராசரி வாழ்க்கையின் சக்கரம் சுற்ற
தரமான வாழ்வேற்றேன் இங்கு.

நவம்பர் மாதத்தின் சம்பளம் பெற்றேன்!
நண்பர் கிருஷ்ணமூர்த்தி தந்தார் முழுமையாக!
கண்களில் ஆனந்தக் கண்ணீர்! பலகாலம்
கண்ட கனவு நிறைவேற நண்பரின்
அன்புக் கரம்பற்றி நன்றிசொன்னேன்!
உண்மையே!
சென்றதே சோதனை இங்கு.

மதுரை பாபாராஜ்


யார் காரணம்? யார் பொறுப்பு?
குறள் 542:

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி

வருமுன்காத்தல் நல்லரசு!

AIR CONDITIONER(AC) HARMFUL?

குளிரூட்டும் சாதனம் நல்லதென்று சொல்லி
பலருமிங்கே தங்களது இல்லத்தில் காரில்
படிக்கின்ற பள்ளிகளில் வாகனத்தில் என்றே
துடிப்புடன் நீக்கமற நாள்தோறும் மக்கள்
அடிமையாய் மாறியதும் தீமையெனச் சொல்லி
கடிவாளம் போடுவதும் ஏன்?

FRIDGE HARMFUL?

குளிர்பதனப் பெட்டி

உணவுப் பொருள்கள் கெடாமல் இருக்க
தினந்தோறும் பாலுறைகள் வைத்துக் காக்க
மனம்விரும்பும் வண்ணக் குளிர்பானம் வாங்கி
தினமும் அடுக்கிவைத்து வீட்டில் குடிக்க
பழகி அடிமையான பின்னே நோய்கள்
பலவாறாய் தாக்கிய பின்பு இந்தப்
பழக்கம் கெடுதியென்று சொல்லும் நிலைகள்
கலக்கத்தில் வாழ்க்கை நிலை.

MICROWAVE OVEN

நுண்ணலை அடுப்பு

உணவுப் பொருளைச் சூடாக்க ரொட்டி
மணக்க வறுத்துண்ண என்றேதான் நன்மை
பலவாறாய்ப் பட்டியலிட்டு வாங்கிடத் தூண்டி
பலரும் அடுப்படியில் வைத்துத் தொடங்க
பலஆண்டு பற்றவைத்த பின்னால் இன்று
பலநோய்கள் பாய்ந்துவந்து உங்களைத்  தாக்கும்
அலறுகின்றார் எச்சரிக்கை தந்து.

JUNK FOOD

குப்பை உணவு

கண்ணைக் கவர்கின்ற வண்ண உறைகளில்
அங்கங்கே தொங்கும் கடைகளில் வீதிதோறும்!
பிஞ்சுக் குழந்தைகள் நாளும் அடிமையாகி
பன்னெடுங் காலம் முடிந்தபின்பு அந்தவகை
உண்ணும் உணவெல்லாம் குப்பை உணவென்பார்!
தும்பைவிட்டு வாலைப் பிடிப்பது தேவையா?
அம்மா! அவலந்தான் வாழ்வு.

இப்படி எல்லாப் பொருளையும் சந்தையில்
விற்க அனுமதித்து வாங்கி அடிமையாய்
ஆனபின்பு அச்சுறுத்தும் போக்குகள் நல்லதல்ல!
ஏனோ அறிமுக நிலையில்  அரசுகள்
பார்த்துப் பகுப்பாய்வு செய்து தடுக்கவில்லை?
யார்பொறுப்பு? யார்காரணம்? சொல்.

மதுரை பாபாராஜ்



குறள்களுக்குப் பலபொருள்!

இப்பக்கம்  கேட்டேன்  ஒருபொருளைச் சொன்னார்கள்!
அப்பக்கம் கேட்டேன் ஒருபொருளைச் சொன்னார்கள்!
எப்பக்கம் கேட்டாலும் ஏதோ ஒருபொருளை
எப்படியோ சொல்கின்றார்! ஒத்த பொருளுரைக்க
எப்பக்கம் சென்றாலும்  சொல்வதற்கே ஆளில்லை!
இப்படி வேறுபட்டுச் சொல்வதற்கா வள்ளுவம்?
இப்படிக் கூறுபோட்டுப் பார்ப்பதற்கா வள்ளுவம்?
எப்படியோ அய்யன் எழுதிவைத்துச் சென்றுவிட்டார்!
இப்படியும் அப்படியும் வாட்டி வதைப்பதேன்?
ஒத்த பொருளொன்றைக் கூறு.

