Wednesday, January 30, 2008

இது நல்லதல்ல!

உயர்ந்த கட்டடத்தைத் தங்கள் உழைப்பால்
உயர்த்தும் திறன்படைத்த மக்கள்--துயரம்
பிழிந்தெடுக்க வாழ்க்கைத் தரத்திலே தாழ்ந்தே
விழிபிதுங்கும் கோலமேன்?செப்பு.

சீரடி சாய்பாபா காத்திடுவார்!

நினைக்க நினைக்க நினைவில் அமுதம்
சுனையாய்ச் சுரந்தே மணக்கும்--அன்புடன்
தாள்பணிவோம்!இங்கே துணைநிற்பார்!சீரடி
சாய்பாபா காத்திடுவார் சாற்று.

நடக்க முடியாத விந்தை நடக்கும்!
கடக்க முடியாத காட்டை--கடப்பதற்கும்
காட்சிகள் தென்படும்!காட்டுவார் பாபாதான்!
போற்றிப் புகழ்வோம் புரிந்து.

என்றுவரும் ஒற்றுமை?

அருகருகே மாநிலத்தார் அன்னியராய் மாறி
பெரும்பகையைக் கக்கும் பிழையை--கருத்திழந்தே
இந்தியத்தாய் கண்கலங்க இங்கே விதைக்கின்றார்!
என்றுவரும் ஒற்றுமைதான் ஈங்கு.

கல்வியே அழகு

உழவுக்கு விளைச்சல் அழகு! 
 ஊருக்கு கோயில் அழகு! 

குழந்தைக்கு மழலை அழகு! 
 குளத்துக்குத் தண்ணீர் அழகு!

 மலைகளுக்கு உயரம் அழகு! 
 மனிதனுக்கு ஒழுக்கம் அழகு!

 கலைகளுக்குத் திறமை அழகு! 
 கண்களுக்கு ஒளியே அழகு! 

 நிலவுக்கு முழுமை அழகு! 
 நினைவுக்குத் தூய்மை அழகு! 

பழத்திற்குச் சுவையே அழகு! 
வாழ்க்கைக்கு படிப்பே அழகு.

Tuesday, January 29, 2008

தீர்வு!

தவறுகள் செய்துவிட்டால் செய்திட்ட உள்ளம்
தவறை உணர்ந்து தனக்குள்--குவிக்கின்ற
குற்ற உணர்வில் மன்னிப்பு கேட்பதே
உற்றதோர் தீர்வாம் உணர்.

மோக வலை!

பணமென்னும் மோகவலைப் பின்னலிலே சிக்கித்
திணறித் திசைமாறி மக்கள்--மனமெல்லாம்
மாசுகளின் ஊற்றாக மாறித் தடுமாறி
வேடமிட்டே வாழ்கின்றார் பார்.

வெற்றி மனிதன்!

மதுவை இறைச்சியை இங்கே விலக்கு!
குதித்திடும் அய்ம்புலன் கூத்தை--நதிகளைக்
கட்டுப் படுத்தும் அணைபோல் தடுத்திடு!
வெற்றி மனிதன்தான் நீ.

தேவை இந்த வெறி!

இந்தவெறி அந்தவெறி எந்தவெறி யானாலும்
இங்கே அரும்பும் நிலையிலேயே--மண்ணோடும்
வேரோடும் கிள்ளி எறிந்துவிடு!கற்கின்ற
ஓர்வெறியை மட்டும் வளர்.

பணிவே உயர்வு

வழ்வில் அடிபட்டால் வாலாட்டும் ஆணவம்
தூள்தூளாய் தூர்ந்தே நொறுங்கிவிடும்--கேள்மனமே!
என்றும் பணிவாய் இருந்தால் திசையெட்டும்
நின்றே நிலைக்கும் உயர்வு.

DAY AND EVERYDAY!

MONDAY IS THE FIRST DAY
FIRST IS THE AIM EVERY DAY!

TUESDAY IS THE SECOND DAY
SECOND THE GOOD THINGS EVERYDAY!

WEDNESDAY IS THE THIRD DAY
THIRD RATE THOUGHTS AVOID EVERYDAY!

THURSDAY IS THE FOURTH DAY
PUTFORTH BEST THOUGHTS EVERYDAY!

FRIDAY IS THE FIFTH DAY
ABHOR FIFTH COLUMNS EVERYDAY!

SATURDAY IS THE SIXTH DAY
SIXES AND SEVENS BLOCK EVERYDAY!

SUNDAY IS THE SEVENTH DAY
HUMANISM IS THE HEAVEN'S WAY!

