Wednesday, September 30, 2020

மொழிதெரிய வேண்டாம்

 மொழிதெரிய வேண்டாம்!


இசையை ரசிக்க மொழிதெரிய வேண்டாம்!

இசைபட வாழ மொழிதெரிய வேண்டாம்!

அகத்தொண்டு செய்ய மொழிதெரிய வேண்டாம்!

குழந்தையைக் கொஞ்ச மொழிதெரிய வேண்டாம்!

மொழிகளைத் தாண்டி உணர்வு.


மதுரை பாபாராஜ்

மகத்துவ நாள்கள் நான்கு

 

மகத்துவ நாள்கள் நான்கு!


வாழ்வின் சிகரம் முதியோர்! கலைமணக்க

வாழ்ந்தார் சிவாஜி கணேசன்! 

சைவஉணவு வாழ்வில் ஒருபகுதி

வாழ்கின்றார் மக்களிங்கே!

ஆர்த்தெழுந்த வீரமங்கை அன்னிபெசண்ட்

வந்தநாள்!

நான்கு தினங்களையும் வாழ்த்துகின்றோம் இன்றிங்கே!

பாங்குடன் வாழ்வோம் புரிந்து.


மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகருக்கு வாழ்த்து

 

கவனமாக வாழ்வோம்!

கிளையின் நுனியிலே உட்கார்ந்து பார்த்து

கவனமாய் காலை வணக்கத்தைக் கூறும்

அழகுப் பறவையே! வாழ்வில் மனிதன்

கவனமாய் வாழ்வதற்கு எச்சரிக்கும் உன்னைத்

தவறாமல் வாழ்த்தவேண்டும் சாற்று.


மதுரை பாபாராஜ்


இலையில் கலை

 இலைகளா? இலையில் சிலைகளா! என்றே

மலைக்கவைக்கும் வண்ணம் திறமையைக் காட்டும்

கலையின் படைப்புத் திறனை ரசித்தேன்!

கலைத்திறன் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்


சங்கச்சுரங்கம் பாலாவை வாழ்த்து

 பாலாவின் சங்கச் சுரங்கம்!


இணையப்பத்து-- இரண்டாம்பத்து!


எட்டாம் உரை!


03.10.20


தலைப்பு: தமிழ்கெழு கூடல்!


நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென

வரைய சாந்தமும் திரைய முத்தமும்

இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்

தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே!

( புறம்-- 58)


திருமாவளவன் -- பெருவழுதி


சோழனும் பாண்டியனும் சேர்ந்திருந்த காட்சியைப்

பார்த்தே மகிழ்ந்தார் புலவர்!  இதுபோல

சேர்ந்திருக்க வாழ்த்தி, புலியுடன் மீன்சின்னம்

பாறையில் எங்கும் பொறிக்கவேண்டும்

என்றுரைத்தார்!

போரைத் தவிர்க்கின்ற  ஒற்றுமை வேண்டுமென

வேந்தரைப்  போற்றினார் பார்த்து.


சங்கம் நிறுவித் தமிழாய்ந்த மாமதுரை

பொன்னகரைச் சேர்ந்த அரசனே! செங்கோலின்

தன்மை நழுவாமல் ஆளும் பெருமையைக்

கொண்ட மதுரைக் கரசனே என்றேதான்

தன்வாழ்த்தைக் கூறுகிறார் சாற்று.


இந்தந் தலைப்பைத் தலைப்பாக்கிப் 

பேசுகின்றார்

சங்கச் சுரங்கத்தில்  பாலா சனிக்கிழமை!

சங்கச் சுரங்க அரங்கத்தில் ஆர்வமுடன்

பங்கெடுக்கும் பாலாவை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


தாய்மை உணர்வு


 

புத்தம்புதுக் காலைக்கு வாழ்த்து

 புத்தம் புதுக்காலை என்ற குறும்படங்கள்

சின்னத் திரையிலே ஐந்து இயக்குநர்கள்

கண்களுக்கு நல்ல விருந்தளிக்கும் வண்ணத்தில்

பன்முக ஆற்றலைக் காட்டி எடுத்துள்ளார்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்


Tuesday, September 29, 2020

நண்பர் IG சேகருக்கு வணக்கம்

 நண்பர் IG சேகருக்கு வணக்கம்!


உல்லாச மாகப் பறந்துவரும் நாரையே!

உள்ளார்ந்த நட்புடன் நண்பர் அனுப்பிய

அன்பான காலை வணக்கத்தைத் தேடிவந்தே

இன்று தருகின்றாய் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


குறுந்தொகை

 குறுந்தொகை!


குறுந்தொகை கேட்டேன்! கொடுக்கிறேன் என்றார்!

குறுநகை ஏந்தி அகநானூ றாக,

புறநானூ றாகத் தருகிறேன் என்றார்!

குறுந்தொகை நூல்கேட்டேன் நான்படிக்க என்றேன்!

எடுத்த தொகையை மறைத்துவைத்தார் பையில்! 

குறுந்தொகை நூல்தந்தார் வாங்கி நடந்தேன்!

குறுந்தொகைக்கா இத்தகைய பாடு?


மதுரை பாபாராஜ்


நண்பர் கே ஜி இராஜேந்திர பாபு பிறந்தநாள் வாழ்த்து

 கே  ஜி ராஜேந்திர பாபு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து


29.09.20


பன்முக ஆற்றலின் ஊற்றாய்த் திகழ்கின்ற

நண்பர் இராஜேந்ர பாபு சிறப்புடன்

அன்பு குடும்பத்தார் சுற்றத்தார் சூழ்ந்திருக்க

வண்டமிழ்போல்  வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்



நண்பர் IG சேகருக்கு வணக்கம்

 நண்பர் IG சேகருக்கு வணக்கம்.


வெள்ள நிறமோ சமாதானம் என்றுரைக்க

கள்ளமற்ற  செவ்வண்ணப் புள்ளே வணக்கத்தை

உள்ளம் மணக்க வழங்குகிறாய் நட்புடன்!

நல்லவர் வல்லவரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


Monday, September 28, 2020

சங்ககால மக்களின் நம்பிக்கை

 சங்ககால மக்களின் நம்பிக்கை!


அந்தந்த காலத்தில் தங்களது நம்பிக்கை

தந்த பழக்கத்தை மேற்கொண்டு வாழ்ந்ததைச்

சங்க இலக்கியங்கள் மக்களின் வாழ்வியலாய்க்

கண்முன் விளக்குதென்று செப்பு.


மதுரை பாபாராஜ்

முத்தொள்ளாயிரம் 70

 முத்தொள்ளாயிரம் 70


என்னை உரையல், என் பேர் உரையல், ஊர் உரையல்,

அன்னையும் இன்னள் என உரையல், பின்னையும்

தண் படா யானைத் தமிழ்நர் பெருமாற்கு என்

கண் படா ஆறே உரை


என்னையும் சொல்லாதே என்பெயரைச் சொல்லாதே 

என்ஊரைச் சொல்லாதே தாய்க்குணத்தைச் சொல்லாதே மன்னனிடம் தோழியே எந்தன் விழியிரண்டும்

துன்புற்றுத் தூங்க மறுக்கும் நிலைதன்னைச் 

சென்றேதான் காதலைச்  சொல்.


மதுரை பாபாராஜ்



மரணமிலாப் பெருவாழ்வு

 


மரணமிலாப் பெருவாழ்வின் இலக்கணம்!


இறப்பிற்குப் பின்னும் இறந்தவரின் பண்புச்

சிறப்புகளை மற்றவர்கள் போற்றிப் புகழ்ந்தால்

மரணமே இல்லாப் பெருவாழ்வென் றேற்கும்

இலக்கண மாகும் இயம்பு.


மதுரை பாபாராஜ்


தனிமையும் சுவரும்

 மேல்சுவரும் தனிமையுமே வாழ்க்கை! 


ஒவ்வொரு நாளும் மருத்துவக் கூடத்தில்

கண்ணிரண்டும் மேல்சுவரைப் பார்த்தே அசையாமல்

அங்கே படுத்திருக்கும்  அந்த மனிதனை

எண்ணினால் நாம்வாழும் வாழ்க்கை நலமானது!

பொன்னும் பொருளும் அவரைத்தான் மீட்காது!

என்ன இருந்தும் அனுபவிக்க ஏலாது!

இங்கே திரையரங்கில் பத்து மணித்துளிகள்

அந்தச் சுவரையே காட்டுவதைப் பார்ப்பதற்கு

நம்மால் பொறுமையுடன் பார்க்க முடியவில்லை!

இந்த மனிதனோ என்றும் அசையாமல் அங்கிருக்கும் மேல்சுவரை மட்டுமே

பார்க்கவேண்டும்!

என்ன கொடுமையோ? இத்தகைய வாழ்நிலை?

அந்த நிலைதன்னை ஒப்பிட்டால் நாமிங்கே

என்னநிலை என்றறிவோம் பார்.


மதுரை பாபாராஜ்





பருவமாற்றங்கள்

 பருவமாற்றங்கள்!


1-5

மழலையர் பள்ளி!


தத்தி நடைபழகி கீழே விழுந்தெழுந்து

எப்படியோ காயங்கள் அங்கங்கே காணவைக்கும்!

பெற்றோரும் தாத்தாவும் பாட்டியும் ஒற்றுமையாய்

தூக்கி மழலையர் பள்ளியில் சேர்த்திடுவார்!

ஏக்கத்தில் தேம்பும் அரும்பு.


6-17

தொடக்கப்பள்ளி-- மேல்நிலைப்பள்ளி!


ஒன்றாம் வகுப்பிலே சேர்ப்பார்!படிப்படிப்பாய்

நண்பர்கள் சூழ மகிழ்ந்தே நடந்துசெல்வார்கள்!

வண்டியில் ஆட்டோவில் என்றே பலவகை

வண்டிகளில் சென்று வருவார்கள்! மாலையில்

பள்ளிகள்முன்  வீட்டுவாசல் என்றே வருகைக்குக்

காத்திருப்பார் பிள்ளைகள் உற்சாகம் பொங்கவந்தே

பாட்டியை தாத்தாவை பெற்றோரை நாடிவந்தே

ஆரத் தழுவிடுவார் பார்.


ஒவ்வொரு ஆண்டாக தேர்ந்து தெளிந்தேதான்

பள்ளியில் கற்றதைப் பண்புகளின் பக்குவமாய்

நல்லவராய் வல்லவராய் ஆற்றல் பெருகிவர

எல்லோரும் முன்னேற வாழ்வில் உழைக்கின்றார்.!

பள்ளிப் பருவம் முடிந்தேதான் கல்லூரி

உள்ளே நுழைவார் விழைந்து.


கல்லூரி!


18--23


வாழ்வை அமைப்பதற்கு ஏற்றவாறு பாடத்தை

ஏற்பார் படிப்பார் படித்து முடித்ததும்

ஆற்றல் சிறகுகளை இங்கே விரித்தேதான்

ஏற்ற துறைகளைத் தேர்ந்தெடுத்துச் சென்றிருப்பார்!

ஊற்றெடுக்கும் சாதனைகள் ஈன்ற பொழுதினும்

தாய்தந்தை நாளும் மகிழ்ந்திருக்க சான்றோனாய்

வாழ்வில் உயர்த்தும் உணர்.



பணிக்களம் -- இல்லறம்


24--60


எந்தெந்தத் துறையெனினும் அந்தத் துறையில்

தங்களது முத்திரையை ஊன்றிப் புகழ்பெறுவார்!