மதுரை பாபாராஜ்



திரைகள் விலகினால்....

அக்கரைப் பச்சை புறத்தின் அழகாகும்!
பக்கம் நெருங்கினால் வேடம் கலைந்துவிடும்!
முற்றும் திரைகள் விலகினால் காட்சிகள்
திக்கித் திகைக்கவைக்கும் செப்பு.

மதுரை பாபாராஜ்

முதுமையில் மூன்று நிலைகள்!

நின்ற கோலம்! இருந்த கோலம்! கிடந்த கோலம்!

நிற்போம்! இருப்போம்!  கிடப்போம்! இவைமூன்றும்
இன்றைய கோலங்கள்!நானும் வசந்தாவும்
இந்தவீட்டில் காலை முதலாய் இரவிலே
சென்று படுக்குமட்டும் வாழ்க்கை நடப்பிதுதான்!
இன்றோ இதுதானே வாழ்வு.

மதுரை பாபாராஜ்
14.12.19


Monday, December 16, 2019

திருமதி ஜெயந்தி ஆனந் அனுப்பிய படம்

வாழ்க்கை சரியான நேரம் வழங்குகின்ற
பாடத்தை நாமோ உணரவில்லை என்றாலோ
வாழ்க்கை அதேபா டத்தைத் தவறான
நேரத்தில் நம்மை உணரவைக்கும்

மதுரை பாபாராஜ்
17.12.19

திருமதி ஹெலினா கிறிஸ்டோபர் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து

16.12.19

உள்நாடோ இல்லை வெளிநாடோ வள்ளுவத்தை
உள்ளத் துடிப்பாக்கி எங்கிருந்த போதிலும்
காணொளியில் நாளும் பதிவுசெய்து தூதுவிட்டே
ஆனமட்டும் இங்கே பரிமே லழகியார்
தேன்குறள் தொண்டாற்றும் பண்பினை வாழ்த்துவோம்!
ஆண்டுபல இங்கே குடும்பத்தார் சூழ்ந்திருக்க
வாழ்வாங்கு வாழ்கவென்றே வாழ்த்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா

IG திரு.சந்திரசேகர் அனுப்பிய படம்

புள்ளிவைத்த புள்ளினம் 
பாரதிபோல் அஞ்சாமல்
இவ்வுலகில் நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது!
அன்பான காலை வணக்கத்தைக் கூறவைத்த
பண்பாளர் சேகரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்
17.12.19

பிஎம் எப் பெல்டிங்ஸ் லிமிடெட்--    PFS     சென்னை

Fenner
           குமரப்பன்-- கிருஷ்ணமூர்த்தி
                    குணசேகரன்--
BMF: சீனிவாசன்--விவேகாநந்தன்--இராமன்--இராஜகோபால்-- சம்பத்குமார்-- கணேசன்--- பழநிநாதன்--கௌரிசங்கர்-- எட்வர்ட்
-----------------------------------------------------------------
சென்னை நிறுவன வாழ்க்கை 1995-2005
--------------------------------------------------------------------
பென்னர் பணிஇட மாற்றத்தால் சென்னைக்கு
வந்தடைந்தேன்! பென்னர் இராயப்பேட் டையிலே
என்பணி ஏற்றேன்! குணசேகர் மேலாளர்!
கொஞ்சநாள் சென்றதும் பிஎம்எப் சென்றுவிட்டேன்!
அங்கே குமரப்பன் மேலாள ராய்வந்தார்!
பன்முக ஆற்றலின் நாயக ராயிருந்தார்!
அன்புடன் கண்டிப்பும் உண்டு.

சீனிவாசன் பொதுமேலாளர்.

சிரித்த முகமும் பரபரப்பாய்ப்  பேசித்
தொழிலகத்துள் சென்று துறைதோறும் வேலை
சரியாக உள்ளதா என்றேதான் ஆய்ந்து
பழகிய நண்பர் இவர்.

விவேகாநந்தன்

திறமை வெளிப்படைத் தன்மை இரண்டும்
உறவாட அன்றாட வேலையைச் செய்தே
சிறப்பாக அந்தப் பதவிப் பணியை
திறம்படச் செய்தார் இவர்.

இராமன்

சிலமாதம் வந்தார் முத்திரை யாக
சிலசா தனைகள் படைத்தார்! நன்கு
பழகிய நண்பர் அனைவரும் போற்ற
களப்பணி யாற்றினார் காண்.