Monday, January 28, 2008

உறவின் எல்லை!

முன்னணியில் பிள்ளைகளை முன்னேற்றி பெற்றோர்கள்
அன்பாகப் பார்த்தே அகங்குளிர்வார்--தன்வாழ்வில்
பங்கெடுக்கத் தக்கதுணை வந்துவிட்டால் பெற்றோரைப்
பின்னணியில் தள்ளிடுவார் காண்.

(பி.கு.இதுதான் நடைமுறை. இது தவறல்ல)

நம்பிக்கைதான் வாழ்க்கை!

விழிகளில் ஒளியை ஏற்று--நாளை
விடியலைப் படைத்துக் காட்டு!

வன்முறைப் பாதையைத் தூற்று--அது
என்றும் வேதனை ஊற்று!

அறநெறி தென்றல் காற்று--அது
அமைதிக்குப் பாடும் வாழ்த்து!

வறுமைப் பிணியைப் போக்கு--அதற்கு
வழிகளைத் திரட்டி முடுக்கு!

துரோகம் செய்வதை நீக்கு--நெஞ்சில்
தூய எண்ணத்தைத் தேக்கு!

எதற்கெடுத் தாலும் விரக்தி--பொங்கும்
நிலையை உடனே துரத்து!

நம்பிக் தான் வாழ்க்கை--அதில்
மலரும் வெற்றிப் பூக்கள்!

சமுதாயம்

இப்படிப் போனால் இடித்துரைக்கும்!சற்றேநாம்
அப்படிப் போனால் அடிக்கவரும்--எப்படிப்
போனால் எனக்கென்ன என்றிருந்தால் தேடிவத்நு
தான்வணங்கும் நம்மை வலிந்து.

Sunday, January 27, 2008

தேசத்தந்தையைப் பேசச் சொல்லுங்கள்!

(கவியரங்கக் கவிதை-07.10.07-வாசல் கவிதை அமைப்பு)

என்பெயரை வைத்தேதான் வணிகம் செய்வார்!
எண்ணற்ற வன்முறையில் வதையும் செய்வார்!
தனிமனித நல்லொழுக்கம் எல்லாம் போச்சு!
தரங்கெட்ட அரசியலே நாட்டின் மூச்சு!

தீண்டாமைக் குற்றங்கள் ஊற்றாய் ஊறும்!
தினவெடுத்த சாதிவெறி நதியாய் ஒடும்!
தூண்டிலிடும் மதவெறியோ புயலாய்ச் சீறும்!
தூண்டிலுக்குள் சிக்கவைத்து நாட்டைத் தாக்கும்!

குண்டுகளே துளைக்காத மேடைக் குள்ளே
கூடித்தான் அச்சமில்லை என்றே சொல்வார்!
வன்முறையின் கல்மழையில் நடந்நு சென்றேன்!
வந்தவழி ஒப்பிட்டேன் நொந்து நின்றேன்!

அகிம்சைக்கும் அமைதிக்கும் கொள்கை காத்தேன்!
அவையெல்லாம் கானலாச்சு நடுங்கிப் போனேன்!
அகங்குளிர சமத்துவத்தை மூச்சு என்றேன்!
அதனுடைய மூச்சைத்தான் நிறுத்தக் கண்டேன்!

புறங்குளிர காந்தியத்தைக் காப்போம் என்பார்!
அகத்திற்குள் நடைமுறைக்கே ஏற்கா தென்பார்!
முரண்பாட்டின் உருவமாக இயங்கக் கண்டேன்!
பூசணியை சோற்றினிலே மறைக்கக் கண்டேன்!

இதுதானா நான்வாழ்ந்த அருமை நாடு?
என்கனவு வீணாகிப் போன கூடு!
வறுமைக்கு மூடுவிழா நடத்தி னால்தான்
மகாத்மாவாய் வாழ்ந்ததற்கே அர்த்த முண்டு!

இதுதான் வாழ்வா?

சிறுவர் சிறுமியரின் ஏக்கமிகு சொற்கள்
முறுக்கிப் பிழியும் மனதை-- வறுமைத்
தணலில் புழுவாய்ந் தவித்திருப்பாள் தாய்தான்!
மனமிருந்தும் மார்க்மில்லை!பார்.

எழுத்தாளன் நிலை!

வளரும் பொழுதோ வளரவேண்டும் என்பார்!
வளர்ந்ததும் சென்றால் வளரும்--இனந்தளிர்க்கு
வாய்ப்பைத் தரவேண்டும் என்பார்!உலகினில்
வாய்ப்பு வருவதென்றோ?சொல்.