அன்பும் அறனும் உடைத்தாயின்

இல்வாழ்க்கைப்

பண்பும் பயனும் அதுவென்றே மாண்புற

தங்களது வாழ்க்கைத் துணைகளுடன் இல்லறத்தை

இங்கே நடத்த முனைந்திடுவார்! பிள்ளைகள்

முந்தி இருப்பதற்குப் பெற்றோர் கடமைகளை

செவ்வனே செய்வார்! குழந்தைகளும் முன்னேறி

இந்தக் குழந்தைகளின் பெற்றோர்தான் என்னதவம்

செய்தனர்? இத்தகைய அற்புதச் செல்வத்தைப்

பெற்றெடுக்க என்றே வியக்கவைப்பார். பிள்ளைகள்!

இத்தகைய தன்மையே வாழ்வு.


60 முதல்


பணிநிறைவு பெற்றே வயதாகி வீட்டில்

மணிக்கணக்கில் பேரக் குழந்தைகளுடன்  நேரம்

பரபரப்பாய்ப் போகும்!  மகனோ மகளோ

பணிக்களம் சென்றுவிட்டால் முதுமைத் தனிமை!

அவரவர் வேலை குழந்தைகள் என்றே

அலைச்சலில் மூழ்குவார்! தவறில்லை கண்ணே!

வெற்றிடத்தில் நாள்கள் யுகமாகத் தோன்ற

சுற்றிச் சுழல்வதே வாழ்வு.


மதுரை பாபாராஜ்










எல்லைதாண்ட வேண்டாம்

 எல்லைதாண்ட வேண்டாம்!


முடிவற்ற வாதம் இருமுனைக் கத்தி!

வெடிப்பதற்கு நேரத்தைப் பார்த்திருக்கும் குண்டு!

வெடித்துவிட்டால் சேதம் அனைவருக்கும் உண்டு!

எதிலுமே எல்லைகள் தாண்டினால் தொல்லை!

நதிபோல் கரைக்குள்ளே ஓடு.


மதுரை பாபாராஜ்


Sunday, September 27, 2020

நண்பர் துபாய் வெங்கடேஷ் வாழ்க

 கோயிலுக்குப் போகிறேனோ இல்லையோ நாள்தோறும்

கோயில் படத்தை வணங்கும் நிலைதந்தார்!

கோயில் படமனுப்பும் வெங்கடேஷ்  நட்பிலுள்ள

தூய மனத்தினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா


மருத்துவர் செல்வரங்கம் அவர்களுக்கு வாழ்த்து

 மருத்துவருக்கு வாழ்த்து.


மருத்துவர் செல்வரங்கம் சொல்லும் குறளின்

கருத்தும், பொருத்தமாய் ஒப்பீடு செய்யும்

அருமைத் திறனும்  வளரட்டும்! உங்கள்

மருத்துவத் தொண்டும் குறள்தொண்டும் 

வாழ்க!

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


நண்பர் IG சேகருக்கு வாழ்த்து

 நண்பர் IG சேகருக்கு வாழ்த்து.


கால்கடுக்க நின்றேதான் காலை வணக்கத்தை

ஆர்வமுடன் கூறுகின்ற நீலப் பறவையே!

பாருக்குள் நண்பரின் நட்பைப்போல் பார்த்ததுண்டா?

வாழ்த்துகிறேன் நண்பரைத் தான்.


மதுரை பாபாராஜ்


மகரவிளக்கு 1985

 VovAnandhabagavathi:

ஒரு அரைமணிநேரம் முன்னர் தான் முத்தை தருபத்தி திருநகை டிஎம் எஸ் பாடியதை download செய்தேன்...மனப்பாடம் செய்ய வேண்டும் போல் இருந்தது.

சரியான தேடலில் உள்ள ஆன்மாவுக்கு, முருகனின் அருளமுதம் பாபாவின் அறவரிகள் மூலமாக...

சி.இராஜேந்திரன்


இங்கே உங்கள் பதிவு அதை யொட்டி உள்ளது ஆச்சரியமாக இருக்கிறது. 

உங்கள் எழுத்தை அந்த பாடல் இசையில் பாடிப்பார்த்தேன்..

சரியாக பொருந்தி வந்தது.( except last but one para last word - விருப்பங்கள்)

மகிழ்ச்சி.


Vovgopalpalanimuthu:

அருமை. வண்ணம் வரைவது எளிதன்று.... பல கடினமான விடயங்களை அநாயாசமாக செய்கிறீர்கள். வாழ்த்துகள். சில இடங்களில் சந்தம் கவனித்தால் மிகச் சிறப்பு...👏👏👏💐


தமிழ்ச் சங்கம் அங்கீகரித்த பாடலை அடியேன் ஒன்றும் சொல்ல இயலாது. சரியாகத்தான் இருக்கும். 👌🙏

நண்பர் இராமசாமிக்கு வணக்கம்

 நண்பர் இராமசாமி அவர்களுக்கு வணக்கம்.


காலை வணக்கம்! குளம்பியுடன் கோப்பையில்!

ஞாயிறு பொழுதோ இனிமையாய் மாறிட 

பூக்களுடன் தூதுவிடும் நட்பினை வாழ்த்துகிறேன்!

போற்றுகிறேன் அன்பை மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்


வேட்டை ஆசிரியர் காலிட் வாழ்த்து

 வேட்டை இதழ் ஆசிரியர் திரு. காலிட் அவர்களுக்கு வாழ்த்து!


வேட்டை இதழில் படைப்பை வெளியிட்டே

ஊக்கப் படுத்துகின்ற  காலிட் அவர்களின்

ஆக்கபூர்வ தொண்டு தொடர்ந்திட வாழ்த்துகள்!

பாத்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

கண்டு மகிழ்ந்தேன்👆 மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா வணக்கம் 🙏🙏🤝🤝...ஔவை

*பாட்டியின் ஆத்தி சூடி* 

*பாபாவின் வெண்பாவால்*

*பாரெல்லாம் வலம் வர*

*பாங்கான     பாவாழ்த்துக்கள்*

அன்புடன் உங்கள் திருக்குறள் அன்வர் பாட்சா வாழ்த்துக்களுடன் வணக்கம் 🙏🙏🤝🤝


வசையும் நிற்கும் இசையும் நிற்கும்

 ஏற்பாடு

ரோஜாமுத்தையா நூலகம்-- களம் அமைப்பு


பாலாவின் சங்கச்சுரங்கம்


இணையப்பத்து-- இரண்டாம் பத்து


ஏழாம் உரை-- 26.09.20


தலைப்பு

வசையும் நிற்கும் இசையும் நிற்கும்


புறப்பாடல் ஏந்தும் வரியெடுத்தார்  பாலா

சிறப்புடன் பேசி வழக்கம்போல் இங்கே

மகத்தான சங்கச் சுரங்கத்தில் கேட்டோம்!

அகம்மகிழ்ந்து வாழ்த்துகிறோம் நாம்.


ரோஜாமுத்தையா நூலக இயக்குநர் திரு.சுந்தர்:


காந்தக் குரலுடன் சுந்தர் தொடங்கிவைத்தார்!

பாலா நிகழ்வை மகிழ்ந்து.


இசையும் நிற்கும்:


SPB

பின்னணிப் பாடகர் பாலு நினைவலைகள்

எண்ணத்தைத் தூண்ட வணங்கிப் புகழ்ந்தேதான்

தன்னுரையைக் காணிக்கை யாக்கித் தொடங்கினார்!

என்றும் இசைநிற்கும்  என்று.


வேள்பாரி


பறம்புமலைப் பாரி கடையேழு வள்ளல்

சிறப்பில் தனித்துவம் பெற்றவன் என்றார்!

உழவற்ற குன்றம் தலைதாழாக் குன்றம்!

சுழன்றுவரும் வெம்பகையே! இங்கே விளையும்

பலாக்கனிகள் நெல்லும் கிழங்குடன் தேனும்

உழாமலே உள்ளன காலமெலாம்  வாழ்வார்!

இரவலராய்ச் சென்றால் பறம்புநாட்டைப் பாரி

வழங்குவான் போங்க ளென்றே புலவர்

உரைத்தார் சிறப்புகளைத் தான்.


அணையும்  அணையாப் புகழும்!


கரிகாலன்


கரிகாலன் கட்டிய கல்லணை இன்றும்

தொழில்நுட்ப ஆற்றல் வியக்குமாறு நிற்கும்

எழுச்சிக் கிணையில்லை நீருள்ள மட்டும்

அழியாது கரிகாலன் பேர்.


காளிங்கராயன் கால்வாய்


கால்வாயைச் சுற்றி வளைத்தே மலையிலே

நீரோட்டம் தங்குதடை இல்லாமல் செல்வதற்கு

பாம்புபோல் அங்கே வளையவைத்துக் கட்டியதை

நேரில் படம்பிடித்த பேச்சு.


பென்னிகுயிக்

தினமணியில் திரு. உதயச்சந்திரன்


முல்லைப் பெரியாறில் பொங்கிவந்த தண்ணீரை

வல்லமை கொண்டே தேக்கிய ஆங்கிலேயர்!

எள்ளளவும் தன்னலமின்றி தன்சொத்தை விற்றேதான்

முல்லை அணைகட்டி நீர்த்தேக்கி அப்பகுதி

எல்லாம் உணவு வளங்காண வைத்தவர்!

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.


தேனிப் பகுதிமக்கள் நன்றி மறவாமல்

நேயமிகு பென்னி குயிக்கின் நினைவாக

ஆர்வமுடன் இன்றளவும் பொங்கல் படையலிட்டுச் 

சீலமுடன் நன்றி விழாவாகக் கொண்டாடும்

கோலமுண்டு  உண்மை இது.


மாசாணியம்மன் கோயில்


பொள்ளாச்சி ஆனைமலை தன்னில் இருக்கின்ற

எல்லைக்குள் உள்ள திருக்கோயில் பற்றியுள்ள

பல்வேறு பக்தி வரலாற்றைச் சொல்லி

விளக்கினார்!

இவ்வழக்கில் நன்னனின் பின்னணியும் உண்டென்றார்!

நன்னனில் நல்லவரும் கெட்டவரும் உண்டென்றார்!


வசையும் நிற்கும்


இட்லர்/ நீரோ


வரலாற்றில் இட்லரின் ஆட்சி கொடுங்கோல்

அரசாட்சி என்றும், முடிவில் போரின்

கரங்களால் தற்கொலை செய்த நிலையை

உரையில் விளக்கினார் இங்கு.


ரோம்நகர் தீப்பற்றி தீய்ந்தபோது நீரோவோ

கானக் கருவி பிடில்மீட்டி வாழ்ந்திருந்தான்!

ஈனத் தனத்தைப் பழமொழியாய் மக்களின்றும்

நாட்டிலே கூறுவதைச் சொன்னார் நினைத்தேதான்!

ஆற்றலான பேச்சுக்கு வாழ்த்து.


எழுத்தாளர் திரு.இராமகிருஷ்ணன்

கருத்துரை:


பாலாவின் சங்கச் சுரங்கத்தில் பங்கேற்று

சாரமுடன் தன்கருத்தைக் கூறியே வாழ்த்தினார்!

பார்புகழும் நண்பரின் வாழ்த்தோ உரம்சேர்க்கும்!

வாழ்க வளமுடன் இங்கு.


வக்கிர எண்ணம் எதிர்மறைச் சிந்தனையாம்!

மக்கள் வசைமாரி தந்தேதான் நிந்திப்பார்!

அத்தகைய வாழ்வின் வசைநிற்கும் 

இவ்வுலகில்!

சுற்றம் பழிக்கும் இழிவு.


தனிமனித நல்லொழுக்கம் தங்கித் தழைக்க

மனிதன் மனிதனாக வாழ்ந்திருந்தால் மக்கள்

அணியணியாய் வாழ்த்தும் இசைநிற்கும்

பாரில்!

இணையற்ற இப்புகழே வாழ்வு.


மதுரை பாபாராஜ்


Saturday, September 26, 2020

காலம் மாறும்

 காலம் மாறும்!