இராஜகோபால்-- சம்பத்குமார்

இருவரும் கொஞ்சகாலம் நிர்வாகம் செய்தே
இரண்டு நிறுவனத்தைக் காத்து தொழிலில்
தரமுயரப் பாடுபட்ட சூழ்நிலை தந்தே
உழைத்தனர் அங்கே மகிழ்ந்து.

கணேசன்

தனக்களித்த வேலைப் பொறுப்பை உணர்ந்து
மனமுவந்து பின்பற்றி தன்னால் இயன்ற
உழைப்பினைத் தந்தே பணியாற்றிச் சென்றார்!
இழையோடும் நெஞ்சில் நினைவு.

கௌரிசங்கர்

கணினி இயக்கத்தை நன்கறிந்த  அன்பர்!
பணியறிக்கை எல்லாம் கணினி மயமே!
தனியார்வம் கொண்டு கடமைகள் செய்தே
அனைவரையும்  நண்பராக்கிப் பார்த்தார்.

பழநிநாதன்

கொஞ்சகாலம் நிர்வாகி யாயிருந்தார்! ஆய்வகந்
தன்னிலே மேலாள ராக இருந்தவரை
அங்கே பதவி உயர்வளித்து நிர்வாகம்
தந்திட்ட வாய்ப்பைப் பயன்படுத்திப் பார்த்தவர்!
பென்னர் மதுரையில் தந்தார்  இடமாற்றம்!
சென்னைக்கு வந்தார் மகிழ்ந்து.

எட்வர்டு

தேடிவந்த வாய்ப்பைப் பயண்படுத்தி நுண்ணறிவை
ஈடில்லா நல்லுழைப்பாய் மாற்றிய நிர்வாகி!
நன்கு பழகி சமத்துவத் தென்றலைப்
பண்பாக்கி நல்லுறவைப் பேணியவர் எட்வர்ட்தான்!
புன்சிரிப்பு நாயக ராம்.

குமரப்பன்

உற்பத்தி காப்பகம் திட்டமிடல் விற்பனை
அற்புத நிர்வாக ஆற்றல்  கண்டிப்பு
எப்பொழுது கேட்டாலும் எந்தத் துறையெனினும்
பட்டென்று புள்ளி விவரங்கள் தந்திடுவார்!
அற்புத மான நினைவாற்றல் என்றேதான்
வெற்றிக் கொடிநாட்டி ஆற்றலைக் காட்டினார்!
சுற்றி உழைத்தார் பம்பரம்போல் ஆலையிலே!
கற்றேன் பலநுணுக்கம் நான்.

இத்தனைப் பேரிடம் பணிசெய்த ஆண்டுகள்
கற்றுணர்ந்த பாடங்கள் ஏராளம்! என்னைநான்
கற்றுத் தெளிந்தேன் பணிநிறைவு
பெற்றபோது!
உற்றதுணை பட்டறிவே மெய்.

முப்பத் திரண்டாண்டு பென்னர் நிறுவனத்தில்
கற்ற பணியை  நிறைவுசெய்தே வந்துவிட்டேன்!
எத்தனை நண்பர் அலுவலர்கள் எல்லோரும்
முத்துக்கள் இன்றும் தொடர்புண்டு! வாழ்க்கையின்
சுற்றுகளே அற்புதந் தான்.

மதுரை பாபாராஜ்





Sunday, December 15, 2019

கண்ணீர் விலைமதிக்க ஏலாத தண்ணீராம்!
கண்ணீரில் தண்ணீர் ஒருவிழுக் காடுதான்!
தொன்னூற்று ஒன்பதோ உள்ளத் துணர்ச்சிகளே!
புண்படுத்தும் சொற்களை வீசும்முன் சிந்திப்போம்!
பண்படுத்திப் பேசப் பழகு.

மதுரை பாபாராஜ்
16.12.19

திரு& திருமதி துரைசாமி திருவாசகம் இணையர் பல்லாண்டு வாழ்க!

திருவா சகத்தில் உருகிய சான்றோன்!
திருக்குறளின் நல்லறத்தை இல்லறத்தில் போற்றும்
பெருமைக் குரிய துரைசாமி அய்யா
அருமைத் துணைவி நிலமங்கை அம்மா
இருவரும் ஆந்ரா விசாகை நகரில்
பெருமையுடன் வாழும் இணையர் குடும்பம்
அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

பூவுடன் சேர்ந்திருக்கும் நாரும் மணப்பதைப்போல்
பாவியற்றும் நானும் அவரது நட்பிலே
நாளும் திளைக்கின்றேன்! நான்பெற்ற பேறென்பேன்!
வாழ்க்கைப் பிறவிப் பயன்.