இறுமாப்பை நீக்கு!

கண்டதே காட்சியாய் கொண்டதே கோலமாய்
என்றும் ஒருகூட்டம் வாழ்கிறதே--நன்றா?
இதுநன்றா?சிந்தித்து வாழப் பழகி
இறுமாப்பை நீக்கினால் நன்று.

வயதுக் கோளாறு!

புரியாத வயதில்
புரிந்துபோல்
தோன்றும்!

தெரிந்தோ தெரியாமலோ
காதலிக்கத்
தூண்டும்!

தூண்டிலுக்குள் சிக்கித்
தவிக்கின்ற போது
கண்மூடி வாழ்ந்ததைக்
கண்டிக்கத் துள்ளும்!

பாதிவழி வந்தபின்பு
பட்டறிவு
தீண்டும்!

மீதிவழி தத்தளித்து
மீள்வதற்கே
உள்ளம் வேண்டும்!

நாடே இவர்கள் கைகளில்!

சின்னக் குழந்தைகள் செல்லமான மொட்டுக்கள்
பன்முக ஆற்றல்கள் பாடிவரும்--தென்றல்
அரும்புகள்!வாய்ப்புகளைத் தந்துவிட்டால் நாட்டின்
பெருமையைக் காப்பவர்கள் !சற்று.

பும்பா!சுட்டிடிவி

பும்பா நடத்தும் நகைச்சுவைக் காட்சிகளைக்
கண்டு ரசித்தே மகிழலாம்--இங்கேயோ
சுட்டிடிவி காட்டும் நிகழ்ச்சிகள் எல்லாமே
குட்டிகளை ஈர்க்கிறது பார்.

பார்வையாளர்!

கல்லால் அடித்தார்!கணைகொண்டு தாக்கினார்!
சொல்லால் அடித்துத் தடிக்கவைத்தார்--எல்லாம்
பொறுத்தேன்!உடலில் உலவும் உயிரை
எடுக்கின்றார்!பார்வையாளன்!நான்.

Thursday, January 24, 2008

வெற்றுக்குடம்!

கல்வி யறிவற்றோர் காட்டும் மரியாதை
துள்ளலே அற்ற நிறைகுடம்--கல்வியைக்
கற்றும் மரியாதை காட்ட மறுப்பவர்கள்
வெற்றுக் குடமே விளம்பு.

ஆயிரம் தேள்கள்!

விழுதொன்றே கோடரிக் காம்பாய் விரைந்து
மளமள வென்றேதான் வெட்டும்--நிலையெடுத்தால்
ஆலமரம் என்செய்யும்?ஆயிரம் தேள்கொட்டும்
கோலத்தை ஏற்றிருக்கும் கூறு.

இல்லத்தரசியே உறவிழை!

நண்பர்கள்,உறவினர்கள் நாளும் வருவதும்
தங்கிப் பழகுவதும் தன்னடக்கப்--பண்புகள்
பொங்கிவரும் இல்லத் தரசி வரவேற்கும்
அன்பில்தான் என்றே உணர்.

இந்திய விடுதலை நாள்- மணிவிழா-15.08.2007

வளர்ச்சியும் உண்டு!தளர்ச்சியும் உண்டு!
தளர்ச்சியைப் போக்க உழைப்போம்--உயர்வோம்!
மணிவிழா இந்தியா கொண்டாடும் நாளில்
வணங்கியே சூளுரைப்போம் வா.

மதம்பிடித்த யானை!

தூண்டித் துருவித் துரும்புகளைத் தூணாக்கி
தூண்டில்முள் போலத் துடிக்கவைத்துச்--சீண்டிக்
குதறிச் சினமென்னும் குன்றேறி நிற்போர்
மதம்பிடித்த யானை!விளம்பு.

என்று திருந்துவார்?

சொல்லித் திருந்தவேண்டும்!இல்லை, அனுபவங்கள்
சொல்லித் தருவதில் பட்டுத் திருந்தவேண்டும்!
இந்த இரண்டில் திருந்தாத உள்ளங்கள்
என்று திருந்துமோ சொல்.

பிறப்பும் இறப்பும் வாய்ப்புகளே!

ஒருவன் வரலாற்றை உண்டாக்கிக் காட்ட
தருகின்ற வாய்ப்பே பிறப்பு--தரப்பட்ட
வாழ்வை வரலாறாய் மாற்றி முடித்துவிட்டுக்
காலமாகும் வாய்ப்பே இறப்பு.

தாய்மண்!