காயங்கள் ஆறட்டும்! நெஞ்சங்கள் தேறட்டும்!

நேயங்கள் ஓங்கட்டும்! காலம் இனிக்கட்டும்!

தேயங்கள் எல்லாமே போரை மறக்கட்டும்!

ஓலங்கள் நீங்கட்டும்! பேரமைதி காணட்டும்!

காலங்கள் மாறுமென நம்பு.


மதுரை பாபாராஜ்

வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்

 வணங்குகிறேன்! வாழ்த்துகிறேன்


மாற்றுத் திறனாளி தீட்டிய ஓவியம்

ஆற்றலின் ஆளுமையை ஆர்வம் முயற்சியைக்

காட்டும் கலைநயம் கண்டே வணங்குகிறேன்!

பாத்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


மனத்துக்கண் மிசிலன்

 மனத்துக்கண் மாசிலன்!


இருக்கும் பொழுதிலே அன்பும் மதிப்பும்

ஒருகவளச் சோறும் தருவதே உண்மை!

இருப்பவர் இங்கே இறந்ததும் கூடி

விருந்தைப் படைப்பதெல்லாம் பொய்.


மதுரை பாபாராஜ்

Friday, September 25, 2020

முத்தொள்ளாயிரம் 65

 முத்தொள்ளாயிரம்.65


"போரகத்துப் பாயுமா பாயாது ஒருபடியா

ஊரகத்து மெல்ல நடவாயோ—கூர்வேல் 

மதவெங் களியானை மாறன்தன் மார்பம்

கதவம்கொண்டு யாமும் தொழ".

---------------------------------------------------------


போர்க்களத்தில்  பாய்வதுபோல்  செல்லப் புரவியே!

பாய்ந்துசென்றால் மாறனைநான் பார்க்க முடியாதே!

ஊர்வலத்தில் செல்வதுபோல் ஊர்ந்தால் கதவோரம்

ஆரணங்குநான் நின்றே ரசித்திருப்பேன் மற்றவர்போல்!

ஈரமனங் கொண்டே அருள்.


மதுரை பாபாராஜ்

நண்பர் வீஓவி இராமசாமிக்கு வாழ்த்து

 பூத்து மணக்கும் அழகான ரோசாக்கள்!

ஈத்துவக்கும் இன்பம்போல் காலை வணக்கத்தைப்

போற்றுகின்ற நட்புடன் நண்பர் இராமசாமி

தூதுவிட்டார் வாழ்த்துகிறேன் இங்கு.


மதுரை பாபாராஜ்


SPB பாலசுப்ரமணியன் நினைவேந்தல்

 SPB பாடும் நிலா பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நினைவேந்தல்!

25.09.20

பாடும் நிலாவாக வாழ்ந்திருந்த பாலுவே!

பாடுபொருளாகிப் பாடிய நிலவாக மாறிவிட்டாய்!

நீடுதுயில் கொண்டதேனோ? மண்ணகத்தை விட்டேதான்

பாட்டிசைக்க விண்ணகம் நோக்கிச் சிறகுகளைப்

பாட்டுப் பறவையே! ஏன்விரித்தாய்? ஏங்குகிறோம்!

பாட்டிருக்கும் நீயில்லை பாலு

மதுரை பாபாராஜ்


Thursday, September 24, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 வணக்கம்


மகுடத்தைத் தேடி அலைகின்றார் இங்கே!

மகுடம்! இயற்கையே உந்தன் தலையில்

எடுப்பாக வைத்தே அழகாய்ப் பொருத்தி

உடைகளும் தந்த துனக்கு.


மதுரை பாபாராஜ்


கதிரவனும் கதிரவனும்

 நண்பர் கதிரவனின் கைவண்ணம்!


காலைக் கதிரவனும் 

கலைமனக் கதிரவனும்!


விடியல் பொழுதில் கதிரவன் தீட்டும்

கதிர்வண்ணத் தாலே எழிற்கோலம் காண்போம்!

கதிரவனின் கைவண்ணம் அட்டை அழகை

ரசிக்கத்தான் தூண்டுதே சொல்.


மதுரை பாபாராஜ்


Wednesday, September 23, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 வணக்கம்.


கூட்டில் தனித்திருந்து  உங்களைநான் பார்க்கிறேன்!

வீட்டில் தனித்திருந்தே நீங்களென்னைப் பார்த்திருங்கள்!

நாட்டிலே நீங்கள் கொரோனா தவிர்ப்பதற்கோ

காட்டும் தனிமை இது.


மதுரை பாபாராஜ்


வள்ளுவர் அன்றே சொன்னார்

 வள்ளுவர் சொன்னார் 

விலகி இரு! விழித்திரு!


குறள் 691


அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வாரென்றார் அய்யன்!

அகங்குளிர கேட்டே விலகியே நிற்போம்!

முறையாய்க் கொரோனா தவிர்.


மதுரை பாபாராஜ்




Tuesday, September 22, 2020

செல்ஃபி குறள் நண்பர் OK அனுப்பிய படம்

 செல்ஃபி குறள்!

நண்பர் OK அனுப்பிய படம்


மரத்தின் நிழலிங்கே மண்ணின் மடியில்!

மரமெடுத்த செல்ஃபி அழகு.


மதுரை பாபாராஜ்


மயக்கமா கலக்கமா

 மயக்கமா கலக்கமா?


பெருசு தொடங்கி சிறுசு முடிய

கரங்களில் பற்றித்தான் கண்கள் துழாவ

இரண்டு  செவிகளில் மாறிமாறி வைத்தே

மயங்கித் திரிகின்றார் கைபேசி கொண்டு!

உலகே மயக்கத்தின் பின்.


மதுரை பாபாராஜ்


Monday, September 21, 2020

அப்பா தெய்வத்திரு முத்துசுப்பு

 அப்பா தெய்வத்திரு.முத்துசுப்பு

அவர்களின் பிறந்தநாள்!


21.09.20


ஆசிகளை வேண்டுகிறோம்!


உங்கள் குடும்பத்தில்  சேர்ந்தேதான் வாழ்வதற்கு

என்னதவம் செய்தோமோ? நாங்களே பேறுபெற்றோம்!

இங்குநாங்கள் வாழ்வதே உங்களின் ஆசியால்தான்!

என்றும் வணங்குவோம் சூழ்ந்து.


மதுரை பாபாராஜ்

மற்றும்

குடும்பத்தார் அனைவரும்


Sunday, September 20, 2020

நண்பர் IG சேகருக்கு வணக்கம்

 அழகாக வாய்திறந்தே காலை வணக்கம்

வழங்குகிறாய் நண்பரின் தூதாக வந்து!

வழங்குகிறேன் நன்றியையும் வாழ்த்தையும் நீயும்

தரவேண்டும் நண்பரிடம் சென்று.


மதுரை பாபாராஜ்


மருமகன் ரவிக்கு வணக்கம்

 வணக்கம்


உன்னால் எதுவுமே செய்ய முடியாதா

தன்னாலே போகட்டும் அந்தநிலை எல்லாமே!

உன்னாலே மாற்ற முடியாத சூழலுக்கு

என்றுமே கைதியாக வாழாதே வாழ்க்கையில்!

தன்னாலே மாற்றம் வரும்.


மதுரை பாபாராஜ்


பாலாவின் சங்கச்சுரங்கம்

 பாலாவின் சங்கச் சுரங்க நிகழ்ச்சிக்கு வாழ்த்து!


இணையப்பத்து-- இரண்டாம் பத்து


ஆறாம் உரை!


19.09.20


தலைப்பு:

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்


நற்றிணைப் பாடலுக்கு நல்ல விளக்கத்தை

அற்புதமாய்த் தந்தார் தனது கருத்தாக

எத்தனைச் சான்றுகள் அத்தனையும் முத்துகள்!

கற்றுத் தெளிந்த கருத்து.


இலக்கணத்தைத் தொட்டேதான் வித்தகத்தைக் காட்டி

விளக்கத்தைச் சொன்னார் விவேகத்தை வாழ்த்து!

மரங்களின் பின்னணி யெல்லாம் அருமை!

இலக்கிய ஆளுமையை வாழ்த்து.


மரங்களை வெட்டவரும் நேரத்தில் அங்கே

மரங்களைச் சுற்றிநின்று பெண்கள் மறித்து

மரங்களை வெட்ட விடாத நிகழ்வு

விளக்கம் அறிந்ததை வாழ்த்து.


புன்னைமரத்தின் புகழ்


புன்னை மரத்தின் புகழ்மணக்க சான்றுகளைச்

சங்க  இலக்கியம் கூறுவதைச் சொல்லியதும்

எங்கெங்கோ சென்றோம் பாலா உரையுடன்!

வண்டமிழ்போல் வாழ்க திறம்.


குருவியின் முட்டை


புன்னை அரும்புகள் மொட்டவிழும் கோலமோ

சின்னக் குருவிமுட்டை வாய்திறக்கும் கோலம்போல்

கண்கவர புன்னைப்பூ பூத்துக் குலுங்குவதைக்

கண்முன்னே தந்தவரை வாழ்த்து.


கடிமரம்


நாட்டின் இறையாண்மை யெல்லாம் கடிமரத்தைக்

காப்பதில் உள்ளதென்றார்! யாரும் கடிமரத்தைத்

தூற்றினால் சீறுவான் மன்னன் படையெடுப்பான்!

ஏற்றுவான் வெற்றிக் கொடி.


உன்னமரம்


உன்னமரம் பூத்துக் குலுங்கினால் நாட்டுக்கு

நன்மை விளையுமென்றும் காய்ந்து சருகானால்

நன்மையின்றி  தீமை விளையுமென்ற

நம்பிய

தன்மையைக் கூறினார் இங்கு.


சங்கச் சுரங்க நிகழ்வுகள் எல்லாமே

தங்கப் புதையலாய் அன்றாட வாழ்வியலில்

அன்றுமக்கள் வாழ்த்ததைக் கூறும் எளிமையில்

ஒன்றும் திளைக்கின்றோம் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


Saturday, September 19, 2020

ஓரம் சொல்லேல்

 109. ஓரம் சொல்லேல்.


வேண்டியோர் வேண்டாதோர் என்ற நிலைகளைத்

தாண்டி நடுநிலை யோடு செயல்படும்

சான்றாண்மை ஒன்றே சான்றோர்க் கணியாகும்!

தீண்டாதே தன்னலத்தை இங்கு.

ஒன்னாரைத் தேறேல்

 108. ஒன்னாரைத் தேறேல்.


குறள் 828:


தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்தென்றார் அய்யன்!

உருக்கிடும் நட்பில் மயக்கும் பகையைத்

துரும்பளவும் நம்புதல் தீது.

வைகறைத் துயில் எழு

 107. வைகறைத் துயில் எழு.


விடியல்  பொழுதில்  துயிலெழ வேண்டும்!

மடிநீங்கும்! உற்சாகம் ஊக்கம் பிறக்கும்!

நெறிபோற்றி வாழும் உணர்வுகள் ஓங்கும்!

நெறிப்படுத்தும் உள்ளம் விரைந்து.


வேண்டி வினை செயேல்

 106. வேண்டி வினை செயேல்.


நற்செயல் செய்யவில்லை என்றாலும் வேண்டுமென்றே

அற்பச் செயல்களகச் செய்யவேண்டாம்

மானிடரே!

வக்கிரமான எண்ணங்கள் தாறுமாறாய்ப் போகவைக்கும்!

எக்கணமும் தாழ்வுதான் சாற்று.

வெட்டெனப் பேசேல்

 105. வெட்டெனப் பேசேல்.


முகத்தைக் கடுகடுப்பாய் எப்போதும் வைத்தே

அகத்தில் அனல்வீச்சுக் கொந்தளிப்பை ஏந்தி

சுடச்சுட வெட்டெனப் பேசினால் கேட்போர்

முகஞ்சுழிப்பார் நாளும் வெறுத்து.