ஆங்கிலத்தில் எந்தன் அறத்துப்பால் நூல்வர
பாங்குடன்  பேருதவி  செய்திட்ட பண்பாளர்!
வான்மழை உள்ளம் இவரது உள்ளமாகும்!
ஆண்டுபல வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா

Saturday, December 14, 2019

பேரன் மோகித் அனுப்பிய படத்திற்குக் கவிதை:

வெண்ணிறப் பூக்கள் நடுவில் இளஞ்சிவப்பு
வண்ணம் இயற்கை படைத்த அழகாகும்!
கண்கவர செவ்வண்ணப் பூவிரண்டு நின்றிருக்க
இந்த விடியலில் காலை வணக்கத்தைத்
தந்த மகிழ்ச்சியை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்
15.12.19

Friday, December 13, 2019

இயல்பான வாழ்க்கைக்கு
அகரவரிசைப் பண்புகள்!

அமைந்திருக்கும் வாழ்க்கையில் நிம்மதியாய் வாழுங்கள்!
ஆசைகள் பேராசை
ஆகாமல் வாழுங்கள்!
இன்சொல்லைப் பேசுங்கள்
வன்சொல் தவிர்த்திடுங்கள்!
ஈதல் இசைபட
வாழவைக்கும் நம்புங்கள்!
உழைத்தால் உயர்வுண்டு
உற்சாகம் கொள்ளுங்கள!
ஊக்கத்தைக் கைவிடாமல்
நம்பிக்கை கொள்ளுங்கள்!
எளிமையாக வாழ்ந்து
எடுத்துக்காட்டாய் மாறுங்கள்!
ஏமாற்றிப் பிழைக்கவேண்டாம்!
ஏமாந்து போகவேண்டாம்!
ஐந்துபேரை அரவணைத்து
அகங்குளிர வாழுங்கள்!
ஒப்பிட்டுப் பார்க்காமல்
உளைச்சலின்றி வாழுங்கள்!
ஓங்குபுகழ்  பெறுவதற்கு
நேர்மையுடன்  வாழுங்கள்!
ஔவைத் தமிழை
உயிர்மூச்சாய்ப் போற்றுங்கள்!
ஃ ஆயுத எழுத்துகளாய் எழுவோம்
      அநீதி சாய்ப்போம்

மதுரை பாபாராஜ்


திரு.வீதிவிடங்கன் வழக்கறிஞர்

பென்னர் அறிமுகத்தால் நட்பு மலர்ந்தது!
எங்கெங்கோ மாறினாலும் மாறாத நட்புடன்
இன்றும் குடும்பநட் பாகத் தொடர்கிறது!
என்றும் தொடரும் தொடர்ந்து.

மதுரை பாபாராஜ்

குற்றம் குற்றமே!

குற்றத்தைச் செய்வதற்கு முன்பு தவிர்க்கவேண்டும்!
குற்றத்தைச் செய்துவிட்டுக் காரணத்தைச் சொல்லாதே!
எப்படியும் தண்டனை வந்துவிட்டால் ஏற்றுக்கொள்!
குற்றத்தைச் செய்வது தப்பு.

மதுரை பாபாராஜ்

மூடுபனி!

நாடுகளுக் குள்ளேயோ நாள்தோறும் சிக்கல்கள்!
வீடுகளுக் குள்ளே விதவிதமாய்ச் சிக்கல்கள்!
ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கும் சிக்கல்கள்!
ஏடுகளைப் பார்த்தால் படிப்பதெல்லாம் சிக்கல்கள்!
மூடுபனிச் சூழலுக்குள் நாம்.

மதுரை பாபாராஜ்

Thursday, December 12, 2019

பண்பாடு தூசு!

தமிழ்ப்பாட்டுச் சொற்களை ஆங்கிலத்தில் காட்டும்
மனப்போக்கின் வக்கிரத்தை என்னென்பேன் தாயே!
தினவெடுத்துத் தாய்மொழியைக் கொச்சைப் படுத்தும்
இனந்தானே நாட்டிலே முக்கிய மாந்தர்!
பணத்தின்முன் பண்பாடு தூசு.

இத்தகைய போக்குகள் தாய்மொழிக்கு நல்லதல்ல!
எப்படி யாரெல்லாம் காத்த தமிழ்மொழி?
இப்படிச் சீரழிக்க யார்தந்தார் ஒப்புதல்?
தப்பாட்டம்  வேண்டாம் நிறுத்து.