பிறப்பிலும் இந்தியன்!ஆயுள் முடியும்
இறப்பிலும் இந்திய னாக--இறக்கவேண்டும்
இம்மண்ணில் என்றே விரும்புகின்றேன்!எம்மண்ணும்
இம்மண்ணுக் கீடாமோ?சொல்.

நியாயமா?

உயிருடன் இங்கே உலவும் பொழுதில்
மரியாதை தந்தால் நிறைவு--சரிந்த
மலராய் இறந்த பிறகு மதித்தால்
உலகே!நியாயமா?சொல்.

Wednesday, January 23, 2008

மகிழ்ச்சியை இழக்காதே!

ஒருநாள் மகிழ்ச்சியை வாழ்வில் இழந்தால்
ஒருநாள் திரும்பி வராது--அரும்புகின்ற
ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாய் வாழுங்கள்!
இவ்வுலக வாழ்க்கை இனிது.

அந்தநாள் எந்தநாள்?

ஒவ்வொரு நாளும் முடியும் பயணத்தில்
இவ்வுலகில் அந்தநாள் எந்தநாள்?--அவ்வொரு
நாளே இறுதிநாள்!வாழ்விலே என்றென
யாரே விளம்புவார்?சொல்.

கறுப்புப் பணம்!

திரைகட லோடி திரவியம் தேடித்
திரையிட்டு மூடித் திளைத்தல்--நரைவெளுப்பை
வண்ணக் கலவையால் மாற்றி நிலைக்கவைக்க
எண்ணும் வெறியைப்போல் வீண்.

இரும்பு மனிதர் வல்லபாய் படேல்!


தனித்தனிப் பூக்களாய் இந்திய ரெல்லாம் அணியணி யாகத்தான் நின்றார்--துணிந்தே 
ஒருங்கிணைத்தே இந்தியா மாலையைத் தந்தார்! 
இரும்பு மனிதர்தான் இங்கு.

அழகு!

இந்த வயதில் அதுபோன்ற எண்ணங்கள்
அந்த வயதில் இதுபோன்ற எண்ணங்கள்
வந்தால் அழகல்ல!அந்தந்த காலத்தில்
அந்தந்த எண்ணம் அழகு.

கனியிருக்க காய்கவர்தல் நன்று!

வெண்பா எழுத,கனியிருக்க காய்களை
நன்கு கவரத்தான் வேண்டும்--நண்பா!
கனிச்சீரை ஏற்காது!காய்ச்சீரை ஏற்கும்!
கனியிருக்க காய்களே நன்று.

பாரதியை வாழ்த்து!

கவிதைச் சிறகைக் கடைசி வரையில்
விரித்தான்!விரித்தான்!விரித்தான்!--எரிதணல்
சொல்லால் எரித்தான்!எரித்தான் மடமையை!
வல்லவன் பாரதியை வாழ்த்து.

மகிழ்ச்சியாய் வாழ்வோம்

இருப்பதோ இங்கே சிலநாள்கள் தானே!
கருத்துமோதல் கொண்டு கனன்றே--இருக்கும்
சிலகாலந் தன்னைச் சிதைத்துச் சினந்து
கலக்கமுடன் வாழ்வதேன் சாற்று?

மகிழ்ச்சியாய் வாழ்வதற்கே வாழ்க்கை!கிடைக்கும்
மகிழ்ச்சியை சீர்குலைக்கும் போக்கை--அகத்தில்
களையாய் வளரவிட்டு வேடிக்கை பார்த்தால்
உளைச்சலே மிஞ்சும் உணர்

தெய்வீகம் கூடிவரும்!

நல்லநல்ல எண்ணங்கள் நாளும் மலர்கின்ற
இல்லத்தில் தெய்வீகம் கூடிவரும்--உள்ளத்தில்
என்றும் மனிதநேயப் பண்புகள் ஊற்றெடுக்கும்!
நிம்மதி தங்கும் நிலைத்து.

INTERNAL BROODING!

INTERNAL BROODING OF THE MIND
SWIRLS LIKE INVINCIBLE TSUNAMI WIND!
UNBRIDLED THOUGHTS RUN HELTER-SKELTER!
MIND THROBS BETWEEN SCYLLA AND CHARYBIDS!
OBLITERATE THE STRUCTURE OF PEACE!
SOBS AND SOBS AND BLEEDS AND BLEEDS!
DISMANTLES AND SHATTERS ALL THE HOPES!
LIFE BECOMES MISERABLE
UNABLE TO UNFOLD THE BURNING THOUGHTS!
HOPE AT LAST FADES AWAY!
RECONCILIATIONS END IN FIASCO!
SHAKESPEARE IS CORRECT:
LIFE IS FULL OF SOUND AND FURY
SIGNIFYING NOTHING!