ஊருடன் கூடி வாழ்

 104. ஊருடன் கூடி வாழ்.


அமைதியாக வாழ்ந்திருக்கும் ஊருக்குள் சென்றே

அமளிகளை உண்டாக்கும் வக்கிரத்தை விட்டே

மனதாரக் கூடிவாழும் போக்கெடுத்து வாழ்ந்தால் 

அனைவரும் வாழ்த்துவார் காண்.


உத்தமனாய் இரு

 103. உத்தமனாய் இரு.


தனிமனித நல்லொழுக்கம் தங்கித் தழைக்கும்

மனிதனே உத்தமன்! மற்றவ ரெல்லாம்

மனித வரம்புகளைத் தாண்டிய  அற்பர்!

மனிதருக்குள் உத்தமனாய் வாழ்.

வீடு பெற நில்

 102. வீடு பெற நில்.


முக்தி அடையவேண்டும் என்று விரும்புவோர்

முக்தி அடைவதற்கு வேண்டிய பக்குவத்தை,

நற்பண்பைப் போற்றி வளர்த்தே பண்பகமாய்

இப்பிறவி தன்னிலே மாறு.

வித்தை விரும்பு

 101. வித்தை விரும்பு.


கல்வி கரையில! நாலடியார் கூற்றாகும்!

பல்வேறு நல்ல கலைகளைக் கற்கவேண்டும்!

கல்லைக் கனியாக்கும் கற்கும் திறனொன்றே! 

கல்வியைக் கற்றால் உயர்வு.

வாது முற்கூறேல்

 100. வாது முற்கூறேல்.


பெரியோர்கள்  கேட்காமல் சென்று சிறியோர்

தெரிந்ததுபோல் கூறுவது  நல்லதல்ல!

என்றும்

பெரியோர்முன் காட்டும் பணிவே உயர்த்தும்!

உரியநேரம் பார்த்தேதான் பேசு.

வல்லமை பேசேல்

 வகர வருக்கம்

99. வல்லமை பேசேல்.


நம்மிடம் பன்முக ஆற்றல் இருந்தாலும்

பன்முக ஆற்றலை மற்றவர்கள் சொல்லவேண்டும்!

நம்மைநாம் தற்புகழ்ச்சி செய்துகொண்டால்  மற்றவர்கள்

நம்மை இகழ்வார் உணர்.

நண்பர் IG சேகருக்கு

 நண்பர் IG சேகருக்கு வாழ்த்தும் வணக்கமும்


தலைநகர் டெல்லி நகரிருந்து மஞ்சள்

மலரனுப்பி காலை வணக்கத்தைக் கூறும்

அகங்கனிந்த நட்பினை

வாழ்த்துகிறேன் சென்னை

நகரிருந்து நன்றி யுடன்.


மதுரை பாபாராஜ்


பாலாவின் சங்கச்சுரங்கம்

 பாலாவின் சங்கச் சுரங்கம்


19.09.20


தலைப்பு:

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்


நற்றிணை


நெய்தல்


விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,

மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,

'நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப;

நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று

----------------------------------------------------------------

பாலாவின் சங்கச் சுரங்கம்


19.09.20


தலைப்பு:

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்


நற்றிணை


நெய்தல்


விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,

மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,

'நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப;

நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று

----------------------------------------------------------------

தோழியின் அம்மாவும் மற்றவரும்  சேர்ந்தேதான்

ஆழிக் கரையில் விளையாடும் நேரத்தில்

ஆர்வமுடன் புன்னை மரவிதையை மண்ணுக்குள்

ஆழப் புதைத்துவிட்டுத் தேடினர் மறந்தேதான்!

வேர்விட்டு வந்த மரத்தை வளர்த்தனர்!

நாள்தோறும் நெய்யும் வெண்பாலும் இட்டேதான்!

தான்வளர்த்த தாலே உடன்பிறப்பாய்

 ஆனதே!

நீயெந்தன் அன்புத் தலைவியைக் கண்டுபேச

பாரிங்கே மற்ற மரங்களெலாம் உள்ளன!

நீங்களங்கு செல்லுங்கள்! அக்காமுன் நின்றுபேசல்

ஏனோதான் வெட்கமாய் உள்ளதென்றாள் அத்தலைவி! சங்கச் சுரங்கமிது!

தெள்ளுதமிழ் முத்தே இது.


நற்றிணைப் பாடல் வரியெடுத்துப் பேசுகின்றார்

நற்றமிழில் பாலாதான் சங்க இலக்கியத்தை!

சற்றும் சளைக்காமல் வாய்ப்பைப் பயன்படுத்தும்

அக்கறையைப் பாவினத்தால் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


நற்றிணைப் பாடல் வரியெடுத்துப் பேசுகின்றார்

நற்றமிழில் பாலாதான் சங்க இலக்கியத்தை!

சற்றும் சளைக்காமல் வாய்ப்பைப் பயன்படுத்தும்

அக்கறையைப் பாவினத்தால் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்






பாரதி நெல்லையப்பர் மன்றம்

 ZOOM இணையவழி பாராட்டு விழா!


19.09.2020

காரிக்கிழமை


காலை 10:00 மணி


*பரலி நெல்லையப்பர் மன்றம்*


விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி


மாண்புமிகு அமைச்சர்

திரு

*மாஃபா பாண்டியராஜன்*


விருதுகள் வழங்கிச் சிறப்பித்தார்.

------------------------------------------------------------------

நிகழ்ச்சிக்கு வாழ்த்து:


நெல்லை சாய்சகோதரிகள்:


பாரதி பாடலை உள்ளங் கவருமாறு

ஆர்வமுடன் பாடினர் வாழ்த்து.


நடனம்


ஆற்றலுடன் ஆடி நடனக் கலையினைப் போற்றும் திறமை மிளிர வெளிப்படுத்திக்

காட்டினார்! நாளும் கலையார்வம் வாழியவே!

ஏற்றம் பெறுக மகிழ்ந்து.


நீதியரசர் வள்ளிநாயகம்


நெல்லையப்பர்  பாரதியை நட்பை விளக்கினார்!

நெல்லையப்பர் மன்றத்தின் தொண்டுகளைப் பாராட்டி

உள்ளம் மணக்கவே வாழ்த்தினார் நீதி

அரசர்தான்!

பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்து.


அறிமுக உரை:


மூவரையும் மூவர் அறிமுகம் செய்தனர் மூவரும் முன்னணிக்கு வந்துவிட்ட பின்னணியை

ஆவலுடன் கேட்டறிந்தோம்! மூவரையும் வாழ்த்துகிறோம்!

சாறைப் பிழிந்தளித்தார் வாழ்த்து.


அமைச்சர் உரை!


மன்றத்தை வாழ்த்தி விருதுபெறும் மூவருக்கும்

தன்னுடைய வாழ்த்தையும் கூறினார்! தம்மரசு

தொண்டை எடுத்துரைத்தே தாய்த்தமிழ்ப் பள்ளிகளின்

தன்மையைச் சொன்னவரை வாழ்த்து.


பாரதியின் தந்தை தொழில்முனைவோர்

என்றுரைத்தார்!

பாரதியின் தந்தை தொழில்கூடம் இன்றுமங்கே

காணப் படுவதால் சின்னமாக்கு வோமென்றே

ஆர்வமுடன் சொன்னார் மகிழ்ந்து.


வாழ்த்துரை:


வாழ்த்துரை பேசிய நண்பரின் வாழ்த்துக்கு

வாழ்த்துகளும் நன்றியும் உண்டு.


வாழ்த்துப்பா பாடியே பாமாலை சூட்டினார்

பாவலர் வாழ்கவென்று வாழ்த்து.


விருதுபெற்ற மூவர்!

மனிதநேயர் முத்துக் குமாரசாமி 

( நெல்லையப்பர் விருது)


சந்தியா நடராசன்

( நெல்லையப்பர் விருது)


கவிஞர் தமிழ் இயலன்

( வாசல் வசந்தப்பிரியன் நினைவாக

அமிர்தக்கவி விருது)


மூவருக்குத் தந்தனர் மூன்று விருதுகள்!

நாவலர் பாவலர் என்றேதான் பன்முக

ஆற்றலைக் கொண்டவர்கள் மூவருமே!

போற்றுவோம் வாழ்த்துவோம் சேர்ந்து.


மன்றத்திற்கு வாழ்த்து


பாரதி நெல்லையப்பர் மன்றத்தின் நற்பணிகள்

சீரும் சிறப்போடும் நாளும் வளரட்டும்!ஆர்வமுடன் தொண்டாற்றும் பண்புகளை வாழ்த்துவோம்!

பார.புகழ் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்





























Friday, September 18, 2020

மோகத்தை முனி

 98. மோகத்தை முனி.


பொன்முட்டை ஏராளம் வந்துவிடும் என்றேதான்

பொன்முட்டை போடுகின்ற வாத்தை அறுத்தாராம்

தன்னாசை பேராசை யாக, இருந்ததும்

சென்றதாம்! ஆசை விலக்கு.


மதுரை பாபாராஜ்


வீஓவி இராமசாமி கருத்து


ஆத்திசூடி......

இப்படி தொகுத்து ப் படிக்க மகிழ்ச்சி யாக இரூக்கிறது.

  88 வலைக்குள் மீன்

91 மீதூண் விரும்பேல்

92 ஹிட்லர்

96 மைவிழியார் குணம்

  ஆகிய உரைகள் சிறப்பாக அமைந்துள்ளன!

     நல்லது நன்றி!

மொழிவது அறமொழி

 97. மொழிவது அற மொழி.


பேசுவதைத் தெள்ளத் தெளிவாகப் பேசவேண்டும்!

பேசும் பொருள்கள்  மறைமுகமாய் இல்லாமல்

மாசற்ற நீர்போல் தெளிவாய்க் கருத்துடன்

பேசும் அறமொழியே நன்று.


மைவிழியார் மனை அகல்

 96. மை விழியார் மனை அகல்.


உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசித்தான்

கள்ளத் தனத்தால் மயக்குமொழி சிந்துகின்ற

முள்மனம் கொண்ட இருமனப் பெண்டிரை

எள்ளளவும் நாடாமல் செல்.

மேன்மக்கள் சொல் கேள்

 95. மேன்மக்கள் சொல் கேள்.


சான்றோர்கள் சொல்லும் அறவுரைகள் வாழ்க்கையில்

சான்றாண்மைப் பண்பை வளர்க்க வழிகாட்டும்!

மேன்மக்கள், மற்றவர்கள் பண்பட்டு வாழ்வதற்கே

தூணாக நிற்பார்கள் சொல்.


மெல்லி நல்லாள் தோள்சேர்

 94. மெல்லி நல்லாள் தோள்சேர்.


நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்

பிறற்குரியாள் தோள்தோயா தாரென்றார் அய்யன்!

பிறரின்  மனைநோக்கா சீலர் ஒழுக்க

நெறிபடைத்தோர்  என்றே வணங்கு

மூர்க்கரோடு இணங்கேல்

 93. மூர்க்கரோடு இணங்கேல்.


துட்டரைக் கண்டுவிட்டால் தூர விலகென்றார்!

இப்படித்தான் வாழவேண்டும் என்றுவாழும் நல்லவர்கள்

எப்படியும் வாழலாம் என்றிருக்கும்  மூர்க்கருடன்

சற்றும் இணங்குதல் தப்பு.


முனைமுகத்து நில்லேல்

 92. முனைமுகத்து நில்லேல்.


எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே


இட்லரின் போர்வெறியால் நாட்டையே சீரழித்தான்!

எப்போதும் போர்முனை என்றே தினவுடன்

சுற்றி இறுதியில் தற்கொலை செய்துகொண்டான்!

அப்பப்பா போர்வெறியைத் தூற்று.