நரம்பைத் துடிக்கவைக்கும் அர்த்தமற்ற பாடல்!
வரம்புகளை மீறுகின்ற ஆபாச ஆட்டம்!
தரந்தாழ்ந்தே போகின்ற காட்சிகளைப் பார்த்தால்
தலைமுறை மாற்றம் எதிர்மறை யாகும்
நிலையிங்கே வேதனைக்கு வித்து.

மதுரை பாபாராஜ்

அச்சகத் தொண்டில் 73 ஆண்டுகள்!

விஜயா பிரிண்டர்ஸ் பல்லாண்டு வாழ்க!

அச்சுத் துறையில் எழுபத்து மூன்றாண்டு
முத்திரைச் சாதனை நாட்டிய அச்சகம்!
நற்றமிழ் மாமதுரை போற்றுகின்ற நாயகர்
சொக்கலிங்கம் பண்புடன் தொண்டாற்றும்  அச்சகம்!
அக்கறையாய் வாடிக்கை யாளர் எதிர்பார்ப்பைப்
பற்றுடன் நாளும் நிறைவேற்றும் அச்சகம்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்
வசந்தா

Wednesday, December 11, 2019

திருமதி கலா நவநீதகிருஷ்ணன் அனுப்பியது

☝This 20 kg python caught by Mrs Raju w/o cmde Raju in Tarangini building (Naval apartment, Near High court Jn), Ernakulam today.
What a brave Lady ❗

மலைப்பாம்பு என்றாலும் கையால் பிடித்து
சளைக்காமல் அச்சமின்றி பைக்குள் அடக்கி
முடிபோட்டுக் கட்டிய மங்கையை வாழ்த்து!
நடிப்பல்ல உண்மை உணர்.

மதுரை பாபாராஜ்
Murugu: Thamizhaciya. Kokka.

Madurai Babaraj: புலியை முறத்தால் அடித்தவள் அன்று!
கிலியின்றிப் பாம்பைப் பிடித்தவள் இன்று!
எலிகளுக்( கு) அஞ்சுகின்ற ஆண்கள் மகளிர்
கலிகாலம் காட்டும் துணிவு.

மதுரை பாபாராஜ்

நண்பர் வெங்கடேஷ் துபாயில் இருந்து நாள்தோறும் கோபுரப் படம் ஒன்றை காலையில் அனுப்புவார். அவரை வாழ்த்திய கவிதை:

[12/12, 8:05 AM] Venkdubai:

இன்றைய கோபுர தரிசனம்
அருள்மிகு ஸ்ரீ திருமலைக் குமாரசுவாமி திருக்கோயில்,
பண்பொழி,
தென்காசி மாவட்டம்.

[12/12, 8:23 AM] Madurai Babaraj:

கோபுரத்தைப் பார்த்தாலே நற்பேறு என்பார்கள்!
கோபுரத்தை நாள்தோறும்  நாங்களிங்கே  பார்ப்பதற்குத்
தூதுவிட்டு வாய்ப்பளித்து இங்கே வணக்கத்தைக்
கூறுகின்ற அன்பினை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

பேச்சும் எழுத்தும்,!

பேச்சாற்றல் உள்ளோர் எழுதத் @தெரியாது!
ஆற்றலுடன் நாளும் எழுதுவோர் பேசமாட்டார்!
பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றல் இவ்விரண்டும்
ஊற்றெடுத்தால் மக்கள் தலைவராவார்
நாட்டிலே!
ஆற்றல் தலைமைக்(கு) அழகு.

மதுரை பாபாராஜ்

வள்ளுவன்வாக்கு 500

11.12.19

வள்ளுவன் வாக்கு நிகழ்ச்சிகள் ஐநூறு
நல்லநல்ல சிந்தனையை நாளும் விதைத்து
எல்லோரும் சிந்திக்க நற்கருத்தைத் தூவிட
நல்வாய்ப்பு தந்த வெளிச்சம் தொலைக்காட்சி
இவ்வுலகில் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

Tuesday, December 10, 2019

மோகித் அனுப்பியது

ஒருபக்கம் நிற்கும் மரங்கள் வரிசை!
ஒருபக்கம் மஞ்சள் மலர்களின் கூட்டம்!
இரண்டின் நடுவிலே நீண்டுசெல்லும் சாலை!
அழகான காட்சி வணக்கத்தைக் கூறும்
உயர்வான பண்பினை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்
12.12.19