Tuesday, January 22, 2008

உள்ளாடும் துன்பம்!

உள்ளத்தில் உள்ளாடும் துன்பத்தின் கோலத்தைத்
தெள்ளத் தெளிவாய் முகந்தன்னில்-- அள்ளித்
தெளித்தே அனைவருக்கும் காட்டிவிடும்!பார்ப்போர்
தவித்தே தயங்கிடுவார் சாற்று.

Friday, January 18, 2008

சமச்சீர் கல்வி!

அனைவருக்கும் நல்ல தரமான கல்வி
முனைப்பாக வந்தாக வேண்டும்--மணக்கும்
சமத்துவம் மக்களாட்சி தத்துவம் என்றும்
கமழவைக்கும் இக்கல்வி காண்.

மாணவன் ஏழையா?இல்லை செல்வனா?
ஊனமடா இக்கேள்வி!பள்ளியில்--தேன்தான்
சமச்சீர் முறைக்கல்வி!இங்கே திறமை
அமைக்கும் அளவுகோல் தான்.

அளவுடன் உண்போம்!

தேவை எனத்தெரிந்தால் தேக்கும் நிலையெடுக்கும்!
தேவைக் கதிகமெனில் தேடி வெளியேற்றும்!
ஆவலைப் போக்கி அளவுடன் உட்கொண்டால்
நோவாது நாளும் வயிறு.

திடக்கழிவு மற்றும் திரவக் கழிவும்
உடலில் இருந்து வெளியேற வேண்டும்!
தடையின்றிச் செல்லவில்லை என்றால் நாளும்
முடைநாற்றம் வீசும் உணர்.

ஏற்றத்தாழ்வு!

உழைக்கின்ற வர்க்கம் ஒருகோடி பார்க்கும்
நிலையில்லை இந்த உலகில்--திரையில்
உழைப்பதுபோல் காட்டி ஒருகோடி ஈட்டிப்
பிழைப்பது நீதியா?சொல்.

வாழ்வில் பெயரன்கள்!

(சுசாந் சிரிராம்-நிக்கில் அபிசேக்)

இரண்டு பெயரன்கள் என்னிரண்டு கண்கள்!
சுரக்கின்ற இன்பத்தில் துள்ளி-அரவணைத்தே
அன்பைப் பொழிந்து விளையாடி நேரத்தை
நன்றாய்க் கழிக்கின்றேன் நான்.

ஓடுகின்றார்!ஓடி விழுகின்றார்! வம்பிழுத்துப்
பாடுகின்றார்!தாத்தாவை ஓடவைத்து-ஊடுகின்றார்!
பாட்டியிங்கே ஊட்டிவிடப் பண்பில் வளர்கின்றார்!
லூட்டி அடிக்கின்றார் பார்.

சீரடி பாபாவுக்கு பக்தியே உயிர்!

பூவோ,பழமோ,வெறும்நீரோ பக்தியுடன்
ஆவலுடன் தந்துவிட்டால் ஏற்றிடுவார்--பாமணக்கும்
பக்தியைத்தான் பார்ப்பார்!பகட்டான பக்தனை
எக்காலும் பார்க்கமாட்டார்!சொல்.

வர்க்க பேதம் ஏன்?

அன்றாடத் தேவைக்கே அல்லாடும் கூட்டமுண்டு!
பண்பாட்டைச் சீரழிக்கும் பாதகத்தைச் செய்தேதான்
கொண்டாடிக் கூத்தடிக்கும் கூட்டமும் இங்குண்டு!
இன்னுமிந்த வர்க்கபேதம் ஏன்?

பிறக்கும் அனைவருக்கும் வாழ உரிமையுண்டு!
சிறப்பதற்கு வாய்ப்பை வழங்கி-- சறகடித்து
முன்னேறி வாழவிடு!வர்க்கபேதம் உண்டாக்கும்
தன்னலத்தைத் தூக்கி எறி.

கற்பூரக் காற்று!

கற்றுத் தெளியவைத்துக் கல்லைக் கனியாக்கும்
அற்புதக் கல்வியை ஏற்காதோர்--கற்பூரக்
காற்றின் நறுமணத்தைச் சற்றும் உணராத
காட்சிப் பொருளென்றே சாடு.

போக்குவரத்து விதிகளைப் போற்று!

ஊர்மக்கள் கூடிநின்று தேரை இழுத்தால்தான்
தேரும் நகர்ந்துவரும்!செண்பகமே--ஊர்மக்கள்
போக்கு வரத்து விதிகளைப் போற்றினால்தான்
காக்கலாம் இன்னுயிரைத் தான்.