மீதூண் விரும்பேல்

 91. மீதூண் விரும்பேல்.


யாரென்ன உண்ணக் கொடுத்தாலும் தட்டாமல்

வாங்கி விழுங்கிடும் பேராசை நல்லதல்ல!

தேனோ, அமிழ்தோ அளவுடன் உண்ணவேண்டும்!

மானே! அளவே அமுது.

மிகைபடச் சொல்லேல்

 90. மிகைபடச் சொல்லேல்.


சொல்லுகின்ற நேரத்தில் சொல்வதை அப்படியே

சொல்லவேண்டும்! இல்லாத ஒன்றையும் சேர்த்தேதான்

சொல்வதைக் கூட்டியே சொல்லும் பழிச்செயல்

நல்லதல்ல! உள்ளதைச் சொல்.


மாற்றானுக்கு இடம் கொடேல்

 89. மாற்றானுக்கு இடம் கொடேல்.


மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாங்கண்ட தில்லென்றார் வள்ளுவர்!

இப்படிப் பட்டோர்க் கிடங்கொடுத்தால் ஏமாந்து

நிற்போம் எல்லாம் இழந்து.


மனம் தடுமாறேல்

 மகர வருக்கம்


88. மனம் தடுமாறேல்.


அலைபாயும் உள்ளம் சலனத்தின் இல்லம்!

நிலைதடு மாறினால் நிம்மதி போகும்!

வலைக்குள் அகப்பட்ட மீன்போல மாறி

மலைப்போம் குழப்பத்தில் தான்.

முடக்கத்தால் முதுமை

 இலையுதிர் கால முதுமை முடக்கத்தில் இன்று!


வீட்டில் முடங்கிய வாழ்க்கைப் பழக்கத்தால்

காட்சிப் பொருளாய் முதியோர்கள் ஆகிவிட்டோம்!

வீட்டில் பணிஓய்வு! தூவலே இல்லாமல்

மாற்றிய கைபேசி மீது விரல்நடனம்

கூட்டி எழுதுகின்ற போக்காலே தாள்மீது

ஏட்டில் எழுத்துகள் கோணலாய்ப் போகுது!

நாட்டில் தெருவில் நடக்க முயன்றாலோ

நாட்டியம்போல் கால்கள் நடக்க மறுக்கிறது?

மாடிப் படியேறி நாளும் இறங்கினால்

ஏறினால் மூச்சுவாங்கும் கோலத்தில் வாழ்கிறோம்!

மாறிவிட்ட கோலத்தில் வாழ்வு.


(தூவல்-- பேனா)


மதுரை பாபாராஜ்

அமுதா பிறந்தநாள்


 மகள்  அமுதா ரகு பிறந்தநாள் வாழ்த்து!


18.09.20


ஆசிரியர் நற்பணியில் மாணவிகள் மாணவரை

மேதினியில் இந்தியராய் வாழ்வில் நடைபோடப்

பாடுபடும் காரை  அமுதா அகங்குளிர

நீடுவாழ்க பல்லாண்டு தான்.


அன்புக் கணவன் ரகுவுடன் பொன்மகள் நான்சியும்

என்றும் உடனிருக்க பெற்றோரின் ஆசியுடன்

இன்பமுடன் பல்வளங்கள் சூழ்ந்திருக்க வாழியவே!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

ரம்யா பிறந்தநாள்

 மகள் ரம்யா நாராயணன் பிறந்தநாள் வாழ்த்து!


18.09.20


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

பண்பும் பயனும் அதுவென்றார் வள்ளுவர்!

அன்புக் கணவனும் பொன்மகள் திவ்யாவும்

என்றும் உடனிருக்க பெற்றோரின் ஆசியுடன்

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்


கற்போம் குழந்தை மனம்

 உற்சாக மாக குழந்தைகள் போலத்தான்

இப்படியும் அப்படியும் ஆடிக் குதித்திருந்தால்

நற்றமிழே! நாளும் மகிழ்ச்சிதான் வாழ்விலே!

கற்போம் குழந்தை மனம்.


மதுரை பாபாராஜ்

படம் நண்பர் வீஓவி எழில் புத்தன்


Thursday, September 17, 2020

இலக்கணம் மீறலாம்

 இலக்கணம் மீறலாம்!


இலக்கியம் என்ற சுவரிருந்தால் தானே

இலக்கணச் சித்திரம் தீட்ட முடியும்?

இலக்கணம் தேவை! இலக்கணமே தேவை!

இரண்டிற்கும் வேறுபாடு உண்டு! படைப்போர்

இலக்கணம் மீறல் இயல்பு.


மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகருக்கு வாழ்த்து

 வணக்கம்.


தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தருமென்றார் வள்ளுவர்!

மெய்வருத்தம் இன்றி கிளையில் அமர்ந்தேதான்

இங்கிருந்து  வாய்திறந்தால் உண்டா உணவு?

உன்சோம்பல் நீக்கிப் பற.


மதுரை பாபாராஜ்


நோய்க்கு இடம் கொடேல்

 76. நோய்க்கு இடம் கொடேல்.


உணவை மருந்தாய் அளவாக உண்டால்

சுணக்கம் தருகின்ற நோய்களோ தீண்டா!

உணவை அதிகமாய் உண்டால் மருந்தே

உணவாக நோய்கள் படையெடுத்துத் தாக்கும்!

உணவை அளவாக உண்.


நொய்ய உரையேல்

 75. நொய்ய உரையேல்.


வாயைத் திறந்தாலே இழிவான சொற்களே

பாய்ந்துவரும் மாந்தரை யார்தான் விரும்புவார்?

பார்த்தாலே பார்க்காமல்  தள்ளி ஒதுங்கிடுவார்!

தேய்பிறை யாகிவிடும் நட்பு.

நைவினை நணுகேல்

 74. நைவினை நணுகேல்.


துன்புறுத்தித் துன்புறும் போது மகிழ்வதே

வன்முறை வக்கிர மாகும்! மற்றவர்க்கோ

நன்மைகள் செய்யா விடினும் கெடுதிகள்

பண்ணாமல் வாழ்தல் சிறப்பு

நேர்பட ஒழுகு

 73. நேர்பட ஒழுகு.


குறுக்கு வழிவிட்டே நேர்வழியில் வாழ்ந்தால்

சறுக்காமல் வாழலாம்! நிம்மதியாய் நாளும்

இறுக்கமோ அச்சமோ இன்றி நிமிர்ந்தே

எடுப்பாக வாழலாம் இங்கு.


நெற்பயிர் விளைவு செய்

 72. நெற்பயிர் விளைவு செய்.


உயிர்வாழத் தேவை உணவே! உணவை

உழவே தருகிறது! அந்த உழவில்

நிலப்பயிர் நெற்பயிரே மக்கள் உணவு!

உலக உயிரே உழவு.

நூல் பல கல்

 71. நூல் பல கல்.


கற்றதோ கைமண் ணளவே! இன்னும்நாம்

கற்றுத் தெளியவேண்டும் இந்த உலகளவு!

கற்போம் பலநூல்கள்! கற்றது போதுமென்றே

கற்காமல் வாழ்தல் தவிர்.


நுண்மை நுகரேல்

 70. நுண்மை நுகரேல்.


தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோயள வின்றிப் படுமென்றார் வள்ளுவர்!

நோய்வளர்க்கும் குப்பை  உணவைத் தவிர்க்கவேண்டும்!

நோயின்றி வாழலாம் சொல்

நீர் விளையாடேல்

 69. நீர் விளையாடேல்.


என்னதான் நீச்சல் வீரராய் நின்றாலும்

கண்டபடி வெள்ளத்தில் ஆடுவதோ ஆபத்தை

உண்டாக்கும்! நீரோட்டப் போக்கு தெரியாது!

தண்ணீரில் ஆடல் தவறு.


நிலையில் பிரியேல்

 68. நிலையில் பிரியேல்.


காய்தல் உவத்தலின்றி ஏற்ற நடுநிலையைத்

தேர்ந்து தெளிந்தே எடுத்தபின்பு மாறாமல்

நீதியைக் காப்பதே மானத்தைத் தக்கவைக்கும்!

நீதி பிறழ்ந்தால் இழிவு.

நாடு ஒப்பன செய்

 67. நாடு ஒப்பன செய்.


எத்தகைய நாடெனினும் மக்களின் நல்லிணக்கம்

எப்போதும் நாட்டைத் தலைநிமிர்ந்து வாழவைக்கும்!

அத்தகைய சூழ்நிலையை நாடு வரவேற்கும்!

மக்கள் விருப்பம் இது.

நன்மை கடைப்பிடி

 66. நன்மை கடைப்பிடி


நேர்மைக்கு நெத்தியடி! வாய்மைக்கு வாய்ப்பூட்டு!

வாழ்விலே நன்மைக்கோ இத்தகைய சோதனைகள்

ஊர்வலமாய் வந்தாலும் நம்மிலக்கு நன்மையெனும்

தேரிழுத்தல் ஒன்றுதான் இங்கு.

Wednesday, September 16, 2020

ஒரே குறளில் ஐவகை நிலங்கள்

 நண்பர் தீத்தாரப்பன் விளக்கம


ஒரே குறளில் ஐவகை நிலங்கள்!


"முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு." இக்குறளில் ஐந்து உவமைகள்! ஐந்தும் ஐவகை நிலங்களுக்கு உரியன! வேய்த்தோள் - மூங்கில் (குறிஞ்சி), வெறிநாற்றம்- முல்லை மலர்(முல்லை), முறிமேனி- மாந்தளிர்(மருதம்), முத்தம் முறுவல் - முத்து(நெய்தல்), வேலுண்கண் - வேல்(பாலை)

---------------------------------------------------------------

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேல்உண்கண் வேய்த்தோள் அவட்கு

(அதிகாரம்:நலம்புனைந்துரைத்தல் குறள் எண்:1113)

---------------------------------------------------------------

முறிமேனி மாந்தளிர் தேகம் மருதம்!

முறுவலோ முத்தென்றார் நெய்தல் நிலமே!

துறுதுறு வேலுன்கண்  பாலை நிலமே!

வெறிநாற்றம் பூமணம் முல்லை நிலமே!

செறிவான வேய்த்தோள் மூங்கில் குறிஞ்சி!

குறளிலே ஐந்து வகைநிலங்கள் தந்தார்!

சிறப்பாக தீத்தாரப் பன்.


மதுரை பாபாராஜ்

Picture by Dr.NVK ASHRAFF


தோற்பன தொடரேல்

 65. தோற்பன தொடரேல்.


தோற்றாலும் தோற்பேன்! எனக்கூறி  உள்ளத்தில் 

ஊற்றெடுக்கும் உட்பகையால் உள்ளதையும் விட்டுவிட்டு

தோற்பதைக் காட்டிலும் தொட்டுத் தொடராமல்

வேற்றுமையை என்றும் விலக்கு.


தகர வருக்கம் நிறைவு


தொன்மை மறவேல்

 64. தொன்மை மறவேல்.


தொன்றுதொட்டுப் பின்பற்றும் நல்ல பழக்கத்தை

என்றும் மறக்காமல் வாழ்வது நல்லது!

பண்டைப் பழக்கத்தில் நன்மைகள் உள்ளதை

இன்றும் உணர்கின்றோம் நாம்.


தையல்சொல் கேளேல்

 63. தையல் சொல் கேளேல்.


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவென்றார் வள்ளுவர்!

தையலே என்றாலும் கண்மூடி கேட்காமல்

மெய்ப்பொருள்  காண்பது நன்று.

தேசத்தோடு ஒட்டிவாழ்

 62. தேசத்தோடு ஒட்டி வாழ்.


தாய்நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமைக்குத் தோள்கொடுப்போம்!

நாள்தோறும் நல்லிணக்கம் வேரூன்ற நாமுழைப்போம்!

