திருவிழா நாளில் ஊடகத்தார் கோலம்
கூத்தாட்டம் குத்தாட்டம் ஆபாசப் பேயாட்டம்
கூச்சலிட்டுக் கும்மாளம் போட்டேதான் பாடல்கள்
மூச்சுக்கு மூச்சிங்கே வக்கிரத்தைத் தூண்டிவிட்டு
ஊற்றாகும் ஊடகத்தில் பார்.
பெண்களை எப்படிக் கேலியும் கிண்டலும்
கண்டபடி செய்வது என்ற கலைகளையும்
கண்முன்னே செய்துகாட்டும் கோலத்தைக் காட்டுகின்ற
பண்பாட்டுச் சீரழிவைப் பார்.
வன்முறை, கற்பழிப்பு, வஞ்சகம் என்றேதான்
பெண்களைப் போகப் பொருளாக்கி, பார்ப்பவரின்
நெஞ்சில் வெறியேற்றும் தன்னலக் கூட்டணியார்
இந்தநாளில் வந்திருப்பார் பார்.
திரைப்படப் பாடலில் எப்படி நாங்கள்
வரைமுறை இன்றிக் குடும்பத்தார் மற்றும்
அனைவரும் இங்கே முகஞ்சுளிக்க சொற்கள்
அமைக்கின்றோம் என்றுரைப்பார் பார்.
சின்னத் திரைகளையோ வீட்டுக்கு வீடிங்கே
கண்சிமிட்ட நேரமின்றிப் பார்க்கின்றார் எல்லோரும்!
கண்றாவிக் காட்சிகளைப் பார்த்தால் பார்ப்பவரின்
எண்ணம் திசைமாறும் சொல்.
கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி
வேட்டுவைத்து ஒற்றுமையைச் சீர்குலைக்க வைப்பதென்று
காட்டிப் புகட்டுகின்றார்!மக்கள் மனநிலையும்
வேட்கைக்கே வித்தூன்றும் சொல்.
மக்களிங்கே நல்ல வழியில் நடைபோட
அக்கறை கொண்டு வரம்புகள் மீறாமல்
பக்குவமாய்த் தந்து நிகழ்ச்சிகளை சீரமைத்தால்
எத்தரப்பும் பாராட்டும் இங்கு.
மதுரை பாபாராஜ்