திருந்துவாரா?

நாய்கள் மனிதரிடம் நன்றி மறவாதே
தேய்ந்தளிவாய் என்றேதான் சொன்னதும்--தேய்ந்தாலும்
நன்றியைப் போற்றமாட்டோம் என்றனர்!நாய்களோ
நொந்து நகைத்தன பார்த்து.

Wednesday, January 16, 2008

சிரித்து வாழ்வோம்

கண்ணீர் பெருக்கெடுக்க நூறுவகைக் காரணத்தை
மண்ணுலக வாழ்க்கை உனக்களித்தால்--புன்னகைத்து
வாழ முடியுமென்றே ஆயிரம் காரணங்கள்
வாழ்க்கைக்குக் காட்டவேண்டும் நீ.


TRANSLATION OF:

IF LIFE GIVES YOU A 100 REASONS TO CRY

SHOW THAT YOU CAN GIVE LIFE 1000 REASONS TO

SMILE.

குறளே ஒழுக்கம்

உடலின் அழுக்கோ குளித்துவிட்டால் நீங்கும்!
உடலைச் சுமக்கும் மனத்தில்--படரும்
அழுக்கோ குறள்நெறியைப் போற்றி நடக்கும்
ஒழுக்கத்தால் நீக்கலாம் பார்.

சமத்துவப் பொங்கல்

கழனிகளில் நல்லுழைப்பைச் சிந்தும் உழவர்
தரணியில் சாதிமதம் பார்த்தா -- சுழன்றே
உழைக்கின்றார்!இங்கே கழனிகளும் நல்ல
விளைச்சலைப் பொழிகிறது?சொல்

எங்கிருந்த போதும் உலகமக்கள் வாழ்வதற்கு
தங்குதடை இன்றியே இன்னுயிரை--என்றென்றும்
காக்கும் உழவருக்கு நன்றிகூறும் உள்மனத்தைக்
காட்டுவதே இப்பொங்கல் நாள்.

சாதிமதப் பேதத்தைத் தூக்கி எறிந்துவிட்டு
மேதினியில் எல்லோரும் ஒன்றென்று--நீதிக்குத்
தூதுவிடும் பொங்கல் சமத்துவப் பொங்கலை
வீடுதோறும் கொண்டாடக் கூடு.

Monday, January 14, 2008

வன்முறைக் காற்று!

பிடிமானம் இல்லாத வாழ்க்கை!நாளும்
கடிவாளம் இல்லாத ஆசை!--வெறியாட்டம்
துள்ளுகின்ற உள்ளம்!இவைகள் நெறிபிறழத்
தள்ளிவிடும் வன்முறைக் காற்று.

சுமைகளா? இமைகளா?

முதியவர்கள் வீட்டின் சுமைகளே என்று
வெறித்தே ஒதுக்குகின்றோர் உண்டு--மதித்தே
முதியவர்கள் வாழ்வின் இமைகளே என்று
துதிப்பவரும் நம்மிடத்தில் உண்டு.

உயிர்நாடி!

வட்டிக் கணக்கிலே வாழத் துடிப்பவர்கள்
குட்டிக் கரணங்கள் போட்டாலும்--எட்டாதம்மா
வாழ்க்கைக் கணக்குதான்!நட்பும் உறவிழையும்
வாழ்வின் உயிர்நாடி!காண்.

உலக வாழ்க்கை!

அமைதியாகத் தோன்றுகின்ற இந்த உலகம்
சுமைகளை இல்லங்கள் தோறும்-- சுமைதாங்கிக்
கற்களாக உள்ளத்தை மாற்றிச் சுமக்கவைத்தே
பற்றற்று வாழவைக்கும் பார்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு கவலைகள்
கவ்வித்தான்,பூனை எலிதன்னைக் -- கவ்விப்
பிடித்தேதான் விட்டுக் குதறுதல்போல் நாளும்
துடிக்கவைத்துப் பார்க்கிறதே கூறு.

அறிவுரை!

அறிவுரை என்றால் அரைகாத தூரம்
தெறித்தேதான் ஓடுகின்ற போக்கு -- நெறியுடன்
வாழும் அமைப்பைத் தகர்க்கும் தடைக்கல்லாம்!
வாழ்வின் தளமிதுதான் சாற்று.

முக்கி முணங்காமல் முன்னோர்கள் சொன்னபடி
எப்பொழுதும் நல்லொழுக்கம் போற்றித்தான்-- தப்பாமல்
வாழவேண்டும் தம்பி! வழுக்கல் சறுக்கலின்றி
வாழவைக்கும் உன்னை வளர்த்து.