சேர்ந்துவாழும் நல்லெண்ணம் தேசத்தைக் காப்பாற்றும்!

பாடுபட்டு நாட்டை உயர்த்து.

தெய்வம் இகழேல்

 61. தெய்வம் இகழேல்.


அன்பு, கருணை இரக்கம் இவைமூன்றை

மண்ணக வாழ்விலே பின்பற்றும் மாந்தரே

என்றும் இறைக்கு நிகராவார்! இத்தகையோர்

பண்பை இகழ்தழ் இழிவு.


தூக்கி வினை செய்

 60. தூக்கி வினை செய்.


எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கென்றார் வள்ளுவர்!

எண்ணிச்  செயல்பட்டால் வெற்றிதான்!

தோற்றுவிட்டே

எண்ணிக் குமுறல் இழுக்கு.

துன்பத்திற்கு இடம் கொடேல்

 59. துன்பத்திற்கு இடம் கொடேல்.


சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலையென்றார் அய்யன்!

பலதுன்பங்கள் வந்தாலும்  ஏற்றே உழைக்கும்

உழவரே சான்றாவார் சாற்று.

தீவினை அகற்று

 58. தீவினை அகற்று.


நல்ல செயல்களைச் செய்யாமல் போனாலும்

எள்ளி நகையாடும் தீய செயல்களைச்

செய்வதை விட்டுவிடு! நற்செயல்கள் உன்மதிப்பை

இவ்வுலகில் கூட்டும் உணர்

திருமாலுக்கு அடிமை செய்

 57. திருமாலுக்கு அடிமை செய்.


காக்கின்ற தெய்வம் திருமாலாய் ஆத்திகர்கள்

ஏற்று வழிபடலாம்! நம்மைத்தான்  காக்கின்ற

தாய்தந்தை முன்னறி தெய்வமாயும் கும்பிடலாம்!

தேர்ந்தெடுத்தல் மக்கள் விருப்பு.


தானமது விரும்பு

 56. தானமது விரும்பு.


தேடிவந்து கேட்பவர்க்கு தானங்கள் செய்யவேண்டும்!

ஓடி ஒளிதல், இருந்துகொண்டு இல்லையெனல்

மேதினியில் கோழைத் தனமாகும்! ஈனமாகும்!

நாடிப்போய் தானமது செய்.


தக்கோன் எனத் திரி

 தகர வருக்கம்


55. தக்கோன் எனத் திரி.


இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்

ததனை அவன்கண் விடலென்றார் அய்யன்!

இவனே சிறந்தவன் என்று பெரியோர்

புகழ்வதுபோல் வாழவேண்டும் சொல்.


தந்தை பெரியார் பிறந்தநாள் வாழ்த்து

 தந்தை பெரியார்! பிறந்தநாள் வாழ்த்து!


17.09.20


முடைநாற்றம் வீசுகின்ற மூடப் பழக்கம்

நடைகட்ட வேண்டுமென்றே தந்தை பெரியார்

பகுத்தறிவைத் தூண்டிவிட்டுச் சிந்திக்க வைத்தார்!

மிடுக்குடனே வாழவைத்தார்! வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


மாண்புமிகு மோடி பிறந்தநாள் வாழ்த்து

 மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்குப் பிறந்தநாள் 

வாழ்த்து!


17.09.20


வேற்றுமையில் ஒற்றுமை வேரூன்றி நிற்பதற்கும்

ஆற்றலுடன் பன்முக ஆளுமை ஆள்வதற்கும்

ஏற்றமுடன் இந்தியா வல்லரசாய் மாறவும்

போற்றித்தான் வாழ்த்துவோம் மாண்புமிகு மோடியை!

நூறாண்டு வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்


Tuesday, September 15, 2020

கவிமாமணி தென்னவனுக்கு நினைவேந்தல்

 கவிமாமணி தென்னவன் காலமானார்!


16.09.20


மூச்சுக்கு முந்நூறு பாட்டெழுதும் தென்னவன்!

ஊற்றிலே நீர்வற்றும் தென்னவன் பாவூற்றில்

ஊற்றெடுக்கும் பாவினங்கள் வற்றாது வற்றாது!

தேற்ற முடியவில்லை தேம்பி அழுகின்றோம்!

காற்றெல்லாம் தென்னவன் பாக்களைப் பாடுதம்மா!

பாத்தமிழில் மேடையில்  பேசி மகிழ்ந்தவர்!

ஏக்கத்தைத் தந்துவிட்டுச் சென்றுவிட்டார்

என்றுகாண்போம்?

பாவணக்கம் கூறு நினைந்து.


மதுரை பாபாராஜ்


சோம்பித் திரியேல்

 54. சோம்பித் திரியேல்.


முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடுமென்றார் அய்யன்!

முயற்சியே செய்யாமல் சோம்பித் திரியாதே!

துயரம் நிலைக்கும் உணர்.

சொற்சோர்வு படேல்

 53. சொற் சோர்வு படேல்.


நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்

உயிர்க்கிறுதி ஆகி விடுமென்றார் அய்யன்!

உயர்வு மனப்பான்மை கொண்டால் இழிவே!

அவமானம் நிச்சயம் உண்டு

சையெனத் திரியேல்

 52. சையெனத் திரியேல்.


பெரியோர் இகழ ஒழுங்கீன மாக

திரிவது நல்லதல்ல! நல்லது சொன்னால்

பெரியோர்சொல் கேட்பதே வாழவழி காட்டும்!

வழிமாறிப் போவது தீது.


சேரிடம் அறிந்து சேர்

 51. சேரிடம் அறிந்து சேர்.


நண்பரைப் போலப் பேசிப் பழகிடுவார்!

துன்பம் வருகின்ற நேரம் தவிக்கவிட்டுச்

சென்றிடுவார்! இத்தகையோர் நட்பைத் தவிர்க்கவேண்டும்!

நண்பரைத் தேர்ந்தெடுத்துச் சேர்.

செயவன திருந்தச் செய்

 50. செய்வன திருந்தச் செய்.


செய்யும் பணிகளைச் செவ்வனே செய்யவேண்டும்!

செய்யும் பொழுதே அரைகுறை யாய்ச்செய்தால்

செய்தபொருள் பாழாகி  நேரம் விரயமாக

செய்யவைக்கும் மீண்டும் பணித்து.

சூது விரும்பேல்

 49. சூது விரும்பேல்.


குறுந்தொகை வெற்றி கவர்ந்திழுக்க ஆசை

பெறுவோம் பெருந்தொகை என்றேதான் தூண்ட

நடுத்தெருவில் நிற்போம் பொருளை இழந்தே!

வெறுத்தொதுக்கு சூதை உடன்.

சுளிக்கச் சொல்லேல்

 48. சுளிக்கச் சொல்லேல்.


இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்குவ தென்றார் குறளாசான்!

புண்படுத்திப் பேசி முகஞ்சுளிக்க வைக்கின்ற

வன்சொல்லை வாழ்வில் தவிர்.


சீர்மை மறவேல்

 47. சீர்மை மறவேல்.


நற்செயலும் நற்பண்பும் நற்புகழை சேர்த்துவைக்கும்!

இத்தரணி வாழ்வில் புகழ்பெறக் காரணமாய்த்

தக்கவைத்த பண்புகளை என்றும் மறக்கவேண்டாம்!

அத்தகைய பண்புகளைப் போற்று.


சித்திரம் பேசேல்

 46. சித்திரம் பேசேல்.


பொய்களை மெய்போலப் பேசுவது நல்லதல்ல!

பொய்களைச் சொல்லத் தொடங்கினால் 

மேற்கொண்டு

பொய்களைச் சொல்லவைக்கும்! எப்படியும் சிக்கவைக்கும்!

எல்லோரும் நகைத்திடுவார் பார்த்து.

சான்றோர் இனத்து இரு

 45. சான்றோர் இனத்து இரு.


நல்லதை எண்ணியே நல்லதைப் பேசியே

நல்லதைச் செய்யவேண்டும்! இத்தகைய பண்புநிலை

உள்ளத்தில் ஊறிவர சான்றோர் உறவிருந்தால்

வல்லமை கூடிவரும் இங்கு

சக்கர் நெறி நில்

 சகர வருக்கம்


44. சக்கர நெறி நில்.


அறநெறி வாழ்க்கை அமைதியான வாழ்க்கை!

அறநெறி வட்டத்தை மீறி நடந்தால்

கறைபடிந்த வாழ்வாக கோலத்தை மாற்றும்!

சிறையையும் விஞ்சும் துயர்

நண்பர் IG சேகருக்கு வாழ்த்து

 நண்பருக்கு வணக்கமும் வாழ்த்தும்!



காலையில் பாடுகின்ற பூபாளப் பண்ணெடுத்துக்

காலை வணக்கத்தைப் பாடுகின்றாய் இன்னிசையாய்!

நாளும் வணக்கத்தைத் தூதுவிடும் நண்பருக்கு

பாவலன் கூறுகின்றேன் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


Monday, September 14, 2020

முப்பெரும் விழா

 முப்பெரும் விழா!

தி.மு.


கழகம் தோன்றியநாள்!

தந்தை பெரியார் பிறந்தநாள்!

அறிஞர் அண்ணா பிறந்தநாள்!


15.09.20--17.09.20



மூன்று விழாக்கள் இணைந்தேதான் கொண்டாடும் 

பொன்னாளாம் இன்று எனச்சொல்லி நேற்றேதான்

வண்ணம் இரண்டால் உணர்த்தியே நிற்கின்றாய்!

நன்றியுடன் வாழ்த்துகிறேன் நான்.


மதுரை பாபாராஜ்

அண்ணா பிறந்தநாள் வாழ்த்து

 அறிஞர் அண்ணா!


அன்பகம் பண்பகம் மற்றும் அறிவகமாய்

என்றும் திகழ்கின்ற பேரறிஞர் அண்ணாவின்

தொண்டில் தலையாய தொண்டு தமிழ்நாடு

என்னும் பெயர்தந்த தொண்டு.


மதுரை பாபாராஜ்



கௌவை அகற்று

 43.கௌவை அகற்று 


வாழ்விலே ஏற்படும் துன்பத்தைக் கண்டேதான்

சோர்வில் துவளாமல் சந்தித்து நீக்கவேண்டும்!

சோதனையின் கொம்பொடித்துச் சாதனையாய் மாற்றிவிடு!

வேதனை நீங்கும் விரைந்து.

கோதாட்டு ஒழி

 42. கோதாட்டு ஒழி


ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்

நன்றெய்தி வாழ்வதோர் ஆறென்றார் வள்ளுவர்!

நம்மதியைச் சீரழிக்கும் சூதாட்டம் ஆடினால்

என்றுமே தாழ்வுதான் செப்பு.


கொள்ளை விரும்பேல்

 41.கொள்ளை விரும்பேல்


எள்ளின் அளவெனினும் நேர்மையாய் வந்ததை

உள்ளம் மகிழ திருப்தியுடன் ஏற்கவேண்டும்!

கொள்ளை அடித்தே அனுபவிக்க எண்ணினால்

எல்லாமே போய்விடும் விட்டு.

கைவினை கரவேல்

 40.கைவினை கரவேல்


எந்தத் தொழிலெனினும் கைத்தொழில் பொலெண்ணி

நன்றாக கற்றுத் தெளியவேண்டும் நாள்தோறும்!

இன்றைய சூழலில் எல்லாமே கைத்தொழில்தான்!

என்றுமே கைகொடுக்கும் நம்பு.


கேள்வி முயல்

 39.கேள்வி முயல்


செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்

செல்வத்து ளெல்லாந் தலையென்றார் வள்ளுவர்!

கல்வி யறிவினைப் பெற்றாலும் கேள்வியால்

உள்ளத்தைப் பண்படுத்தப் பார்.