அழியும் மதிப்பு!

வயிரம் வயிரத்தை இங்கே அறுத்தால்
ஒளியால் உயரும் மதிப்பு--உயிரை
உயிரால் அறுத்தால் அமைதி குலைந்து
அழியும் குடும்ப மதிப்பு.

இசை!இறப்பு!

புல்லாங் குழலின் துளைகளில் உட்காற்று
துள்ளி வெளிவந்தால் தேனிசை-- துய்க்கும்
உடலின் துளையில் உயிர்க்காற்று வந்தால்
உடனே இறப்புதான் கூறு.

உணவும் செல்வமும் கேடு!

உட்கொள்ளும் நம்முணவு நம்முடலில் தங்கிவிட்டால்
மட்கலமாம் மேனிக்குத் தீங்குதான் -- அட்டியின்றி
வந்துசேரும் செல்வத்தை மற்றவர்க்கோ ஈயாமல்
தங்கவிட்டால் வாழ்க்கைக்கு கேடு.

குறிப்பு சிவாஜி பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் கருத்து.

Friday, January 11, 2008

ஓட்டையில் நிற்கும் காற்று

ஒன்பது ஓட்டைகள் உள்ள உடலுக்குள்
நின்றுலவும் வாழ்வின் உயிர்க்காற்றோ -- என்று
வெளியேற வேண்டுமோ அன்றுதான் துள்ளி
வெளியேறும்! விந்தைதான் சாற்று.

Tuesday, January 08, 2008

பண்படுத்தும் சொற்களைப் பேசு

மற்றவர் உள்ளத்தைப் புண்படுத்தும் சொற்களை
எப்பொழுதும் பேசவே கூடாது--அப்படியே
பேசவேண்டும் என்றாலோ பண்படுத்தும் சொற்களால்
பேசுதல் என்றுமே நன்று.

இருக்கும் போதே மதி!

உயிருடன் இங்கே உலவிடும் போது
வயிற்றுப் பசிக்கோ உணவே-- அளிக்காமல்
இவ்வுலகை விட்டே இறந்தபின் தேன்படையல்
எவ்வளவு போட்டாலும் வீண்.

உன் கடமை உனக்கே

அவரவர் வாழ்வின் கடமைகள் தம்மை
அவரவர் செய்தல் ஒழுக்கம் -- தவறியும்
மற்றவரை ஏவும் மனப்போக்கைக் கொள்ளாதே!
முற்றிவிடும் சோம்பல் உணர்.

ஒருமனித ராணுவம்!

கலவர பூமியாக கல்கத்தா மாறி
கலங்கிநின்ற நேரத்தில் காந்தி-- கலங்காமல்
சென்றே ஒருமனித ராணுவமாய்ச் சந்தித்தே
வென்றார் அறவழியில் நின்று.

மரியாதை!

பெரியவர்கள் போற்ற சிறியவர்கள் தானே
மரியாதை தந்துவாழ வேண்டும்-- மரியாதை
இல்லாதப் பண்பும் பணிவற்ற வக்கிரமும்
தொல்லைக்கே வித்தூன்றும் சொல்.

Monday, January 07, 2008

கோழைத்தனமல்ல!

பெருந்தன்மை கோழைத் தனமல்ல வாழ்வில்
பெருங்கடலாய் இப்பண்பு பொங்கிப்-- பெருக்கெடுத்தால்
நிம்மதியும் நல்லமைதித் தென்றலும் நம்மிடத்தில்
தங்கித் தழைத்திருக்கும் காண்.

சுற்றம் பட்டுவிடும்

மற்றவர் எப்படி என்றே கணக்கிட்டுக்
குற்றத்தை எண்ணும் மனங்கொண்டால் -- சுற்றத்தின்
வேர்களோ பட்டுவிடும்! நெஞ்சக் குமுறலே
வாழ்வாகி தாழ்த்திவிடும் காண்.

காலம் மாற்றும் திசை

இப்படிச் செல்லவேண்டும் என்றொரு பாதையை
எப்படியோ தேர்ந்தெடுத்துச் சென்றிருப்போம் -- அப்பொழுது
காலமோ நம்வழியை மாற்றியே வேறுவழி
போவதற்குக் காட்டிவிடும் காண்.