கெடுப்பது ஒழி

   38 கெடுப்பது ஒழி


கெடுப்பதையே நாளும் தொழிலாக மாற்றி

கடும்பகை கொந்தளிக்க வாழ்பவர்கள் உள்ளம்

சுடுமணல் பாலை மணலாய்க் கொதிக்கும்!

கெடுப்ப தொழித்தலே பண்பு.


கூடிப் பிரியேல்

 37. கூடிப் பிரியேல்


நாடெனினும் வீடெனினும் கூடிவாழ்ந்தால் கோடிநன்மை!

ஊதிப் பெரிதாக்கி சீறும் எரிமலையாய்ச்

சீறிப் பிரிந்துவிட்டால் சேர்தல் எளிதல்ல!

கூடிப் பிரியாமல் வாழ்.

VOV இராமசாமி

ககர வருக்க ஆத்திசூடி உரை அருமையாக உள்ளது

 கூடிப் பிரியேல்37உரை தனிச்சிறப்பு வாய்த்தது!

     வாழ்க.  வளர்க"!

குணமது கைவிடேல்

 36.குணமது கைவிடேல்


பணமலையாய்ப் பண்பின்றி வாழ்வோரைத் தூற்றும்!

குணக்குன்றாய் வாழ்ந்தால் குவலயமே போற்றும்!

பணவளம் கைவிட்டுப் போனாலும் வாழ்வில்

குணமதைக் கைவிடல் தீது.


கீழ்மை அகற்று

 35.    கீழ்மை அகற்று


எதிர்மறைச் சிந்தனையை உள்ளத்தில் தேக்கி

மதிமயக்கும் கீழ்மையை நீக்காமல் விட்டால்

நெறிமுறைகள் தாறுமாறாய் மாறியே வாழ்வை

தறிகெட்டே ஓடவைக்கும் சாற்று.

கிழமைப்பட வாழ்

 34.    கிழமைப்பட வாழ்


இருக்கும் பொழுது மற்றவர்க் குதவு!

இருப்போர் இறந்ததற்குப் பின்னால் உறுப்பை,

இருப்போர்க்கு நன்கொடை செய்தல் அறமே!

தரணி வணங்கும் புகழ்ந்து.


காப்பது விரதம்

 33.    காப்பது விரதம்


எத்தகைய சூழலிலும் மாறாமல் நல்லொழுக்கப்

பற்றை விடாமல் கடைப்பிடித்து வாழவேண்டும்!

சற்றும் சலனமற்ற வாழ்வே விரதமாகும்!

எப்படியும் காப்பது மேல்.

கடிவது மற

 32.    கடிவது மற


கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்

நீங்காமை வேண்டு பவரென்றார் அய்யன்!

கடிந்து புண்படுத்திப் பேசாமல் உள்ளம்

நெறிப்படுத்தப் பண்படுத்திப்

ஜான் மோசஸை என்று காண்போம்

 கரிமேடு காமராசர் ஜான்மோசஸ் காலமானார்!


ஆழ்ந்த இரங்கல்


15.09.20


ஆழ்ந்த இரங்கல்

இதயத்தைப் பிழியும் சோகம்.


எளிமை இனிமை பழகுவதில் தென்றல்

தெளிவான பேச்சு குழந்தை மனது

பணிவு இவைகளே

ஜான்மோசஸ் பண்பு!

இனியென்று காண்போம் நாம்?


மதுரை பாபாராஜ்


Sunday, September 13, 2020

ன அனந்தல் ஆடேல்

 31. அனந்தல் ஆடேல்.


அதிகமான தூக்கமே சோம்பலைத் தூண்டும்!

மதியும் செயலிழக்கும்! ஆர்வம் குறையும்!

விழித்தெழு! தூக்கம் கலைந்தே எழுவாய்!

புவியே வணங்கும் உணர்.


(உயிர்மெய் வருக்கம் நிறைவு)


மதுரை பாபாராஜ்


CR VOV

எளிமை, அதே நேரத்தில் இலக்கணம் வழுவாத வெண்பா...இது பாபா 

வயதில் இளையவர்.. சிலப்பதிகாரத்துக்கு கவிதை நடையில், அழகு தமிழில் உரை கண்ட கமலகுமார் சீடர்..இது பழனிமுத்து 

ஒரு அருமையான  நறுமணம் வீசும் மாலை  வள்ளுவர் குரல் குடும்பத்தினர்...


ற அறனை மறவேல்

 30. அறனை மறவேல்.


ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினையென்றார் வள்ளுவர்!

தேள்வறுமை வந்தாலும்  நாளும் அறச்செயல்

வாழ்வை மறவாதே நீ.

ள இளமையில் கல்

 29. இளமையில் கல்.


இளமைப் பருவமே கல்விப் பருவம்!

இளமையில் கற்கத் தவறினால் துன்பக்

களத்தில் துடிக்கவைத்துப் பந்தாடும் வாழ்வு!

இளமையில் கற்பதே நன்று.

ழ அழகு அலாதன செய்யேல்

 28. அழகு அலாதன செய்யேல்.


உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ள லாகிவிட்டால்

எள்ளளவும் இங்கே இழிசெயல் செய்யமாட்டார்!

கள்ளமற்ற உள்ளம் கருணையின் இல்லமாகும்!

நல்லொழுக்கம் என்றும் அழகு.

வ வஞ்சகம் பேசேல்

 27. வஞ்சகம் பேசேல்.


நேர்படப் பேசுதல் நன்று! கபடமான

வாய்ப்பேச்சு வீரரிடம் எச்சரிக்கை வேண்டுமென்பேன்!

நேர்ப்பகை, உட்பகையைக் காட்டிலும் மேலென்பேன்!

வாழ்க்கையில் வஞ்சகம் தீது.

ல இலவம் பஞ்சில் துயில்

 26. இலவம் பஞ்சில் துயில்.


பஞ்சுமெத்தை மீது படுத்துறங்கும் நேரத்தில்

மென்மையை நாமுணர்வோம் உள்ளம் சுகமுணரும்!

மென்மை உணர்வுடன் நாளும் பழகினால்

என்றும் மதிப்புயரும் இங்கு.

ர அரவம் ஆட்டேல்

 25. அரவம் ஆட்டேல்.


மற்றவர்க்குத் துன்பம் விளைவித்து வாழ்கின்ற

அற்பக் குணம்கொண்டோர் நட்பை விலக்கவேண்டும்!

இத்தகையோர் கூட்டும் அரவமுடன் ஆடலும்

முற்றும் அழிவைத் தரும்

ய இயல்பு அலாதன செய்யேல்

 24. இயல்பு அலாதன செய்யேல்.


தனிமனித நல்லொழுக்கம் போற்றி நடந்தால்

மனிதன் தலைநிமிர்ந்து வாழலாம் நாளும்!

குணக்கேட னாகத்தான் கண்டபடி வாழ்ந்தால்

மனமே வெறுக்கும் இடித்து.

மண்பறித்து உண்ணேல்

 23. மண் பறித்து உண்ணேல்.


அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பா லவையென்றார் அய்யன்!

பிறர்பொருளை இங்கே பறித்துவாழும் ஆசை

தடம்புரள வைக்கும் தவிர்.

பருவத்தே பயிர்செய்

 22. பருவத்தே பயிர் செய்.


வாய்ப்புவரும் நேரம் பயன்படுத்த வேண்டுமிங்கே!

ஆர்வம், விடாமுயற்சி வெற்றிக் கனிகொடுக்கும்!

வாய்ப்பைத் தவறவிட்டால் தோல்வி நகைத்திருக்கும்!

வாய்ப்பே பருவம் உணர்

நன்றி மறவேல்

 21. நன்றி மறவேல்.


தினையளவே செய்த உதவி எனினும் 

பனையளவாய் எண்ணித்தான் நன்றிசொல்ல வேண்டும்!

இணையற்ற வள்ளுவம் கூறுகின்ற பண்பு!

மனைதோறும் காப்போம் நினைந்து.


தந்தை தாய்ப் பேண்

 20. தந்தை தாய்ப் பேண்.


கண்ணுங் கருத்துமாய் நாளும் வளர்த்தேதான்

மன்பதையில் வாழவைத்துப் பார்த்திருக்கும் தாய்தந்தை

என்றும் மகிழ்ந்திருக்கப் பேணுதல் நம்கடமை!

கண்போல் கடமையைப் போற்று

பாலா சங்கச்சுரங்கம்

 ஏற்பாடு: 

ரோஜா முத்தையா நூலகம்-- களம் அமைப்பு, திருச்சி


நிகழ்ச்சி:


கவிஞர் பாலாவின் சங்கச் சுரங்கம்!


இரண்டாம் பத்து-- ஐந்தாம் உரை


நடுவு நின்ற நல்நெஞ்சினோர்!


12.09.20


பாலா உரைக்கு வாழ்த்து!


உழவரின் ஊரில் இரண்டுமாடு பூட்டி

நுகத்தின் நடுவில் பகலாணி போல

நடுவுநிலை கொண்டு நல்நெஞ்சம் கொண்டே

உறுத்தலின்றி நாளும் வணிகத்தைச் செய்தார்!

நடுக்கமின்றி தானென்று செப்பு.


பட்டினப் பாலை தரும்செய்திப் பின்னணியில்

அற்புதமாய்த் தன்கருத்தை வைத்தே உரையாற்ற

கச்சிதமாய்த் தேர்ந்தெடுத்த பாலாவை வாழ்த்துவோம்!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு


வெறுப்பில் லாமல் பெருந்தன்மை உள்ள

பொறுப்பு இலக்கியம் சங்கநூல்கள் என்றார்!

நடுவு நிலைமையின் பண்புகளைச் சொல்லி

விறுவிறுப் பாக விளக்கம் அளித்தார்!

நறுந்தமிழ் பாலாவை வாழ்த்து.


நல்லாசிரியர்! மதுரைக்காஞ்சி,761-767


தொல்லாணை நல்லா சிரியரை நாடியே

நல்லறம் செய்வதற்குக் கற்றுக்கொள் முன்னோர்போல்

உள்ளம்கொள் என்றே நெடுஞ்செழியன்

மன்னனைக்

கள்ளமின்றித் தூண்டுகின்ற பா.


நல்லா சிரியரெனும் சொல்லாட்சி சங்ககாலத்

தொன்மை இலக்கியத்தில் உள்ளதைக் கூறினார்!

நல்லா சிரியர் விருது தருவதற்கு

உள்ளதோர் சான்றாகும் இஃது.


பழங்குடி மக்களின் தீர்ப்பு வழக்கம்!


நட்டநடு உச்சிவேளை சூரியன் வந்தவுடன்

நட்டகுத்த லாகத்தான் தீர்ப்புரைப்போர்

வந்துநிற்பார்!

இப்பக்கம் அப்பக்கம் சாயாமல் தீர்ப்பளிப்பார்!

சற்றும் சரியாத தீர்ப்பு.


நடுவுநிலைமை என்ற குறளதி காரம்

எடுத்துரைக்கும் நற்கருத்தைச் சொல்லி

விளக்கி

நடுநிலைமை போற்றும் நல்நெஞ்சின் சான்றை

எடுத்துரைத்த பாலாவை வாழ்த்து.

-------------------------------------------------------------

சுரங்கத்தில் இருந்து அரங்கத்திற்கு

--------------------------------------------------------------

நகை அச்சாக நல் அமிர்து கலந்த

நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரூ கை,

இரூ கை மாஅல் !


( பரிபாடல்)

----------------------------------------------------------------

கடவுளைக் கேள்விகேட்ட பாடலைச் சொல்லி

கடல்கடைந்த போது அமுதத்தை இக்கை

நடுநிலை தப்பியே தேவர்க்கும்,  நஞ்சை

அசுரர்க்கும் தந்த விதத்தைச்  சாடி

நறுந்தமிழை வாழ்த்தினார் வாழ்த்து.

---------------------------------------------------------------

இந்த உரை சுரேஷ் போன்ற நடுவு நின்ற நல் நெஞ்சினோர்க்கு காணிக்கை.


லாட்டரி சீட்டு விற்பவர்


நேர்மைக்குச் சான்றாக வாழும் சுரேஷுக்கு

பாலா உரைதன்னைக் காணிக்கை யாக்கினார்!

ஞாலத்தில் இன்னும் மழைபெய்ய நல்லவர்கள்

வாழ்கின்ற காரணந்தான் சொல்.


மதுரை பாபாராஜ்



















Saturday, September 12, 2020

ட இடம்பட வீடு எடேல்

 ஔவையின் ஆத்திசூடி.


18. இடம்பட வீடு எடேல்.


அகலக்கால் வைக்கின்ற பேராசை வாழ்க்கை

பகட்டென்னும் தூண்டிலுக்குள் சிக்கவைத்துப் பார்க்கும்!

பதறவைத்து நாளும் உளைச்சலைத் தூண்டும்!

வடமறுந்த தேராகும் வாழ்வு.


மதுரை பாபாராஜ்

ஞயம்பட உரை

 ஔவையின் ஆத்திசூடி


17. ஞயம்பட உரை.


பண்படுத்திப் பேசுங்கள்! புண்படுத்திப் பேசவேண்டாம்!

இன்சொற்கள் என்ற கனிகளை விட்டுவிட்டு

வன்சொற்கள் என்கின்ற காய்களைத் தேடாதே!

என்றும் மகிழ்வித்துப்  பேசு


மதுரை பாபாராஜ்

சனிநீ ராடு

 16. சனி நீராடு.

( வைகறையில் நீராடு- பரிமேலழகர்)


புறத்தூய்மை காண்பதற்கு வைகறை நேரம்

இதமாய்க் குளிப்பது நல்லது! மாந்தர்

அகத்தூய்மை கொள்ள குறள்களைப் போற்று!

மகத்தாக வாழலாம் செப்பு

ங ப்போல் வளை

 ஔவையின் ஆத்திசூடி


15. ஙப் போல் வளை.

எந்தெந்த நாட்டிற்குள் எப்படித்தான் சென்றாலும்

அந்தந்த மக்களுடன் நாளும் கலந்துவாழ

என்றும் வளைந்து கொடுக்கப் பழகவேண்டும்!

பண்படுத்தும் நம்மைப் பணிவு.


கண்டொன்று சொல்லேல்

 ஔவை ஆத்திசூடி


உயிர்மெய் வருக்கம்


14. கண்டொன்று சொல்லேல்.


பார்த்ததைப் பார்த்தவாறு சொல்வதே நல்லது!

பார்க்காத ஒன்றையும் சேர்த்துப் புனைந்துரைத்தல்

வேர்களுக்கு வெந்நீரைப் பாய்ச்சும்

கொடுமைதான்!

காய்தல் உவத்தலின்றி சொல்.


மதுரை பாபாராஜ்

ஃகம் சுருக்கேல்

 ஔவையின் ஆத்திசூடி


13. அஃகம் சுருக்கேல்.


நம்பிவரும் மக்களை நம்பவைத்தே ஏமாற்றும்

வஞ்சகமும் வக்கிரமும் எத்தனைநாள் கைகொடுக்கும்?

தன்னெஞ்சே தன்னைச் சுட்டுப் பொசுக்கிவிடும்!

துன்பம் தொடர்கதை தான்.


மதுரை பாபாராஜ்

ஔவியம் பேசேல்

 ஔவை ஆத்திசூடி


12. ஔவியம் பேசேல்.


பேராசை, கோபதாபம்,  வன்சொல், பொறாமையைச்

சேரவைத்தே தாறுமாறாய்ப் பேசவைக்கும்! நீசராக்கும்,!

சீரழிக்கும் இந்தப் பொறாமைத் தணலிலே

வீழ்ந்தால் என்றும் அழிவு.


மதுரை பாபாராஜ்

ஓதுவது ஒழியேல்

 ஔவையின் ஆத்திசூடி


11. ஓதுவது ஒழியேல்.


கற்றறிந்த செம்மலுக்குச் சென்ற இடமெல்லாம்

நற்புகழே! நாமும் முடியுமட்டும் கற்கவேண்டும்!

கற்றதனால் ஆன பயன்களைக் கற்றால்தான்

முற்றும் உணர்வோம் இங்கு.


மதுரை பாபாராஜ்

ஒப்புரவு ஒழுகு

 ஔவை ஆத்திசூடி


10. ஒப்புரவு ஒழுகு.


ஊரின் நடுவில் உள்ளமரம் நாள்தோறும்

ஊரார்க்கு நற்பயனை நின்றே வழங்குதல்போல்

வாழ்வில் மனிதநேயப் பண்புடன் வாழவேண்டும்!

ஊர்போற்ற வாழ்வது நன்று.


( குறள்நெறிக் குரிசில் சி.ஆர் கருத்து:

வள்ளுவர் + ஔவையார் = இணைத்து வழங்கப்படும்..

மதுரை பாபாராஜ் வெண்பா( ல்) கடை)

ஐயம் இட்டு உண்

 9. ஐயம் இட்டு உண்.


சாப்பிடும் நேரத்தில் இல்லாதோர் வந்துநின்றால்

கேட்காமல் முன்வந்தே நாமே பகிர்ந்தளித்தல்

ஈத்துவக்கும் இன்பமாய் எண்ணி மகிழலாம்!

ஈடற்ற நல்லறம் இஃது.

Friday, September 11, 2020

திருமதி ரம்யா நாராயணன் வாழ்க

 குளத்தருகே தாமரைப்

பூக்களைக் கையில்

அழகாய்ச் சிறுவன் பிடித்திருக்கும் காட்சி!

உளங்கவரப் பார்த்து ரசித்தேன் மகிழ்ந்தேன்!

மலர்போல வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்


ஏற்பது இகழ்ச்சி

 8. ஏற்பது இகழ்ச்சி.


அறவழிச் செல்வத்தைக் கிள்ளிக் கொடுத்தால்

அகங்குளிர ஏற்கலாம்! தீயவழிச் செல்வம்

பகட்டாக அள்ளிக் கொடுத்தாலும் ஏற்ப

திகழ்ச்சியே! என்றும் இழிவு.

எண் எழுத்து இகழேல்

ஔவை ஆத்திசூடி


 7. எண் எழுத்து இகழேல்.


கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தகவென்றார் வள்ளுவர்!

எண்ணை எழுத்தை இகழாமல் கற்றுவிட்டால்

நம்வச மாகும் உலகு.

Thursday, September 10, 2020

பழனிபாரதி இணையருக்கு மணநாள் வாழ்த்து


 கவிஞர் பழனி பாரதி இணையருக்கு மணநாள் வாழ்த்து.


11.09.20


பன்முக ஆளுமை கொண்டவர்! இல்லறத்தைப்

பண்பகமாய்  எல்லோரும் போற்ற நடத்துகின்றார்!

நல்லதொரு நற்குடும்பம் பல்கலைக் கூடமென்பார்!

இல்லறத்தைப் பல்கலைக் கூடமாக்கி

வாழ்கின்ற

வல்லமையை வாழ்த்தி மகிழ்கிறோம்! வாழியவே!

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.



வாழ்த்தும் இதயங்கள்

மதுரை பாபாராஜ்

வசந்தா

ஊக்கமது கைவிடேல்

 6.ஊக்கமது கைவிடேல்.

ஊக்கம் உடையவர்கள் எல்லாம் உடையோராம்!

ஊக்கமற்றோர் என்ன இருந்தாலும் ஒன்றுமற்றோர்!

ஊக்கம் உழைப்பு முயற்சி  இவைமூன்றும்

ஆக்கபூர்வ வெற்றிக்கு வேர்.


உடையது விளம்பேல்

 5. உடையது விளம்பேல்


மற்றவர்கள் தன்மகனைச் சான்றோன் எனச்சொன்னால்

பெற்றவள் உள்ளம் மகிழ்வாள்! தன்மகனைப்

பெற்றவளே சான்றோன் எனச்சொன்னால் "தற்பெருமை"

மற்றவர் சொல்வார் நகைத்து.


(ஆத்திசூடி விளக்கம் அருமை!

தொடருங்கள் ஐயா.

எளிமைக்கும் அழகு செய்கிறீர்கள்!

VOV இராமசாமி)

ஈவது விலக்கேல்

 4. ஈவது விலக்கேல்


தானும்  கொடுக்கமாட்டார்  மற்றவர்கள் முனவந்து

தானதர்மம் செய்ய விடமாட்டார்! இத்தகைய

ஈனமனம் கொண்டவர்கள் எல்லாம் நடைப்பிணந்தான்!

ஊனமே இத்தகையோர் வாழ்வு.

இயல்வது கரவேல்

 3. இயல்வது கரவேல்


கொடுக்கும் அளவில் இருந்தும் கொடுக்க

மறுத்தே மறைக்கும் இழிந்த குணமோ

பெரும்புள்ளி யானாலும் உள்ளம் நகைக்கும்

கரும்புள்ளி என்றே கடிந்து.


ஆறுவது சினம்

 2. ஆறுவது சினம்


சினங்கொண்டு சீறிச் சிடுசிடுத்து வாழ்ந்தால்

மனமெல்லாம் மாசாகும்! சுற்றம் ஒதுங்கும்!

குணக்கேடன் என்றே நிழலும் வெறுக்கும்!

சினமடக்கி வாழப் பழகு.

அறம்செய விரும்பு

 ஔவையின் ஆத்திசூடி!


1.அறம் செய விரும்பு!


அன்றாடம் அல்லாடும் ஏழை எளியோர்க்கு

உன்னால் இயன்றதைச் செய்தல் அறமாகும்!

இன்றேதான் செய்துவிடு! நாளைநாம் பார்க்கலாம் 

என்றெண்ணும் சோம்பலை நீக்கு

வலைத்தமிழ்,வள்ளுவர் குடும்பம் வாழ்க

மூவரணி வள்ளுவத்தை ஆழமாக ஆய்ந்தனர்!

பாவலர்க்கும் ஆர்வலர்க்கும் ஆய்வாளர் சான்றோர்க்கும்

வேரோடும் நற்கருத்தை அள்ளித் தெளித்தனர்!

சீர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


பாலாவின் சங்கச்சுரங்கம்

 கவிஞர் பாலாவின் சங்கச் சுரங்கம்!


இரண்டாம் பத்து-- ஐந்தாம் உரை


நடுவு நின்ற நல்நெஞ்சினோர்!


12.09.20


உழவரின் ஊரில் இரண்டுமாடு பூட்டி

நுகத்தின் நடுவில் பகலாணி போல

நடுவுநிலை கொண்டு நல்நெஞ்சம் கொண்டே

உறுத்தலின்றி நாளும் வணிகத்தைச் செய்தார்!

நடுக்கமின்றி தானென்று செப்பு.


பட்டினப் பாலை தரும்செய்திப் பின்னணியில்

அற்புதமாய்த் தன்கருத்தை வைத்தே உரையாற்ற

கச்சிதமாய்த் தேர்ந்தெடுத்த பாலாவை வாழ்த்துவோம்!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


Wednesday, September 09, 2020

நண்பர் துபாய் ராசேந்திரனுக்கு வாழ்த்து

 தோகை மயிலாட, பச்சை மரம்நிற்க

ஆகாகா! வெண்புறா, வண்ணக் கிளியொன்று

வாகாய்ச் சிறகடிக்க கோப்பைக் குளம்பியுடன்

காலை வணக்கத்தை நட்புடன் ராசேந்ரன்

தூதுவிட்டார்! நண்பரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்