Friday, January 04, 2008

கொள்கையுடன் வாழ்

எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் ஒற்றுமை வேண்டும்!
எழுத்தும் நடைமுறையும் இங்கே -- நழுவும்
நிலையிருந்தால் இவ்வுலகம் போற்றாது தூற்றும்!
நிலைபிறழாக் கொள்கையுடன் வாழ்

தேனும் தேளும்

தேடிக் கொணர்ந்ததோ தேனாய் இருக்குமென்றே
மூடியை நானும் திறந்துருந்தேன் -- நாடி
வெடுக்கென்று கொட்டியது தேளென் றுணர்ந்தேன்!
கடும்வலி தந்தது காண்.

குறளும் காந்தியும்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடலென்ற -- நன்னெறிக்குச்
சான்றாக காந்தியைக் காட்டிலும் பண்பாளர்
ஈங்கொருவர் உண்டோ புகல்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வென்ற -- வள்ளுவத்தின்
நற்சான்றாய் காந்திமகான் இன்றளவும் வாழ்கின்றார்!
அற்புதமே அண்ணலின் வாழ்வு.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று -- புனிதமான
இந்தக் குறளுக்கு காந்தியண்ணல் மட்டுந்தான்
பண்பான சான்றாவார் பார்

பெற்றோர் சொல் கேள்!

பெற்றவர்கள் சொல்லை மதிக்காத பிள்ளைகள்
மற்றவர்கள் சொல்லை மதிப்பாரோ -- சுற்றம்
சிறப்பதற்கு பெற்றோர் அறிவுரையை ஏற்று
நடந்தால் மணம்பரப்பும் வாழ்வு.

Wednesday, January 02, 2008

ENGLISH VERSES

MOON IS BOON
OH! MY CHILD! SEE THAT MOON!
MOON IS ROUND AND NATURE’S BOON!
IT IS ROLLING ON THE SKY ROUTE!
SKY IS LOOKING BRIGHT AND CUTE!
LOVELY CHILD! TAKE THIS FOOD!
MOON WILL COME TO YOUR FOLD !

WILLING GUESTS

COME ON ! COME ON! CHEERFUL CROWS!
TASTE AND EAT THIS FOOD IN ROWS!
BABY WANTS TO SEE YOU ALL
EAT HER FOOD WITH YOU ALL!
WILLING GUESTS LANDED ON THE WALL!
BABY CLAPS HANDS LIKE DOLL!

TREE OF PRIDE

TALL AND HEFTY STANDING TREE !
CURVES AND BENDS! I HATE THEE!
OH!MY NEIGHBOUR YOU ARE UGLY
CURVES AND BENDS MAR YOUR BODY!
SEE MY BODY SYMBOL OF BEAUTY!
NOTHING CAN MATCH THIS IMMORTALITY!
ONE DAY WOOD-CUTTER CAME THAT SIDE
MARK THE TALL AND HEFTY TREE OF PRIDE!
TOOK HIS AXE AND CUT THE TRUNK!
TREE FELL DOWN WITH A BUMP!
OH!MY NEIGHBOUR I AM SORRY!
LEARNT MY LESSON! VERY SORRY!






DO YOUR DUTY

DAZZLING RAYS OF MORNING SUN
PIERCE THE DOORS WITH EVERY FUN
GENTLY TAP THE EYES AND PEEP!
WAKE THE PEOPLE FROM THE SLEEP!
SUN NEVER RESTS SND DOES ITS DUTY
EVRY DAY WITH CARE AND CLARITY!
CHILDREN! CHILDREN! DO YOUR DUTY!
DUTY BRIGHTENS YOUR LIFE’S BEAUTY!

BEST TEACHER

OCEAN VAPOURS REACH THE CLOUDS!
LOVELY CLOUDS LASH SHOWERS ALOUD!
WATERY FALLS FROM MOUNTAIN’S JAWS
FLOW LIKE GLITTERING SILVER SHAWLS!
BRANCH ITS TRAVEL ON THE LANDS!
MINGLE WITH RIVERS IN ROLLING BANDS!
BENEVOLENT DEEDS SHOWER ON THE WAY!
GURGLING SOUND REFLECTS ITS GAY!
WATER, AT LAST, EMBRACES THE OCEAN!
STARTS WITH OCEAN AND ENDS WITH OCEAN!
MIRACULOUS PHENOMENON OF THE NATURE!
NATURE IS ALWAYS OUR BEST TEACHER!
===============================================
GENEROSITY

WE FEED THE COW WITH GRASS AND HAY!
COW IS GIVING HEALTHY MILK WITH GAY!
WE ALWAYS POUR ORDINARY WATER
TREES ARE GIVING DELICIOUS MATTER!
TIT FOR TAT NOT THEIR NATURE!
GENEROUS NATURE IS THEIR RAPTURE!
MADURAI BABARAJ